Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_14’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_14’

அத்தியாயம் – 14

 

மாலை புதிதாக வாங்கிய மாம்பழ நிற காட்டன் சேலையை மடிப்பு கலையாமல் நேர்த்தியாகக் கட்டிக் கொண்டு, குழந்தைகளுக்கு நல்ல ஆடைகளை அணிவித்தாள். உலகம்மை வீட்டிற்கு சென்றபோதே அவருக்கென வாங்கி வந்திருந்த பரிசுகளைத் தந்திருந்தாள். அவளது அன்பளிப்பான பச்சை வண்ண சேலையை அவர் உடுத்தி வந்திருந்தது கண்டு மிக மகிழ்ச்சி அவளுக்கு.

“எனக்கு பிடிச்ச நிறம் வெண்ணிலா. புடவை ரொம்ப நல்லாருக்கு. தாங்க்ஸ்” என்றார்.

“அக்கா இதுக்கெல்லாம் நன்றியா? அப்ப நானெல்லாம் ஜென்மம் முழுவதும் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்ல வேண்டி இருக்கும்”

“ரெண்டு பேரும் தாங்க்ஸ் சொல்ல வேண்டாம். கிளம்பலாமா”

அனைவரும் கிளம்பி அதினனின் மாளிகையை அடைந்தனர். அந்த டூப்ளெக்ஸ் வீட்டை விழிகள் விரியப் பார்த்தனர் குழந்தைகள்.

“வாங்க வாங்க” என்று வரவேற்ற அதினன் வேஷ்டியும், காண்ட்ராஸ்ட் நிற டீஷிர்ட்டும் அணிந்திருந்தான். சென்ற முறை பார்த்ததற்கு இப்போது நன்றாக எடை குறைந்திருந்தான். இந்த நடிகர்களால் மட்டும் எப்படித்தான் நினைக்கும்போது உடம்பை ஏற்றவும் அதன் பின் சில மாதங்களில் எடை குறைக்கவும் முடிக்கிறதோ?

“ஹை அதினன் அதினன்” என்று சந்தோஷத்தில் குதித்தான் வெற்றி. இதை எதிர்பார்க்காத வெண்ணிலாவுக்கு மூச்சே அடைத்துவிட்டது. வெற்றியோ அவளது பிடிக்குள் இருந்து விடுவித்துக் கொண்டு அதினனிடம் ஓட முயன்றான்.

அவன் சட்டையைப் பிடித்து இழுத்து ஓட விடாமல் தடுத்தவண்ணம் “உதை வாங்கப்போற வெற்றி… அங்கிள் சொல்லு” என்று தாழ்ந்த குரலில் அதட்டினாள் வெண்ணிலா.

“விடும்மா குழந்தைகள் அன்பை சம்பாரிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இவன் அதை சம்பாரிச்சதுதான் இத்தனை நாள் சினிமால கிடைச்ச லாபம்” என்றார் அதினனின் தோற்றத்தை ஒத்திருந்த வயதானவர் ஒருவர்.

“எங்கப்பா…” என்று அவர்களிடம் அறிமுகப் படுத்தினான் அதினன்.

“வணக்கம் சார்”

“உள்ள வாம்மா… “ என்று அழைத்து சென்றனர்.

வரவேற்பு அறை முழுவதும் பழமையும் புதுமையும் நிரம்பி வழிந்தது. தேக்கு மரக் கதவுகளும் வேலைப்பாடுகளும் ஒரு பக்கம் என்றால் தானாக டெம்பரேச்சர் பரிசோதித்து குளிரூட்டியை இயக்கும் எலெக்ட்ரானிக் டிவைஸ் மறுபுறம்.

சுவற்றில் ஒய்யாரமாய் சாய்ந்திருக்கும் பழங்காலப் பெண்மணியின் ஓவியம் ஒரு புறம் என்றால் செயற்கை நீரூற்று மறுபுறம்.

எல்லாவற்றையும் விட பேராச்சிரியம் அதினன் வெற்றியை கையில் தூக்கிக் கொண்டு அங்கிருந்த பொருட்களைக் காண்பித்து விளக்கியது. முதலில் தயங்கிய ரதியும் சில நிமிடங்களில் அவனிடம் ஒட்டிக் கொண்டான்.

“எப்படி அங்கிள் நீங்க டான்ஸ் ஆடிட்டே பாட்டுப் பாடும்போது மூச்சு வாங்காது?”

“அதெல்லாம் ஒரே ஷாட் இல்லம்மா, கட் பண்ணிப் பண்ணி எடுப்பாங்க. பாட்டெல்லாம் முன்னாடியே ரெக்கார்ட் பண்ணிட்டு சும்மா வாயை மட்டும் அசைப்போம்” என்று பொறுமையாக ரதியிடம் பதில் சொன்னான்.

சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த அதினனின் பெற்றோர். “அதின் மித்துவை பாத்துக்கோ, நீங்க எல்லாரும் இங்க இருக்கும்போதே நாங்க கிளம்பிப் போயிட்டு சீக்கிரமா திரும்பி வந்துடுறோம்” என்றவர்களிடம் தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஒரு அழகிய பூங்கொத்து நகர்ந்து வருவது போன்று அவளது அறையிலிருந்து மெதுவாக நடந்து வந்தாள் மித்து.

“ஹாய் மித்து தூங்கி எந்திருச்சுட்டியா? சூடா ஏதாவது குடிக்கிறியா?” கண்களில் அன்பைத் தேக்கிக் கொண்டு கேட்டான் அதினன்.

உலகம்மை “ஹாவ் ஆர் யூ மா?” எனக் கேட்க

“ஃபைன்” இயந்திர கதியில் பதில் சொல்லிவிட்டு மித்துவின் கண்கள் அப்படியே நகர்ந்தது. வெண்ணிலாவை உணர்ச்சி துடைத்த பார்வையால் அளவிட்டாள். அப்படியே ரதியிடமும், வெற்றியிடமும் நின்றது.

“செம்ம அழகுல்ல, பொம்மை மாதிரி இருக்காங்க” என்று அக்காவிடம் வெற்றி ரகசியமாய் சொன்னது அந்த அறையில் இருக்கும் அனைவரும் கேட்டனர். மித்துவும் கூடத்தான். மெலிதாகப் புன்னகைக்கிறாளோ?

“இவங்க யாரு அங்கிள்? உங்க தங்கச்சியா?” அதினனிடம் கேட்டாள் ரதி.

“தங்கச்சி மாதிரியா இருக்கு? அப்ப தங்கச்சிதான்” என்றான் அதினன் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு.

அவனிடம் நகர்ந்த மித்து சோபாவில் இருந்த தலையணையை எடுத்து அடிக்கத் தொடங்கினாள் “நான் தங்கச்சியா? நான் உங்களுக்குத் தங்கச்சியா?” என்று கேட்க,

தடுத்துக் கொண்டே “இல்லம்மா தெரியாம சொல்லிட்டேன் டியர், விட்டுடு” என்று விளையாட்டாய் கத்த,

வெற்றி ஓடிச் சென்று மித்துவின் கரங்களைப் பிடித்துக் கொண்டான் “அங்கிள் பாவம்! அவரை அடிக்காதீங்க அக்கா. அங்கிள அடிச்சா நான் உங்க கூட சண்டை போடுவேன்” என்றான் வீரமாக அவளை முறைத்தபடி.

“நானும்தான்” என்று இணைந்து கொண்டாள் ரதி.

“பாரு மித்து, எனக்காக சப்போர்ட்டுக்கு ரெண்டு பெரிய மனுஷங்க இருக்காங்க” கெத்து காட்டினான் அதின்

“எனக்கும்தான் இருக்காங்க” என்றபடி பெண்கள் இருவரையும் அவள் கண்களாலேயே உதவிக்கு அழைக்க

“நாங்க இருக்கோம் மித்துவுக்கு ஹெல்ப் பண்ண” என்றபடி அவளருகில் நின்று கொண்டாள் வெண்ணிலா. உலகம்மையும் மறுபுறம் நின்றுக் கொண்டாள்.

“வெற்றி, நம்மை விட பெரிய பயில்வான் எல்லாம் மித்துவுக்கு சப்போர்ட்டுக்கு இருக்காங்கடா. நம்ம வெள்ளைக் கொடி பறக்க விட்டுடுவோம்”

“இவங்க உங்க தங்கச்சி இல்லையா?” வெற்றி முதலில் கேட்ட கேள்வியை நினைவு படுத்தினான்.

மித்துவை அருகே அழைத்து தோளோடு அணைத்துக் கொண்டவன் “இது மித்து, என்னோட பொண்ணு” என்றான் அதினன்.

அங்கிருந்த மூவருக்கும் பெரிய அதிர்ச்சிதான். உலகம்மைக்கு மட்டும் இந்த விவரம் முன்பே தெரியும் போல. அதனால் புன்னகைத்தபடி அமர்ந்திருந்தார்.

“அங்கிள், அப்ப உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?” என்று ரதி ஆச்சிரியத்துடன் வினவ

“மித்து அக்கா, உங்கம்மா எங்க?” என்றான் வெற்றி பெரிய மனிதத் தோரணையுடன்.

அதனைக் கேட்டத்தும் மித்துவின் முகம் முழுவதும் வெளுக்க, பார்த்துக் கொண்டிருந்த அதினும் தனது மனநிலையை வெளியில் மறைத்தவாறே அவளருகில் சென்ற ஆதரவாக கையைப் பிடித்தான். பெரியவர்கள் என்றால் ஏதாவது சொல்லலாம். இயல்பாக எல்லாரும் கேட்கும் கேள்வியைத் தானே இந்த சிறுவனும் கேட்டிருக்கிறான். இவனுக்கு என்ன பதில் சொல்வது.

“எனக்கு அம்மா இல்ல” என்றாள் மித்து வெகு வேகமாக பதட்டத்துடன்.

“ஓ” ரதி அவனை அடக்குவதற்குள் முந்திக் கொண்டு சாதாரணமாக பதில் அளித்துவிட்டான் குட்டிப் பையன்.

“என்ன ஓ?” என்றாள் மித்து எரிச்சலுடன்.

“எங்களுக்கு அப்பா இல்லாதது மாதிரி உங்களுக்கு அம்மா இல்ல. அப்படித் தானே மித்துக்கா”

மித்துவின் முகத்தில் ஒரு பெரிய பிரச்சனையிலிருந்து மீண்ட திருப்தி. அத்துடன் எதையோ அறிந்துக் கொண்டதைப் போல, இவர்களும் என் இனம் என்ற பிடிப்பு, புன்னகை மலர பதில் அளித்தாள்“அப்படியேதான் வெற்றி”

பெரியவர்கள் மூவரின் மனதிலும் நிம்மதிப் பெருமூச்சு.

“சரி, நீங்க எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க?” அடுத்த கேள்விக்குத் தாவி விட்டான்.

“ஆமா எப்படி உங்க முடி அப்படியே பட்டு மாதிரி இருக்கு?” என்று அவனது கேள்வியைத் தொடர்ந்தாள் ரதி.

புன்னகைத்தபடியே அவர்களுடன் பேசத் தொடங்கிய அந்த பதினாலு வயது மித்து அப்படியே குழந்தையாய் மாறி அவர்களுடன் விளையாடத் துவங்கிவிட்டாள்.

1 thought on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_14’”

Leave a Reply to Sameera Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_15’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_15’

அத்தியாயம் – 15 “அம்மா படிக்க வாங்க” அவள் பிள்ளைகளைச் சொன்னது போய் இன்று பிள்ளைகள் அவளை அதட்டலாக அழைத்தனர். சென்னையில் அதினன் வீட்டை விட்டுக் கிளம்பும்போது பெரிய பைல்கள் நாலைந்தை எடுத்து வைத்தான். “குட்டீஸ் நீங்க ரெண்டு பேரும் ஹோம்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_11’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_11’

அத்தியாயம் – 11   “அறிவிருக்கா உனக்கு? அவனே ஊர்சுத்தி, பொம்பளைப் பிள்ளைங்களை மயக்கிப்புடுவான்னு சொல்றது சரியாத்தான் இருக்கு… “ கார்மேகம் வெண்ணிலா அதினனிடம் ஒப்புக்கொண்ட செய்தி அறிந்து கத்திக் கொண்டிருந்தான். பொன்னு தலையிட்டு கார்மேகத்தைக் கண்டித்தாள் “இதா பாரு, வெண்ணிலா

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_21’

அத்தியாயம் – 21   அவர்களை வற்புற்தி அதினனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் வீட்டில் அதினன், மித்து, அவன் பெற்றோர், வெண்ணிலா, குழந்தைகள், பாக்யநாதன், கார்மேகம், பொன்னுமணி அனைவரும் இருந்தும் ஒரு விரும்பத்தகாத அமைதி நிறைந்திருந்தது. பிள்ளைகளுக்கு உணவைத் தந்து