Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 15’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 15’

முதல்ல காபி சாப்பிடுங்க நர்த்தனா. அப்பறம் நீங்க சொல்ல வந்த முக்கியமான விஷயத்தை சொல்லுங்க” பக்கத்திலிருக்கும் ஹோட்டலுக்கு வந்திருந்தனர்.

“முக்கியமான விஷயம்னு எப்படி கண்டுபிடிச்சிங்க?” ஆச்சிரியத்துடன் கேட்டாள் நர்த்தனா 

“இதுவரை நம்ம தொலைபேசில கூடப் பேசிகிட்டது இல்லை. இப்ப என் அலுவலகத்துக்கே பார்க்க வந்திருந்திங்கன்னா முக்கியமான விஷயமாத்தானே இருக்கும்”

தன் கைகளில் இருந்த நகப்பூச்சைப் பார்த்தவாறே சொன்னாள். “மிஸ்டர் சிவபாலன். இந்தக் கல்யாணத்தை நிறுத்திருங்க”

இவளது பதற்றமான மனநிலையைக் கண்டு இதைப் போல ஏதாவது சொல்வாள் என்று ஊகித்திருந்தான் சிவா. 

“காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா”

“வந்து… எங்க அப்பா சில விஷயங்களை அதிகப்படியா சொல்லித்தான் இந்தக் கல்யாணத்தை நிச்சயம் செய்தார். அதில் நகை விஷயமும் ஒண்ணு. நானும் அம்மாவும் காலில் சதங்கை கட்டித்தான் எங்க வீட்டின் வறுமையை விரட்டிட்டு இருக்கோம். இதில் சபைக்கு முன்ன ஜம்பமா இவ்வளவு நகை போடுறேன்னு சொல்லிட்டார். அதில் கால்வாசி கூட எங்களால் செய்ய முடியாது. இது பின்னாளில் தெரிஞ்சு பிரச்சனை வர்றதுக்கு முன்ன நானே எங்க வீட்டு உண்மை நிலைமையை சொல்லிடலாம்னு வந்தேன்” தெளிவாய் பேசினாள். 

சில நிமிடங்கள் கனத்த மௌனம் “நகை விஷயம்தான் கல்யாணத்தை நிறுத்த நீங்க சொல்லும் காரணம்னா, அதை மறந்துடுங்க. நான் பாத்துக்குறேன். வேற ஏதாவது விஷயம்னா சொல்லுங்க. உங்களுக்கு காதல் ஏதாவது… “

“என் நடனத்தை மட்டுமே காதலிக்கிறேன்” பட்டென சொன்னாள். 

சிரித்துக் கொண்டான் “நல்லது”

“இன்னும் ஒரு விஷயம் என் தம்பிங்க ஒரு நிலைக்கு வரும் வரை நான்தான் பண உதவி செய்யணும். அதனால் கல்யாணத்துக்குப் பிறகும் நான் நடன வகுப்பு நடத்துவேன். அதில் சம்பாதிக்கும் பணத்தை எங்க வீட்டுக்குத் தருவேன். அதுக்கு நீங்க மறுப்பு சொல்லக் கூடாது”

சம்மதமாய் தலையசைத்தான் “நான் வங்கில வேலை பார்ப்பதால பல ஊர்களில்  வேலை பார்க்க வேண்டி வரலாம். உங்க நடன வகுப்பைக் காரணம் காட்டி நான் போற இடங்களுக்கு வர மறுக்கக் கூடாது” 

சம்மதம் சொன்னாள் நர்த்தனா “இந்த நகை விஷயத்தில், எனக்கு ஆதரவா  உங்க அப்பாட்ட சண்டை போடப் போறிங்களா?” ஆர்வத்துடன் கேட்டாள் 

‘இப்பதான் தெரிஞ்ச உங்களுக்காக என் அப்பாகூட நான் ஏன் சண்டை போடணும்’ என்று வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கியவன்

 “யாருக்கும் தெரியாதமாதிரி நம்ம பிரச்சனையை தீர்ப்போம்”

ஆனால் யாருக்கும் தெரியாமல் சிவபாலனால் எதுவும் செய்ய முடியாமல் தன் அண்ணன் தனபாலனின் உதவியை நாடினான். 

“இதென்னடா சிவா தலைவலியா போச்சு” எரிச்சலாய் சொன்னான் தனபாலன். இருவரும் தலையை உருட்டி யோசித்து தனபாலனின் மச்சினன் அழகேசனிடம் கடன் வாங்கி நகைக்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் நர்த்தனாவிடம் நகையைத் தந்தான் சிவா. தான் நன்மை கருதி செய்யும் விஷயம் மிகப் பெரிய பழியைத் தன் மேல் போடப் போவதை அப்போது உணரவில்லை சிவபாலன். 

திருமணம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேல் ஓடி விட்டது. நர்த்தனாவின் தம்பிக்கு சென்னையில் ஒரு நாடகம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை கிடைக்க,  அவளது குடும்பம் ஆவடிக்குக் குடி பெயர்ந்தது. நர்த்தனாவின் அம்மா ரத்னா ஆவடியில் நடன வகுப்பைத் தொடங்கினார். அவருக்கு உதவியாக நர்த்தனாவும் ஆவடியில் தங்கி வகுப்புக்களை எடுத்தாள். 

நடன வகுப்புக்கள் பெரும்பாலும் வார விடுமுறைகளில் நடக்கும். அந்த தினங்களில் மனைவி ஆவடியிலும் இவன் செங்கல்பட்டிலும் தங்க வேண்டிய கட்டாயம். மாமியார் வீட்டுக்கு செல்வதற்கே அவனுக்குப் பிடிப்பதில்லை. நர்த்தனா அவனை விட அவளது நாட்டியத்திலும்  அந்தத் துறையில் அவள் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை காட்டினாள். அவளுக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக இருந்தது அவளது தாய் ரத்னாதான். 

திருமணமான ஆறு மாதங்களில் சிவாவை நச்சரித்து சென்னையில் இருக்கும் அரங்கில் நாட்டிய அரங்கேற்றம் நடத்தினாள் நர்த்தனா. இது தேவையா என்ற சிவாவின் கேள்விக்கு 

“நாட்டியத்தைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? இந்த மாதிரி ஸ்டேஜ் பெர்பார்மன்ஸ் தந்தால்தான் நம்ம முகம் வெளியே தெரியும். நிறைய மாணவர்கள் படிக்க வருவாங்க. உங்களுக்குப் புரியுற மாதிரி சொன்னால் இந்த நடன நிகழ்ச்சி எனக்கு ஒரு விளம்பரம்” என்றாள்.

“இப்படி விளம்பரம் செய்து சம்பாதிக்கணும்னு என்ன அவசியம் நர்த்தனா?” 

 

“எனக்கு நடனம்தான் எல்லாம். இதில் புகழ் பெறுவதுதான் என் லட்சியம்னு உங்க கிட்ட  சொல்லிருக்கேன். நீங்க என்னோட முன்னேற்றத்துக்குத்  தடைகல்லா இருப்பிங்கன்னு தெரிஞ்சிருந்தா நம்ம கல்யாணத்தை நிருத்திருப்பேன்” சினம் பொங்கிய  அந்த பதிலுக்குப் பின் சிவா வாயே திறப்பதில்லை. 

 

அவன் கல்யாணத்துக்குப் போட்ட நகையை விற்றுத் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது என்று தெரிய வந்தபோது மிகுந்த வருத்தப்பட்டான். அந்த நகைக்கு வாங்கிய கடனைக் கூட சிவா அடைத்து முடிக்கவில்லை. அதற்குள் அதனை விற்று மேடை அலங்காரத்துக்கும் அழைப்பிதழுக்கும் செலவு செய்திருந்த நர்த்தனாவை முதன் முறையாக வெறுப்போடு பார்த்தான். 

 

“ஒரு அவசரத்துக்கு உபயோகப் படுத்திட்டா… நான் சம்பாதிச்சு நகையைத் திருப்பித் தந்துடுறேன்  மாப்பிள்ளை” என்று கணவன் மனைவி விஷயத்தில் மூக்கை நுழைக்கும் மாமியாரையும், யார் வீட்டு விஷயமோ என்பது போல் தீக்குச்சியால் காது குடைந்தபடி பேப்பரை மேய்ந்து கொண்டிருக்கும் மாமனாரையும் எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியாது ஆத்திரமாய் முறைத்தான். 

கணவனின் வெறுப்பை நர்த்தனா பொருட்படுத்தவில்லை. அந்த நிகழ்ச்சியில் அவள் அடித்த ஜாக்பாட் அப்படி. அவளது தம்பி வேலை செய்த நிறுவனத்தின் உதவி இயக்குனர் சிங்காரத்துக்கு வேறு ஒரு கம்பனியில் சீரியல் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

 

“நர்த்தனா மேடம் டான்ஸ் ஏ கிளாஸா இருந்தது. என் புது தொடருக்கு இசையமைப்பாளர் சூப்பரா ஒரு டைட்டில் சாங் போட்டுத் தந்திருக்கார். அதுக்கு நீங்க நடனமாடுனிங்கன்னா பொருத்தமா இருக்கும். தினமும் பாட்டில் வரும் உங்க முகம் மக்கள் மனதில் தாங்கும். அப்பறம் என்ன மகாலட்சுமி உங்க வீட்டில் குடியேறிடுவா” என்ற சக்கரைப் பாகு வார்த்தைகளைக் கண்டு மயங்கியது நர்த்தனாவின் குடும்பம். 

“அம்மா ஏற்கனவே அவர் என் மேல கோவமா இருக்கார். இதில் ட்ராமால டான்ஸ் ஆடுறேன்னு சொன்னா என்ன நடக்குமோ தெரியல”

“சொல்லாதே…” என்றாள் ரத்தினா சுருக்கமாக 

“என்னம்மா சொல்ற.. இதெல்லாம் மறைக்கக் கூடிய விஷயமா?”

“உன் வீட்டுக்காரனுக்கு இந்த வாய்ப்போட அருமை எங்கே தெரியப் போகுது? ஏற்கனவே செங்கல்பட்டில் வீட்டுக்குள்ள குடிவைக்கனும்னு பாக்குறான். உன் மாமனார் வீட்டில் மதுரை வரசொல்லித் தொந்தரவு தராங்க. இது தெரிஞ்சா அவ்வளவுதான்”

“வேறென்ன செய்யலாம்”

“சத்தம் போடாம இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கலாம். டிவில போட இன்னும் மூணு  மாசமாகும். அதுக்குள்ளே இவங்களை சமாதனப் படுத்திக்கலாம்”

“முடியுமாம்மா”

“நீ பேமஸ் ஆனவுடன் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். அப்ப இந்தத் தப்பு கண்ணுலேயே படாது” 

என்ற அம்மாவின் வார்த்தைகள் தந்த தைரியத்தில் அம்மா வீட்டுடன் சுற்றுலா செல்வதாக சிவாவிடம் போய் சொல்லி படப்பிடிப்பில் கலந்து கொண்டாள். 

மூன்று நாட்கள் நடந்த படப்பிடிப்பு, நான்காவது நாள் பாதியில் நின்றது. 

“என்னாச்சு சிங்காரம்” மேக் அப் அறையில் எப்போது படப்பிடிப்பு நடக்கும் என்றே தெரியாமல் திகைத்து நின்ற ரத்னா கேட்டார். 

“பணம் பற்றாக்குறை… “ ஒரே வார்த்தையில் சொன்னான். 

“நல்ல தயாரிப்பாளர் போ.. நல்ல கம்பனின்னு நினைச்சு வந்தேன்”

“உங்க தம்பி வேலை பார்க்கும் இடம்னு நினைச்சிங்களா மேடம். இது சின்ன கம்பனி. அங்க இங்க இழுத்துப் பிடிச்சுத்தான் ஆரம்பத்தில் படப்பிடிப்பு நடக்கும். நாடகம் ஒளிபரப்ப ஆரம்பிச்சு டிஆர்பி ரேட் நல்லா வந்ததுன்னா பணத்துக்கு பிரச்சனை இருக்காது. படப்பிடிப்பு தடங்கலில்லாம நடக்கும்”

“டைட்டில் பாட்டுக்கே ததிங்கினத்தோம் போடுறிங்க. இனி முழு கதையும் எப்படி எடுத்து, எப்ப ஒலிபரப்பாறது?” ஆத்திரத்தில் சலித்துக் கொண்டார் ரத்னா 

 

“ஆன்ட்டி அவ்வளவு கேவலமா பேசாதிங்க. இரண்டு மாதத்துக்கான பகுதிகளை எடுத்துட்டோம். இசையமைப்பாளர் இப்பதான் டைட்டில் ஸாங் போட்டுத்தந்தார். அதனால இப்ப ஷூட்டிங் வந்தோம்”

“அப்ப வரிசையா எடுக்க மாட்டிங்களா?”

“அட லொகேஷன் வந்ததும் கட கடன்னு சீனை எடுக்க வேண்டியதுதான். எடிட்டிங் டேபிள்ல வெட்டி ஒட்டி ஒவ்வொரு பகுதியா பிரிப்பாங்க.  இந்த பாட்டை எப்படியாவது முடிச்சுட்டா போதும். அடுத்தவாரம் ஸ்லாட் கிடைச்சாக் கூட ஒளிபரப்பிடலாம்” சிங்காரத்தின் தூண்டில் நன்றாகவே வேலை செய்தது. 

“எவ்வளவு பற்றாக்குறை?” என்றார் ரத்னா 

“அஞ்சு லட்சம்தான். உங்ககிட்ட இருந்தா தாங்க ஆண்ட்டி. பணம் வந்தவுடன் பத்து வட்டியோட திருப்பத் தந்துடுறேன்”

“அதெல்லாம் வேணாம்.. என் பொண்ணை ஒரு கதாநாயகியா போடணும்”

“இதெல்லாம் ஓவர். அஞ்சு லட்சத்துக்கு கதாநாயகி பாத்திரமா?”

“இதோ பாரு சிங்காரம்…. எவ்வளவு பணம் தரேன்னுறது  முக்கியம் இல்லை. எந்த மாதிரி சூழ்நிலையில் தரன்னுறதுதான் முக்கியம்”

பேச்சு வார்த்தை முடிந்து ஒரு வழியாய் நர்த்தனாவுக்கு கனமான கதாபாத்திரம் தர சிங்காரம் சம்மதிக்க, ஒப்பந்தத்தை எழுதி வாங்கிக் கொண்டு, மறுநாளே பணத்துடன் வருவதாக வாக்களித்து நர்த்தனாவை அழைத்து கொண்டு செங்கல்பட்டுக்குக் கிளம்பினாள் ரத்னா. 

“ஏம்மா, எந்த நம்பிக்கையில் பணம் தரேன்னு சொன்ன. அவ்வளவு பணத்துக்கு எங்க போக?”

“உன் வீட்டுக்காரர்ட்ட கேக்கலாம். பேங்க்லதானே வேலை பாக்குறார். எங்கயாவது கடன் வாங்கித் தரட்டும்”

“உளறதே நான் நடிக்கிறது தெரிஞ்சாலே அவர் ஒரு ஆட்டம் ஆடுவார். இதில் பணம் கேட்டா காலை உடைச்சு வீட்டில் அடைப்பார். உன் மாப்பிள்ளை பரம சாதுதான் ஆனால் அந்த சாது மிரண்டுட்டா அவ்வளவுதான். அவரைத் தூண்டி விடுற வேலை வேண்டாம்”

“நர்த்தனா, பேங்க் லாக்கர் உங்க ரெண்டு பேர் பெயரிலும் தானே இருக்கு” அன்னை கோடுதான் போட்டாள் நர்த்தனா ரோடே போட்டுவிட்டாள். 

“ஆமாம்மா அதில் அவங்க வீட்டு நகை எல்லாம் அதில் இருக்கு. எனக்குத் தெரிஞ்சு அதை மஞ்சள் பையோடு எடுத்துட்டு லாக்கர்ல வைப்பார். கல்யாணத்துக்கு போட்டுட்டு போக அவங்க அண்ணி கேட்கும்போது பையை அப்படியே எடுத்துட்டுப் போய் தருவார். இன்னொரு பையில் என்னோட மாமியார் நகைகள் இருக்கு. அதையும்  எடுத்து யூஸ் பண்ணிட்டு திரும்ப வச்சுடலாம்”

“ஆடி மாசம் பொறக்கப் போகுது. விசேஷம் இல்லாததால நகை எடுக்க மாட்டாங்க. சிங்காரம் பணம் வந்தவுடன் தந்துடுறேன்னு சொல்லுறான். எப்படி கணக்குப் பாத்தாலும் ஒரு மாசத்தில் நகையை திருப்பி வச்சுடலாம்” 

“அவர் வேற எதுக்காவது லாக்கரை தொறக்கப் போய் நகை இல்லாததைக் கண்டு பிடிச்சுட்டா?”

“அதுக்குத்தான் படப்பிடிப்பில் தந்த கவரிங் நகையை எடுத்துட்டு வந்தேன். இதை அந்தப் பையில் போட்டு வச்சுடலாம்”

அவர்கள் திட்டப்படியே எல்லாம் நடந்தது. அம்மா வீட்டில் தங்கி சிவாவுக்குத் தெரியாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டாள் நர்த்தனா. இரண்டு மாதம் கழித்து, அவர்கள் நாடகம் மதிய நேரத்தில் ஒளிபரப்பானது. அதிக வரவேற்பையும் பெறவில்லை. விளம்பரங்கள் கிடைக்காததால் பணம் சம்பாதிக்க முடியாததைக் காரணம் காட்டி சிங்காரம் நர்த்தனாவின் கடனைத் திருப்பித் தராமல் இழுத்தடித்தான். சிவா கண்டுபிடித்துவிட்டால் தன் நிலைமை என்னாகுமோ என்ற கவலையில் அம்மா வீட்டிலேயே பெரும்பாலும் வாசம் செய்தாள் நர்த்தனா.

ஒரு ஞாயிறு மாலை சிவபாலனே மாமியார் வீட்டுக்கு மனைவியை அழைக்க விஜயம் செய்தான். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்ற போர்வையில் நர்த்தனா தங்கியிருக்க, சிவபாலன் ஆவடிக்கு வந்தபோது ரத்னா மாணவிகளுக்கு அடைவுகளை அபிநயம் பிடித்துக் காட்ட, நர்த்தனா வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள். 

தன் கடுப்பை மறைத்தவாறு “உங்கம்மாவுக்கு உடம்பு தேவலை போலிருக்கே” என்று கேட்டான். 

“இன்னைக்கு கொஞ்சம் தேவலாம். ஓரளவு சரியானதும் சொல்ல சொல்லக் கேக்காம கிளாஸ் எடுக்குறாங்க” என்றாள் நர்த்தனா நடுக்கத்தை மறைத்துக் கொண்டு. 

“அப்ப ராத்திரியே நம்ம வீட்டுக்குக் கிளம்பு நர்த்தனா” என்றான் கட்டளையிடும் தொனியில். 

“இன்னும் ரெண்டு நாள் கழிச்சு” என்று இழுத்தாள். 

“புதன் கிழமை அண்ணாவும் அண்ணியும் வீட்டுக்கு வராங்க. அண்ணி வீட்டு ஆளுங்க வேற வருவாங்க போலிருக்கு” என்றான் 

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அவங்களைப் பாத்துக்க நான் சென்னைல இருக்கேன்னு சொல்லுங்களேன்”

“ஏற்கனவே நீ பாதி நாள் வீட்டில் இருக்குறதில்லைன்னு எங்க உறவுக்காரங்க மத்திலே பேச்சிருக்கு. அவங்க வர நேரம் நீ வீட்டில் இல்லைன்னா நல்லாருக்காது. அதுவுமில்லாம உங்கம்மா இப்ப சரியாயிட்டாங்க போலிருக்கு” ரத்னாவைப் பார்த்தவாறு கேட்டான். 

 “உறவுக்காரங்க ஆயிரம் பேசுவாங்க மாப்பிள்ளை. அதெல்லாம் நாம காதில் போட்டுக்கக் கூடாது” என்று அறிவுரை சொன்ன மாமியாருக்கு பதிலளிக்க விரும்பவில்லை.

“அம்மா வீட்டில் ரெண்டு நாள் தங்கினா பொறுக்காதே” என்ற நர்த்தனாவின் முணுமுணுப்புக்கு பதிலாக 

“வாரா வாரம் வெள்ளிக் கிழமை நீ உங்க வீட்டுக்கு டான்ஸ் கிளாஸ் எடுக்க வந்துடுற. செங்கல்பட்டுக்கு செவ்வாய் கிழமைதான் திரும்பி வர. கிட்டத்தட்ட நான் பாச்சிலர் மாதிரிதான் இருக்கேன். இப்ப கிளம்பி நம்ம வீட்டுக்கு வர” என்றான் கடினமான குரலில். 

செங்கல்பட்டுக்கு நர்த்தனா கிளம்பியபோது அவளுடன் ரத்னாவும் வந்தார். 

“உங்களுக்கு உடம்புக்கு முடியலைன்னு சொன்னிங்க”

“வேற வழி, ஏற்கனவே உங்க உறவுக்காரங்க கொஞ்சம் கடுமையா பேசுவாங்க. என் பொண்ணு சொல் தாங்கமாட்டா. அவளைப் பாத்துக்க நான் கூட வரேன்” என்ற மாமியாரிடம் அவ உங்க பொண்ணில்ல என் மனைவின்னு நினைவு வச்சுக்கோங்க என்று சொல்ல முடியவில்லை.

“நர்த்தனா, செங்கல்பட்டில் அந்த சிங்காரம் தடியன் ஷூட்டிங்ல இருக்கானாம். அவனைப் போய் பார்க்க முடியுதான்னு பாக்குறேன்” என்று மகளிடம் ரகசியமாய் சொன்னாள். 

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 15’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’

பெங்களூரில் அவர்கள் விமானம் தரையிறங்கியது. உஷ்ணம் சற்றும் குறையாமல் காதம்பரி இருக்க, சோனாவுக்கு டாட்டா காட்டிவிட்டு, பிரியாவிடை பெற்று வந்தான் வம்சி. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போலாயிற்று காதம்பரிக்கு. ‘சவாலா விடுற சவால்… அதுவும் காதம்பரிகிட்ட… காலேஜில் எத்தனை பசங்க

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’

செந்தில் வேண்டா வெறுப்பாய் சிம்லாவுக்கு விமான டிக்கெட்டுகள் வாங்கித் தந்தான். சுமனுக்கு மறுக்கவும் முடியவில்லை. அவனுக்கும் இளம் மனைவியுடன் தனியே நேரம் செலவிட ஆசை. சுமன் கட்டிக்கொண்டிருக்கும் சில கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் இருந்தது. புதிதாய் சில ப்ராஜெக்ட்ஸ் கிடைத்தது.