சுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 2’

அந்தி மாலைப் பொழுதில் – 02

 

வானம் இன்று விடாது பொழியும் என நினைக்கிறேன். காரணம் கேட்கிறீர்களா? வேறென்ன… அதிமேதாவி திவ்யசுந்தரி இன்று படிப்பதற்கு நேரமாகவே வந்துவிட்டாள்!

 

அவள் வழக்கமாகத் தாமதித்து வருவதால், அவளைப் பொறுப்பற்றவள் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம்.

 

அவளுக்கு கணிதம் என்றால் எட்டிக்காய் கசப்பு! அதன் விளைவு தான் இந்த கால தாமதமும்! இன்று நேரமாக வந்ததற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கும். என்னவென்று பார்த்து விடுவோம். அவளாவது கணிதம் படிப்பதற்கு நேரத்தில் வருவதாவது.

 

என் எண்ணம் சரிதான். வாசலில் மிதிவண்டி நின்ற சத்தம் மட்டும்தான் கேட்டது. மற்றபடி இன்னமும் அவள் படிப்பதற்காக என்னைத்தேடி வரவில்லை.

 

நோட்டம் விடலாமா? வேண்டாமா? சதிராடிய மனது நோட்டம் விடலாம் என்ற முடிவை இறுதியாக எடுத்தது.

 

பூனை நடை என்பதன் அர்த்தம் உணர்ந்து கொண்டேன் நான்! என்னவொரு பவ்வியம் என் நடையில்!!! ஏதோ பாலை களவாடிப் பருகும் பூனையைப் போல!

 

அச்சோ! மடத்தனங்களோடு சேர்ந்து திருட்டுனமும் வந்துவிட்டதா?

 

சரி சுய ஆராய்ச்சிகளா இப்பொழுது முக்கியம்? அந்த ரோஷக்காரி என்ன செய்கிறாள் என்பது தானே முக்கியம்?

 

சமையலறையில் தான் அவள் சத்தம் கேட்கிறது. தண்ணீர் குடிக்கச் செல்வது போல வேவு பார்ப்போம்!

 

உள்ளே நுழையும்போதே, “என்னடா?” என்றாள் அம்மா.

 

என்னை இந்த அம்மா என்னதான் நினைத்திருக்கிறார்? எப்பொழுதும் இவள் முன்னரே அதட்டுவது!

 

தண்ணி குடிக்க வந்தேன் என்ற போர்வையை மறந்து, “என்ன செய்யறீங்க?” என்றேன் சற்றே அதிகாரத் தொனியில்.

 

என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி இடையில் கைவைத்து நின்றாள் அம்மா!

 

இப்பொழுது என்ன தவறாகக் கேட்டுவிட்டேன் நான்? இப்படி ஒரு பதில் பார்வை எதற்காம்? சத்தமின்றி இடத்தை காலி செய்து விட்டேன். மூக்கு முக்கியமல்லவா!

 

உள்ளே அம்மா சொல்லச் சொல்ல அவள் எதையோ அடுப்பில் கிளறிக் கொண்டிருந்தாள்! சமையல் சொல்லித் தருகிறார்களா? ஆனால் இவர்கள் ஏன் சொல்லித்தர வேண்டும்?

 

குழப்பமாக அமர்ந்திருந்தவனின் முன்னே அம்மா தட்டை நீட்டினார். சூடான கருப்பு உளுந்து களி. இந்த பதார்த்தம் அல்வா போன்ற சுவையில் தான் இருக்கும்! ஆனால், இனிப்பு அதிகம் பிடிக்காத எனக்கெதற்கு? சலிப்போடு நிமிர்ந்து பார்த்தால், அம்மா வேண்டா வெறுப்பாக நின்றிருந்தாள்.

 

அம்மாவின் பின்புறம் சற்று தள்ளி என்னையே கவனித்துக் கொண்டிருந்தாள் சுந்தரி. ‘ஓ நான் சோதனை எலியாக்கும்!’ நொடித்தாலும் மறுக்க மனம் வரவில்லை.

 

நான் வாங்கிக் கொண்டதும் அம்மா ஏன் என்னை இத்தனை ஆச்சரியமாகப் பார்க்கிறாள்?

 

யோசனையை அந்தரத்தில் விட்டுவிட்டு, உழுந்து களியைக் கபளீகரம் செய்தேன். என் அம்மா செய்வது போலப் பக்குவம் வராவிட்டாலும், இதில் கூடுதல் சுவை இருப்பது போல எனக்குத் தோன்றியது.

 

இருந்தாலும் இந்த காதல் இத்தனை அசட்டுத்தனங்களைப் பரிசளிக்கக் கூடாது.

 

ஒரு சில வாய் உண்ட பின்பே உரைத்தது. நான் இனிப்பு அதிகம் உண்ண மாட்டேனே என்று. அம்மாவின் ஆச்சரியப் பார்வையின் அர்த்தமும் விளங்கிற்று! வெகு தாமதமாய்!

 

அச்சச்சோ! அம்மாவை எப்படி ஏறிட்டுப் பார்ப்பது? அம்மா என்னை என்னவென்று நினைத்திருப்பாள்? கடைசியாய் உள்ளே போட்ட ஒரு வாய் தொண்டையைத் தாண்டி இறங்க மறுத்தது.

 

பரிதாபமாக அம்மாவை நிமிர்ந்து பார்க்க, அம்மா ஏதோ எட்டாம் அதிசயம் போல நான் உண்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். நல்லவேளையாக அம்மாவிற்கு எந்த சந்தேக வித்துவும் முளைக்கவில்லை.

 

இத்தனை நேரமும் ரோஷக்காரியும் என்னையே நோட்டம் விட்டுக் கொண்டிருப்பாள் போலும்!

 

நான் உண்டதில் தான் அவள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி! எனக்குமே இப்பொழுது முழுவதும் உண்ண வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், அம்மாவிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் சந்தேகம் எழுமே!

 

அமைதியாகப் பாதி பதார்த்தம் இருந்த தட்டை அம்மாவிடமே நீட்டி, “நல்லா இருக்கு மா… எனக்கு போதும். இந்த சமையல் ட்ரைன்னிங் மாதிரியே, கொஞ்சம் மேத்ஸும் ட்ரைன்னிங் தந்திடுங்களேன்” என்றேன் நான்.

 

இப்பொழுது என்ன சொல்லி விட்டேனாம்? இருவரும் ஒவ்வொரு தினுசாக பார்க்கிறார்கள்?

 

அம்மா முறைப்பதை நிறுத்தாமல் இருக்கவும், “என்னம்மா?” என்றேன் அப்பாவியாக!

 

“அதிசயமா சாப்பிடறயேன்னு நினைச்சா… உனக்குக் கிண்டல்? ஏதோ திவிக்குட்டிக்கு மேத்ஸ் கஷ்டமா இருக்கேன்னு உன்கிட்ட சொல்லித் தர சொன்னா உனக்கு அத்தனை எகத்தாளம்?”

 

இந்தம்மா விட்டால் ரயில் பெட்டி போல வசவுகளை வரிசைகட்டி விடுவார்கள் போலவே.

 

எச்சிலை விழுங்கியபடி, “சும்மா மா விளையாட்டுக்கு…” எனச் சொல்லி இளித்து வைத்தேன். நிச்சயம் இதைவிடக் கேவலமாக யாராலும் சிரித்திருக்க முடியாது.

 

அந்த சிரிப்பில் பயந்தோ… இல்லை பாவம் பார்த்தோ என் அம்மா என்னை விட்டு விட்டார்கள்.

 

ஆனால், அடுத்து அவர் செய்தது?!?

 

“அளவா போதும்ன்னா முன்னாடியே சொல்ல மாட்டியா?” என என்னிடம் கடிந்தவர்,

 

அவளிடம் திரும்பி, “திவிம்மா நீ இதை சாப்பிட்டுக்கிறியா? நான் இப்ப தானே நீ தந்ததை சாப்பிட்டேன்” என வெகு சாதாரணமாகச் சொல்லி அவள் கையில் நான் மிச்சம் வைத்த தட்டை திணிக்கவும்,

 

எனக்கு வாயடைத்த நிலை! அவளது நிலையையோ கணிக்கவே முடியவில்லை. ஆனால், என் அம்மா வெகு சாதாரணமாகத் தான் இருந்தார். ஏன் நான் உண்ட ஸ்பூனை கூட மாற்றித் தர தோணவில்லை அவருக்கு!

 

இது உண்மையிலேயே அத்தனை இலகுவான விஷயமா என்ன? தொண்டைக்குழியில் எதுவோ உருளும் உணர்வைச் சமாளிக்கும் வகை தெரியாமல் வாசலில் இருந்த சிறு பால்கனிக்கு அதிவேகமாக நகர்ந்து விட்டேன்.

 

இதென்ன என் அன்னையைப் போல திவ்யசுந்தரிக்கும் அந்த பதார்த்தத்தை உண்பதில், எந்தவொரு தயக்கமோ, தடுமாற்றமோ இல்லை!

 

இது உண்மையிலேயே அத்தனை இலகுவான விஷயமா என்ன? நான் சரியாகத் தான் இருக்கிறேனா?

 

எதற்கும் கடந்த காலத்தில் இதையொட்டிய நினைவுகள் எதுவும் இருக்கிறதாவென்று கொசுவர்த்தி சுருளை சுழல விட்டுப் பார்ப்போம்!

 

ஹ்ம்ம்… தென்படுகிறது… கல்லூரியில், பள்ளியில் எல்லாம் ஆண், பெண் பேதமும் இருந்ததில்லை. எச்சில் பண்டம் என்று ஒதுக்கி வைத்த நிகழ்வுகளும் இருந்ததில்லை.

 

இவளும் கல்லூரி மாணவி தான்! அதனால் வந்த இலகுத்தன்மையாக இருக்குமோ?

 

ஆனால், எனக்கு மட்டும் மனம் முரண்டிக் கொண்டே இருக்கிறதே! ஏனாம்?

 

என் எச்சில் அவளுள் ஐக்கியமானதை எண்ணினாளே உள்ளுக்குள் காதல் ஜுரம்.

 

ம்ப்ச்… ஏன் அதை எண்ண வேண்டும்? சாதாரமாணகவே அவள் முன்னே நான் அசாதாரணமாகி விடுகிறேன்!

 

இனி இதுபோல சென்சார் போட வேண்டிய எண்ணங்கள் எல்லாம், எனக்குள் எழுவது மிக மிக ஆபத்தானவை தானே?!?

 

வெகு ஜாக்கிரதை!!! என எச்சரித்தது மனம்! உடனடியாக ஒப்புக் கொடுத்தேன் நான்.

 

இதென்ன இன்னுமா உண்டு கொண்டிருக்கிறாள்? யார் கண்டார்கள் இது இரண்டாம் சுற்றோ இல்லை மூன்றாம் சுற்றோ?

 

இப்படி வயிறு முட்ட நிறைத்து விட்டு வந்து, கணிதம் சொல்லிக் கொடு என்றால், நானும் தான் பாவம் இல்லையா?

 

இன்றைக்கு மட்டும் கண் அசரட்டும்… அவள் தலையில் நங்கென்று கொட்டு வைக்கிறேன். என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள்!

 

முகத்தை இறுக்கமாக வைத்தபடி வழக்கமாகப் படிக்கும் இடத்தில் அவளுக்கென்று காத்திருந்தால், என்னைவிட இறுக்கமான முகத்தோடு வந்து என்னெதிரே அமர்கிறாள்!

 

அச்சோ! என் கோபம்… கோபம்… அடச்சே… அது என்ன? இவளின் கோபம் கண்டதும் எனது கோபம் காற்றோடு காற்றாகக் கலந்து விட்டது.

 

இந்த கோபம், ரோஷம் கூட நூறு சதவீதம் மானம் கெட்டது தான்! காதலின் முன்னால் மண்டியிட்டுத் தோற்றுப்போகும்! இவள் கோப முகம் பார்த்ததும் எங்கு ஒழிந்து கொண்டதோ?

 

ஆமாம்! இப்பொழுது இந்த ரோஷக்காரிக்கு என்ன கோபமாம்? இப்படி அமர்ந்திருக்கிறாள்?

 

ட்ரிக்னாமெண்டோரி திணறத் திணற அவளுக்கு ஊட்டிவிட்டபடியே அவளது முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன் நான்!

 

இவ்விடம், நான் எத்தனை நிலையான தன்மையோடிருக்கிறேன் என்று நீங்கள் கவனிக்க வேண்டும்… முகத்தை ஆராய்ந்தேனே தவிர, இம்மி கூட என் எச்சில் பருகிய அவள் இதழ்களை நான் கவனிக்கவில்லையே!

 

அதிரூபனாகிய நான் அத்தனை நிலையாக (ஸ்டெடியாக) இருக்கிறேனாக்கும்!

 

இதை மறவாமல், என் காதல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறித்து விடுங்கள்! இடையில் மானே! தேனே! என்று இணைத்து விடுங்கள். கவித்துவமாக இருக்கும்.

 

அட! அதெல்லாம் பெண்களுக்கானதோ!?! அப்படியானால், ஆண்களுக்கென்று பிரத்தியேகமாக எதுவுமே இல்லையா? என்னவொரு பெண்ணாதிக்க சமூகம் பாருங்களேன்!!!

 

சரி சரி அவ்வப்பொழுது இப்படி சுய ஆராய்ச்சி சூழலில் மாட்டிக் கொள்கிறேன்! இதைவிடுத்து, ரோஷக்காரியின் கோபத்தைப் பார்ப்போம்!

 

எத்தனை முயன்றும் அவள் கோபம் எதற்கென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!

 

மீண்டும் கொசுவர்த்தி சுழலை சுழல விட்டு சற்று முன்பு நடந்ததைக் கவனித்துப் பார்க்கிறேன். எதாவது குறிப்பு கிடைத்தாலும் கிடைக்கும்!

 

என் அனுமானம் என்னவென்றால், அவள் சமைத்ததை நான் பாதி உண்ணாமல் விட்டபோது அவள் முகம் ஒருமுறை சுருங்கியது. அதுபோக, அம்மாவிடம் அவளுக்குக் கணிதம் சொல்லித்தரும்படி கேலி செய்யும்போது ஒரு தினுசாக பார்த்து வைத்தாள்! ஒருவேளை அதற்காகத்தான் என்மீது கோபமோ?

 

அட! இன்னொரு அதிசயம் பாருங்களேன்! சற்று எல்லையற்ற கோபம் வந்ததன் விளைவாய், இவளுக்கு உறக்கம் அணுகுவதில்லை போலும்!

 

கணிதத்தை அதி தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இந்த ரணகளத்திலும் என் மனம் எல்லையற்ற உவகை கொள்கிறது!

 

எங்கோ திணறிக் கொண்டிருக்கிறாள்! ரோஷக்காரி ஆயிற்றே! வாயைத் திறந்து என்னிடம் கேட்க மனம் வராது. “என்ன ஆச்சு?” என்றேன் நானாகவே!

 

என்னை நிமிர்ந்து பார்க்காமல், நோட்டை என்னிடம் நகர்த்தி வைத்தாள். அடுத்து எப்படித் தொடர வேண்டும் என்று சிறு விளக்கத்தை நான் தரவும்,

 

நன்றியைப் பார்வையால் கூட தெரிவிக்காமல், நோட்டை அவள் புறம் இழுத்து, கணிதத்தை விட்ட இடத்திலிருந்து போடத் தொடங்கிவிட்டாள்.

 

இதற்கு முன்பு நான் இவளைச் சீண்டியதெல்லாம் சின்னளவில் போல… அதனால் தான் நிறைய ரோஷம் வரவில்லை! வந்திருந்தால் தான் உறக்கம் ஓடியிருக்குமே! கொஞ்சம் படிப்பும் மண்டையில் ஏறியிருக்கும்…

 

ஆனால், இன்று வெகுவாக சீண்டி விட்டிருக்கிறேன் போலும்! சமாதானம் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளி விடப்பட்டிருக்கிறேன்!

 

நான் அவளுக்குச் சொல்லித்தரத் தொடங்கிய நாள் முதல்… இன்றுதான் உறங்காமல் படித்து முடித்திருக்கிறாள்! என்னவொரு அதிசயம்! இனிமையாய் முறுவலித்து, “வெரி குட்” என்றேன் நான்!

 

“அத்தைக்கு சொல்லிடுங்க… ஏன்னா அவங்க தான் சொல்லி தந்தாங்க” என்று சொல்லி என் காலை வாரினாள்.

 

நிமிர மறுக்கும் அவள் முகத்தை ஆவலாகப் பார்த்தபடி, லேசாக முறுவலித்து, “சொல்லிடலாமே…” என்று ராகம் இழுத்தேன் நான்!

 

சுறுசுறுவென கோபம் ஏறியிருக்க வேண்டும் அவளுக்கு!

 

ஆத்திரத்துடன் என்னை முறைத்து, எழுந்த வேகத்தில் என் தலையில் கொட்டு வைத்தாள்.

 

என்ன தைரியம்?

 

நொடியில் அவள் கரம் பற்றிச் சுண்டி இழுக்க… குஷனில் ஹாயாக அமர்ந்திருந்த என் மடியில் வாகாக வந்து விழுந்தாள்!

 

அவள் திகைத்து விழிக்க, நான் அவளது அருகாமையில், நெருக்கத்தில் செயலற்று கிடந்தேன்!

 

என் நெஞ்சில் அழுந்த கையூன்றி எழுந்தவள், மின்னல் வேகத்தில் அங்கிருந்து மறைந்திருந்தாள்.

 

ஆமாம்! இப்பொழுது இங்கு என்ன நடந்தது?!? தேன் சுவையின் தித்திப்பான திகைப்பில் நான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: