Tamil Madhura குறுநாவல் காஞ்சனை – 3

காஞ்சனை – 3

காஞ்சனை

புதுமைப்பித்தன்

 இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மனசின் ஆழத்திலே அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது?

தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா? அதே மாதிரிதான் இதுவும், என்னைப் போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன், “ஸார், எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது. அது என் மனைவியை என்ன செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா?” என்று கேட்டால், நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது? எத்தனை நாட்கள் நான் பாராக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்?

இது எந்த விபரீதத்தில் கொண்டு போய் விடுமோ? சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கு அந்தப் புதிய வேலைக்காரி என்ன சொக்குப்பொடி போட்டுவிட்டாளோ? அவர்கள் இருவரும் மனசில் துளிக்கூடப் பாரமில்லாமல் கழித்துவிட்டார்கள்.

இன்றைப் பார்த்துப் பகலும் இராத்திரியை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. இவ்வளவு வேகமாகப் பொழுது கழிந்ததை நான் ஒரு நாளும் அநுபவித்ததில்லை.

இரவு படுக்கப் போகும்போது என் மனைவி, “காஞ்சனை, இன்றைக்கு மாடியிலேயே நமக்கு அடுத்த அறையில் படுத்துக் கொள்ளப் போகிறாள்” என்று கூறிவிட்டாள். எனக்கு மடியில் நெருப்பைக் கட்டியது போல ஆயிற்று.

இது என்ன சூழ்ச்சி!

இன்று தூங்குவதே இல்லை. இரவு முழுவதும் உட்கார்ந்தே கழிப்பது என்று தீர்மானித்தேன்.

“என்ன படுக்கலியா?” என்றாள் என் மனைவி.

“எனக்கு உறக்கம் வரவில்லை” என்றேன். மனசுக்குள் வல் ஈட்டிகளாகப் பயம் குத்தித் தைத்து வாங்கியது.

“உங்கள் இஷ்டம்” என்று திரும்பிப் படுத்தாள். அவ்வளவுதான். நல்ல தூக்கம்; அது வெறும் உறக்கமா?

நானும் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போனேன்.

சற்றுப் படுக்கலாம் என்று உடம்பைச் சாய்த்தேன்.

பன்னிரண்டு மணி அடிக்க ஆரம்பித்தது.

இதென்ன வாசனை!

பக்கத்தில் படுத்திருந்தவள் அமானுஷ்யக் குரலில் வீரிட்டுக் கத்தினாள். வார்த்தைகள் ரூபத்தில் வரும் உருவற்ற குரல்களுக்கு இடையே காஞ்சனை என்ற வார்த்தை ஒன்றுதான் புரிந்தது.

சட்டென்று விளக்கைப் போட்டுவிட்டு அவளை எழுப்பி உருட்டினேன்.

பிரக்ஞை வரவே, தள்ளாடிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். “ஏதோ ஒன்று என் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சின மாதிரி இருந்தது” என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு.

கழுத்தைக் கவனித்தேன். குரல்வளையில் குண்டூசி நுனி மாதிரி ரத்தத்துளி இருந்தது. அவள் உடம்பெல்லாம் நடுங்கியது.

“பயப்படாதே; எதையாவது நினைத்துக் கொண்டு படுத்திருப்பாய்” என்று மனமறிந்து பொய் சொன்னேன்.

அவள் உடம்பு நடுநடுங்கிக் கொண்டிருந்தது. மயங்கிப் படுக்கையில் சரிந்தாள்.      அதே சமயத்தில் வெளியில் சேமக்கலச் சபதம் கேட்டது.

கர்ணகடூரமான குரலில் ஏதோ ஒரு பாட்டு.

அதிகாரத் தோரணையிலே, “காஞ்சனை! காஞ்சனை!” என்ற குரல்.

என் வீடே கிடுகிடாய்த்துப் போகும்படியான ஓர் அலறல்! கதவுகள் படபடவென்று அடித்துக் கொண்டன.

அப்புறம் ஓர் அமைதி. ஒரு சுடுகாட்டு அமைதி.

நான் எழுந்து வெளிவாசலின் பக்கம் எட்டிப் பார்த்தேன்.

நடுத்தெருவில் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கு என்ன மிடுக்கு!

“இங்கே வா” என்று சமிக்ஞை செய்தான்.

நான் செயலற்ற பாவை போலக் கீழே இறங்கிச் சென்றேன்.

போகும்போது காஞ்சனை இருந்த அறையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான் எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. அவள் இல்லை.

தெருவிற்குப் போனேன்.

“அம்மா நெத்தியிலே இதைப் பூசு. காஞ்சனை இனிமேல் வர மாட்டாள். போய் உடனே பூசு. அம்மாவை எளுப்பாதே” என்றான்.

விபூதி சுட்டது.

நான் அதைக் கொண்டுவந்து பூசினேன், அவள் நெற்றியில். அது வெறும் விபூதிதானா! எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அவன் கையில் சேமக்கலம் இல்லை என்பதும் ஞாபகம் இருக்கிறதே!

மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.

காலையில் காப்பி கொடுக்கும்போது, “இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்!” என்றாள் என் மனைவி. இதற்கு என்ன பதில் சொல்ல?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கணினிக் காதல் – குறுநாவல்கணினிக் காதல் – குறுநாவல்

வணக்கம் பிரெண்ட்ஸ், எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது கணினிக் காதல் குறுநாவல் வழியாக உங்களை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=378257368 key=key-4jbNVBFy2ZsbKji6fjM2 mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா

யோகம் – எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்யோகம் – எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்

யோகம் காலம் காலமாய், கற்பாந்த காலமாய் அவ்விடத்தில் நடமாடியவை காற்றும், மழையும், மண்ணும், மணலுமே. மரமும் செடியும் அவையவை விதை விழுந்த இடத்தில் முளைத்து, வளர்ந்து, சளைத்து மறுபடியும் கிளைத்தன. வானளாவியனவெல்லாம் கூனிக் குறுகிக் குன்றி மறுபடியும் தோன்றின. காற்று சுழல்கையில்

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார். கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு