Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 10

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 10

நாகன்யா – 10

 

இவ்வளவு விரைவில் நாகேஸ்வரனிடமிருந்து இப்படியொரு கேள்வியை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ஈஸ்வர். ஆச்சரியமாக அவரை நோக்கினான். 

 

“என்ன தம்பி இப்பிடிப் பாக்குறீங்க?”

 

“இல்லை ஐயா.. ஊர் பேர் தெரியாத அநாதை என்னைப் போய் கேட்கிறீங்க. அதுதான் நம்பவே முடியவில்லை என்னால..”

 

“உண்மையைச் சொன்னால் எங்களுக்கு ஊரோட மாப்பிள்ளை அதாவது வீட்டோட மாப்பிள்ளைதான் வேணும். நாகம்மாவுக்கும் உங்களை பிடிச்சிருக்கு என்று நினைக்கிறன். அதுதான் அவகிட்ட பேச முதல் உங்கட எண்ணம் என்ன என்று தெரிஞ்சு கொள்ளலாம் என்று கேட்கிறன் தம்பி. எதுவானாலும் வெளிப்படையாகத் தயங்காமல் சொல்லிடுங்கோ.”

 

“சொர்க்கமே என்னைத் தேடி வரும் போது நான் ஏன் ஐயா மறுக்கப் போகிறேன். ஆனால் என்னைத் திருமணம் செய்ய நாகன்யாவுக்குப் பிடிக்குமா என்றுதான் தெரியேல்ல..”

 

“உங்களுக்குச் சம்மதம் தானே தம்பி.. நாகம்மாவிடம் பேசுவது என்ர பொறுப்பு..”

 

“சரி ஐயா.. இந்த அநாதையை மருமகனாக ஏற்றுக் கொள்ள மிகப் பெரிய மனசு வேணும். எப்படி நன்றி சொல்லுறது என்றே எனக்கு தெரியேல்ல. ஆனால் எதுவானாலும் நாகம்மா விருப்பம்தான். அவ முடிவு எதுவானாலும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்..”

 

“இது எங்க ஊரே கூடி எடுத்த முடிவு தம்பி. மிக்க நன்றி தம்பி. அப்புறம் உங்களுக்கு நாகம்மாவைப் பற்றி முக்கியமானதொரு விசயம் சொல்ல வேணும்..”

 

“எதுவானாலும் சொல்லுங்கோ ஐயா..”

 

“இனிமேல் மாமா என்று கூப்பிட வேண்டும்..” 

 

நாகேஸ்வரன் கூறவும், புன்னகையோடு திருத்திக் கொண்டான் ஈஸ்வர்.

 

“சரி மாமா சொல்லுங்கோ..”

 

“நாகன்யா எங்களுக்குக் கிடைச்ச விதம் அறிஞ்சிருப்பீங்கள். நாகம்மா தந்த குழந்தையாத் தான் அவளை நினைச்சு வளர்த்தோம். அப்போ இந்த ஊர் வந்து இப்படி இருக்கேல்ல தம்பி. இங்கேயும் பட்டினியும் பிரச்சனைகளும் தலைவிரித்தாடிச்சுது. வரண்டு போயிருந்த பூமிக்கு எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு நாகன்யா எங்களுக்குக் கிடைச்ச அண்டைக்குத்தான் மழை பெய்துச்சு. 

 

அப்போ ஒரு பெரியவர் சொன்னார், இந்தப் பொண்ணு வந்த நேரம்தான் என்று. அப்பத்தான் எனக்கு அந்த எண்ணம் தோன்றிச்சு. நாகன்யாவை ஒரு தெய்வப் பெண்ணாகவே வளர்ப்பது என்று. இன்றைக்கு வரைக்கும் அவளுக்கு உண்மையிலேயே தெய்வ சக்தி இருக்கா இல்லையா என்பது எனக்குமே புரியாத புதிர்தான் தம்பி. ஆனா அந்தக் குழப்பத்தை எல்லாம் நான் எங்கட ஊர் வளர்ச்சிக்காக மாற்றி விட்டேன்..”

 

“என்ன மாமா சொல்லுறீங்கள்?”

 

திகைப்புடன் கேட்டான் ஈஸ்வர்.

 

“ஓம் தம்பி. அவ நாலைஞ்சு மாசமாக இருந்தப்ப கோவிலில இருந்து விளையாடிக்கொண்டிருந்தா. அப்படியே தவழ்ந்து போய் ஒரு பொண்ணு மடியில ஏறி உட்கார்ந்தா. அந்தப் பொண்ணு பத்து வருசமாகக் குழந்தையில்லாம இருந்த பொண்ணு. அவளுக்கு அடுத்த மாசமே கர்ப்பம் தங்கிட்டுது. இப்படி நாலைந்து தடவை நடக்கவும், இதெல்லாம் நாகன்யாவோட அருள் தான்னு ஊர் சனங்க நம்ப ஆரம்பிச்சாங்க. கோவிலுக்குப் போனால் அவளையும் தொட்டு வணங்க ஆரம்பிச்சாங்கள்.

 

இவக்கு மூணு வயசு இருக்கும் அப்ப. ஒரு பையனுக்கு நாலைஞ்சு வயசாகியும் பேச்சு வரேல்ல. இவ கோவில்ல தினமும் அவனோடயே விளையாட ஆரம்பிச்சா. ஒரே மாசத்தில அவன் பேச ஆரம்பிச்சிட்டான். இப்பிடி நிறைய விசயம் நடந்துச்சு. 

 

ஏன் இப்ப போன வருசம் கூட ஒரு பையனைப் பேச வைச்சா. எங்கட ஊர் பெரியவர் ஒருத்தரிட பேரன் பட்டணத்தில இருக்கிறார். அவரிட மகனுக்குத்தான் பேச்சு வரேல்ல என்று சொல்லி இங்க கூட்டி வந்து நாகன்யாட்டக் காட்டினாங்க. அவ ரெண்டு மாசம் அவரை லீவு எடுத்துக் கொண்டு குடும்பத்தோட இந்த ஊரிலேயே தங்கச் சொன்னா. தினமும் தன்னை வந்து சந்திக்கச் சொன்னா. இருபது நாளிலேயே அந்தப் பையன் வாயில இருந்து வார்த்தைகள் வர ஆரம்பிச்சது. 

 

நாகன்யாட்டக் கேட்டா, அவ சொல்லுறா.. பட்டணத்தில அந்தச் சின்னப் பையனுக்குச் சரியான கவனிப்பு இல்லை. அவனுடைய பெற்றோர்கள் அவனோடு நேரம் ஒதுக்கிச் சரியாகப் பேசேல்ல. எப்போதும் தொலைக்காட்சி, தொலைபேசி என்றே பார்த்துக் கொண்டிருந்த பையனால் பேசுவதுட முக்கியத்துவத்தையோ எப்படிப் பேசுவது என்றோ புரிந்து கொள்ள முடியவில்லை. அதுதான் தாமதத்திற்குக் காரணம். 

 

இங்கே அவன் தொலைக்காட்சியோ தொலைபேசியோ இல்லாமல் பூட்டன், தாத்தா, பாட்டி, அவனொத்த நிறையக் குழந்தைகளோடு பேசி விளையாடும் போது அவனும் சாதாரணமாகவே பேச ஆரம்பித்து விட்டான். நானும் அவனுக்குச் சில பயிற்சிகளை கொடுத்தேன். அவ்வளவுதானப்பா என்று அவ சொல்லுறா..

 

இதில நாகன்யா சொன்னதை நம்புறதா இல்லை இது அவளுடைய தெய்வ சக்திதானா என்று எனக்குத் தெரியேல்ல. காக்கா உட்காரப் பனம்பழம் விழுந்த கதை போலவும் தோணிச்சுது தம்பி..

 

நாகன்யா வளர வளர அவளிடம் அருள் வாக்குக் கேட்க ஆரம்பிச்சாங்க ஊர் மக்கள். அப்பதான் எனக்கு இந்த எண்ணம் உதிச்சது. ஏன் இதையே பயன்படுத்தி இந்த ஊர்ப் பிரச்சனைகளை தீர்க்கக் கூடாது என்று. 

 

ஆரம்ப காலங்களில முதல்நாள் பிரச்சனையை கேட்டிட்டு தீர்வுக்காக அப்புறமாக வரச் சொல்லுவோம். இரவோடிரவா நானும் நாகன்யாவும் என்ன தீர்வு கொடுக்கலாம் என்று ஆலோசனை செய்வோம். அடுத்த நாள் அவ அதைச் சொல்லிடுவா. 

 

பிறகு நம்பிக்கையான ஆட்கள் ரெண்டு மூணு பேரைத் தெய்வ வாக்குக் கேட்க வருகிற கூட்டத்தில கலந்து நின்று என்ன பிரச்சனைக்காக வந்து நிக்கிறாங்க என்று அறிந்து கொண்டு அதை நாகன்யாவிடம் எப்படியாவது சொல்லிடுவோம். 

 

தொழினுட்பம் வளர வளர இதெல்லாம் எங்களுக்கு சுகமாகப் போச்சு. ப்ளூடூத் தொலைபேசி அது இதுன்னு நாகன்யாவுக்கு விரைவாகவே அறிவிச்சிடுவோம்..”

 

“இதெல்லாம் சரிதான் மாமா.. ஆனா நாகராஜன் எப்படி தப்பு செய்யிறவங்களை, பொய் சொல்லுறவங்களை கண்டுபிடிச்சான்?”

 

“அதுதான் சொன்னனே தம்பி.. இந்த நிமிசம் வரை எனக்கு நாகன்யா புதிராத புதிர்தான் தம்பி.. சில நேரங்கள்ல உண்மையாகவே அவ தெய்வப் பொண்ணாகத்தான் தோணுறா. நாகராஜனும் அவளும் பழகின விதம் கூட இதுக்கு ஒரு காரணம். 

 

ஒரு நாள் நாகன்யாவுக்கு அறிவிக்க முடியாமல் தொலைபேசி சரியாக வேலை செய்யேல்ல. ஆனாலும் அவ சரியான முறையில் அருள் வாக்குச் சொன்னா. எப்பிடிம்மா என்று கேட்டா எனக்குக் காதில கேட்டுச்சேப்பா என்று சிரிச்சுக் கொண்டே சொன்னா தம்பி..”

 

“நீங்க சொல்லுறதையெல்லாம் கேட்க எனக்கும் வியப்பா இருக்கு மாமா.. என்ன சொல்லுறதுன்னே தெரியேல்ல..”

 

“நாகன்யா தெய்வாம்சமுள்ள பெண் என மக்கள் நம்பிறதால அவளுக்கு ஆபத்தும் அதிகம் ஈஸ்வர். இவ்வளவு காலமும் நான் காப்பாற்றி விட்டேன். எனக்கும் வயதாகி விட்டது. இனிமேல் அவளை காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. என்ர காலத்துக்குப் பிறகு நாகம்மாவை யார் பார்த்துக் கொள்ளுவாங்க என்று ரொம்பவே கலங்கிப் போயிருந்தன். ஆனால் இவ்வளவு வருசம் கழிச்சு நாகன்யாவே ஒரு இளைஞனோட பழகுகிறாள் என்றால் அவ தன்னுடைய எதிர்காலத்தைத் தீர்மானிச்சிட்டா என்று தான் அர்த்தம். எது எப்படியோ அவ இந்த ஊரைக் காக்க வந்த தெய்வமாகத்தான் நான் அவளைப் பார்க்கிறேன் தம்பி. அவளைக் காக்க வேண்டியது இனி உங்கட பொறுப்பு. அதுதான் தம்பி நான் எல்லா உண்மைகளையும் உங்களிட்டச் சொல்லுறன்.

 

அப்புறம் இன்னொரு மிக முக்கியமான விசயம் ஈஸ்வர்.. அவளைப் பாதுக்காக்கிறது ஒண்டும் சாதாரண விசயம் இல்லை. அடிக்கடி மந்திரவாதிகள் இங்கு வருவார்கள். நாகம்மாவைப் பலி கொடுத்தால் அவர்களுக்கு அதீத சக்திகள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். 

 

இப்படித்தான் ஒரு தடவை, நாகன்யாவுக்கு ஐந்து வயதாக இருந்த போது தேவியோடுதான் தூங்கிக் கொண்டிருந்தாள். காலையில் எழுந்து பார்த்தால் அவளைக் காணோம். நாங்கள் தேடாத இடம் இல்லை. வெட்டியான் ஓடி வந்தான் மயானத்திற்கு வரச் சொல்லி.

 

போய் பார்த்தால் ஈரக்குலையே நடுங்கிப் போச்சு. மயானத்தில ஒரு மந்திரவாதி இறந்து கிடந்தான். இரத்தத்தால் போட்டிருந்த கோலத்துக்கு நடுவிலே நாகம்மா தூங்கிட்டிருந்தா.பக்கத்திலேயே நாகராஜன். மந்திரவாதிட உடம்பு நீலமாக இருந்துச்சு.. அதிலேயே விளங்கிச்சு இது நாகராஜனோட வேலைதான் என்று. 

 

இன்னொரு தடவை, நாகன்யாவுக்கு பன்னிரெண்டு வயசு இருக்கும். வாக்கு சொல்லிட்டிருந்தா.. திடீரென ஒருத்தன் வாக்குக் கேட்கிற போல வந்து கத்தியை தூக்கிட்டான். ஆனா நாகம்மா எந்தப் பதட்டமும் இல்லாம அவனைத் தடுத்திட்டா. 

 

இன்னொரு தடவை நாகம்மாவுக்கு காய்ச்சல்.. ஜன்னி கண்டு புலம்பிட்டே இருந்தா. மருத்துவர்கள் எல்லாருமே கையை விரிச்சிட்டாங்க. ஊர்ப் பசங்க காட்டுக்கு வேட்டையாடப் போனபோது அங்க சில மந்திரவாதிக இருந்து ஏதோ மந்திரம் சொல்லிட்டு இருந்ததைப் பார்த்தாங்கள். நாங்கள் உடனே அவங்கள் எல்லாரையும் கொன்று போட்டதும் தான் நாகன்யாவுக்குச் சுகமாகிச்சு..

 

இப்படியே வருசத்துக்கு ஒரு தடவையாவது ஏதாவது ஆபத்து வந்து கொண்டே இருக்கும். நாங்கள் தான் கண்ணும் கருத்துமாக நாகம்மாவைப் பார்த்துக் கொள்ள வேணும் தம்பி.

 

இப்போதும் மந்திரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அறிகிறேன்.. ஒரு மந்திரவாதியின் தலை மயானத்தில் புதைக்கப்பட்டிருந்துச்சு. இப்போது மயானத்திற்குக் காவல் போட்டிருக்கிறேன். நாகராஜன் இறந்ததிற்கும் இதற்கும் கூட ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று எனக்குச் சந்தேகமாக உள்ளது தம்பி.”

 

“நாகராஜன் இறந்தது எனக்கும் சந்தேகம் தான் மாமா. அவன் இறந்த மாயத்தை எப்படியாவது கண்டுபிடிப்பேன் என்று நாகன்யாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்துள்ளேன்.. நீங்கள் இப்போது இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொன்னது நல்லதுதான் மாமா. நான் இனிமேல் அதிக கவனமாக இருப்பேன். நீங்களும் எப்போதும் நாகன்யா மீது ஒரு கண் வைத்திருங்கள்..”

 

“சரிப்பா.. நாகன்யாவை இந்த ஊரோட நன்மைக்காக என்று சொல்லி இவ்வளவு காலமும் அவளை சாதாரணமாக வளர்க்காமல் அவளுடைய இளமைக்காலத்தை வீணாக்கிட்டன் என்று எனக்கு எப்பவுமே மிகப்பெரிய குற்றவுணர்வு. அவ இனியாவது சந்தோசமாக நல்லதொரு குடும்ப வாழ்க்கை வாழ வேணும் என்றது தான் என்ர மிகப் பெரிய அவா. இனியும் அவ வாழ்க்கை வீணாகிடக் கூடாது.. அதுதான் அவ மனசுக்குப் பிடிச்ச உங்களையே அவளுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணினேன் ஈஸ்வர்..”

 

“அவ வாழ்க்கை வீணாகல மாமா. இந்தக் கிராமத்தை எப்பிடி மாத்தியிருக்கிறா.. இது அவ வாழ்க்கையில அடைஞ்ச பெரியதொரு வெற்றிதான். அவளை இனிமேல் என் கண்ணின் மணியாக வைச்சுப் பாதுகாப்பன் மாமா. அவளை எப்பவுமே சந்தோசமாக வைச்சுக் கொள்ளுவன். நீங்கள் இனி எதுக்கும் கவலைப்படாதையுங்கோ. கல்யாணம் பற்றி நாகன்யாட்டயும் ஒரு வார்த்தை கேட்டிட்டு எனக்குச் சொல்லுங்கோ மாமா..”

 

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதோ தெரியேல்ல தம்பி. கல்யாண விசயம் நான் நாகம்மாவோட கலந்து பேசிட்டு உங்களிட்டச் சொல்லுறன். இருட்டிட்டுது. கிளம்புவோம்..”

 

வேட்டியிலிருந்த மண்ணைத் தட்டியவாறே இருவரும் தத்தமது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். நாகேஸ்வரன் தனது மனதிலிருந்தவற்றைக் கொட்டியதில் ஒரு நிம்மதியுணர்வு வரப் பெற்றவராகச் சென்றார். ஈஸ்வரோ அவர் சொன்னவைகளைக் கேட்டு மனப்பாரம் ஏறியவனாகச் சென்றான். 

 

இனி காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 4யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 4

அத்தியாயம் – 04   பேய்கள் உலாப் போகும் நடுநிசி நேரம். நாகர்கோவில் ஊருக்கு வெளியேயிருந்த அந்த மயானமே கரும் போர்வை போர்த்தி அந்த நள்ளிரவு நேரத்திற்கு மேலும் அச்சம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நாய்களும் நரிகளும் போட்டி போட்டபடி ஊளையிட்டுக் கொண்டிருந்தன. 

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8

நாகன்யா – 08   நாகேஸ்வரன் மனது அமைதியற்றுத் தவித்தது. வீட்டுக்குச் சென்றவர் நேராகக் கிணற்றடிக்குச் சென்று தலைக்குத் தண்ணீர் வார்த்தார். கைபாட்டுக்கு கப்பியில் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றினாலும் சிந்தனை முழுவதிலும் இறந்தவர்கள் யாராக இருக்கும் என்ற எண்ணம் தான்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12

நாகன்யா – 12   நாகேஸ்வரனின் குதிரை வண்டியில் விரைவாகவே ஈஸ்வரை நாகேஸ்வரனின் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர். வீடு செல்லும் வழி முழுவதும் நாகன்யா ஈஸ்வரைத் தன் மடிமீது தாங்கி தன் சேலைத் தலைப்பால் அவன் இரத்தப்போக்கை நிறுத்த முயன்று