சுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 7’

அந்தி மாலைப் பொழுதில் – 7

“அதிரூபா தனியா இருக்க ரொம்ப போர் அடிக்குமே உனக்கு? நீயும் வாடா”

 

என் அம்மா விமலா அவர் கிளம்பிக் கொண்டிருந்த திருமணத்திற்கு என்னையும் உடன் வருமாறு வற்புறுத்தி அழைத்தார்.

 

“அம்மா சொந்தக்காரங்க கல்யாணம்ன்னா கூட பரவாயில்லை. அப்பாவோட வேலை செய்யறவங்க வீட்டுக் கல்யாணம் தானே… நீங்களே போயிட்டு வாங்கம்மா” என்று சொல்லி மறுத்து விட்டேன்.

 

“உன்னைத் தனியா விட்டுட்டு போகணுமே… கூட வந்தா என்னவாம்?”

 

“ஆமாம் நான் பச்சைக் குழந்தை பாருங்க. தனியா இருந்து பயந்துப்பேன்… மழை வர மாதிரி இருக்கு. நீங்க பார்த்து பத்திரமா போயிட்டு வாங்கம்மா” என்றேன் நான்.

 

நான் வர மாட்டேன் எனப் புரிந்து விட, “சரி சரி இந்த புடவை நல்லா இருக்கா?” என்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்குத் தாவி விட்டார் அம்மா.

 

“புடவை எல்லாம் அழகா இருக்கும்மா. நகை கொஞ்சம் அதிகமாயில்லை…”

 

“போடாட்டி உங்க அப்பா சும்மா விடுவாரா டா. இந்த நகையில தான் அவர் கௌரவமே இருக்க மாதிரி பேசுவாரு. எதுக்கு வம்பு?” எனக் கேலி செய்து சிரித்தாலும், அவர் சொல்வது உண்மையே என்பதால் நானும் ஆமோதித்துச் சிரித்தேன்.

 

“சரி போயி மல்லிகை பூ வாங்கிட்டு வா. காமாட்சி அம்மன் கோயில் போற வழியில வழக்கமா வாங்குவோமே அங்கே போயி வாங்கு” என்று என் அம்மா கூறியதும், நான் வண்டியில் சென்று வாங்கி வந்து தந்தேன்.

 

அப்பா மட்டும் தான் திருமணத்திற்குப் போவதாக இருந்தது. தீடிரென அன்னையையும் வரச் சொல்லி விட்டார். அதனால் தான் இப்படி அவசரகதியில் அம்மா கிளம்பிக் கொண்டிருக்கிறார்.

 

பூவை கொண்டு வந்து நீட்டியதும், “உனக்கு டின்னர் தான் செய்ய முடியலை” என புலம்பியபடியே சூடிக் கொண்டார். இந்த அம்மாவுக்குப் பிள்ளைகளின் வயிற்றுப்பாடு அதிமுக்கியம் என்ற நினைவில் சத்தமின்றி புன்னகைத்துக் கொண்டேன்.

 

“நாங்க வரும்போது ஹோட்டல்ல வாங்கிட்டு வந்திடவா?” கன அக்கறையாகக் கேட்ட அன்னையிடம், “வேணும்ன்னா ஆர்டர் பண்ணிக்கிறேன் மா. கொஞ்சம் கல்யாணத்துக்கு போறோமேன்னு நினைப்புல இருங்க. என்னைப்பத்தியே யோசிச்சுக்கிட்டு…” அம்மாவைப் பரிகசித்துச் சிரித்த என்னைக் கடுமையாக முறைத்தார் என் அன்னை.

 

அதற்குள் என் தந்தையும் வந்துவிட, அவரும் வேகமாக புறப்பட… என் அன்னையும், தந்தையும் அவரின் நண்பரின் வீட்டுத் திருமண வைபவத்திற்கு ஒரு வழியாகக் கிளம்பினார்கள்.

 

அவர்கள் கிளம்புவதற்கும் மழை தூரல் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. இந்த மழையில எப்படி போவாங்களோ எனப் புலம்பியது மனம்.

 

அட! இந்த களேபரத்தில் மறந்தே விட்டேனே! அம்மா வீட்டில் இல்லாதபோது திவ்யசுந்தரி இங்கு வருவது சரியாக இருக்காதே! அவசரமாக அவளுக்கு அழைப்பு விடுத்து வர வேண்டாம் என்று சொல்ல நினைக்க… ரிங் சென்று கொண்டே இருந்ததே தவிர எந்த பதிலும் இல்லை.

 

அச்சோ! மழை வேறு தொடங்கி விட்டது. இவள் போனையும் எடுக்காமல் என்ன செய்கிறாளோ? ஒருவேளை கிளம்பி விட்டாளா? வெளி வராண்டாவில் நின்றபடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தூரலின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துச் செல்ல, பாதி நனைந்த நிலையில் வேகமாக ஓடி வந்தாள் திவ்யசுந்தரி. இப்பொழுது மழை நன்கு வலுக்கத் தொடங்கியது.

“மழை தான் வருதே… இன்னைக்கு வராம இருந்திருக்க வேண்டியது தானே!” என்று கடிந்தபடியே துவாலையைக் கொண்டு வந்து நீட்டினேன்.

 

என்னை முறைத்தவாறே துவாலையைப் பிடுங்கிக் கொண்டவள், அங்கிருந்த மூங்கில் நாற்காலியில் காலை மடக்கிக் குறுகியவாறு அமர்ந்து கொண்டு துவாலையைப் போர்த்தி கொண்டாள்.

மழையில் நனைந்ததற்குக் குளிர்கிறது போலும்! அதற்காக என்னை முறைப்பாளா?

“பிசாசு…” அவள் காதில் விழுமாறு முணுமுணுத்து விட்டு வீட்டினுள் சென்று போர்வை கொண்டு வந்து தந்தேன். துவாலையை ஓரமாக வைத்தவள், இப்பொழுது போர்வையில் சுருண்டு கொண்டாள்.

“துவட்டிக்க திவி…” மீண்டும் அதட்ட, அவளது இதழ்கள் ஏகத்துக்கும் சுழித்தது.

“என்னடி?” என்றேன் நான். அதற்கும் முறைத்தாள்.

எனக்கு நினைவு வந்துவிட்டது. “ஓ… கொஞ்சணுமாக்கும்… அது படிக்கும்போது தானே! இப்படி மழையில நனைஞ்சா திட்டத் தான் செய்வேன் நான்” என்றேன் சாவதானமாக.

இப்பொழுது, “ராட்சசன்…” என்று அவள் முணுமுணுத்தாள்.

சிரித்தபடியே, “இருந்திட்டு போறேன்… தலையைத் துவட்டு…” என்று சொல்லி ஓரமாகக் கிடந்த துவாலையை மீண்டும் தூக்கி வீசினேன். சலித்தபடியே துவட்டிக் கொண்டாள். நான் கொட்டிக் கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

சற்றே உடலின் குளிர் தணிந்ததும், “ஆமா… அத்தை எங்கே காணோம்” என்று அவள் சாவகாசமாகக் கேட்க, அவளைத் திரும்பப் பார்த்து கேலியாகச் சிரித்தேன்.

“என்ன?” என்றாள் புரியாமல்.

“இன்னைக்கு ஸ்னாக்ஸ் செய்ய ஆளில்லை…” என்று நான் சொன்னதும், கண்களைத் தெறித்து விடுமளவு விரித்தவள், “ஏன்? ஏன்?” என்று அவசரமாகக் கேட்டாள்.

“அம்மா கல்யாணத்துக்கு போயிருக்காங்க. திடீர் பிளான். உனக்கு போன் பண்ணி வர வேணாம்ன்னு சொல்ல நினைச்சா… நீ போன் எடுத்தா தானே…”

எனது சலிப்பில், “ஓ…” என்று அநியாயத்திற்கு இழுத்து நிறுத்தினாள்.

நான் சிரிக்க, “ம்ப்ச்… இப்ப என்ன பண்ணறது?” என்றாள் கொட்டும் மழையை நோட்டம் விட்டபடி.

“மழை நின்னதும் புறப்படுவியாம்… அதுவரை அப்படியே இழுத்துப் போர்த்தி உட்கார்ந்துக்க… தூங்கி மட்டும் வெச்சிடாத…” என்றேன் சிரிப்புடன்.

இவள் என்ன நான் என்ன சொன்னாலும் முறைப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறாள்.

“எதுக்கு முறைச்சிட்டே இருக்க…”

“பின்ன நான் தூங்குவேனா?” என்றாள் ரோஷமாக.

மெலிதாக சிரித்தபடி, “அதுதானே… நான் தான் மேத்ஸ் கிளாஸ் எடுக்கலையே! நீ ஏன் தூங்க போற!” புருவங்களைத் தூக்கி இறக்கி அநியாயத்திற்கு நான் வியந்ததற்கு, அவளுக்கு என்னை அடிக்கும் ஆவல் எழுந்திருக்க வேண்டும்.

அவளது இயலாமையைப் புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தேன் நான்!

என் பார்வையை எதிர்கொள்ளும் வழி தெரியாமல், “நான் போயி டீ வைக்கிறேன்” என்று சொல்லி வீட்டினுள் புகுந்து கொண்டாள்.

மழை விரைவில் நிற்க வேண்டும் என்றும் தோன்றியது. நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் தோன்றியது. காதல் தரும் முரண்பாடுகள் கொள்ளை அழகு! ஆனால், அதில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுவது என்பது எப்படியெனில்… என்ன சொல்ல? எப்படிச் சொல்ல? என்னும் மொழியற்ற நிலை!

நானே அவஸ்தையோடு நின்று கொண்டிருக்க, தேநீர் கோப்பையோடு என்னருகே வந்து சாவதானமாக நின்றாள். எனக்கு ஒரு கோப்பை தேநீரைத் தந்துவிட்டு, என்னருகே நின்று அவளும் மழையை ரசித்தபடியே பருகலானாள்.

“திவிம்மா…” என்றேன் நான் ரசனையாக!

“ம்ம்…” என்று ராகம் இழுத்தவளின் விழிகள் மழையை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தது.

“எப்ப மழை வந்தாலும்… நானும், நீயும் அதோ மாடியில இருக்கே பால்கனி… அங்கே நின்னு ரசிக்கணும்ன்னு எனக்குக் கொள்ளை ஆசை” என்றேன் என் மனதை கோடிட்டு காட்டும்படி. என் குரல் சக்கரைப்பாகாய் கரைந்து ஒலித்தது.

என் அர்த்தமான பேச்சு வார்த்தைகளுக்கு அசரடிக்கும் பதிலைத் தருவது தானே அவளது சிறப்பம்சம்!

“உங்க ரூம் பால்கனியிலேயா சொல்லறீங்க?” என்றாள் சந்தேகமாக!

ஆம் எனத் தலையசைத்து ஆமோதித்தேன் நான்.

“ம்ப்ச்… வேணாம்ங்க. மழை வந்தா கரண்ட் கட் ஆகும். அங்கிருந்து இருட்டுல கீழே வரணும்…” என்றாள் அதி புத்திசாலித்தனமாக. அடியே! எனப் பல்லைக் கடித்துக் கொண்டேன்.

என் முகமாற்றத்தைக் கவனித்து விட்டு, “ஏன் ரூபன்?” என்றாள் பாவமாக! இதொன்று இவளிடம், ஒன்று ரோஷம் வந்து முகத்தை சுருக்கி வைத்துக் கொள்வது! இல்லை பாவமாக வைத்துக் கொள்வது!

“திவிம்மா சரி படிச்சு முடிச்சதும் என்ன செய்ய போற?” எனச் சுற்றி வளைத்து பேச்சைத் தொடங்கினேன்.

“என்ன செய்யணும்? ஹ்ம்ம்… கேம்பஸ்ல செலக்ட் ஆகி வேலைக்கு போகணும்…” என்றாள் தலையைத்தட்டி யோசித்தபடி.

“ஓ… அதுக்கப்பறம்?”

“ஹ்ம்ம்… அப்பறம் என்ன சம்பாரிச்ச காசை அம்மாவுக்குத் தருவேன்”

“அச்சோ! மரமண்டைடி நீ?” நான் திட்ட, முகத்தைச் சுருக்கிக் கொண்டாள்.

“வேலைக்கு போயிட்டு வாழ்க்கையோட அடுத்த கட்டம் என்னன்னு கேட்டேன் திவிம்மா…” பாவமாக நான் கேட்க,

“உங்களுக்கு என்ன பதில் வேணும்ன்னு சொல்லிட்டா… நான் சொல்ல போறேன்… ஏன் இப்படி சுத்தி வளைக்கறீங்க…” ரோஷக்காரி மூக்கு சிவக்க என்னிடம் சண்டைக்கு நின்றாள்.

என் பாடு திண்டாட்டம் எனப் புரிந்தது.

“யாரையாவது லவ் பண்ணறியா திவி…” மீண்டும் தலையைச் சுற்றி மூக்கை தொட்டேன்.

“அதெதுக்கு வெட்டி வேலை…” என்றவள், மீண்டும் உள்ளே சென்றாள்.

“இன்னும் உள்ளே என்ன?” என அவள் பின்னேயே வந்து கேட்டேன்.

“அத்தை வர நேரம் ஆகும் போல… உங்களுக்குத் தோசை ஊத்தி வைக்கிறேன்…” என்ற அவளின் பதிலில் எனக்குள் வானவில் ஜாலங்கள்.

காதல் அவளுக்குப் புரியாவிட்டால் என்ன? இந்த அக்கறை போதாதா?!? என் அன்னைக்கு ஈடாக… என் வயிற்றுப்பாட்டைப் பற்றிக் கவலைப்படும் அவளது அக்கறையும், நேசமும் என்னை மொத்தமாகக் கொள்ளை கொள்வதை அவளுக்கு உணர வைக்கத்தான் என்னால் முடியவில்லை.

அவளாக உணரட்டும் என்று என் மனம் நினைக்கிறதோ என்னவோ?

அது இப்போதைக்கு நடக்குமா? என்னும் மகா கேள்வி எழுந்தாலும், அவளது இந்த இயல்பு தான் எனக்கு மிகமிக பிடித்திருக்கிறது. காதல், கொஞ்சல், கிஞ்சல் அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் எங்களுக்குள் அமைந்திருக்கும் இந்த இயல்பான காலம்! இதை அனுபவித்துப் பார்த்தால் தான் அந்த சுகம் புரியும்!

நீங்களும் காதலைப் பகிராமல் உணர வைத்து மகிழ்ந்து பாருங்களேன்! அது ஒரு அழகான கண்ணாமூச்சி ஆட்டம்!

“என்ன அமைதியா இருக்கீங்க?” அவளின் திடீர் கேள்வியில், “நான் ஏதாவது ஆர்டர் பண்ணிக்கிறேன்… நீ மழை நின்னதும் கிளம்பணுமே…” என ஞாபகப் படுத்தினேன்.

ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தவள், “மழை நிக்கிற மாதிரியா இருக்கு…” என்றாள் சிரிப்புடன்.

“அப்படியே நின்னாலும் இந்த பத்து நிமிஷ வேலையில எதுவும் கெட்டு போகாது… நான் சீக்கிரம் சமைச்சிடறேன்… ஆர்டர் செஞ்சு இந்த மழையில எப்ப வரது? அதுக்குள்ள உங்களுக்குப் பசியே போயிடும்…” என்றவள் வேலையில் மும்மரமானாள்.

மழை நின்று அவள் கிளம்பிய பிறகு, அவள் சமைத்து வைத்ததை உண்ட எனக்கு அது தேவாமிர்தமாகத் தோன்றியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: