சுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 13’

அந்தி மாலைப் பொழுதில் – 13

 

எனது குழம்பிய முகத்தைப் பார்த்து, “நீங்க இத்தனை குழப்பிக்க வேண்டிய அவசியமேயில்லை அதி. இது பர்மனெண்ட் ரிலேஷன்ஷிப் இல்லை. லெட்ஸ் ஜஸ்ட் டேட் பாஃர் சம் டைம்” என்றாள் அனுஷா.

 

குரலில் தேனைக் கலக்க முடியுமா? முடியும் என நிரூபித்தாள் அவள். ஆனால், அதில் போலித்தன்மை தானே அதிகம்?

 

இனிக்க இனிக்கப் பேசுபவர்கள் சில நிமிடங்கள் தானே அப்படிப் பேச முடியும்? அவர்களுடைய இயல்பு பேச்சு என்றொன்று இருக்குமல்லவா? அந்த நிஜமல்லவா நிரந்தரம். அதுதானே வேண்டும்.

 

ஏதோ ரிஷப்ஷனில் அமர்ந்திருக்கும் பெண்ணைப் போல, கஷ்டமர் கேர், வங்கியிலிருந்து வரும் அழைப்பைப் போல… போலி இனிமை எனக்கு ரசிக்கவேயில்லை.

 

“என்ன அதி எதுவுமே பேசாம யோசிச்சிட்டே இருக்கீங்க. ஈஃப் யூ நீட் டைம், ஐ நெவர் மைண்ட்” என்றாள் விரிந்த புன்னகையுடன். நான் யோசிக்க நேரம் தருகிறாளாம். தாராள மனது தான்!

 

அனுஷாவிடம் மட்டுமில்லை வேறு எந்த பெண்ணிலுமே என் உணர்வுகள் தடுமாறாது போலும்! அந்த திவி என்னுள் அத்தனை ஜம்பமாய் அமர்ந்து கொண்டிருக்கிறாள். காலக்கொடுமை! என்னைப் பொருட்டாக நினைக்காதவளை நான் உருகி உருகி நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

 

“அதி ஆர் யூ ஆல்ரைட்?” என மீண்டும் கலைத்தாள் அனுஷா.

 

என் தீவிர யோசனைகளைப் பார்த்து எதிரில் இருப்பவள் என்ன நினைக்கக்கூடும் எனும் எண்ணத்தில் அடக்கி வாசிக்க நினைத்து, “ஸாரி… ஐ வாஸ் திங்கிங் சம் அதர் திங்…” என்று கையை காற்றில் அசைத்தபடி சொல்லிச் சமாளித்து வைத்தேன்.

 

இந்த மனம் வேறு குரங்கைப் போலத் தாவிக்கொண்டே இருக்கிறதே! அதிலும் குறிப்பிட்டு திவியின் நினைவுகளைத் தேடி! நான் என்ன செய்ய முடியும்?

 

“உங்க டிஷிஷன்?”

 

அச்சோ இந்த பெண் ஏன் தலையைச் சரிக்கிறது. மயக்கும் புன்னகையை வீசுகிறது. குரலில் இனிமையை ஏகத்துக்கும் தடவுகிறது. பதில் சொல்லாமல் விடாது போலவே! வேறு ஏதேனும் தகுதியான கன்னிப்பையனாக இருந்திருந்தால் நிச்சயம் கவிந்திருப்பான். எனக்கு எரிச்சலாக அல்லவா வந்து தொலைக்கிறது.

 

திவியை நினைத்து நினைத்து அவளின் காதலன் என்ற எண்ணமெல்லாம் என்னுள் இல்லை போலும்! கணவன் என்னும் உறுதியோடு இருக்கிறேன் போலும்! இல்லையேல் இந்த அனுஷா இது போன்று கேட்கையில் மனதிற்குள் பாரங்கல் பாரம் ஏன் வரப்போகிறது? அதில்லாமல் அன்று அவசரக்குடுக்கையாக திவியிடம் ஏன் அப்படி நடந்து கொள்ளப் போகிறேன்?

 

யோசனையோடே, “அனுஷா ஐ…” எனத் தான் தொடங்கினேன்.

 

அதற்குள் முந்திரிக்கொட்டையாக, “ஈஃப் யூ நீட் டைம், பிளீஸ் டெல் மீ டைரக்ட்லி” என்றாள் மந்தகாச புன்னகையுடன். என் தயக்கத்தில் நிராகரிப்பை ஊகித்து விட்டாளோ?

 

எத்தனை நாள் எடுத்தாலும் என் மனம் மாறவா போகிறது என்ற அலுப்பில், “சாரி அனுஷா. ஐ எம் நாட் இன்ரெஸ்டேட்” என்று பட்டென்று சொல்லிவிட்டேன்.

 

நிராகரிப்பைச் சொல்ல எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், அனுஷா அதைப் புன்னகையோடு ஏற்றுக்கொண்ட விதம் எனக்கு நிம்மதியைத் தந்தது.

 

“ஹோப் யூ அண்டர்ஸ்டெண்ட்…” என்று நான் சமாதானக் குரலில் சொன்னபோது,

 

“யூ ஹேவ் ஆல் ரைட்ஸ் டு சே நோ” என்றாள் அழகாக.

 

யாரோ என் உச்சந்தலையில் அடித்தது போல இருந்தது. எனக்கு அனுஷாவை மறுக்க உரிமை இருப்பது போல தானே… திவிக்கும் என்னை மறுக்க முழு உரிமையும் இருக்கிறது. எனக்கு ஒரு நியாயம். அவளுக்கொன்றா?

 

அவள் மறுத்தாள் என்று நான் இத்தனை தூரம் கோபம் வளர்த்துக் கொண்டிருக்கிறேனா? என்னை நினைத்தே எனக்கு எரிச்சலாக இருந்தது.

 

சமாளித்து புன்னகைத்து, “எஸ். எவ்வரிஒன் ஹேஸ் தட் ரைட்ஸ்” என்று அவளிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டு மனதிற்குள் அவளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.

 

நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் நமக்குக் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும். அந்த வகையில் அனுஷா எனக்கொரு அழகான பாடத்தை கற்றுக் கொடுத்திருந்தாள்.

 

அதன்பிறகு, என்னுள் சில மாற்றங்கள்! ஒருதலை காதலே என்றபோதும் அதை யாராலும் அசைக்க முடியாத போது, அதன் உறுதி மிகவும் அதிகம் என்பதால் மீண்டும் எனக்குள் போற்றி பாதுகாக்கத் தொடங்கினேன்.

 

திவ்யசுந்தரியின் முகத்தைப் பார்க்காமல், குரலைக் கேட்காமல் அந்தி மாலை வேளைகளைக் கடப்பதைத் தவிர வேறொரு சவாலான விஷயம் இல்லை எனலாம்.

 

உள்ளுக்குள் அவ்வப்போது ஓர் எதிர்பார்ப்பு, என்னிடம் பேச ஆசைப்படுவாளா என்பது போலத் தலை தூக்கும். ஆனால், அதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

 

என் கைப்பேசி எண்ணை இன்னமும் பிளாக் லிஸ்ட்டில் தான் வைத்திருக்கிறாள்.

 

மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் அவள் என்மீது கொண்டுள்ள அவநம்பிக்கை என்னை வெகுவாக துரத்தும்.

 

அதிலிருந்து என்னை மீட்கும் வழி தெரியாமல் என்னுள் இருக்கும் அவளின் நினைவுகளை மீட்டெடுப்பேன். எப்பொழுதோ அவளது வாட்ஸ்ப் டிபியிலிருந்து திருடிய புகைப்படங்களெல்லாம் இப்பொழுது எனக்கு பெரும் ஆறுதல்!

 

நானும் நெட்டித்தள்ளி ஆறு மாதங்களைக் கனடாவில் கடத்தியிருக்க, என் அம்மா “எப்பொழுது இந்தியா வருகிறாய்? ஒருமுறை வந்துவிட்டு போ” என நச்சரிக்கத் தொடங்கினார்.

 

என்னால் இந்தியா செல்ல முடியுமா? சென்று அவளைக் காணாமல் திரும்பி வர இயலுமா?

 

எதுவுமே முடியாது எனும்போது இந்தியா ஏன் செல்ல வேண்டும் என்று கடுப்பாக இருந்தது. “வரேன் மா. பிராஜெக்ட் டைட் ஷெடூலா இருக்கு. ஓரளவு ரெடியானதும் வரேன்” என சொல்லிச் சமாளித்தேன்.

 

மூன்று மாதங்கள் இவ்வாறாகவே அரைத்த மாவையே மீண்டும் அரைத்துச் சமாளித்து விட, மீண்டும் அம்மா நச்சரிக்கத் தொடங்கினார். இதற்கும் தினமும் வீடியோ காலில் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். என் மெலிவு அவருக்கு மிகவும் உறுத்துகிறதோ என்னவோ வா என்று விடாப்பிடியாக நின்றார்.

 

“இல்லைம்மா. வரணும்ன்னா லீவ்ஸ் நிறைய வேணும். பிராஜெக்ட் இருக்கும் நிலைமையில கண்டிப்பா விடமாட்டாங்க மா. சீக்கிரம் பிராஜெக்ட் லைவ் போயே ஆகணும்” பொய்யும், மெய்யும் கலந்து சொல்லிச் சமாளிக்க முயன்றேன்.

 

கோபித்துக் கொண்டு அம்மா இரண்டு நாட்கள் என்னிடம் பேசவே இல்லை. செல்லலாம் என்று ஒரு மனம் யோசித்த போதும், இந்தியா வரை சென்று அவளைப் பார்க்காமல் வர முடியாது என்று இன்னொரு மனம் சோகம் கொண்டது.

 

இது அவளின் கடைசி வருடப் படிப்பு. என்ன செய்து கொண்டிருக்கிறாளோ? திட்டுவதற்கேனும் என்னை நினைப்பாளா? என மனம் அவளையே வட்டமிடும்.

 

ஆனால், அவளைக் காணும் கொடுப்பினையோ, உரிமையா தனக்கு இல்லை என்பதை வருத்தத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்.

 

என்நிலை இப்படியே நீடித்தால் என்ன நடக்கும் என்றே எனக்குப் புரியவில்லை. அவளை காதலியாக அடையத் தான் எனக்குச் சரிவரத் தெரியவில்லை போலும்! ஆனால், அவளை மனைவியாக அடைய வேண்டியவற்றைச் சரியாகச் செய்ய வேண்டும். எதிலும் சொதப்பிவிடக் கூடாது என்பதில் மட்டும் வெகு உறுதியாக இருந்தேன்.

 

மீண்டும் அன்னையை ஒருவாறாகச் சமாளித்துப் பேச வைத்து விட்டேன். ஆனால், இந்தியா செல்வதற்கு மட்டும் நான் ஒப்புக்கொள்ளவே இல்லை.

 

அம்மா ஏன் வரமறுக்கிறாய் உண்மையைச் சொல் எனப் பிடிவாதம் பிடித்தார்.

 

“வேலை அதிகம் மா. அதோட உங்களை வந்து பார்த்தா கண்டிப்பா என்னால சீக்கிரம் திரும்பி வேற வரமுடியாது…” எனக் காக்கா பிடித்தேன்.

 

“ரொம்ப கஷ்டமா இருக்கா ரூபா?” அம்மா வாஞ்சையாகக் கேட்க,

 

“உங்க அருமை புரியுதும்மா” என்றேன் நான் ஆத்மார்த்தமாக.

 

“ஏன் இங்கிருக்கும் போது புரியலையாக்கும்”

 

“ஹாஹா… பிரிஞ்சு இருக்கப்ப புரியறது அனுபவ பாடம் மா. இங்கே எனக்குக் கடை சாப்பாடும் பிடிக்கலை. என் சமையலும் ருசிக்கலை” சிரிப்புடன் தொடங்கி, பாவமாக முகத்தை தொங்கப் போட்டபடி முடித்தேன்.

 

“சீக்கிரம் வந்திடு ரூபா”

 

“வேலை முடிஞ்சா அவங்களே துரத்தி விட்டுடுவாங்கம்மா…” என்று நான் சிரிப்புடன் சொல்லவும்,

 

“அந்த வேலை சீக்கிரம் முடியட்டும்” என்று சாபமா, வேண்டுதலா எனப் புரியாத பாவனையில் அம்மா சொன்னார்.

 

அதில் நான் சிரிக்க, “ஒத்தை பிள்ளை பெத்துட்டு அதை கண்காணாம அனுப்பிட்டு… என் பொழப்பை பாரு…” என்று அம்மா பாவமாகச் சொல்ல,

 

“சீக்கிரம் வந்திடறேன் மா” என்றேன் சமாதானமாக.

 

இந்த திவி என்னை மன்னித்தால் கூட இந்தியா செல்ல ஒரு உத்வேகம் வரும் போல! அவளோ என் நினைவேயின்றி இருக்கிறாளே என மிகவும் வருந்தினேன்.

 

திவி தன் கோபம் மறந்து என்னை அழைக்க வேண்டுமே என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் என்னுள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றது. ஆனால், நான் இங்கு வந்து பதினாறு மாதங்களை கடந்து விட்ட பிறகும், எனது பிராஜெக்ட் முடிவுற்று என்னை இந்தியா கிளம்ப சொல்லி என் கம்பெனி வழியனுப்பும் நேரம் வந்தபிறகும் அவளது அழைப்பு மட்டும் வந்தபாடில்லை.

 

இதோ கனடா பிராஜெக்ட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இந்தியா கிளம்புகிறேன். திவி மீது கோபமே வளர்த்துக் கொள்ள கூடாது என எனக்கு நானே சுயக்கட்டுப்பாடுகளை விதித்த போதும், என் நிராசை எனக்குள் எல்லையற்ற கோபத்தை உருவாக்கியிருந்தது.

 

நான் நாளை அதிகாலை ஏழு மணி போலச் சென்னை ஏர்போர்ட் சென்றடைவேன். வீட்டினரை வரவேண்டாம் என்று சொல்லியும் விட்டிருந்தேன். அந்த நேரத்தில் அவர்கள் ஏன் அலைய வேண்டும் என்று!

 

மனச்சஞ்சலத்தோடும், அலைப்புறுதலோடும் பயணம் முழுவதையும் கழிக்க, அடுத்த நாள் விமான நிலையம் வந்து, என் உடைமைகளை சேகரித்து வந்துகொண்டிருந்த என்னை திவ்யசுந்தரி எதிர்கொண்டாள்.

 

‘இவள் எங்கே இங்கே?’ என்று தோன்றியபோதும், எனக்கிருக்கும் ஆத்திரத்தில் எதுவும் பேசிவிடுவேனோ என்ற அச்சத்தில் அவளைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றேன்.

 

காதல் மனம் அடித்துக்கொண்டது. எத்தனை மாதங்கள் கழித்துப் பார்க்கிறாய்? ஒருமுறை ஆசை தீர பார்த்துவிட்டாவது வந்திருக்கலாம் என்று. ‘அது எதற்கு?’ என கோபமனம் முறுக்கிக் கொண்டது.

 

சில எட்டுக்கள் எடுத்து வைத்த என்னை வேகமாகப் பின்தொடர்ந்து வந்து வழிமறித்தவள், என் காதல் மனம் செய்ய நினைத்ததைச் செய்தாள்.

 

ஆசைதீர பார்த்தாளா? என்று உறுதியாகச் சொல்ல முடியாத போதும் தலை முதல் கால் வரை அலசி ஆராய்ந்து பார்த்தவளின் கண்களில் மெல்லிய நீர்ப்படலம்.

 

இவள் ஒருத்தி என்னைக் குழப்புவதற்கென்றே தனியாகப் படித்து பட்டம் வாங்கியிருப்பாள் போல என்ற எரிச்சலோடு மீண்டும் நகர எத்தனிக்க,

 

“உங்களைப் பார்க்கத் தான் வந்தேன்” என்று கரகரத்த குரலில் அறிவித்து, என்னை மீண்டும் குழம்பினாள். மெலிதாக எதிர்பார்ப்பு எழுந்தபோதும், உள்ளுக்குள் ஒரு மனம் இவளை நம்ப மட்டும் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. எதையாவது பொதுவாகச் சொல்லி கடைசியில் அதற்கு அறிவுஜீவியாய் ஒரு விளக்கம் தந்து அசரடித்து விடுவாள். எதற்கும் சூட்டிப்போடே இருப்போம் என்ற எண்ணத்தில் விறைப்பாக நின்று என்ன என்பதாகப் பார்த்தேன்.

என் விழிகள் என்னையும் மீறி அவளை வருடத் தொடங்கியது. இவள் என்னிடம் என்ன சொல்வாளாய் இருக்கும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: