Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),ஓகே என் கள்வனின் மடியில்,தமிழ் மதுரா,தொடர்கள் தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 19’

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 19’

பிற்பகல் நேரம், அலுவலகத்தில், களைப்பைப் போக்க கைகளை நெட்டி முறித்த காதம்பரி எழுந்து நின்று கைகால்களை வீசி சிறிய பயிற்சிகளை செய்தாள். மரத்திருந்த கால்களுக்கு சற்று உணர்வு வந்தார் போல இருந்தது. தன் அறை ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும்போது அவ்வப்போது இதைப் போன்ற பயிற்சி அவசியம். வெளியே ஜனக் கும்பலுக்கு மத்தியில் அந்த அரைத்த மஞ்சள் நிற டீஷர்ட் அணிந்த ஒருவன் மட்டும் தனித்துத் தெரிந்தான்.

‘நல்ல டேஸ்ட்’ என்று சிரித்துக் கொண்டவளுக்கு காலையில் தன்னை இதே போன்ற உடை அணிந்த ஆள் ஒருவன் பின் தொடர்ந்தது நினைவுக்கு வந்தது.

 

“கல்பனா அங்க நின்னு நம்ம ஆபிஸையே முறைச்சுட்டுகிட்டிருக்கானே அந்த மஞ்சள் சட்டைக்காரன் அந்த ஆள் முகத்தைப் பாக்கணுமே” என்றதும் அரை மணியில் அவன் முகம் தெளிவாகத் தெரியும்படி படம் ஒன்றை கல்பனா எடுத்து வந்தாள்.

 

“எஸ் அதே ஆள்தான்”

 

“என்னாச்சு கேட்”

 

“ரெண்டு நாளா நான் போற இடத்தில் எல்லாம் இந்த மூஞ்சியைப் பாக்குறேன். என்னை பாலோ பண்றான்னு நினைக்கிறேன். ஆனால் எதுக்குன்னு புரியல”

 

அந்த ஆள் அடிக்கடி கண்ணில் படுவதும். யாரவன்? எதற்காக என்னைப் பின் தொடர்கிறான். ஒரு வேளை இது வம்சியின் ஏற்பாடோ? அவன் நேரடியாக இறங்குபவன் இதைப் போல சில்லியாய் நடக்க மாட்டான்.

 

“போலிஸ்ல தகவல் சொல்லலாமா?”

“அதெல்லாம் வேண்டாம். நம்ம கிளைன்ட்ஸ் பத்தின விவரங்களைத் தெரிஞ்சுக்க காம்படீட்டர்ஸ் செய்த ஏற்பாடா இருக்கும். கம்ப்ளைன்ட்  தந்து பிரச்சனையை நீ இன்னும் பெருசாக்காதே… இன்னும் கொஞ்ச நாளைக்கு பெரிய கிளைன்ட்ஸ் பத்தின விவரங்கள் அப்பட்டமா தெரியாம பாத்துக்கோ…”

 

“இருந்தாலும் ஜான் காதில் ஒரு வார்த்தை போட்டு வைக்கிறேன். சரி நேரமாகுது கிளம்பலாமா…”

 

“உன்னை டிராப் பண்றேன்னு சொல்லிருந்தேன்ல… கிளம்பலாம் வா”

 

கல்பனாவை டிராப் செய்துவிட்டு, தனது அப்பார்மென்ட் வந்தடைந்து வீட்டுக் கதவைத் திறக்கும்போதே  நாசியை வருடி, பசியைக் கிளப்பியது  பீட்சாவின் மணம். கல்பனாவிடம்தானே இன்னொரு சாவி இருக்கிறது. அவளை இப்போதுதானே வீட்டில் டிராப் செய்தேன். வேறு யாராக இருக்கும். இன்னொரு முறை கதவு எண்ணைப் பார்த்துத் தனது வீடுதான் என்று உறுதி செய்த பின், வாசலில் நின்றபடி தலையை மட்டும் நீட்டி வீட்டினுள் எட்டிப் பார்த்தாள்.

 

“உன் வீடேதான்… பயப்படாம உள்ளே வா செர்ரி”

 

உரிமையாக அவளது வீட்டு சோபாவில் படுத்துக் கொண்டு,  டிவி பார்த்துக் கொண்டிருந்த வம்சி அவளை வரவேற்றான்.

 

வேகமாய் எழுந்தவன். “வெல்கம் ஹோம் ஹனி.. ஜூஸ் ஏதாவது குடிக்கிறியா… நேரமாச்சே…. பேசாம ஸ்ட்ரைட்டா டின்னர் போயிடலாமா?”

 

திகைப்பாய் கேட்டாள் “வீடு லாக் பண்ணிருந்தேனே எப்படி உள்ள வந்திங்க”

 

“பெங்களூர்ல என் அப்பார்ட்மென்ட் சாவி டூப்ளிகேட் பண்ணி உனக்குத் தந்தேனே… அது கூடவே உன்னோட வீட்டு சாவி ஒண்ணை ரெடி பண்ணி எனக்கு வச்சுகிட்டேன்”

 

“எனக்குத் தெரியாம என் வீட்டு சாவியை எடுத்தது தப்பில்லை” அவள் குரலில் சிறிது உஷ்ணம்.

 

“ஈஸி ஹனி…. ஏன் இப்ப டென்ஷனாற.. என்னை உன் வீட்டுக்குக் கூப்பிடக் கூட உனக்கு மனசு வரல. சாவியைக் கேட்டால் தரவாப் போற… தவிர உன் மனசுக்குள்ள நுழையவே எனக்கு உன் அனுமதி தேவைப் படல… வீட்டுக்குள்ள வர எதுக்கு அனுமதி சொல்லு… ”

 

அவளது பலவீனமான தருணத்தை அவன் சுட்டிக் காட்டியதில் என்ன பதில் சொல்வதென்றே தெரியாது கோபம் அடங்க பிரிட்ஜிலிருந்த தண்ணீரைப் பருகினாள்.

‘ராணி ராஜாவோட வீட்டுக்கு வரணும்னு அவசியமில்லை. ராஜா கூட ராணியைத் தேடி வரலாம்’ என்று காலையில் வம்சி சொன்னதன் அர்த்தம் தெள்ளத் தெளிவாக விளங்கியது. ராஜா ராணி என்று கூறிகிறான்.  அப்படியென்றால் பெங்களூரில் தான் கண்டது எதுவும் கனவில்லை. அன்றைய தினம் சாவகாசமாய் காலையில் எழுந்து, பக்கத்திலிருக்கும் உறவினன் வீட்டுக்கு சென்று போன் செய்திருக்கிறான். என் வீட்டுக்கே கள்ள சாவி தயாரிக்கிறவன் தன்னுடைய வீட்டு சாவி இல்லாமல் நான் தூங்கி எழுந்து கதவைத் திறக்கும் வரையில் தெருவில் நிற்பானா என்ன?

 

“அப்ப பெங்களூரில் நான் கண்டது எதுவும் கனவில்லை”

 

விஷமமாய் அவளைப் பார்த்து சிரித்த வம்சி. கிசுகிசுப்பாய் சொன்னான் “இதைத் தெரிஞ்சுக்க ரெண்டு வாரமாச்சா…. எல்லாரும் சொல்ற மாதிரி இந்த விஷயத்தில் நீ கொஞ்சம் ஸ்லோதான் ஹனி….“

 

அவனை எரித்து விடுவதைப் போலப் பார்த்தவள்… “என்னை யோசிக்க விடாம ரெண்டு வாரமா ஒண்ணு மாத்தி ஒண்ணா எனக்கு வேலைகளை அனுப்பி தூங்கக் கூட விடாம பிஸியா வச்சிருந்ததுக்குக் காரணமும் இதுதானே”

 

“செர்ரி… அன்னைக்கே உண்மையை சொல்லிருந்தால்  நீ வருத்தப்பட்டிருப்ப… உன்னோட குணத்துக்கு உன்னை நீயே தண்டிச்சிருந்தால் கூட ஆச்சிரியமில்லை… கதவைத் திறந்ததும் என்னாச்சுன்னு கேட்டு உன் கண்ணெல்லாம் எப்படிக் கலங்கிருச்சு தெரியுமா…. நீ வருத்தப்படுறதை என்னால எப்படி சகிக்க முடியும். அதனாலதான் உன்னைக் கொஞ்சம் குழப்புனேன். இந்த ரெண்டு வாரமும் அதை செய் இதை செய்ன்னு உனக்கு ஆர்டர் மேல ஆர்டர் போட்டேன்… உன் கவனமும் கோபமும் முழுசா என் மேலதானே இருந்துச்சு… பெங்களூர் சம்பவம் பத்தி நினைக்கக் கூட நேரமில்லையே….”

 

“யூ ஆர் ஸோ கன்னிங் வம்சி…”

 

“பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதே ஹனி. எவெரிதிங் இஸ் ஃபேர் இன் லவ். என் மனசுக்குப் பிடிச்ச பெண்ணுக்கும் என் மேல விருப்பம் இருப்பதை தெரிஞ்சுகிட்டேன், ரெண்டு பேரும் நம்ம பெர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துட்டோம், மனசால் நெருக்கமானோம் அதுக்கப்பறம் காதல் கொண்ட மனங்கள் கலப்பது இயற்கைதானே… உணர்ச்சி வேகத்தில் நடந்த சம்பவம் அது.  துஷ்யந்தன் சகுந்தலை மாதிரி….”

 

“நீங்க ஒரு துஷ்யந்தன், நான் சகுந்தலை மாதிரி என்னை ஏத்துக்கோங்க பிராண நாதான்னு காலைப் பிடிச்சுக் கெஞ்சணும் என்பது உங்க எதிர்பார்ப்பு”

 

“அந்த மாதிரி பேராசை எல்லாம் எனக்குக் கிடையாது பேபி. நீ கண்ணை அசைச்சா போதும் உன் கூடவே வர நான் தயார். நம்ம கேஸில் நான்தான் சகுந்தலை நிலைமையில் இருக்கேன். நீ துஷ்யந்தனா மாறிடக் கூடாதுன்னுதான் என் வேண்டுதல்” என்றதும் அவ்வளவு கனமான சம்பவத்தை எப்படி இலகுவாக இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று சாதித்து விட்டான் என்ற வருத்தமே காதம்பரியின் மனதில் மேலோங்கி நின்றது.

 

“இதெல்லாம் தப்பில்லையா வம்சி… ஒரு பெண்ணை அவள் இளகிய நிமிடத்தைப் பயன்படுத்தி அவள் மேல் ஆதிக்கம் செலுத்துறது நியாயமா?”

 

“காதலைப் பொறுத்தவரை நியாயம் நியாயமில்லைன்னு சொல்ல நம்ம யார். அந்த சுப்ரமணியனே வள்ளியைக் கல்யாணம் செய்ய கிழவன் வேஷம் போடலையா.

அதைத் தவிர வேலை வேலைன்னு வேற எதைப் பத்தியும் சிந்திக்காத உன்னை எப்படித்தான் மடக்குறது காதம்பரி. என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும், உன் கூட்டை விட்டு வந்து என்கிட்டே நீயே உன்னைப் பத்திப் பகிர்ந்துக்கணும். இதுக்கெல்லாம் என்ன வழி. நான் ஒரு வியாபாரி. எனக்கு நீ வேணும். அதுதான் உன்கூட ஒரு டேஸ்டர் டே செஷன். என்கூட நீ கழிக்கப் போகும் பொழுதுக்கு ஒரு சாம்பிள். நல்லாருந்ததா”

 

“உன்னை…” கையில் அகப்பட்டத் திண்டை தூக்கி அவன் மேல் வீச,

அதை சரியாகப் பிடித்தவன் “உன்னைக் கேட்ச் பன்னமாதிரியே இதையும் கேட்ச் பண்ணேனா” என்றான்.

 

“ச்சே…. “ அதைப் பற்றிப் பேச விரும்பாமல் அவள் முகத்தைத் திருப்ப, சீட்டியடித்தபடியே அவளது வீட்டை சுற்றிலும் பார்த்தான்.

 

என் பாதி நீ உன் பாதி நான்

என் ஜீவன் நீ உன் தேகம் நான்

என் கண்கள் நீ உன் வானம் நான்

என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்

 

“பரவால்ல காதம்பரி வீட்டை நீட்டா வச்சிருக்க….. ஆனால் சாப்பாடுன்னு  ஒண்ணு சமைக்கிற மாதிரியே தெரியல. ஈஸியா பிரட், பிஸ்கட்ன்னு சமாளிப்பன்னு நினைக்கிறேன். ஏதாவது சமைக்கலாம்னு பார்த்தா பேசிக் இன்கிரிடியன்ட்ஸ் மட்டும்தான் இருக்கு. அதனால நைட் டின்னருக்கு பீட்ஸா ஆர்டர் பண்ணிட்டேன்”

 

இடியட் கள்ளச்சாவி போட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சதே தப்பு இதில் கப்போர்ட் எல்லாத்தையும் ஆராய்ஞ்சிருக்கான்.

 

“நீங்க சொல்றதைப் பார்த்தா என் வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரமாவது ஆயிருக்கணும். ரூபில வேலையே இல்லை போல”

 

“வெட்டியா இருக்கேனான்னு கேக்குற…. இப்படியெல்லாம் பேசி என்னைத் துரத்த முடியாதுன்னு உனக்கு இந்நேரம் புரிஞ்சிருக்கும். உன் கேள்விக்கு பதிலா என்ன சொல்லலாம்…. ம்ம்… எனக்கு விளம்பரம் பண்ணும் உன் கம்பனிக்கே  கோடிக்கணக்கில் சம்பளம் தர்றேன். அப்ப எனக்கு வேலைகள் இல்லாம இருக்குமா… ஆனால் செர்ரி, மனசுக்குப் பிடிச்சவங்களோட நேரம் செலவழிக்கணும்னு என்ற வேகம் எல்லா வேலைகளையும் தள்ளிப் போடச் சொல்லும்”

 

என்கிட்டே சம்பளம் வாங்குறன்னு குத்திக் காமிக்கிறான் என்று மனதினுள் பொருமிக் கொண்டிருந்ததில் அவனது இரண்டாவது வாக்கியத்தை உணரும் மன நிலையில் காதம்பரி இல்லை. அவள் உணரவும் விரும்பவில்லை.

 

“என்ன சொல்லிட்டிருந்தேன்… ஹாங்…. மளிகைப் பொருட்கள் அதிகம் இல்லை. அடுத்த தடவை வாங்கிட்டு வரேன். இனிமே நான் வரும்போது ரெண்டு பேரும் சேர்ந்தே சமைச்சுக்கலாம்  பெங்களூர்ல செஞ்ச மாதிரி.”

 

‘என்ன…. சேர்..ந்தே… சமைச்சுக்கலாமா….’ இவன் என்ன என் கூட குடும்பம் நடத்த ப்ளான் போடுறானா… ப்ரபஷனலான விஷயம்னா டீல் பண்ணிடலாம். இவன் என்னை, என் மனசை, என் வாழ்க்கையை முழுசுமா ஆக்ரமிக்க நினைக்கிறானே. என்னுடைய எல்லைக் கோட்டை மீறி இப்படி அதிரடியா ஏதாவது செய்றானே எப்படியாவது வம்சியைத் தள்ளி நிறுத்தணுமே….

 

 

ஏதோ முடிவெடுத்தவளாக அமைதியாய் முகம் கழுவி வந்தாள். அவள் மனம் வம்சியிடம் பேசுவதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. அவளது யோசனையில் குறுக்கிடாமல் சமையலறையிலிருந்து உரிமையாய் ப்ளேட்டுகளை எடுத்து வந்தான். கோலாவை இருவருக்கும் கிளாசில் நிரப்பினான்.

 

எத்தனையோ நாட்கள் இவளைப் பற்றியே  நினைத்து, காதம்பரி தன்னை சுற்றி எழுப்பிக் கொண்ட இரும்புக் கோட்டையைத் தகர்க்க முயன்றிருக்கிறான். பெங்களூரில் அது ஓரளவு பலித்தது என்றாலும் காதம்பரி எல்லாவற்றையும் துறந்துவிட்டு அவன் பின் வரத் தயாராயில்லை.

 

ஊருக்கு வந்தபின் அவள் தனிமை கிடைத்தால் அளவுக்கதிகமாக சிந்திக்கத் தொடங்கி விட்டாள். விளைவு அவனை விட்டு மெதுவாக விலக ஆரம்பித்திருக்கிறாள். நோ…. இதை விடமாட்டேன். அவளை என் பக்கம் சாய்த்தே தீருவேன். அதன் அதிரடி முயற்சியில் ஒன்றுதான்  அவள் வீட்டுக்கு அவள் எதிர்பாராத நேரத்தில் வந்திருப்பது. இந்த முறை காதம்பரியிடம் அவளை விட்டு விலகத் தயாரில்லை என்று உணர்த்தி விட வேண்டும்.

 

“பலமான யோசனையில் இருக்க… எதையோ பேச ரெடியாயிட்டு இருக்கன்னு நினைக்கிறேன். சூடா சாப்பிட்டா இன்னும் தெளிவா யோசிக்கலாம். நான் கூட பசியோட இருக்கேன்” என்றதும் வேறு பேச்சு பேசாமல் டைனிங் டேபிளில் அவன் சுட்டிக் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.

 

வம்சி தன் தட்டில் ஒரு பீட்ஸா ஸ்லைசை பரிமாறிக் கொண்டு அவனது சேரை அவளுக்கு நெருக்கமாகப் போட்டுக் கொண்டான். அவளது கன்னங்களை அவன் விரல்கள் வருடியது. சுவற்றை ஒட்டிய நாற்காலியில் ஏன் தன்னை அமரச் சொன்னான் என்று காதம்பரிக்குத் தெளிவாகப் புரிந்தது.

 

“உன்கூட சாப்பிடும்போது என் மனசு எப்படி இருக்குத் தெரியுமா… பெங்களூர்ல இருந்த மாதிரியே ஜாலியா… நிறைவா… இந்த ரெண்டு வாரமா நீ என் ஆபிஸுக்கும் வரல. கடைசி நேரத்தில் கல்பனாவை அனுப்பி விட்ட.  ஐ மிஸ்டு யூ செர்ரி…”

 

அவளது கன்னங்களை வருடிய அவனது விரல்களைத் தடுத்து, தன் கைகளால்  பிடித்துக் கொண்டவள் தன் மனதில் பட்டதைத் தள்ளிப் போடாமல் பேசத் தொடங்கினாள்.

 

“வம்சி, நம்ம கொஞ்சம் பேசலாமா”

 

“கொஞ்சம் என்ன நிறைய, நிறைய பேசலாம்… வாழ்க்கை முழுசும் பேசலாம். உனக்கு என்ன வேணும் செர்ரி. பேசாம என் வீட்டுக்கு வந்துடுறியா… என் வீடு நிச்சயம் உனக்குப் பிடிக்கும்.”

 

“பச்… கொஞ்சம் நான் சொல்றதைக் கேளுங்க. இது பெங்களூர் இல்லை, மும்பை. பெங்களூர்ல ஒரு நாள் உணர்ச்சி வசபட்ட நிலையில் நமக்குள்ள என்னென்னவோ நடந்துடுச்சு. அதை இனியும் தொடர முடியாது”

 

“ஏன் முடியாது”

 

எரிச்சலோடு சொன்னாள் “விளையாடாதிங்க வம்சி… எப்படி முடியும்”

 

“முடியும்… முடியணும்…. ராஜாவும் ராணியும் அதே ஆளுங்கதானே. அவங்க இருக்குகிற இடம்தான் மாறியிருக்கு. பெங்களூர்ல சாத்தியமானது ஏன் மும்பையில் தொடரக் கூடாது”

 

“தொடரக் கூடாது… நம்ம ரெண்டு பேரோட பிஸினெஸ் வாழ்க்கைக்கும் அது நல்லதில்லை”

 

“காதம்பரி.. உன்னை மாதிரியே பிஸினெஸ்தான் வாழ்க்கைன்னுதான் நான் இருந்தேன். ஆனால் இப்பக் கொஞ்ச நாளா என் வாழ்க்கையை வாழத்தான் என் பிஸினெஸ்ன்னு தோணுது. அது உன் கூட பழக ஆரம்பிச்சதுக்கு அப்பறம்தான். எனக்குத் தோணின எண்ணம் உனக்கும் தோணனும்”

 

“அதெல்லாம் தோணாது… உங்களுக்குத் தோணினால் அதுக்கு சூட் ஆகுற பெண்ணா பார்த்து செட்டில் ஆகுங்க”

 

“அதைத்தான் செஞ்சுட்டு இருக்கேன்”

 

“வாட்”

 

“எஸ் செர்ரி… ராஜா ராணியை அவ்வளவு சீக்கிரம் விட முடியாது”

“இது பக்கா ப்ளாக்மெயில்”

 

“ஐ கம்பளீட்லி அக்ரீ வித் யூ”

 

“நான்… நான்… உங்களைப் பத்திப் புகார் பண்ண வேண்டியிருக்கும்…”

 

“உனக்குப் புண்ணியமா போகும்… அதை முதலில் செய்”

 

“கம்ப்ளைன்ட் தரமாட்டேன்னு நம்பிக்கையா”

 

“ஹன்ட்ரெட் பெர்சென்ட்… நம்ம தொடர்பு வெளிய தெரிஞ்சா உன் தொழிலை பாதிக்கும்னு தெரியும். அதனால் சொல்லமாட்ட. என்னை நைசா கழட்டிவிடத்தான் பார்ப்ப”

 

“தெரியுதுல்ல… இந்த மாதிரி ஆண்களோட பழகிட்டு கழட்டி விடுற ஒருத்தியை மறந்துடுங்க”

 

“ஆண்கள் என்ற டெர்ம் தப்பு செர்ரி, ஆண் என்று சொல்லலாம். இன்னும் சரியா சொன்னால் வம்சிகிருஷ்ணா மட்டும்தான் உன்னை உடலாலும் மனசாலும் நெருங்கின ஒரே ஆண்னு  அடிச்சு சொல்லலாம். ஆனால் அப்படில்லாம் இந்த வம்சியை சுலபமா கழட்டி விட முடியாது காதம்பரி. நானும் உன்னை அவ்வளவு சுலபமா விடுறதா இல்லை”

ஹாலில் இருந்த கிராண்ட்பா க்ளாக் பத்து முறை அடித்து ஓய்ந்தது. தலையில் கையை வைத்தபடியே அப்படியே அமர்ந்திருந்தாள் காதம்பரி.

 

“மணி பத்தாச்சா… நான் கிளம்புறேன். என் அமெரிக்கன் பிரெண்ட் கூட கான்பரன்ஸ் மீட்டிங் இன்னும் ரெண்டு மணி நேரத்தில் இருக்கு”

 

அப்பாடி என்றிருந்தது காதம்பரிக்கு.

 

“ரொம்ப சந்தோஷப்படாதே செர்ரி அடுத்த முறைலிருந்து நைட்  இங்கதான் தங்குவேன். ‘லாவண்டர் மிஸ்ட்’ ரூம் ஸ்ப்ரே போட்டு வச்சுரு ரொமாண்டிக்கா இருக்கும்”

 

“வம்சி…. நீங்க இப்படி ப்ளான் போட்டுட்டே போனால் எப்படி? என் சம்மதம் வேண்டாமா?”

 

கோட் ஸ்டாண்டில் மாட்டியிருந்த கோட்டை ஸ்டைலாகத் தன் தோளில் மாட்டியவன் மிக வேகமாய் திரும்பினான். கூர்மையாகப் பார்த்தவாறே அவளை நெருங்கினான்.

 

“உன் சம்மதத்தை எதிர் பார்த்துத்தான் இவ்வளவும் செய்றேன். உன் வீட்டில் அழையா விருந்தாளியாய் நுழைஞ்சு, பெட்டில் நீ போட்டுட்டுப் போன துணிகளை மடிச்சுக் கப்போர்டில் அடுக்கி, பசியோட வருவேன்னு சாப்பாடு வாங்கி வெயிட் பண்ணிட்டு, உன் ஒரு தலையசைவுக்காகக் காத்திருக்கேன். இதெல்லாம் உனக்கு விளையாட்டாத் தெரியுதா காதம்பரி” உறுதியான அந்தக் குரல் அவள் மனதின் அடியாழத்துக்கு ஊடுருவியது.

 

“உங்க அளவுக்கு நான் வேகமானவ இல்ல. எனக்கு யோசிக்க டைம் வேணும்”

 

“குட்… இப்ப சொன்னியே அது நல்ல பிள்ளைக்கு அடையாளம். நல்லா யோசி. நிதானமா யோசி. என் மேல உனக்கு எவ்வளவு லவ் இருக்குன்னு அப்பத்தான் உனக்குப் புரியும். அதுக்கப்பறம் உன்னோட சம்மதத்தை வர்ற சண்டே  சொன்னால் போதும்… ஒகேயா”

 

“அதுவரை நீங்க இப்படி”

 

கைகளைக் காண்பித்துத் தடுத்தவன்….

 

“நான் உன்னைப் பார்க்க வருவேன்”

 

“வம்சி…. இங்கே நான் தனியா தங்கிருக்கேன்னு பலருக்குத் தெரியும். நீங்க என் வீட்டுக்கு வர்றது எனக்குப் பிடிக்கல”

 

“ஆனால் உன்னைப் பார்க்க வரது எனக்குப் பிடிச்சிருக்கே…. நீ ஒழுங்கா என் ஆபிஸ் மீட்டிங்குக்கு வந்திருந்தேன்னா இந்த மாதிரி விபரீதமான யோசனை எனக்கு வந்திருக்குமா…. இதுக்கெல்லாம் முழு காரணம் நீதான் காதம்பரி. விளைவுகளை நீ அக்செப்ட் பண்றதைத் தவிர வேற வழியில்லை”

 

“வம்சி…”

 

“சரி சரி… யாருக்கும் தெரியாம பாத்துக்கலாம். இது கூட நீ சங்கடப்படுவேன்னுதான். என்னைப் பொறுத்தவரை அடுத்தவங்களோட ஒப்பினியன் என் வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடாது”

 

அவள் முகம் இன்னும் தெளியாமல் குழப்பத்துடன் இருப்பதைக் கண்டு “ஏன் செர்ரி இவ்வளவு குழப்பம்…. என்னைப் பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்குன்னு சொல்லு…. பிடிக்கலைன்னா பிடிச்சிருக்குன்னு சொல்லு… அவ்வளவுதானே… இதில் என்ன தயக்கம் வேண்டியிருக்கு…… ஐ லவ் வம்சி, ஐ லவ் வம்சின்னு ஸ்ரீராமஜெயம் மாதிரி சொல்லிட்டே இரு எல்லாம் சரியாயிடும்”

 

இறுக்கி அணைத்து முத்தமிட்டு ஒரு கணவனைப் போலப் பிரியாவிடை பெற்று சென்றவனை எப்படிக் கட்டுப் படுத்துவது என்ற வழியே தெரியாமல் பேச்சற்று அமர்ந்தாள். தங்களுக்கு இடையே இருந்த தூரத்தை நொடியில் கடந்ததும் இல்லாமல் இத்தனை நாள் அவள் தன்னைச் சுற்றி எழுப்பியிருந்த கோட்டையை  சுக்கு நூறாக வம்சி உடைத்ததை உணர்ந்தும் அவன்மேல் கோபம் வரவில்லை மாறாக பொறுமையாக அமர்ந்து பேசி வழியனுப்பி வைத்த தன்னைக் கண்டே வெறுப்பாக இருந்தது காதம்பரிக்கு.

 

இவர்கள் இருவரும் தங்களது கொள்கையில் உறுதியாக இருக்க, அதை அசைத்து, அனைத்துக்கும் முடிவுரை எழுத எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் ஏற்பாடுகள் தொடங்கியது. எதையும் திட்டமிட்டு செய்யும் காதம்பரி தன்னை நோக்கி ஏவப்பட்ட அக்கினி பானங்களைத் தாங்க முடியாது திகைத்துப் போனாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 16’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 16’

குளிக்கும் நேரத்தில் மனதை சமனப் படுத்தியிருந்தாள். வம்சியை விட்டுக்  கொஞ்சம் தள்ளி வந்தால்தான் மூளை கூட ஒழுங்கா வேலை செய்யுது. இவனைக்  கிட்ட நெருங்க விட்டோம் நம்மை அறியாமலேயே அவனுக்கு அடிமையா தலையாட்டி பொம்மையாயிடுவோம். இவனை விட்டு எவ்வளவு சீக்கிரம் விலகுறோமோ

கபாடபுரம் – 26கபாடபுரம் – 26

26. சிகண்டியாசிரியர் மனக்கிளர்ச்சி   சிகண்டியாசிரியரிடம் இசையைப் பற்றிய பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருந்த போதே சாரகுமாரனுக்குக் கண்ணுக்கினியாளின் ஞாபகம் வந்தது. பழந்தீவுப் பயணத்தை எதிர்பாராதவிதமாக மேற்கொள்ள நேர்ந்திருந்ததனால் அவளை நீண்ட நாட்களாகச் சந்திக்க முடியாமற் போய்விட்டது. நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரம் வந்த