சுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 14′(final)

அந்தி மாலைப் பொழுதில் – 14

 

திவி தயக்கமாக, “ஏன் இப்படி மெலிஞ்சிட்டீங்க?” என்று கேட்டாள். வழக்கம்போல டன் கணக்கில் அக்கறையோடு தான்.

 

‘ரொம்பவுமே அக்கறை தான்’ என்னும் கடுப்போடு, “டையட்ல இருக்கேன்” என்றேன் பட்டும் படாமல். இத்தனை நாட்களாக என்னைக் கண்டுகொள்ளவே இல்லையாம்! இப்பொழுது எங்கிருந்து வந்ததாம் இவளுக்கு இந்த அக்கறை? என்று உள்ளுக்குள் கடுகடுத்து கொண்டு விறைப்பாக நின்றிருந்தேன்.

 

என் பதிலை நம்பாத ஃபாவம் அவளிடம்.

 

தயங்கித் தயங்கி எதுவோ என்னிடம் பேச முயற்சிப்பதும், வாயை மூடிக்கொள்வதுமாக அவள் இருக்க, சலிப்போடு நான் கடிகாரத்தைப் பார்த்தேன்.

 

உடனே கலங்கி விட்டாள். இவளுக்கு என்ன தான் ஆச்சோ? ஒன்றும் புரியவில்லை. இன்னமும் என் நம்பர் பிளாக் லிஸ்ட்டில் தான் இருக்கிறது. ஆக, காதலில் கசிந்துருகி என்னைத்தேடி இவள் இத்தனை தூரம் வந்திருக்க வாய்ப்பேயில்லை.

 

பொறுமையிழந்து, “எதுவும் பிரச்சினையா?” என்றேன்.

 

ஆம் என வேகமாக மண்டையை உருட்டிய வேகத்தில், அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் உருண்டோடியது.

 

நினைவு மறந்தவன் போல, அவளருகே நெருங்கி என் கைக்குட்டையை எடுத்து உடனே துடைத்து விட்டேன்.

 

“சின்ன குழந்தையா நீ? என்னன்னு சொன்னாதானே எனக்குப் புரியும்?” என்று நான் கடிந்துகொள்ள, அதற்கும் அவளின் கண்கள் சுரந்தது.

 

மீண்டும் துடைத்து விட்டபடி, “ஸ்ஸ்ஸ் திவி. எனக்கு டிரேவல் பண்ணினதில ரொம்ப டையர்டா இருக்கு. நீ வேற இப்படி எல்லாரும் பார்க்க அழுதா, ஒன்னும் புரியாம நான் என்ன செய்ய முடியும்? நம்மளை பார்க்கிறவங்க எல்லாரும் என்ன நினைப்பாங்க?” அவளருகில் மெலிந்து விட்ட குரலால் நான் கேட்க,

 

“இப்ப நீங்க வீட்டுக்கு போகணுமா?” என்றாள் தவிப்புடன்.

 

“இல்லை. பரவாயில்லை நீ சொல்லு. என்னாச்சு?” என்றதும், “தெரியலை” என்றாள்.

 

நான் குழப்பமாகப் பார்க்கவும், “அது… அம்மா…” எனச் சொல்லமுடியாமல் தந்தியடித்தாள்.

 

“உங்க அம்மாவுக்கு என்ன?”

 

“அவங்களுக்கு எதுவுமில்லை. அவங்க சொல்லறாங்க எனக்குப் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் செய்யணுமாம்” என்றாள் தேம்பியபடி.

 

எனக்குமே இது பயங்கர அதிர்ச்சி தான்! இன்னும் மிஞ்சிப் போனால் இரண்டு மாதத்தில் இவளுக்குப் படிப்பு முடிந்து விடுமே? ஆனால், இவள் எதற்காக அழுகிறாள்? அதுவும் என்னைத்தேடி வந்து? என் மனம் சரியாகத் தான் கணிக்கிறதா? வேணாம் வேணாம் துள்ளாதே என என் மனதைப் பெரும்பாடு பட்டு அடக்கி வைத்தேன் நான்.

 

“எனக்கு… எனக்கு… உங்ககிட்ட சொல்லணும் போல இருந்துச்சு. நேத்து அத்தையைப் பார்க்க போனேன். அவங்க தான் நீங்க இன்னைக்கு வரதா சொன்னாங்க” என்றாள் மீண்டும் தேம்பியபடி.

 

கடவுளே! இவள் எல்லாம் புரிந்து தான் சொல்கிறாளா?

 

“என் மேல கோபமா இருக்கீங்களா?” என்றாள் என் மௌனம் விளங்காமல்.

 

அமைதியாக சென்று அங்கு காலியாக இருந்த இருக்கையில் நான் அமர்ந்து கொள்ள, அவளும் நூல் பிடித்தது போல பின்னாடியே வந்து என்னருகே அமர்ந்து கொண்டாள்.

 

“இங்க பாரு திவி நானா நினைக்கிறது, யோசிக்கிறது எதுவும் வேண்டாம். தெளிவா சொல்லு. ஏன் என்னைத் தேடி வந்த?”

 

“உங்ககிட்ட சொல்லத்தான்…”

 

“ம்ப்ச்… இத்தனை நாளா எனக்கு ஒரு போன் கூட பண்ணலை நீ? நான் பண்ணவும் வழியில்லாம பிளாக் லிஸ்ட் ல போட்டு வெச்சிருந்த… இப்ப மட்டும் என்ன?” என்ன முயன்றும் முடியாமல் சுள்ளென்று கேட்டிருந்தேன்.

 

“அன்னைக்கு நீங்க செஞ்சதுக்கு நான் வேற எப்படி ரியாக்ட் பண்ண முடியும்ன்னு நினைக்கறீங்க?” என்றாள் ரோஷக்காரியும் குறையாத கோபத்துடன். இவளின் ரோஷத்தை அனுபவித்துத் தான் எத்தனை நாட்கள்… இல்லை இல்லை மாதங்கள் ஆயிற்று!

 

“நான் வேணும்ன்னு செய்யலை திவி” தேய்ந்து போன குரலில் நான் சொல்ல,

 

“ம்ப்ச் என்ன ரூபன் நீங்க? உங்களை நம்பி தான் நான் படிக்க வந்தேன். என் அம்மாவும் உங்களை நம்பி தான் என்னைப் படிக்க அனுப்பினாங்க. அப்ப நீங்க எவ்வளவு கவனமா இருந்திருக்கணும்? எனக்கு அப்பா இல்லை. அம்மாவும் வேலைக்கு போறாங்க. குட் டச், பேட் டச் பத்தி எத்தனை அட்வைஸ் இருந்திருக்கும். நீங்க அதை மீறவும் எனக்கு எத்தனை கஷ்டமா இருந்தது தெரியுமா?” என்று ஆதங்கத்தில் தொடங்கி பாவமாக முடித்தாள்.

என்னால் பேசவே முடியவில்லை. என்ன பதில் சொல்ல முடியும்? என்ன சமாதானம் தான் எடுபடும்? குற்றவுணர்வில் தலை குனிந்து அமர்ந்து கொண்டேன்.

 

திவி மெல்லிய குரலில் மீண்டும் தொடர்ந்தாள். “அப்ப நானும் அமைதியா இருந்திருக்க கூடாதுன்னு எனக்கு புரியுது. ஆனா, உங்களை என்னால ஏன் தடுக்க முடியலைன்னு எனக்குப் புரியலை. தடுக்க முடியாததை விடுங்க தடுக்கணும்ன்னு தோண கூட இல்லை. அன்னைக்கு நான் அமைதியா இருந்தது தான் என்னோட முதல் கோபம்” என்றாள் இயலாமையுடன்.

 

“சாரி திவி” என்றேன் அவளின் வலது கரத்தை என் கரங்களுக்குள் பொதித்து வைத்தபடி.

 

“ம்ப்ச் விடுங்க. ஏதோ ஹார்மோன் கோளாறு போல… அந்த கோளாறு உங்ககிட்ட மட்டும் ஏன்னு தான் புரியலை” என்றாள் சலிப்பாக.

 

‘இது என்ன ராக்கெட் சையின்ஸா புரியாமல் போக!’

 

“ஒருசில நேரம் புரிஞ்சாலும் ஏத்துக்க ஏதோ ஒரு பயம், தடுமாற்றம்” அவள் மெல்லிய குரலில் புலம்ப தொடங்கவும், நான் அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

என் பார்வை உணர்ந்து தலையைத் தாழ்த்திக் கொண்டவள், தன் இதழ்களைக் கடித்துக் கொண்டாள். அவளின் முகச்சிவப்பு என்னை வசியப்படுத்தியது.

 

“அப்ப உனக்கு புரிஞ்சுதா திவி? இத்தனை நாளுல ஒருநாளாவது என்னை தேடுனியா?” ஏக்கம், காதல், ஆசை, எதிர்பார்ப்பு என்ற கலவையான உணர்வுகளால் நிரம்பி தழும்பியபடி நான் கேட்க,

 

பதில் சொல்ல முடியா தயக்கம் அவளிடம்.

 

“நீ மேத்ஸ் ல பாஸ் பண்ணினதை என்கிட்ட சொல்லுவேன்னு எத்தனை எதிர்பார்த்தேன் தெரியுமா?” என்றேன் அன்றைய நினைவில் வாட்டத்துடன்.

 

சட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தவள் என் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி, “சொல்லத்தான் நினைச்சேன் ரூபன். உங்ககிட்ட சொல்லணும்ன்னு ரொம்பவும் ஆசையும் பட்டேன். ஆனா உங்ககிட்ட பேசின அப்பறம்… எங்கே உங்களை பார்க்கணும் போல இருக்குன்னு கேட்டுடுவேனோன்னு பயம். அதுதான் என்னை உங்ககிட்ட பேசவிடலை” என்றாள் தவிப்புடன். அவள் குரலிலேயே என்னைக் காண தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

இதற்கு மேலுமா இவளின் காதலை உணர்த்த வார்த்தைகள் வேண்டும்? என்னை மிகவும் நெகிழ்த்து விட்டிருந்தாள்.

 

“நீ கேட்டா நான் வராம இருப்பேனா திவிம்மா?” என்று நெகிழ்ந்து போய் நான் கேட்க,

 

“வந்திடுவீங்கன்னு தெரியும். அதுவும் பயம் தான்” என்று அவள் அவஸ்தையோடு பதிலளிக்க, என் புன்னகை காதுவரை விரிந்தது.

 

“கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா?” என்றேன் சிரிப்போடே.

 

“ம்ப்ச் என்ன ரூபன்? அம்மா எனக்குக் கல்யாணம் செய்யணும்ன்னு சொல்லறாங்கன்னு சொல்லறேன். நீங்க அதைத்தவிர மத்ததெல்லாம் விசாரிக்கறீங்க?” என்றாள் செல்ல சலிப்புடன்.

 

“பின்ன நீ தான் என்கிட்ட ஏன் அதைச் சொல்ல வந்தன்னு தெரியாதுன்னு சொல்லிட்டியே…”

 

“தெரியலை தான்…” என்றாள் சன்னக்குரலில்.

 

“நிஜமாவா?” என்றேன் ராகமாக.

 

“ம்ப்ச்…” என்றவள் முகத்தைத் திருப்பியிருந்தாள்.

 

“என்னை அலைய விடணும்ங்கிற முடிவுல தெளிவா இருக்க…” மந்தகாச புன்னகையோடு நான் கேட்க, எங்கிருந்து பதில் வரப் போகிறது.

வெட்கமும், தயக்கமும் போட்டிப் போட அமர்ந்திருந்தவளின் முகத்தை ஆசையாகப் பார்த்தபடி, “கல்யாணம் தானே திவிம்மா பண்ணிக்கோ…” என்று சொல்லி அவளை மெலிதாக அதிர செய்துவிட்டு,

“என் கூட. எனக்கும் கல்யாண வயசு வந்திடுச்சல்ல…” என்று நான் கண்ணடித்துக் கூறவும், அவளின் தளிர் கரம் கொண்டு என்னைத் தாக்கினாள்.

அடிகளை வாங்கிக்கொண்டு புன்னகையோடே, “எல்லாரும் நாட்டை விட்டுப் போகும்போது வந்து காதலை சொல்லுவாங்க… நீ என்னடான்னா கனடாவுல இருந்து திரும்பி வந்தவன் கிட்ட, வீட்டுக்குக் கூடப் போக விடாம சொல்லிட்டு இருக்க. உண்மையாலுமே நீ ரொம்ப லேட் பிக்கப் திவிம்மா… அதான் மேத்ஸ்ல பெயில் பண்ணிட்டாங்க…” என்று பரிகசித்துச் சொல்லி, மீண்டும் பல அடிகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டிருந்தேன்.

அதேநேரம், “ரூபா…” என்ற என் அன்னையின் அதிர்ந்த குரலில் இருவரும் தடுமாறி, சுதாரித்து எழுந்து நிற்க,

“என்னடா செஞ்சுட்டு இருக்கீங்க?” என்றார் என் அன்னை விழிகளை விரித்து அதிர்ந்த தோற்றத்தில்.

“இல்லைம்மா… அது…”

“எங்களை ஏர்போர்ட் வர வேணாம்ன்னு தானே சொன்ன?” என்றவர் திவியை ஆராய்ச்சியாகப் பார்க்க,

“ஆமாம் மா. வர வேணாம்ன்னு தானே சொன்னேன். நீங்க எதுக்கு வந்தீங்க?” என நான் சாவகாசமாகக் கேட்டேன்.

“அடிச்சேனா பார்த்துக்க… என்னடா நடக்குது இங்க? படிக்கிற புள்ளைகிட்ட போயி… அன்னைக்கே உங்க அப்பா சொன்னாரு உன் போக்கே சரி இல்லைன்னு… நான் தான் நம்பலை…”

“அச்சோ அம்மா நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லைம்மா. நம்ம திவி படிப்பு முடிஞ்சதும் அவளுக்குக் கல்யாணமாம் அதான் சொல்லிட்டு இருந்தா…” என்று நான் அவசரமாகச் சொல்ல,

‘அதையேன் டா உன்கிட்ட சொல்லணும்?’ என்பது போலச் சந்தேகமாக என் அன்னை என்னைப் பார்த்தார்.

“அதுதான் மா… அவளுக்கெல்லாம் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் செஞ்சு வைக்கிறாங்க. நானும் தானே படிப்பை முடிச்சு பல வருஷம் ஆச்சு… ஆக, எனக்கும் நீங்க கல்யாணம் செஞ்சு வைச்சுடுங்க மா…” என்று நான் சொல்லவும், என் அன்னைக்கு எதுவுமே விளங்கவில்லை.

நானோ, “எப்படியும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்யணும். பேசாம எங்க ரெண்டு பேருக்குமே செஞ்சு வெச்சுடுங்களேன். உங்களுக்கு மாப்பிள்ளை, பொண்ணு எல்லாம் தேடற வேலை மிச்சம்…” என நான் சாதாரணமாகச் சொல்ல,

“அடேய்!” எனக் கோபத்தில் விழிகளை உருட்டினார் என் அன்னை.

திவியையே சமாளித்து விட்டேன். இவர்களைச் சமாளிக்க மாட்டேனா என்ன? இவளுக்குப் படிப்பு முடிந்த கையோடு திருமணத்தை ஏற்பாடு செய்து விட்டுத் தான் எனக்கு மறுவேலை. உங்களது ஆசிகளை மறவாமல் தந்துவிடுங்கள். நன்றி!!!

*** சுபம் ***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: