சுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 5’

அந்தி மாலைப் பொழுதில் – 5

திவ்யசுந்தரி சொல்லிச்சென்ற வார்த்தைகள் எனக்குள் தித்தித்துக் கொண்டே இருந்தது. அவளைக் கொஞ்சுவதற்கு மனதிற்குள் வார்த்தைகளைக் கோர்த்து வைத்துக் கொண்டும் இருந்தேன். அதுதானே இப்பொழுது அதிமுக்கிய வேலை!

இரவு உணவின் போது கூட என் அன்னை, தந்தையை நான் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு மாதிரி மோன நிலையில் இருக்கிறேன் என்று நான் நினைத்துக் கொண்டாலும், என்னை உன்னிப்பாகப் பார்ப்பவர்கள் ‘பையன் நல்லாத்தான் இருக்கானா?’ என சந்தேகப்பார்வை பார்க்கும் வாய்ப்புகள் நிறையவே உண்டு.

இரவில் என் கைப்பேசியைக் கூடுமான வரை கதறவிட்ட பின் உறங்கும் வழக்கம் எனக்கு! இன்றோ அதை எடுக்கவே என்னுள் அச்சம் எழுகிறது. அதில் பதிந்துள்ள திவ்யசுந்தரியின் எண்ணை இதுநாள் வரையிலும் உபயோகப்படுத்தாத எனக்கு, இன்று அதை உபயோகிக்கும் ஆசை பேரலையாக எழுந்து என்னைச் சுருட்டிக் கொண்டிருக்கிறது.

அறையினுள் நடை பயில்வதும், கைப்பேசியைக் கடைக்கண்ணால் பார்ப்பதுமான என் விளையாட்டு சிறிது நேரம் கூட தொடரவில்லை… அவள் உறங்கும் முன்பு அழைத்தால் தானே ஆயிற்று என்ற ஞானோதயத்தின் விளைவாய்!

இன்றும் பூனை நடை பயின்றேன். ‘யாருமற்ற அறையில் எதற்கடா இந்த நடை?’ என்று என் மனம் மானக்கேடாகக் கேட்டு வைத்தது.

அதை இம்மிகூட கண்டுகொள்ளும் எண்ணமின்றி திவ்யசுந்தரியை தொடர்பு கொண்டேன். படபடப்பு நிறைந்திருந்தாலும், ஒருவித ஆர்வம் என்னுள்! வெகு சுகமாய்!

அழைப்பு ஏற்கப்பட்டதும், “அத்தை வீட்டுக்கு வந்துட்டேன். போன் பண்ணவே மறந்துட்டேன் பாருங்க. சாரி…” என்றாள் அவள் அவசரமும், குற்றவுணர்வுமாக.

காற்று போன பலூனானது என் மனமும், முகமும். “என் நம்பரை என்னன்னு சேவ் பண்ணி இருக்க?” என்றேன் நான் இறுகிய குரலில்.

நிச்சயம் நாக்கை தான் கடித்துக் கொண்டிருப்பாள் என்று கணித்தது என் காதல் அறிவு.

பதிலில்லாது போகவும், “உங்கிட்ட தான் கேட்டேன்…” என அதட்டினேன் நான்.

“விமலா 3” என முணுமுணுத்தாள்.

“அதென்ன மூணு” அதிலும் சந்தேகம் எழுந்தது என் சிற்றறிவுக்கு.

“அத்தையோட போன் நம்பர் ஒன்னு, மாமாவோடது ரெண்டு… அதான் உங்களோடது மூணு…” என்ற அதிபுத்திசாலி பதிலில் தலை சுற்றாதது மட்டும் தான் குறை!

“ஓ அப்ப எனக்குத் தம்பியோ, தங்கச்சியோ இருந்திருந்தா நாலு, அஞ்சு எல்லாம் வந்திருக்கும்” என்றேன் படுநக்கலாக.

உடனடியாக, “ம்ம்… இருக்கலாம்…” என்று தொடங்கியவள், பேச்சை அந்தரத்தில் நிறுத்தியிருந்தாள். மீண்டும் நாக்கை கடித்திருப்பாளாய் இருக்கும். அவளின் சின்ன மூளை என் எண்ணவோட்டம் என்னவென்று கணிக்க இந்நேரம் வெகுவாய் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்.

“என்ன இருக்கலாம்? ஏன் எனக்குப் பேர் இல்லையா?” சுள்ளென்று ஏறிய கோபத்தில் என் வார்த்தைகளும் அப்படியே தெறித்தது.

இப்பொழுது அவள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு மெல்லிய இடைவெளியின் பின், “சாரி…” என்றாள் மென்குரலில்.

இறங்கி வர மனமே இல்லாத போதும், இப்பொழுது கைப்பேசி அழைப்பு விடுத்தது வேறு ஒரு விஷயத்திற்காக அல்லவா! அதற்குத் தாவியே ஆக வேண்டிய கட்டாயத்தில் குளிர்ந்து விட்டதாகக் காட்டிக் கொண்டேன் நான்.

“ஆமா கிளம்பும்போது என்னவோ எனக்கு வாய்ச்சதுன்னு சொன்னியே… என்ன அது?” என்றேன் முடிந்தவரை ஆர்வத்தை மூட்டை கட்டி வைத்த குரலில்.

அவள் சொல்லும் பதில் என்னைத் தலை சுற்ற வைக்கும் எனத் தெரிந்திருந்தால், அந்த கேள்வியைக் கேட்டே இருந்திருக்க மாட்டேன். விதி யாரை விட்டது. அதிலும் காதல் விதி வலிமையிலும் வலிமை.

“அதுவா… உங்களுக்கு கேட்டிடுச்சா?” என்றாள் சுரத்தே இல்லாமல்.

“ம்ம் ஹ்ம்ம்…” என்றேன் நான் நித்தியானந்தாவின் சீடனின் தோரணையில்.

“அது… அது…”

“ம்ம்… சொல்லு. என்ன விஷயம்?” வெகுவாக ஊக்குவித்தேன்.

“மத்த ட்யூஷன்ல எல்லாம் ரொம்ப நல்லா பாராட்டுவாங்களாம். நீங்க மட்டும் என்னை திட்டிட்டே இருக்கீங்க” என்றாள் பாவமாக.

“என்னது?!?” என்று வெளிப்படையாகவே அதிர்ந்தேன் நான்.

“ஆமாம். இங்க பக்கத்துல ஒரு அக்கா ட்யூஷன் எடுப்பாங்க தெரியுமா? அவங்க பேரு ரஞ்சனிக்கா. நானும் நேரம் போகாட்டி அங்கே போயிருக்கேன். அந்த அக்கா எத்தனை பாசமா பேசுவாங்க தெரியுமா? ஹோம் வொர்க் சமத்தா செஞ்சா சம் டைம்ஸ் சாக்லைட் எல்லாம் கூட தருவாங்க… அந்த குழந்தைங்களும் அத்தனை ஆர்வமா படிப்பாங்க…” என அவள் அடுக்கிக் கொண்டே செல்ல,

“நிஜமாவே நீ பப்பா தான்டி” என எரிந்து விழுந்தேன் நான்.

அதற்கும் அவள், “எனக்கு புரிஞ்சுடுச்சு. உங்ககிட்ட நான் பிரீ ட்யூஷன் வரேன். அதுதான் நீங்க என்னை திட்டிட்டே இருக்கீங்க. கேலி எல்லாம் செய்யறீங்க. நாளைக்கே நான் உங்களுக்கு எங்க அம்மாகிட்ட சொல்லி பீஸ் வாங்கிட்டு வரேன் பாருங்க” என ரோசமாக மொழிய,

“அறிவுக்கொழுந்தே என்னை விட்டுடு மா…” என நான் தான் கொஞ்சும் நிலைக்கு ஆளானேன்.

“இப்ப எதுக்கு அறிவுக்கொழுந்துன்னு சொல்லறீங்க? எத்தனை கணக்கு தனியாவே சால்வ் பண்ணினேன். அப்ப எல்லாம் ஒரு தடவை சொல்லி இருக்கீங்களா? இப்ப பீஸ் கொண்டு வந்து தரேன்னு சொன்னதும்… அப்படியே சொல்லிடுவீங்களே…”

அவளின் அதிபுத்திசாலித்தனத்தில் வாயடைத்துப் போன நான், “கொஞ்சம் மூச்சு விடு… ஏன் இத்தனை அறிவா பேசற?” என்று கேட்டேன்.

“இப்ப தான் உங்களுக்கு நான் அறிவாளியா தெரியறேனாக்கும். ரஞ்சனி அக்கா எல்லாம் என்னை எப்பவும் புகழ்ந்து தள்ளுவாங்க. நீ வந்தா பசங்க எல்லாம் சமத்தா படிக்கிறாங்க. நீ ரொம்ப புத்திசாலி சொல்லுவாங்க. ஏன் ஒருமுறை சாக்லேட் கூட கொடுத்திருக்காங்க. ஆனா, நீங்க மட்டும்…”

‘அடி! அற்ப பதரே!’ என அலறியது என் மனம்.

“என்ன அமைதியாகிட்டீங்க. இதுதான் சொன்னேன் எனக்கு வாய்ச்சது சரியே இல்லைன்னு” என மீண்டும் புலம்பினாள்.

அவள் சொல்லிச் சென்றதற்கு இப்படி ஒரு அர்த்தம் வரும் என்று நான் என்ன கனவா கண்டேன்?

“உனக்கு வாய்ச்ச ட்யூசன் மாஸ்டர்ன்னு தெளிவா சொல்லு தெய்வமே…” எனக் கதறினேன் நான்.

“பாருங்க… இப்பவும் நான் தெளிவா பேசலைன்னு சொல்லி என்னைக் குறை சொல்லறீங்க”

இவள் இத்தனை குதர்க்கமாகப் பேசுவாளா? என்று நொந்தது என் மனம்.

“ஏய் ஒத்த சாக்லேட் உனக்கு பெருசா இருக்கு. இங்க வந்தா தினமும் எத்தனை விதமா ஸ்நாக்ஸ் சாப்பிடற. அதெல்லாம் மறந்தே போயிடுமா உனக்கு?” ஏதோ சாக்லேட் தான் பெரிய விஷயம் என்பது போலப் பேசுபவளிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை எனக்கு.

“ஆஹான்… நீங்களா தரீங்க. அதையெல்லாம் என் அத்தை தான் தராங்க” அதற்கும் பதில் சொல்லவும், எனக்குக் கடுப்பாக வந்தது.

“ஏய் புலம்பும் போது ஏதோ கொஞ்சறாங்கன்னு எல்லாம் சொன்னியே திவி” என்றேன் நான் பரிதாபமாக.

“பின்ன எல்லாரும் உங்களை மாதிரியே திட்டுவாங்களா? ரஞ்சனி அக்காவை வந்து பாருங்க. எப்படிக் கொஞ்சி, கெஞ்சிப் படிக்க வைக்கிறாங்கன்னு…”

‘கொஞ்சி கெஞ்சிப் படிக்க வைக்க வேண்டுமா? இவள் தூங்கத் தானே செய்வாள்’

“உன்னை பப்பான்னு சொல்லாம என்ன சொல்லறது? எல்.கே.ஜி., குழந்தைகளும் நீயும் ஒன்னா?”

“வேற வேற தான். அதே மாதிரி படிக்கிறதும் வேற தானே? அவங்க படிக்கிற அளவுக்கா நானும் படிக்கிறேன். அவங்க தம்மாத்துண்டு ஒன், டூ, திரி படிக்கிறாங்க. நான் அப்படியா படிக்கிறேன்…” அவள் கேட்ட நியாயத்தில் நான் வாயடைத்துப் போனேன்.

“பாருங்க உங்களால பதில் சொல்ல முடியலை…” அவளது குற்றச்சாட்டுகள் சரியென்றே பெருமிதம் அவளிடம்.

நொந்து நூடுல்ஸ் ஆன நான்… இனிமேல் நல்ல ட்யூஷன் மாஸ்டராக சமத்தாக இருப்பேன் என்ற வாக்குறுதியைத் தந்து, ட்யூஷன் பீஸ் எல்லாம் உன் அம்மாவிடம் கேட்டு விடாதே என்ற கோரிக்கையை அவளிடம் வைத்து விட்டு அழைப்பைத் துண்டித்திருந்தேன்.

என் தற்போதைய நிலைமையை நான் சொல்லவும் வேண்டுமா? கைப்பேசியைக் கடாசி விட்டு குப்புற கவுந்து வெகுநேர போராட்டத்திற்குப் பிறகு உறங்கி விட்டேன்.

இருந்தாலும், எங்களது முதல் கைப்பேசி அழைப்பு இத்தனை சோதனையாக இருந்திருக்கக் கூடாது. ஆனால், ஒன்றை உறுதிப் படுத்திக் கொண்டேன். அவள் வாயாடியே தான்! இனி அதை மற்றவர்கள் சொல்லித்தான் நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை.

அந்த கைப்பேசி அழைப்பு  என்னை வெகுவாக பாதித்திருக்க, மறுநாள் வந்தவளை, துளி கூட சீண்டவில்லை நான். அதோடு அவள் வந்ததும் ஒரு டெய்ரி மில்க் சாக்லெட்டை எடுத்து நீட்ட,

 

என்னவோ அதிசயத்தைப் பார்த்ததை போல வாயைப் பிளந்தவள், பின் கண் சுருக்கி பார்த்துவிட்டு, “எனக்கு ஒன்னும் வேணாம்” என்று மிஞ்சினாள்.

 

இப்பொழுது கொஞ்ச வேண்டுமா! செல்ல அலுப்புடன், “திவிம்மா… வர வர கணக்குல புலி ஆகிட்டே வர… அதுக்கு தான் இந்த கிப்ட்” என்று நான் தேன்குரலில் கூற,

 

“பீஸ் வேணுமாக்கும்” என்று கேட்டு என் பிபியை ஏற்றினாள்.

 

இவள் வேறு அத்தையிடம் பீஸ் அது, இதென்று சொல்லி என் மானத்தை வாங்கி வைக்கப் போகிறாள் எனத் தலையில் அடித்துக் கொண்டது மனம்.

 

அவசரமாக, “நான் புது டியூஷன் மாஸ்டர் திவிம்மா. எனக்கு எப்படி இந்த பிராஸஸ் எல்லாம் தெரியும்? நீ தான் எனக்கு முதல்முறையா எடுத்துச் சொல்லியிருக்க. இனி பாரு என் டியூஷன் எப்படி இருக்க போகுதுன்னு…” என்று அவளை நான் மூளைச்சலவை செய்தது நன்கு பயன் கிடைத்தது.

 

“அப்படியா சொல்லறீங்க? சரி பார்ப்போம்” என அவள் பெருந்தன்மையாக விட்டுக் கொடுக்க, நான் சாக்லெட்டை லஞ்சமாகக் கொடுத்துப் பாடத்தைத் தொடங்கினேன்.

 

சாக்லேட்டிற்கு கூட சக்தி அதிகம் போல… இன்றும் தூங்க மறந்திருந்தாள். சமத்தாகக் கணக்குகளையும் போட அவ்வப்பொழுது அவளை மெச்சி, பாராட்டி வெகுவாக ஊக்குவித்தேன். அவள் சொன்ன கொஞ்சலைச் செய்தாக வேண்டும் இல்லையா?!

 

நானும், திவியும், கணக்குமாகக் கடந்த நாட்களுக்கிடையில், ஒருநாள் பேச்சுவாக்கில், “அதென்ன என்மேல கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கைன்னு அன்னைக்குச் சொன்ன?” என்று நான் கேட்டதற்கு,

 

“தெரியலை என்னவோ நம்பிக்கை குறையுது…” என்றாள் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி.

 

அவளுக்கு விளக்கிச் சொல்லத் தெரியவில்லை. எனக்கு விளக்கங்களும் அவசியப்படவில்லை. இதுவும் ஒருவகை மோனநிலை தான்!

 

“அப்பறம் கரண்ட் இல்லைன்னதும் அப்படி ஓடணுமா?” என்று நான் மேலும் துருவ, பதில் கூற தெரியாமல் தவித்தாள்.

 

நான் அமைதியாக அத்தோடு விட்டுவிட்டேன். அவளிடம் விளக்கமாகப் பேசியும் இப்பொழுது என்ன ஆகப்போகிறது என்ற எண்ணம் எனக்கு. அவளிடம் இருக்கும் மெல்லிய அறியாமையும், குழந்தைத்தனமும் கூட அழகாக இருந்தது. என்னை வெகுவாக ரசிக்க வைத்தது.

 

ஆனால், அதனால் ஏதேனும் தொல்லை நேரும் என்ற கோணத்தில் நான் யோசித்ததே இல்லை. அந்த நாள் வரும் வரை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: