சுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 3’

அந்தி மாலைப் பொழுதில் – 03

 

“அதிரூபா… வா கொஞ்சம் வெளியில் போக வேண்டும்” அம்மா விமலா அவசரப்படுத்தினார்.

 

என்ன? அவள் வரும் வேளையில் வெளியில் செல்வதா? அதெப்படி என்னால் முடியும்? யோசனையோடே அன்னையைத் தேடிச் சென்றால்,

 

“புவனா வீட்டில் என்னை விட்டுடு ரூபா. அப்பாகிட்ட சொல்லிட்டேன். வெளியில சாப்பிட்டு வந்திடுவாங்க. புவனா அவசரமா சொந்த ஊருக்குப் போக வேண்டிய வேலை இருக்காமா. பிள்ளைங்களுக்கு துணைக்கு வரச் சொல்லி இருக்கா” என்று அம்மா விளக்கம் தந்தாள்.

 

“அது சரிம்மா இப்ப திவி படிக்க வர நேரம் ஆச்சே” யோசனையோடே கேட்ட என்னை, இந்த அன்னை ஏன் இப்படி மார்க்கமாகப் பார்த்து வைக்கிறாள்.

 

‘அட! திவி என்று சொன்னதற்காகவா? தெரியாமல் வந்துவிட்டது என்று சொல்லி எதையாவது சமாளிப்போம்’ என நான் தயங்கித் தயங்கி வாய் திறக்க நினைக்கையிலேயே,

 

“புவனா திவியோட அம்மா” என்று அழுத்தமான குரலில் சொன்னார் என் அன்னை வித்யா.

 

எப்படி இருந்திருக்கும் எனக்கு? லிட்டர் லிட்டராக அசடு வழியத் தொடங்கிவிட்டது. அமைதியாகத் தலையைத் தாழ்த்திக் கொண்டேன் நான்.

 

அம்மா முன்னே நடக்க, அவசரமாக வண்டி சாவியை எடுத்துக் கொண்டு ஓடினேன் நான். வாகனம் தன் போல அவள் வீட்டை நெருங்கியது. அருகில் தானே வீடு. ஆக, எனக்கு வீடு நன்கு தெரியும். வந்தது தான் இல்லை. புவனா அத்தையையும் நன்கு பரிச்சயம் தான்! பிள்ளைகள் தான் சமீபத்திய அறிமுகம். அப்படியிருக்கையில் பிள்ளையை ஞாபகம் வைத்து அன்னையை மறந்தால், அம்மா வேறு எப்படிப் பார்த்து வைப்பாள்?

 

அம்மா இறங்கி வீட்டினுள் செல்லவும், “வாங்க அத்தை. அம்மா நேரம் ஆயிடும்ன்னு இப்பதான் கிளம்பி போனாங்க” என்று சுந்தரி வரவேற்றது என் செவியைத் தீண்டியது.

 

வாகனத்தை நிறுத்திவிட்டு நானும் செல்ல, பின்னால் கேட்ட அரவத்தில் திரும்பியவள், நிச்சயம் என்னை எதிர்பார்க்கவில்லை போலும்! கண்களை எத்தனை அகல விரிக்கிறாள்.

 

அதிர்ந்த முகம் கூட அழகு தான்! அதிலும் அந்த விழிகள்… வழக்கம்போல பேரழகு!

 

ஒரு அடர் பச்சை நிற ஸ்கர்ட்டும், சந்தன வண்ணத்தில் டீஷர்ட்டும் போட்டிருந்தாள். வீட்டிலிருக்கும் போது போடும் இலகு உடை போலும். என் முன்னே அந்த உடையோடு நிற்பது சங்கோஜத்தை தந்திருக்க வேண்டும். அவஸ்தையோடு சமையலறைக்குள் நுழைந்து விட்டாள். என் அன்னையும் அவளுக்குத் துணையாக சென்றார்.

 

என்னிடம் ஸ்நேகமாகப் புன்னகைத்து அமரச் சொன்னவன், பார்கவன். திவ்யசுந்தரியின் தம்பி. அவள் இன்ஜினீரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்க, இவன் பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்கிறான்.

 

பார்கவன் சற்று ஒதுங்கி நிற்பது புரியவும், “வந்து நீயும் உட்கார்” என அருகில் அழைத்தேன்.

 

வேடிக்கையாக இருந்தது அவனது தயக்கம். ஒருவேளை நான் அவளின் அக்காவிற்குப் படிக்க கற்றுத் தருவதால் இவனும் தயங்குகிறான் போலும்! ஏதோ கண்டிப்பான ஆசிரியரைப் பார்த்தது போல!

 

கணிதம் பற்றியோ, கல்வியைப் பற்றியோ பேச்சே எடுக்காமல், “இன்னைக்கு மேட்ச் இருக்கே! நீ பார்ப்பியா?” என்று தொடங்கினேன்.

 

ஆசையாகக் கண்ணை விரித்தவன், “ம்ப்ச் இல்லை மாமா. அம்மாவுக்குப் பிடிக்காது” என்றான் சுரத்தே இல்லாமல்.

 

அவனது மாமா என்ற அழைப்பிலேயே தொண்டையில் அழகாய் என்னவோ சுழன்றடித்தது. என் அன்னையை அத்தை என்று அழைப்பதால், இலகுவாக என்னையும் மாமா என்றுவிட்டான் போலும்.

 

சுதாரித்து, “ஏனாம்?” என்றேன் நான் புன்னையோடே.

 

“படிப்பு கெட்டு போயிடுமாம். தூக்கம் கெட்டு போயிடுமாம்…” எறும்பு வரிசையாய் ராகம் இழுக்கத் தொடங்கியவனைப் பார்த்து சிநேகமாக முறுவலித்தேன்.

 

“நாளைக்கு லீவு தானே… இன்னைக்கு ஒருநாள் பார்க்கலாம். அத்தை கிட்ட நான் சொல்லிக்கிறேன்” என்று நான் சொன்னதும்,

 

“நிஜமாவா மாமா” என்று ஆசையாகக் கேட்டவனின், முன்னுச்சி முடிகளைக் கலைத்து, புன்னகையைப் பதிலளித்தேன்.

 

கூச்சமாக நெளிந்தவன், என்னிடம் நெருக்கம் தோன்றிய காரணத்தால் ஒரு ரகசியத்தையும் சேர்த்துச் சொன்னான். “இன்னைக்கு கிளாஸ் இல்லைன்னு திவ்யா ரொம்ப சந்தோஷமா இருந்தா. கடைசியில உங்களைப் பார்த்ததும், அவ முகத்தை பார்க்கணுமே…” என வாயை பொத்தி அவன் சிரிக்கையிலேயே காபி தட்டுடன் எதிர்ப்பட்டாள் அவள்.

 

எனக்குத் தருவதற்குள் அவள் விரல்கள் நடுங்கி விட்டது. அதைச் சுவாரஸ்யமாகக் கவனித்தபடி, புன்முறுவல் பூக்கக் காபியை எடுத்துக் கொண்டேன் நான். என் அம்மாவும் உதவுகிறார் போலும்! சூடான பஜ்ஜி தட்டுடன் மீண்டும் வந்து சேர்ந்தாள்.

 

எங்கள் முன்பு வைத்துவிட்டு உள்ளே சென்றவளை அதிசயமாகப் பார்த்துவிட்டு, “என்ன மாமா உங்களுக்குப் பயப்படுவாளா என்ன? சத்தத்தையே காணோம்” என்றான் பார்கவன் வாயை பிளக்க.

 

“அவ அமைதி தானே பார்கவா?” என்றபடியே காபியைப் பருகிய என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டு, “மாமா அவ வாயாடி. அவளை போயி அமைதின்னு சொல்லறீங்க” என்று கூறி ஆர்ப்பாட்டமாகச் சிரித்தான்.

 

உண்மையில் அவள் அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. என் அம்மாவிடமுமே அமைதி தான்! ஆக, அவள் வாயாடி என்பது எனக்கு புதிய செய்தி! இப்பொழுது பார்கவன் இவ்வாறு சொல்லவும், அவள் என்னிடம் வாயடித்தால் எப்படி இருக்கும் என என் கற்பனைகள் சிறகு விரித்தது.

 

அதற்குள் என் அம்மாவும், அவளும் வந்துவிட, “ஏய் வாயாடி ஏன் அமைதியா இருக்க?” என அவளைச் சீண்டினான் பார்கவன்.

 

அவள் கீழ்க்கண்ணால் முறைக்கவும், “ஓ இன்னைக்கு டியூஷன் இல்லையேன்னு கவலையில் இருக்கியாக்கும். அதுதான் மாமா இங்கேயே வந்துட்டாங்க இல்லை… நம்ம வீட்டிலேயே படி” என்றான் ஆர்ப்பாட்டமாக.

 

அவனுக்கு அவளின் தமக்கையின் பயமும், அமைதியும் ஏக குஷி போலும்! அவனது சிறுப்பிள்ளைத்தனமான ஆர்ப்பாட்டத்தில் எனக்கும் சிரிப்பு வந்தது.

 

அவளை நானும் அமைதியாக அளவிட, தம்பியைத் தீவிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

“ஆமா மாமா இவளுக்குச் சொல்லி தரீங்களே உங்களுக்கு எதுவும் மறந்து போயிடலையே!” அவள் அமைதியாக இருக்கும்போதே முடிந்தளவு காலை வாரி ஆனந்தப் பட்டுக்கொண்டான்.

 

கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து வைத்தேன். என்னையும் முறைத்தவள், “பாருங்க அத்தை” என அன்னையிடம் புகார் அளித்து துணைக்கழைத்தாள்.

 

“ஏன்டா பிள்ளையைக் கேலி பேசறீங்க” அம்மாவின் அதட்டலும் புன்னகையோடே வந்து சேர்ந்தது.

 

“அத்தை உண்மையை சொல்லுங்க. அவ அங்க படிக்கத் தான் வராளா? இல்லை நீங்க தர நொறுக்கு தீனிக்காகவா?” பார்கவன் அவளை விடுவதாக இல்லை.

 

பொறுமையின் எல்லை கடந்த நிலையில், எழுந்து வந்து, “பிசாசு… பிசாசு…” என அவன் தலையில் நறுக்கென்று இரண்டுமுறை கொட்டினாள்.

 

என்னையும் மிதப்பாக ஒரு பார்வை பார்த்து, வாலாட்டினால் உங்களுக்கும் இப்படியே என சொல்லாமல் சொல்ல, என் கண்கள் சிரிப்போடு அவளைப் பார்த்தது.

 

என்னை அவள் கொட்டிய போது நடந்த நிகழ்வுகள் அவள் மனக்கண்ணில் உலா வந்திருக்க வேண்டும். கீழுதட்டைக் கடித்துச் சிவந்த முகத்தை எனக்கு காட்டாமலிருக்க அவசரமாகத் திரும்பிக் கொண்டாள்.

 

என் அதரங்கள் எத்தனை ரசனையாகப் புன்னகைக்கிறது? உண்மையில் இதுபோல ஒரு அழகான புன்னகையை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. என்னை வசியகாரானாய் மாற்றினாள் அவள்!

 

“நான் வீட்டிற்குக் கிளம்பட்டுமா?” என என் அன்னையிடம் கேட்க, அவள் முகத்தில் ஏனோ வாட்டம்.

 

அவளைக் கண்டும் காணாமல் நான் கவனித்துக் கொண்டிருக்க, “மாமா…” என்று பார்கவன் வாடிய குரலில் அழைத்தான்.

 

அவன் புறம் திரும்ப, “கிரிக்கெட்” என வாயசைத்தான்.

 

அட மறந்து விட்டோமே என் நான் நினைப்பதற்குள், “பேசாம சாப்பிட்டே போயிடேன் ரூபா. தனியா தானே இருக்க போற” என்றாள் அன்னை.

 

“ஹ்ம்ம் சரிம்மா” என்றுவிட்டு, “ஏன்மா பேசாம இவங்க ரெண்டு பேரையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாமே” என்று யோசனை தந்தேன்.

 

அம்மா குரலை வெகுவாக தணித்து, “மட்டி! மட்டி! வயசு பையன் நீ இருக்கிற வீட்டுல வயசு பொண்ணை தங்க வைக்க முடியுமா? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க” என என்னைத் திட்டி தீர்த்தார்.

 

மீண்டும் அசடு தான் வழிந்தது எனக்கு.

 

“சரிம்மா பாரக்வனை மட்டும் வீட்டுக்கு கூட்டிட்டு போகவா?” என்று சம்மதம் கேட்டேன்.

 

“அவன் எதுக்கு?”

 

“இல்லைம்மா இன்னைக்கு மேட்ச் இருக்கு”

 

“ஏன்டா படிக்கிற பையனைக் கெடுக்கப் பார்க்கிற?”

 

இந்த அம்மா வேறு நாள் முழுக்க படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கும் ரகம்! “அம்மா சும்மா படிச்சிட்டே இருக்க கூடாதுமா. அப்பப்ப மைண்ட ரிலாக்ஸ் பண்ணிக்கணும்” என்றேன் பொறுமையாக.

 

“அப்படியா சொல்லற? பாவம் திவிக்குட்டியும் தினமும் படிச்சிட்டே இருக்கா. அவளுக்கு பிடிச்சதா டீவியில எதுவும் போட்டுப் பார்க்கச் சொல்லலாம்” எனச் சொல்ல, என் நிலையை யோசித்துக் கொள்ளுங்கள். இவள் படித்த படிப்பிற்கு இவள் என்னவென்று ரிலாக்ஸ் செய்வது? பாடல் என்றால் கூட இரண்டு வரிகள் போதுமே… மனம் சிரிக்க அவளை குறுகுறுவென பார்த்து வைத்தேன்.

 

அவளோ என் அன்னைக்கு மேலே இருந்தாள். “இல்லை அத்தை பரவாயில்லை. இந்த வயசுல படிக்காம எப்ப படிக்க போறோம்?” என பெருந்தன்மையாகச் சொல்லிப் புன்னகைத்து எனக்கு இதயவலியை ஏற்படுத்தினாள்.

 

இரண்டாம் செமஸ்டரில் அரியர் வைத்த கணித பேப்பரை ஐந்தாம் செமஸ்டர் வரை கிளியர் செய்யாமல் இருக்கும் அதிமேதாவி சொன்ன பொன் வாசகங்கள், இதயவலியை எனக்கு மட்டும் பரிசளிக்காமல் பார்கவனுக்கும் சேர்த்தே பரிசளித்தது.

 

“என் தங்கம். இத்தனை அறிவா இருக்கிற. இவ்வளவு பொறுப்பா படிக்கிற. உனக்கு எவன் அரியர் போட்டது?” யாரென்றே தெரியாத அந்த ஆசிரியர்களை என் அன்னை வசைபாட எனக்கும், பார்கவனுக்கும் சிரிப்பு பொங்கியது.

 

“என்ன சிரிப்பு? குழந்தையைப் பார்த்து கத்துக்கங்க” என்று என் அம்மா கண்டிக்க,

 

“அதுதான் டீவி பார்க்கலையே… அப்ப வர சொல்லுங்க நான் மேத்ஸ் சொல்லி தந்திடறேன். பார்கவனும் கொஞ்ச நேரம் படிக்கட்டும். அப்பறம் டின்னர் சாப்பிட்டதும், அவனை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். இப்ப படிச்சிட்டு அப்பறம் டீவி பார்த்தா உங்களுக்கு ஓகே தானே?” என என் அன்னையை மடக்கிக் கேட்க, அவர் சம்மதம் தந்தார்.

 

திவ்யா தான் பரிதாபகரமாக விழித்துக் கொண்டிருந்தாள். அவள் வெட்டிய குழியில் அவளே விழுவாள் என்று எதிர்பார்த்தாளா என்ன?

 

பார்கவன் என் காதோரம் கிசுகிசுப்பாக, “சூப்பர் மாமா” என்றான். என் கண்கள் திவ்யசுந்தரியின் தவிப்பை ரசித்தபடி இருக்க, “ஸ்ஸ்ஸ்…” என்றேன் அவனிடம் சிரித்த முகமாகவே!

 

“சரி அத்தை நான் போய் படிக்கிறேன். சாப்பிட ரெடி ஆனதும் கூப்பிடுங்க” என்று என் அன்னையிடம் சொன்னவன், அவன் அறைக்குள் மறைந்தான்.

 

“நீயும் படி திவி. நான் சமைச்சிடறேன்” அவள் நிலைமை புரியாமல் என் அம்மா சொல்ல, தலையை உருட்டுவதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. எனக்கோ சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது.

 

அவள் புத்தகங்கள் எடுக்க நகர, என் அன்னையோ, “உன் ரூமுக்கு போயிடுங்களேன். நான் நாடகம் பார்ப்பேன்” என்று சொல்ல அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

 

“எ… என்ன அத்தை?” என்றாள் திணறலாக. நிறையப் படங்களைப் பார்ப்பாள் போலும் அவளது இந்த பாவனை எனக்கு இன்னுமின்னும் புன்னகையைப் பரிசளித்தது.

 

‘என்ன செய்து விடுவேனாம் நான்? இவள் வீட்டில்… இவள் அறையில்… அதுவும் வீட்டில் ஆட்கள் இருக்க…’ அவள் தவிப்பும், அச்சமும் எனக்கு வேடிக்கையாக இருந்தது.

 

என்னை அழைக்கக் கூட தோன்றாமல் முன்னே நடந்தவளைப் பின்தொடர்ந்த நான்… அறைக்கதவை அகலத் திறந்து வைத்தேன்.

 

அவளது ஆச்சரிய பார்வையைக் கண்டு கொள்ளாமல், நேற்று சொல்லித்தந்த கணக்குகளின் மாதிரியை அவளிடம் தந்து, போடும்படி சொல்லிவிட்டு வெளியில் வந்து உட்கார்ந்து கொண்டேன்.

 

“சொல்லி கொடுக்கலையா ரூபா?”

 

“நேத்து சொல்லித் தந்ததை பிராக்டிஸ் பண்ண சொல்லியிருக்கேன் மா. அப்பதான் மனசுல பதியும்” என்று நான் சொல்லவும், “கிட்ட இருந்து சொல்லி கொடுடா” என்றாள் அன்னை.

 

“அம்மா அவளா போட்டா தான் புரியும் மா” பரிதாபமாக நான் சொல்ல, என் அம்மா அடுத்த கேட்ட கேள்வி உண்மையிலேயே என்னைப் பரிதாப நிலைக்கு தள்ளிவிடும் போலானது.

 

“ஏன்டா திவிக்குட்டி மேல யாருக்கு என்ன பொறாமையா இருக்கும்? ஏன் இப்படி பெயில் பண்ணி பெயில் பண்ணி விடறாங்க” என ஆற்றாமையோடு கேட்க,

அதிர்ந்து போன நான், “அம்மா அப்படியெல்லாம் யாரும் பெயில் பண்ணி விட மாட்டாங்க மா…” என நான் அழாத குறையாகப் பதில் சொன்ன போதும், என் அம்மாவின் அப்பாவித்தனம் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.

 

என் அம்மாவின் மனப்போக்கிற்கு ஏற்ப, “பொண்ணு இம்புட்டு நல்லா படிக்குதேன்னு பொறாமையில தான் பெயில் பண்ணி விட்டிருப்பாங்க போல மா…” என நான் ஒத்து ஊதவும், “நினைச்சேன்” என்றாள் என் அன்னை சற்று கோபம் பொங்க.

அத்தோடு நில்லாமல் இரவு உணவு முடிந்ததும், “எல்லார் கண்ணும் உன் மேல தான். நீ கிழக்கு பார்த்து உட்காரும்மா. உனக்குத் திருஷ்டி சுத்தி போடறேன்” என அவளுக்குத் திருஷ்டி சுத்தி முச்சந்தியில் வீசி வர, நானும் பார்கவனும் பேயறைந்த நிலையை எட்டியிருந்தோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: