Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),ஓகே என் கள்வனின் மடியில்,தமிழ் மதுரா,தொடர்கள் தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 15’

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 15’

ரண்டாயிரத்து எழுநூறு டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் அமிழ்த்தப்பட்ட, மற்றும் அதே சமயத்தில் நாலாயிரம் திடகாத்திரமான மனிதர்கள் ஏறி நிற்கும் போது ஒரு பொருளின் மேல் ஏற்படும் அழுத்தம், இவை இரண்டும் ஒரே சமயத்தில் அதுவும் பல்லாயிரம் ஆண்டுகள் நிகழும் பொழுது அந்தப் பொருள் என்னாகும்? முதலில் தாங்கிக் கொள்ள முயலும் அந்தப் பொருள் சிறிது நேரத்துக்குப் பின் சமாளிக்க முடியாமல் ஒன்று பொடிப் பொடியாய் உடையும் இல்லை உருகிக் கரையும். ஆனால் விதிவிலக்காக கார்பன் துண்டு  தனது அமைப்பையே மாற்றிக் கொண்டு உறுதியான வைரமாய் உருவெடுக்கிறது. அதே போலத்தான் நாலாபக்கம் சூழ்ந்திருந்த பிரச்சனைகளை தனியொருத்தியாய் சமாளித்த காதம்பரியும் வைரமாய் உருமாறியிருந்தாள். ஆனால் அந்த வைரத்தின் உறுதியை சோதிக்க இன்னொரு வைரமே வந்ததுதான் விதி.

 

வம்சியின் நிறுவனத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக பெங்களூர் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் காதம்பரி. உடைகளை அடுக்க அலமாரியைத் திறந்தவளின் கண்களில் பொக்கிஷமாய் பாதுகாக்கும் வெள்ளை நிற மாக்ஸி பட்டது. தாய் தந்தையருடன் அவர்கள் கடைசி தினத்தில் ஷாப்பிங் செல்லும்போது வாங்கிய உடை. உடுத்தவே மனமில்லாது பலகாலமாய் உறங்குகிறது.

 

டென்னிஸ் ஸ்கர்ட் உடுத்தியபோதே ஆவென வாயைப் பிளந்த வம்சி முன் இந்த ஆடையை அணிந்து நின்றால் அவ்வளவுதான். ‘களுக்’கென சிரித்தாள்.

 

‘ஒரு வேளை அவனுக்குக் கல்யாணம் ஆயிருந்தா…’

 

ச்சே ச்சே வாய்ப்பில்லை. கல்யாணம் நடந்திருந்தா ஏன் என்னைப் பார்த்ததும் இவ்வளவு ஜொள்ளு விடுறான். செர்ரின்னு வேற கூப்பிடுறான்.

 

அதைத்தான் நானும் சொல்றேன் காதம்பரி. அவனுக்கு நீ ரொம்பவே இடம் கொடுக்குற. செர்ரின்னு செல்லமா கூப்பிடுறான். கன்னத்தைத் தட்டுறான். இதெல்லாம் சரியே இல்லை.

 

இப்ப என்ன செய்யணும்னு சொல்றே

வம்சிக்கு ரொம்ப இடம் கொடுக்காதே. அவன் ப்ராஜெக்ட் முடிஞ்சதும் கட் பண்ற வழியைப் பாரு.

 

அவனால என்னை என்ன செய்ய முடியும்னு நினைக்கிற. என் மனசு வைரம் மாதிரி உறுதியானது. அவ்வளவு சீக்கிரம் அதில் யாரும் நுழைய முடியாது.

 

ஆனால் வைரத்தையே அறுக்க இன்னொரு வைரத்தால் முடியும். வம்சியின் தொடர்பு உன் தொழிலுக்கு நல்லதில்லை. ஏன்னா… என்று அவளது மனசாட்சி சொல்லிய பாய்ண்டுகளை காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தாள்.

 

ஆனால் அவள் கைகளோ அவளறியாமலேயே அனிச்சையாய் வெள்ளை நிற மாக்சியை எடுத்து வைத்தன.

 

தான்மட்டும் செல்கிறோம் என்ற நிம்மதியுடன் கிளம்பினாள். வம்சி அருகிலிருக்கும்போது தன்னை அறியாமலேயே அவனை ரசிக்க ஆரம்பித்துவிடுவோமோ என்று பயந்தாள். ஆனால் அவளது அதிர்ஷ்டம் எதிர் திசையில் வேலை செய்ய, அவளை விமானநிலையத்தில் கோல்கேட் புன்னகையுடன் வரவேற்றான் வம்சி. அந்த நொடியிலிருந்து அவளது மனு உறுதியைக் குலைக்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாய் அரங்கேற ஆரம்பித்தன.

 

‘என்கூடவே வர்றானா. இவன் ப்ரோக்ராம் எல்லாம் நாளைக்குத்தானே ஆரம்பமாகுது. இந்த ட்ரிப் முழுசும் இவன் கூடவே இருக்கணுமா… இதென்ன சோதனை’ என்று தோன்றிய கேள்வியைப் புறம்தள்ளி இவனது நீளமான கால்களை மூன்று மணி நேரம் மடக்கி அமரும்போது வலிக்காதா என்ற கவலையே அவள் மனதில் பிரதானமாய் எழுந்தது.

 

பயணத்தின் போது சோனா பேசுவதைக் கண்டு பொறாமை கொண்ட தனது மனதைக் கட்டுப்படுத்த வழியின்றித் தவித்தாள்.

 

‘பாரு காதம்பரி டென்னிஸ் கோர்ட்ல உன்கிட்ட வழிஞ்ச மாதிரிதான் இங்க யாரைப் பார்த்தாலும் வழியிறான். சோ இவன் உன்கிட்ட பேசுறதை வச்சு எடை போடாதே.மென் ஆர் ஆல்வேஸ் மென்’ என்று அவளது மனது எச்சரித்தது.

 

பெங்களூரில், வம்சி கிருஷ்ணாவின் ரூபி நெட்வொர்க்ஸ் பங்க்ஷன் முடிந்த மறுநாள். அன்றுதான் தாய் தந்தையர் மறைந்த தினம். காலையிலிருந்து துரத்தும் அவர்கள் நினைவை மறக்க ஏதாவது ஒரு வரம் கிடைக்காதா என்ற ஏக்கம் அவள் மனதில். நிலைமை புரியாமல் விருத்து ஒன்று ஏற்பாடு செய்யும்படி அமர் வேறு வம்சியைத் தூண்டிவிட்டான். வம்சியை ஒழிப்பதற்கு முன் இந்த அமரை விட்டு விலகவேண்டும். இரவு விருந்தில் கலந்து கொள்வதாய் சொல்லிவிட்டு அறைக்கு வந்தவளுக்கு தூக்கமே வரவில்லை.

 

‘இதே நேரத்தில் தானே அன்னைக்கு அம்மா அப்பா கூட வெளிய போனோம். இப்பதானே மேக்சி வாங்கினோம். அப்பறம் டீ ஷாப்கு இப்பதானே போனோம்’ என்று ஒவ்வொரு சம்பவத்தையும் நினைத்து தவித்தாள்.

 

இன்று எல்லாவற்றையும் மறக்க வேண்டும், அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். தோற்றத்திலாவது அக்கறை செலுத்தலாம். அம்மா அப்பா கடைசியா வாங்கித் தந்த ட்ரெஸ். இதை இன்னைக்காவது  போட்டுக்கலாம். அதற்கு மேல் படுக்க முடியாமல் ஹோட்டலின் அழகு நிலையத்திற்கு போன் செய்து அப்பாய்ன்ட்மென்ட் வாங்கினாள்.

 

“இந்த மாக்ஸி போட்டுட்டு டின்னர் போகணும். அதுக்குத் தகுந்த மாதிரி மேக்அப் பண்ண முடியுமா”

 

“மேடம் ஹேர் கலர் பண்ணட்டுமா? பிரவுன் கலர் வித் கெரமல் ஹைலைட்ஸ் உங்களுக்கு பக்காவா சூட் ஆகும்”

 

“செய்ங்க. பட் நியூட்ரல் மேக்அப் போதும்.” அனுமதி அளித்தாள்.

 

ஹேர் கலர் முடிந்து ப்ரீ ஹேர் விட்டு, மேக்அப் போட்டதும்.

 

“ஓ மை காட் யூ லுக் கார்ஜியஸ். ஒரு சின்ன திருஷ்டி பொட்டு வைக்கிறேன்” என்றவாறு அவளது இதழ்களுக்குக் கீழே சிறிய திருஷ்டி பொட்டினை இட்டாள்.

 

அவள் சொன்னது எவ்வளவு நிஜம் என்று இரவு விருந்தில் வம்சி கிருஷ்ணாவின் கண்களைப் பார்த்து அறிந்து கொண்டாள் காதம்பரி. முதன் முறை வீடியோவில் பார்த்தபோது இருந்ததைப் போன்ற ஆனால் ஐரோப்பிய முறையில் வடிவமைக்கப்பட்ட டின்னர் சூட் அவனது  தோற்றத்தை மிகவும் அழகாகக் காட்டியது.

 

‘அப்பப்பா கண்ணாலேயே விழுங்கிவிடுவான் போல’ என்று நினைத்தவாறே அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் உணவில் கவனமானாள்.

 

டின்னர் சூட்டில், அதன் சாட்டின் காலரில், அவனது ஒவ்வொரு செயலிலும் தெரிந்த ராஜகம்பீரத்தில் கேட்டின் மனது கொஞ்சம் கொஞ்சமாய் பலவீனமடைந்தது.

 

அமர் ஒரு புறம் அவளைப் பேசியே கழுத்தறுத்தான். நிமிர்ந்து பார்த்தால் வம்சி கண்களாலாலே மென்று தின்றான். இருதலை கொள்ளி எறும்பாகத் தவித்தாள்.

 

வம்சி கொஞ்சம் ஈகோ பிடித்தவன் போட்டியில் தோல்வியடைந்தவுடன் விலகி விடுவான். இந்த மாதிரி தன்னை டீஸ் செய்யும் வேலையையும் விட்டுவிடுவான் நாளையிலிருந்து அமரையும் கழற்றிவிட்டுவிடலாம் என்றே நினைத்தாள். ஆனால் அவளே எதிர்பாராத அதிர்ச்சியாக வம்சி தன் தோல்வியை ஒத்துக் கொண்டு தன்னை ஏன் மயக்க முயலவில்லை என்று கேள்வி கேட்ட அந்த நிமிடம் வம்சியின் பார்வையிலிருந்து ஏதோ ஒன்று அவள் கண்களில் வழியாக இதயத்தில் நுழைந்து மலர்ந்து மணம் பரப்பியது.

 

அதன்பின் அவனுடன் வெளியே செல்ல சம்மதம் தெரிவித்தது ஏதோ கனவில் நடந்ததைப் போலக் காதம்பரிக்குத் தோன்றியது.

 

றுநாள் கண்விழித்த காதம்பரிக்கு எங்கிருக்கிறோம் என்று உணர்வதற்கே சிறிது நேரம் தேவைப்பட்டது.

 

‘எங்கிருக்கிறோம், ஹோட்டலா… இல்லையே இதைப் பாத்தால் வீடு மாதிரி இருக்கே’ யோசித்தாள்

 

‘ஓ மை காட்…. இது வம்சி வீடா… அப்ப அவன் கையணைப்பில் உறங்கினது கனவில்லையா…’ விலுக்கென்று தூக்கிப் போட எழுந்து அமர்ந்தாள். உடலெல்லாம் வலித்தது.

 

‘ஏன் இப்படி வலிக்குது. நேத்து முழுவதும் ஏதோ மயக்கத்தில் இருந்ததைப் போலவே ஒரு எண்ணம். என்ன நடந்தது?’

 

கடிகாரத்தைப் பார்த்தாள். மதியம் ஒரு மணி. ‘இவ்வளவு நேரமா தூங்கினோம்’ பதட்டத்துடன் எழுந்தாள்.

 

சுவற்றில் மாட்டியிருந்த வம்சியின் புகைப்படம் அது அவன் வீடுதான் என்று உறுதி செய்தது. ஆனால் எங்கு தேடியும் வீட்டில் யாருமே இல்லை.

 

அவளது கைபேசி கிணுகிணுக்க, விரைந்து சென்று கைபேசியை எடுத்தாள்.

 

“குட் மார்னிங் காதம்பரி,  எழுந்திருச்சிட்டியா”

 

“வம்சி…. வம்சி… இங்க… உங்க வீட்டில்… நேத்து…” வார்த்தைகளைத் தேடினாள். ஆனால் ஒன்று கூட அவளிடம் அகப்படாமல் ஒளிந்து கொண்டது.

 

“இன்னும் அஞ்சு நிமிஷத்தில் வீட்டில் இருப்பேன். ஆனால் நீ கதவைத் திறந்தால்தான் உள்ள வர முடியும்”

 

சொன்னவாறே ஐந்து நிமிடத்தில் காலிங் பெல் அடித்தான்.

 

“ஹப்பாடா ஒரு வழியா எந்திருச்சியே… நான் கதவை உடைக்க ஆளைக் கூப்பிடலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன்” என்றாவாறே உள்ளே நுழைந்தான்.

 

“ஏன்… நேத்து… நேத்து என்ன நடந்துச்சு வம்சி” நடுங்கும் குரலில் ஒவ்வொரு வார்த்தையாகக் கேட்டாள்.

 

“நேத்து நடந்ததுக்கு எக்ஸ்ட்ரீம்லி சாரி செர்ரி. எல்லாத்துக்கும் நானே முழு பொறுப்பையும் எடுத்துக்குறேன்”

 

உடல் நடுங்க அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள். அப்ப எல்லாம் நிஜம்மாவே நடந்ததா…. அம்மா மட்டும் இருந்திருந்தா என்னை வெட்டியே போட்டிருப்பாங்க. இந்த வம்சி உன்னை பேசிப் பேசியே மயக்கிட்டானா? இந்தக் காரியத்தோட விளைவு என்னன்னு தெரியுமா? சும்மாவே வம்சி உன்னை அடக்கி வைக்கப் பார்ப்பான். இவ்வளவு சுலபமா அவன்ட்ட உன்னை இழந்துட்டு நிக்கிறியே’ தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். கண்களில் நீர் தளும்பி ஓரத்தில் நின்றது, எங்கே அழுதுவிடுவோமோ என்று பயந்தாள்.

 

“செர்ரி… என்னாச்சு…“ என்று வம்சி உலுக்கியதும் நினைவுக்கு வந்தவள் பதறி அவனது கைகளை அதே வேகத்துடன் விலக்கினாள்.

 

“சின்ன சிராய்ப்புதான் ஒண்ணும் ஆகலம்மா… டாக்டர் ராத்திரியே வந்து ஊசி போட்டார். நல்லா தூங்குவன்னு சொன்னார். ஆனால் நீ இவ்வளவு பெரிய கும்பகர்ணினு தெரியாம போச்சே”

 

“என்ன… எனக்கு என்னாச்சு”

 

“உனக்கு என்னாச்சு காதம்பரி. பைக்கிலேருந்து விழுந்ததில் அம்னிஷியா மாதிரி ஏதாவது வந்துருச்சா… நேத்து மழை நேரத்தில் பைக் ஸ்டண்ட் பண்ணிட்டு சறுக்கி விழுந்தோம் நினைவிருக்கா..”

 

நினைவுக்கு வந்தது ஆமாம் என்று தலையாட்டினாள்.

 

“உனக்கு ரெண்டு மூணு இடத்தில் லேசா சிராய்ப்பு. அப்பறம் காய்ச்சல் வந்துருச்சு. என் கசின் கிருபாகரோட வைப் டாக்டர்தான். அவங்க பார்த்துட்டு ஊசி போட்டாங்க. அவங்களை வீட்டில் டிராப் பண்ணிட்டு காய்ச்சலா இருக்க உன்னைத் தனியா விடாம வீட்டுக்கு வந்து பாத்துக்கலாம்னு நினைச்சேன். நீ என்னடான்னா  நான் வரதுக்குள்ள  கதவை சாத்திட்டுத் தூங்கிட்ட. நான் மறுபடியும் என் கசின் வீட்டுக்கே போயிட்டேன். காலைலேருந்து உனக்கு போன் பண்ணிட்டே இருக்கேன். நீதான் எந்திருக்கவே இல்லை”

 

அலைப்பேசியை செக் செய்தாள் காலை பத்து மணியிலிருந்து வரிசையாய் வம்சியிடமிருந்து மிஸ்டு கால்கள்.

 

அவனை நம்புவதா வேண்டாமா என்பது போலக் குழம்பிப் போய் பார்த்தாள்.

 

இவன் ஓவராய் நல்லபிள்ளை வேஷம் போடுவதைப் பார்த்தால்…. என்னவோ நடந்திருக்கிறது…. இவன் சொல்ல மாட்டான்…  கண்டுபிடிக்கிறேன்…. இப்போதைக்கு இவனை நம்புவதைப் போலவே நடிக்கலாம். அதற்குள் வம்சி.

 

“காதம்பரி உன்னால் முடிஞ்சா ஒரு காப்பி போட்டுத் தரியா… மில்க் பவுடர் எல்லாம் ஷெல்ப்பில் இருக்கு”

 

“ஒரு பத்து நிமிஷம் டைம் தாங்க… குளிச்சுட்டு வந்துடுறேன் “

 

தனது ஆடைகளை எடுக்க பெட்டியைத் திறந்தாள் அவளை அறியாமல் அவள் மனது யோசித்தது.

 

அந்த அளவுக்கு இன்டிமேட் ரிலேஷன்ஷிப் இருவருக்கும் இருந்தால் இத்தனை நேரத்தில் ஒரு சின்ன கிஸ்ஸாவது தந்திருப்பான். ஆனால் இன்னமும் தள்ளித்தான் நிக்கிறான். அப்ப அவனுடன் இணைந்திருந்தது கனவா? கனவில் கூட அவனுக்கு எப்படி காதம்பரி நீ சம்மதம் தரலாம்.

 

‘நானென்ன செய்றது. அம்மா அப்பாவின் நினைவு தந்த துக்கம், எனக்கு வம்சியைப் பிடிச்சிருச்சே. அவன் கூட இருந்தப்ப ஒரு ராணியா உணர்ந்தேன். அவதான் என்னோட ராஜான்னு மனசு சொல்லுச்சு. அதே கேள்வியை அவன் கேட்டப்ப மறுக்க முடியாத அளவுக்கு என் மனசு பலவீனமாயிருந்துச்சே’

 

ஆனால் அம்மா அப்பா நினைவு, கீழே விழுந்த அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து மனசு தாறுமாறா கற்பனைக்கு போயிடுச்சா… இருந்தாலும் இப்படியா கற்பனை வரும். இவ்வளவு க்ளோசா…

 

வெட்கத்தில் காதம்பரியின் கன்னங்கள் சிவந்தன.

 

“காதம்பரி…. உன் மனசில் என்ன ஓடுது… அதுவும் கன்னமெல்லாம் சிவந்து போற அளவுக்கு. என்னைத்தானே நினைச்ச” ஆவலாய் கேட்டான் வம்சி.

 

உறுதியோடு நிமிர்ந்தாள். “எஸ்… நம்ம நிறுவனங்களோட காண்ட்ராக்ட் எப்ப முடியுதுன்னு யோசிச்சேன்”

 

அவளை வம்சியின் விழிகள் தன்னை வெறிப்பதை அலட்சியப் படுத்தி குளியலறையில் புகுந்தாள்.

என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில் இனி யாரும் இல்லை
ஏன் கேட்காதே அதில் அடிவைக்காதே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 10உள்ளம் குழையுதடி கிளியே – 10

ஹிமாவதிக்கு கோவையின் வாழ்க்கை பழகிவிட்டது. காலை எழுந்து மகனுடன் விளையாடிக் கொண்டே பள்ளிக்குக் கிளப்புவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்தே உணவு உண்ணுவார்கள். பழனியம்மாவின் கைப்பக்குவத்தில் இட்டிலி தோசை கூட சுவை கூடித் தெரிந்தது.  அவரும் அவள் உண்ணும் போது

வார்த்தை தவறிவிட்டாய் – 12வார்த்தை தவறிவிட்டாய் – 12

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கும் லைக்ஸ் போட்டவர்களுக்கும் நன்றிகள் பல. திக்கற்று நின்ற பானு ‘எவ்வழி செல்வாளோ, எவ்விதம் செல்வாளோ’ என்று பதைபதைத்த உள்ளங்கள் அவளது முடிவினைக் கண்டு மகிழ்ந்தீர்கள் என்று உங்களது