Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தமிழ் மதுரா,தொடர்கள் தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 5’

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 5’

றுநாள் காலை காதம்பரியின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ரூபி நெட்வொர்க் ப்ராஜெக்ட் கிடைத்த விவரம் ஒரு ஆள் விடாமல் பரவியிருந்தது.

“கல்பனா அதுக்குள்ளே எல்லார்ட்டயும் சொல்லிட்டியா”

“பின்னே எவ்வளவு பெரிய விஷயம்… ஆபிஸே கொண்டாடிட்டு இருக்கோம்” வாயெல்லாம் புன்னகையாக சொன்னாள் கல்பனா.

“அட, நானே கிசுகிசு மாதிரி ஊர் புல்லா பரப்பிட்டு இருக்கேன்னா பாத்துக்கோயேன். காலைல இருந்து பத்து புது ஆளுங்க கால் பண்ணிருக்காங்க… செம குஷியா இருக்கு”

இனம் புரியாத ஒரு பயம் காதம்பரியின் மனதில் ஏற்கனவே அவள் இந்தத் துறையில் சாதித்திருந்தாலும் இத்தனை புதிய நபர்களிடமிருந்து அழைப்பு ரூபி நெட்வொர்க் தன்னைத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் காரணம் என்பது மறுப்பதற்கில்லை. இது எந்த அளவுக்கு மகிழ்ச்சியான விஷயமோ அந்த அளவுக்கு பயம் தரும் விஷயமும் கூட. ஏனென்றால் வம்சியின் ப்ராஜெக்டை வெற்றிகரமாகவும் திருப்திகரமாகவும் முடித்துத் தராவிட்டால் அவள் தொழிலுக்கே பாதகமாக முடியும். யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.

“என்னாச்சு” கையசைத்து கேட்டின் யோசனையைக் கலைத்தாள்.

“என் லாப் டாப்பில் இருக்குற டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் செக் பண்ணிடு கல்பனா…  மிஸ் ஆனதைக் காப்பி பண்ணிடு… ரூபி ஆபிஸுக்கு மீட்டிங் அட்டென்ட் பண்ணப் போகணும்”

முந்திய நாள் பதற்றத்தோடு சென்ற ரூபி நெட்வொர்க் கட்டிடத்துக்குள் இன்று வென்ற மகிழ்வோடு சென்றாள். வரவேற்பறை பெண் புன்னகையோடும் சற்றே பொறாமையோடும் காதம்பரியை வரவேற்றாள்.

பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் சரியாக 8.55க்கு “மூன்றாவது மாடி, அறை எண் ஐந்தில் உங்களதுக்கு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்று லிப்ட் இருக்கும் வழியைக் காட்டினாள்.

அறையை அடைந்து கதவைத் தட்டும் நிமிடத்தில் வம்சி அவ்வளவு தூரம் சொல்லியும் உடனே போன் செய்யாததால் தன் மேல் பயங்கர கோபமிருக்கும் என்று நினைத்தாள். அதை உறுதிப்படுத்துவதைப் போல

“எஸ் கமின்” என்று உஷ்ணம் குறையாமல் உள்ளிருந்து பதில் வந்தது.

தன்னை உறுத்துப் பார்த்தவனிடம் “குட் மார்னிங் வம்சி” என்றாள்.

“ம்… “ என்று தலையசைத்தான்.

மனதினுள் சிறு பதற்றம் பரவியது காதம்பரிக்கு. வம்சி நேராக விஷயத்துக்கு வந்துவிட்டான்

“காதம்பரி இந்த ப்ராஜெக்ட் ஒழுங்கா நடக்கணும்னா நீ நான் சொல்றதைத்தான் செய்யணும்”

‘இவன் சொல்றதைத்தான் செய்யணுமா? அப்ப மத்தவங்கல்லாம் மூளையே இல்லாத மண்ணாத்தையா’ சுறுசுறுவென கோபம் ஊற்றெடுத்தது காதம்பரிக்கு.

‘மிஸ்டர்.வம்சி கிருஷ்ணா இவ்வளவு நாளா என் சம்பந்தப்பட்ட விஷயங்களை நானேதான் முடிவு செய்திருக்கேன். எதுவும் தப்பானதில்லை. தவிர  நாங்க உங்க ப்ராடக்ட்டை ப்ரமோட் செய்யும் விளம்பர நிறுவனமே தவிர உங்க அடிமை இல்லை. இதை நீங்க நினைவில் வச்சுட்டா நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது”

அவளது பதிலால் வம்சியின் முகம் ரத்தமென சிவந்தது.

“ஓகே காதம்பரி நான் சில விஷயங்களை உன்கிட்ட தெளிவா சொல்லிடுறேன். அதுக்கப்பறம் நம்ம பிஸினெசை தொடரலாமா வேண்டாமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ.

நான் பொறுமையானவன் இல்லை.  எனக்கு முடியாதுன்னுற பதிலே பிடிக்காது. நான் என் வழிப்படி நடந்தே இந்த நிலைக்கு வந்திருக்கேன். என் ரூல்ஸ்படி கேம் விளையாடப் பிடிக்காதவங்களை நான் கம்பல் பண்றதில்லை. அவங்க தாராளமா அவங்களுக்கு சூட் ஆகும் இடத்தில் பிஸினெஸ் பண்ணிக்கலாம்”

ஐந்து வினாடிகள் இடைவெளி விட்டான். அந்த அமைதியான வினாடிகளில் இருவருக்கும் அவர்களின் இதயத்தின் துடிப்பே மிக பலமான ஓசையாகக் கேட்டது. மெதுவாக எழுந்து அவளது மேஜைக்கு முன்னே வந்து நின்றவன் இரண்டு கைகளையும் மேஜையின் முன் ஊன்றி அவளை நோக்கிக் குனிந்தான்.

“இப்பக்  கூட காதம்பரி… நான் உங்களை வேண்டாம்னு சொல்லவே இல்லை. நேத்து சொன்ன அதே வார்த்தைகளைத்தான் ரிபீட் பண்றேன். உங்களோட கேம்பைஃன் ரூபியோட லாஞ்ச்சுக்கு பெர்பெக்ட்டா இருக்கும்.

ஐ க்னோ ஐ அம் டிமாண்டிங். முரட்டுப் பிடிவாதக்காரன்தான். ஆனால் உன்னைப் பத்தியும் அதே மாதிரிதான் கேள்விப்பட்டேன். உன்கூட வேலை பார்த்த மத்த நிறுவனங்களிலும் உன்னை ஒரு டாஸ்க்மாஸ்டர், கடின உழைப்பாளி, கேட் என்றாலே பெர்பெக்ஷன் இப்படிதான் சர்டிபிகேட் தந்தாங்க. ரெண்டு ப்ளஸ் சேர்ந்து உழைப்பது  ப்ராஜெக்ட்டுக்கு பெரிய ப்ளஸ்.

சோ நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ரூபிக்கு உயிரூட்டணும்னு ஆசைப்படுறேன்”

இந்த அளவுக்கு வம்சி வேறு யாரிடமாவது இறங்கி பேசி இருப்பானா… சந்தேகம்தான். அவனது வார்த்தைகள் காதம்பரியின் பிடிவாதத்தை சற்று குறைத்தன.

“என்னைப் பத்தி என் கஸ்டமர்ஸ்ட்ட விசாரிச்சிங்களா?” குரலில் கஷ்டப்பட்டு மென்மையை கொண்டுவந்தாள்.

“அப்கோர்ஸ் எஸ்…. நான் பொழுதைக் கழிக்கப் போற பெண்ணைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்ற குரலில் குறும்பு வம்சி தெரிந்தான்.

‘இவன் என்ன இவ்வளவு சட்டு சட்டுன்னு மூடை மாத்திக்கிறான்’ என்று காதம்பரி வியந்து பார்க்கும்போதே தனது பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

“நான் சொன்ன மாதிரி நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரியான கேரக்டர்ஸ். அதுவும் நான் உன்னைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணம். ஆனால் நீ என் இன்ஸ்ட்ராக்ஷன்சை பாலோ பண்ணலைன்னா நம்ம இணைஞ்சு வேலை செய்ய முடியாது. வீட்டுக்கு போனதும் டெக்ஸ்ட் பண்ணுன்னு சொன்னா நான் உன் மெசேஜுக்காகக் காத்திட்டிருப்பேன்னு அர்த்தம். நீ பத்திரமா வீட்டுக்குப் போனியா இல்ல ஆக்ஸிடென்ட் எதிலையாவது மாட்டிகிட்டியான்னு யாருக்குத் தெரியும்?”

ஆக, அவள் மேல் இருக்கும் அக்கறையில்தான் இந்தக் கோபம். அதிசயமாக காதம்பரியின் இதயம் இறகினைப் போல லேசானது.

“வெரி வெரி ஸாரி வம்சி. வீட்டுக்குப் போகும் வழில க்ராசெரி வாங்கினேன். அப்பறம் மறந்துட்டேன். இனிமே நீங்க வொர்ரி பண்ற மாதிரி வச்சுக்கமாட்டேன். இனிமேல் நீங்க ஏதாவது சொல்லி, நானும் செய்றதா ஒத்துகிட்டேன்னா…. கண்டிப்பா செய்றேன்” என்று வார்த்தைகளை ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்துப் பேசி வெள்ளைக் கொடி பறக்கவிட்டாள்.

“ஸாரி… ‘நீங்க ஏதாவது சொல்லி நானும் செய்றதா ஒத்துகிட்டேன்னா கண்டிப்பா செய்றேன்’ இந்த வார்த்தைகளுக்கு எனக்கு சரியா அர்த்தம் புரியல. கேன் யூ ப்ளீஸ் எக்ஸ்ப்ளைன்” என்று சரியாக வார்த்தைகளைப் பிடித்தான் அந்த எமகாதகன்.

“அப்படின்னா…. என்னைக் கிணத்தில் குதின்னு சொன்னா குதிக்க மாட்டேன். ஆனால் வீட்டுக்குப் போனதும் டெக்ஸ்ட் பண்ணுன்னு சொன்னால் சம்மதிப்பேன்”

அவன் இதழ்களில் புன்முறுவல் தோன்றியது “சரி இனி என்னோட மற்ற எதிர்பார்ப்புக்களை பார்ப்போம்”

‘இதில் என்னென்ன டிமாண்ட் பண்ணுவானோ? இருந்தாலும் ஓரளவுக்கு மேல் வளைஞ்சு கொடுக்கக் கூடாது’ என்ற தீர்மானத்தோடு காதம்பரி நிமிர்ந்து உக்கார்ந்தாள்.

“இது எங்களுக்கு முக்கியமான ப்ராஜக்ட். அதனால் ஒவ்வொரு நாளும் இதோட ப்ரோகிரஸ் எனக்குத் தெரியணும். நான் எதிர்பார்க்கிறது அதிகப்படி இல்லையே”

“நிச்சயம் அதிகம் இல்லை. உங்களுக்கு தினமும் அப்டேட் தர்றேன்”

“அப்ப என்னோட காலையில் உன் பொழுதைத் தொடங்க ஆசையா இல்லை மாலைப் பொழுதைக் கழிக்க விருப்பமா?” என்று குறும்பாக அவன் கேட்டதும் சிரிப்பே வந்துவிட்டது காதம்பரிக்கு

“எந்த பொழுதானாலும் உங்க கூட கழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். காலையில் நம்ம மீட்டிங்கை வச்சுக்கலாம். இரவில் கொஞ்சம் லேட் ஆனால் காத்திருக்க கொஞ்சம் பொறுமை அவசியம். அதுதான் உங்ககிட்ட இல்லையே”

“ஒரே நாளில் என்னைப் பத்தி புரிஞ்சுகிட்டியே… அடுத்த கண்டிஷனுக்குப் போகலாம். உன் செல் நம்பர் என்கிட்டே இருக்கு ஆனால் காண்டாக்ட் பண்ணத்தான் முடியல. சோ உன்னை நான் எந்த நேரத்தில் வேணும்னாலும் தொடர்பு கொள்ள முடியணும். உதாரணத்துக்கு திடீருன்னு எனக்கு ஏதாவது ஐடியா தோணலாம். அதை உடனடியா உன்கிட்ட டிஸ்கஸ் பண்ண நினைக்கலாம்…. “ என்று இழுத்தான்.

‘இதை விடவே மாட்டானா’ என்று எண்ணமிட்டபடி “நீங்க எப்ப வேணும்னாலும் என்னை கால் பண்ணலாம். ஆனால் அட்டென்ட் பண்ண முடியலைன்னா அடுத்த நிமிடமே பதிலை எதிர்பார்க்காதிங்க. ஏன்னா நான் பிரெண்ட்ஸ் கூட இருக்கலாம், ஜிம்மில் இருக்கலாம் இல்லை பாத்ரூமில் கூட இருக்கலாம். அதனால் ரீசனபில் டைமில் உங்களுக்கு பதில் அனுப்பிடுவேன்”

“அக்ரீட்… ஒரு மணி நேரத்துக்குள்ள பதில் அனுப்பிடு”

“மீட்டிங்ல இருந்தால் கஷ்டம்… ரெண்டு மணி நேரம் வச்சுக்கலாமே” என்று கேட்டதும் சில வினாடிகள் கழித்து தலையசைத்தான்.

‘இவனை சமாளிக்கனும்னா இப்படி கொஞ்சம் விட்டுப் பிடிக்கணும்’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள் அவனும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறான் என்பது புரியாமல்.

அறைக்கு காபியும் பிஸ்கட்டும் வர, தன் கையாலேயே காபியைக் கலந்து தந்தான் வம்சி. தனக்கும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டான்.

“இது ஸ்டெம் ஜின்ஜர் பிஸ்கட். ஸ்வீட் பிஸ்கட்டில் அப்பப்ப காரமான இஞ்சி துண்டுகள் டேஸ்ட்டோட சூப்பரா இருக்கும். ட்ரை பண்ணு” என்று விருந்தோம்பல் செய்யவும் மறக்கவில்லை.

அவன் பிடிவாத குணம் தெரிந்ததால் மறுக்காமல் ஒரு பிஸ்கட்டைக் கடித்து சுவைத்தாள்.

“எப்படி இருக்கு?”

“இனிப்பும் உரைப்புமா வம்சிகிருஷ்ணா  மாதிரியே இருக்கு”

உரக்க சிரித்தான். “கிளையண்ட்ஸின் குறைகளை அவங்க மூஞ்சிக்கு நேரே சொல்லலாமா காதம்பரி. உனக்கு பிஸினெஸ் பண்ணவே தெரியல”

‘நேரம்… உன்கிட்ட இப்படியெல்லாம் பேச்சு வாங்கணும்னு என் தலையில் எழுதியிருக்கு’ மனதினுள் திட்டிக் கொண்டாள்.

“பிரெண்ட்ஸ் கூடத் தங்கியிருக்க போலிருக்கு” அடுத்த கேள்விக்குத் தாவினான்.

என்னவென்று புரியாமலேயே ஒரு எச்சரிக்கை மணி அடித்தது காதம்பரியின் மனதில். பதில் சொல்லாமல் தனது காலண்டரில் காலை மீட்டிங் நேரத்தை குறிக்க ஆரம்பித்தாள்.

“பிரெண்ட்ஸ் அதிகமோ. ஏன்னா நிறைய பிரெண்ட்ஸ் இருந்தா சோசியல் நெட்வொர்க்ல பரஸ்பரம் லைக்ஸ் போடுறது, ஸ்டேட்டஸ் போடுறது, பார்ட்டி அட்டென்ட் பண்றது, போட்டோ ஷேர் பண்றது மாதிரியான முக்கியமான கமிட்மெண்ட்ஸ் நிறையா இருக்கும். உனக்கெப்படி”

“சில க்ளோஸ்  பிரெண்ட்ஸ் மட்டும்தான்”

“நல்லது…. அப்ப நம்ம ட்ராவல் பண்றப்ப நிறைய பேர் உன்னை மிஸ் பண்ண மாட்டாங்க”

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் காதம்பரி “வாட்… ட்ராவலா… “

“அப்பறம்… ப்ரோமோஷன் ட்ரிப் பண்ணனுமே…. இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்கு வரைக்கும் நம்ம ப்ராடக்ட்டை சேர்க்க வேண்டாமா. அதுக்கு அந்தந்த  பகுதியில் இருக்கும் முக்கியமான சிட்டிக்களுக்கு நம்ம ரெண்டு பேரும் போகணுமே. எப்படியும் ஒரு இருவத்தஞ்சிலிருந்து முப்பது ஊருக்குப் போக வேண்டியிருக்கும்”

“நார்த்ல இருக்குற ஊர்களுக்கு காலைல போயிட்டு ராத்திரி வந்துடலாம். ஆனா வழக்கமா சவுத் சைட் ஆட்ஸ் ஹேண்டில் பண்ண எங்க சவுத் இந்தியன் பார்ட்னர் ஏஜென்சிஸ் இருக்காங்க. அவங்களுக்கு ஐடியாவை சொல்லிட்டா போதும் பிரமாதமா பண்ணிடுவாங்க. நம்ம மானிட்டர் பண்ணிட்டு கரெக்ஷன் மட்டும் செய்யணும்”

“அவங்க செய்றதுக்கு ஏன் உன் ஏஜென்சியை செலெக்ட் பண்ணேன்?” என்றதும்தான் அவசரமாக வாய் விட்டது உரைத்தது.

“நான் ரூபி சார்பா யாரையாவது அனுப்பி இந்த ப்ரமோஷன் பண்ண முடியாதா. ஏன் நானே போறேன்”

“ரூபிதான் இப்ப உங்க ஒரே மூச்சு என்பதால்”

“அதே மாதிரியே நீயும் நினைக்கணும் காதம்பரி. அப்பத்தான் முழு ஈடுபாட்டோட வேலை செய்ய முடியும்”

“ப்ராக்டிகலா பேசுங்க வம்சி. உங்களுக்கு ரூபிதான் எல்லாம். ஆனால் எனக்கு மத்த கம்பனி ஆட்ஸ் இருக்கு. அதுக்கும் என் உழைப்பு தேவை. அதைத்தவிர என்  நிறுவனம், என்னை நம்பி இருக்கும் ஒரு ஐம்பது குடும்பங்கள். இவங்க எல்லாரையும் பார்க்கணும். உங்க ஒருத்தருக்கு மட்டும்  என் நேரம் முழுக்க செலவளிக்கணும்னு நினைக்கிறது டூ மச்சா தோணலையா”

“அப்ப நான் உன் கஸ்டமர் இல்லையா…  என் எதிர்பார்ப்பை நிறைவேத்துறது உன் கடமை இல்லையா”

சற்று நேர சூடான விவாதத்துக்குப் பின் மும்பை, டெல்லி தவிர தெற்கில் முக்கியமான மூன்று நகரங்களுக்கு மட்டும் தான் வருவதாகவும். மற்ற இடங்களுக்கு வருவது கடினம் என்றும் தெளிவாக சொல்லிவிட்டாள்  காதம்பரி.

“சரி… நார்த் பிரச்சனை இல்லை. காலைல போயிட்டு நைட் வீட்டுக்கு வந்துடலாம். ஆனால் சென்னை, ஹைதிராபாத், பெங்களூர் மூணு இடத்துக்கும் கண்டிப்பா வர்ற. ஒரு வாரம் உன் காலண்டரை ப்ரீ பண்ணிக்கோ” என்றபடி மற்றொரு கப் காப்பியை கலந்து தந்தான் வம்சி. தனக்கும் ஒரு கப் எடுத்துக் கொண்டான். கவனமாக இமெயிலில் மூழ்கியிருந்த காதம்பரியைப் பார்த்து மனதுக்குள் சொல்லிக் கொண்டான்

‘நானே பாம்பே, டெல்லி தவிர சென்னை, பெங்களூர், ஹைதிராபாத் மட்டும்தான் போலாம்னு முடிவு பண்ணிருக்கேன். மூணு ஊருக்கு மட்டும் வான்னு ஆரம்பிச்சிருந்தா நீ எங்கேயும் வரமாட்ட அதனால்தான் எல்லா இடத்துக்கும் வரணும்னு ஆரம்பிச்சேன். காதம்பரி உன்னைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும்’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 16யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 16

கனவு – 16   சஞ்சயனும் வைஷாலியும் எவ்வாறு வீடு வந்து சேர்ந்தார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். வைஷாலி வீட்டின் முன்னே சஞ்சயன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் வைஷாலி எதுவுமே பேசாது இறங்கிக் கீழே சென்றாள். அவளை அந்த மனனிலையில் தனியாக

நிலவு ஒரு பெண்ணாகி – 15நிலவு ஒரு பெண்ணாகி – 15

வணக்கம் தோழமைகளே, போன பகுதிக்கு வரவேற்பு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இன்றைய பகுதியில் ஆதிரன்-சந்திரிகை திருமணம். அடுத்த பகுதியில் அவர்களது காட்டுவழிப் பயணம் தொடங்குகிறது. படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நிலவு ஒரு பெண்ணாகி – 15

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 32ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 32

32 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் அமைதியாக இருந்தான். ” அப்டினா நான்தான் புரிஞ்சுக்காம எல்லாத்தையும் இழந்துட்டேனு சொல்றியா?” என “இல்லை ஆதவ், எமோஷனல் பீலிங்ஸ் எல்லாருக்குமே பொதுவானதுதான். எல்லா நேரத்துலையும் நம்மளால ப்ராக்டிக்கால ஒத்துவருமா வராதான்னு யோசிச்சு யோசிச்சு