உள்ளம் குழையுதடி கிளியே – 29

அத்யாயம் – 29

ந்த அதிகாலை வேளையில் சாரதாவின் இல்லத்தில் தன்னைப் பார்க்க வந்த தெய்வானையிடம் என்ன பேசுவது என்று தெரியாமலேயே திகைத்து அமர்ந்திருந்தாள் ஹிமா. அவளருகிலிருந்த இருக்கையில் தெய்வானை. எதிர் இருக்கையில் அமைதியாக அவளையே பார்த்தவண்ணம் சரத். ஊருக்கு சென்ற இந்த சில நாட்களில் இளைத்து பாதியாய்த் தெரிந்தான். சவரம் செய்யாத முகம், கருவளையம் விழுந்து களைப்பாய் இருந்தான்.

என்னாச்சு… நக்ஷத்திராவிடம் போட்ட சண்டை காரணமா? இல்லை அவளை தெய்வானை மருமகளாக ஏற்றுக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையா? என்று கேட்க துடித்தது ஹிமாவின் உள்ளம்.

சரத் ஒரு வார்த்தையாவது பேசுவானா என்று அவள் எதிர்பார்த்திருக்க அவனது வார்த்தைகளைக் கேட்க அவளது தவிப்பினை கிரகித்தவண்ணம் அமர்ந்திருந்தான் சரத்.

“சரத்… இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டதுக்கு வருத்தப்படுறேன். உங்கம்மாகிட்ட என்னைப் பத்தின உண்மைகளை சொல்லிட்டேன். உங்களோட மனசையும் தெளிவா சொல்லிடுங்க. பொய் மேல நாம கட்டின கட்டிடம் எப்பவோ ஆட்டம் கண்டுடுச்சு. இனி உண்மையை பேஸ் பண்ணுவோம்”

சரத் பதிலளிப்பதற்குள் தெய்வானை ஹிமாவை தீர்க்கமாகப் பார்த்தபடி சொன்னார். “ஹிமா என் மருமகளா நடிக்க சம்மதிச்சுத்தானே வந்த… உன் ஒப்பந்தப்படி நடக்கலையே, வீட்டுக்கு வா…”

திகைத்து போனாள் ஹிமா “சரத்…” அவனது உதவியை நாட அவனோ கைகளை இறுக்கமாகக் கட்டியபடி நீயே சமாளித்துக் கொள் என்பதுபோல அமர்ந்திருந்தான்.

தூங்கி எழுந்தவுடன் தாயைத் தேடி வந்த துருவ் அங்கு எதிர்பாராதவிதமாய் சரத்தைக் கண்டதும் “அப்பா…” என்று ஓடி வந்து தாவி அணைத்துக் கொண்டான்.

தந்தையும் மகனும் முகம் முழுவதும் முத்தங்களைத் தந்து தங்களது அன்பினைப் பரிமாறிக் கொண்டார்கள். தெய்வானையும் ஹிமாவும் நெகிழ்ச்சியுடன் இருவரையும் பார்த்தார்கள்.

“கண்ணு இங்க வா…” என்று துருவ்வை அழைத்தார் தெய்வானை.

“போங்க… நீங்க பேட் பாட்டி. அப்பான்னு கூப்பிட்டா எங்கம்மாவைத் திட்ட மாட்டேன்னு சொன்னிங்கல்ல, அப்பறம் ஏன் திட்டுனிங்க. நானும் அம்மாவும் அப்பாவைப் பாக்க கிளம்பிட்டோம். உங்க கூட டூ” என்றான் கோபத்துடன்.

“கண்ணு உங்க டீச்சர் நீ தப்பு பண்ணா கண்டிப்பாங்களா கொஞ்சுவாங்களா”

யோசித்துவிட்டு “கண்டிப்பாங்க”

“அதைத்தான் பாட்டியும் செஞ்சேன். அதுக்காக பாட்டி பேட் பாட்டியா”

“அம்மா தப்பு பண்ணிங்களா” என்று தன் தாயைக் கேட்டான்.

“அப்பா சொல்லித்தான் அம்மா அந்த தப்பைப் பண்ணாங்க துருவ். அதனால எல்லாத் தப்பும் அப்பா மேலதான்” என்றான் சரத்.

“நீங்கதான் பேடா” என்றான் சரத்திடம்.

“நம்ம வீட்டுக்கு வர்ற வரைக்கும் எல்லாரும் பேட். நீயும் பேட் பாய்” என்றார் தெய்வானை.

காப்பி கப்புகளுடன் அவர்களை உபசரிக்க வந்தார் சாரதா.

“பாட்டி சொல்றது தப்புதானே” சாரதாவிடம் நியாயம் கேட்டான் துருவ்.

“உங்க பாட்டி சொல்றதுதான் சரி. நீயும் உங்கம்மாவும் அங்கதான் இருக்கணும்”

“மேடம்…” என்றாள் ஹிமா திகைத்து

“சரியோ தப்போ நீயும் சரத்தும் போட்ட ஒப்பந்தத்தை ஃபாலோ பண்ணு அதுதான் நல்லது” என்றார் சாரதா முடிவாக.

சரத்தின் வீட்டில் மறுபடியும் அன்றைய தினம் மாலை அடியெடுத்து வைத்த போது அவள் தங்கியிருந்த கீழ் பகுதியின் அறை பூட்டியிருந்ததைப் பார்த்து எங்கு செல்வது என்று புரியாமல் நின்றாள் ஹிமா. ஏனென்றால் தெய்வானையின் அறையைத் தவிர மற்ற அறைகளும் பூட்டப் பட்டிருந்தன.

“உன் பெட்டியெல்லாம் மாடி ரூமில் இருக்கு. இனி அதுதான் உன் அறை” என்று போற போக்கில் சொல்லிவிட்டு சென்றார்.

மாடியில் தயங்கியபடி ஏறிச் சென்று சரத்தின் அறைக்குப் பக்கத்து அறையில் தேடினாள். வெறிச்சென்று இருந்த அந்த அறை அவளது பொருட்கள் சென்று சேர்ந்த இடத்தை சொன்னது. கோபத்துடன் சரத்தின் படுக்கை அறைக்குள் நுழைந்தாள். அவனது குளியலறையிலிருந்து சந்தோஷக் கூச்சல் கேட்டது. சரத்தும் துருவும் பாத்டப்பிலும் ஷவரிலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

“அப்பா உங்க பாத்ரூம் எவ்வளவு பெருசு. பாத்டப் பெருசா இருக்கும்மா. வீக்லி ஒரு தடவை மாடிக்கு வந்து இந்த பாத்ரூமில் குளிக்கலாமா?” என்று சரத்திடம் அனுமதி கேட்டான்.

அவனிடம் சரத் பொறுமையாக சொன்னான் “துருவ் இது நம்ம பாமிலி ரூம். இந்த வீடு நம்ம வீடு. எங்க போகவும் நீ தயங்கவோ அனுமதி கேட்கவோ தேவையில்லை”

“உங்ககிட்ட கூடவா…”

“உன் பிரெண்ட்ஸ் எல்லாரும் அப்பாட்ட அனுமதி கேட்குறாங்களா?” என்று பதில் கேள்வி கேட்டான்.

“தாங்க்ஸ்ப்பா” என்ற சிறுவனின் முகத்தில் சந்தோஷம்.

அவனுக்குத் தலை சீவி கீழே அனுப்பிவிட்டுத் தனது பெட்டியினை எடுத்து கட்டில்மேல் போட்டான்.

“ஹிமா… இந்தப் பெட்டியில் என் டிரஸ் இருக்கு. துவைக்கப் போட்டுடு” என்று எப்போதும் நடக்கும் விஷயம் போல அவளிடம் சொல்லவும் அத்தனை நேரம் கட்டிக் காத்த பொறுமை அவளிடமிருந்து பறந்தது.

“சரத், என்ன நடக்குது இங்க…”

“ஏன்… ஒரு அழகான குடும்பம்தான் நடக்குது”

“இது ஃபேக்… இதை உண்மைன்னு திருப்பித் திருப்பி சொன்னால் நிஜமாயிடாது”

ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டவன் நிதானமாக சொன்னான் “இதுதான் உண்மை… நீயும் இதைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு”

“உங்க ராஜி என்னவானா”

“ராஜின்னு ஒருத்தி இல்லவே இல்லை”

“சரி நக்ஷத்திரா”

“மேத்தாவோட வருங்கால மனைவியைப் பத்தி நம்ம வீட்டில் எதுக்கு பேசணும்”

திகைத்து அவனைப் பார்த்தவள் அந்த செய்தி தந்த பாதிப்பைத் தாங்க முடியாமல் சோபாவில் அமர்ந்துவிட்டாள். ஆனால் அதற்குள் சுதாரித்துவிட்டாள்.

“வெல்டன் அதுதான் உங்க ரெண்டு பேரோட அன்பும் என்கிட்டத் திரும்பிருக்கா… நான் என்ன அவளுக்கு ரீபிளேஸ்மென்ட்டா சரத்… இதுக்கு என்னை அப்படியே விட்டிருக்கலாம். என்னை இப்பவே இங்கிருந்து உடனே அனுப்பிடுங்க” அவளது கண்களில் கண்ணீர்.

சரத்தின் முகம் கோபத்தில் சிவந்தது “அப்படியெல்லாம் அனுப்ப முடியாது ஹிமா… நம்ம ஒப்பந்தப்படி குறைஞ்சது மூணு வருஷம் நீ இங்கதான் இருந்தாகணும். இதுக்கு மேல இதைப் பத்திப் பேசவும் எனக்கு மூட் இல்லை, பேசினாலும் அதைக் கேட்குற மனநிலையிலும் நீ இல்லை” என்று சொல்லி கதைவை படாரென்று அறைந்து சாத்தி சென்றான்.

அதன்பின் அவள் கண்களிலேயே படவில்லை.

அன்று மாலை வீடே யாரையோ வரவேற்பது போலப் பரபரப்பாக இருந்தது. ஹிமாவையும் சரத்தையும் அழைத்தார் தெய்வானை

“என்னோட நெருங்கின சொந்தக்காரங்க நம்ம கூடத் தங்கப் போறாங்க. அவங்களுக்கு இந்த கல்யாண டிராமா எல்லாம் தெரியாது. அதனால் இருவரும் அவங்க மனசை உடைக்காம இருக்குறது பெரிய உதவியா இருக்கும். இதை வீட்டு ஆளுங்க மட்டுமில்லாம உங்க விஷயம் தெரிஞ்ச எங்கண்ணன், கதிர், பழனியம்மா, சாரதா டீச்சர் எல்லாரும் கடைபிடிக்கிறதா உறுதியா சொல்லிருக்காங்க.

ஹிமா சரத் புது புடவை வாங்கி வச்சிருக்கான். அதைக் கட்டிட்டு வா” என்று கட்டளை போல சொன்னார்.

‘யாரது புது விருந்தாளி. அவங்களுக்காக எதுக்கு இன்னொரு வேஷம்’ என்று எரிச்சலுடன் சேலையைக் கட்டிக் கொண்டு வந்தவள் வீட்டு முன் வந்து நின்ற ஆம்புலன்ஸ் வண்டியைக் கண்டதும் அடங்கிப் போனாள்.

“அதிலிருந்து மெதுவே இறங்கினார் ஹிமாவின் தாய் சௌந்திரவல்லி.

“சரத்… இது…” வார்த்தைகள் வராமல் திக்கினாள் ஹிமா.

“உங்கம்மா… நம்ம வீடு இருக்கும்போது எதுக்கு வீணா ஹாஸ்பிட்டலில் தங்கணும்னு அம்மா கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க” என்றான்.

“அத்தை…”

அவளது தலையைக் கோதியவர் “கண்ணைத் துடைச்சுட்டு உங்கம்மாவை நீ முன்னாடி தங்கியிருந்த அறையில் தங்க வை. பக்கத்துக்கு ரூமில் நர்ஸ் ஒருத்தங்க தங்குறாங்க”

“வாங்க சம்மந்தி” புன்னகையுடன் வரவேற்று அமரவைத்தார் தெய்வானை.

“உங்களுக்குப் பெரிய மனசு” என்றார் சௌந்திரவல்லி.

“யாருக்கும் பெரிய மனசும் கிடையாது சின்ன மனசும் கிடையாது. என் மருமகளுக்கு இருக்குற மனக்குறையை போக்கினா என் மனசில் இருக்கும் குறையை அவ தீர்த்து வைப்பான்னு ஒரு சுயநலம்தான்” என்றார் தெய்வானை ஒளிவு மறைவின்றி.

“ஹிமா அவங்களுக்கு என்ன மனக்குறை வச்சிருக்க” என்று மகளைக் கேள்வி கேட்டார் சௌந்திரவள்ளி

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே “பாட்டி…” என்று ஓடி வந்தான் துருவ்.

“துருவ்வுக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ வேணும்னு இருக்குற ஆசையைத் தவிர அக்காவுக்கு என்னம்மா குறை இருக்கபோவுது…” என்று சமயத்தில் தங்களது ஆசையைத் தெரிவித்தார் பழனியம்மா.

இரவு உணவு நேரத்தில் வீட்டில் அனைவருடனும் அமர்ந்து தனக்குத் தரப்பட்ட உப்புச்சப்பில்லாத உணவையும் வழக்கத்தை விட ஒரு பிடி அதிகமாகவே உண்டார் சௌந்திரவல்லி. தன் தாயின் முகத்தில் தோன்றிய ஒளியை திருப்தியுடன் பார்த்தாள் ஹிமா.

“ஹிமா நான் துருவ்வை தூங்க வைக்கிறேன். நீ ஆண்ட்டி கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வா” என்று துருவ்வை தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்றான் சரத்.

அறையில் தன்னருகே அமர்ந்து “அம்மா…” அன்புடன் தன்னை அழைத்த மகளை அதே பாசத்துடன் கையைப் பிடித்து அமரவைத்துக் கொண்டார். பழம் கதைகளை இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

கதைபாட்டுக்கு இருந்தாலும் நர்ஸ் அந்தந்த வேலைக்கு வந்து மருந்து மாத்திரைகளைத் தந்து சென்றார்.

“சின்ன வயசில் எனக்கு எத்தனையோ ஆசைகள், கனவுகள், கற்பனைகள் எல்லாம் இருந்தது… எல்லாம் என் உடம்போட சேர்ந்து ஒண்ணொண்ணா அடங்கிடுச்சு. சில மாசங்களா என் குடும்பத்தோட சில நாட்கள் கழிக்கணும்னு ஒரு பேராசை. ஆனால் வீட்டில் என்னை வச்சுக்க என் உடல்நிலை ஒத்துழைக்குமான்னு குழம்பிட்டு இருந்தேன்… இதெல்லாம் நான் சொல்லாமலேயே புரிஞ்சுட்டு சரத் ஏற்பாடு செஞ்சுட்டார். கிட்டத்தட்ட ஒரு மாசமா என்னைத் தேத்தித் தயார் பண்ணி சரத் வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கார்”

“என்கிட்டே சொல்லவே இல்லம்மா” குறைபட்டுக் கொண்டாள் ஹிமா.

“உனக்கு ஏன் பொய்யான நம்பிக்கை தரணும்னு நினைச்சிருப்பார். குடும்பத்தோட நேரம் கழிக்கணும் என்ற எண்ணம்தான் என் உடம்பு தேறக் காரணம். உங்க கூட வாழணும்னு இப்ப ஆசை வருது. என் மனசுதான் என் உடலை சொல்படி கேட்கவைக்குது”

“நிஜம்மா… நீங்க நடந்து வர்றதைப் பார்த்தவுடன் எப்படி இருந்தது தெரியுமா. மனசுதான் உடலை சொல்படி கேட்கவைக்குது நம்ப ஆரம்பிச்சுட்டேன். அதுதான் மனம்போல வாழ்வுன்னு சொல்றாங்க போலிருக்கு”

“ஆமாம்மா மனம்போல வாழ்வு. ஆனால் உன் மனசு எதையோ தப்புன்னு திருப்பித் திருப்பி சொல்லுது அதுதான் உன் மாமியாருக்கு மனக்குறையை ஏற்படுத்திருக்கு”

“அம்மா…”

“ஒரு நல்ல மனுஷிக்கு மனக்கவலையைத் தந்துடாதே ஹிமா. சரத்தோட சந்தோஷமா வாழ்ந்து அவங்க குடும்பம் தழைக்க வழி செய்”

கண்கள் கலங்க சொன்னாள் “சத்யாவை என்னால மறக்க முடியலைம்மா. இந்த மனநிலையில் சரத்துக்கு ஒரு வாரிசைத் தர முடியுமான்னு தெரியலம்மா”

வருத்தத்தை மறைத்த வண்ணம் சொன்னார் சௌந்திரவல்லி

“ஏன் முடியாது. சத்யாவை நினைச்சுட்டே எத்தனை காலம்தான் இருக்க முடியும். நிதர்சனத்தை எதிர்கொள்ளு. முதல் கட்டமா சரத்தைக் காதலிக்கத் தொடங்கு… சரத்துடன் வாழ்றது சத்யாவுக்கு செய்யும் துரோகமோ, சுயநலமோ இல்லை.

தீன்னு சொன்னா வாய் வெந்துடாது… சத்யா உன் நிலையில் இருந்திருந்தால் எப்பவோ அவனுக்கு மறுகல்யாணம் செய்து வச்சிருப்போம். உன் நிலையில் சத்யா இருந்திருந்தா என்ன செய்யணும்னு நீ நினைப்ப”

“அவர் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சிருப்பேன்”

“அதேதானே சத்யாவும் நினைப்பான். அதனால் நீ மறுபடியும் காதலிக்க ஆரம்பி. அது தப்பே இல்லை. போ உன் மாமியாரின் மனக்குறையை சீக்கிரம் தீரு. அதுதான் எங்க எல்லாருக்கும் சந்தோஷம் தரும் விஷயம்”

குழப்பத்தோடு மாடிக்கு வந்தாள் ஹிமா… துருவ்வும் சரத்தும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க சோபாவில் எதையோ யோசித்தவண்ணம் அமர்ந்திருந்தாள்.

நள்ளிரவில் விழித்த சரத் ஹிமா உறங்காமல் அமர்ந்து இருப்பதைக் கண்டு அவளருகே வந்து அமர்ந்தான் “என்னாச்சு ஹிமா…”

“நான் உங்களுக்கு ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கேன் சரத். இதையெல்லாம் எப்படிக் கைம்மாறு செய்றதுன்னு தெரியல. இப்ப எனகேற்பட்டிருக்கும் சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறதுன்னும் எனக்குப் புரியல. “

அவளது கைகளைப் பற்றியவன் “குழம்பின மனதில் எடுக்கும் எந்த முடிவும் தப்பாவே இருக்கும். சில விஷயங்களை மட்டும் தெளிவு படுத்த விரும்புறேன்

ராஜியோட என் காதல் முடிஞ்சது. இப்ப நக்ஷத்திரா மேத்தா என்ற ஒரு பெரும்புள்ளியை கல்யாணம் செய்துக்க ரெடியாயிட்டா”

“ஐயம் சாரி… சரத், இது அன்னைக்கு நடந்த சர்ச்சைக்குப் பிறகு ஏற்பட்ட முடிவா… இதுக்கு நான்தானே காரணம்”

“என்னைக்கா இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் ஹிமா… ராஜிக்கு வாழ்க்கை நல்லாருக்க என் உதவி தேவைப்பட்டது. அதனால் எங்க உறவு ஆரம்பிச்சது. ஆனால் நக்ஷத்திராவுக்கு விண்மீனா வானத்தில் எப்போதும் ஜொலிக்க மேத்தாவின் தயவுதான் தேவை. எனவே இந்தக் கதைக்கு முடிவுரை எழுதி தூக்கி எறிஞ்சுட்டு அந்தக் கதைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கா”

“இதுக்கு நீங்க நியாயம் கேட்கலையா சரத்”

“நான் ஏமாற்றபட்டதா நினைச்சா நியாயம் கேட்டிருப்பேன். ஆனால் அவகிட்டேருந்து விடுதலை கிடைச்ச உணர்வுதான் எனக்கு. ஆனால் என் நிம்மதி அவளுக்குப் பொறுக்கல அம்மாவுக்கு நம்ம உறவைப் பத்தித் தகவல் சொல்லிட்டா”

“ஐயோ… அவளா… நான் உங்க மாமான்னு ல்ல நினைச்சேன்”

“அவதான் முதலில் சொன்னது… அவளது வார்த்தைகள் உன்னை ரொம்ப தப்பா காமிச்சதாம்.

‘இவ்வளவு நாள் உன்கூட பழகிட்டு உன் கேரக்டர் பத்தி இத்தனை தப்பா சொன்ன இவளை விட வீட்டை விட்டுக் கிளம்பும்போது கூட நக்ஷத்திரா நல்லவன்னு சொல்லி உங்களை சேர்த்துவைக்க முயற்சி பண்ண ஹிமாதான் என் மருமகளா இருக்கமுடியும்’னு அம்மா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க”

“இப்ப நம்ம நிலமை என்ன சரத். நம்ம அம்மாக்களுக்கு நான் உங்களோட வாழ்றதுதான் விருப்பம். இப்ப நான் என்ன பண்றது”

“நீயே யோசி ஹிமா. இதுவரைக்கும் நான் செஞ்சதுக்கு உன் மேல இருந்த காதல் காரணமா இருக்கலாம். ஆனால் பதிலுக்கு நீயும் என்னை விரும்பணும்னு சொல்லமாட்டேன்.

ஏன்னா லவ் ஒண்ணு தந்து பதிலுக்கு மனசை வாங்குற பண்டமாற்று முறை இல்லை. அதுக்காக காதல் ஒருத்தர்கிட்ட ஆரம்பிச்சா அவருகூடவே மண்ணில் புதைஞ்சு போயிடணும்னு அதுக்கு ரூல்ஸ் எதுவும் கிடையாது.

முக்கியமான விஷயம் காலைல நீ சொன்ன சில வார்த்தைகள் என்னை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு. என்னைப் பொறுத்தவரை நானும் சத்யாவுக்கு ரீப்ளேஸ்மென்ட் இல்லை நீயும் ராஜிக்கு ரீப்ளேஸ்மென்ட் இல்லை.

அவங்க ரெண்டு பேரும் நம்ம பாஸ்ட். அதை நினைச்சே நம்ம பிரெசென்ட்டையும் வாழணும்னு கட்டாயம் இல்லை.

இதையெல்லாம் யோசிச்சு ஒரு முடிவுக்கு வா… எதுவா இருந்தாலும் நான் புல் சப்போர்ட் பண்றேன். இப்ப கொஞ்ச நேரம் தூங்கட்டுமா… நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சு” என்றபடி துருவ்விடம் படுத்துக் கொண்டவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள் ஹிமா.

தடுமாறி போனேன் அன்பே உன்னைப் பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னைப் பார்த்தேன் என்று உள்ளம் கேள்வி கேட்கும்

ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்

2 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 29”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post