Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_4’

அத்தியாயம் – 4

 

சில வருடங்களுக்கு முன்னர் வாழ்க்கையின் சூறாவளியால் சின்னாபின்னப்பட்டு திகைத்திருந்தனர் மூவரும். உடல் நிலை சரியில்லாத பெற்றோரை கவனிக்க வேண்டும் என்ற காரணத்தாலேயே உள்ளூரை விட்டு செல்ல விரும்பாததால் சரியான வேலை அமையாத கார்மேகம், பொறுப்பற்ற கணவனால் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டு இரண்டு குழந்தைகளின் எதிர்காலமாய் வெண்ணிலா, கணவனை இழந்து வயிற்றுப் பிள்ளைக்காரியாய் பொன்னுமணி.

ஏதாவது செய்யனும், நம்ம தேங்கி நின்னுருந்தா எல்லாம் சரியாயிடுமா? என்று யோசித்ததின் விளைவு தனது நண்பர்களின் துணையுடன் டூரிஸ்ட் கம்பனி நண்பனின் மூலமாக உணவு காண்ட்ராக்ட் ஒன்று கிடைத்தது. மதுரைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு மதிய உணவு வழங்கும் காண்ட்ராக்ட். அரிட்டாபட்டி குடைவரை கோவில்களைக் காண வருபவர்களும் இதில் அடக்கம்.

கார்மேகம் பாக்யநாதனிடம் இந்த மதிய உணவு தயாரித்துத் தரும் திட்டத்தைக் கேட்ட போதே சொல்லிவிட்டார்.

“மூணு பேரும் சேர்ந்து ஏதோ உருப்படியா ஒரு யோசனை சொல்லிருக்கிங்க. நல்லபடியா செய்யுங்க. எவ்வளவு குறைவான பணமா இருந்தாலும் சரி. முதலீட்டை மூணு பங்கா போடுங்க”

பொன்னுமணி சற்று திகைத்தாள் அவளது குடும்பம் அத்தனை வளமை கிடையாது. அம்மா அப்பா கூலி வேலை செய்பவர்கள். கணவன் மறைந்து வயிற்றுப் பிள்ளையுடன் அவள் வீட்டோடு வந்தபின்பு மூன்று வேளை உணவுக்கே பற்றாக்குறை. இதில் முதலீடு எவ்வளவு இருக்குமோ என்று திகைக்க

“என் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் நானே போடுறேன்” என்று பாலை வார்த்தார் பெரியவர்.

“பெரியப்பா…” கண்கலங்கினாள் பொன்னுமணி.

“பொன்னு ரொம்ப உணர்ச்சி வசப்படாதே… உங்க ரெண்டு பேருக்கும் கடனாத்தான் தரேன். மூணு மாசத்துக்குள்ள கடனை அடைக்கணும்”

“மாமா அதுதான் நானே முதலீட்டை போடுறேன்னு சொல்றேன்ல. நீங்க எதுக்குக் கடன் தரணும்? அப்பறம் அடைக்க சொல்லணும்?”

“மூணு பேரும் சமமா முதலீட்டை போடுங்க, உழைப்பையும் போடுங்க. ஒருத்தர் மட்டும் முதலீடு போட்டா அவங்க முதலாளி மாதிரியும் உழைப்பைப் போடுறவாங்க தொழிலாளியாவும் தோணும்.

உணவு தயாரிக்குற தொழில் மட்டும் உடல் உழைப்பு நிறைய தேவைப்படுறது. நம்ம தொழில், நம்ம பணமும் இதில் இருக்குனு நினைக்கும்போது கைவலி, கால்வலின்னு சோர்ந்து உக்காரத் தோணாது. என்ன நான் சொல்றது”

“சரிதாங்க மாமா”

ஒன்றிரண்டு வாரங்கள் கழித்து அவர்களது தொழிலில் திருப்தி அடைந்தவர்.

“லாபம் கம்மியா இருந்தாக் கூடப் பரவால்ல வாழை இலைல கட்டித் தாங்க”

“வாழை இலையா?” என்று திகைத்தவர்களிடம்.

“ப்ளாஸ்டிக் டப்பா வேண்டாம். நேத்து கோவிலுக்கு வந்தவங்க சாப்பிட்டதும் நூத்துக்கணக்கா டப்பாவை குப்பைல எறிஞ்சுட்டுப் போயிருக்காங்க. வாழை இலைல பொட்டணம் மடிச்சுக் கொடுத்தா இலையை ஆடு மாடுங்க சாப்பிடும். ப்ளாஸ்டிக் இயற்கைக்கு கேடு” என்று கறாராக சொல்ல அது நியாயமாகப் பட்டதால் அவர்களும் ஒத்துக் கொண்டனர்.

இன்றுதான் தொடங்கியது போலிருக்கிறது வருடங்கள் உருண்டோடி விட்டது. வாழை இலையில் ஒரு கிண்ணம் எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு, ஒரு ஓரத்தில் ஊறுகாய் என்று வைத்து மடித்து கயிறால் இருக்கிக் கட்டினான்.

“எப்படி வெண்ணிலா இன்னைக்கு டூரிஸ்ட் வரதை மறந்த?”

“ரெண்டு நாளுக்கு மின்னே அந்தாளு மறுபடியும் வந்துச்சு கார்மேகம்” கம்மிய குரலில் சொன்னாள் வெண்ணிலா.

“உன் புருசனா”

“இல்லை ரதி, வெற்றியோட அப்பன்” அவனைக் கணவனாக ஏற்கவே மறுத்தாள்

“ரெண்டும் ஒண்ணுதான். தகராறு பண்ணானா?”

“எல்லாம் வழக்கம்போலத்தான். ஆனால் இந்த தடவைப் பிள்ளைகளை எங்கேயோ வெளிய கூட்டிட்டுப் போனான்”

“அப்பன் உரிமை அவனுக்கும் இருக்கில்ல”

படபடவெனப் பொரிந்தாள் பொன்னு “என்னய்யா உரிமை. பிள்ளைக்கு துணிமணி வாங்கித்தரானா? இல்லை ஸ்கூல் பீஸ் கட்டுறானா? நிலா தானே அடுப்பில் வெந்து, ஆடு வளர்த்து வம்பாடுபட்டுக் கட்டிட்டு இருக்குறா…

வேற எதுவும் வேண்டாம்யா ஊருக்குள்ள இருக்குற இவங்களோட வீட்டை சீதனமா எழுதி வாங்கிப் பகுமானமா உக்காந்துகிட்டு, ஒரு மருத்துவ வசதி கூட இல்லாத இந்தக் காட்டுல, வயசான காலத்தில் பெரியப்பாவை கஷ்டப்பட வச்சிருக்கானே உருப்படுவானா?” பொரிந்துத் தள்ளினாள்.

“விடு பொன்னு… “

“இந்தத் தடவை வேற ஒரு பொம்பளை அவன் கூட வந்தது கார்மேகம். அதுவும் அவ கழுத்தில் போட்டிருந்தது இவளுக்கு பெரியப்பா கல்யாணத்துக்காகப் போட்ட நகை”வயிறெரிந்து புகார் சொன்னாள் பொன்னுமணி.

கண்கள் சற்றுக் கலங்க பின் காட்டில் சென்று கொஞ்சம் தண்ணீர் பருகிவிட்டு வந்து அமர்ந்து அமைதியாக வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் வெண்ணிலா.

அதற்குள் வெண்ணிலா கார்மேகத்தின் உறவைக் கொச்சைப் படுத்தி வெண்ணிலாவின் முன்னாள் கணவன் பாபு சொன்னது பற்றி கார்மேகத்தின் காதில் பொன்னு போட்டு வைத்திருக்க

“மன்னிச்சுக்கோ புள்ள நான் இந்த மாதிரி சொல்லுவான்னு நினைக்கல. இனிமே நீயும் பொன்னும் வேலையை செய்ங்க, நான் தகவல் தந்ததும் வண்டி ஓட்டி வந்து சாப்பாட்டை எடுத்துக்குறேன்”

“பச்… பேசாம இரு கார்மேகம். நீ இல்லைன்னா காய்கறிக் கடைக்காரன், தையல்காரன், மளிகைக்கடை, ஐஸ்வண்டிக்காரன் இப்படி யாராவது ஒருத்தனை என்கூட சேர்த்துக் கதை கட்டுவான். தாலி ஏறின நாளில் இருந்து இதுதானே நடக்குது. இந்தக் குறைக்கிற நாய்க்கு பயந்தா தெருவில் நடமாடவே முடியாது”

தந்தையின் உறுதி மகளிடமும் தென்பட்டது.

“எப்படிடி இப்படித் தெளிவா பேசுற? அதுதான் கதை எல்லாம் எழுதுற… நானெல்லாம் வாழ்க்கைல எப்பத்தான் தெளிவா பேசப்போறேனோ” என்று பெருமூச்சுவிட்டாள் பொன்னு.

“நான் எழுதுறது கதையல்ல நிஜம்” என்று சொல்லிவிட்டு களுக்கென சிரித்தாள் வெண்ணிலா.

பாக்கியநாதன் பிள்ளைகளை கோவிலுக்கு அழைத்து சென்றுவிட்டுத் திரும்பி வந்திருந்தார். அவர் பொட்டலம் கட்டும் வேலையை எடுத்துக் கொண்டு கார்மேகத்தை வண்டியை எடுத்து வர அனுப்பிவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’

அத்தியாயம் – 23   லஸ்யாவின் விரல்கள் மித்துவின் முகத்தை அளந்தன. “வாவ்.. ரொம்ப அழகு நீ. அந்தக் கண்கள் என்னை மாதிரி இருந்தாலும் அதில் இருக்கும் உணர்ச்சிகள் அப்படியே அதின் மாதிரி” “நான் உங்களோட மகள்தானேம்மா” அழகான லஸ்யாவின் முகம்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_7’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_7’

அத்தியாயம் – 7   சிவகுரு மற்ற கம்பனிகளில் சில வேலைகளை முடித்துவிட்டு அதினனின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அங்கு வேலை செய்யும் ஒருவன் “சார் மீட்டிங்க்ல இருக்கார். நீங்க வந்த தகவலை சொல்றேன். உக்காருங்க சார். கூல் டிரிங்க்ஸ் கொண்டு வரட்டுமா?”

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_20’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_20’

அத்தியாயம் – 20   “என்னடி ஓடுகாலி, அடிக்கடி வெளியூருக்குப் போயிட்டு வர்றியாம், விதவிதமா புடவை கட்டிக்கிறியாம். எவனேவனோ வீட்டுக்கு வேற வரானாம்? ஊருக்கு வெளிய வீட்டை வச்சுக்கிட்டு பிராத்தல் பண்ணிட்டு இருக்கியா?” சட்டை பட்டன் பிய்ந்து சட்டை கழண்டிருப்பது கூடத்