Tamil Madhura யாழ் சத்யாவின் 'நாகன்யா' யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 1

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 1

என்னுரை 

 

வணக்கம் அன்பு நெஞ்சங்களே! 

 

“நாகன்யா” எனும் குறுநாவலோடு உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.

 

எனக்கெல்லாம் ஒரு விசித்திரப் பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு பெயரோ, வரியோ பிடித்து விட்டால் அதைத் தலைப்பாக வைத்து அதற்குப் பொருத்தமாகக் கதை எழுத வேண்டும் என்று எழுத ஆரம்பித்து விடுவது. அந்த வரிசையில் உதித்தவள்தான் இந்த நாகன்யா. 

 

என்னுடைய தாய்லாந்து நண்பியின் மகளின் பெயர் நாகன்யா. அந்தப் பெயரைக் கேட்ட அன்றே மனதில் குறித்துக் கொண்டேன். நாகன்யாவை நாயகியாக வைத்து ஒரு பாம்புக் கதை எழுதியே தீருவது என்று. மூன்று, நான்கு வருடங்கள் கழிந்த பின்னர் இப்போதுதான் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். 

 

கதையில் வரும் ஊர்கள், கோவில்கள், நபர்களின் பெயர்கள், நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. பாம்பு சம்பந்தப்பட்ட கதை என்பதால் அனைத்திலும் ‘நாக’ சேர்த்து விட்டேன். மற்றைய படி நீங்கள் அறிந்த இடங்களையோ,  சம்பவங்களையோ தொடர்புபடுத்தி விடாதீர்கள். எல்லாம் கற்பனையே.

 

இந்தக் கதையைப் பொறுத்தவரை, நான் இதுவரை எழுதியிராத முற்றிலும் புதிய களத்தில் புது முயற்சி. அதனால் குறைகளை சுட்டிக் காட்டினால், அவற்றைத் திருத்திக் கொண்டு என்னுடைய எழுத்தை மேலும் செம்மைப்படுத்த ஏதுவாக இருக்கும். 

 

தொடர்ந்து என் எழுத்துக்களுக்குத் தரும் அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். 

 

என்றும் அன்புடன்

யாழ் சத்யா. 

yaazsathya@gmail.com

 

அத்தியாயம் – 01

 

நாகர் கோவில் நாகம்மன் ஆலய மணி ஐந்து முறை ஒலித்து அதிகாலைப் பூசைகள் நடந்து கொண்டிருப்பதை அறிவித்தது. வழக்கம் போலவே அந்த காண்டாமணியின் ஒலியில் துயிலெழுந்த நாகன்யா, இரு கரங்களையும் ஆலயமிருந்த திசை நோக்கிக் குவித்துக் கண்களை மூடி அந்த நாகம்மனை மனதார வழிபட்டாள். நாகன்யாக்கு அந்த அன்னையும் தந்தையும் அந்த நாகம்மனே. 

 

ஒரு நாள் அதிகாலைப் பூசைக்காக ஆலயம் சென்ற அர்ச்சகர், அங்கு ஆலய வாயிலில் அழுதுகொண்டிருந்த பச்சிளங் குழந்தையைப் பார்த்துத் திகைத்து விட்டார். ஒரு வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு வாயிற் படிக்கட்டில் கிடத்தப்பட்டிருந்தது பிறந்து சில நாட்களேயான இளங்குருத்து. 

 

தாயோ, தந்தையோ நேர்த்திக்கடன் கழிக்க வந்திருப்பார்களோ என்று எண்ணிச் சுற்றும் முற்றும் பார்த்தவரின் கண்களில் குழந்தைக்குரியவர்களாக யாரும் தென்படவில்லை. நாகம்மனை வழிபட வந்தவர்களும் இந்தக் குழந்தையை ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு, அக்குழந்தையின் பெற்றோரைக் கோவிலைச் சுற்றித் தேட ஆரம்பித்தார்கள். 

 

நாகர்கோவில் நாகத்தம்மன் பிள்ளை வரம் அளிப்பதில் வல்லவள். வருடக் கணக்கில் பிள்ளைச் செல்வத்திற்குத் தவித்தவர்கள் கூட நாகம்மனிடம் தங்கள் குறையைக் கூறி விட்டுக் கோயில் வளாகத்திலிருந்த நாகலிங்க மரத்தில் சிறு தொட்டிலைக் கட்டி விட்டுப் போனால் எண்ணிப் பத்து மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பது அவ்வூரில் காலம் காலமாக நம்பி வரப்படும் ஐதீகம். அவ்வாறு பலன் பெற்றவர்களும் கூட ஏராளம். அயலூரிலிருந்தெல்லாம் நேர்த்தி வைக்க வருபவர்களும் பின்னர் நேர்த்திக்கடன் தீர்க்க வருபவர்களுமாக நாகம்மன் கோவிலில் என்றைக்கும் கூட்டத்திற்குக் குறைவிருந்ததில்லை.

 

அன்றும் அப்படித்தான் யாரோ பிள்ளை வரமற்றவர்கள் பிள்ளை பிறந்தவுடன் நேர்த்திக் கடன் கழிக்க வந்திருப்பதாகத்தான் எல்லோரும் எண்ணினார்கள். ஆனால் நேரமாக நேரமாக யாரும் வராமல் போகவே எல்லோருக்கும் குழப்பம் தான் எஞ்சியது. கோவிலின் சுற்றுப்புறமெங்கும் தேடிப் பார்த்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

 

குழந்தை அழ ஆரம்பிக்கவும் அதை அப்படியே நிலத்தில் விட மனமின்றி அர்ச்சகரின் மனைவி அதைத் தூக்குவதற்காக அருகில் சென்றார். அப்போது எங்கிருந்து வந்ததோ தெரியாது, ஒரு நாக பாம்பு சீறிக் கொண்டு வந்து அவருக்கும் குழந்தைக்கும் இடையே எழும்பி நின்று படம் விரித்தாடியது. 

 

அர்ச்சகரின் மனைவியோ திடீரென வந்து நின்ற பாம்பைக் கண்டு விதிர்விதித்தவராகப் பின் வாங்கினார். நாகத்தைக் கண்ட குழந்தையின் அழுகையும் அடுத்த நொடியே நின்றது. அந்த நாகத்தம்மனே எழுந்து வந்துவிட்டதாக எண்ணிய பக்தர்கள் அனைவரும் விழுந்து வணங்கினார்கள் அந்த நல்லபாம்பை. 

 

சிறிது நேரம் படமெடுத்தாடி விட்டுக் குழந்தைக்குக் காவல் போல குழந்தை முன்பே அது சுருண்டு படுத்துக் கொண்டது. யாராவது அருகில் சென்றால் மட்டும் தலை உயர்த்தித் தான் கவனித்துக் கொண்டிருப்பதை உணர்த்தியது. குழந்தை இருக்கும் செய்தி அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சிற்றூர் மக்கள் அனைவருமே அங்கு திரண்டு விட்டார்கள். குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தது. ஆலயத்துக்குள்ளும் செல்ல முடியாது என்ன செய்வது என்று தெரியாது முழித்த அர்ச்சகர், கோயில் வாயிலிலேயே அந்த நாகத்துக்கே அபிசேகம், பூசை என்று ஆரம்பிக்கவும் அவரை அருகில் அனுமதித்தவாறு அந்தப் பூசைகளை ஏற்றுக் கொண்டதை ஊரே கண்டு வியந்தது. 

 

அந்த நாகம்மனே எழுந்து வந்து சர்ப்பத்தின் வடிவில் தங்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பதில் ஒருவருக்குக் கூட எள்ளளவும் ஐயம் எழவில்லை. ஆனால் குழந்தையை என்ன செய்வது என்று தான் யாருக்கும் புரியவில்லை. 

 

“நாகம்மா! இது உன் குழந்தை என்று தெரிகிறது தாயே.. நீ இப்படி கோயிலுக்குள்ளும் செல்ல விடாது வழியை மறித்து நிற்பது ஏனோ? குழந்தையைத் தூக்க விடாது எங்களை தடுப்பது ஏன் தாயே? பச்சை மண், பசியால் தவிக்கப் போகிறதே.. வழி சொல்லு நாகம்மா..”

 

அர்ச்சகர் அந்த நாக சர்ப்பத்தின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வாய் விட்டே ஒரு வழியைக் கேட்டார். அவர் வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பது போல சரசரவென ஊர்ந்து செல்ல ஆரம்பித்த நாகம் அந்த ஊர்க் கிராமத் தலைவர் நாகேஸ்வரனின் கால்கள் மீதும் அருகே நின்ற அவர் மனைவி கால்கள் மீதும் ஏறி இறங்கி விட்டு மறுபடியும் குழந்தை அருகிலே சென்று படம் எடுத்தவாறு காவல் காக்கத் தொடங்கியது.

 

எல்லோரும் கன்னத்தில் போட்டபடி இந்தக் காட்சியையே ஆச்சரியமாகப் பார்த்திருக்க அர்ச்சகர் வாய் திறந்தார். 

 

“நாகேஸ்வரா! உன் வேண்டுதல் பலித்து விட்டது. அந்த நாகம்மனே உன்னைத் தீண்டிச்சென்று நீதான் இனி இந்தக் குழந்தைக்குப் பொறுப்பு என்று கூறி விட்டாள். இத்தனை காலமும் நீ நாகம்மாவிடம் குழந்தை வரம் கேட்டுக் கட்டிய தொட்டில்களுக்கு எல்லாம் பலன் கிடைத்து விட்டது.. இன்றோடு உன்னைப் பீடித்திருந்த நாகதோசம் நீங்கி விட்டது..”

 

அர்ச்சகர் கூறிக் கொண்டிருக்கும் போதே நாகேஸ்வரனின் மனைவி தேவி குழந்தையின் அருகில் ஓடிச் சென்று அந்த சர்ப்பத்தையும் கைகூப்பி வணங்கியவாறே குழந்தையைத் தூக்க முற்பட்டார். அதுவரை யார் குழந்தையின் அருகில் சென்றாலும் படமெடுத்துச் சீறித் துரத்திய அந்தப் பாம்போ இப்போது தலையை உயர்த்திக் குழந்தையையும் தேவியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு சரசரவென கோயில் கோபுரத்தில் ஏறி மறைந்து விட்டது. 

 

திரண்டிருந்த ஊர் மக்களுக்கோ இந்த அதிசயக் காட்சியைக் கண்டு புல்லரித்தது. தலைக்கு மேலே கை உயர்த்தி அந்த நாகம்மனை வழிபட்டவர்கள் தேவி கையிலிருந்த அந்தப் பெண் குழந்தையின் பாதங்களையும் தொட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள். 

 

நாகேஸ்வரனும் தேவியும் அந்த நாகம்மனே தங்களுக்குக் குழந்தையாகக் கிடைத்து விட்டதாகப் பூரித்துப் போயினர். நாகன்யா என்று பெயரும் வைத்து அவளைக் கண்ணின் மணியாகப் போற்றி வளர்த்து வந்தார்கள். இன்று இருபத்தொரு வயது தேவதையாய் வளர்ந்து நிற்கிறாள்.

 

நாகேஸ்வரனுக்குப் பண வசதியில் எந்தக் குறையும் இல்லை. பரம்பரைச் செல்வந்தர்கள். அக்கிராமத்திலிருந்த பாதிக்கும் மேற்பட்ட நிலங்களுக்குச் சொந்தக்காரர் அவரே. பாலும் நெய்யுமாய் ஊட்டி வளர்த்ததில் நாகன்யா உரிய போசாக்கோடு பருவத்துக்கேயுரிய அழகும் சேரப் பேரழகியாகத் திகழ்ந்தாள். ஆனால் அவளைத் தெய்வக் குழந்தையாக எண்ணிய ஊர் மக்களோ அவளை அந்த நாகம்மனாகவே எண்ணி வழிபட்டு வந்தார்கள்.

 

வீட்டிலே எந்தவொரு நல்ல காரியம் என்றாலும் கூட நாகன்யாவிடம் வந்து ஆசி பெறாமல் ஆரம்பிக்க மாட்டார்கள். கூன் விழுந்த கிழவர்கள் கூட அவள் காலில் விழுந்து வணங்கி விட்டுப் போவார்கள். பிறந்ததிலிருந்தே இது தொடர்ந்தாலும் நாகன்யாவுக்கு இப்போதெல்லாம் இந்த வாழ்க்கையில் ஒரு சலிப்பு ஏற்படத் தொடங்கியிருந்தது. 

 

சிறு வயதில் அவளொட்ட வயதுடைய மற்றைய குழந்தைகளோடுத் துள்ளித் திரிய அவள் மனம் பேரவாக் கொள்ளும். இப்போது இளம்பெண்ணாய் தோழிகளோடு கதைபேசி சளசளக்க மனம் ஏங்கும். ஆனால் தெய்வமாய் விளங்கும் அவளோடு சேர்ந்து விளையாடவோ, கதைபேசவோ யார்தான் முன் வருவார்கள்?

 

யன்னலுக்கு வெளியே பாவாடை, தாவணியில் இளம் பெண்கள் கலகலவெனப் பேசிச் சிரித்தபடி ஆற்றில் நீராடி விட்டுக் குடங்களில் நீர் ஏந்தி வருவது நாகன்யாவின் கண்களில் விழுந்து ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியது. 

 

“நாகம்மா.. நாகம்மா..”

 

தேவி அழைக்கும் குரல் கேட்கக் கட்டிலிலிருந்து வெளியே சென்றாள் நாகன்யா. தேவி அவளைத் தன் மகளாகப் பார்த்ததில்லை. அந்த நாகம்மனாகவே பாவித்து அவளை நாகம்மா என்றே அழைத்து வந்தார். நாகேஸ்வரனும் அப்படியே. அவள் ஒன்று கேட்டால், எள்ளெனும் முன்பு எண்ணெயாக நின்றார்கள். நாகன்யாவோ செல்வப் பூரிப்பில் வளர்ந்தாலும் உண்மையான பெற்றவர் பாசம் கிடைக்காது அன்புக்குத் தவித்தாள். உள்ளங்கையில் வைத்துத் தாங்காத கண்டிப்புக்கு ஏங்கினாள். 

 

நாகன்யா அறையை விட்டு வெளியே வரவும், அவளை குளியலறைக்கு அழைத்துச் சென்ற தேவி அவளை மஞ்சள் பூசி, பாலூற்றிப் பின்னர் நீரூற்றி நீராட்டினார். கோவிலில் செய்யும் அபிசேகம் போலவே இருந்தது இந்தக் காட்சி. பிறந்ததிலிருந்தே பழக்கப்பட்ட விடயம் என்பதால் நாகன்யாவும் அமைதியாகத் தன் குளியலை முடித்துக் கொண்டாள். 

 

தேவி எடுத்து வைத்திருந்த அந்தச் சிவப்பு நிறப் பட்டுச் சேலையை அணிந்து, உச்சி வரியிலிருந்து ஒட்டியாணம் வரை தங்கத்தில் நவரத்தினக் கற்கள் வைத்து இழைத்த ஆபரணங்களை ஒவ்வொன்றாக அணிந்து கொண்டாள். குடைச் சிமிக்கி அசைய, தலையில் வைத்த மல்லிகையும் மனோரஞ்சிதமும் அந்த வீட்டையே கமகமக்க வைக்க, பட்டுச்சேலை சரசரக்க அந்த அறையை விட்டு நாகன்யா வெளியே வந்த போது உண்மையில் அந்தப் பராசக்தி தாயே எழுந்தருளி இருப்பது போலிருந்தது. 

 

நேராகச் சாப்பாட்டு அறைக்குச் செல்லவும் அங்கு இவளுக்காகக் காத்திருந்த நாகேஸ்வரனும் தேவியும் அவர்கள் வீட்டுப் பணியாளர்களும் இவள் காலில் விழுந்து சேவித்தனர். அமைதியாக அனைவரையும் தொட்டுத் தூக்கி விட்டவள், உணவருந்த ஏதுவாய் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள். 

 

அன்று வெள்ளிக் கிழமை என்பதால் வெறும் பாலும் பழமும் மட்டுமே அவள் உணவு. அமைதியாகப் புசித்தவள் எழுந்து வெளியே வாயிலுக்குச்சென்றாள். அங்கு பட்டாலும் புதுமலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் குதிரை வண்டி முற்றத்தில் வந்து நின்றது. அவளும் தேவியும் உள்ளே ஏறியமர, நாகேஸ்வரனே அந்த வண்டியை நாகம்மன் கோவிலை நோக்கிச் செலுத்தத் தொடங்கினார். 

 

கோவிலையடைந்ததும் கோவிலின் முன் வாசல் கதவிற்கு முன்னால் குதிரை வண்டியை நிறுத்தினார். நாகன்யா வண்டியை விட்டு இறங்கிக் கோயில் பிரதான கதவை நெருங்கி முதற் படிக்கட்டில் அமைதியாக நின்றாள். அதற்கென்றே காத்திருந்தது போல அர்ச்சகர் கையில் மஞ்சள் நீர்க் குடத்தோடு ஓடி வந்தார். மந்திரங்களை வாய் முணுமுணுக்க, குனிந்து நாகன்யாவின் பாதங்களை கழுவத் தொடங்கினார். கழுவி முடித்ததும் நாகன்யா சந்நிதிக்குள் அடியெடுத்து வைத்தாள். 

 

நாகம்மன் பட்டுடுத்தி, தங்க ஆபரணங்கள் அணிந்து எண்ணெய் தீபங்களின் ஒளியில் ஜெகஜோதியாகக் காட்சி தந்து கொண்டிருந்தாள். இருகரம் கூப்பி, கண்களை மூடி அந்த நாகம்மனை துதிக்க ஆரம்பித்தாள் நாகன்யா. அவள் கண்களிலிருந்து சரசரவெனக் கண்ணீர் கோடிழுத்தது.

 

“அம்மா.. தாயே..! என்னைப் பெற்றெடுத்த தாயையோ நான் பிறக்கக் காரணமாக இருந்த தந்தையையோ நான் அறியேன். இந்த ஊரே என்னை உன் குழந்தையாக வணங்குகிறது. ஆனால் நான் ஒரு சாதாரணப் பெண் தான் என்பதை எப்படிப் புரிய வைப்பேன்? எனக்கும் என்னொத்த மற்றையப் பெண்கள் போல பள்ளிசென்று படித்துத் திருமணம் முடித்து குழந்தை குட்டியென்று சாதாரண வாழ்க்கை வாழவே ஆசையாக இருக்கிறது. 

 

இவ்வூர் மக்களின் குறைகளை என் மூலம் தீர்த்து வைக்கும் தேவியே.. என் குரலுக்கு செவி மடுக்க மாட்டாயாம்மா? என்னால் எந்தவிதத்திலும் தெய்வப் பிறவியாக உணர முடியவில்லையேம்மா.. இயந்திரம் போல இவர்கள் பூசை புணர்ஸ்காரங்களை ஏற்றுக்கொள்கிறேன்.. அதுகூடக் குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. என்முலம் எல்லோர் குறைகளையும் தீர்த்து வைக்கும் தாயே, என் மனசுக்கும் அமைதியைத் தந்துவிடும்மா..”

 

வேண்டி விட்டு அவள் கண்களைத் திறக்கவும் அர்ச்சகர் முகமெங்கும் கலக்கத்தோடு நின்றிருந்தார். நாகன்யாவின் மையிட்ட கண்கள் சிவந்து கண்ணீர்ச்சரம் தொடுத்திருந்ததே அதன் காரணம். 

 

கருவறையில் வீற்றிருந்த நாகம்மனை நோக்கி, இரு கைகளைத் தலைக்கு மேலே தூக்கியவர், 

 

“நாகம்மா தாயே..! உன் கண்களிலிருந்து நீர் வடியக் காரணம் என்னவோ? இந்த ஊரையும் மக்களையும் நீ எப்படியும் காப்பாற்றி விடுவாய் என்று தெரிந்தாலும் என்ன குழப்பம் வரப் போகிறதோ என்று மனம் கலங்குகிறதேம்மா.. உன் பிள்ளைகளை நீதான் தாயே ரட்சிக்க வேண்டும். தெரியாது நாங்கள் ஏதும் குற்றம், குறை புரிந்திருப்போமானால் எங்களை மன்னித்து விடு தாயே..”

 

அர்ச்சகர் வாய் விட்டுப் புலம்பும் போதுதான் நாகன்யாவுக்குத் தான் விட்ட பிழை புரிந்தது. கண்களை இறுக மூடித் திறந்து அழுகையை நிறுத்தியவள், வழிந்த கண்ணீரைப் புடைவைத் தலைப்பால் துடைத்து விட்டு அர்ச்சகர் சிரசில் தன் வலக் கரத்தை ஆசிர்வதிப்பது போல வைத்தாள். 

 

“நீ எங்களைக் காப்பாற்றி விடுவாய் என்று தெரியும் அம்மா.. ஆனால் உன் கண்களில் வழிந்த கண்ணீர் என்ன விளைவைக் கொண்டு வரப் போகிறதோ தெரியவில்லையே தாயே..?”

 

அந்த முதிய அர்ச்சகரின் தழுதழுத்த குரலில் அந்த ஊரை எண்ணிய உண்மையான கவலை தெரிந்தது. சுயநலமாகத் தன் ஆசாபாசங்களைப் பற்றியெண்ணித் தான் விட்ட கண்ணீர் அவரை வருத்துவதை உணர்ந்தாள். தான் செய்த தவறை எண்ணி வருந்தியவாறே கோவில் உட்பிரகாரத்தைச் சுற்றி வழிபட ஆரம்பித்தாள் நாகன்யா.

 

வரப்போகும் ஆபத்துத் தனக்கே என்று அறியாது தனக்கு மனக்கட்டுப்பாட்டைத் தருமாறு வேண்டியவாறு பிரகாரத்தைப் பதினொரு முறை சுற்றி வந்தாள் நாகன்யா.

 

வருவது புயலா? மழையா? தப்பி விடுவாளா? இல்லை சிக்கி விடுவாளா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 7யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 7

நாகன்யா – 07   நாகர் கோவில். ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த சுடுகாடு. பேருக்கேற்பவே மயான அமைதியோடு இருந்தது. நேரம் நடுநிசியை நெருங்கிக் கொண்டிருந்தது. அன்று போலவே இன்றும் அந்த நால்வர் கூடியிருந்தனர். மை பூசியிருந்த உடல்களும் முகங்களும் ஆள்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 9

நாகன்யா – 09   அன்று காலையும் வழக்கம்போலவே விடிந்தது. பறவைகளின் கீச்கீச்சும் சேவல்களின் கொக்கரிப்பும் ஆலய காண்டாமணி ஓசையின் கணீரென்ற நாதமும் தினம் தினம் நாகன்யா ரசிக்கும் விடயங்கள். மரங்களின் மறைவிலிருந்து மெதுவாய் எழும் சூரியக் கதிர்கள் அந்தக் காலை

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12

நாகன்யா – 12   நாகேஸ்வரனின் குதிரை வண்டியில் விரைவாகவே ஈஸ்வரை நாகேஸ்வரனின் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர். வீடு செல்லும் வழி முழுவதும் நாகன்யா ஈஸ்வரைத் தன் மடிமீது தாங்கி தன் சேலைத் தலைப்பால் அவன் இரத்தப்போக்கை நிறுத்த முயன்று