Tamil Madhura ராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்',Uncategorized ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 6

தன் மகன் கடல் தாண்டிப் போகப் போகிறான் என்று அபிராமி யாரிடமும் சொல்லவில்லை. ஒரே வாரத்தில் கைக்குப் பணம் கிடைத்து விடுகிறது.

“இது நான் உனக்குக் கடைசியாகக் கடன் வாங்கித் தந்திருக்கிறேன். நீ முன்னுக்கு வரணும்னு நம்பிக்கையோடு தந்திருக்கிறேன்…”

“அம்மா…! என் அம்மா” என்று கழுத்தைச் சுற்றிச் சிகரெட் வாயுடன் அவள் கன்னத்தில் முத்தம் வைக்கிறான்.

“சீ!”

அருவருப்புடன் கன்னத்தை அபிராமி துடைத்துக் கொள்கிறாள். கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு நாலரை மணி சுமாருக்கு அவன் எப்போதும் சுற்றுப்பயணம் கிளம்பிச் செல்வது போல் சென்றான். வாயிலில் நின்று அவள் அவன் தலை மறையும் வரையிலும் பார்த்துவிட்டு உள்ளே வருகிறாள்…

அவன் காபி டிபன் சாப்பிட்ட தட்டு, டம்ளர் அப்படியே இருக்கிறது. குளித்துவிட்டுப் போட்ட ஈரத்துண்டை வழக்கம் போல் விசிறியிருக்கிறான். முன் அறையில் அவன் படுக்கை, சுவரிலேயே பதிக்கப்பெற்ற அலமாரி, அதில் அவன் துணிகள்… அவளுடைய சில உயர்ந்த உடமைகள், எல்லாம் கல்யாணத்துக்கு முன் இருந்த நிலையிலேயே பிரிவாக்கப் பட்டிருக்கின்றன. சுஜா திருமணமாய் வந்ததும், அவள் வீட்டில் இருந்து ஏற்கெனவே அவள் தனக்கு வாங்கிக் கொண்டிருந்த சிறிய இரும்பு அலமாரியைக் கொண்டு வந்தாள். அதை மட்டும் அவள் தன் அறைக்குள் வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த அறையில் சுவரிலேயே அலமாரி கிடையாது. ஏற்கெனவே ஓர் ஒற்றைக் கட்டில் உண்டு. திருமணம் முடிந்து வந்த பின் வேறு ஒரு கட்டில் வாங்கவில்லை. அந்த ஒற்றைக் கட்டிலில் இப்போது யாரும் படுப்பதில்லை. அதில் பெட்டிகள், படுக்கை ஆகிய சாமான்களை ஏற்றி வைத்திருக்கிறாள். ஸ்டான்ட் தொட்டில் அறையை அடைக்கிறது.

ஏதோ ஒரு நிம்மதி பெற்றாற்போல் அபிராமி சாமான்களை ஒதுக்கி ஒழித்து வைத்துப் பெருக்குகிறாள். இரவுக்குச் சமையலை முடிக்கிறாள். அபூர்வமாகத் தொலைக்காட்சியைப் போட்டுக் கொண்டு உட்காருகிறாள். யாரோ ஒரு வயிரத் தோட்டுக் கிழவியை, ஒரு மூன்றாம் தலைமுறை பேட்டி காண்கிறது.

கிழவி சமூக சேவகி போல் இருக்கிறது.

“அந்தக் காலத்தில் சமூக சேவை செய்யணும்ங்கற எண்ணத்தை எனக்கு ஊட்டியவரே என் கணவர் தான். அவரோட உற்சாகத்தால்தான் மேலும் மேலும் நான் இதெல்லாம் செஞ்சிகிட்டு வரேன். 1956ல, நேரு கையால, பாராட்டு ஸம்மானம் கிடைச்சது…”

“அப்புறம் அம்மா, இந்திரா அம்மையார் கூடப் பாராட்டியிருக்காப்பல இருக்கே…”

“ஆமாம்… பத்மஸ்ரீ கிடைச்சது…”

அந்தப் பத்திரத்தைப் பெரிதாகக் காட்டுகிறார்கள்.

அபிராமி சமூக சேவை என்பது எப்படி, என்ன தொண்டு, என்று தெரிந்து கொள்வதற்காக முழு நேரமும் உன்னிப்பாகக் கவனிக்கிறாள். நரைத்த கூந்தலில் கொள்ளாத மல்லிகைப் பூ, பெரிய குங்குமப் பொட்டு, சுடர்தெறியும் மூக்குத்தி, தோடு வயிரங்கள், உள்ளங்கழுத்து அட்டிகை இவை எல்லாம் அந்தக் கிழட்டு உடலில் மின்னுவதைத்தான் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். திருப்பித்திருப்பி, அவள் மாமனார், கணவர் எல்லோரும் அவளை ஊக்கப்படுத்தியதையும், கூட்டங்களில் பேசச் செய்ததையும், தவிர ஒன்றும் வெளியாகவில்லை.

கடைசியாக, “இப்ப இளந்தலைமுறையினருக்கு நீங்க என்னம்மா அறிவுரை சொல்றீங்க?” என்ற கேள்வியை இளையவள் போடுகிறாள்.

“இளைய பெண்கள் எல்லாரும் இன்றைக்கு நம்ம கலாசாரம், பண்பாடுகளை விட்டுப் போயிட்டிருக்காங்க. அது ரொம்ப வேதனைக்குரியது. நம்ம நாட்டுக்குன்னு தனியா கலாசாரம், பண்பாடு இருக்கு. அதைப் பெண்கள் தான் காப்பாத்தனும். நாட்டைத் தாய்நாடுன்னும் ஆறுகளைப் பெண்கள் பெயராலும் அழைக்கிறோம். அதனால் ஒரு தேசம் தாழறதும் மேல ஏறறதும் பெண்களைச் சார்ந்து தான் இருக்கு. இதை அவங்க உறுதியாக் காக்கணும்…”

உடனே இளைய தலைமுறை திரும்பி உட்கார்ந்து, “பழம் பெரும் சமூக சேவகியாகிய நீங்க இவ்வளவு நேரம் மிக அரிய, பல பயனுடைய கருத்துக்களை விளக்கமாகத் தந்தீர்கள். தொலைக்காட்சியின் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று முடிக்கிறாள்.

அபிராமி விழிக்கிறாள். ‘கலாச்சாரம் பண்பாடு என்றால் என்ன? அது பெண்களை மட்டும் எப்படிப் பொறுப்பாக்குகிறது!… என்ன கருத்தடீ, அது? சொல்லிவிட்டுப் போ!’ என்று முந்தானையைப் பற்றி இழுத்து உலுக்க வேண்டும் போல் இருக்கிறது.

பட்டென்று அதை மூடிவிட்டு வாசற்புறம் வந்து நிற்கிறாள்.

தெருவில் செல்லும் மக்களை, வண்டிகளை, வேடிக்கை பார்த்துக் கொண்டு, சுஜாவை எதிர்பார்க்கிறாள்.

மணி ஆறடித்து, ஆறரை, ஏழும் ஆகிவிட்டது.

சுஜாவைக் காணவில்லை.

குழந்தையுடன் ஆறரைக்கே வந்து விடுவாளே?…

ஏழுக்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை. படலைக்கு வெளியே இருட்டில் கண்களைப் பதித்துக் கொண்டு நிற்கிறாள்.

அக்கம் பக்கம் எல்லாம் தொலைக்காட்சியோடு ஒன்றிக் கிடக்கிறது. தெருவில் வீடுகளில் வெளிச்சம் தரும் ஒளிதான் வருபவர்களை, வண்டிகளை இனம் காட்ட வேண்டும். ஏனெனில் இந்தத் தெருவில் உள்ள இரண்டு விளக்குகளும் எரியவில்லை.

ஏன் வரவில்லை? பஸ், ஸ்கூட்டர் விபத்தா?

அலை பாய்கிறது. இந்நேரம் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் கூடத் தொடர்பு கொள்ள யாருமே இருக்க மாட்டார்களே?

தவித்து உருகிய பிறகு எட்டரை மணிக்கு அவள் மட்டும் வருகிறாள். அதாவது குழந்தை இல்லை. கூட ஓர் இளம்பிள்ளை துணையாக வந்திருக்கிறான்.

“குழந்தைக்கு திடீர்னு ஜுரம், ஃபிட்ஸ் மாதிரி வந்துட்டுதம்மா, பிரேமுக்கு ஃபோன் பண்ணி அவர் வந்து, சில்ட்ரன் ட்ரஸ்ட் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கச் சொல்லிட்டார். உங்ககிட்ட வந்து சொல்லிட்டு வேணுங்கற சாமானை எடுத்திட்டுப் போகணும்னுதான் வந்தேன்…”

“உள்ள வாங்க வின்சென்ட் இப்படி உட்காருங்க. நான் வந்திடறேன்…” கல்லூரி மாணவன் போல் காட்சியளிக்கும் அந்தப் பையன் அவள் காட்டிய இருக்கையில் அமருகிறான்.

“எங்க ஆஃபிஸ் அகௌன்டன்ட் பையன். அவர் தான் ரொம்ப உதவியாகக் கூட வந்தார். குழந்தையை அட்மிட் பண்ண, அவர் பையனை நான் தனியாகப் போக வேண்டாம்னு துணைக்கு அனுப்பினார்…”

அபிராமிக்கு நா எழவில்லை. அவசரமாக அவளுக்குச் சாப்பாடு போடுகிறாள். பிறகு ஃபிளாஸ்க்கில் வெந்நீர், பால் மாவு என்று பையில் எடுத்து வைக்கிறாள். குழந்தைத் துணிகள், இவளுக்கு மாற்றுச்சேலை, எல்லாம் சிறு பெட்டியில் அடுக்கி மூடிக் கொள்கிறாள். “வரேம்மா…”

அபிராமி குரல் தழுதழுக்க வாயிற்படியில் நின்றவாறே, “அந்த ஆஸ்பத்திரி எங்க இருக்கம்மா? காலம நான் உனக்கு காபி, புதுப்பால் எல்லாம் கொண்டு வரேன்” என்று கேட்கிறாள்.

“வரீங்களா? உங்களுக்குக் கஷ்டமா யிருக்காதா? இவங்க வீடு பக்கத்தில இருக்கு… அதனாலதான் சொல்லல. லாயிட்ஸ்ரோட் தெரியுமில்ல…? அந்தப் பக்கம் வரணும்…”

“வரேம்மா, நிச்சயமா வரேன்… இங்க வீட்டில யாருமில்ல. சீனியும் டூர் போயிட்டான்…”

“அப்ப ஒரு ஒம்பது மணிக்கு சாப்பாட்டையே முடிஞ்சா எடுத்திட்டு பத்து மணிக்குள்ள வாங்கம்மா… வரேன்!”

பறந்து கொண்டு போகிறாள்.

குழந்தைக்கு வந்திருக்கும் நோய் சாதாரணக் காய்ச்சல் அல்ல மூளைக்காய்ச்சல். அன்று முழுவதும் குழந்தை மருத்துவர்கள் வந்து வந்து குழந்தையைக் கவனிக்கிறார்கள். தட்டு நிறைய ஊசிகளை வைத்துக் கொண்டு அந்தப்பூ உடலில் மருந்தைச் செலுத்துகிறார்கள்.

தலையைப் போட்டு உருட்டி முனகும் குழந்தையைக் காண அபிராமிக்குச் சங்கடம் தாளவில்லை. ஆனால், சுஜா, அலுவலகம் போகாமல் குழந்தைக்குத் தாயாக, அதன் துயரை, நோவைத் தான் ஏற்க முடியவில்லையே என்று துடிப்புடன் அமர்ந்து அதற்கு ஆறுதல் தர முனைகிறாள்.

இரவும் பகலுமாக ஆஸ்பத்திரியும் வீடுமாக ஒரு வாரம் சோதனையாக நீள்கிறது. ஒரு நாளிரவில் பிரேம் இரவு மூன்று மணி வரையிலும் இருந்து கண்காணிக்கிறான். கவலை கனக்கும் சுஜாவின் முகம். ஏதேதோ திகிலுணர்வுகளை அபிராமிக்குத் தோற்றுவிக்கின்றன. பெண் குழந்தை உறுப்புகள் ஊனமாகிவிடுமோ? கண், செவி… கை கால் அறிவு… உணர்வு…

நினைவில் வரும் தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்கிறாள். தன் பதற்றத்தை அவளால் அந்த இளந்தலைமுறைக்காரி போல் அடக்கிக் கொள்ள முடியவில்லை.

ஒரு வாரத்தில் குழந்தை கண் விழிக்கிறது. “கண்ணம்மா உஷாம்மா…! உஷா…!” என்று கூப்பிட்டால் தாயின் முகம் பார்க்கிறது.

பத்தாம் நாள் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். அடுத்த நாள் சுஜா அலுவலகம் செல்கிறாள்.

அபிராமி அன்று குழந்தையுடன் அதைப் பார்த்துக் கொள்ளும் அரிய பொறுப்பை ஏதோ சாம்ராச்சிய பதவி போல் ஏற்றுக்கொண்டிருக்கிறாள். இருட்டு அறையில் முகம் தெரியாமல் மகன், மருமகள் என்று தான் மோதிக் கொண்டிருந்தாள். இப்போது அந்த இருட்டை விரட்டி அடிக்க, எட்டு மாசக் குழந்தை… ஒளிப் பூவாக மலர்ந்திருக்கிறது.

நீள உடல், பெரிய கண்கள், தலையும் உடலும், புகைப்படத்தலையும், கார்ட்டூன் சித்திரக்காரர் வரைந்த உடலும் சேர்ந்தாற் போல் இருக்கின்றன. உடல் முழுதும், முகத் தெளிவுக்கும் மலர்ச்சிக்குமான வளமையும் தளதளப்பும் இணையவில்லை. சிறு பாதத்தில், ஊசி மருந்து ஏற்றி ஏற்றிக் குழியான காயம் இன்னும் முற்றிலும் ஆறவில்லை.

இவள் அருகில் வந்ததும் கைகளையும் கால்களையும் அசைத்துக் கொண்டு சிணுங்குகிறது.

பெண் குழந்தை. வாழ்வில் இன்னும் என்னென்ன போராட்டங்களுக்கோ தயாராக வேண்டிய இனம். இதை நினைக்கும் போதே கசிவு உள்ளத்தில் பாலாக நெகிழ்கிறது. குழந்தையைத் தூக்கி முகத்தோடு பதித்துக் கொள்கிறாள்.

“கண்ணம்மா…? என்னைப் பெத்தம்மா… ஓ பசிக்கிறதா?” சிணுங்கலும் அழுகையுமாகக் குழந்தை இவளுடன் பேசுகிறது.

கீழே விட்டு விட்டு மாக்கூழைக் கிளறி, ஆற்றி மடியில் வைத்துக் கொண்டு ஊட்டுகிறாள்.

பிள்ளைக் குழந்தை என்று கண் மூடியதொரு பெருமையிலும் கர்வத்திலும் மிதந்து கொண்டு, அவனுக்குப் பசியாற்றிய நாட்களின் நினைவு நெஞ்சில் முட்டுகிறது…

இந்தப் பத்து நாட்களும் அவன் வழக்கம் போல் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறான் என்ற செய்திக்குமேல் சுஜா ஒன்றும் கேட்கவில்லை. குழந்தைக்கு இப்படி வந்துவிட்டதே என்று பிரலாபிக்கவில்லை; அலுத்துக் கொள்ளவில்லை. அவள் தெளிவு, துணிவு, அதே சமயத்தில் பதறாத நிதானம் எல்லாம் இவளை வியக்க வைக்கிறது. அந்த மருத்துவமனைக்கு, ஒரு நாளைக்கு என்ன செலவாயிற்றோ, தெரியாது. பெரிய பெரிய மருத்துவ வல்லுனர்கள் வந்து குழந்தையைப் பார்த்தார்கள். மருந்துகள், சிகிச்சை… ஒரு மூச்சுப் பரியவில்லை அவள்.

அவனை வீட்டில் காணமலிருப்பதே அவளுக்கு ஆறுதலையும், நிம்மதியையும் அளிக்க வல்லதாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சுஜாவின் முகம், வீட்டுக்குள் நுழைந்ததும் இறுகிப் போகவில்லை.

“அம்மா…!” என்று கூப்பிடும் ஒலியில் ஒரு இறுக்கம் விட்ட மலர்ச்சி அலைகள் விடுபடுகின்றன. “உஷா எப்படி இருக்கு? பால் குடிச்சிதா? அழுதாளா?” என்று கேட்டுக் கொண்டு ஓடி வந்து பார்க்கிறாள்.

ஆரஞ்சுப் பழங்கள், மற்றும் வீட்டுக்கு வேண்டிய கறிகாய் சாமான்கள் பையில் நிறைந்திருக்கின்றன.

“தேங்காய் வேணுமோ அம்மா? நான் வாங்காமல் வந்து விட்டேன்… பச்சைக் கொத்துமல்லி என்ன வாசனை பாருங்கள்?” என்று சகஜமாகப் பழகுகிறாள்.

நாட்கள் நழுவ நழுவ, அபிராமிக்குப் பிள்ளையைப் பற்றிய செய்தியை அவளிடம் மறைத்திருப்பது உறுத்துகிறது. அத்துடன், சுந்தராம்மாள் மூலமாக நகையை வைத்துக் கடன் எடுத்து பிள்ளைக்குக் கொடுத்திருப்பதும் சரிதானோ என்ற குடைச்சல் வலிமை பெறுகிறது.

அன்று சுஜா அலுவலகத்திலிருந்து மிகுந்த சோர்வுடன் வருகிறாள். வழக்கம் போல் உற்சாகம் காட்டவில்லை.

காபியைக் குடித்துவிட்டுத் துவண்ட நிலையில் படுக்கிறாள்.

“ஏம்மா? உடம்பு சரியில்லையா?”

“மனசும் சரியில்லையம்மா…”

புண்ணுள்ள இடத்தைத் தொட்டுவிடுகிறாள்.

“டூர் போயிருக்கிறான்னு சொன்னீங்களே? லீவுல போயிருக்கிறான். ஆபீசில ரிஸப்ஷனிஸ்டோ யாரோ, அந்தப் பொண்ணும் லீவாம். என்னை யதேச்சயாப் பாத்துட்டு, ராமாமிருதம் சொன்னார், ‘என்னம்மா, கல்யாணம் ஆனப்புறம் திருந்துவான்னு பார்த்தா, ரொம்ப மோசமாயிருக்கு. ஆபிசுக்கே குடிச்சுட்டுத்தான் வரான்’னு அவர் சொல்றப்ப எனக்கு எண்சாண் ஒரு சாணாப் போயிட்டாப்பில இருக்கு. நான் சொந்தம் பாராட்டல. அவன் யாரோ, நான் யாரோன்னு சுத்தமா துடச்சிட்டேன். ஆனா இப்படி வெளில கேக்கறப்ப அவமானமா இருக்கு…”

அபிராமி குலுங்குகிறாள்.

“…சுஜா, என்னை மன்னிச்சிடும்மா. அப்படியும் நான் உங்கப்பா கிட்டப் போயி, இவனுக்கு இந்தப் பழக்கம் இருக்கு, நீங்க யோசிச்சிட்டுச் செய்யுங்கன்னு சொன்னேன். சகவாசதோஷம், வயசுக் கோளாறு, சுஜி கெட்டிக்காரின்னு உங்கப்பாவும் என் கண்ணை மறைச்சிட்டார். இப்ப, என்னையே முள்ளால பிடுங்கிக்கறேன். எங்கிட்ட சொன்னான், நான் இந்த வேலையை விட்டுடப் போறேன், சவுதில சான்ஸ் இருக்கு, பம்பாய் போய்ப் பார்க்கறேன்னு, அதுக்கு…”

சுஜி இவளைக் கூர்ந்து பார்க்கிறாள்.

“அம்மா நீங்க… பணம் எதானும் குடுத்தீங்களா?…”

“…அவம் பேச்சை விடு. அந்தப் பாவிக்கு நான் தலை முழுகிடறேன். நீ… உன்னை ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு இப்படிப் பண்ணிட்டமேன்னு…”

துயரம் வெடித்து வருகிறது.

“ஷ்… என்னம்மா இது? மூடத்தனமான பாசத்தில் இருந்து நீங்க வெளிப்படணும். வாழ்க்கை சோதனையாப் போயிட்டுது. அதற்காகக் கரைய முடியுமா? நானே தைரியமாக இருக்க, நீங்க எனக்குச் சஞ்சலப் படப் பண்ணலாமா? விட்டுத்தள்ளுங்க. விஷயம் என்னன்னு உங்களுக்குச் சொன்னேன்…”

அபிராமி சஞ்சலத்தை ஒதுக்கித் தள்ளிவிடத்தான் முனைகிறாள்.

குழந்தை தேறி வருகிறது. அம்மா செருப்புப் போட்டுக் கொண்டு வெளியே செல்கையில் தானும் வருவதாகக் கையை ஆட்டிக் கொண்டு தாவுகிறது.

“வாண்டாம் கண்ணா! பாட்டி… டாடா கூட்டிட்டுப் போவாளே?” என்று குழந்தைக்கு ஆசை காட்டும் போது மகிழ்ச்சி சொல்ல முடியாமல் பொங்குகிறது.

இடையில் ஒரு நாள் இருவருமாக குழந்தையைப் பிரேம்குமாரிடம் கொண்டு காட்டி விட்டு வருகிறார்கள்.

நவராத்திரிக் கோலாகலம். வீடுகளில், கோயில்களில் தெருக் கூட்டங்களில் வண்ணங்களைக் கூட்டுகின்றன. இடை இடையே மழை; நச நசப்பு.

அன்று ஞாயிற்றுக்கிழமை. சுஜி, அவள் தோழி பரிமளாவின் புதுமனை புகுவிழாவுக்காகக் காலையில் சென்றிருக்கிறாள்.

அபிராமி குழந்தையை முன்னறையில் விட்டுவிட்டு, உள்ளே ஏதோ வேலையாக இருக்கிறாள். குழந்தை இப்போது, எழுந்து உட்காரப் பிரயத்தனம் செய்கிறாள். முன்பல் ஒன்று வெளித் தெரிகிறது.

வாயிலில் வண்டி நின்ற ஓசை தெரியவில்லை. ஆனால் காலணி ஒலியும், பேச்சொலியும் கேட்கின்றன.

“ஹாய், பேபி…! …”

குழந்தை அழும் ஒலி அபிராமியைத் தள்ளி வருகிறது.

பிரேம்குமார் தான்… “அழறே?…”

“வாங்க டாக்டர்!… சுஜா… சொல்லவேயில்லையே?”

“நான் இந்தப் பக்கம் வந்தேன். குறிப்பாக நம்பரைப் பார்த்துக் கொண்டு, பேபியைப் பார்க்கலாம்னு வந்தேன். சுஜா இல்லையா?…”

“இல்லே. யாரோ ஃபிரண்ட் கிரகப் பிரவேசம்னு போனா…”

குழந்தையிடம் தான் கையைப் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அழுகை மாறுகிறது. ஒரு வளையமான விளையாட்டுச் சாமானைக் கொடுக்கிறார். அது வாயில் வைத்துச் சப்புகிறது.

“ஷி இஸ் பிக்கிங் அப்… அம்மா, உங்க பேத்தி அதிர்ஷ்டசாலி.” அபிராமி நன்றியுணர்வு தளும்ப நிற்கிறாள்.

“வரேம்மா, சுஜா வந்தாச் சொல்லுங்க…”

திரும்ப முயல்கையில், அபிராமி… “கொஞ்சம் உக்காருங்க டாக்டர்!” என்று உள்ளே செல்கிறாள். காபி தயாரிக்கத்தான்.

“அதெல்லாம் ஒண்ணும் வாணாம்மா?… ஒரு டம்ளர் தண்ணீர் கொடுங்க…”

தண்ணீரைக் கொடுக்க மனம் வருமா?

எலுமிச்சம் பழம் பிழிந்து சர்க்கரை போட்டு, கண்ணாடித் தம்ளரில் விட்டுக் கொண்டு வரச் சில விநாடிகள் ஆகின்றன.

அவர் பருகிவிட்டுப் போகிறார்.

டாக்டர், காரில் வந்து சென்றதைக் கண்ணுற்ற எதிர்வீட்டு ரேவதி, திடுதிடுவென்று வருகிறாள். இவளுக்கு ஊரிலுள்ள ஸ்பெஷலிஸ்டுகளிடத்தில் தான் வைத்தியம் செய்து கொள்வதாக, கொண்டதாகச் சொல்லிக் கொள்வதில் தனிப் பெருமை.

“டாக்டர் பிரேம்குமாரா வந்தாரு?… குழந்தைக்கு என்னம்மா?”

“வாங்க… ஒண்ணுமில்ல விளையாடிட்டிருக்கா…”

“பின்ன… அவருக்கு எங்கேஜ்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டுல்ல போகணும்? ஒரு மாசத்துக்கு அவருக்கு எங்கேஜ்மெண்ட்டே கிடைக்காதுன்னு எங்கூட்ல சொன்னாரே? எனக்குத்தா, கால்முட்டி ரெண்டும் விட்டுப் போவுது. பிரேம்குமார்ட்ட வாணா காட்டுவம்னுதா எங்கேஜ்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணச் சொன்னா, கிடைக்கவேயில்லன்னிட்டாரு… எங்க ராஜா சொல்லிச்சி பிரேம்குமார்தான் வந்திட்டுப் போறார்னு…”

“இவளுக்கு அவர்தானே பார்த்தார்? இந்தப் பக்கம் வந்தேன், பார்த்திட்டுப் போகலான்னு வந்தேன்னு வந்தார்…”

“இப்படி எந்த டாக்டரம்மா, கூப்பிடாம பேஷண்டுகளை ஞாபகம் வச்சிட்டு இந்தக் காலத்துல வருவாங்க? ரங்காச்சாரியா? சுஜாவுக்குப் பழக்கம், அவ கூடப் படிச்சாருன்னு சொல்லிட்டாங்க, அதக் கேக்கலான்னுதா வந்தேன்…”

“அந்தக் காலத்துல, சின்னப்பிள்ளையா இருந்தப்ப, இவப்பா டீச்சர்தானே, படிச்சிருப்பார். மொத்தத்துல சிடு சிடுப்பு கிடையாது, நல்ல மாதிரி…”

“அப்ப… எனக்கு சுஜாவைவிட்டே ஒரு எங்கேஜ்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணித்தரச் சொல்லுங்கம்மா…”

இதற்குள் பக்கத்து விட்டுத் தணிகாசலம் வந்து விடுகிறார்.

“பிரேம்குமாரா வந்திட்டுப் போனாரு? குழந்தைக்கு என்னமோ ஏதோன்னு பயந்து போனேன். ஏம்மா…”

அபிராமிக்குச் சங்கடமாக இருக்கிறது.

“அந்தக் காலத்தில் ரங்காச்சாரி குடிசைக்குக் கூடப் போனாரும்பாங்க. இப்பவா! நேத்துப் பாஸ் பண்ணினதெல்லாம் திரையைப் போட்டுட்டு உக்கார்ந்து பிஸினஸ் பண்ணுதுங்க. எப்பேர்ப்பட்ட பேஷன்டானாலும் கூட்டிடடுத்தாம் போக வேண்டி இருக்கு…”

வம்பு என்றால் அல்வாத் துண்டாக அலைபவர்களுக்கு, சிறு மோப்பம் கண்டால் விடுவார்களா?…

குழந்தையின் உயரம் நிறம் எல்லாம், அப்பாவைப் போலா, அம்மாவைப் போலா என்று விமர்சிக்கிறார்கள்.

“எங்கம்மா, சீனி பத்து நாளைக்கு மேலாச்சி, காணல? ராத்திரி அவன் வந்து கதவை இடிப்பான், எனக்கு அதே வழக்கமா முழிப்பு வந்திடும்…”

“பம்பாய் போயிருக்கிறான்…”

“அவனுக்கு ஸதர்ன் ஏரியாதானே? இப்ப நார்த்தும் போறானா?”

“…தெரியல…”

“அவங்க கன்ஸர்ன்ல, ஏகமா ரிட்ரென்ச் பண்ணிட்டாங்க, போன மாசம். மிஸ்மானேஜ்மெண்ட்…”

“அபிராமி அம்மாக்கு, மருமக குழந்தையை ஆபீசுக்குத் தூக்கிட்டுப் போன நாளில முகத்திலியே சுரத்தில்லாம இருந்திச்சி. இப்பதா அவங்க முகத்தில ஒரு சந்தோஷமே இருக்கு…”

“இல்லையா பின்ன? நாங்கூட ஒருநா சுஜி கிட்ட சொன்னேன். வீட்டில அவங்க இருக்கிறப்ப குழந்தைய எதுக்கு பஸ்ஸில இடுச்சிட்டுத் தூக்கிட்டுப் போறன்னு…” இவர்கள் போக மாட்டார்களா என்றிருக்கிறது.

சுற்றி இருக்கும் சமூகத்தின் கண்களுக்கு நல்லவர்களாக வாழும் நிர்ப்பந்தமே இவர்களின் சுதந்தரங்களைப் பறிக்கிறது; போலித்தனம் வளர்க்கிறது. சலனமில்லாத குளப்பரப்பில் பொழுது போக்கற்ற பாலகர்கள் சில்லிகளை வீசி எறிவது போல் அவர்கள் பேசிவிட்டுப் போகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 62ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 62

62 – மனதை மாற்றிவிட்டாய் அடுத்த நாள் சீமந்தம் என அரவிந்த் வீட்டாரும் முந்தைய நாளே இங்கேயே வந்து தங்கி வேலையில் இருக்க அனு நேராக வந்து திவியிடம் “நீ ஏன் இப்டி பண்ண திவி? நான் உன்னை என்ன பண்ணேன்.

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41

41 நீண்ட நாட்களாக தான் கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டான் மாதவன், “சுஜி அன்னைக்கு அந்தக் கொலுசு விஷயத்துல என்ன மன்னிப்பியா?” “நீங்க வேணும்னு செஞ்சு இருக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். அப்பறம் அனிதா பத்தியும் நானும் ரோஸியும் பேசினோம்” தானும்

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 1’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 1’

அத்தியாயம் – 1     ‘தாயே கருமாரி, எங்கள் தாயே கருமாரி  தேவி கருமாரி துணை நீயே மகமாயி’    எல்ஆர் ஈஸ்வரி அதிகாலை ஐந்து மணிக்கும்   தனது தொய்வில்லா வெங்கலக் குரலால் அனைவரையும் எழுப்பி விட்டார்.   ‘ஆடிக்