சுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 6’

அந்தி மாலைப் பொழுதில் – 6

 

வீட்டிற்குச் சென்ற திவ்யசுந்தரி முதல் வேலையாக, அவள் புகழ்ந்து தள்ளிய ரஞ்சனி அக்கா வீட்டிற்குத் தான் சென்றிருப்பாள் போலும்.

 

அந்த அக்கா, நல்லபடியாகப் படித்து முடித்த குழந்தைகளுக்கு சாக்லேட் தருவதைப் படம் பிடித்து என் கைப்பேசிக்கு அனுப்பி விட்டாள்.

 

என் அனுமானத்தின்படி, ட்யூஷன் எடுப்பது எப்படி என்று எனக்கு மாதிரியைக் காட்டுவதற்காகத் தான் இருக்கும்.

 

உணவை முடித்து கைப்பேசியைக் கையில் எடுத்த எனக்கு, அவளுடைய செய்தியைக் கண்டதும், ‘நான் தான் இப்ப எல்லாம் சாக்லேட் தர தொடங்கிட்டேனே இன்னும் எனக்கு எதுக்கு டெமோ?’ என்று தான் தோன்றியது.

 

ஹ்ம்ம் புது ட்யூஷன் மாஸ்டருக்கு ட்யூஷன் எடுக்கறது எப்படின்னு சொல்லித் தர ஸ்டூடண்ட் இவளா தான் இருப்பா. இவளுக்கு இந்த கணக்கு, காதல் எல்லாம் தான் வராது! ஆனா, இந்த லஞ்சம் வாங்கறது கை வந்த கலை போல… அம்மா செஞ்சு தர ஸ்நாக்ஸ், நான் தர சாக்லேட்… அடிக்கடி சூப்பர், வெரிகுட்ன்னு பாராட்ட வேற செய்யணும். இதெல்லாம் செஞ்சா தான் மேடம் மூணு செமஸ்டரா கிளியர் பண்ணாத அரியர் பேப்பரை கிளியர் பண்ண முயற்சி எடுப்பாங்க. எல்லாம் என் நேரம்.

 

‘கடவுளே ஒரு ஸ்கூலையே கட்டி மேய்க்கிறவங்க கூட நிம்மதியா இருக்காங்க. ஆனா இவ ஒருத்தியை வெச்சுட்டு நான் படுற பாடு இருக்கே!’ என்று சந்தானம் பாணியில் புலம்புவதைத் தவிர எனக்கு வேறு வழி!

 

மீண்டுமொருமுறை அந்த காணொளியை ஓட்டி விட்ட என் கண்கள் ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும் விரிந்தது. ‘ஆஹான்! இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா. நாளைக்கு ட்யூஷனுக்கு வா திவிக்குட்டி. இந்த டெமோவை பக்காவா எக்ஸிகியூட் பண்ணிடலாம்’ என விஷேசமாக திட்டமிட்டுக் கொண்டேன்.

 

மறுநாளை வழக்கத்திற்கு மாறாக வெகு ஆர்வமாக எதிர்கொண்டேன் நான். அவளும் சமத்தாக வந்து லஞ்சத்திற்காகக் கையை நீட்டினாள்.

 

அவளின் வளைக்கரத்தைப் பார்வையால் அளந்தபடியே, “உங்க ரஞ்சனி அக்கா சமத்தா படிச்சு முடிச்சவங்களுக்கு தானே சாக்லேட் தராங்க. நான் தான் தெரியாம நேத்து முன்னாடியே தந்துட்டேன் போல. நீ இன்னைக்கு நல்லபடியா படிச்சு முடி. உங்க ரஞ்சனி அக்கா மாதிரியே கிளம்பும்போது தரேன்” என்றேன் நான் நமட்டு சிரிப்புடன்.

 

அவள் முகம் சுருங்கியது. அரைமனதோடு சரியென்று தலையசைத்தவள் படிக்க அமர்ந்தாள். வழக்கம்போல அவள் ஒன்றுமே செய்யாததற்கும் வெரி குட் வெரி குட் என்று அநியாயத்துக்கு ஊக்கம் தந்து ஒருவழியாக அவளை படிக்க வைத்தேன்.

 

“ஆமா இந்த செமஸ்டருக்கு அஞ்சு பேப்பர் இருக்குமே… அதை எப்ப படிப்ப? படிக்க நேரம் இருக்குதா?” என்று நான் கேட்டதற்கு, “வீட்டுக்குப் போனதும் படிச்சுப்பேன்…” என்று சொன்னாள்.

 

“இதை கவனிக்கிறேன்னு அதைக் கோட்டை விட்டுடாத புரியுதா?” என்று சொன்னபோது எல்லா பக்கமும் தலையை உருட்டினாள்.

 

“ஹ்ம்ம் சரி இன்னைக்கு படிச்சது போதும். சாக்லேட் இந்தா…” என்று நான் நீட்டியதும் முகம் ஒளிர வாங்கிக்கொண்டு என்னிடம் தலையசைத்துக் கிளம்பியவளைத் தடுத்து நிறுத்தினேன் நான்.

 

குழப்பமாக, “சொல்லுங்க…” என்றாள்.

 

“என்ன நீ பாட்டுக்கு சாக்லேட் வாங்கிட்டு கிளம்பற”

 

“நீங்க தான் கிளாஸ் முடிஞ்சதுன்னு சொன்னீங்களே…”

 

“கிளாஸ் முடிஞ்சது தான்… ஆனா, நீ அனுப்பின டெமோ வீடியோ பாரு” என்று அவள் முன்பு என் கைப்பேசியை நீட்டினேன்.

 

“இதுல என்ன?” என்றாள் புரியாமல்.

 

“சாக்லேட் தந்ததும் அந்த பாப்பா என்ன செய்யுது?” என நான் கேட்கவும், அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

 

அந்த குழந்தை அவள் சொன்ன ரஞ்சனி அக்காவிற்கு முத்தம் கொடுத்துவிட்டல்லவா செல்கிறது.

 

“ஹ்ம்ம் அந்த குழந்தை மாதிரி தானே நீயும் செய்யணும்?” என ஊக்குவித்த என்னை இவள் ஏன் இப்படி முறைத்துப் பார்க்கிறாள்? அவள் அனுப்பியதை தானே செய்யச் சொன்னேன்.

 

மெதுவாக எழுந்து, “எதுக்கு முறைக்கிற?” என்று கேட்டபடியே அவளிடம் நெருங்கியிருந்தேன்.

 

அவள் என் நெருக்கத்தை எதிர்பார்க்காமல் ஓரெட்டு பின்னே வைத்தாள். விளையாட்டைத் தொடர சன்ன சிரிப்புடன் நான் மீண்டும் நெருங்கினேன்.

 

அவளது விரல்களின் நடுக்கம் எனக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆசையாக வாங்கிய சாக்லேட்டையும் தவற விட்டிருந்தாள்.

 

‘கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை…’ என்று அவள் கூறிய சொற்கள் என் செவிகளில் ரீங்காரமிட்டு, என்னைப் பித்தாக்கியது.

 

எத்தனை தூரம் பின்வாங்க முடியும் அவளால்? என் அறையின் சுவரில் இடித்து நின்றிருந்தாள். செய்வதறியாத தவிப்பும், தயக்கமும் அவளிடம். அது என்னை அவளை நோக்கி நகரச் சொல்லி வெகுவாக தூண்டியது.

 

“நீ அனுப்பின வீடியோ தானே…” என்றேன் அவளை நெருங்கி நின்று கிசுகிசுப்பாக.

 

என் நெருக்கம் படுத்த, “தள்ளி போங்க…” என்றாள் குரலே எழும்பாமல்.

 

“ம்ம் ஹ்ம்ம்… நேத்து ஒரு சாக்லேட் இன்னைக்கு ஒன்னு தந்திருக்கேன் ஆக மொத்தம் எனக்கு ரெண்டு முத்தம் வந்தே ஆகணும்” என்றேன் நான் கணக்கில் கெடுபிடியாக.

 

அவள் கன்னங்கள் சிவந்து விட்டது. “நான் அத்தையைக் கூப்பிட போறேன்” எனக் குரலே எழும்பாமல் என்னை அதட்டினாள்.

 

“கூப்பிடேன்…” எனச் சாவதானமாகச் சொன்ன நான், அவளின் இடையை வளைத்து என்னை நோக்கி இழுத்திருந்தேன். என் தொடுகையிலா இல்லை நெருக்கத்திலா தெரியவில்லை அவளது ரோமங்கள் சிலிர்த்தெழுந்து நின்றிருந்தது.

 

என் கட்டுப்பாடுகள் எல்லாம் தகர்ந்த நிலை! என் மூச்சுக்காற்றை அவள் சுவாசித்திருக்க வேண்டும்.

 

அதே நிலை எத்தனை நேரம் நீடித்ததோ தெரியவில்லை. என் சுயக்கட்டுப்பாடு, எங்கோ கேட்ட குயிலின் ஓசையில் விழித்துக் கொண்டது.

 

நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு, அவளது நெற்றி முட்டி… “சரி இதெல்லாம் கணக்குல வெச்சுக்கறேன். உனக்கு எப்ப தர தோணுதோ அப்ப மறக்காம தந்திடு” என நான் விலகவும் தான் இருவரின் மூச்சுமே சீரானது.

 

அவளின் சிவந்த கன்னங்கள் என் விழிகளை அவளிடமிருந்து பிரிக்க முடியாமல் தவிக்கச் செய்தது.

 

நான் அவளை விடுவித்தும் அவளது புலன்கள் இயங்க சிறிது நேரம் பிடித்தது போலும்! என்னை நிமிர்ந்து பார்க்கவே சங்கடப்பட்டபடி அங்கிருந்து மெல்ல நகர்ந்திருந்தாள்.

 

அவளுக்கு வாங்கிய சாக்லேட் அனாதரவாக தரையில் விழுந்து கிடந்தது. அதை எடுத்துக்கொண்டு வாசலுக்குச் சென்ற நான் அவளின் சைக்கிளை இடைமறித்துக் கொடுத்தேன்.

 

வாங்க மறுத்தவளை விஷம சிரிப்போடு நான் பார்க்க, “நான் அத்தை கிட்ட சொல்லிடுவேன் போங்க” எனப் படபடத்த குரலோடு மிரட்டினாள்.

 

“நான் வேணா அம்மாவைக் கூப்பிடவா?” என நான் கேட்கவும், அவள் முழித்த முழி… அச்சோ அள்ளிக்கொள்ளலாம் போல இருந்தது.

 

“சும்மா திவிம்மா… விளையாட்டுக்கு… சரி இந்தா சாக்லேட். ஹ்ம்ம் எனக்கெல்லாம் பதிலுக்கு ஒன்னும் வேணாம். அதுதான் நீயா தரும்போது வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டேனே…” எனக் கண்ணடித்து நான் சொல்ல, “உங்களை கட்டை எடுத்து விளாச போறேன் பாருங்க” என்று மிரட்டிவிட்டுக் கிளம்பினாள். சாக்லேட்டையும் வாங்கிக்கொண்டு தான்.

 

‘இதுல எல்லாம் விவரம் தான்!’ எனச் சிரித்துக் கொண்டது என் அதரங்கள்.

 

 

ஒருநாள் திவ்யசுந்தரி சைக்கிளில் நின்று கொண்டிருக்க, அவளருகில் நின்று ஒரு இளைஞன் பேச்சு வளர்த்துக் கொண்டிருந்தான். அவனது தோற்றமும், பார்வையும் எனக்கு சரியாகப் படவில்லை. அவளைக் கடந்து அப்படியே செல்ல முடியாமல், வண்டியை அவளிடம் நிறுத்தினேன்.

என்னைப் பார்த்து மென்னகை புரிந்தவள், “கடைக்கு வந்தீங்களா?” என்று கேட்டாள்.

 

ஆம் எனத் தலையசைத்தபடி, நான் அவள் கூட இருந்தவனைக் கவனித்துக் கொண்டிருக்க, அவன் சற்று அதிர்ந்ததும், பின் சமாளித்துப் புன்னகை முகமாக நின்றதும் எனக்கு நன்றாகவே புரிந்தது.

 

அவளாக எதுவும் சொல்ல காணோம் என்றதும், “இவர் யாரு?” என விசாரித்தேன்.

 

“இவங்க கமலேஷ். என்னோட பிரண்ட் நந்தினியோட அண்ணா” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.

 

“ஓ…” என்று அவனையே ஊன்றி கவனித்த என்னைச் சுட்டிக்காட்டி, “அதிரூபன். எங்க பேமலி பிரண்ட்” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.

 

“ஹலோ சார்” என்று கை குலுக்கியவனிடம், நானும் பதிலுக்கு கை குலுக்கினேன்.

 

நான் நகர்வதாகத் தெரியவில்லை என்றதும், அவன் அவளிடம் கண்களாலே விடைபெற்றுச் செல்ல, எனக்கு எரிச்சல் மண்டியது.

 

என் பொறுமையை இழுத்துப் பிடிக்கவே முடியாமல், “நீ கிளம்பு…” என அவளிடம் எரிந்து விழ, அவளுக்கு என் எரிச்சல் கண்டு குழப்பம்.

 

மறுநாள் அவளைச் சந்திக்கும்போதும் அதே எரிச்சலோடு நானிருக்க, ட்யூஷன் முடிந்ததும், “திவி நேத்து பார்த்தோமே…” என நான் தொடங்க, எதுவும் புரியாமல் என் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

 

“அந்த கமலேஷ்…” என்று நான் மீண்டும் தொடங்கவும்,

 

“ஆமா… நேத்தே சொன்னனே நந்தினியோட…” என்றவளைக் கைநீட்டித் தடுத்து, “அங்கே ரோட்ல நின்னு அவனோட என்ன பேச்சு?” என்றேன் நான்.

 

என் கோபம் ஏனென்று புரியவில்லை அவளுக்கு! “அது… அவங்களை வழியில பார்த்தேன்… அவங்க பேசவும் நானும் மரியாதைக்கு…” எனத் தயக்கமாக பதிலளித்தாள்.

 

“அது அநாவசியம். தெரிஞ்சவங்கன்னா ஒரு சிரிப்போட கடந்து போகணும். நின்னு பேச கூடாது. பேசணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. புரியுதா?” என நான் கேட்க, என் ஆத்திரம் புரியாமல் விழித்தாள்.

 

“என்ன?” என்றேன் நான் குரலின் கடுமை மாறாமல்.

 

“நீங்க ஏன் கோபமா இருக்கீங்க? நான் ஏதாவது தப்பு செஞ்சுட்டேனா?” என்றாள் மெல்லிய அச்சத்துடன். அவளிடம் எடுத்துச் சொல்லாமல் எரிந்து விழுகிறோமே என்று எனக்கு குற்றவுணர்வாகப் போய்விட்டது.

 

அவளருகே வந்தமர்ந்து, அவள் கைகளை ஆதரவாக என் கைக்குள் பொத்திக் கொண்டு, “ஹ்ம்ம்… உனக்கு எப்படிச் சொல்ல? சரி அவன் என்ன பேசினான்னு என்கிட்ட சொல்லு…” என்று பொறுமையாகக் கேட்டேன்.

 

“அதுவா என் தலைமுடி அழகா இருக்காம். என்ன சேம்பூ யூஸ் செய்யற? என்ன டிப்ஸ்ன்னு கேட்டாங்க” என்றாள்.

 

“ஹ்ம்ம் என் அனுமானம் சரியா இருந்தா உன் கூந்தலை நிறைய வர்ணிச்சிருப்பான். சரியா?” என்றேன் நான்.

 

ஆம் என்பதாகத் தலையசைத்தாள்.

 

“பொண்ணுங்களுக்கு முடி மேல ஆசை வரும். ஆக இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பாங்க. ஆனா, அவன் ஏன் கேட்டான்?”

 

“அவருக்கும் தலைமுடி மேல பிரியம் இருக்கலாம் தானே…” என்று பதில் சொன்னபோது அவளுக்கே அதில் உறுதியில்லை.

 

“ஹ்ம்ம் அதுக்காக நடுரோட்டுல கேட்பானா? ஏன் வீட்டுல இருக்கும்போது கேட்டா நீ சொல்ல மாட்டியா? இல்லை அவ தங்கச்சி மூலமா தான் உன்கிட்ட இதை விசாரிக்க முடியாதா?”

 

நான் எடுத்துச் சொல்லவும், அந்த கோணத்தில் யோசித்தவளுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.

 

“உன் பிரண்ட் நந்தினியோட முடி அவ்வளவு மட்டமாவா இருக்கும்?” என் அடுத்த கேள்வியில் அவளுக்குப் பயங்கர குழப்பம்.

 

பதிலற்று இருந்தவளிடம், என்னவென்று கேட்க, “இல்லை… அவ முடியும் அழகா தான் இருக்கும். ஆனா, ஏன் என்கிட்ட கேட்டாங்க?” என்றாள் புரியாமல்.

 

“உன்கிட்ட பேச்சு வளர்க்கத் தான்…” என்றேன் நான்.

 

அவள் புரியாமல் ஏறிட்டு பார்க்கவும், “எந்த பையனும் ‘நீ அழகா இருக்க. உன் கண்ணு அழகு. தலைமுடி அழகு’ இப்படியெல்லாம் பேசினா… அவன் பேச்சில் கொஞ்சம் சந்தேகப்படணும். அதுதான் நமக்குப் பாதுகாப்பு” என நான் எடுத்துக் கூறவும், தலையை ஆட்டிக் கொண்டவளுள் மெல்லிய அச்சம்.

 

“என்ன?” என நான் கேட்டதும், “பயமா இருக்கு…” என்றாள் வெளிப்படையாகவே.

 

“ம்ப்ச் பயப்பட அவசியமே இல்லை… பாதுகாப்பா இருன்னு சொல்லறேன் அவ்வளவு தான்…” என்று சொல்லி நான் அவளின் தோளைத் தட்டிக் கொடுக்கவும், ஏதோ நினைவில் என் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், நொடியில் விலகியும் கொண்டாள்.

 

அவள் எண்ணப்போக்கு எனக்குப் புரிந்து விட்டது. நானும் அவளை அவ்வாறு எண்ணிவிடுவேனோ என்று நினைக்கிறாள்.

 

அவளது தாடையைச் சுட்டு விரலில் நிமிர்த்தியவாறு, “என்னோட எச்சரிக்கை உணர்வெல்லாம் உன்கிட்ட அவசியமே படாது” என்று சொல்ல, அவளுக்குப் புரிந்தும் புரியாத நிலை.

 

என்னையே இமைக்காமல் சிறிது நேரம் பார்த்தவள், மெல்லிய தலையசைப்பில் என்னிடம் விடைபெற்றுக் கிளம்பியிருந்தாள். அவளைச் செல்ல வேண்டாம் என்று சொல்ல வேண்டும் போல இருந்தது எனக்கு.

 

என்னிடமிருக்கும் சுயக்கட்டுப்பாடுகள் எல்லாம் மெல்ல மெல்லத் தகர்வதை என்னால் உணர முடிந்தது. எத்தனை நாட்கள் நீடிக்குமோ நீடிக்கட்டும் என்று என் மனதிடம் சொல்லிக் கொண்டேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: