Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_5’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_5’

அத்தியாயம் – 5

 

காலை முழுவதும் வேலை செய்த களைப்பினால் ஒரு குட்டித் தூக்கம் போட்டாள் வெண்ணிலா. உழைப்பு மன வேதனையைக் குறைத்தது என்னவோ உண்மை.

அலைப்பேசி அழைப்பு வர அதில் தெரிந்த உலகம்மை என்ற பெயரைப் பார்த்தவள் முகத்தில் மத்தாப்பூ. உலகம்மை அவரது தந்தையின் பதிப்பகத்தை அவருக்குப் பின் ஏற்று நடத்துகிறவர்.

வெண்ணிலாவின் கதையைப் படித்தவுடன் ஈர்க்கப்பட்டு புத்தகமாகப் பதிப்பித்தவர். இந்தக் கம்ப்யூட்டர் காலம் பற்றி எந்தப் புரிதலும் இன்றி தனது கற்பனைகளையும், வலிகளையும் கதையாக வார்த்தெடுக்கும் கள்ளிக்காட்டுப் பூவிற்கு இன்றளவும் ஆதரவளித்து வருபவர்.

“அக்கா எப்படி இருக்கிங்க”

“நல்லாருக்கேன் வெண்ணிலா. நீ, அப்பா, குழந்தைகள் எல்லாரும் நல்லாருக்கிங்களா?”

“நல்லாருக்கோம் அக்கா… நீங்களும் சாரும் நல்லாருக்கிங்களா?”

“எல்லாரும் நலம். உன்னோட அடுத்தக் கதையைப் படிக்க நாங்க எல்லாரும் ஆவலா இருக்கோம். கடைசியா ஒரு வருசத்துக்கு முன்னாடி கதை தந்த… ஏன் இவ்வளவு தாமதம்”

“உங்களுக்குத் தெரியாதது இல்லைக்கா… கோர்ட், கேசுன்னு அலையவே நேரம் போதலைக்கா”

“இப்ப என்ன புது பிரச்சனை?”

“என் முன்னாள் கணவர் மதுரைல இருக்குற எங்க வீட்டை அபகரிச்சுட்டு ஒவ்வொரு வருஷமும் ஒரு பொம்பளை கூட அங்க குடும்பம் நடத்துறான். வீட்டு மேல வேற அந்தாளு எக்கச்சக்கக் கடன் வாங்கிருக்காரு. அப்பாவோட பூர்வீக வீடுன்னு நிரூபிச்சு வீட்டை மீட்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம். இந்தக் குழப்பத்தில் கதை எழுதவே ஓட மாட்டிங்குது அக்கா”

“புரியுது வெண்ணிலா, இந்த நிலமையில எழுதுறது கஷ்டம்தான். ஆனாலும் எழுத்தை நிறுத்திடாதே. உயிர்ப்போட எழுதத் தெரிஞ்சவங்களில் நீயும் ஒருத்தி. உன் எழுத்தைப் படிக்கவே வாசகர்கள் காத்துட்டு இருக்காங்க”

“நன்றிக்கா, எழுத்தின் உயிர்ப்பை புரிஞ்சுகிட்டவங்க எழுதியவர்களுக்கும் கடமைகள் இருக்குன்னு புரிஞ்சுக்குவாங்கன்னு நம்புறேன். அடுத்த கதையை சீக்கிரம் தொடங்கிடுறேன் அக்கா”

அலைப்பேசியை வைத்ததும்

உனக்காக ஒரு வாய்ப்பு உண்டாக்கித் தர முயற்சி பண்றேன் வெண்ணிலா என்று நினைத்தவண்ணம் தனது கணவர் சிவகுருவை அழைத்தார். “என்னங்க, ஏதோ ஒரு புது நிறுவனத்தில் வெப் சீரீஸ் எடுக்கக் கதையைத் தேடுறாங்கன்னு சொன்னிங்களே. அவங்களுக்கு நம்ம பதிப்பக எழுத்தாளரோட கதைகளை அனுப்ப முடியுமா?” என்றார்.

“யாரோட கதை?”

“வெண்ணிலா… மதுரைப் பொண்ணு”

“ஓ அந்தப் பெண்ணோட கதையா? நல்லாருக்கும்தான்… ஆனால் காமெர்ஷியல் எலிமெண்ட் ஒண்ணு கூட இருக்காதே. ஒரு காதல், ஒரு மோதல், ஒரு ஊடல் அப்பறம் கூடல், துப்பறியும் கதை, அமானுஷ்யம் இந்த வகை எதிலும் அவளோட கதைகள் இல்லையே”

“பலர் பொழுதுபோக்குக்காக எழுதுறாங்க, சிலர் எழுத்தையே தன்னோட தொழிலா எடுத்துக்குறாங்க. வெண்ணிலா அப்படி இல்ல இவளோட வலிகளை, வேதனைகளை எழுத்தா வடிச்சிருக்கா. அதனாலதான் இப்படி ஒரு சிறந்த படைப்பை அவளால் தர முடியுது”

“இருக்கலாம்… ஆனால் முதலீடு போட்டு படம் எடுக்குறவங்க அதுக்கான பலனை எதிர்பார்க்குறது நியாயம்தானே… நீ சிறந்த படைப்பா நினைக்கிறது மத்தவங்களுக்கு பிடிக்காம போனால்… நான் எதனால அப்படி சொல்றேன்னு உனக்குத் தெரியும் எங்க அப்புச்சி எத்தனையோ கலைப்படங்களுக்கு  பைனான்ஸ் பண்ணிட்டு ஒத்த பைசா கூடத் திரும்பி வாங்க முடியாம போயிருக்கு”

 

“இப்படி சொன்னா எப்படிங்க. கமர்ஷியல் டெம்ப்ளேட் எதுவும் இல்லாம ஒரு பெண்ணைப் பத்தி, அவளோட உணர்வுகளைப் பத்தி சொல்றதில் அவள் ஒரு தேர்ந்த எழுத்தாளர். அவளோட கதைகள், படிச்சுட்டு கடந்து போகும் இடத்தில் இல்லாம வாழ்க்கையில் ஒரு சிறிய புரிதலை கொண்டு சேர்க்குதுன்னு நினைக்கிறேன். அவளோட கதைக்கரு எல்லாம் அருமையானது. சரியான படி செதுக்கினா அட்டகாசமான பொழுது போக்கு அம்சமா உருவாகும்.

நல்ல கதையை அடுத்த படிக்குக் கொண்டு சேர்க்க முயற்சி செய்யலாமே. முதலில் அவங்க கண் பார்வைக்குக் கொண்டுட்டுப் போங்க. அதுக்கப்பறம் வெண்ணிலாவோட அதிர்ஷ்டம் வேலை செய்யுதான்னு பார்க்கலாம்”

“என் பொண்டாட்டியே உத்தரவு போட்டதுக்கு அப்பறம் நான் மாட்டேனா சொல்ல முடியும். நாளைக்கே முயற்சியை ஆரம்பிக்கிறேன்” என்றார்.

“அ… அப்பறம் ஒரு விஷயம்… இது அவளோட சொந்த அனுபவம்னு யாருக்கும் சொல்லாதிங்க. ரெண்டாவது அவளைப் பத்தின எந்த ஒரு தகவலும் இப்போதைக்குத் தர வேண்டாம். கதை பிடிக்குதுன்னா மேற்கொண்டு பேசலாம்”

“கதை புத்தகத்தைத் தந்துட்டு வந்துடுறேன் போதுமா?”

“அதெல்லாம் நீங்க கிளம்பினதும் அலமாரிக்குத்தான் போகும். ஒண்ணு செய்ங்க, அவளோட கதைகளைப் பத்தி ஒரு பக்கத்தில் சுருக்கமா எழுதி அனுப்புவா… அதை காப்பி எடுத்துத் தரேன். எடுத்துட்டுப் போயி தாங்க”

“கதைக்கருவை மட்டும் யாரும் காப்பி அடிக்க மாட்டாங்களாக்கும்”

“கதைக்கரு ஒண்ணா இருந்தாலும், சொல்லும் முறை… அதுதான் அவளோட தனித் திறமை”

சிவகுருவின் மனது யாருக்கு இப்போது கதைகள் மிகவும் தேவைப்படும் என்று கணக்குப் போடத் தொடங்கியது.

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_5’”

Leave a Reply to Krishnapriya Rajesh Narayan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_13’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_13’

அத்தியாயம் – 13 தங்கரதிக்கும், வெற்றிவேலுக்கும் அரைப்பரீட்சை ஆரம்பித்திருந்த சமயம்தான் உலகம்மை மறுபடியும் வெண்ணிலாவை அழைத்தார். “அதினன் படம் ஆரம்பிக்கத் தயாராயிட்டான். காண்ட்ராக்ட் காப்பி ஒண்ணை அண்ணனுக்கு அனுப்பிருக்கான். அண்ணனும் அதை நம்ம வக்கீல்கிட்ட காமிச்சு ஓகே பண்ணிட்டாங்க. உனக்கு ஒரு

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’

அத்தியாயம் – 22   பாபு கத்திச் சென்றதற்குப் பின் கூனிக் குறுகி நின்றுவிடாமல் மனதை தனக்குத் தானே தைரியப்படுத்திக் கொண்டபடி அதினனின் வீட்டு பால்கனியில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. யாருக்கும் சாப்பிடக் கூட மனமில்லை. “அதினனைப் பத்தி முதல் முதலில் தப்பா

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_12’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_12’

அத்தியாயம் – 12   நாட்கள் வேகமாய் உருண்டோடி மாதங்களாகியது. ஆனால் அதினனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. “விட்டுத் தொலை போ” என்று சுலபமாக சொல்லிவிட்டான் கார்மேகம். ஆனால் கை நீட்டி காசு வாங்கிவிட்டு வேலை செய்யாமலிருப்பது வெண்ணிலாவின் மனதை உறுத்தியது.