எனக்கொரு வரம் கொடு – 1
அழகானதொரு பொன்மாலைப் பொழுதில், தஞ்சாவூர் திலகர் திடலில் செல்வி சௌதாமினியின் நாட்டிய விழா ஏற்பாடாகியிருந்தது. அந்த ஜில்லாவில் புகழ்பெற்று விளங்கும் இளம் பரத நாட்டிய கலைஞர்களுள் அவளும் ஒருத்தி ஆவாள். அவளின் பெயருக்கென்றே கூடும் கூட்டமும் ஏராளம். அவ்விழாவிலும் அவ்வாறே! அரங்கம் நிரம்பி வழிந்தது!
நாட்டிய மேடையில், தூண் பதாகைகள் (banners) வலப்புறம் மூன்றும், இடப்புறம் மூன்றுமாகச் சாய்வான வரிசையில் மேடையை அலங்கரித்தபடி அமைந்திருக்க, வலது புறம் நடராஜர் சிலையும், அதன் முன்பு இரண்டு ஐமுக குத்துவிளக்குகளும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது.
மேடையின் பின்புறம் அடர் நீல வண்ணத்திலான திரைத்துணியும், அழகாக ஜொலித்துக் கொண்டிருந்த லைட் செட்டிங்ஸும் அந்த மேடையின் அழகை மேலும் மெருகேற்றி காட்டியது.
சற்று நேரத்திற்கெல்லாம் சௌதாமினியின் நாட்டிய விழா தொடங்கிற்று. சிவந்த வண்ணத்தில், பச்சை கரையிட்ட பட்டாடையில் உரிய ஆபரணங்களோடும், அலங்காரத்தோடும் இருந்தவளின் நாட்டியம் தொடங்க, அவளின் அடவுகளிலும், அபிநயங்களிலும் கூட்டத்தினர் மெய் மறந்த நிலையிலிருந்தனர்.
முதல் சில நிமிடங்கள் கடவுளை நமஸ்கரிக்கும் அலாரிப்பில் தொடங்கி, ஜதீசுவரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா, விருத்தம் மற்றும் மங்களம் என்ற அத்தனை உருப்படிகளையும் வெகு நேர்த்தியாக ஆடினாள். அவளின் ஆடலில் நளினமும், லாவண்யமும் நிறைந்திருந்தது. அது சூழ இருப்போரை வெகுவாக வசீகரித்தது.
அவளின் கரங்கள் காட்டும் முத்திரைகளில், விழிகள் காட்டும் பாவனைகளில், ஒயிலாக திரும்பும் நீள் கழுத்தில், ஒய்யாரமாக ஒடியும் இடையில், லாவகமாகத் தூக்கி நிறுத்தும் கால்களில், வசீகரிக்கும் முகபாவனைகளில் சூழ இருந்தோர் வசீகரிக்கப்படாமல் இருந்தால் தானே அது அதிசயம்!
விழா நிறைவு பெறும் வரையிலும் மெய்மறந்து ரசித்த கண்கள் ஆயிரமாயிரம்! சில இளைஞர்களின் விழிகளில் ஆர்வமும், ஆசையும், கனவும் மிதந்து கொண்டிருந்தது! இன்றும் ஒரு ஜோடிக்கண்கள் சௌதாமினியை சற்று கூடுதல் ஆர்வமாகவே ரசித்திற்று!
இதை எதையும் உணராதவளோ தன் கலைப்பணியை நல்லவிதமாக முடித்து மேடையிலிருந்து அகன்றிருந்தாள். ஒப்பனை அறையில், தன் அலங்காரங்களைக் கலைத்து, நகைகளை உரிய இடத்தில் அடுக்கிக் கொண்டிருந்தவளை நெருங்கிய அவளின் தம்பி வசந்தன், “அக்கா…” எனத் தயக்கமாக அழைத்து நிறுத்தினான்.
காதணிகளைக் கழற்றியவாறே, என்ன என்பதாக நிமிர்ந்து பார்த்தவளிடம், சொல்ல வந்ததை மேற்கொண்டு சொல்ல முடியாமல் தயக்கமாக விழித்தான்.
“பீஸ் எதுவும் கட்ட வேண்டியதிருக்கா?” என்று ஊகித்துக் கேட்டவளிடம், தலை தாழ்த்தி இல்லையென்று மறுப்பாகத் தலையசைத்தான்.
“மார்க் எதுவும் கம்மியா? இல்லாட்டி ஸ்கூல்ல எதையும் உடைச்சிட்டியா?” என்றாள் நெற்றி சுருங்க. மீண்டும் இல்லை என்று மறுப்பாகத் தலையசைத்தவனின் தலை இன்னுமே தாழ்ந்தது.
“ஏதோ பணம் தேவைன்னு மட்டும் புரியுது…” என்று மெல்லிய பெருமூச்சுடன் கூறியவள், எதையோ கணித்தவளாய், “வீட்டில் காணாம போன ஒரு பவுன் தங்க மோதிரத்துக்கும், எட்டாயிரம் பணத்துக்குமான காரணம் உன்கிட்ட கிடைக்கும் போல…” என்று கூர்மையாகக் கேட்க, பதறி நிமிர்ந்தான் வசந்தன். அவனது முகமெங்கும் வியர்த்திருந்தது.
‘அக்கா எப்படி கண்டுகொண்டாள்?’ என்ற பதற்றத்தில் அவனின் இதயம் அதிவேகமாகத் துடித்தது. அச்சத்தில் அவனது தொண்டை உலர்ந்து, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அவனது முகபாவனையே கசப்பான உண்மையைத் தமக்கைக்கு உணர்த்த, “சொல்ல வந்ததை சொல்லு…” என்று இறுக்கமாகக் கேட்டாள் சௌதாமினி.
அவளது இளக்கமற்ற தன்மையும், தள்ளி நிறுத்தும் செய்கையும் வெகுவாக அச்சுறுத்த, “அக்கா…” என்று தயக்கமாக அழைத்தான், எங்கு எப்படித் தொடங்க என்று புரியாதவனாய்.
“ம்ப்ச்…” என்று அவள் வெளிப்படையாக சலித்துக் கொள்ள, “டிரஸ் மாத்திட்டு வாங்க கா. போகும்போது பேசிக்கலாம்” என்று ஒருவாறு இழுத்துப் பிடித்த மூச்சை வெளியிட்டு விட்டுச் சொன்னவன், ஒப்பனை அறையிலிருந்து வேகமாக வெளியேறினான்.
செல்பவனின் முதுகையே வெறித்தது சௌதாமினியின் விழிகள். இன்று என்ன பிரச்சனையை இழுத்து வைத்திருக்கிறானோ என அவளால் கவலையோடும், சலிப்போடும் எண்ண மட்டுமே முடிந்தது.
அவளுடைய பெற்றோர் தவறிய பிறகு அவளையும், அவளின் தம்பி பூபாலனையும் பராமரிக்கும் பொறுப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டனர் அவளின் சித்தப்பா குடும்பத்தினர். சித்தப்பா செல்லத்துரையும், சித்தி கற்பகவள்ளியும் சரி நல்ல முறையிலேயே இவர்களை கவனித்தும் வந்தனர். அதில் யாராலும் துளி குறை கூடச் சொல்ல இயலாது. அத்தனை கனிவும், பாசமுமான நபர்கள் அவர்கள்.
சித்தப்பாவின் மகன் வசந்தன் கூட, அதுவரை ஒற்றை பிள்ளையாய் வளர்ந்தவன், இவர்கள் வருகை தந்தபோது வெகு ஆர்வமாகவே வரவேற்றான்.
எல்லாம் நல்லமுறையில் சென்ற சமயம், பணியிடத்தில் நேர்ந்த விபத்தொன்றில் தலையில் பலமாகப் பட்ட அடியின் விளைவாய் செல்லத்துரையின் சித்தம் கலங்கிற்று. அவரது மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
செல்லத்துரையை ஆதாரமாக கொண்ட குடும்பம் ஆட்டம் கொண்டது. ஏற்கனவே சேமிப்பிலிருந்த பணம், பணியிடத்தில் தந்த இழப்பீட்டுப் பணம் என்று கணிசமாக இருந்தபோதும்… குந்தித்தின்ன நேர்ந்தால் அது எதற்குக் காணும்?
நல்லவேளையாக சௌதாமினி தன் படிப்பை முடித்திருந்தபடியால், தன் கல்வித்தகுதிக்கு ஏற்ப நல்லதொரு வேலையில் தன்னை இணைத்துக் கொண்டாள். குடும்ப செலவு, சித்தப்பாவின் வைத்திய செலவு, தம்பிகளின் கல்வி செலவு என்ற நெருக்கடியில் அவளது சம்பளம் காற்றில் பறக்கும் சாம்பலின் நிலை தான்!
எதுவுமே எஞ்சாது என்பதோடு, ஆத்திர அவசரத்திற்குக் கூட சேமிப்பில் கைவைத்தால் தான் ஆயிற்று என்னும் இக்கட்டான நிலை! இதுபோன்ற நிலையில் தான், ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய குழுவிலிருந்து, இவளின் நடனப் பள்ளியின் மூலம் கிடைத்த பரிந்துரையின் பேரில் இவளுக்கு அழைப்பு வந்திருந்தது.
வழக்கமாக நடனப்பள்ளியின் மூலமாக ஏற்பாடு செய்யும் நடன நிகழ்ச்சிகளில் அவள் கலந்து கொள்வதுண்டு என்றாலும், அது அதிகம் இருக்காது. இதே பரதநாட்டிய குழு என்றால் சற்று அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதோடு, பெயரும் நன்கு பரிச்சயமாகும்.
சித்தியிடம் கலந்தாலோசித்து, பரதநாட்டிய குழுவினரிடம் உள்ளூரில் இருக்கும் விழாக்களில் பங்கேற்றுக் கொள்வதாக சம்மதம் தெரிவித்தாள். காலையில் அலுவலக வேலை, மாலையில் நடனப் பயிற்சி அல்லது நடன விழா என சௌதாமினி சுழன்றதில் அவளின் குடும்பம் சற்று நல்ல நிலையை எட்டியது.
அவளின் திறமைக்கும், கடின முயற்சிக்கும், ஈடுபாட்டிற்கும் ஏற்ப அவளுடைய பெயர் விரைவிலேயே அந்த வட்டாரத்தில் பிரபலமாக தொடங்கியது. பெயரும், புகழும் கூடியதால், தனிப்பட்ட வாய்ப்புகளும் வந்தன. குழுவினரின் ஆலோசனைப்படி அதன்பிறகு அவளது விழாக்கள் பெரும்பாலும் தனியாகத்தான்!
இதற்கிடையில், சமீபமாகப் பூபாலனும் படிப்பை முடித்துத் தலையெடுத்திருந்தான்.
குடும்பம் சற்று நிலை பெறுவதற்காகப் போராடிய தருணம், செல்லத்துரையின் உடல்நிலை குறித்த கவலையில் மேற்கொண்டு என்ன என்று யோசிக்க முடியாத தருணங்களில் பதின் வயதிலிருந்த இளைய தம்பி வசந்தன் எப்படியோ வழி தவறியிருந்தான்.
கூடா நட்பு ஒருபுறமென்றால், பொய், கோபம், ஆத்திரம் போன்ற கொடும் நோய்கள் மறுபுறம். கற்பகவள்ளி கணவனைக் கவனிப்பதிலும், வீட்டைக் கவனிப்பதிலுமாக இருக்க, இவனது சறுக்கல்கள் அவருக்குத் தெரியவே இல்லை.
அந்த சமயத்தில், பூபாலன் வெளியூரில் இருக்கும் கல்லூரியில் பயின்று வந்ததால் அவனுமே எதுவும் அறிந்திருக்கவில்லை.
சௌதாமினியும் வேலை, நடனம் என்று ஓய்வில்லாமல் இருந்ததில், கட்டவிழ்த்து விட்ட காளையென சுற்றித்திரித்தவனைக் குறித்து ஒரு விவரமும் அவளுக்குத் தெரியவரவில்லை.
ஒருவன் மூலம் செய்தி வந்திருந்தது தான்! என்னவோ அவனைக் கண்டாலே ஒதுங்கிச் சென்று விட வேண்டும் என்று உள்ளுணர்வு எச்சரிக்கும் காரணத்தால், அவனது பேச்சையும் இவள் நின்று கவனித்ததேயில்லை. கைப்பேசியின் அழைப்பைக் கூட நிராகரிக்க, அவன் என்ன நினைத்தானோ மேற்கொண்டு எதையும் தெரிவிக்க முயன்றதில்லை.
ஒருவழியாக சௌதாமினி இளைய தம்பி குறித்து அறிய நேர்ந்தபோது, வசந்தன் வெகுதூரம் சென்றிருந்தான். வீட்டினரிடம் அச்சம் கொண்டவன் போல வெளித்தோற்றத்தில் காட்சியளித்தாலும், அவனது பிழைகள் குறைவது போலத் தெரியவில்லை.
வசந்தனின் தொடர் பிழைகளும், அதை கற்பகவள்ளியிடம் மறைக்க இவள் மேற்கொள்ளும் முயற்சிகளுமாக நாட்கள் சென்று கொண்டிருந்தாலும் தம்பியிடம் சிறு மாறுதலைக் கூட காண முடியாதது, அவளுக்கு சொல்லொண்ணா வேதனையை அளித்தது!
இப்பொழுது என்ன இழுத்து வைத்திருக்கிறானோ? இவனை எப்படி நல்வழிப்படுத்துவதோ என்று வேதனையோடு எண்ணியவள், உடையை மாற்றி விட்டு, தன் உடைமைகளை சேகரித்துக் கொண்டு வெளியே வந்தாள்.
காரின் அருகில் இன்னமுமே தலையைத் தொங்க போட்டுக்கொண்டு நின்றவனை எரிச்சலோடு பார்த்தாள். எந்த பிழை செய்தாலும், வசந்தனின் வருத்தத்திற்கு வஞ்சனையே இருக்காது. வண்டி வண்டியாக வருந்துவான் என்று சொன்னால், அது அத்தனை பொருந்தும்.
ஆனால், வருத்தம் என்பது அதோடு முடியக்கூடிய ஒன்றா? உண்மையாக வருந்துபவர்கள் அடுத்த முறை அந்த பிழையைச் செய்யத் துணியவே கூடாது அல்லவா? வசந்தன் ஒருநாளும் அப்படி இருந்ததில்லை. அவனது பிழைகள் கூடிக்கொண்டே இருக்கும். அதிலும் பல பிழைகள் இவ்வளவு துணிந்து விட்டானா என்ற பேரதிர்ச்சியை கொடுக்கும். வீட்டிலேயே திருடியிருக்கிறான் என்று இப்பொழுது அறிய நேரிட்டது போல!
சௌதாமினி நெருங்குவதைக் கண்டதும், வசந்தன் முன்பக்க காரின் கதவை அமைதியாகத் திறந்து விட்டான். அவன் முகத்தைப் பார்த்தபடியே உள்ளே ஏறி அமர்ந்தாள். காரில் பயணிக்கும்போதும் அவன் மௌனத்தையே தொடர்ந்தான்.
சௌதாமினியும் அவனாகச் சொல்லட்டும் என்று பொறுமை காத்தாள். காரை அமைதியாக செலுத்திக் கொண்டிருந்தவன், ஒரு கிளை சாலையில் ஒடித்து, அங்கிருந்த பெரிய மரத்தின் அடியில் காரை நிறுத்தினான். எதுவோ பெரிதாக வரப்போகிறது என்று புரிந்தது மூத்தவளுக்கு. அது தந்த படப்பிடிப்பு சற்று அதிகம் தான்!
அதற்குத்தக்க தயக்கமும், தவிப்புமாக அமர்ந்திருந்தவனின் தோற்றமும் எதுவோ சரியில்லை என்று அவளுக்கு உணர்த்தியது. ஆனாலும், அவனுக்கு ஆறுதலளிக்க மனம் விழையவில்லை. எத்தனை எத்தனை பிழைகள் அதுவும் இந்த சிறு வயதில் அசாதாரணமாக செய்து விடுகிறான். இவனைக் கண்டித்தாலே வழிக்கு வருவதாக இல்லை, இனி ஆறுதலாக வேறு இருப்பதா என்ற எரிச்சல் தான்!
ஏன் பதினெட்டு வயது பூர்த்தியாகாமல் காரை எடுக்க கூடாது என்று எத்தனை முறை சொல்லியாயிற்று! பூபாலனின் லைசன்ஸை வைத்துக் கொண்டு பிடிவாதமாக ஓட்டிக்கொண்டு தானே இருக்கிறான். அவனைத் தடுக்க முடியவில்லை என்பது ஒருபுறம், ஏற்கனவே நொந்து போயிருக்கும் சித்தியிடம் எதையும் தெரிவிக்க முடியாத இயலாமை மறுபுறம்! அவளும் இளவயது பெண் தானே! இது போன்ற சூழல்களைச் சமாளிக்க என்ன அனுபவம் இருந்து விடப்போகிறது? இவனைக் குறித்த கவலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் செய்வதறியாமல் வருந்தினாள்.
வசந்தனும் இப்பொழுது தன் பிழையைச் சொல்ல முடியாது தவிப்பாக அமர்ந்திருந்தான். எப்படி தொடங்க என்று கூட புரியாமல் அவனது கண்கள் கலங்கி, கண்ணீர் கோடுகள் கன்னத்தில் இறங்கியது.
தம்பியின் கண்ணீர் புதிது என்பதிலேயே சௌதாமினி பெரிதாகத் தவித்துப் போனாள். ஏதோ பெரிய பிழை என்று புரிய, “என்னாச்சுன்னு சொல்லேன்” என்று தன் தவிப்பை மறைத்துக் கடிந்து கொண்டாள்.
அவள் புறம் திரும்பி அமர்ந்தவன் அவளது கரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, “என்னை உன்னால மன்னிக்க முடியுமான்னு கூட தெரியலை கா. என்னை வெறித்திட மாட்ட தானே?” என்று கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு சிறு பிள்ளையாய் மீண்டும் கதறினான்.
இவன் என்னவென்று சொன்னாலாவது பரவாயில்லை இப்பொழுது எதை நினைத்துக் கலங்குவது?
அவன் அழுது முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவள், “ரொம்பவும் பெரிய தப்பு பண்ணிட்டியா?” என்று கேட்டாள். என்ன முயன்றும் அவளின் குரலில் கவலை அப்பட்டமாகத் தெரிந்தது.
தமக்கையிடம் சமாளிப்பாகக் கூட இல்லை என்று பொய்யுரைக்க முடியாத பெரிய பிழை! நொந்துபோன முகத்துடன், நடந்ததை வெகு சிரமத்திற்கிடையில் கூறத் தொடங்கினான்.
வசந்தன், தன் பள்ளியில் உடன் படிக்கும் மாணவியுடன் பழகி வந்தான். இவனுடனிருக்கும் நண்பர்கள் கூட்டம் பெண் தோழிகளை வைத்துக் கொள்வதையும், அவர்களோடு ஊர் சுற்றுவதையும், அவர்களிடம் சில்மிஷங்கள் செய்வதையும் பெருமையாகப் பறைசாற்றும் கூட்டம்!
அவர்களோடு வலம் வந்தவனுக்கும் அதிலெல்லாம் உடன்பாடே! விரைவில் தன் தோழியோடான நட்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று, அவளோடு ஊர் சுற்றித் திரிவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். அவளோடு எல்லையின்றி பழகுவதையும் தான்!
இதைச் சொல்லும்போதே அவன் முகம் கசக்கியது என்றால், தம்பி எத்தனை தூரம் சென்று விட்டான் என்ற வேதனையில் மனம் துடித்தது சௌதாமினிக்கு. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இந்தளவுமா புத்தி தடுமாறும்? அதிலும் சித்தப்பா, சித்தியின் வளர்ப்பு முறை நினைவில் வரக் கண்கள் கலங்கிவிட்டது. சித்தியிடம் கொண்டு செல்லாமல் இவனைத் தானே முறைப்படுத்தி விடலாம் என்று எண்ணியது தவறோ என கலங்கினாள்.
ஆனால், அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லையே! ஏற்கனவே செல்லத்துரை சித்தப்பாவின் உடல்நிலை, அவரை கூட இருந்தே கவனிக்க வேண்டிய பொறுப்பு, வயது வந்த பிள்ளையை வேலை செய்ய வைக்கிறோமே என்ற குற்றவுணர்வு என்று தவித்துக் கொண்டிருப்பவரிடம் வசந்தனின் பிழையையும் எப்படிச் சொல்ல முடியும்? அந்த துணிவு அவளிடம் இல்லையே!
கற்பகவள்ளி இரும்பு மனுஷி தான் என்றாலும், அந்த இரும்பும் ஓய்வெடுக்க விரும்புமே! எத்தனை எத்தனை பார்த்து விட்டார்? நிம்மதியாக உண்ணாமல், உறங்காமல், பெரும்பாலும் எதையோ நினைத்து கவலை கொண்ட தோற்றத்தோடு வெறித்த மாதிரி அமர்ந்திருப்பது… என்று எத்தனை எத்தனை மாறுதல்கள்? அதிலும் பிள்ளைகள் முன்பு சோர்ந்து போனது போலக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று அத்தனை கவனம், கட்டுப்பாட்டோடு இருப்பார்.
அத்தனை நோந்திருக்கும் மனுஷியை மேலும் நோகச் செய்வது அரக்கக் குணம் அன்றோ?
வசந்தன் மேலும் தன் பிழையைத் தொடர்ந்தான். அந்த பெண்ணின் பெயர் கவின்யாவாம். அவளோடு அவன் பல இடங்கள் சென்றது போலச் சமீபத்தில் ஒரு பிரவுசிங் சென்டருக்கும் சென்றிருக்கிறான். அங்கும் வழக்கம்போல அவர்களுக்கான தனி உலகத்தை ஸ்ருஷ்டித்து இருவரும் இருந்திருக்கிறார்கள்.
இவன் எதையெல்லாம் அக்காவிடம் சொல்வதாக இருக்கிறான் என்று முகம் சுளித்தாள் பெண். இருந்தும் எதற்கோ பயம் கொள்கிறான், வருத்தம் கொள்கிறான், குற்றவுணர்வோடு தவிக்கிறான் அது என்னவென்று தெரிய வேண்டுமே… வேறுவழியின்றி அவன் சொல்வதையே கவனித்து வந்தாள்.
“அக்கா… அது தப்புங்கிற எண்ணம் கூட எங்களுக்கு வந்ததில்லை கா…” என அவன் கலக்கமாகச் சொன்னபோது,
“அது தப்பா இல்லாட்டி இப்ப உன்னோட குற்றவுணர்வுக்கு அவசியமே இல்லையே” என்றாள் அவனை எரிக்கும் பார்வையோடு. தமக்கையின் கவலையும், கோபமும் அவள் உடல் இறுகிய தோற்றத்திலும், கலங்கிய விழிகளிலுமே இளையவனுக்குப் புரிந்தது.
“ஸாரிக்கா…” என்றான் கீழ்க்குரலில்.
“என்ன நடந்ததுன்னு முழுசா சொல்லி முடி. வாயிலேயே சொல்லக் கூசும் வேலையெல்லாம் சாதாரணமா செய்துட்டு இப்ப இத்தனை கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன? திடீர்ன்னு எங்கே இருந்து ஞானோதயம் கிடைச்சது? இன்னைக்கு ஸ்கூலுக்கு போகாம போதி மரத்துக்கு எதுவும் போயிட்டியோ?” நக்கலும், நையாண்டியுமாக கேட்டபோதிலும் அவளது குரலில் துளிகூட சூடு குறையவில்லை.
“அக்கா நாங்க அப்படி இருந்ததை அங்க இருந்த சர்வைலென்ஸ் கேமரால அந்த கடைக்காரனுங்க ரெண்டு பேரு பார்த்துட்டாங்க…” என்று சொன்னவன் எச்சில் விழுங்கி தயங்கி நிறுத்தினான்.
சௌதாமினி அவனைக் கூர்மையாகப் பார்க்க, “அக்கா… அதோட அவங்க அதை ரெகார்டும் பண்ணிட்டு…” என்று மீண்டும் இழுக்க, “பிளாக் மெயில் பண்ணறாங்களா?” என்று முடித்தாள் அவள்.
தலையைக் குனிந்தவன், ஆம் என்று தலையசைத்தான்.
“அதுக்காக வீட்டில் திருடி வேற இருக்க?” என்று அவனைக் குற்றம் சாட்டிய போது, அவள் முகத்தில் வந்துபோன வேதனை அவனுக்குத் தவிப்பாக இருந்தது.
“அக்கா… இனி இதுபோல எதுவும் செய்ய மாட்டேன் கா… என்னை மன்னிச்சுடு பிளீஸ்… இனி நீ சொல்லறமாதிரி நடந்துக்கிறேன்… என்னை மன்னிச்சுடு கா…” என்றான் அழுகை பொங்க.
“ஒருத்தன் நல்லபேரை சம்பாரிக்கிறது ரொம்ப கஷ்டம் வாசு. கெட்டபேரைச் சுலபமா எடுத்திடலாம். இத்தனையும் செய்துட்டு மன்னிப்பு கேட்க உனக்கு நா கூசலையா?” என்று எரிச்சலாகக் கேட்டவளிடம், தன் முகத்தைக் காட்டக் கூட கூசியது.
“நம்ம நாட்டுல பதினெட்டு வயசானா தான் ஓட்டுப் போடவே உரிமை இருக்கு. ஏன் அந்த வயசுக்கப்பறம் தான் வேலைக்கே போக முடியும். அப்படி இருக்கப்ப நீங்க செய்யற காதலுக்கு மட்டும் வயசு, வரைமுறை எதுவுமே உங்களுக்கு இல்லையில்ல?” என்றாள் சுள்ளென்று.
“இதே சித்தப்பாவுக்கு உடம்பு சரியா இருந்திருந்தாலும் நீ இந்தளவு துணிஞ்சிருப்பியா?” அவளால் என்ன முயன்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆத்திரமும், வருத்தமும் பொங்கிக் கொண்டேயிருந்தது.
“அக்கா…” என்றான் தவிப்பாக.
“உண்மையிலேயே உனக்கு அக்கான்னு ஒருத்தி வீட்டுல இருக்கிறது நினைவில் இருந்தா இந்தளவு துணிய மனம் வருமா? அதுவும் இந்த வயசில் எப்படிடா?” கோபத்தில் அதட்டலாக தொடங்கியவளின் குரல், என்ன முயன்றும் இறுதியில் கரகரப்பாக வந்தது.
அவளின் கோபத்தையும் எதிர்கொள்ள முடியவில்லை! அழுகையையும் எதிர்கொள்ள முடியவில்லை!
“அக்கா நான் செய்தது பெரிய தப்புன்னு புரியுது. ஆனா இப்ப நான் மாட்டிட்டேன். என்னோட சேர்ந்து கவியும். எனக்கு ஒரு பத்தாயிரம் அவசரமா வேணும்கா. பிளீஸ்” என்றான் இறங்கிய குரலில்.
“எதுக்கு?” என்றாள் தெரிந்து கொண்டே. கூடவே, “இப்பவும் நீ வீட்டில் திருடியிருக்க வேண்டியது தானே…” என்று சுள்ளென்று கேட்க, “எனக்கு அப்ப வேற வழி தெரியலை கா” என்றான் கண்களை துடைத்தபடி.
“நீ இத்தனை அழுத போதும், இனியும் இந்த தப்புக்களை நீ செய்ய மாட்டேன்னு என்ன நிச்சயம்ன்னு கேட்க தோணுதே. ஏன்?” என்று கேட்டாள் அவனை விழியிடுங்க பார்த்தபடி. அவன் தலை தாழ்ந்தது.
எப்படி அக்கா நம்புவாள்? சிறுசிறு பிழைகள் தெரிய வந்தபோதே அத்தனை பக்குவமாய் எடுத்துச் சொல்வாளே. கெஞ்சியும், அதட்டியும் கூட பார்த்தாளே! அப்பொழுதெல்லாம் இனி இப்படி நடக்காது என்று சொல்லிவிட்டு மீண்டும் அதே சகதியில் புரண்டானே! இப்பொழுது எந்த முகத்தை வைத்துக் கொண்டு நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்வது? உண்மை சுட்டதில் அவனால் வாயே திறக்க முடியவில்லை.
அவன் வருந்துவது புரிந்தும், சாட்டையடிகளை நிறுத்தவில்லை. அவள் மனம் அத்தனை கொதித்துக் கொண்டிருந்தது.
“சரி வீட்டுக்கு போ. இந்த பிரச்சனையை நாளைக்கு பேசிக்கலாம்” என்றாள் இறுக்கமாக.
“அக்கா… அது… பணம்…”
“நாளைக்கு பார்த்துக்கலாம்ன்னு சொன்னேன்” என்று தீர்மானமாகச் சொன்னவள், அவ்வளவுதான் என்பதுபோல சீட்டில் நன்கு சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
அவளையே பார்த்தவண்ணம் காரை இயக்கினான் வசந்தன்.