Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 3

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 3

அத்தியாயம் – 03

 

ஒரு ஐம்பது பேராவது அருள் வாக்குக் கேட்க நின்றிருந்தார்கள். ஏனைய பக்தர்கள் கூட நாகம்மனை வணங்கி விட்டு நாகன்யா அருள்வாக்குச் சொல்லும் அழகைக் காணக் குழுமியிருந்தார்கள். அவள் புகழ் அறிந்து வாராவாரம் அயலூரிலிருந்தெல்லாம் மக்கள் வந்து கூடிவிடுவார்கள். உண்மையான பிரச்சினைகளோடு வருபவர்களுக்குத் தீர்வும், ஏய்க்க முனைபவர்களுக்குத் தண்டனையும் அங்கு நிச்சயம். இதனைக் காண்பதற்கே கூடக் கூட்டம் படையெடுக்கும். 

 

உலகம் என்னதான் தொழினுட்ப வளர்ச்சியில் முன்னேறியிருந்தாலும் கூட நாகன்யாவின் சக்தியை இன்று வரை மக்கள் நம்பத்தான் செய்கிறார்கள். நாகர் கோவில் கிராமம் படிப்பறிவற்ற கிராமம் கூட இல்லை. வயதானவர்கள் கூட எழுத வாசிக்கக் கற்றிருந்தார்கள். அவ்வாறிருக்க நாகன்யாவை அம்மனாக வழிபடுவதை மூடநம்பிக்கை என இலகுவில் ஒதுக்கி விட முடியவில்லை. 

 

கோவில் வட்டாரத்தில் புகைப்படம் எடுப்பதற்குத் தடை போட்டிருந்தார்கள். மீறி எடுப்பவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுவதாகவும், அல்லது புகைப்படம் தெளிவாக வருவதில்லை எனவும் ஒரு நம்பிக்கை நிலவியது. அன்று பக்தர்கள் கூட்டத்தோடு கலந்திருந்த அவன் எப்படியாவது நாகன்யாவை ஒரு புகைப்படம் எடுத்து விடுவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருந்தான். 

 

கனிவு ததும்பும் அவள் விழிகளையே பார்த்திருந்தவனுக்கு மற்றவர்களைப் போல அவளைத் தெய்வமாக எல்லாம் எண்ண முடியவில்லை. மையிட்ட அவள் கருவிழிகளில் ஏதோ ஒரு சோகம் இழையோடுவது போலிருந்தது. எல்லோர் குறைகளையும் தீர்க்கும் அவளுக்கும் ஏதோ மனக்குறை இருப்பதாகத் தோன்றியது. அவள் குறையைத் தீர்த்து அவள் விழிகளாலும் மலர்ந்து சிரிப்பதைக் காண வேண்டும் போல எழுந்த பேராவலைத் தலையைத் தட்டி அடக்கிக் கொண்டான். 

 

ஒரு ஊரல்ல, பல ஊர் மக்கள் தெய்வமாகக் கொண்டாடுபவளை சாதாரண பெண்ணாக எண்ணித் தனது சிந்தனையோட்டம் செல்வதை, ஒரு பக்தனாவது அறிந்து கொண்டால் தான் வீடு போய்ச் சேர்வது ஐயமே என்று உணர்ந்தவன் தான் வந்த வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான். 

 

உள்ளங்கையில் அடக்கி விடக்கூடிய அளவேயுடைய சிறிய கமெராவால் நாகன்யாவை படம் பிடிக்க ஆரம்பித்தான். இது எதையுமே அறியாதவள் போல தொடர்ந்து அருள் வாக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள் நாகன்யா. 

 

மகனுக்கு நாகதோஷம் என்று வந்தவரது மகனையே முதலில் வந்தவரது மகளுக்கு ஏற்ற வரனாய் இணைத்து வைத்தாள். இரு குடும்பங்களும் மகிழ்ச்சியோடு சென்றார்கள். 

 

தனக்குத் தட்டில் வைத்து வந்த பணத்தையோ, நகைகளையோ நாகன்யா தொட்டும் பார்க்கவில்லை. அவற்றைக் கோயில் உண்டியலிலும் போடவில்லை. இருக்கிறவர்கள் தந்தவற்றை இல்லாதவர்களுக்குக் கொடுத்தாள். அன்னம், தண்ணியின்றி மாலை வரை மக்கள் குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைத்தவள், முடிவில் தட்சணையாக வந்த பணத்தை ஒரு சதம் கூட மிச்சமின்றி உரிய முறையில் பகிர்ந்து கொடுத்திருந்தாள். 

 

மடியில் சுருண்டு தூங்கியிருந்த நாகத்தை மெதுவாய் எடுத்துப் புற்றினுள் விட்டவள், மாலைப் பூசையோடு நாகம்மனைத் தரிசித்து விட்டுப் பெற்றோரோடே வீடு திரும்பினாள். 

 

வீட்டுக்குச் சென்றதும் பட்டாடையைக் களைந்து சாதாரண பருத்திச் சேலைக்கு மாறியவள் அன்றைய நாளிதழ்கள் ஒவ்வொன்றாகப் பார்க்க ஆரம்பித்தாள். 

 

அவர்களது வீடு ஓடு வேய்ந்த கிராமத்து வீடென்றாலும் மிகப் பெரிதாக இருக்கும். முன்புறம் மிகப் பெரிய வராந்தா. கிராமத் தலைவரான நாகேஸ்வரன் தன்னைச் சந்திக்க வருபவர்களையெல்லாம் அங்கே வைத்தே பேசி அனுப்பி விடுவார். வரிசைக்கு நாற்காலிகள் போடப்பட்டு, பெரியதொரு மரமேசையும் அதைச் சுற்றியும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. 

 

யாராவது உறவினர்களாக இருந்தால் வராந்தாவைத் தாண்டிக் கூடத்துக்கு அழைத்துச் செல்வார்கள். செவ்வக வடிவில் பரந்த வரவேற்பறையில் ஒரு சுவர் முழுவதையும் வியாபித்திருந்தது நாகன்யா அருள் வாக்கு சொல்லும் காட்சி. திறமையான ஓவியர் ஒருவர் கைபட வரைந்த ஓவியம் நாகன்யாவே எதிரில் பிரசன்னமாயிருப்பது போன்று தத்ரூபமாகக் காட்சியளித்தது. 

 

இன்னொரு பக்கச் சுவரெங்கும் நாகன்யாவின் புகைப்படங்கள் பிறந்ததிலிருந்து வரிசையாகச் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தன. சிறு வயதிலிருந்தே அவள் கூட விளையாடுவது சர்ப்பம் தான் என்பது புகைப்படங்களைப் பார்க்கும் போது புரிந்தது. 

 

வரவேற்பறையில் சிம்மாசனம் போன்றதொரு இருக்கை கருஞ்சிவப்பு நிறத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது. அதே நிறத்தில் வெல்வெட் உறை போட்ட பத்துப் பேர் அமரக்கூடிய ஒரு ஸோபாவும் ‘ட’ வடிவில் போடப்பட்டிருந்தது. ஸோபாக்கு முன்னாலிருந்த சிறிய தேக்குமர மேசையில் கண்ணாடிக் குவளையில் அன்று மலர்ந்த மலர்கள் அழகாக வைக்கப்பட்டிருந்தன. 

 

சுவரோரமாய் ஒரு மேசையில் நாகம்மன் திருவுருவப் படம் வைக்கப்பட்டு ரோஜா மாலை போடப்பட்டிருந்தது. படத்திற்கு முன்னால் காமாட்சி விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது. சாம்பிராணியும் ஊதுவர்த்தியும் சேர்ந்து எழுந்த கலவையான மணம் ஆலயம் ஒன்றுக்குள் பிரவேசித்து விட்ட உணர்வைத் தந்தது. தூரத்திலிருந்து நாகம்மன் ஸ்தோஸ்திரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. 

 

அங்கிருந்த ஒற்றைச் சிம்மாசனத்தில் அமர்ந்தவாறுதான் நாகன்யா பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தாள். பத்திரிகையில் ஆழ்ந்திருந்தவளுக்கு, காதிலே ‘நாகன்யா’ என்ற கம்பீரக் குரல் ஒன்று காதில் கேட்டது. 

 

அவளை யாருமே பெயர் சொல்லி அழைத்ததில்லை. பிறந்ததிலிருந்தே நாகம்மா, அம்மா, தாயே போன்ற அழைப்புக்குப் பழக்கப்பட்டிருந்த மூளைக்கு பெயரைக் கேட்டதும் கிரகித்துக் கொள்ளச் சிறிது அவகாசம் பிடித்தது. அதேநேரம் வரவேற்பறையில் அந்நேரத்தில் அவள் யாரையும் எதிர்பார்க்கவும் இல்லை. பிரம்மையோ என்பது போல மறுபடியும் பத்திரிகையில் கவனமானவளை மறுபடியும் கேட்ட குரல் நிமிர்ந்து பார்க்க வைத்தது. 

 

அவள் நிமிர்வதற்கே காத்திருந்தது போல படபடவெனப் பேசினான் அவன். 

 

“மன்னிக்க வேண்டும் நாகன்யா. வெளியே நின்று கூப்பிட்டுப் பார்த்தேன். யாரும் வெளியே வருவதாக இல்லை. அதுதான் உங்கள் அனுமதியில்லாமலேயே உள்ளே வந்து விட்டேன். அனுமதியின்றி உட்பிரவேசித்ததற்கு தயவுசெய்து மன்னியுங்கள்..”

 

வரவேற்பறை வாயிலில் நின்றவாறு கூறியவனை திகைத்துப் போய் பார்த்துக் கொண்டு நின்றாள் நாகன்யா. அந்நிய ஆண்மகனை அங்கே எதிர்பார்க்காத அதிர்ச்சி அவள் பார்வையில் தெரிந்தது. 

 

பேச்சுக் குரல் கேட்டுச் சமையலறையிலிருந்து வெளியே வந்த தேவியும் கூட வரவேற்பறையின் நடுவே ஆறடியில் உயர்ந்து நின்ற ஆண்மகனைக் கண்டு கொஞ்சம் பயந்து விட்டார். சேலைத் தலைப்பில் ஈரக் கையைத் துடைத்தவாறே, 

 

“ஐயாவைச் சந்திக்க வந்தீர்களா தம்பி.. வெளியே இருங்கோ. கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்..”

 

என்று கூறியவாறே வெளிவாயிலை நோக்கி நடந்தார். அவனும் மறுக்க முடியாதவனாய் அவரோடு சென்றவன், ஒரு முறை திரும்பி நாகன்யாவை அழுத்தமாய் பார்க்கவும் தவறவில்லை. அவன் பார்வை வீச்சு உடலெங்கும் குளிர்பரப்பச் சோர்ந்து போய் அமர்ந்தாள் நாகன்யா. 

 

வெளி வராந்தாவில் அவனை அமர வைத்து விட்டுத் தானும் அங்கேயே அமர்ந்து கொண்டார் தேவி. 

 

“தம்பியை இங்க கண்டதில்லையே.. வெளியூரிலிருந்து வந்திருக்கிறியளா?”

 

“ஆமாம் ஆன்ட்டி.. இந்த ஊரின் சிறப்புகளைக் கேள்விப்பட்டேன். அதையெல்லாம் தொகுத்து ஒரு கட்டுரையாக எழுத ஆசைப்படுகிறேன். நான் ஒரு எழுத்தாளன்.  இங்கு சில நாட்கள் தங்குவதற்கு இடம் தேடினேன். அப்போதுதான் உங்கள் வீட்டில் கேட்டால் ஒழுங்கு செய்வீர்கள் என்று கூறினார்கள். அதுதான் வந்தேன்..”

 

தேவிக்கோ அவனைக் கண்ட நொடி முதலே அவனைப் பிடிக்கவில்லை. இப்போது அவன் வந்திருக்கும் வேலையோ அதை விடப் பிடிக்கவில்லை. என்ன சொல்லி அவனைத் திருப்பி அனுப்பலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே நாகேஸ்வரன் வந்துவிட்டார். 

 

என்றும் இல்லாத அதிசயமாகத் தேவி வராந்தாவில் யாரோ அந்நிய இளைஞனுடன் அமர்ந்திருப்பதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். அவரைக் கண்டதும் எழுந்து கைகூப்பி வணங்கினான் அவன். 

 

“வணக்கம் ஐயா.. என் பெயர் ஈஸ்வர்.. நான் ஒரு எழுத்தாளன். கதை, கட்டுரை, கவிதை எல்லாம் எழுதுவேன். இந்தக் கிராமத்து அம்மனின் மகிமையை அறிந்து அதைப் பற்றி ஒரு புத்தகமாக எழுத வேண்டும் என்ற ஆவலில் இங்கு வந்தேன். புதியவர்களை உங்கள் அனுமதியில்லாமல் இந்த ஊரில் தங்க அனுமதிக்க மாட்டார்களாமே.. அதுதான் எனக்கு ஒரு மாதப் பொழுது இந்த ஊரிலேயே தங்குவதற்கு ஏதும் இடம் ஒழுங்கு செய்து தருமாறு வேண்டிக் கொள்ள வந்தேன். உரிய பணம் செலுத்தி விடுகிறேன்..”

 

தேவியோ அவன் கூறியதைக் கேட்டதும், இல்லை முடியாது என்று சொல்லி விடுமாறு கணவனுக்கு கண்களால் சைகை காட்டினார். ஆனால் நாகேஸ்வரனோ அதைக் கவனித்தால் தானே. சிறிது நேரம் சிந்தனைவயப்பட்டவர்,

 

“சரி தம்பி.  உங்களுக்கு இடம் ஒழுங்கு செய்து தரலாம். ஆனால் இந்தக் கிராமத்தின் சில விதிமுறைகளை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். மீறினால் பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்..”

 

“உங்கள் கட்டளைப்படியே நடப்பேன் ஐயா.. நான் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?”

 

ஆறடிக்கு மேலே வளர்ந்திருந்தும் படித்த களை முகத்தில் தெரிய மிகவும் பணிவாக அவன் கேட்டது நாகேஸ்வரனைக் கவர்ந்தது. வழக்கமாக இங்கு வரும் பத்திரிகையாளர்களிடம் ஒரு தெனாவெட்டுத் தான் தென்படும். கிராமம் என்றாலே பட்டிக்காடு, படிப்பறிவில்லாதவர்கள் என்ற மனநிலையில் தான் அவர்கள் பேச்சிருக்கும். 

 

நாகன்யாவைப் பற்றி வேறு தரக்குறைவாகப் பேசுவார்கள். ‘என்ன பாம்பை வைச்சுப் படம் காட்டுதாமே ஒரு சின்னக்குட்டி..’ நாரசமாய் காதில் விழும் வார்த்தைகளாலேயே இந்தப் பட்டணத்துப் பத்திரிகையாளர்களை வெறுத்தார்கள் நாகர்கோவில் மக்கள். 

 

அதனால் ஈஸ்வரின் அடக்கமே அவரைக் கவர்ந்ததில் பெருவியப்பேதும் இல்லை. மனைவியைக் கவனிக்காமல் அவர்பாட்டில் அவனோடு பேச ஆரம்பித்தார். 

 

“இங்கு தங்குவதற்கு ஹோட்டல்கள் இல்லை. என்னுடைய நண்பரின் வீட்டில் தங்கிக் கொள்ளலாம். இங்கே யாரும் சமைத்த உணவையும் விற்பதில்லை. காலையும் இரவும் நீங்கள் தங்கும் வீட்டிலேயே உண்ணலாம். மதியம் நாகம்மன் கோவிலிலே அன்னதானம் இடுவார்கள். அங்கு சாப்பிடலாம். புகைப்பது, மது அருந்துவது, போதைப் பொருள் உபயோகிப்பது இந்த ஊரில் தடை செய்யப்பட்டுள்ளது.

 

ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்கக் கூடாது. எங்கள் நாகம்மன் அருள்வாக்கு சொல்வதையும் புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது. ரெக்கோட் செய்யவும் கூடாது. ஊருக்குள் நீங்கள் விரும்பிய இடத்துக்குச் சென்று வரலாம். நாகம்மன் கோவில் தவிர்த்து வெளியே நீங்கள் புகைப்படம், வீடியோ எடுப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. எங்கள் ஊர் நாகம்மனை ஆலயத்துக்கு வெளியே கண்டால் கூட அவரைப் புகைப்படம் எடுப்பது, வீடியோப்படம் பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. 

 

இவற்றை மீறினால் நீங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவீர்கள். உங்களை யாரும் பின்தொடர்ந்து கண்காணிக்கப் போவதில்லை. எங்கள் நாகம்மனே அனைத்தையும் கவனித்துக் கொள்வாள். அவள் கோபத்தை மட்டும் சம்பாதித்துக் கொள்ளாமல் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள், செய்யுங்கள்..”

 

“என்னை இங்கு தங்க அனுமதித்ததற்கு மிக்க நன்றி ஐயா. நீங்கள் சொன்ன அனைத்தையும் கவனத்தில் கொண்டு கவனமாக நடப்பேன். உங்கள் நாகம்மனின் அன்பைச் சம்பாதிப்பது மட்டுமே எனது நோக்கம்..”

 

பணிவுடன் கூறியவனை அன்பொழுகப் பார்த்த நாகேஸ்வரன் வேலையாளை அழைத்து அவனிடம் விவரம் சொல்லி ஈஸ்வரை அழைத்துச் செல்லுமாறு பணித்தார். ஈஸ்வரும் மறுபடியும் மறுபடியும் நன்றி தெரிவித்து விட்டு அந்தப் பணியாள் கூடப் புறப்பட்டுச் சென்றான். 

 

அவன் வெளிவாயில் தாண்டிச் சென்றதும் தான் தாமதம் இங்கே தேவி ஒரு மாபெரும் யுத்தத்திற்குத் தயாரானார். 

 

“இப்ப எதுக்கு அவனை இங்க தங்க அனுமதிச்சீங்க?”

 

“ஏன் தேவி? நல்ல அடக்கமான பிள்ளையாக இருக்கிறான்.. எவ்வளவு பணிவாகப் பேசுகிறான் பார்த்தாய் தானே..”

 

“அந்தப் பணிவான பிள்ளை தான் நேராக நம்ம கூடத்துக்கே வந்து நாகம்மாவோடு பேச முயற்சி செய்துச்சு..”

 

“என்ன சொல்லுறாய் தேவி..?”

 

கொஞ்சம் அதிர்ச்சியோடே கேட்டார் நாகேஸ்வரன்.

 

“நானும் வேணாம் வேணாம் என்று எவ்வளவோ சைகை காட்டினேன். நீங்கள் என்னைப் பார்த்தால் தானே.. பத்திரிகைக்காரன் என்றாலே உடனே திருப்பி அனுப்ப வேண்டியது தானே.. அவங்கள் இங்கே வந்து பார்த்து விட்டு நாகம்மாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக எழுதுவது போதாதா?”

 

“தப்பாய் எழுதுபவர்களுக்கு என்ன நடந்தது என்பது உனக்குத் தெரியாதா? பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் ஒருத்தன் வந்திருக்கிறான்.. எழுதிவிட்டுத்தான் போகட்டுமே..”

 

“ஜோசியர் ஐயா சொன்னது மறந்து விட்டதா உங்களுக்கு? நாகபஞ்சமி கழியும் வரை நாகம்மாவுக்கு காலம் கூடாது. கவனமாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்னாரே.. இப்படியான நேரத்தில் அந்நியன் ஒருவனை ஊருக்குள்ளே தங்க விடுவது எனக்கென்றால் நல்லதாகப் படவில்லை..”

 

“எதுக்கு தேவி இப்போது இவ்வளவு பயப்பிடுகிறாய்? எதுவானாலும் அந்த நாகம்மா பார்த்துக் கொள்ளுவா..”

 

“உங்களுக்கென்ன நீங்கள் சொல்லுவீங்கள். ஒரு தாயிட பயம் எனக்குத் தானே தெரியும்..”

 

கூறியவாறே எழுந்து உள்ளே சென்றார் தேவி. நாகேஸ்வரனும் வெளி வராந்தாவிலேயே தாடையைச் சொறிந்தபடி யோசனையில் ஆழ்ந்தார். ஈஸ்வர் பேசியதையும் பெற்றோர்களின் உரையாடலையும் கூட உள்ளிருந்தவாறே கேட்டுக் கொண்டிருந்தாள் நாகன்யா. 

 

ஈஸ்வரைக் கண்ட நொடியிருந்து அவள் மனமோ அவள்பால் இல்லை. என்றும் இல்லாத புதுமையாக இதயம் எம்பி எம்பித் துடித்தது. அவன் வரவு தனக்கு நல்லதா? கெட்டதா? எதுவென்று புரியாவிட்டாலும் அவன் வரவால் ஏதோ மாற்றம் நிகழப்போவதை மட்டும் உணர்ந்து கொண்டாள். 

 

நாகபஞ்சமி அபயம் தருமா? இல்லை பயத்தில் ஆழ்த்துமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8

நாகன்யா – 08   நாகேஸ்வரன் மனது அமைதியற்றுத் தவித்தது. வீட்டுக்குச் சென்றவர் நேராகக் கிணற்றடிக்குச் சென்று தலைக்குத் தண்ணீர் வார்த்தார். கைபாட்டுக்கு கப்பியில் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றினாலும் சிந்தனை முழுவதிலும் இறந்தவர்கள் யாராக இருக்கும் என்ற எண்ணம் தான்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 2யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 2

அத்தியாயம் – 02   நாகம்மன் கோவில் ஊரின் நடுவே உயர்ந்த கோபுரத்தோடு தெய்வீகக் களை சொட்டச் சொட்டக் கம்பீரமாக இருந்தது. ஆலயங்களுக்கேயுரிய மங்கல ஒலிகளோடு சுகந்தமான வாசனையும் வந்து கொண்டிருந்தது. அன்று வெள்ளிக் கிழமையாதலால் அயலூர்களிலிருந்தும் வந்த பக்தர்களால் கூட்டம்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12

நாகன்யா – 12   நாகேஸ்வரனின் குதிரை வண்டியில் விரைவாகவே ஈஸ்வரை நாகேஸ்வரனின் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர். வீடு செல்லும் வழி முழுவதும் நாகன்யா ஈஸ்வரைத் தன் மடிமீது தாங்கி தன் சேலைத் தலைப்பால் அவன் இரத்தப்போக்கை நிறுத்த முயன்று