Tamil Madhura குறுநாவல் காஞ்சனை – 2

காஞ்சனை – 2

காஞ்சனை

புதுமைப்பித்தன்

 நான் மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது.

“ராத்திரி பூராவும் தூங்காமே இவ்வளவு நேரம் கழித்து எழுந்ததும் அல்லாமல் இப்படி வந்து உட்கார்ந்து கொண்டால் காப்பி என்னத்துக்கு ஆகும்?” என்று என் சகதர்மிணி பின்பக்கமாக வந்து நின்று உருக்கினாள். ‘ஐக்கிய நாடுகளின் ஜரூர் மிகுந்த எதிர் தாக்குதல்கள் தங்குதடையில்லாமல் முன்னேறி வருவதில்’ அகப்பட்டுக் கொண்ட ஜனநாயகத்திலும் உலக சமாதானத்திலும் உறுதி பிறழாத நம்பிக்கை கொண்ட எனக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது.

“அது உன் சமையல் விமரிசையால் வந்த வினை” என்று ஒரு பாரிசத் தாக்குதல் நடத்திவிட்டு எழுந்தேன்.

“உங்களுக்குப் பொழுதுபோகாமே என் மேலே குத்தம் கண்டு பிடிக்கணும்னு தோணிட்டா, வேறே என்னத்தைப் பேசப் போறிய? எல்லாம் நீங்கள் எளுதுகிற கதையை விடக் குறைச்சல் இல்லை!” என்று சொல்லிக் கொண்டே அடுப்பங்கரைக்குள் புகுந்தாள்.

நானும் குடும்ப நியதிகளுக்குக் கட்டுப்பட்டு, பல்லைத் துலக்கிவிட்டு, கொதிக்கும் காப்பித் தம்ளரைத் துண்டில் ஏந்தியபடி பத்திரிகைப் பத்திகளை நோக்கினேன்.

அப்போது ஒரு பிச்சைக்காரி, அதிலும் வாலிபப் பிச்சைக்காரி, ஏதோ பாட்டுப் பாடியபடி, “அம்மா, தாயே!” என்று சொல்லிக் கொண்டு வாசற்படியண்டை வந்து நின்றாள்.

நான் ஏறிட்டுப் பார்த்துவிட்டு இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியாதென்று நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன்.

“உனக்கு என்ன உடம்பிலே தெம்பா இல்லை? நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன?” என்று அதட்டிக் கொண்டே நடைவாசலில் வந்து நின்றாள் என் மனைவி.

“வேலை கெடச்சாச் செய்யமாட்டேனா? கும்பி கொதிக்குது தாயே! இந்தத் தெருவிலே இது வரையில் பிடியரிசிக் கூடக் கிடைக்கவில்லை; மானத்தை மறைக்க முழத்துணி குடம்மா” என்று பிச்சைக்கார அஸ்திரங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள்.

“நான் வேலை தாரேன்; வீட்டோ டவே இருக்கியா? வயத்துக்குச் சோறு போடுவேன்; மானத்துக்குத் துணி தருவேன்; என்ன சொல்லுதே!” என்றாள்.

“அது போதாதா அம்மா? இந்தக் காலத்திலே அதுதான் யார் கொடுக்கிறா?” என்று சொல்லிக்கொண்டே என் மனைவியைப் பார்த்துச் சிரித்து நின்றாள்.

“என்ன, நான் இவளை வீட்டோ டே ரெண்டு நாள் வெச்சு எப்படி இருக்கான்னுதான் பாக்கட்டுமா? எனக்குந்தான் அடிக்கடி இளைப்பு இளைப்பா வருதே” என்றாள் என் மனைவி.

“சீ! உனக்கு என்ன பைத்தியமா? எங்கேயோ கெடந்த பிச்சைக்காரக் களுதையை வீட்டுக்குள் ஏத்த வேண்டும் என்கிறாயே! பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா?” என்றேன்.

வெளியில் நின்ற பிச்சைக்காரி ‘களுக்’ என்று சிரித்தாள். சிரிப்பிலே ஒரு பயங்கரமான கவர்ச்சி இருந்தது. என் மனைவி வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனசு முழுவதும் அந்த அநாமத்திடமே ஐக்கியமாகிவிட்டது போல் இருந்தது.

“முகத்தைப் பார்த்தா ஆள் எப்படி என்று சொல்ல முடியாதா? நீ இப்படி உள்ளே வாம்மா” என்று மேலுத்தரவு போட்டுக்கொண்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

உள்ளுக்குள்ளே பூரிப்புடன் அந்த மாய்மாலப் பிச்சைக்காரி பின் தொடர்ந்தாள். என்ன! நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா? மறுபடியும் பார்க்கும் போது, பிச்சைக்காரி என்னைப் புன்சிரிப்புடன் திரும்பிப் பார்த்தாள். ஐயோ, அது புன்சிரிப்பா! எலும்பின் செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியதுமாதிரி என்னைக் கொன்று புரட்டியது அது!

என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வீட்டுக்குள் வருவது நல்லதற்கல்ல என்று சொன்னேன். இந்த அபூர்வத்தை வேலைக்காரியாக வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் செய்தாள். மசக்கை விபரீதங்களுக்கு ஓர் எல்லை இல்லையா? என்னவோ படுஆபத்து என்றுதான் என் மனசு படக்குப் படக்கு என்று அடித்துக்கொண்டது. மறுபடியும் எட்டி அவள் பாதங்களைப் பார்த்தேன். எல்லோரையும் போல் அவள் கால்களும் தரையில்தான் பாவி நடமாடின. இது என்ன மாயப்பிரமை!

தென்னாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முடியாது என்பதை நிரூபித்தான். ஆனால் என் மனைவி பிச்சைக்காரிகளையும் நம்மைப் போன்ற மனிதர்களாக்க முடியும் என்பதை நிரூபித்தாள். குளித்து முழுகி, பழசானாலும் சுத்தமான ஆடையை உடுத்துக் கொண்டால் யாரானாலும் அருகில் உட்காரவைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியும் என்பது தெரிந்தது. வந்திருந்த பிச்சைக்காரி சிரிப்பு மூட்டும்படிப் பேசுவதில் கெட்டிக்காரி போலும்! அடிக்கடி ‘களுக்’ ‘களுக்’ என்ற சப்தம் கேட்டது. என் மனைவிக்கு அவள் விழுந்து விழுந்து பணிவிடை செய்வதைக் கண்டு நானே பிரமித்து விட்டேன். என்னையே கேலிசெய்து கொள்ளும்படியாக இருந்தது, சற்றுமுன் எனக்குத் தோன்றிய பயம்.

சாயந்தரம் இருக்கும்; கருக்கல் நேரம். என் மனைவியும் அந்த வேலைக்காரியும் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் முன்கூடத்தில் விளக்கேற்றிவிட்டு ஒரு புஸ்தகத்தை வியாஜமாகக் கொண்டு அவளைக் கவனித்தவண்ணம் இருந்தேன். நான் இருந்த ஹாலுக்கும் அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையில் நடுக்கட்டு ஒன்று உண்டு. அதிலே நான் ஒரு நிலைக் கண்ணாடியைத் தொங்கவிட்டு வைத்திருந்தேன். அவர்களுடைய பிம்பங்கள் அதிலே நன்றாகத் தெரிந்தன.

“நீ எங்கெல்லாமோ சுத்தி அலஞ்சு வந்திருக்கியே; ஒரு கதை சொல்லு” என்றாள் என் மனைவி.

“ஆமாம். நான் காசி அரித்துவாரம் எல்லா எடத்துக்கும் போயிருக்கிறேன். அங்கே, காசியில் ஒரு கதையைக் கேட்டேன்; உனக்குச் சொல்லட்டா?” என்றாள்.

“சொல்லேன்; என்ன கதை?” என்று கேட்டாள் என் மனைவி.

“அஞ்சுநூறு வருச மாச்சாம். காசியிலே ஒரு ராசாவுக்கு ஒத்தைக் கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல அளகு தேடிப் புடிச்சாலும் கெடெக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும் படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன். எந்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம் தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு மந்திரி மவனெக் கட்டிக்கிடணும்னு ஆசை.

“இது அவனுக்குத் தெரிஞ்சுப்போச்சு; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு? அந்தக் குருவுக்கு…”

என்ன அதிசயம்! நான் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா அல்லது கையில் உள்ள புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேனா? கையிலிருப்பது ‘சரித்திர சாசனங்கள்’ என்ற இங்கிலீஷ் புஸ்தகம். அதிலே வாராணசி மகாராஜன் மகளின் கதை என் கண்ணுக்கெதிரே அச்செழுத்துக்களில் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கையில் விரித்துவைத்த பக்கத்தில் கடைசி வாக்கியம், ‘அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது’ என்ற சொற்றொடரின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு. மூளை சுழன்றது. நெற்றியில் வியர்வை அரும்பியது. என்ன, எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா! பிரித்துப் பிடித்து வைத்திருந்த பக்கத்திலேயே கண்களைச் செருகியிருந்தேன். எழுத்துக்கள் மங்க ஆரம்பித்தன.

திடீரென்று ஒரு பேய்ச் சிரிப்பு! வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக் கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும் கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி. கண்களிலே ரத்தப் பசி! பற்களிலே சதையைப் பிய்த்துத் தின்னும் ஆவல். இந்த மங்கலான பிம்பத்துக்குப் பின்னால் அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள். வசமிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றம் கணத்தில் மறைந்தது; அடுத்த நிமிஷம் அந்தப் பிச்சைக்காரியின் முகமே தெரிந்தது.

“உன் பெயர் என்ன என்று கேட்க மறந்தே போயிட்டுதே” என்று மனைவி கேட்பது எனது செவிப்புலனுக்கு எட்டியது.

“காஞ்சனைன்னுதான் கூப்பிடுங்களேன். கதேலெ வர்ற காஞ்சனை மாதிரி. எப்படிக் கூப்பிட்டா என்ன! ஏதோ ஒரு பேரு” என்றாள் பிச்சைக்காரி.

என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம் ஒப்பவில்லை. என்ன நேரக்கூடுமோ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால் வெடவெடப்புக்கு வரம்பு உண்டா?

நான் உள்ளே போனேன். இருவரும் குசாலாகவே பேசிக் கொண்டிருந்தனர்.

வலுக்கட்டாயத்தின் பேரில் சிரிப்பை வருவித்துக் கொண்டு நுழைந்த என்னை, “பொம்பளைகள் வேலை செய்கிற எடத்தில் என்ன உங்களுக்காம்?” என்ற பாணம் எதிரேற்றது.

காஞ்சனை என்று சொல்லிக் கொண்டவள் குனிந்து எதையோ நறுக்கிக் கொண்டிருந்தாள். விஷமம் தளும்பும் சிரிப்பு அவளது உதட்டின் கோணத்தில் துள்ளலாடியது. நான் வேறு ஒன்றும் சொல்ல முடியாமல் புஸ்தக வேலியின் மறைவில் நிற்கும் பாராக்காரன் ஆனேன். மனைவியோ கர்ப்பிணி. அவள் மனசிலேயா பயத்தைக் குடியேற்றுவது? அவளை எப்படிக் காப்பாற்றுவது?

சாப்பிட்டோ ம். தூங்கச் சென்றோம். நாங்கள் இருவரும் மாடியில் படுத்துக் கொண்டோ ம். காஞ்சனை என்பவள் கீழே முன்கூடத்தில் படுத்துக் கொண்டாள்.

நான் படுக்கையில் படுத்துத்தான் கிடந்தேன். இமை மூட முடியவில்லை. எப்படி முடியும்? எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ? இன்று மறுபடியும் அந்த வாசனை வரப்போகிறதா என்று மனம் படக்கு படக்கென்று எதிர்பார்த்தது.

எங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும் வேலையை ஆரம்பித்தது.

பதினோராவது ரீங்காரம் ஓயவில்லை.

எங்கோ கதவு கிரீச்சிட்டது.

திடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து பிறாண்டிக் கொண்டு நழுவின.

நான் உதறியடித்துக்கொண்டு எழுந்தேன். நல்ல காலம்; வாய் உளறவில்லை.

என் மனைவியின் கைதான் அசப்பில் விழுந்து கிடந்தது.

அவளுடையதுதானா?

எழுந்து குனிந்து கவனித்தேன். நிதானமாகச் சுவாசம் விட்டுக் கொண்டு தூங்கினாள்.

கீழே சென்று பார்க்க ஆவல்; ஆனால் பயம்!

போனேன். மெதுவாகக் கால் ஓசைப்படாமல் இறங்கினேன்.

ஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது.

மெதுவாக முன் கூடத்தை எட்டிப் பார்த்தேன். வெளிவாசல் சார்த்திக் கிடந்தது. அருகிலிருந்த ஜன்னல் வழியாக விழுந்த நிலா வெளிச்சம் காலியாகக் கிடக்கும் பாயையும் தலையணையையும் சுட்டிக் காட்டியது.

கால்கள் எனக்குத் தரிக்கவில்லை. வெடவெடவென்று நடுங்கின.

திரும்பாமலே பின்னுக்குக் காலடி வைத்து நடந்து மாடிப்படியருகில் வந்தேன். உயரச் சென்றுவிட்டாளோ?

விடுவிடு என்று மாடிக்குச் சென்றேன்.

அங்கே அமைதி.

பழைய அமைதி.

மனம் தெளியவில்லை.

மாடி ஜன்னலருகில் நின்று நிலா வெளிச்சத்தை நோக்கினேன்.

மனித நடமாட்டம் இல்லை.

எங்கோ ஒரு நாய் மட்டும் அழுது பிலாக்கணம் தொடுத்து ஓங்கியது.

பிரம்மாண்டமான வௌவால் ஒன்று வானத்தின் எதிர் கோணத்திலிருந்து எங்கள் வீடு நோக்கிப் பறந்து வந்தது.

வெளியே பார்க்கப் பார்க்கப் பயம் தெளிய ஆரம்பித்தது. என்னுடைய மனப்பிரமை அது என்று நிதானத்துக்கு வந்தேன்.

ஆனால் கீழே!

மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.

கீழே இறங்கினேன்.

தைரியமாகச் செல்ல முடியவில்லை.

அதோ! காஞ்சனை பாயில் உட்கார்ந்துதான் இருக்கிறாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். விஷச் சிரிப்பு. உள்ளமே உறைந்தது. நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு, “என்ன, தூக்கம் வரவில்லையா?” என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறினேன்.

அப்பொழுது சாம்பிராணி வாசனை வந்ததா? வந்தது போலத் தான் ஞாபகம்.

நான் எழுந்திருக்கும்போது நெடுநேரமாகிவிட்டது.

“என்ன, வரவரத்தான், இப்படித் தூங்கித் தொலைக்கிறக; காப்பி ஆறுது!” என்று என் மனைவி எழுப்பினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மெல்லக் கொல்வேன் – குறுநாவல்மெல்லக் கொல்வேன் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது அழகான புதினத்தின் வாயிலாக நம்மை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=379018659 key=key-4np4W4YUd13DWMf8W7aD mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’

வணக்கம் தோழமைகளே! எழுத்தாளர் யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’ முழு கதையின் பதிவு உங்களுக்காக. இத்தனை நாளும் தனது பதிவுகளின் மூலம் உங்களது மனதைக் கொள்ளை கொண்ட எழுத்தாளருக்கு ஓரிரு நிமிடங்கள் செலவழித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே ! [googleapps domain=”drive”

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார். கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு