Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8

நாகன்யா – 08

 

நாகேஸ்வரன் மனது அமைதியற்றுத் தவித்தது. வீட்டுக்குச் சென்றவர் நேராகக் கிணற்றடிக்குச் சென்று தலைக்குத் தண்ணீர் வார்த்தார். கைபாட்டுக்கு கப்பியில் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றினாலும் சிந்தனை முழுவதிலும் இறந்தவர்கள் யாராக இருக்கும் என்ற எண்ணம் தான் சுற்றிச் சுற்றி வந்தது. மை பூசியிருந்த முகங்கள் மந்திரவாதிகளாக இருக்குமோ? இல்லை திருடர்களாக இருப்பார்களோ? என்று பலவிதமான யோசனையில் குழம்பிப் போயிருந்தவரை தேவியின் உரத்த குரல் நடப்புக்குக் கொண்டு வந்தது.

 

தேவியின் அழுகைக் குரலில் பதறியடித்து ஈரத் துண்டோடே உள்ளே ஓடியவருக்குக் கிடைத்த செய்தி ஒன்றும் கொஞ்சமும் உவப்பானதாக இல்லை. 

 

“என்னங்க.. நம்ம நாக ராஜன் இறந்து கிடக்கானாம்.. இப்ப தான் பூசாரி ஐயா வந்து சொன்னார்.. நீங்க எங்க போயிருந்தீங்கள்? நாகம்மா கோவிலுக்குப் போய்ட்டா. அவ பிள்ளை மாதிரி வளர்த்தாளே.. இந்த இழப்பை எப்பிடித் தாங்கப் போறாளோ தெரியலையே.. என்னாலயே தாங்க முடியலையே..”

 

தேவியின் ஒப்பாரியைக் கேட்டதும் நாகேஸ்வரனுக்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை. என்னதான் நடக்கிறது? அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் நல்லதாக இல்லையே.

 

மேலே சிந்திக்க நேரமின்றி ஈரத்துணியைக் கூட மாற்றும் எண்ணமின்றி கோவிலை நோக்கி ஓடத் தொடங்கினார் நாகேஸ்வரன். தேவியும் அவரைப் பின் தொடர்ந்தார். 

 

கோவிலில் கிராமத்து மக்கள் எல்லோரும் திரண்டிருந்தார்கள். பாம்புப் புற்றின் அருகே நாகன்யா, மடி மீது இறந்த சர்ப்பத்தை வைத்தவாறு திக்பிரமை பிடித்துப் போய் அமர்ந்திருந்தாள். தாய், தந்தையைத் தாண்டி அவள் நெருங்கிப் பழகிய உறவு இந்த நாகம் மட்டுமே.. இருபத்தைந்து வருடங்களாக அவள் மடி மீது தூங்கி அவளோடு விளையாடிய நாகராஜன் இப்போது உயிரற்ற உடலாகக் கிடந்ததை அவளால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. 

 

விழிகள் தெறிக்க விழித்துப் பார்த்தபடி இறந்த உடலைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். கோவிலை அடைந்த நாகேஸ்வரன் கண்ட காட்சி இதுதான். காலம் கடக்க கடக்க நாகன்யாவால் இந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவருவது கடினம் என்று புரிந்து கொண்டவர் அடக்கம் செய்வதற்குரிய ஒழுங்குகளை பார்த்தார். 

 

கோயிலின் பின்புறம் இருந்த புதர்ப் பகுதியில் நீளமாகக் குழி வெட்டி உரிய மரியாதையோடு அடக்கம் செய்து மேலே சமாதியும் எழுப்பினார்கள். மலர் தூவி அந்த இடத்தில் சிறு சர்ப்ப சிலையும் வைத்து நாகராஜன் சமாதியாக பிரதிஷ்டை செய்து விட்டு அனைவரும் கனத்த மனதோடு வீட்டிற்குத் திரும்பினார்கள். 

 

நாகன்யாவோ வீட்டுக்குச் செல்லாமல் வீட்டிற்கு எதிர்ப்புறமாக நடக்க ஆரம்பித்தாள். தேவி முதலிலேயே வீட்டிற்குச் சென்றிருக்க விரக்தியாய் நடந்து சென்று கொண்டிருந்த மகளையே யோசனையோடு பார்த்தார் நாகேஸ்வரன். அப்போது அங்கு வந்த ஈஸ்வர்,

 

“நாகம்மாவுக்கு நாகராஜனின் இழப்பை ஏற்றுக் கொள்ள சிறிது காலம் தேவை. அவர் கொஞ்சம் காலாற நடந்து விட்டு வரட்டும் ஐயா. நான் கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன்..”

 

என்று கூறவும் நாகேஸ்வரன் ஒரு பெருமூச்சோடு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். கால்போன போக்கில் நடந்த நாகன்யா ஆற்றங்கரையோரம் யாருமற்ற ஒரு இடத்தில் முழங்காலில் தலை புதைத்து அமர்ந்து விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். 

 

அவள் பின்னேயே தொடர்ந்து வந்த ஈஸ்வர், அவள் மனப் பாரம் குறையும் வரை அழுது தீர்க்கட்டும் என்று எண்ணியவனாய், அவள் அறியாமல் அங்கிருந்த மரமொன்றின் பின்னால் மறைவாய் அமர்ந்து கொண்டான். 

 

நிமிடங்கள் மணிகளாக அவள் விடாது அழுது கொண்டிருக்கவும் இனியும் அவளை இப்படியே தனிமையில் விடுவது சரியில்லை என்று எண்ணியவனாய் எழுந்து அவள் அருகில் சென்றான்.

 

“நாகம்மா.. இங்க பாருங்கோ.. உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது. அழ வேண்டாம் என்று சொல்லவும் என்னால் முடியவில்லை. ஆனால் தொடர்ந்து அழுவதால் போன உயிர் திரும்ப வரப் போவதில்லை.. உங்கள் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கோ..”

 

கூறியவன் அவள் அருகில் அமர்ந்தான். ஆனால் அமைதியடைவதற்குப் பதிலாக அவனைக் கண்டதும் அவள் அழுகை மேலும் கூடியது. விம்மி வெடித்தவள் கதறி அழத் தொடங்கினாள். ஈஸ்வரோ என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து விழித்தான். அவளோ எதைப் பற்றிய சிந்தனையும் இன்றி விக்கியபடியே  பேச ஆரம்பித்தாள். 

 

“நாகராஜா நான் பிறந்ததில இருந்து என் கூடவே தான் இருந்தான் தெரியுமா? முன்பெல்லாம் வீட்டில் கூட என்னோடே இருப்பான். என் கூடவே தூங்குவான். இப்போதுதான் கொஞ்சகாலமாக கோவிலிலேயே தங்க ஆரம்பிச்சான். எனக்கு அம்மா, அப்பா தவிர இருந்த ஒரே ஒரு உறவு அவன் மட்டும் தான். என் உடன் பிறவா சகோதரன், நண்பன் எல்லாமே அவன் தானே.. என் மனதில் இருப்பதை எல்லாம் அவன் கூடத்தானே பகிர்ந்துப்பேன். இனி நான் யாரிடம் சொல்வேன்? 

 

சின்ன வயசில நான் எங்க போனாலும் என் பின்னாடியே வருவான். அவனுக்குப் பயந்தே என் கூட யாரும் விளையாட வர மாட்டாங்க. ஆரம்பத்தில அது எனக்குக் கவலையாக இருந்தாலும் போகப் போக பழகிடுச்சு. நாகராஜா கூடவே விளையாட ஆரம்பிச்சேன். நான் பந்தை எறிஞ்சால் அதைத் தட்டி விடுவான். இல்லையோ வாயாலே தூக்கிப் போடுவான். 

 

எனக்குக் கிட்டே அந்நிய ஆட்கள் யாரையும் வர விட மாட்டான். எல்லோரும் எங்களுக்கு ஒதுங்கி வழி விடுவாங்க. அவன் கூட நடந்து செல்லும் போது எனக்கு நான் ஏதோ நாட்டு இளவரசியோ இல்லை ராணியோ என்று தோன்றும்.

 

எனக்கு எப்போது சின்னதா இருமல் காய்ச்சல் வந்தால் கூடப் போதும். அவன் எப்பிடித் துடித்துப் போவான் தெரியுமா? என் மடி மீதே படுத்துக் கிடப்பான். நான் சாப்பிடாமல் தானும் சாப்பிட மாட்டான். நான் கொடுத்தால் மட்டும் தான் என்ர கையால் மட்டும் தான் சாப்பிடுவான் தெரியுமா?

 

இனி யார் என் மேல இப்பிடித் தன்னலமில்லாமல் பாசம் காட்டுவினம்? நான் யாரோட இப்பிடி நட்பாகப் பழக முடியும்? என் மனசில இருப்பதை எல்லாம் இனி யாரிடம் சொல்லுவேன்?”

 

மனதில் தோன்றிய விதத்தில் ஏதேதோ கூறிக் கொண்டே சென்றவளின் அழுகையோ கொஞ்சம் கூடக் குறைவதாக இல்லை. அவள் கண்கள் சிவந்து வீங்கித் தாங்கொணா வேதனையோடு துடித்து அழுவதைத் தாங்க முடியாதவனாய் அவளை நெருங்கி அமர்ந்தான் ஈஸ்வர். 

 

மெதுவாக அவள் தோள்களை பற்றித் தன் புறம் திருப்பியவன், அவள் வதனத்தைத் தன் இரு கரங்களிலும் தாங்கிக் கொண்டான். அவள் விழிகளை நேருக்கு நேராய் நோக்கியவன்,

 

“இனிமேல் உனக்கு நான் இருக்கிறேன் நாகன்யா.. நாகராஜனை விட நன்றாக நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன். உன் மனசில உள்ளதெல்லாம் இனிமேல் நீ என்னிடம் சொல்லலாம். நான் உயிரோடு இருக்கும் வரை உனக்கு உற்ற நண்பனாக உயிர் காக்கும் தோழனாக இருப்பேன் கண்மணி..”

 

கூறியவன் அவள் முன்னுச்சியில் மிருதுவாக முத்தமிட்டான். 

 

அங்கே வீட்டிலோ நாகேஸ்வரனுக்கும் தேவிக்கும் பெரும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. விட்டால் தேவி கணவரை அடித்தே விடுவார் போல கொலைவெறியோடு கத்திக் கொண்டிருந்தார். 

 

“உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? நாகம்மாவை ஏன் தனியாகப் போக விட்டீங்கள்? நல்லா இருந்த நாகராஜா திடீரென ஏன் செத்துப் போனான் என்றே தெரியேல்ல.. நாகம்மா இதை எப்பிடித் தாங்குவான்னே புரியாம நான் தவிச்சிட்டு இருக்கேன். 

 

பொண்ணை எப்படியாவது வீட்டுக்குக் கூட்டி வந்து அவளை நம்ம கண் முன்னாடி வைச்சு ஆறுதல் படுத்துவதை விட்டு விட்டுத் தனியாக விட்டிட்டு வந்திருக்கிறீங்களே..”

 

மனைவி பத்ரகாளியாக நிற்பது புரிந்தாலும் மனதிலிருப்பதைச் சொல்லிவிட விழைந்தார் நாகேஸ்வரன்.

 

“தேவி.. உனக்கு ஒரு சங்கதி சொல்ல வேணும். காலையில ஒரு விசயம் நடந்துச்சு. நாகா வந்து என்னை மயானத்துக்குக் கூட்டிட்டுப் போனான். அங்க இரண்டு ஆண்களின் தலை புதைச்சிருந்தது. மை பூசின முகங்கள். மந்திரவாதிகளாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. இப்போது நாகராஜன் திடீரென இறந்ததுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?”

 

மனைவியிடமே கேள்வி கேட்டார் அந்த அப்பாவி புருசர். 

 

“என்ர அம்மாளாத்தை.. நாகம்மா.. தாயே.. நீதான்மா என் பொண்ணையும் இந்த ஊரையும் காப்பாத்த வேணும். என்ர புருசனுக்குத் திடீரென மூளை குழம்பிப் போச்சுது போல.. இப்படியான வேலைகள் நடந்த நேரத்துல என்றைக்கும் இல்லாத அதிசயமாக என் பொண்ணைத் தனியாக வேற அனுப்பியிருக்காரே.. நான் இப்போ எங்கே என்று போய் தேடுவன்.. என்ர நாகம்மா தாயே.. நீதான்மா காப்பாத்த வேணும்..”

 

தேவி அழுதபடியே புலம்ப ஆரம்பித்தார். 

 

“ஈஸ்வர் கூடப் போகிறேன் என்று தான் சொல்லியிருக்கிறான்.. நான் தனியாக அனுப்பவில்லையே தேவி..”

 

என்னதான் பதில் கூறினாலும் நாகேஸ்வரனுக்குத் தான் செய்த தவறு உறைத்து குரலில் சுருதி குறைந்திருந்தது. 

 

“இந்த மனுசனுக்கு உண்மையிலேயே யாரோ மந்திரம் போட்டிட்டாங்க போல இருக்கே.. புத்தி கலங்கிடுச்சுப் போலவே.. நான் என்ன செய்வேன்.. அந்த ஈஸ்வர் யார் என்று உங்களுக்கு என்ன தெரியும்? ஒரு மாதம் பார்த்துப் பழகியவுடன் அவன் நல்லவனாகிடுவானா? மந்திரவாதிக எல்லாம் ஊருக்குள்ள வந்திருக்கிற நேரம் என் பொண்ணைத் தனியாக அனுப்பியிருக்கிறீங்களே.. இப்பவே புறப்படுங்கோ.. என் பொண்ணை வீட்டுக்குக் கூட்டிட்டு வருவோம்..”

 

ஒப்பாரி வைக்காத குறையாக அரற்றிய தேவி ஈரக் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு மகளை தேடிப் புறப்பட்டார். தான் விட்ட பெருந்தவறை உணர்ந்த நாகேஸ்வரனும் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு மனைவியைத் தொடர்ந்தார். இதயமோ வெடித்து விடுவேன் என்றது போல துடித்துக் கொண்டிருந்தது. ஆற்றங்கரையோரமே நாகன்யா செல்வதைப் பார்த்திருந்தவர், அந்தப் பக்கமாகத் தேடிச் சென்றார்.

 

இங்கே ஆற்றங்கரையோரத்தில், இதுவரை தன் சோகத்தில் மூழ்கியிருந்தவளுக்கு ஈஸ்வரின் நெருக்கம் மனதில் உறைக்கவில்லை. அவன் முத்தமிட்டதும் தான் சுயநினைவுக்கு வந்தவளாய் அவனை விழிகள் விரித்து நோக்கினாள். முதன்முதலாக ஒரு ஆண் மகனை நெருக்கத்தில் உணர்ந்தவளின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. 

 

முத்தமிட்டு விட்டு அவளை அப்படியே தன் பரந்த நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். இனம் புரியாத உணர்வில் துடித்த நாகன்யாவின் இதயமோ இப்போது உரிய இடம் வந்து விட்டதை உணர்த்துவது போல லயத்தோடு துடிக்க ஆரம்பித்தது. நாகன்யாவும் அவனோடு முழுமனதாய் ஒன்றிக் கொண்டாள். நாகராஜனை இழந்த வலி இதயத்தின் ஓரத்தில் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தாலும் ஈஸ்வரின் அணைப்பில் தனக்கென ஒரு புது உலகத்தைக் கண்டாள் நாகன்யா. 

 

தேவியும் நாகேஸ்வரனும் ஆற்றங்கரையை அடைந்தபோது கண்டது இந்தக் காட்சியைத்தான். அதுவரை நேரமும் வாய் ஓயாது கணவரைத் திட்டிக் கொண்டு வந்த தேவி இப்போது வாயடைத்துப் போய் பேச்சு வராமல் கணவனைப் பார்த்தார். அவரும் நெற்றி சுருங்க யோசித்தவாறே மனைவியைப் பார்த்தார். 

 

நாகன்யாவை நோக்கி நகர முயன்ற மனைவியின் கையைப் பிடித்துத் தடுத்தவர் மனைவியை அவர்கள் கண்களில் படாதவாறு ஒரு மரத்தின் மறைவுக்கு இழுத்துச் சென்றார். தேவியைப் பார்வையாலேயே பேசவிடாது அடக்கியவர் மெல்லிய குரலில்,

 

“இங்க பாரு தேவி.. இப்ப நாங்க அவைக்கு முன்னால போய் நின்றால் நம்ம பொண்ணுக்குத்தான் அது கஷ்டமாக இருக்கும். நாங்க பார்த்திட்டமே என்று அவ ரொம்ப சங்கடப்படுவா..”

 

கணவன் சொன்னதன் உண்மை புரிய தேவியும் அமைதியானார். இவர்களை அதிகம் காக்க வைக்காது நாகன்யா சிறிது நேரத்திலேயே வீட்டுக்குப் புறப்பட்டாள்.

 

“அச்சோ.. நான் பாட்டுக்கு இங்க வந்து உட்கார்ந்திட்டன். அம்மாவும் அப்பாவும் என்னைத் தேடப் போறாங்க ஈஸ்வர். நான் விரைவாக வீட்டுக்குப் போக வேணும்..”

 

“சரி நாகம்மா.. நானே துணைக்கு வாறன். வாங்கோ.. போவம்..”

 

இருவரும் வீட்டை நோக்கி நடக்க, நாகேஸ்வரனும் தேவியும் குறுக்குப் பாதையில் வீட்டை அடைந்தார்கள். வீட்டுக்கு வந்த நாகன்யா அமைதியாகச் சென்று குளித்து விட்டு வந்தாள். ஈஸ்வர் பொதுவாக நாகேஸ்வரனிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தான் தங்கியிருந்த வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தான். 

 

நாகேஸ்வரன் முதலே மனைவியை எச்சரிக்கை செய்து வைத்திருந்ததால் தேவியும் எதுவும் நடைபெறாத போல வழக்கம்போல நடந்து கொண்டார். சோக வடிவாய் இருந்த மகளை பார்க்கப் பார்க்க தாயுள்ளம் பரிதவித்தது. 

 

அவள் ஈஸ்வரின் நெஞ்சில் சார்ந்திருந்த விதம் தான் ஞாபகத்துக்கு வர அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைப்பது தான் அவளை கவலைகள் மறந்து மகிழ்ச்சியாக வாழ வைக்கும் ஒரே வழி என்று முடிவெடுத்தவராய் கணவனிடமும் தன் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார். நாகேஸ்வரனும் அதே சிந்தனையில்தான் இருந்தார். 

 

நாகன்யா தங்களுடைய பெண் மட்டுமல்லவே. இந்த ஊரின் தெய்வப் பெண்ணாயிற்றே.. தாங்கள் மட்டும் முடிவெடுக்கும் விஷயமல்ல என்பதால் கிராமத்துப் பெரியவர்களோடு பேசி முடிவெடுப்போம் என்று மனைவியிடம் கூறி விட்டுக் கனத்த இதயத்தோடு தூங்கச் சென்றார் நாகேஸ்வரன். நாகராஜன் அவருக்கும் ஒரு பிள்ளை போலத்தானே. அவன் இறப்பு அவரையும் தான் கலங்கடித்திருந்தது. 

 

திருமணம் கூடி வருமா? 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9

நாகன்யா – 09   அன்று காலையும் வழக்கம்போலவே விடிந்தது. பறவைகளின் கீச்கீச்சும் சேவல்களின் கொக்கரிப்பும் ஆலய காண்டாமணி ஓசையின் கணீரென்ற நாதமும் தினம் தினம் நாகன்யா ரசிக்கும் விடயங்கள். மரங்களின் மறைவிலிருந்து மெதுவாய் எழும் சூரியக் கதிர்கள் அந்தக் காலை

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5

அத்தியாயம் – 05   அதிகாலை நான்கு மணிக்கே துயிலெழுந்த ஈஸ்வர் காலைக் கடன்களை கழித்து விட்டு கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து அந்தக் குளிர் நீரிலேயே நீராடினான். நீராடி விட்டு ஈரம் போகத் துண்டால் துடைத்தவன் ஒரு பருத்தி வேட்டியை

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 10யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 10

நாகன்யா – 10   இவ்வளவு விரைவில் நாகேஸ்வரனிடமிருந்து இப்படியொரு கேள்வியை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ஈஸ்வர். ஆச்சரியமாக அவரை நோக்கினான்.    “என்ன தம்பி இப்பிடிப் பாக்குறீங்க?”   “இல்லை ஐயா.. ஊர் பேர் தெரியாத அநாதை என்னைப் போய்