சுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 4’

அந்தி மாலைப் பொழுதில் – 04

 

இந்த திவியை எப்படியேனும் தேர்ச்சி பெறச் செய்து விட வேண்டும் என்னும் எண்ணம் எனக்குள் பேயாட்டம் போடுகிறது. எப்படித்தான் ஒரே பேப்பரை மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாமல் இருக்கிறாளோ இவள்!

 

சங்கடங்களை நான் தான் பட வேண்டும் போல! அந்த ரோஷக்காரிக்கோ இந்த விஷயத்தில் மட்டும் ரோஷம் உறங்கச் சென்று விடுகிறது.

 

சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள்… சமீப காலமாக ஒரு யுக்தியை கடைப்பிடிக்கிறேன். அவள் உறங்காமல் படிப்பதற்கென்று!

 

என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறதா? பெரிதாக எதுவுமில்லை. அவளது ரோஷத்தை வரைமுறையின்றி சீண்டி விட்டு விடுகிறேன். அதன்பிறகு அவளெங்கே உறங்குவது?

 

என்ன இதன் பிரதிபலனாக திவ்யசுந்தரி சமீபகாலமாக என் மீது வரையறுக்க முடியாத கோபத்தில் இருக்கிறாள். தினம் தினம் நான் தான் மானாவாரியாகச் சீண்டுகிறேனே!

 

இன்றும் உள்ளே வந்தவளை என் கைப்பேசி பேச்சு தான் வரவேற்றிருக்கும். எதிர்முனையில் அவளின் தங்கத்தம்பி பார்கவன் தான்!

 

“ஆமாம் ஆமாம் பார்கவா வழக்கம்போல தான் ஆடி அசைஞ்சு வருவா. அவ வர இன்னும் நேரம் ஆகும்…”

 

“ஹாஹா.. படிப்பா அவளுக்கா… மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் அவ எபோவ் ஏவரேஜ் மார்க் எடுத்து பாஸ் ஆகிடறான்னு நீ சொன்னதை என்னால இன்னமும் நம்ப முடியலை தெரியுமா? மேத்ஸ் படிக்கிறேங்கிற பேருல அவ செய்யற அட்டகாசம் இருக்கே…” என பரிகாசமாகச் சொல்லி அடக்க மாட்டாமல் சிரித்தேன் நான்.

 

இத்தனை பேச்சுகளுக்கும் பின்னால் நின்றிருந்தவளின் முகம் கோவைப்பழமாய் சிவந்திருக்கும்.

 

“இன்னுமா மாமா அவ வரலை” என பார்கவன் கேட்டதும்,

 

“அதான் பாரேன் இன்னும் காணோம்” எனச் சொல்லி அச்சுவாரஸ்யமாகத் திரும்பிப் பார்ப்பது போல அவள் கோபமுகத்தைப் பார்த்துவிட்டு, “வந்துட்டா… வந்துட்டா… சரி அவளுக்கு பாடம் எடுக்கிறேன். ச்சே! தூங்க வைக்கிறேன். நேரமாச்சு. டாட்டா” என அவளது கடுப்பை ஏகத்திற்கும் ஏற்றிவிட்டு அழைப்பை துண்டித்தேன்.

 

அவளின் மூச்சுக்காற்றில் அனலடித்தது.

 

அதை கடுகு, சீரகம், வெந்தயம் அளவு கூட கண்டுகொள்ளாமல், அவளுக்குப் பாடம் எடுக்க தொடங்கவும், அவளும் நுனி மூக்கு சிவக்கப் பாடத்தைப் படித்துக் கொண்டாள்.

 

“ரோஷம் தான்!” செல்லம் கொஞ்சியது என் மனம்.

 

அவளை ரசிக்கும்போதா மின்சாரம் தடைப்பட வேண்டும். ச்சு! எனச் சலிப்புடன் நிமிர்ந்தால், “ரூபன்…” என்றாள் மெல்லிய அச்சம் படர்ந்த குரலில்.

 

வேகமாக என் மொபைலில் இருந்த டார்ச் லைட்டை உயிர்ப்பிக்க, இருளில் கொஞ்சம் மிரண்டு தான் அமர்ந்திருந்தாள்.

 

“ஸ்ஸ்ஸ்… சின்ன பப்பாவா நீ…” என மெலிதாக சிரித்தபடி அவளின் ஆறுதலுக்காக அவளருகே அமர, முகத்தை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள். கேலி செய்து விட்டதற்கு கோபமாம்!

 

அவளின் அருகாமை என்னை ஏடாகூடமாகச் சிந்திக்க வைக்கிறது. முயன்று கட்டுப்படுத்திக் கொண்டு, “மொபைல் பிடிச்சுக்க. நான் கேண்டில் ஏத்தி வைக்கிறேன்” என்றேன் நான்.

 

விழிகளை அச்சத்தில் மிரண்டு விழித்தபடி என்னருகே மீண்டும் நெருங்கி அமர்ந்து கொண்டாள். சுற்றிலும் பார்வையை வேறு ஓட்ட, எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

 

“என்ன?” என்றேன் நான் புரியாமல்.

 

“ஸ்ஸ்ஸ் இங்கேயே இருங்க. பாருங்க ஏதோ சத்தம் கேட்குது” என்றாள் பயந்தபடியே.

 

இரவு பூச்சிகளின் ரீங்காரம். இதில் அச்சப்பட என்ன இருக்கிறது? மெலிதாக சிரித்து, “அந்த சத்தம் கரண்ட் இருக்கும்போதும் கேட்கும் திவி” என அவளின் முன்னுச்சி முடியைக் கலைத்து விட்டேன்.

 

சற்றே கூச்சப்பட்டவள் அப்பொழுதும் என்னை நகர விடவில்லை. “கூடவே இருங்க. இல்லாட்டி கீழே கூட்டிட்டு போங்க. நான் அத்தை கூட இருந்துக்கறேன்” என்றாள் பாவமாக.

 

“என் அம்மா கிட்ட உன்னை கூட்டிட்டு போறதா? உன் பயத்துக்கு உன்னைத் தூக்கிட்டு தான் போகணும். அதுவும் இந்த இருட்டுல…” என நான் சொல்லிச் சிரிக்கவும், அவள் என் புஜங்களை வேக வேகமாக அடித்தாள்.

 

வலிக்கவா செய்யும் எனக்கு?

 

“ஸ்ஸ்ஸ் என்னை சீண்டறது உனக்குத் தான் சேதாரம்” என அவளை நான் எச்சரிக்க, நொடியில் புரிந்து கொண்டவள் சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள்.

 

இந்த காதல் எல்லாம் வாய் மொழியாகப் பகிரப்பட வேண்டுமா என்ன? இந்நேரம் என் மனநிலை அவளுக்கு புரிகிறதே! இது போதாதா?

 

மெலிதான பெருமூச்சு என்னிடம். முறையாகச் சொல்ல இன்னும் காலம் கனியட்டும் என்றது மனம்.

 

“மொபைல் வெச்சுக்கோ…” மீண்டும் அவளிடம் நீட்டினேன்.

 

நான் கூறியதில் படபடப்பு போலும். பயம் மறந்து படபடப்பு கூடிய நிலையில் என்னிடம் அவசரமாகப் பெற்றுக் கொண்டாள். இந்நேரம் அந்த சின்ன மண்டைக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்குமாம்?

 

சுவாரஸ்யமாக அவளை ஓர விழியால் பார்த்தபடியே மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தேன்.

 

மீண்டும் சாவகாசமாக அவளருகேயே வந்து அமர்ந்து கொண்டேன். என் மனம் என்னை வெகுவாக சோதித்துக் கொண்டிருந்தது. தனித்து அமர நான் நினைத்தாலும், இந்த இருளும் மெழுகுவர்த்தியின் ஒளியும் என்னை எதுவோ செய்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

 

அவள் என் மொபைலை தான் ஆராய்ந்து கொண்டிருந்தாள். உண்மையில் அவளது படபடப்பை மறைக்கவும், என் அருகாமையை அனுபவிக்க சிரமப்பட்டபடியும் தான் அந்த வேலை.

 

அது புரிந்தாலும், ‘அடிப்பாவி டார்ச் பிடிக்க கொடுத்தா மொபைலை நோண்டறாளே’ என ஜெர்க் ஆனது என் மனம்.

 

‘என்ன பார்க்கிறாள் இவள்?’ கீழ்க்கண்ணால் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்.

 

போட்டோ கேலரியைத் தான் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். என்னவெல்லாம் வரப்போகிறதோ போட்டோ எடுக்கும்போது இயல்பாக இருந்த விஷயம் இப்பொழுது மெலிதாக படபடப்பை தந்தது.

 

சில புகைப்படங்களில் அலுவலக தோழிகளுடனும் செல்பி எடுத்து வைத்திருந்தேன். இயல்பாகத் தான் அவற்றையெல்லாம் கடக்கிறாளா? இந்த பொறாமையுணர்வு துளி கூட அவள் முகத்தில் வரக் காணோமே! அவளது முகமாற்றங்களையே துல்லியமாக ஆராய்ந்து கொண்டிருந்தேன் நான்.

 

இப்பொழுது புதிதாக ஒரு அச்சம் என்னுள்! ஏன் இப்படி வெகு இயல்பாக அனைத்து புகைப்படங்களையும் கடந்து விடுகிறாள்? அவளுக்கு என் மீது தனிப்பட்ட உணர்வு எதுவுமில்லையா என்று…

 

என் மனம் மராத்தான் ஓடிக் களைத்தது போல அதிவேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.

 

நட்பு வட்டத்திற்குப் பிறந்தநாள் கேக் ஊட்டுவது போன்ற புகைப்படத்தை பார்க்கும் போதும் வெகு இயல்பாகத்தான் கடந்து வந்தாள். அந்த புகைப்படங்களிலும் பெண்களுடன் நான் சற்று நெருக்கமாகத்தான் இருக்கிறேன். அவர்களுக்கு ஊட்டி விடுகிறேன். அவர்கள் எனக்கும் ஊட்டி விடுகின்றனர். அனைத்து வகையான புகைப்படங்களையும் இவளால் எப்படி இத்தனை இயல்பாகக் கடக்க முடிகிறது. ஆச்சரியமும், அச்சமும் சரிபாதியாய் என்னுள் ஆக்கிரமித்தது.

 

அவளாக எதுவுமே கேட்கப் போவதில்லை என்று புரிந்து, “ஹ்ம்ம் யாருன்னு சொல்லணுமா?” என்றேன் நான். என் குரல் ஏன் இப்படி நடுங்குகிறது?

 

அவளும் கவனித்து விட்டாளோ, கண்சுருக்கி என்னை நிமிர்ந்து பார்த்தாள். தொண்டைக்குழியில் எதுவோ ஏறி இறங்கியது எனக்கு.

 

“நிறைய பேர் இருக்காங்க. எப்படியும் எனக்கு ஞாபகம் இருக்காது” என மெலிதாக சிரித்தபடி சொன்னவள், “நான் பார்க்கவா வேண்டாமா?” என்றாள் தயக்கமாக.

 

எனது அச்சமும், பதற்றமும் அவளது உரிமையுணர்வு காணோமே என்பதால் விளைந்திருக்கிறது என அவள் அறிய வாய்ப்பில்லையே!

 

“பாரு! பாரு!” என்றேன் அவசரமாக!

 

அவள் என்னிடம் நிறைய வித்தியாசத்தை உணர்ந்திருக்க வேண்டும். “என்னாச்சு?” என்றாள் மென்குரலில். அவள் பிழை என்னவென்று அவளுக்கே தெரியாத தவிப்பு அவளிடம்.

 

உண்மையில் அவளிடம் பிழை எதுவுமில்லையே! இது முழுக்க முழுக்க என் எண்ணப்போக்கு மட்டும் தானே!

 

“அது… அந்த பொண்ணுங்க எல்லாம் என் பிரண்ட்ஸ்” என்றேன் நான். ஒருவேளை மனதில் குழப்பிக் கொண்டு வெளிக்காட்டாமல் இருக்கிறாளோ என்ற எண்ணம் எனக்கு.

 

முகம் அவளையே ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்க, அழகாக வரிசைப்பற்கள் பளீரிட புன்னகைத்தாள்.

 

அசரடிக்கும் புன்னகையை மாற்றாமல், “என்னை பட்டிக்காடுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?” என்றாள்.

 

என்ன பதில் சொல்ல எனப் புரியாமல் நான் விழிக்க, “நான் அப்படியெல்லாம் தப்பா புரிஞ்சுக்க மாட்டேன். அதோட உங்க மேல எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை இருக்கு” எனச் சொல்லிச் சிரித்தாள்.

 

இல்லை சிரிப்பால் என்னைச் சிதறடித்தாள்.

அதென்ன கொஞ்சமே கொஞ்சமாம்? புரியவில்லை எனக்கு. இருந்தும் அவள் பதிலில் உள்ளுக்குள் சாரல் மழை! அதில் இதமாக நனைந்து கொண்டிருந்தேன் நான். அவள் மீது நான் செலுத்திய பார்வையிலும் ஓராயிரம் மாறுதல்கள்!

 

என் பார்வையின் வித்தியாசத்தை உணர்ந்திருக்க வேண்டும் அவள். அவசரமாக எழுந்து கொண்டு, “நான் அத்தையோட இருக்கேன்” எனச் சொல்லி நகர்ந்திருந்தாள் இருளையும் பொருட்படுத்தாமல்.

 

அவளது கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை என்றதன் அர்த்தம் அவளது ஓட்டத்தின் வேகத்திலேயே புரிய என் இதழ்கள் மந்தகாசமாகப் புன்னகைத்தது.

 

திவ்யசுந்தரி சென்ற வேகத்தில் திரும்பி வந்தும் விட்டாள். மெழுகுவர்த்தியின் வெளிச்சம் சிறிது தூரம் தான் பரவியிருக்கிறது. அச்சம் அவளை மேற்கொண்டு செல்ல விடவில்லை.

வாய்விட்டுச் சிரித்தேன் நான். என்னை முறைத்தபடியே பொத்தென்று பழைய இடத்திலேயே அமர்ந்து கொண்டாள்.

என் சிரிப்பு இன்னமும் தொடரவும், “என்ன, என்ன சிரிப்பு?” எனக் கோபமாகக் கேட்டாள்.

காரணம் சொல்லிவிடுவேனா நான்? அவள் அதட்டலுக்கும் சேர்த்துச் சிரித்து வைத்தேன் நான்!

“ம்ப்ச்… சிரிச்சா பாருங்க” என விரல் நீட்டி, கண்ணை உருட்டி மீண்டும் மிரட்டினாள்.

“என்ன செய்வியாம்?” என அசால்ட்டாக கேட்டேன் நான்.

திருதிருவென விழித்தவள், “ஹ்ம்ம் உங்க போனை தூக்கிட்டு போயிடுவேன்…” என்று அதட்டினாள்.

“உஃப்… இவ்வளவு தானா? அதுக்கெல்லாம் அசருவேனா நான்” என்றேன் மீண்டும்.

“ஹ்ம்ம் உங்க மேனேஜருக்கு போன் பண்ணி நீங்க ஒரு வாரம் லீவுன்னு சொல்லிடுவேனாக்கும்…” என்று மீண்டும் மிரட்டினாள்.

“நாளைக்கே ஆபிஸ் போயி நிப்பேன். ஒரு லூசுகிட்ட போன் மாட்டிக்குச்சு சொல்லுவேன்” என்றேன் நான் எதற்கும் அசராமல்.

“என்னைப் பார்த்தா உங்களுக்கு லூசு மாதிரி தெரியுதா?” எனச் சண்டைக்கு நின்றவளிடம், “ச்சே! ச்சே! பார்த்தா எல்லாம் தெரியாது. யாருக்கும் தெரியாது” எனச் சொல்லி வெகுவாக சீண்டி விட்டேன்.

கோபம் எல்லையைக் கடந்த நிலையில், அவள் படிக்கக் கொண்டு வந்த நோட்டை எடுத்து என்னை மொத்தினாள்.

“இங்கே நான் உனக்கு டீச்சரா? இல்லை நீ எனக்கு டீச்சரா? என்னையே அடிக்கிற…” என சிரித்தபடியே கேட்டுக்கொண்டு அவளது தாக்குதல்களைத் தடுக்க, அவள் நிறுத்துவதாக இல்லை.

“இப்பவும் சொல்லறேன் என்னை சீண்டினா சேதாரம் உனக்குத் தான்” என நான் மீண்டும் சொல்ல, இந்தமுறை அவள் அசரக் காணோம்.

“இதை சொல்லியே என்னை லூசுன்னு சொல்லறளவு வந்துட்டீங்க…” என மீண்டும் மொத்தினாள்.

அந்த நேரம் தடைப்பட்ட மின்சாரம் வந்துவிட, அவளது ஆவேசமான தோற்றத்தைப் பார்த்து, “பத்ரகாளி” என்று சொன்னேன் நான்.

தலையில் நங்கென்று கொட்டு வைத்து விட்டு, கோபமாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

“ஊரு உலகத்துல புதுசு புதுசா கொஞ்சுவாங்க கேள்வி பட்டிருக்கேன். எனக்கு வாய்ச்சது புதுசு புதுசா என்னை திட்டுது” என அவள் முணுமுணுத்தது, என் செவிகளில் துல்லியமாக விழுந்து வைக்க, அதிர்ச்சியில், ஆனந்தத்தில் இதழை மெலிதாக பிளந்து பிரமித்து அமர்ந்திருந்தேன் நான்!

வாய்விட்டு சொல்லியபிறகே அவளுக்கும் அது உரைத்திருக்க வேண்டும்! என் முகம் பார்க்கும் திராணி கூட இல்லாமல், அவசரமாக அவள் உடைமைகளை அள்ளிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தாள். செல்லும் அவளையே சுவாரஸ்யமாக ரசித்துக் கொண்டிருந்தது என் விழிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: