சுகமதியின் ‘அந்தி மாலைப் பொழுதில் – 1’

அந்தி மாலைப் பொழுதில் – 1

 

 

மெல்லிய கொலுசொலி…

இதோ அவளே வந்துவிட்டாள்!

வழக்கம்போல இன்றும் தாமதமாய்…

 

தாமதத்திற்குக் காரணமாய் அவளிடம் ஆயிரம் கதைகள் நிறைந்திருக்கும்…

இன்று என்ன வைத்திருக்கிறாளோ?

 

“மன்னிக்கணும். இன்னைக்கும் தாமதம் ஆயிடுச்சு”

வலது காதில் தனது இரு விரல்களைப் பதித்து,

கிளியாய் மிழற்றியவளை கண்சுருக்கிப் பார்த்தேன்.

 

இன்று காரணத்தைக் கூடச் சொல்லவில்லையே இவள்!

 

அதைப்பற்றி அவள் துளியும் அக்கறை கொண்டதாய் தெரியவில்லை…

 

சினம் தான் எழுந்திருக்க வேண்டும்!

மாறாகப் புன்னகை அரும்புகிறது…

காரணங்கள் தீர்ந்து விட்டதா என்று…

பின்னே, எத்தனை பொய்களை அவளும்

தினந்தினம் சொல்ல முடியும்?

 

அவள்… அவள்… என்று மட்டும்

சொல்லிக் கொண்டிருக்கிறேன் அல்லவா!

பெயரைச் சொல்வது தானே உத்தமம்…

திவ்யசுந்தரி என்பது அவளின் பெயர்…

கூடுதல் தகவலாக அடியேனின் பெயர் அதிரூபன்…

 

நான் கண்சுருக்கி பார்த்துக் கொண்டிருப்பதில்

என்ன உணர்ந்தாளோ,

“இனி தாமதித்து வர மாட்டேன்” என்று முகம் சுருக்கி மொழிந்தாள்…

 

நிச்சயம் இப்படி இவள் சொல்வது

என்பத்தி எட்டாவது முறையாகத் தான் இருக்கும்.

 

அன்னையின் தோழியின் மகளாம்…

கணிதம் என்பது இவள் அகராதியில்

ராட்சசன், எரிமலை பூதம்

இன்னும் என்னென்னவோ புதிதாகச் சொல்லுவாள்.

அந்த பூதத்திடமிருந்து தப்பிக்கும் மார்க்கத்திற்காகத் தான்

அடியேனிடம் அடைக்கலம் அடைந்திருக்கிறாள்!

என்ன அதில் ஒரு நேர்மையோ, அர்ப்பணிப்போ

இருந்ததே இல்லை…

 

நாளாக நாளாக இவளின் செயல்கள் பழக்கமாகி விட்டிருந்தபடியால்

இப்பொழுதெல்லாம் அதட்ட மனம் வருவதில்லை!

அவளுக்குக் கணிதம் வரவில்லை என்றால்,

பாவம் அவளும் என்ன தான் செய்ய முடியும்?

 

இதோ இன்று அல்ஜீப்ராவை தொடங்கினேன்…

 

தொடங்கிய சிறிது நேரத்திலேயே திவ்யசுந்தரி விழிக்கத் தொடங்கி விட்டாள்.

 

கண்களைச் சிரமப்பட்டு அகல விரிப்பதும்,

கொட்டாவியைச் சிரமப்பட்டு வாயில் அடக்குவதும்,

 

புத்தகத்தை மூடி வைத்து

புருவம் உயர்த்தி என்ன என்று வினவினேன்.

 

இடவலமாக மறுப்பாகத் தலையசைத்தாள்.

ஒன்றும் இல்லையாம்!

 

விட்டுவிடுவேனா நான்?

கண்சுருக்கி பார்த்தேன்.

 

“அல்ஜீப்ரா ஈஸ் அ கோப்ரா பார் மீ” என்றாள் பாவமாய்!

 

அல்ஜீப்ரா அவளுக்குக் கோபுரமாம்!

புன்னகையைக் கட்டுப்படுத்த முடியாமல்

வேகமாக எழுந்து நின்று விட்டேன்…

 

முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு,

“முகத்தைக் கழுவிவிட்டு வா” என்றேன்.

 

கூடவே, “என் அம்மா தரும் எதையும் முழுங்கி வைக்காதே!

கிளம்பும் முன்பு சாப்பிடுவியாம்” என்றும் சேர்த்துச் சொன்னேன்.

 

அவள் முகம் சுருங்கி விட்டது. நிச்சயம் மனதிற்குள் சூளுரைத்திருப்பாள்,

எதையும் உண்பதில்லை என்று!

 

பயங்கர ரோஷக்காரி தான், என் அம்மா தட்டுடன் எதிர்ப்படும் வரை!

 

 

நான் என் அறையினுள் நுழைவதற்கும்,

என் அன்னை விமலா அவளை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது…

 

“உனக்கு வெண்ணைபுட்டு ரொம்ப பிடிக்குமாமே”

 

அவளது ரோஷத்தைப் பதம் பார்த்தது என் அம்மாவின் கையில் இருக்கும் தட்டு!

 

“ஆமாம் அத்தை. ஆனா, இப்ப வேணாம்” ரோஷக்காரி என் அறையை நோட்டமிட்டபடியே சங்கோஜத்துடன் இழுத்தாள்.

 

ஆனால், அவள் பார்வை அந்த பதார்த்தத்தைப் பருகிக் கொண்டிருந்ததை

ஜன்னல் வழியே ரகசியமாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன் நான்.

 

ரோஷக்காரியின் அடுத்த செயல்பாடுகளை நான் கவனித்தே ஆக வேண்டும்…

 

இது என் உள்மனதின் கட்டளை!

என்னால் அதைப் புறக்கணிக்க முடிந்ததில்லை…

 

அதோடு அதிமுக்கியமாக இப்பொழுது என்னால்

வெளியில் செல்லவும் முடியாது…

 

என் அம்மா அவளிடம் சீராடும் போது நான் குறுக்கிட்டால்,

அந்த இளையவளின் முன்பே என் மூக்கு சுக்கு நூறாக உடைபட நேரிடும்…

சொந்த அனுபவம்!

ஒன்றிற்குப் பலமுறை நிரூபணம் ஆனதும் கூட!

 

என் அம்மா திவ்யசுந்தரியை அன்பாய் வற்புறுத்த,

அந்த பதார்த்தத்தின் நறுமணம் அவளது நாசியில் குடித்தனம் செய்ய,

அவளது நீண்ட கருவிழிகள் அதிலிருந்து மீள மறுக்க…

 

அட!

இத்தனை நாட்களாக இதை எப்படிக் கவனிக்காமல் இருந்தேன்!

அவளது கருவிழிகள் பேரழகாக இருக்கிறது!

நேர்கொண்டு பார்க்க வேண்டும் போல ஒரு பேராசை…

அவசர அவதியாய் என்னுள் தோன்றுகிறது!

இந்த எண்ணங்கள், ஆசைகள் எல்லாம் மடத்தனமோ?

 

சரி சரி மனது அவளின் செயல்பாடுகளைக் கவனிக்கச் சொல்லிக் கட்டளையிடுகிறது…

தொடர்ந்து கவனிப்போம்!

மனதின் மராத்தான் ஒட்டத்தை பிறகு பார்ப்போம்!

 

அவளின் கருவிழிகள், அந்த பதார்த்தத்திலிருந்து மீள மறுக்க…

மெல்ல என் அறைக்கதவை மீண்டும் நோட்டம் விட்டவள்,

 

“உங்களுக்காக ஒன்னே ஒன்னு அத்தை…”

என்று பெருந்தன்மையோடு ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

 

வெளிப்படையாகச் சிரித்தன என் அதரங்கள்!

சத்தமில்லாமல் தான்!

 

என் கருவிழிகள் பதார்த்தத்தை ரசித்துச் சுவைப்பவளின் இதழ்களை வட்டமிட்டது…

 

சட்டென்று ஜன்னலைச் சத்தமில்லாமல் அடைத்துவிட்டு, கட்டிலில் அமர்ந்து கொண்டேன்…

 

இதென்ன மடத்தனத்தின் உச்சம்!

 

வெண்ணைபுட்டுவை சுவைப்பவளின் இதழ்களைச்

சுவைக்க வேண்டும் போல மனம் ஆவல் கொள்கிறது…

தலையில் தட்டிக் கொண்டேன்…

மூச்சுக்காற்று சீராக மறுத்தது!

 

 

“அதிரூபா” என் அன்னையின் அழைப்பு!

 

அசடு வழியவா அவர்கள் முன்பு நிற்க முடியும்?

 

அவளை முகம் கழுவிவிட்டு வரச் சொன்னவன்,

இப்பொழுது நான் முகம் கழுவி அவள் முன்பு செல்லும் நிலை!

 

முகத்தைத் துவாலையில் ஒற்றியபடி,

அறையிலிருந்து வெளியேறிய என் விழிகளில் முதலில் பட்டது காலித்தட்டு!

 

அவசரமாக அவளை ஏறிட்டுப் பார்த்தேன்!

அதரங்களில் ஆங்காங்கே மெல்லியதாக ஒட்டியிருந்த பதார்த்தம்!

அந்த பதார்த்தம் உண்டதன் விளைவாய்,

அவள் இதழ்கள் தங்கமாய் மினுமினுத்தது!

அவசரமாகப் பார்வையைத் தழைத்துக் கொண்டேன்!

 

பின்னே, இந்த மனம், மடத்தனமாய்

அவளது பூவிதழ்களைச் சுத்தம் செய்ய ஆசை கொள்ளும்!

எதற்கு வீண் வம்பு?

 

“என்னம்மா?” என்றேன் சாவதானமாக!

 

மனம் என்னை ஒருமாதிரி பார்த்து வைத்தது!

பின்னே, அம்மா அழைத்து பத்து நிமிடங்களுக்கும் மேல் இருக்கும்!

நான் வெளியே வந்தும் கூட சில பல நிமிடங்கள் கடந்திருக்கும்!

இத்தனை நிதானமாக யாராலும், “என்னம்மா” என்று கேட்டிருக்க முடியாது!

 

மனம் மானக்கேடாகப் பார்ப்பதையெல்லாம் பொருட்படுத்த முடியுமா?

 

கடுகளவு கூட கண்டு கொள்ளாமல், கர்மசிரத்தையாய் அம்மாவைப் பார்த்தேன்!

 

“திவிக்குட்டி படிக்க வந்திருக்கா…

நீ பாட்டுக்கு உள்ளே போயி உட்கார்ந்துட்டா…

அவ எப்ப படிச்சு முடிச்சு,

எப்ப வீட்டுக்கு போறது?”

 

‘என்னது இவள் படித்த்துது… முடித்த்த்துதுதுது…

வீட்டிற்குப் போக வேண்டுமா?’

என் மனம் பூகம்பம் கண்டது போல அதிர்ந்தது!

 

‘இவள் படித்து முடித்தபிறகு தான் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால்?

லேசில் நடக்கும் காரியமா அது?’

 

நான் விழிப்பதைப் பார்த்து, “என்ன ரூபா?” என்றாள் அம்மா.

 

“நீங்க சாப்பிட தரும்போது தெரியலையாக்கும்”

மனதை மறைத்து தாயிடம் கேலியாக நொடித்தேன்.

 

“குழந்தையை நிம்மதியா சாப்பிட கூட விட மாட்டியா?”

 

‘ஹையோ! இந்த அம்மா வேறு!

குழந்தையாம்!

திவிக்குட்டியாம்!’

என் மனம் மௌனமாய் அலறியது!

 

பின்னே,

என் கண்ணில் அவள் குமரியாக மட்டும் தானே தெரிகிறாள்!

இதுவும் மடத்தனம் தானோ?!?

 

இருக்கும்! இருக்கும்!

மடத்தனங்களுக்கு எல்லை என்பது கிடையாது போலும்!

 

அம்மா காலித்தட்டுடன் இடத்தை காலி செய்ய,

 

நான் என் தோளைச் சுற்றியிருந்த துவாலையை எடுத்து அவள் மீது வீசினேன்.

 

கோபமாகவா செய்திருக்க முடியும்?

 

ஏதோ ரோஜா மாலையை அவள் மீது வீசுவது போலொரு உவமை என்னுள் தோன்றியதென்றால்…

நான் என்ன அழகில் வீசியிருப்பேன் என்று நினைத்துப் பாருங்கள்?

 

கேள்வியாக என்னைப் பார்த்தவளிடம்,

 

“முகம் கழுவிட்டு வான்னு சொல்லிட்டு போனேன்” என்றேன் இறுக்கமான முகத்துடன்.

 

இவளிடம் கொஞ்சம் இளகினாலும், இவள் கணிதம் படிப்பதற்குச் சுபம் போட்டு விடுவாள்!

 

என்னவோ நான் பக்கம் பக்கமாக அவளைத் திட்டிய தினுசில்,

முகத்தைச் சுருக்கி வைத்துக் கொண்டு,

என்னறைக்குள்ளே சாவதானமாக நுழைந்தாள்!

உரிமையோடோ?!?

 

‘இவளோடு’ எனத் தலையில் அடித்துக் கொள்வது தவிர வேறு வழி!

 

அவள் திரும்பியதும், “மொத்த மேக் அப்பும் கரைஞ்சிடுச்சாக்கும்…” என்றேன் கேலியாக.

 

துவாலையில் புதைந்த முகத்தை மெல்ல வெளியில் நீட்டிக் காட்டினாள்.

 

பூரண நிலவு தான்!

வாயடைத்துப் போனேன் நான்!

 

அவளிடம் காட்டிக் கொள்ள முடியுமா?

 

ஒப்பனை இல்லாவிட்டாலும் அவள் பேரழகி தான்!

ஒப்புக்கொண்டது என் மனம்!

ஒருவேளை என் கண்களுக்கு மட்டும் தானோ?!?

புதிதாக ஒரு சந்தேகம்!

 

இருந்தாலும் இருக்கும் என நம்பவும் செய்தேன்…

ஏனெனில், மற்ற பெண்கள் அவ்வளவு எளிதாக

என் கண்களில் அழகாகத் தெரிந்ததில்லை…

 

இவள் எனக்கு பிரத்தியேகமானவள் தான்!

நான் அதை மனத்திற்குள்ளேயேனும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்…

 

முகம் கழுவி வந்தபிறகும்,

அல்ஜீப்ரா அவளுக்கு உறக்கத்தை தான் பரிசளித்துக் கொண்டிருந்தது.

வற்றியது என்னவோ என் தொண்டைத்தண்ணீர் தான்!

 

இருந்தும் விடாமல் சில முக்கிய சூத்திரங்களைப் பலமுறை எழுத வைத்தேன்…

அவள் மனதில் சூத்திரங்கள் பதிந்தால்

இலகுவான கணக்குகளைச் சொல்லித்தர எளிதாக இருக்கும் என நினைத்தேன்!

 

அதொன்றும் அத்தனை எளிதில்லை என்னும் வகையில்,

என்னைத் தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள் திவ்யசுந்தரி…

 

ஒருவழியாக ஒருசில முக்கிய கணக்குகளோடு அல்ஜீப்ராவை

நான் தான் மூட்டை கட்டி வைக்க வேண்டியதாயிற்று!

 

இனி அடுத்ததாக ட்ரிக்னாமென்டரியை எடுத்து அவளோடு நான் போராட வேண்டும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: