Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_8’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_8’

அத்தியாயம் – 8

 

சில வினாடிகளில் யோசித்து ஒரு முடிவெடுத்தான்.

“இதுவரைக்கும் யோசிக்கல, பட் இந்த எழுத்தாளர் எப்படி கதையை நகர்த்திட்டு போறாங்கன்னு பாக்கணும். கதை தலைப்பை சொல்லுங்க…”

“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு” மனைவியிடம் பேசியவர் மின்னஞ்சலில் கதையை அனுப்பச் சொன்னார்.

“உனக்கு பார்வர்ட் பண்ணிருக்கேன், டைம் கிடைக்கும்போது படிச்சுப்பாரு”

“இந்த வாரம் படிச்சுட்டு சொல்றேன்”

“ஆமாம் அதின் யாரோ ஒரு ஆளை அடிச்சுட்டியாமே”

“ஆமாம் போன வருஷம் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சின்னப் பொண்ணு, பதினாலு பதினைஞ்சு வயசிருக்கும், என்கிட்ட ஆட்டோகிராப் வாங்குச்சு. இந்த நாயி அதை போட்டோ எடுத்து, என்னோட புதுகேர்ள் ஃப்ரெண்ட்டுன்னு வைரல் வீடியோ போட்டுட்டு இருந்ததாம். என் கவனத்துக்கு வந்துச்சு. அதிகப் பிரசங்கிகளுக்குப் பாடம் சொல்லித் தரணுமே… “ கோபத்தால் முகம் சிவந்தது அதினுக்கு

“விடு… உன்னைப் பத்தி அவனுக்கென்ன தெரியும். காசுக்காக செஞ்சிருப்பான். இப்படி ஏதாவது ஒரு பரபரப்பா எழுதினாத்தானே திரும்பிப் பார்ப்பாங்க”

“அதுக்காக… அந்தப் பொண்ணு நான் நடிக்க வந்தப்பத்தான் பிறந்தே இருப்பா… மகள் வயசு இருக்குற பொண்ணு கூட சம்பந்தப்படுத்தி… ச்சே… மனித மனம் அவ்வளவு நெகட்டிவா மாறிடுச்சா?” அருவருப்பால் அவன் முகம் சுளித்தது.

அதினன் அப்படித்தான். இவன் கண்டிப்பாய் கெட்டவன் இல்லை. ஆனால் காய்த்த மரம், காப்பார் யாரும் இல்லை என்பதால் கல்லெறிந்து, கோடாரியால் வெட்டி அவனைக் காயப்படுத்திவிட்டு செல்கிறார்கள். ரசிகர்கள் மட்டும் இல்லையென்றால் இவனை இருந்த இடம் தெரியாமல் செய்திருப்பார்கள்.

சிவகுரு விடைபெற்றுக் கிளம்ப, அதற்குப் பின் தனது வேலையில் ஆழ்ந்தான் அதினன். பலரை சந்திக்க வேண்டியிருந்தது. விவாதிக்க வேண்டியிருந்தது. அவர்களுடனேயே ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்தான்.

“ஒரு பெக் அதின்”

ஒண்ணே ஒண்ணு ப்ளீஸ் என்று கெஞ்சிய மனதைத் திட்டிவிட்டு “வேண்டாம்” என்று நாசூக்காய் மறுத்தான்.

“அடிக்ஷனுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டது நிஜம்தானா அதின்?” என்றார்கள்.

“நான் வீடுவரை டிரைவ் பண்ணனும் ப்ரோ… “

“ஒரு பெக் தானே”

“என்னால ஒன்னோட நிறுத்த முடியாது. எதுக்கு ரிஸ்க்? நீங்க கண்டின்யூ பண்ணுங்க, நாளைக்கு மீட் பண்றேன்” என்றபடி கிளம்பினான்.

ஒரு வருடமாய் ஒரு சொட்டு கூட மது நாவில் படவில்லை. அதை மறக்கவேண்டும் என்றுதான் டெல்லியில் அம்மா அப்பாவுடன் வீட்டிலேயே இருந்தான். மது அருந்தவேண்டும் என்ற நினைவு வரும்போதெல்லாம் “அம்மா ஏதாவது சாப்பிட செஞ்சுத்தாயேன்” என்று கேட்பான்.

“அவனுக்குப் பிடிச்சதை செஞ்சுத்தா… ஒண்ணை விடும்னா இன்னொண்ணை பத்திக்கணும்னு அவன் மனசு சொல்லுது” என்பார் அப்பா செஞ்சடைநாதன்.

“இவன் வாழ்க்கை இப்படியே போயிருமா” கலங்கினார் அவன் அம்மா ரூபவதி.

பஜ்ஜியை வாயில் திணித்தபடி “அதேதான் நானும் கேக்குறேன்பா… நான் முதல் முறை தப்பு செஞ்சப்பவே ஓங்கி ஒரு அறை விட்டிருந்தா சரியாயிருப்பேன்.தண்ணி அடிச்சுட்டு வந்தப்ப பெல்ட்டால பின்னி பெடலெடுத்திருந்தா அடுத்த தப்பு பண்ணிருக்க மாட்டேன். கேட்டா உலகத்துக்கு பயந்து நல்லவனா நடிக்கக் கூடாது உன் உள்ளத்துக்கு நீ நல்லவனா இருக்கணும்னு வசனம் பேசுவிங்க. சரி, போனதைப் பத்தி பேசிப் பயனில்லை. சொல்லுங்க, இப்படியேதான் என் வாழ்க்கை போகுமா?”

“If you always do what you’ve always done,You’ll always get what you’ve always got

நீ இதுவரைக்கும் செஞ்சதையே திருப்பித் திருப்பி செஞ்சுட்டு மாற்றத்தை முடிவை மட்டும் வேற மாதிரி எதிர்பார்க்காதே. அதைத்தான் அதினனுக்கும் சொல்வேன்”

“எனக்கு ஒரு மண்ணும் புரியல. உங்கப்பா பேசினாலே ஒண்ணும் புரிய மாட்டிங்குதுடா… “

“ஒவ்வொரு தரமும் டெல்லிலேருந்து சென்னை போற பிளைட்ல ஏறிட்டு, போயி சேரும் ஊர் மட்டும் வேறயா இருக்கணும்னு நினைச்சா எப்படி? வேற பிளைட்ல ஏறு, போறது மதுரையாவோ, திருச்சியாவோ இருக்கும்”

அப்போது தோன்றியதுதான் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணம். இந்தப் பயணம் எங்கு கொண்டு செல்கிறது என்று பார்ப்போம்.

சிவகுரு பேசியதை நினைத்தபடியே வீடு சென்றவன் வீடு சென்றதும் எல்லாவற்றையும் மறந்து ஷவரின் வெந்நீர் மழையில் நின்றான். இறங்கி கண்ணாடியில் படிந்திருந்த புகைமூட்டத்தைக் கைகளால் துடைத்துத் தன்னைப் பார்த்துக் கொண்டான்.

“ஆமாம் உடம்பை உடனே குறைக்கணும். ஆனா, இப்படி இருந்தால் கூட நல்லாத்தான் இருக்கு. ஒரு மரியாதை தெரியும். பேசாம தயாரிப்பு நிறுவனத்தை மட்டும் பார்க்கலாம்” மனதுடன் உரையாடியவன்

“அந்த கதையைப் படிக்கணும்” என்றபடி தலையைத் துடைத்துக் கொண்டு இரவு உடை அணிந்தான்.

தனது ஐபேடில் மின்னஞ்சலைத் திறந்தவன் சிவகுரு சொன்ன கதையின் கருவை அசைபோட்டான். மீனுக்குட்டி என்று தலைப்பிடப்பட்ட கதையின் முதல் வரியில் தொடங்கினான். நடுவில் நிறுத்தக் கூட முடியாமல் கதையில் ஆழ்ந்து ஐக்கியமானான்.

ஒரு நடுத்தர குடும்பத்தையே சேர்ந்த கிராமத்துப் பெண். துடுக்கானவள், தைரியமானவள் என்ற எண்ணம் உடையவளை காலம் மனதளவில் அவளது பலவீனமான இடத்தில் அடித்து காதல் என்ற மாயவலையால் கட்டி சம்சார சாகரத்துக்கு இழுத்துச் செல்கிறது. அங்கு கடல்சுறா ஒன்றால் உடலெங்கும் மனமெங்கும் காயப்படுகிறாள். அந்த நரகத்திலிருந்து மீண்டாளா? என்று வாசகர்கள் மனம் பதைக்க பதைக்க எழுதி இருந்தார் அந்த நாவலாசிரியர்.

முடித்தவுடன் அவனால் அந்தக் கதையின் நாயகி ‘மினுக்கி மீனுக்குட்டி’யின் நினைவுகளில் இருந்து விடுபட முடியவில்லை. அந்தக் கதையில் அவனுக்குப் பல இடங்களில் உடன்பாடு இல்லை. இருந்தாலும் அவனால் அந்தக் கதையை பத்தோடு பதினொன்று என்றெண்ணி ஒதுக்கிவிட முடியவில்லை.

‘சிவகுரு, மீனுக்குட்டி கதையின் ஆசிரியை எழுதிய மற்ற நாவல்களை மின்னஞ்சல் செய்யவும். அத்துடன் புத்தகங்கள் இருந்தால் ஒவ்வொரு தலைப்பிலும் மூன்று புத்தகங்களை எடுத்து வைக்கவும். நாளை உங்கள் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்கிறேன்’ என்று செய்தியை அனுப்பியதும் அவனது பரபரப்பு கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.

ஆசிரியரோட மற்ற கதைகள் எப்படி இருக்கும்? புத்தகம் வந்ததும் இந்தக் கதையை இன்னொரு தரம் படிக்கணும் என்றெண்ணியபடி அவனையும் அறியாமல் உறங்கிப் போனான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’

அத்தியாயம் – 24   இது நிஜமா? ஒரு தாயால் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? பெற்ற குழந்தையே கொல்லத் துணியுமா மனம்? பெறாத பிள்ளைகளுக்கு  அன்னையாக வாழ்பவளின் மனதிற்கு  லஸ்யாவின் விஷகுணம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_2’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_2’

அத்தியாயம் – 2   நாக்கைக் கடித்துக் கொண்டாள். “நேத்து காலைல கூட நினைவிருந்தது… சாய்ந்தரம் எப்படி மறந்தேன்னு தெரியலையே… ராத்திரி கொண்டைக் கடலையை வேற ஊற வைக்க மறந்துட்டேன்” “எனக்குத் தெரியும், அதனாலதான் நா ஒரு கிலோ கொண்டக் கடலையை

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_7’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_7’

அத்தியாயம் – 7   சிவகுரு மற்ற கம்பனிகளில் சில வேலைகளை முடித்துவிட்டு அதினனின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அங்கு வேலை செய்யும் ஒருவன் “சார் மீட்டிங்க்ல இருக்கார். நீங்க வந்த தகவலை சொல்றேன். உக்காருங்க சார். கூல் டிரிங்க்ஸ் கொண்டு வரட்டுமா?”