தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 10’

துரை, பெரியார் பஸ்டாண்டில் காளவாசல் வழியே செல்லும் பஸ்ஸில் ஏறினாள் வைஷாலி. இளங்கலை முடித்து விட்டாள். கையில் டிகிரி சான்றிதழ் வாங்கியவுடன் சந்தோஷமாய் மீனாக்ஷி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தோழியர்களிடம் பிரியா விடை பெற்றுக் கிளம்பினாள். அப்பா இறந்ததும் அவர்கள்  கடையை பெரியப்பா கவனித்துக் கொள்கிறார். கூடக் குறைய இருந்தாலும் மாதா மாதம் பணம் வருகிறது. 

அவளும் சங்கரியும் மட்டும்தான் வீட்டில் என்றாலும், பக்கத்தில் பெரியப்பா, சித்தப்பா அவர்கள் மகன்கள் அனைவரும் குடியிருப்பதால் வீட்டுக்கு யாராவது விருந்தினர் வந்தவன்னமிருப்பர்.. செந்திலின் காதல் கல்யாணமும், தந்தையின் மறைவும் பெரிய மனக்காயத்தை உண்டாக்கி இருந்தாலும் அதைத் தவிர வேறு பிரச்சனைகள் இல்லாமல் சொந்தங்களை அனுசரித்து வாழ்தனர் இருவரும். 

சாலி வீட்டில் இறங்கியபோது ஒரு கார் நிற்க, வீட்டினுள் பெண்களின் பேச்சு சத்தம் கேட்டது. உள்ளே இரண்டு புதிய பெண்கள் அமர்ந்திருந்தனர். சங்கென ஒளிர்ந்த நிறமும், கை கழுத்து காதுகளில் மின்னிய வைரமும் அந்த வீட்டிற்கு அவர்களைப் பொருந்தாதவர்களாய் காட்டியது. 

“ஏய் பொண்ணு உன் பேர் என்ன?” என்று அவர்கள் கேட்டது வைஷாலிக்குப் பிடிக்கவில்லை.

 சங்கரி வாயிலாக அவர்களைப் பற்றிய விஷயத்தை அறிந்தாள். ஒருத்தி இளம் வயதினள் முப்பதைத் தொடும் வயது போல் தெரிந்தாள். பேர் அங்கிதாவாம். கீதா என்று அழைப்பார்களாம். மற்றொரு பெண்மணி  அவளது அம்மா பார்க்கவியாம். சினிமாவில் காண்பிக்கும் அம்மாக்களைப் போல் மேக்அப்பில் இருந்தாள். அலட்சியமாய் வைஷாலியைப் பார்த்தாள். 

இருவரும் மும்பையில் பெரிய பணக்காரக் குடும்பமாம். ரியல் எஸ்டேட் பிசினெஸில் அந்தம்மாவின் மகன் சுமன் கொடி கட்டிப் பறக்கிரானாம். அவனது பொறுப்பிலிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றினைத்தான் செந்தில் வாங்க இருக்கிறானாம். மதுரை ராமேஸ்வரம் கோவில்களை தரிசிக்க வந்தவர்கள் செந்திலின் வீடு என்பதால் இங்கு வந்திருக்கிறார்கள். செந்தில், அம்மா தங்கை இருவரையும் தனித்தனியாக அழைத்து, அங்கிதாவையும் அவள் அம்மாவையும் நன்றாக உபசரிக்கும்படி கட்டளையிட்டான். 

அந்த அங்கிதா உளவு பார்க்க வந்திருப்பதைப் போலவே வைஷாலிக்குத் தோன்றியது. இதென்ன அதென்ன என்று கேள்வி கேட்டுத் துளைத்தாள். 

காலை எத்தனை மணிக்கு எந்திருப்பாய், என்ன வேலைகளை செய்வாய்? கல்லூரி எத்தனை மணிக்கு, கல்லூரி முடிந்ததும் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவாய், இரவு வழக்கமாய் என்ன உண்ணுவாய் என்று ஆயிரத்தெட்டு கேள்விகள்

தலையே வலித்தது வைஷாலிக்கு. இருந்தும் அண்ணனுக்காக இந்தத் தொல்லையைப் பொறுத்து அவள் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்து ஒருவழியாய் அனுப்பி வைத்தாள்.

அவர்கள் ஊருக்கு சென்ற சில தினங்களில் வாயெல்லாம் பல்லாக வந்தான் செந்தில்.

“அம்மா நம்ம சாலிக்கு பயங்கர அதிர்ஷ்டம். சுமன் வீட்டில் பொண்ணு கேக்குறாங்க. என்னால இன்னமும் நம்ப முடியல” நம்பாமல் தலையை உலுக்கிக் கொண்டான். 

“யாரது சுமன்?” – வைஷாலி 

“இங்க வந்தாங்கள்ள பார்க்கவிம்மா அவங்க மகன்”

“ஓ…” என்றாள் ஆர்வமில்லாது. 

“என்ன ஓ… எவ்வளவு பெரிய பணக்காரன் தெரியுமா? அவன் கட்டின ஒரு வீட்டை விலை பேசி முடிக்கவே நமக்கு வக்கில்லை. அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுசும் அவனோட கட்டுப்பாட்டில் இருக்கு”

“அதுக்கு என்ன?”

தான் கொண்டு வந்த வரனின் அருமை புரியாமல் உளரும் தங்கையை எரிச்சலாய் பார்த்தான் செந்தில். அங்கிதாவின் சிபாரிசால் அவர்கள் புதிதாய் வாங்கிய இரட்டை படுக்கையறை பிளாட் கணிசமான தள்ளுபடியில் சுமனிடமிருந்து கிடைத்துள்ளது. மீதமுள்ள பணத்துக்கு மதுரை வீட்டை விற்க வேண்டும். வைஷாலி திருமணத்துக்கு மறுத்தால் தள்ளுபடியை அங்கிதா தள்ளுபடி செய்துவிடுவாள். 

இந்த கல்யாணத்தால் மற்றொரு நன்மை ஒரு பைசா செலவில்லாமல் சுமனே திருமணத்தை முடித்துக் கொள்வான். சுமனின் மைத்துனன் என்ற வகையில் செந்திலுக்கும் நிறைய நன்மைகள் உண்டு. 

அங்கிதா, சுமனுக்கு உங்கள் தங்கை வைஷாலியைத் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னபோதே செந்திலுக்கு ஆச்சிரியம். சோனாவோ பொறாமையில் வெந்தே விட்டாள். அவளுக்கு இந்தத் திருமணத்தால் தங்களுக்குக் கிடைக்கப் போகும்  நன்மைகளைச் சொல்லித்தான் சம்மதிக்க வைத்தான். இவனுக்கு ஏதாவது நல்லதென்றால் அதற்கு உடன் பிறந்தவளே தடையாக இருப்பாள் போலிருக்கிறதே. அவனது கோவத்தைக் கண்டு, வீட்டினரை சம்மதிக்க வைக்கும்  பொறுப்பைத்  தன்னதாக்கிக் கொண்டாள் சோனா. 

கற்பூர வாசனை தெரியாத நாத்தனார் கழுதைக்கு உண்மையை உணர்த்திவிடும் துடிப்போடு ஆரம்பித்தாள் 

 “என்ன சாலி, அதுக்கென்னன்னு சுலபமா சொல்லிட்ட? உன் அண்ணன் இந்த ஒரு வருஷமா அலஞ்சு திரிஞ்சு  எவ்வளவு உயர்ந்த சம்பந்தம் கொண்டு வந்திருக்கார். அது புரியாம பேசுறியே. 

சுமன் இருக்காரே…. அவங்க அப்பாவும் ரியல் எஸ்டேட் பிசினஸ் தான். ஓரளவு வசதி. அப்பறம் அங்கிதா பொறந்த ராசி அவர் தொட்டதெல்லாம் பொன். அதிலிருந்து அங்கிதா பெயரில்தான் அவங்க தொழில் எல்லாம். அவதான் அந்த வீட்டு ராணி. அவ கையை நீட்டின பொண்ணுக்கு சுமன் கண்ணை  மூடிட்டுத் தாலி கட்டுவான். அதனாலதான் அங்கிதாவை சரிகட்டி, அவங்க மதுரைக்கு வந்தப்ப வீட்டுக்கு வர செஞ்சோம். நாங்க எதிர்பார்த்த மாதிரியே அவளுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருச்சு. எங்க சாலியை யாருக்காவது பிடிக்காம போகுமா என்ன?” 

நாகரீகமான அண்ணியின் புகழ்ச்சியான வார்த்தைகள் கல்லூரிப் படிப்பை முடித்து சில மாதங்களே ஆன, மதுரையைத் தாண்டி வேறு எங்குமே சென்றிறாத அந்தப் பேதையின் முகத்தை வெட்கத்தால் சிவக்க வைத்தது. 

“நான் வேற நெனைச்சிருந்தேன்” இப்போது சங்கரியின் முறை. 

“என்ன நெனைச்ச?” கோவத்தில் வள்ளென்று தாயிடம் விழுந்தான் செந்தில்.

“உங்க பெரியம்மாவோட அண்ணன் மகன் புலியூர் ஹை ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கான். ஜாதகம் ரெண்டு பேருக்கும் பொருத்தமாருக்கு. உறமுறைலேயே கொடுத்தா நமக்கும் நல்லது. நம்ம கைக்குள்ளயே இருப்பான். எதுவும் ஒண்ணுன்னா உங்க பெரியப்பா பாத்துக்குவாரு. இதையும் கொஞ்சம் யோசிச்சு முடிவெடு தம்பி”  

தாய் பதமாய்த்தான் சொன்னார். ஆனால் அவர் சொன்னதைக் கேட்டால் மைந்தன் போட்ட கணக்கு தப்பாகுமே. 

“அப்ப இவளுக்கு நல்லது கெட்டது செய்ய நீ வரத் தேவையில்லை. உன் பெரியப்பா இருக்கார்ன்னு சொல்லுற. நான் இருக்குற ஊருலயே மாப்பிள்ளை பாத்தா கடைசி வரை தங்கச்சி பக்கத்திலேயே இருக்கலாம், அம்மாவையும் கூடவே வச்சுக்கலாம்ன்னு கனாக் கண்டேன் பாரு என்னைப் பிஞ்ச செருப்பாலேயே அடிக்கணும்”

தன் நன்மைக்குத்தான் மகன் இவ்வளவும் செய்திருக்கிறான் என்பது சங்கரியின் மனதில் மகிழ்வைத்  தந்தது.

“ச்சே… அப்பா ஸ்தானத்தில் நின்னு இந்தக் கழுதைக்குக் கல்யாணம் ஏற்பாடு செஞ்சேன் பாருங்க என்னை சொல்லணும். நீ உன் பொண்ணுக்கு புலியூர் மாப்பிள்ளை பாரு இல்லை கிளியூர் மாப்பிள்ளை பாரு. எனக்கென்ன… கல்யாணம் என்னைக்குன்னு சொன்னா வந்து வாழ்த்திட்டு மொய் எழுதிட்டு போறேன். சோனா… துணியெல்லாம் எடுத்து வைடி. நம்ம மும்பைக்குக்  கிளம்பலாம். வெட்டியா இங்க வந்ததுக்கு ஊரிலேயே இருந்திருக்கலாம்” வெளியே சென்றான் செந்தில். 

மகனின் கோவமே சங்கரியை தலையாட்ட வைத்தது. இருந்தாலும் அவள் மனதில் பல குழப்பங்கள். அதே சந்தேகங்கள் வைஷாலி கேட்டபோது சோனா சொல்லபோகும் பதில்களை ஆர்வத்துடன் கவனித்தார் சங்கரி.

வைஷாலிக்கு போட்டோவில் நல்ல உயரமாய், சிவந்த நிறத்தில், சுருள் முடியில், காந்தப் புன்னகையோடு நின்ற சுமனைப் பிடித்தாலும் அவனுக்குத் தான் ஏற்றவளா என்ற தாழ்வு மனப்பான்மை எழுந்தது. 

“அவருக்கு என்னைப் பிடிச்சிருக்கா”

‘பாம்பேல மால் மாலா அலையுற நான் இதுவரை இவனைக் கண்ணால் கூடப் பார்த்ததில்லை. இவ என்னாடான்னா இந்தக் கோடில இருக்குற மதுரைல உக்காந்துட்டு அவனை வளைச்சுப் போட்டுட்டா’ என்ற கடுப்பை மனதில் புதைத்து 

“ரொம்பப் பிடிச்சிருக்காம்” என்று சிரித்தபடி சொன்னாள் 

“இருந்தாலும்…. அவரெல்லாம் பாம்பே ஆளு. என்னை மாதிரி சாதாரண பொண்ணெல்லாம் சரிபட்டு வருமாண்ணி”

“பாம்பே ஆளுன்னா என்ன? தமிழ்நாட்டுக்காரங்கதானே. அவங்களுக்கு மார்டன் பொண்ணு வேண்டாமாம். குடும்பத்தை கவனிக்கும் பொண்ணுதான் வேணுமாம்”

சிறிது நேரத்தில் மறுபடியும் சோனாவை அழைத்துக் கேட்டாள் “அவருக்கு முப்பத்திரெண்டு வயசுன்னு சொன்னிங்க. ஏன் இதுவரை கல்யாணம் பண்ணிக்கல”

உஷாரானாள் சோனா “அட உங்கண்ணன் மாதிரியே எல்லாரும் சீக்கிரமே  கல்யாணம் செய்துக்க முடியுமா? மும்பைல பொண்ணுங்களே முப்பது வயசில் கல்யாணம் செய்துக்குறது சர்வ சாதாரணம்”

“அதுதான் அவங்க தங்கை அங்கிதாவும் கல்யாணம் செய்துக்கலையா” 

குரல் கொஞ்சம் மட்டுப்பட்டது சோனாவுக்கு “அவளுக்குக் கல்யாணமாச்சு”

“அப்பறம் ஏன் அவங்க வீட்டுக்காரர் வரல…” வியந்து கேள்வி கேட்டாள்.

“ஒரு விபத்தில் குழந்தை பிறக்குற வாய்ப்பு இழந்துட்டாளாம். அதனால இப்ப அண்ணன் வீட்டுக்கே நிரந்தரமா வந்துட்டா”

“இது ரொம்ப மோசம் அண்ணி. அங்கிதா பாவம்” முதன் முறையாக அங்கிதாவின் மேல் பரிதாபம் தோன்றியது வைஷாலிக்கு. 

“அவளும் அவ அம்மாவும் சுமன் கூடத்தான் இருப்பாங்க. அவங்களை மனம் நோகாம பாத்துக்கணும். சுமன் கிட்ட இருக்குற பணத்துக்காக அவனைக் கல்யாணம் செய்துக்குற பெண்கள், அவனோட தங்கையை கடைசி வரை கவனிப்பாங்களா? சந்தேகம்தானே… அதனாலதான் உன்னை மாதிரி நல்ல பொண்ணா தேடினாங்க. இப்ப உன் சந்தேகத்துக்கெல்லாம் விளக்கம் கிடைச்சதா? கல்யாணத்துக்கு சம்மதமா?” ஆவலாய் கேட்டாள் சோனா.

“அதெல்லாம் அம்மாட்ட கேட்டுக்கோங்க அண்ணி” 

வெட்கத்தோடு உள்ளே ஓடிய வைஷாலியைப் பார்த்து வெற்றிப் பெருமிதத்தோடு சிரித்தாள் சோனா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 8’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 8’

அத்தியாயம் – 8 ரஞ்சனின் தோழன் அபிராம்  வெளிநாட்டில் வேலை செய்கிறானாம். நந்தனாவைப் பார்க்கும் ஆவலில் வந்திருந்தான். வழக்கமாய் கல்லூரிக்கு அணிந்து வரும் மஞ்சள் வண்ண சுடியில் பதட்டமாக ரஞ்சனுக்காக அவன் வருவதாக சொன்ன இடத்தில் காத்திருந்தாள். ரஞ்சனைக் கண்டதும் நந்தனாவின்

மாஸ்டர் மெதுவடை – Audio storyமாஸ்டர் மெதுவடை – Audio story

அமரர் கல்கியின் மாஸ்டர் மெதுவடை சிறுகதையை உங்களுக்காக வாசிப்பவர் ஹஷாஸ்ரீ. Download Premium WordPress Themes FreePremium WordPress Themes DownloadPremium WordPress Themes DownloadDownload Nulled WordPress Themeslynda course free downloaddownload karbonn firmwareDownload WordPress Themes Freeudemy