Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 2

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 2

அத்தியாயம் – 02

 

நாகம்மன் கோவில் ஊரின் நடுவே உயர்ந்த கோபுரத்தோடு தெய்வீகக் களை சொட்டச் சொட்டக் கம்பீரமாக இருந்தது. ஆலயங்களுக்கேயுரிய மங்கல ஒலிகளோடு சுகந்தமான வாசனையும் வந்து கொண்டிருந்தது. அன்று வெள்ளிக் கிழமையாதலால் அயலூர்களிலிருந்தும் வந்த பக்தர்களால் கூட்டம் அலைமோதியது. 

 

வெள்ளிக்கிழமைகளில் நாகன்யா அருள்வாக்குச் சொல்வது வழமை. அதனாலேயே மற்றைய நாட்களை விட வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் பலமடங்கு அதிகம். ஆலய உட்பிரகாரத்தைச் சுற்றி வந்தவள், பின்னர் வெளிவீதியையும் சுற்றி வலம் வந்தாள். அர்ச்சகர்கள், நாகேஸ்வரன், தேவி, ஆலயப் பரிகாரகர்கள், பக்தர்கள் புடைசூழச் சிவப்புப் பட்டாடையில் நாகன்யா நடந்து வந்த காட்ச, அந்த நாகம்மனே வீதியுலா வருவது போலிருந்தது என்றால் மிகையல்ல. 

 

நாகன்யாவைக் கண்டவுடன் எல்லோரும் இரு கரங்களையும் தலைக்கு மேலே உயர்த்தி வணங்கினார்கள். சிலர் அவள் கால்களில் விழ அவளும் ஒரு அமைதி தவழும் புன்னகையோடு அவர்களைத் தூக்கி விட்டாள். சிலர் அவள் காலடி மண்ணை எடுத்துக் கண்களில் ஒற்றிவிட்டுப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள். 

 

அனைவற்றையுமே இயல்பாய் ஏற்றுக்கொண்டு வெளிவீதியை மூன்று தரம் சுற்றி வந்தவள் கிழக்குப் பக்கமாகச் செழித்து வளர்ந்திருந்த அந்தப் பெரிய நாகலிங்க மரத்தடிக்குச் சென்றாள். அந்த மரத்தின் அடிப்பாகத்தைச் சுற்றிப் பிடிப்பதென்றால் குறைந்தது மூன்று பேராவது சுற்றி வளைக்க வேண்டும். அத்தனை வயதானதும் பெரியதும் கூட அந்த நாகலிங்க மரம். 

 

மரத்தினடியில் ஆளுயரத்துக்கு ஒரு பாம்புப் புற்றிருந்தது. அதனை சிவப்பும் மஞ்சளுமாகப் பட்டுத் துணியால் சுற்றிக் கட்டியிருந்தார்கள். விபூதி, சந்தனம், குங்குமத்தோடு அந்தப் புற்றைப் பார்க்கும் எவரும் கையெடுத்துக் கும்பிடத் தயங்க மாட்டார்கள். அப்படியொரு மங்களகரமாக அருளொளி வீசிக் கொண்டிருந்தது அந்தப் பாம்புப் புற்று. 

 

புற்றுக்கருகே சென்ற நாகன்யா சிறிய கிண்ணம் ஒன்றில் அர்ச்சகர் தந்த பாலையூற்றி புற்றின் முன்னால் வைத்தாள். வைத்து விட்டுக் கரங்களைக் கூப்பியவள்,

 

“நாகம்மா.. தாயே..! உனக்குப் பால் கொண்டு வந்திருக்கிறேன். வந்து அருந்திவிட்டு போம்மா..”

 

என்று வேண்டிக் கொண்டதுதான் தாமதம் அந்தப் புற்றுக்குள்ளிருந்து சரசரவென ஒரு ஆறடி நீளமுள்ள நாகபாம்பு வெளியே வந்தது. தனது தலையை விரித்துப் படமெடுத்துச் சுற்றும் முற்றும் பார்த்து விட்டுப் பாலைக் குடிக்க ஆரம்பித்தது. நாகன்யா சிறிதும் அச்சமின்றி அதன் தலையை அன்பு கனியத் தடவிக் கொடுத்தாள். அதுவும் ஏதோ கூடவே வளர்ந்த நாய்க்குட்டி போல அவள் தடவலை அனுபவித்தபடியே பாலைக் குடித்து முடித்தது. 

 

நாகம் பாலை அருந்தி முடித்தவுடன், அர்ச்சகர் நாகலிங்க மரத்தின் கீழேயே பாம்புப் புற்றின் அருகேயே ஒரு மரப் பலகையையிட்டு அதை ஒரு பட்டுத் துணியால் மூடினார். நாகன்யாவும் இயல்பாய் அந்தப் பலகையில் சென்று அமர்ந்து கொண்டாள். அவள் அமர்ந்ததும் தான் தாமதம் அதற்கென்றே காத்திருந்தது போல அந்த நல்லபாம்பு அவள் மடிமீது ஊர்ந்து அவள் நெஞ்சு வழியே தோளில் சென்று கழுத்தைச் சுற்றி அமர்ந்து கொண்டு படம் விரித்தாடியபடி நின்றது. அந்தப் பரமசிவன் கழுத்திலிருந்த சர்ப்பம் போலவே தோற்றமளிக்க காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது இந்தக் காட்சி. 

 

“நாகம்மா.. தாயே.. நீதான் எங்களை ரட்சிக்க வேண்டும்.”

 

என்று கோஷமிட்டவாறே பக்தர்கள் அனைவரும் நாகன்யாவின் முன்னால் நிலத்தில் விழுந்து வணங்கினார்கள். கண்களில் அருளொளி வீசத் தெய்வீகப் புன்னகையோடு, ஸர்ப்ப மாலையோடு அமர்ந்திருந்தவளிடம் வரிசையில் நின்று ஒவ்வொருவராகத் தங்கள் குறைகளைச் சொல்லி அருள் வாக்குக் கேட்க ஆரம்பித்தார்கள். 

 

பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப தட்டிலே வெற்றிலை, பாக்குப் பழங்களோடு விரும்பிய தொகையை வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நாகன்யாவின் அருகேயமர்ந்திருந்த நாகேஸ்வரன் பக்தர்கள் கொடுத்த பிரசாதத் தட்டை நாகன்யா முன்னால் வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார். 

 

“நாகம்மா.. தாயே! செல்வத்தில் குறையில்லாமல் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் என் வசதி வாய்ப்பை வைத்துக் கூட ஒரு நல்ல வரனை என் மகளுக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளுக்குச் சாதகத்தில் நாகதோஷம் இருப்பதாகக் கூறி யாருமே மணக்க முன் வருகிறார்கள் இல்லை. நாகதோஷம் நீங்கவும் அவளுக்கு நல்லதொரு மணவாழ்க்கை அமையவும் நீதானம்மா ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டும். நானூறு மைல் கடந்து உன் புகழ் அறிந்து வந்திருக்கிறேன். என்னை ஏமாற்றி விடாதே தாயே..”

 

அவர் அருகே கைகூப்பியபடி நின்றிருந்த முப்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணைப் பார்த்த நாகன்யாவிற்கு அவள்பால் இரக்கம் சுரந்தது. கண்களை மூடி சில நிமிடங்கள் தியானத்தில் ஆழ்ந்தாள். அப்போது அவள் கழுத்திலிருந்த சர்ப்பம் மெதுவாய் கீழிறங்கி நாகன்யாவுக்கு முன்னால் கைகூப்பியிருந்த அந்த இளம்பெண்ணின் பாதங்களில் ஏறி இறங்கியது. பின்னர் மறுபடியும் நாகன்யாவிடம் சென்று அவள் மடியில் சுருண்டு படுத்துக் கொண்டது. 

 

கண்களைத் திறந்த நாகன்யா தனக்கு முன்பு நின்றிருந்தவர்களைக் கனிவோடு பார்த்தாள். 

 

“நாகம்மா உங்கள் பெண்ணின் பாதங்களைத் தீண்டி அவளின் தோசத்தைப் போக்கி விட்டாள். அம்மன் சந்திதானத்தில் போய் காத்திருங்கள். உங்களுக்கேற்ற வரனையும் அவள் அனுப்பி வைப்பாள்.”

 

அவள் கூறியதுதான் தாமதம், அவள் கால்களில் விழுந்து எழுந்து வணங்கி விட்டுத் தட்சணையாக லட்சத்தில் ஒரு தொகையையும் தட்டில் வைத்துக் கொடுத்து விட்டு கோயிலை நோக்கிச் சென்றார்கள்.

 

அடுத்ததாய் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்கவன், ஐந்து வயதுப் பாலகனோடு வந்திருந்தான். கண்கள் கலங்க,

 

“என் மகனுக்கு இதயத்தில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள் அம்மா.. என்னிடமோ அதற்கேற்ற பணம் இல்லை. நீதான் தாயே என் மகனைக் காக்க வேண்டும்..”

 

அழுகைக் குரலில் கூறியவனையும் அவன் பாலகனையுமே உற்றுப் பார்த்தாள் நாகன்யா. அவர்களை இடப்புறமாகச் செல்லுமாறு பணித்தாள். தன் இடக் கரத்தால் அவர்களை அந்தப் பக்கமாகப் போகச் சொன்னவளின் குரலிலோ அத்தனை கடுமை. அவள் கண்களோ கோபத்தால் சிவந்து பெரிதாகிக் கனலைக் கக்கிக் கொண்டிருந்தன. கூடியிருந்த பக்தர்களுக்கோ இந்தக் காட்சியைக் கண்டு உள்ளுக்குள் கிலி எழ ஆரம்பித்தது. அப்போது அவள் மடியில் அமர்ந்திருந்த நாகமோ சரசரவென ஊர்ந்து சென்று அந்த மனிதனின் பாதங்களில் ஓங்கியொரு போடுபோட்டது. 

 

ஓரிரு நிமிடங்களில் நடைபெற்று விட்ட இந்தச் சம்பவத்தால் அங்கே சில நொடிகள் நிசப்தமே நிலவியது. மூச்சுவிடவும் மறந்து போய் பக்தர்கள் நாகன்யாவையே பார்த்தவாறிருந்தார்கள். அப்போது பாம்புக்கடி பட்டவனும் நாகன்யாவின் காலடியில் வந்து வீழ்ந்தான். 

 

“பொய் சொன்னதற்கு என்னை மன்னித்து உயிர்ப்பிச்சை போடு தாயே.. உன் சக்தியை அறியாமல் உன்னை ஏமாற்ற எண்ணிய இந்தப்பாவியை மன்னித்து விடும்மா.. என்றைக்கும் உன் பக்தனாகவே இருந்து சேவை செய்வேன்.. என் உயிரைக் காப்பாற்று தாயே..”

 

அவன் வேண்டிக்கொண்டிருக்கும் போதே அவன் வாயில் நுரை தள்ளி மயக்கத்தில் ஆழத் தொடங்கினான். நாகன்யா ஆவேசம் அடங்கியவள் போல நாகேஸ்வரனைப் பார்த்தாள். அவரும் உடனே அவள் பார்வையைப் புரிந்து கொண்டவர் போல பாம்புக்கடி வாங்கியவனை அருகேயிருந்த மடத்துக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு மூலிகைச் சாறொன்றை கடிவாயில் பூசி விட்டார். மேலே விசம் ஏறாதவாறு ஒரு வேட்டித் துண்டால் இறுகக் கட்டியும் விட மயங்கிக் கொண்டிருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வர ஆரம்பித்தான். தேவி அவனது பிள்ளையைத் தூக்கிச் சென்று கோவில் பிரசாதத்தைக் கொடுத்து அதன் பசியாற்றிக் கொண்டிருந்தார். 

 

மயக்கம் தெளிந்து எழுந்தவன் உடனே தள்ளாடியபடியே எழுந்து நாகன்யாவிடம் வந்து அவள் பாதங்களில் விழுந்தான். 

 

“என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி தாயே..”

 

கண்களில் நீர் வழியக் கதறியவனைப் பார்த்தவள் விழிகளில் இப்போது கோபம் நீங்கி அருள் பாலித்தது. 

 

“இது உன் குழந்தை இல்லை என்பதும் தெரியும். வீதியில் அநாதையாகக் கிடந்த குழந்தையை எடுத்துப் பிச்சையெடுக்க வைத்து நீ பிழைப்பு நடாத்துவதும் தெரியும். இப்போது இதயப் பிரச்சினை என்று சொல்லி என்னிடம் பணம் பறிக்க வந்திருப்பதையும் நான் அறிவேன். இன்று முதல் நீ ஒழுங்காக வேலை பார்த்து இந்தச் சிறுவனை சொந்தக் குழந்தையாக வளர்த்து ஆளாக்க வேண்டும். அவனை ஒழுங்காகப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வை. இந்த ஊரிலேயே உனக்குத் தங்க இடமும் வேலையும் போட்டுத் தருவார்கள். இனியாவது அடுத்தவர்களை ஏய்த்துப் பிழைக்காமல் நல்லபடியாக வாழப் பழகு..”

 

“உன் ஆணைப்படியே தாயே..”

 

அவன் விழிகள் இரண்டும் கண்ணீரை வடிக்க அவளைத் தொழுதவாறே எழுந்து சென்றான். நாகேஸ்வரன் உடனேயே அங்கிருந்த அவரது உதவியாளர் ஒருவரிடம், அவன் தங்குவதற்கான வீட்டைக் காட்டுமாறு பணித்தார். தனது தோட்டம் ஒன்றின் பரமாரிப்புப் பொறுப்பையும் அவனுக்கு வழங்க சந்தோசமாகத் தான் கூட்டி வந்த சிறுவனையும் அழைத்துக் கொண்டு சென்றான். 

 

அடுத்த பக்தரோ இப்போது நடுங்கியவாறே வந்தார். நாகன்யாவுக்கு அவரைப் பார்த்ததுமே அவர் அச்சம் புரிந்தது. தனது மடியில் சுருண்டிருந்த சர்ப்பத்தின் தலையைத் தடவிக் கொடுத்தவாறே நாகேஸ்வரனைப் பார்த்தவள், 

 

“பெண்ணிற்கு நாகதோஷ நிவர்த்தி வேண்டி வந்தவர் தந்த ஒரு லட்சம் பணத்தையும் இவரிடம் கொடுங்கள்.”

 

நாகேஸ்வரனும் மறுபேச்சின்றி அவள் கூறியவாறே செய்யவும் அந்தப் பக்தர் கண்களில் ஆனந்தக் கண்ணீர். 

 

“நான் வாய் விட்டுச் சொல்லாமலே எவ்வாறு என் குறை அறிந்தாய் தாயே.. என் மனைவி வைத்தியசாலையில் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். ஒரு லட்சம் பணம் குறைந்ததால் சிகிச்சை தாமதமாகிக் கொண்டே செல்கிறது. ஊரிலும் இனி யாரிடமும் கடன் கேட்க வழியில்லாமல் நீயாவது ஒரு வழியைக் காட்டமாட்டாயா என்றெண்ணி வந்தேன். இப்படிக் கேட்காமலேயே பணத்தை அள்ளிக் கொடுத்து என் தேவையைத் தீர்த்து விட்டாயே தாயே.. நீ என்றைக்கும் தீர்க்காயுசோடு வாழ வேண்டும்..”

 

மனமுருகிக் கூறி விட்டு விடைபெற்றுச் சென்றார். 

 

அடுத்ததாகப் பார்க்கவே பணத்தின் உச்சம் தெரிவது போன்று கோட்சூட் அணிந்த ஒருவர் பட்டாடை, நகைகள் அணிந்த மனைவியோடு பூத்தட்டில் ஒரு வெற்றுக் காசோலையோடு நாகன்யாவின் பாதங்களில் வீழ்ந்தார். 

 

“அம்மா.. தாயே.. பணம், பணம் என்று அதன் பின்னே ஓடியதில் நான் பெற்ற பிள்ளையைச் சரியாகக் கவனிக்கத் தவறி விட்டேன். அவன் இன்றைக்கு மது, மாது என்று போதையின் பிடியில் சிக்கித் தவிக்கிறான். தவமிருந்து பெற்ற ஒரேயொரு ஆண்பிள்ளையம்மா.. அவன் அழிய நானே காரணம் ஆகிவிட்டேன். ஏன், எதற்கு என்று கேட்காமல் அவன் கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்ததன் விளைவு இன்று பிள்ளையே எங்களை விட்டுப் போய் விடுவானோ என்று பயமாக இருக்கிறதும்மா. 

 

வெளிநாட்டிலிருந்து கூட எத்தனையோ மருந்துகள் வரவழைத்துக் கொடுத்துப் பார்த்து விட்டேன். மதுவிலக்கு சிகிச்சை நிலையங்களுக்குக் கூட அனுப்பிப் பார்த்தேன். நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லைத் தாயே. இப்போது உன்னை மட்டுமே நம்பி வந்திருக்கிறேன். நீ என்ன கேட்டாலும் செய்கிறேன் தாயே.. ஒரு கோடி கேட்டால் கூடத் தருகிறேன். என் மகனை எப்படியாவது சுகமாக்கித் தந்துவிடும்மா…”

 

கண்களில் நீர் மல்கத் தன் பிரச்சினையைக் கூறியவரிடம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்தவர் தோற்றம். அவர் மனைவியோ அவரை விடத் தளர்ந்து போயிருந்தார். தாங்கள் விட்ட பிழையை உணர்ந்து ஏதாவது வழி கிடைத்து மகன் நல்ல நிலைக்கு வந்திடமாட்டானா என்ற ஏக்கம் அந்த பெற்றவர்கள் முகங்களில் தெளிவாகத் தெரிந்தது. அதனைக் கண்ட நாகன்யாவின் மனதிலும் இரக்கம் சுரந்தது. கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்தாள். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழிந்தும் கூட அவள் விழிகளைத் திறக்கவில்லை. அந்தப் பெற்றோரோ நேரம் செல்லச் செல்ல நெஞ்சம் பதைபதைக்க அவள் வாயிலிருந்து வரும் தெய்வ வாக்குக்காய் காத்திருந்தார்கள்.

 

அவர்களை நன்றாகவே காக்க வைத்துவிட்டு அரை மணி நேரம் கழித்து நாகன்யா கண்களைத் திறந்தாள். அப்போது அவள் மடியிலிருந்த நாகம் மெதுவாய் இறங்கி வரிசையின் இறுதியை நோக்கிச் சரசரவென ஊர்ந்து சென்றது. அதைக் கண்ட பக்தர்கள் சற்றே தள்ளி அதற்கு வழிவிட வரிசையின் இறுதியில் காத்திருந்த ஒரு மனிதர் அருகில் சென்று தலையைத் தூக்கிப் படம் விரித்தாடி விட்டு மறுபடியும் நாகன்யாவிடம் சென்று அவள் தோள்களில் அமர்ந்து கொண்டது.

 

வரிசைக் கடைசி மனிதருக்கோ பந்தயத்தில் ஓடியது போல இருதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. கைகளைக் கூப்பி நாகன்யாவைப் பார்க்க அவரை முன்னே வருமாறு கைகளால் அழைத்தாள் அவள். இதனைக் கண்ட அந்த செல்வந்தருக்கு பெரும் பிரயாசை வந்து ஒட்டிக் கொண்டது. தங்களை விட்டு விட்டு வேறொருவரை அழைப்பதால் தன் மகனின் போதைப் பழக்கத்துக்கு விடிவே கிடைக்காது போல என்று ஒரு பெருமூச்சோடு எண்ணிக் கொண்டார். 

 

கடைசி நபர் முன்னால் வந்ததும் திருவாய் மலர்ந்தாள் நாகன்யா. 

 

“ஐயா..! உங்கள் மகனை பன்னிரு மாத காலங்கள் எங்கள் ஊர் வைத்தியர் நல்லசிவனிடம் கூட்டி வந்து விடுங்கள். ஒரு வருட முடிவில் நீங்கள் வந்து அழைத்துச் செல்லும் போது எந்தவிதப் போதைப் பழக்கமோ, மது, மாதுவைத் தேடுபவனாகவோ இல்லாமல் அறமான வழியில் செல்வம் ஈட்டி இல்லாதவருக்கு உதவுவான். கவலை கொள்ளாதீர்கள். 

 

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த நாகம்மனிடம் நம்பிக்கை வைக்க வேண்டியது தான். பதிலுக்கு நன்றிக்கடனுக்காய் நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும்.”

 

வரிசைக் கடைசியிலிருந்து வந்த நபரைச் சுட்டிக் காட்டியவள், 

 

“இவர் சிறிது தொலைவிலிருக்கும் ஒரு சிற்றூரைச் சேர்ந்தவர். பாடசாலையோ, வைத்தியசாலையோ, உரிய முறையில் வீதிகளோ, மின்வசதியோ இல்லாமல் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவரது கிராமத்தைத் தத்தெடுத்து அங்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுங்கள். நீங்கள் ஒவ்வொன்றாகச் செய்யச் செய்ய உங்கள் மகனில் முன்னேற்றத்தைக் கண்ணூடாகக் காண்பீர்கள்..”

 

அவள் கூறவும் வரிசைக் கடைசி நபரோ உணர்ச்சி வேகத்தில் நாகன்யாவின் கால்களில் வீழ்ந்தார். 

 

கேட்காமலேயே என் ஊருக்கு ஒரு விடிவைத் தந்து விட்டாயே தாயே. அரசுக்கு எழுதி எழுதிக் களைத்துப் போய் உன்னிடமாவது ஒரு வழி கிடைக்காதா என்று வந்தேன் தாயே. எங்கள் வேண்டுதல்கள் வீண் போகவில்லை. அந்த நாகம்மனே உன் உருவில் வந்திருக்கிறாள் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. நன்றி தாயே..”

 

செல்வந்தரும் உணர்ச்சிப்பெருக்கோடு நாகன்யாவின் பாதங்களில் வீழ்ந்தார்.

 

“உன் ஆணைப்படியே தாயே.. இப்போதே இவரது ஊருக்குச் சென்று எல்லாவற்றையும் பார்வையிட்டு தேவையான ஒழுங்குகளை ஆரம்பிக்கிறேன் அம்மா. நாளைக்கே மகனைக் கூட்டி வந்து வைத்தியரிடம் ஒப்படைக்கிறேன். கோடானு கோடி நன்றி தாயே..”

 

மகிழ்ச்சி பொங்கக் கூறியவர் நாகன்யா சொன்ன கிராமத்தவரையும் தனது பென்ஸ் காரில் ஏற்றிக் கொண்டு உடனேயே அந்த ஊரை நோக்கிப் புறப்பட்டார். 

 

பக்தர்கள் கூட்டத்திலிருந்து அங்கு நடைபெறும் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது ஒரு ஜோடி விழிகள். நாகன்யாவின் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாகக் கவனித்த அந்த உருவம், அங்கு உண்மையில் தெய்வத்தின் அருள் இருக்கிறதா? இல்லை மனித மூளைதானா? என்ற ஆராய்வில் யோசனை வயப்பட்டிருந்தது. 

 

நாகன்யா தன் அருள்சக்தியை நிரூபிப்பாளா? இல்லை மனித சதிதான் என்று வீழ்வாளா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 5

அத்தியாயம் – 05   அதிகாலை நான்கு மணிக்கே துயிலெழுந்த ஈஸ்வர் காலைக் கடன்களை கழித்து விட்டு கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து அந்தக் குளிர் நீரிலேயே நீராடினான். நீராடி விட்டு ஈரம் போகத் துண்டால் துடைத்தவன் ஒரு பருத்தி வேட்டியை

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12

நாகன்யா – 12   நாகேஸ்வரனின் குதிரை வண்டியில் விரைவாகவே ஈஸ்வரை நாகேஸ்வரனின் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர். வீடு செல்லும் வழி முழுவதும் நாகன்யா ஈஸ்வரைத் தன் மடிமீது தாங்கி தன் சேலைத் தலைப்பால் அவன் இரத்தப்போக்கை நிறுத்த முயன்று

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8

நாகன்யா – 08   நாகேஸ்வரன் மனது அமைதியற்றுத் தவித்தது. வீட்டுக்குச் சென்றவர் நேராகக் கிணற்றடிக்குச் சென்று தலைக்குத் தண்ணீர் வார்த்தார். கைபாட்டுக்கு கப்பியில் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றினாலும் சிந்தனை முழுவதிலும் இறந்தவர்கள் யாராக இருக்கும் என்ற எண்ணம் தான்