Tamil Madhura தொடர்கள்,ரங்கோன் ராதா பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 7

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 7

பேயைக் கண்டவர்கள் கிடையாது. ஆனால் அதன் குணங்களைத் தெரிந்து கொண்டவர்களைப்போல ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள். பேயின் உருவம் தெரியாது என்றும், அது மனிதர்களைப் பிடித்துக் கொண்டால், அவர்கள் செய்யும் சேஷ்டைகளின் மூலம், பேயின் போக்குத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் பேசுகிறார்கள். இந்தப் பைத்தியக்காரத்தனமான எண்ணம் எவ்வளவு விபரீதமான நடவடிக்கைகளுக்கு இடம் தருகிறது. என்னைக் கொட்டி வேதனை கொடுத்த தேளை அடிக்க நான் என் அப்பாவின் தடியை எடுத்தேன். எனக்குப் பேய் பிடித்திருப்பதாக நம்பியதால், நான் தடியை எடுத்ததும், தங்களுக்கு ஆபத்து வரும் என்று பயந்து, என் தகப்பனாரும், புருஷனும் ஓடினார்கள். என்னால் சிரிப்பைத் தாங்க முடியவில்லை. மகா சூரர்கள், வீரர்கள் இந்த ஆண்பிள்ளைகள்! எதிலே! பெண்களை மிரட்டுகிற விஷயத்திலே! நான் என்ன சின்னப் பிள்ளையா? எனக்கென்ன பயம் என்று பெருமையாகப் பேசுவார்கள். பெண் என்றால் பயங்காளி, ஆண்களேதான் தைரியசாலிகள் என்று எப்படியோ ஒரு தப்பான எண்ணத்தை நாட்டிலே பரப்பி விட்டார்கள். இரண்டு ஆடவர்கள் ஓடினார்கள், நான் கையிலே தடியை எடுத்ததும்! அவ்வளவு பயம்! பேய் என்ன செய்துவிடுமோ, என்ற பயம்.

தேளை அடித்துவிட்டு வெளியே வந்து அப்பாவைக் கூப்பிட்டேன். அவர் என் வார்த்தையிலே நம்பிக்கை வைத்து உள்ளே வர நெடுநேரம் பிடித்தது. இதற்குள் வீட்டு வாசற்படி அருகே ஒரு சிறு கூட்டம். வழக்கப்படி என் கணவருக்கு உபசார மொழிகள்; அவரும், வழக்கமான நடிப்பைச் செய்தார். தேளைக் காட்டினேன், அப்பாவுக்கு. அப்போதுதான் நம்பினார், உண்மையில் என்னைத் தேள் கொட்டியதனால்தான் அலறினேன் என்று. ஏதோ மருந்து தடவினார்கள். அன்றைய பொழுதை ஒருவாறு கழித்தேன். மறுதினம் நான் என்ன சொல்லியும் கேட்காமல், என் தகப்பனார் நிர்ப்பந்தப்படுத்தி, என்னை ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். பேய் ஓட்டும் இடமாம் அது. அங்கு போய், ஒரு பெரிய குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, நானும் என் அப்பாவும் எங்களுக்கு உதவியாக வந்த வேலைக்காரியுடன் தங்கினோம்; கிராமம் சிறிய அளவு; ஆனால் பச்சைப் பசேல் என்று இருக்கும். எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் அழகான தோப்புகள். சுற்றிப் பார்க்குமிடங்களிலெல்லாம், விதவிதமான பட்சிகள். இந்தக் கிராமத்திலே தங்கியிருந்த ஒரு பக்கிரி, பேயோட்டுவதில் நிபுணன் என்று அந்தப் பக்கத்து வதந்தி. அதனால், என் தகப்பனார் என்னை அங்கு அழைத்து வந்தார். எனக்கு ஒரு துளியும் விருப்பம் கிடையாது, அங்கு போக. என் கணவரிடம், நான் புறப்படுவதற்கு முன்பு, தனியாகச் சந்தித்து, என் மனதைத் திறந்து பேசினேன். “எப்படியோ நமது இன்ப வாழ்வு கெட்டுவிட்டது. என் சகவாசம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. கல்லென்றாலும் கணவன் தான், புல்லென்றாலும் புருஷன் தான். ஆனால் நீங்கள் என் தலைக்குப் பாறையாக இருக்கிறீர்! ஆகையால், என் மனமும் முறிந்துவிட்டது. தங்கத்தைக் கலியாணம் செய்து கொள்ளுங்கள், நான் தடை செய்யவில்லை என்று உம்மிடம் கூறினேனே, அன்று இரவு, அதோடு என் அல்லல் தீர்ந்துவிட்டது என்றுதான் நான் மனமார நம்பினேன். அன்று இரவு, நீங்களும் என் துக்கத்தை எல்லாம் துடைத்து விடுவதுபோலவே நடந்து கொண்டீர். ஆனந்தமாகக் கழிந்தது அந்த இரவு; என் கடைசி இன்ப இரவு அதுதான். இனி அத்தகைய இரவு கிடையாது. மறுதினமே உங்கள் மனம் மாறிவிட்டது. இனி நானும், நம்பிக்கையை இழந்துவிட்டேன். கட்டின தாலி ஒன்றுதான் இனி நாம் கணவன் மனைவி என்பதைக் காட்டும் அறிகுறியாக இருக்கும். உம்மை நான் இழந்துவிட்டேன். இனி மறுபடியும் பெற முடியாது. பெறவும் முயலமாட்டேன். உம்மை நான் வேண்டிக் கொள்வதெல்லாம் ஒரே ஒரு விஷயமாகத்தான். உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னை அந்தப் பேயோட்டும் இடத்துக்கு அனுப்பாதீர்கள். அங்கே எத்தனை புண்யகோடி இருப்பார்களோ? என்னென்ன பழி பிறக்குமோ, என்ற பயம் என்னைக் கொல்கிறது. என்ன காரணமோ தெரியவில்லை, ரங்கத்தை அவள் புருஷன் கைவிட்டார் என்று மட்டும் உலகம் கூறட்டும்; வேண்டுமானால் ரங்கத்தைப் பேய் பிடித்துக் கொண்டதால், அவள் கணவன், இரண்டாம் கலியாணம் செய்து கொண்டான், ரங்கம் மாட்டுக் கொட்டகையிலே கிடக்கிறாள் என்று பேசட்டும்; ரங்கம் கெட்டு விட்டாள் என்று பேசுவதற்கு மட்டும் இடம் தரவேண்டாம். குடிவெறியிலே உளறினான் அந்தக் கோணல் சேட்டைக்காரன், பூஜாரி, புண்யகோடி. அதற்கு எனக்கு விபசாரிப் பட்டம் சூட்டினீர். இப்போது என்னை வேறோர் பேயோட்டியிடம் போகச் செய்கிறீர் சிகிச்சை பெற. இங்கு போவதால், என் மீது அபவாதம் ஏற்பட்டால் என் கதி என்ன ஆவது? விபசாரி என்று உலகம் தூற்றுவதற்குமா நான் இடமளிக்கவேண்டும்? என்னைப் பிடித்த பேய் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதை ஓட்டுவதற்கு முயற்சி எடுப்பதாகக் கூறி என் மானத்தை ஓட்டி விடாதீர். தயவு செய்யுங்கள். என்னிடம், இனி நீர் பேச வேண்டாம்; அன்பு காட்ட வேண்டாம்; தோட்டத்திலேயே கிடக்கிறேன். நான் ஏதேனும் தொல்லை தருவேன் என்று பயம் ஏற்பட்டால், என்னைக் கட்டிப் போடுங்கள். ஆனால், விபசாரி என்ற பழி பிறக்கும்படியான மார்க்கத்திலே என்னைத் துரத்தாதீர். பாவி புண்யகோடி, நான் மயக்கமுற்றுக் கிடந்த நேரத்தில், என் மச்சம் முதலிய அடையாளத்தைக்கூடக் கண்டு கொள்ளவும், கேவலமாகப் பிறகு பேசவும் துணிந்தான். இப்போது நீங்களும் வரமுடியாது என்று கூறுகிறீர். என்னை என் தகப்பனாருடன் அனுப்பி வைக்கிறீர். அங்கே என்னென்ன பழி பிறக்குமோ என்றே நான் பயப்படுகிறேன். வேண்டாம். நாம் சில காலமாக இருந்து வந்த இன்பத்தின் பேரால் உம்மைக் கேட்கிறேன். என்னை இங்கேயே இருக்கவிடுங்கள்” என்று நான் கண்ணீரும் கம்பலையுமாக இருந்துகொண்டு கேட்டேன்.

உன் அப்பாவின் மனம் இளகவில்லை. போக முடியாது என்று பிடிவாதம் செய்து பார்த்தேன். பிடிவாதம் செய்யச் செய்ய பேயின் சேஷ்டை அதிகமாகிவிட்டது என்றே என் அப்பாவும் ஊராரும் நம்பினார்கள். ஆகவே, பலாத்காரமாக என்னை அழைத்துக் கொண்டு போனார்கள் அந்தக் கிராமத்துக்கு. என் முயற்சிகள் தோற்றுவிட்டன. என்ன செய்வது இனி, எப்படியாவது நான் தொலைய வேண்டும் என்பதுதான் உன் அப்பாவின் எண்ணம். நானும் தற்கொலை செய்து கொள்வது என்று ஏதேதோ யோசித்தேன் மகனே! எனக்கு மனம் வரவில்லை சாக. என்னை அவரே கொல்லட்டுமே, நானாக ஏன் சாகவேண்டும் என்று எண்ணினேன். ஆடுகூடத் தானாக வெட்டுபவனிடம் போய் நிற்பதில்லையே! அதனுடைய சக்திக்குத் தகுந்தபடி, தப்பித்துக் கொள்ளக் கொஞ்சம் போராடித்தானே பார்க்கிறது. என்னைக் கொட்டிய தேள், சுலபத்திலே கொல்லப்படுவதற்கு இடந்தரவில்லையே. ஒளியவும், நழுவவும் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து பார்த்துவிட்டதே. கொடுமைக்கு ஆளான நான் மட்டும் ஏன் அவருக்கு வாழ்க்கைப் பாதை அமைத்துக் கொடுப்பதற்காகச் சாகவேண்டும். பேராசைக்காரர், கொடிய சுபாவக்காரர், வஞ்சகர் உன் அப்பா, ஏன் அவர் இன்னும் ஒருபடி முன்னேறி, கொலைகாரராகக்கூடாது! என்னைக் கொல்லட்டும். நானாகச் சாகக்கூடாது. நான் வாழத்தான் வேண்டும். அது வேதனை நிரம்பிய வாழ்க்கையாக இருந்தாலும் பரவாயில்லை. நான் உயிரோடு உலாவுவதே அவருக்கும் அந்த ஆள் விழுங்கித் தங்கத்துக்கும் வேதனை தரும் அல்லவா! அது போதும்! என்று எண்ணினேன். எனக்குச் சாகத் துணிவு இல்லை என்பதல்ல, இஷ்டம் இல்லை. உயிரோடு இருந்து போராட வேண்டும் என்று தோன்றிவிட்டது. இனி அவர் என் கணவரல்ல, என்னை வஞ்சித்து வாழ விரும்புவர். இனி அவருடைய வஞ்சனையுடன் போராடி, ஒரு பெண்ணை அவ்வளவு எளிதாகத் தோற்கடிக்க முடியாது என்பதைக் காட்ட வேண்டும் என்று உறுதி பிறந்தது. ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே எனக்குப் பயம். அதாவது, என் மீது பழி ஏதும் ஏற்படாமலிருக்க வேண்டுமே என்பதுதான். தவறி நடந்து விட்டாள், வழுக்கிவிட்டாள் என்ற வதந்தியைப் போல, பெண்களை நாசமாக்கக்கூடிய கருவி வேறு இல்லையே. ஊர் முழுதுமல்லவா, எதிரியாகிவிடும் அப்போது. அந்த ஒரு பழி மட்டுமே வராதபடி பாதுகாத்துக் கொண்டு, உன் தகப்பனாரை நேருக்கு நேர் தைரியமாக நின்று சந்தித்து, “உன்னுடைய அதிகாரத்துக்கும் அளவு உண்டு. உன் கொடுமையைச் சகித்துக் கொண்டு இருந்தாக வேண்டும் என்று ஒன்றும் இல்லை” என்று கூற வேண்டும் என்று தோன்றிற்று. என் மீது விபச்சாரிப் பட்டம் சூட்டிவிட்டால் எனக்கு அந்தத் தைரியம் வராது. நெஞ்சிலே களங்கமில்லாததால் ஒரு வேளை தைரியம் வந்தாலும், ஊரார் என்னையே தூற்றுவார்கள். பெண், விபசாரியாகிவிட்டாள் என்ற பேச்சைக் கேட்ட மாத்திரத்திலே ஆண்கள் ஆளுக்கொரு கல்லைக் கையிலே தூக்கிக்கொள்வார்கள். அந்தப் பெண்ணின் வீட்டு மக்கள், உற்றார் உறவினர் இவர்கள் மட்டுமா, வழியில் வருகிறவன் போகிறவன் கூட அல்லவா வசை புராணம் பாடுவான் தைரியமாக. எல்லோரும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உயிரை வாங்குவார்களே தவிர, அவளுடைய விபசாரம் சாத்யமானது ஒரு ஆணினால்தானே என்று யோசிக்கமாட்டார்கள். யோசித்தாலும் அவனிடம் கொஞ்சம் அச்சத்தோடுதான் பேசுகிறார்கள். அவனே கூட என்ன சொல்கிறான். “என்னை என்னடா மிரட்டுகிறீர்கள்; போய் அவளைக் கேளுங்கள். உங்கள் வீட்டிலே உள்ளவளை அடக்கி வைக்காமல் என்னிடம் வம்பு செய்தால் என்ன அர்த்தம்? அவள் இஷ்டப்பட்டாள். நான் என்ன சன்யாசியா? போடா போ” என்று கூறிவிடுகிறான். ஆகையால் விபசாரி என்ற பழிமட்டும் என்மீது தாக்காதபடி பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டால் போதும் என்பதிலே நான் அவ்வளவு கவலைப்பட்டேன். அன்புக்கு அன்பு திரும்பக் கிடைக்கும் என்று காத்திருந்து பார்த்தேன். உன் அப்பா என்னை மிருகமாக்கினார். அவர் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள எண்ணினேன். நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் தான் பேய் பிடித்தவளாயிற்றே! ஊரார் என்னையா கோபிப்பார்கள்! பேயைத்தானே திட்டுவார்கள். சாதாரணமான மற்ற பெண்கள் பெற முடியாத உரிமை எனக்குப் “பேய்” மூலமாகக் கிடைக்கிறது. ஏன் நான் அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது? நான் விரும்பினால் திடீரென்று பாய்ந்து சென்று உன் அப்பாவின் தலைமீது தண்ணீர்ச் செம்பை வீச முடியும். அவர், ‘ஐயோ! ஐயோ!’ என்று அலறும் சங்கீதத்துக்கு ஏற்றபடி ஆனந்தத் தாண்டவமாட முடியும்! என்ன செய்வார் அவர்? குய்யோ முறையோ என்று கூவுவார். மக்கள் கூடுவர், வாயில் வந்தபடி அவர்களையும் ஏசலாம், யார் என்ன செய்ய முடியும்! நான் தான் பேய் பிடித்தவளாயிற்றே! திடீரென்று தங்கத்தின் காதைக் கடிக்கலாம்; உன் அப்பாவின் காலை ஒடிக்கலாம்; செய்து வைத்திருக்கும் சாப்பாட்டைக் குப்பையிலே எடுத்து வீசலாம். குப்பைமேட்டின் மீது வீட்டுச் சாமானை எறியலாம்; கதவுகளை உடைக்கலாம்; துணிகளைக் கொளுத்தலாம்; நடு இரவில் நல்ல தூக்கத்திலே உன் அப்பா இருக்கும் போது பயங்கரமாக கூச்சலிடலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். என் வாழ்வைப் பாழ்படுத்திய உன் அப்பாவின் வாழ்விலே ஒரு நிமிஷ நேரம் கூட நிம்மதி இல்லாதபடி செய்யலாம்.

என்ன செய்தாலும், ஊரார் என்னைத் தூற்றமாட்டார்கள். “ரங்கம் பாவம் படாதபாடு படுகிறாள்! எவ்வளவு நல்ல பெண். பாழாய்ப் போன பேய் பிடித்துக் கொண்டு அவளை ஆட்டிப் படைக்கிறது” என்று பேசுவார்களே தவிர, என்மீது கோபிக்கமாட்டார்கள். பேயைச் சாக்காக வைத்துக் கொண்டு உன் அப்பாவின் மீது படை எடுக்க முடியும். மிஞ்சிப் போனால், கைகாலைக் கட்டிப் போடுவார்கள். போடட்டுமே! இரண்டு நாட்கள் சும்மா இருப்பது. பிறகு தானாகக் கட்டுகளை அவிழ்த்துவிட்டுவிடுவார்கள். பிறகு ஆரம்பிக்கிறது பேயாட்டத்தை! இதுபோல எண்ணினேன்! எண்ணுவதிலேயே கூட இன்பம் பிறந்தது. சொத்துக்கு ஆசைப்பட்டு தங்கத்தைக் கலியாணம் செய்து கொள்ளத் தந்திரமான திட்டமிட்டு, அந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள, நான் ஒருத்தி தடையாக இருக்கிறேன் என்று அறிந்து, என்னைப் பேய் பிடித்துக் கொண்டதாகக் கூறினார், உன் அப்பா. அன்பினால் அவருடையை மனதை என் பக்கம் திருப்ப முயன்றேன், முடியவில்லை. இனி எந்தப் பேயின் பேரில் சாக்கிட்டு அந்தப் பேராசைக்காரர், என்னைக் கொடுமை செய்தாரோ அந்தப் பேயின் சாக்கை வைத்துக் கொண்டே, நான் அவருடைய வாழ்வைக் கொட்டிக் கொட்டி வேதனையை உண்டாக்குவது என்று தீர்மானித்தேன். மகனே, உன் தாய் எப்படி இவ்வளவு கல்நெஞ்சு கொண்டாள் என்று யோசிக்கிறாயா? அப்படி நான் எண்ணினது தவறு என்று கூறுகிறாயா? என் மீது தவறு இல்லையடா, கண்ணா!

ஒருநாள் ரங்கோனில், நான் சமையற்கட்டில் இருந்தபோது, ராதா, ‘ஆ!’ என்று அலறும் சத்தம் கேட்டு, “என்னடி கண்ணு!” என்று கேட்டுக் கொண்டே கூடத்துக்கு வந்தேன். ராதா உதட்டிலே ரத்தம் இருக்கக் கண்டேன். “என்னடியம்மா?” என்று கேட்டேன். “அம்மா, வேடிக்கைக்காக எடுத்து விளையாடிக் கொண்டிருந்தேன் சீதாவை. அந்தத் துஷ்டை பாரம்மா, என் உதட்டைக் கடித்துவிட்டாள்” என்றாள் ராதா. சீதா, ஒரு பெண்ணல்ல, கிளி; ராதா அன்புடன் வளர்த்து வந்த கிளியை, அவள் ஏதோ கொஞ்சம் சீண்டிவிட்டாள்; அதற்குக் கிளி அவள் உதட்டைக் கடித்துத் தண்டனை தந்தது. வேடிக்கை கூட கொஞ்சம் வேதனையை உண்டாக்கினால் பச்சைக் கிளிக்கும் பதைபதைப்பு வருகிறது. என்னிடம் உன் அப்பா விளையாடவில்லை; என் வாழ்வைச் சிதைக்கும் விளையாட்டிலே ஈடுபட்டார். கொடுமை செய்தார், கேவலம், பணத்தாசை பிடித்து. எனக்குக் கோபமும், பழிவாங்க வேண்டுமென்ற உணர்ச்சியும் வராதா? யாருக்கும் ஏற்படக்கூடிய எண்ணம்தான் அது. ஆகவே, நான் கொண்ட எண்ணம் தவறு அல்ல, என்னை அவர் தவிக்கவிட்டுத், தான் சுகமாக வாழ்வதற்காக என்னைக் கேவலப் படுத்தத் துணிந்தார். ஏன் நான் அவருடைய சுகத்தைக் கெடுக்கக் கூடாது? அதிலும் எனக்குப் பேயின் தயவினால் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் வேறு துணையாக இருக்கிறது. என் வாழ்வுக்கு ஆனந்தம் தர வேண்டிய கடமை அவருக்கு. அவரோ அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டார். பேய் கெட்டது என்பார்கள். அந்தப் பேய் செய்யக்கூடிய பெரிய உபகாரமும் இருப்பதை எண்ணிப்பார்த்தபோது நான் சந்தோஷப்பட்டேன்.

கிராமத்திலே சில நாட்கள் தங்குவது, பேயோட்டுவதாகச் சொல்லும் புரட்டனின் பூஜை முதலிய வீண் காரியங்களைக் கொஞ்ச நாட்களுக்குச் சகித்துக் கொள்வது, அவனாகப் பார்த்துப் பேய் நீங்கிவிட்டது என்று கூறும்படி ஒழுங்கான முறையிலே நடப்பது, பிறகு வீடு திரும்புவது. அங்கேயும் சில தினங்கள், நிம்மதியடைந்ததாகவே பாவனை செய்வது, பிறகு திடீரென்று உன் அப்பாவின் மீது பழி வாங்கும் காரியத்தைத் துவக்குவது என்று தீர்மானித்தேன். அதாவது, என்னை நீக்கி விட உன் அப்பா என் மீது ஏவிய ‘பேய்’ இருக்கிறதே, அதனை அவருடைய கொடிய குணத்துக்காக அவரைத் தண்டிக்கும்படி, அவர் மீது, நான் ஏவிவிடுவது என்று திட்டமிட்டேன். இந்த எண்ணத்தால் எனக்கோர் வகையான ஆனந்தம் உண்டாயிற்று. என் அப்பா, “ஒரே நாள் பூஜையிலே, பிரக்யாதிபெற்ற பக்கிரி, குழந்தையின் முகத்திலே, களை வரும்படி செய்துவிட்டான்” என்று கூறிக்கொண்டார், என் முகப் பொலிவைக் கண்டு. “பைத்தியக்கார அப்பா! உன் மகளைப் பேயும் பிடித்துக் கொள்ளவில்லை, பூதமும் தூக்கிக் கொண்டு போகவில்லை; உன் மருமகனின் வஞ்சகம், என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டது” என்று நான் சொன்னால் அவர் நம்புவாரா? அந்தப் புரட்டன் சொன்ன அத்தனை புளுகுகளையும் நம்பினார்.

பேயோட்டும் பக்கிரி, முதல் தரமான புரட்டன் என்பது அவனைப் பார்த்த முதல் நாளே எனக்கு விளங்கிவிட்டது. என்னைப்போலப் பேய் பிடித்த பல பெண்கள் அங்கே வந்திருந்தார்கள். அந்தக் கிராமத்திலேயே, அவனுடைய வீடுதான் மாடி வீடு, மற்றவை குடிசைகள். பக்கிரி, ஏழைகளுக்கு இலவசமாகப் பேயோட்டுவது, பணக்காரர்களிடம் கூட வற்புறுத்துவதில்லை. இஷ்டப்பட்ட காணிக்கை செலுத்தலாம் என்று கூறுவது, இந்த முறையிலே நடத்தி வந்தான், வியாபாரத்தை. இதிலே, அவன் கையாண்ட தந்திரம் என்னவென்றால், ஏழைகளுக்கு இரண்டொரு நாட்களிலே பேய் ஓடும்படி செய்துவிடுவான். அல்லது, இன்னும் இரண்டு வருஷம் கழித்துவந்தால்தான் இந்தப் பேயை ஓட்ட முடியும், என்று சொல்லி அனுப்பிவிடுவான். பணக்காரர்கள் பேயோட்டிக் கொள்ளச் சென்றாலோ, கொஞ்சத்திலே விடமாட்டான். நாற்பது நாள் முழுக்கு, முப்பது நாள் கோயிலைச் சுற்றுவது, பத்து நாள் பச்சிலைத் தைல ஸ்நானம்; பிறகு பூஜை. அதன் பிறகு விசேஷ பூஜை. இப்படி மாதக்கணக்கிலே கடத்திக் கொண்டே போவான். ஒரு வாரத்துக்கொரு முறை வெள்ளி, பொன் ரட்சைகள் தயாரித்துத் தந்தபடி இருப்பான். இதற்கெல்லாம் பிடிக்கும் செலவு தவிர, வேறு பணம் தானாகக் கேட்பதில்லை என்று கூறி இதன் மூலமாகவே, பத்து காணி நல்ல நஞ்சையும், ஊருக்குப் பக்கத்திலேயே ஒரு தோப்பும் வாங்கிவிட்டான். மாடி வீடு கட்டிக் கொண்டான். மூன்று பெண்களை நல்ல இடத்தில் கலியாணம் செய்து கொடுத்தான். அந்த மருமகப் பிள்ளைகளைப் பெரிய உத்தியோகஸ்தர்களின் தயவு தேடி நல்ல வேலையில் அமர்த்தி விட்டான். இவ்வளவும் ‘பேயோட்டும்’ புரட்டிலே சாதித்துக் கொண்டான். மகாராஜாக்களும் மிட்டாதாரர்களும் ஹைகோர்ட் ஜட்ஜுகளும் தந்த சர்டிபிகேட்டுகள் ஒரு கத்தை வைத்துக் கொண்டிருக்கிறான். பெயர்தான் பக்கிரியே தவிர, ஆள் ஜமீன்தாரரைப் போலத்தான். கையிலே காப்பு, காதுகளிலே கடுக்கன், கழுத்திலே தங்கத்தால் சங்கிலி, அதிலே ஏதோ ஒரு பெரிய ரட்சை, கல்லிழைத்தது, பூஜை அறையிலே வெள்ளிப் பாத்திரங்கள், இவ்வளவு வைபவம் இருந்தன. இரவு பன்னிரண்டு மணிக்கு அவனிடம் “பராசக்தி” பிரசன்னமாகிப் பேசுமாம். அந்தப் பக்கிரி, என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மரியாதையுடன் “உட்காரம்மா! உட்கார்!” என்றான், உட்கார்ந்தேன்.

“இதோ குழந்தை! இதை வாயில் போட்டுக்கொள்” என்று ஏதோ ஒரு சூரணத்தைக் கொடுத்தான். இனிப்பாகத்தான் இருந்தது. “கசப்பு அதிகமாம்மா?” என்று கேட்டான். “இல்லையே! தித்திப்பாகத்தான் இருந்தது” என்று நான் சொன்னேன். பிறகு அவன் அப்பாவைப் பார்த்து, “பயப்பட வேண்டாம். குழந்தைக்குப் பேய் முற்றிவிடவில்லை. சர்க்கரை எப்போது இனிக்கிறதோ, அதிலிருந்து நிலைமை மோசமில்லை என்று தெரிகிறது. சில பெண்களுக்குச் சர்க்கரை கூடக் கசப்பாகிவிடும். பேயின் சேஷ்டையால்” என்று சொன்னான். உன் அப்பாவையே சட்டை செய்யப் போவதில்லை இனிமேல் என்று தீர்மானித்துவிட்ட எனக்கு, இந்தப் புரட்டனிடம் என்ன பயம்? நான் பேசலானேன்.

“சர்க்கரை இனிப்பாகத்தானே ஐயா இருக்கும். அதற்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்?”

“சர்க்கரை இனிப்பாகத்தான் இருக்கும் குழந்தே! ஆனால் அதுகூடக் கசப்பாகிவிடுவதுண்டு.”

“ஆமாம்! அதற்குப் பேய் பிடிக்கவேண்டியதில்லையே. பல நாள் ஜுரம் அடித்தால் வாய் கசக்கிறது.”

“ஜுரம் வேறு, பேய் பிடிப்பது வேறு.”

“ஆமாம்! அதை யார் இப்போது மறுத்தார்கள். பேய் பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்வதற்குச் சர்க்கரை இனிப்பா, கசப்பா என்று பார்ப்பது ஒரு பரீட்சையா? வேடிக்கையாக இருக்கிறதே!”

“குழந்தே! நீ இப்படியே சந்தோஷமாக இருந்தால் போதுமம்மா.”

“அது கிடக்கட்டும்; எத்தனை நாள் ஆகும் பேய் போக?”

“சீக்கிரத்திலேயே முடியும், கவலைப்படாதே.”

“பேய் ஓடுமா, ஓட்டுவீர்களா?”

“ஓடும் பேயும் இருக்கிறது, ஓட்டவேண்டிய பேயும் இருக்கிறது.”

“ஓட்டினாலும் ஓடாத பேய் கிடையாதோ?”

“பக்கிரி ஓட்டினால் ஓடாத பேய் கிடையாதம்மா. பக்கிரியா ஓட்டுகிறான், பராசக்தியல்லவா ஓட்டுகிறாள்.”

“பராசக்தி, உனக்கு அருளைத் தந்தது ஏன்?”

“என் பூஜா பலன்.”

“என்னைப் பேய் பிடித்துக் கொண்டது ஏன்?”

“உன் வினை!”

“என் வினையை, உன் பூஜை பலன் தீர்த்துவிடுமா?”

இப்படிப் பேச்சு முற்றிக் கொண்டே போயிற்று, எங்கள் இருவருக்கும். பதில் கூற முடியாமல் திணறினான், பக்கிரி.

ஆனால், அந்தத் திணறலை மறைக்க, அடிக்கடி ‘பராசக்தி, பராசக்தி’ என்று உரக்கக் கூவிக்கொண்டிருந்தான். பேயோட்டும் பக்கிரியின் வாயை அடைத்துவிட்டோ ம் என்று ஒரு மகிழ்ச்சி எனக்கு. ஆனால், அந்தப் புரட்டன் சாமான்யமான பேர்வழியல்ல. கொஞ்சநேரம் கண்களை மூடிக்கொண்டிருந்துவிட்டு, பிறகு என் தகப்பனாரைப் பார்த்து, “ஐயா உன் மகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய், இன்னது என்று பராசக்தி கூறிவிட்டாள். மற்றப் பேய்களை ஓட்டுவதற்கும் இதற்கும் அதிக வித்தியாசமுண்டு. மற்றப் பேய்கள் முரட்டுத்தனம் செய்யும். இந்தப் பேய் முரட்டுத்தனம் செய்யாது. எப்போதுமே, முரட்டுத்தனம் செய்கிற பேயைச் சுலபத்தில் ஓட்டிவிடலாம். இது அவ்வளவு சுலபமல்ல” என்றான்.

“தங்களாலே முடியாது போகுமா?” என்று தயவு கலந்த குரலிலே கேட்டார் அப்பா.

“முடியும்! ஆனால் கொஞ்ச நாளாகும்” என்றான் அவன்.

“என்ன விதமான பேய்?” என்று கேட்டார் அப்பா.

“அதைத்தான் கண்டுபிடிக்கக் குழந்தையிடம் பேசிப் பார்த்தேன். எப்படிப் பேசிற்று பார்த்தீர்களா? மளமளவென்று பேச்சு இருந்தது. கேள்விமேல் கேள்வி போட்டுவிட்டது” என்றான் பக்கிரி.

“ஆமாம்!” என்றார் என் அப்பா.

“அது குழந்தையின் பேச்சா? பேசுமா அப்படி?” என்று கேட்டான் புரட்டன்.

“சாதாரணமாக சங்கோசப்படுகிற குழந்தைதான். இங்கே தான் கொஞ்சம் தாராளமாகப் பேசிற்று. ஆனால் துஷ்டப் பேச்சு இல்லையே?” என்றார் என் அப்பா.

“துஷ்டப் பேச்சுப் பேசாது. முரட்டுப் பேய்களல்லவா கெட்ட வார்த்தை பேசும். அப்படிப்பட்ட பேய்களை ஒரு மண்டல காலத்திலேயே ஓட்டிவிடலாம். இது சாதுப் பேய்!” என்றான் புரட்டன்.

“சாதுப் பேய் என்று சாமான்யமாகச் சொல்கிறீர். வீட்டிலே நாங்கள் பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமா?” என்று சோகத்துடன் சொன்னார் அப்பா.

“பழமொழியே இருக்கிறதல்லவா, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று, அதுபோல நடந்திருக்கும்” என்று விளக்கம் கூறினான், அந்தப் பூஜாரி.

“சாதுப் பேய், கொஞ்ச நாளிலே போகாதா?” என்று கேட்டார் அப்பா. “ஆமாம்” என்றான் பக்கிரி. “அது ஏன்?” என்றார் அப்பா. “முரட்டுப் பேயாக இருந்தால், போக முடியாது, நீ என்ன செய்யமுடியும் என்று கொக்கரிக்கும். உடனே அதற்குத் தரவேண்டிய தண்டனையைத் தந்து, துரத்திவிடலாம் சுலபத்தில். ஆனால், இந்தச் சாதுப் பேய்க்கு ஆயிரம் விதமான சமாதானம் சொல்லி, காரணம் காட்டி, இது கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூறி முடிய, நாள் அதிகம் பிடிக்கும் ஐயா! உமது மகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய், சாது மட்டுமல்ல, சாமர்த்தியமாகப் பேசக் கூடியது. பேய்களிலே பலரகம் உண்டு. கொலைகாரப் பேய், முரட்டுப் பேய், பொய் பேசும் பேய், வயிற்று வலிப் பேய், அழுகிற பேய் என்று இதிலே ஆயிரத்துக்கு மேலே ‘ரகம்’ இருக்கிறது” என்றான் புரட்டன்.

“பேயிலே மட்டுந்தானா? மனிதர்களிலும் நீ சொன்ன அவ்வளவும் இல்லையா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை என்று யார் சொன்னார்கள்? மனிதர்களில் பல ரகம்; அதுபோலத்தான் பேய்களிலும். மனிதர்கள் இறந்து போய், பேய் உருவடைந்தார்கள் என்பதுதான் எங்கள் சித்தாந்தம். பேய் உருவிலே இருக்கும்போதும், மனிதராக இருக்கும்போது இருந்த சுபாவம் இருக்கும். அதனாலேதான் பேய்களிலே பல ரகம் இருக்கிறது” என்றான் அந்த புரட்டன்.

“எந்தெந்த ரகமான பேய் பிடித்துக் கொள்கிறதோ அந்தந்த சுபாவம், பேய் பிடித்துக் கொண்ட ஆசாமியிடம் இருக்கும் என்று சொல்கிறீரா?” என்று நான் கேட்டேன்.

“அதேதான். போன வருஷம் இங்கே ஒரு பெண் வந்திருந்தாள், பேயோட்டிக்கொள்ள. சதா சர்வ காலமும் பாடிக் கொண்டே இருப்பாள்” என்றான் பூஜாரி.

“சங்கீதப் பேய் பிடித்துக் கொண்டதோ?” என்று நான் கேலி செய்தேன்.

“உண்மையாகத்தானம்மா. அந்தப் பெண் இருந்த ஊரிலே, ஒரு பையன் அருமையான சங்கீதம் பாடுவான். அதிருஷ்டம் இல்லாததால் ஆதரிப்பவர் கிடைக்கவில்லை. கடைசியில் தூக்கிட்டுக்கொண்டு இறந்துவிட்டான். பேயானான்; பெண்ணைப் பிடித்துக் கொண்டான்” என்று பேயின் சரித்திரமே கூறலானான்.

“அப்படியானால் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய்…” என்று நான் கேட்டேன்.

“எழுத்துக்கு எழுத்து பொருள் கேட்டு, வாதாடிப் பேசவும், எதிரியின் வாயை அடக்கிப் பேசவும், வக்கீலால்தானே முடியும்” என்றான் அவன்.

“அப்படியானால், என்னை வக்கீல் பேய் பிடித்துக் கொண்டதோ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 72ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 72

72 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் கல்யாண வேளையில் மூழ்கிவிட யாரும் சோபியை கவனிக்கவில்லை. திவி தாத்தா பாட்டியிடம் மட்டும் ஆதியிடம் கூறிய விஷயங்களை கூறிவிட்டு “என்ன தப்பு பன்னிருந்தாலும் நம்ம பேத்தி தான்னு நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்கன்னு தான் உங்ககிட்ட

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19

கனவு – 19   அடுத்த நாள் எழுந்து காலைக் கடன்களை முடித்தவன் தேநீர் தயாரித்து அருந்திவிட்டு, முதல் வேலையாக வைஷாலி கொடுத்த பையைத் திறந்து பார்த்தால் முழுவதும் டயரிகள் தான் இருந்தன. எழுமாற்றாக ஒன்றை எடுத்துப் பிரித்தான்.   “10.04.2015