உள்ளம் குழையுதடி கிளியே – 28


அத்யாயம் – 28

காலையில் வீட்டில் ஒலித்த சுப்ரபாதம் கேட்டுக் கண்விழித்த ஹிமாவுக்கு நடந்ததெல்லாம் கனவா நினைவா என்று நம்பவே முடியவில்லை.

செல்லும் திக்குத் தெரியாமல் நடுரோட்டில் குழந்தையுடன் நின்றவளை நோக்கி ஒரு சுமோ வந்து நிற்க அதிலிருந்து இறங்கினான் சரத்தின் வயதை உடைய ஒருவன்.

“நீ ஏம்மா இங்க நிக்குற வீட்டுக்கு வாம்மா…”

அவனது குரலில் தெரிந்த வேகத்தைக் கண்டதும் எங்கே தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுவிடுவானோ என்ற பயமே ஹிமாவின் மனதில் எழுந்தது. அவளது நேரம் தூரத்தில் தெரிந்த கார் ஹெட்லைட்டைத் தவிர ஒரு மனிதர் கூட அருகில் இல்லை.

“நீங்க யாரு…” என்றாள் நடுக்கத்துடன்.

காரின் பின் இருக்கைக் கதவைத் திறந்து இறங்கிய பழனியம்மாளைக் கண்டதும் அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்ததைப் போலிருந்தது.

“ஹிமாம்மா இது கதிர் தம்பி… நம்ம சரத்தோட மாமா மகன்” என்றாள் பழனியம்மா.

“சிஸ்டர்… எங்கப்பா பண்ண தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன். நீங்க வீட்டுக்கு வாங்க” என்றான் அவன்.

“உங்கப்பா தப்பு பண்ணலைங்க… எனக்கு உதவிதான் செய்திருக்கார். இத்தனை நாளா என் மனசில் இருந்த பாரம் குறைஞ்சதுக்கு அவர்தான் காரணம்”

“நடந்தது எல்லாம் கேள்விப்பட்டேன்” என்றான்

“கதிர் தம்பி வீட்டுக்கு வந்ததும் அவங்கப்பா விவரம் சொன்னாங்க. தம்பி அவரை சத்தம் போட்டுட்டு உங்களைத் தேடக் கிளம்புச்சு. உங்களைப் பார்த்ததில்லை இல்லையா அதனால அடையாளம் சொல்ல நானும் வந்தேன்” நடந்ததை சுருக்கமாக சொன்னார் பழனி.

“நன்றி மிஸ்டர்…” என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள்.

“நான் உங்களுக்கு அண்ணன் முறை ஆகணும்”

“நன்றி அண்ணா. ஒரு உதவி செய்ய முடியுமா… என்னை சென்னை பஸ்ஸில் ஏத்திவிடுறிங்களா”

“மன்னிச்சுக்கோங்க அண்ணனா இருந்து என்னால கடமை தவற முடியாது. உங்களை சரத்தின் அனுமதியில்லாம எங்கேயும் அனுப்ப மாட்டேன்”

“அவரும் என் முடிவுதான் சரின்னு சொல்லுவார்”

“அதை அவன் வாயால் எங்கிட்ட சொல்லட்டும். நீங்க இப்ப வீட்டுக்குக் கிளம்புறிங்களா” என்றான் பிடிவாதமாக.

“புரிஞ்சுக்கோங்க… அந்த வீட்டில் தங்க எனக்கு எந்த உரிமையும் இல்லை”

“அப்படின்னு நீங்க வேணும்னா சொல்லலாம். ஆனால் உங்க கழுத்தில் சரத் கட்டின தாலி இருக்கு. அதனால் சட்டப்படியும், முறைப்படியும் நீங்கதான் அவனோட மனைவி. இதை அவனே மறுக்க மாட்டான்”

“இப்ப என்ன செய்யணும்னு சொல்றிங்க…”

“உங்க வீட்டுக்கு அதாவது உங்களுக்கும் சரத்துக்கும் சொந்தமான வீட்டுக்குப் போங்க… இல்லை… என் வீட்டில் தங்குங்க”

“இது ரெண்டுக்கும் சம்மதிக்க மாட்டேன்”

“நான் இது ரெண்டில் ஒண்ணு மட்டுமே நடக்க சம்மதிப்பேன்”

பழனியம்மா தலையிட்டார். “சூ… இதென்ன சின்ன பிள்ளையாட்டம். உங்க ரெண்டு பேரையும் ஒரு நாட்டாமை கிட்ட கூட்டிட்டு போறேன். அந்த நாட்டாமை சொல்ற தீர்ப்பு தான் இறுதி” என்று அவர் அழைத்து சென்றது சாரதாவின் வீடு.

நடந்தது அனைத்தையும் கேட்டார் சாரதா.

“கதிர் உங்க நிலமையை புரிஞ்சுக்க முடியுது. ஆனால் சரத்தோட ஒப்பினியன் தெரியாம திரும்பவும் அந்த வீட்டுக்கு வர்றது ஹிமாவின் தன்மானத்தை பாதிக்கும். அவளோட மரியாதையை குறைக்குற செயலில் ஈடுபடுவதில் எனக்கு சம்மதமில்லை”

“என்னதான் செய்றதுன்னு சொல்லுங்க மேடம்” என்றான் கதிர் கடுப்பை மறைத்துக் கொண்டு.

“ஹிமாவும் துருவ்வும் என் வீட்டில் தங்கட்டும்” என்றார்.

“என்னது…” என்றனர் ஹிமாவும் கதிரும் ஒரே குரலில்.

“ஹிமா… உனக்கும் சரத்துக்கும் நடந்த திருமணத்தில் உன் தாய் தந்தை ஸ்தானத்தில் நின்னு தாலி எடுத்துக் கொடுத்தது நானும் என் கணவரும்தான். அந்த நிமிஷத்திலிருந்து நீ எங்க வீட்டுப் பொண்ணு. உனக்கு ஒரு வழி செய்றது என் கடமை”

“மேடம் அது ஒரு டம்மி கல்யாணம்”

சாரதாவின் முகத்தில் சீற்றம் “கல்யாணம் உங்க ரெண்டு பேருக்கும் விளையாட்டா போயிடுச்சா… நீங்க நினைச்சா தாலியைக் கட்டிகிறதும் நினைச்சா கழட்டி வைக்கிறதுக்கும் இது ஒண்ணும் டிராமா இல்லை”

“ஆனால் நான் மனைவியா நடிக்கிறதாத்தான் ஒப்பந்தம்”

“உன் ஒப்பந்தம் உங்க ரெண்டு பேரு சம்மந்தப்பட்டது மட்டுமில்ல… ஒரு பெரிய குடும்பத்தையே புரட்டிப் போடும்னு உங்களுக்குத் தெரியாம போனது வேதனையான விஷயம். உங்களோட சிறுபிள்ளைத்தனமான முடிவுகள் ஒரு அன்பான தாயை எத்தனை வேதனைப் படுத்தும். மரணப் படுக்கையில் இருக்கும் உன் அம்மாவுக்கு உன்னோட இந்த செயல் பெருமை தேடித் தருமா…”

கண்கள் கலங்க தலைகுனிந்தாள் ஹிமா.

“அந்த சூழ்நிலையில் எனக்கு இந்த முடிவுக்கு உடன்படுறதுதான் சரின்னு பட்டது”

“தலை குனியுற அளவுக்கு நீ எந்தத் தப்பும் பண்ணல. நீயும் சரத்தும் கல்யாணம் பண்ணிகிட்டது தப்பில்லை. இப்ப அதைப் பொய்யாக்கினதுதான் தப்பு”

“இந்தக் கல்யாணம் பொய்யாகுறது முன்னாலேயே தீர்மானிச்சதுதான். சரத்துக்கு ஏற்கனவே ஒரு காதலி இருக்கா… அவகூடதான் அவர் சந்தோஷம் வாழ முடியும். அவர் மகிழ்ச்சி எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்”

அவளையே உறுத்துப் பார்த்தார் சாரதா. அந்தப் பார்வையின் கூர்மை தாங்க முடியாது தலை குனிந்தாள் ஹிமா.

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராக “கதிர் ஹிமாவதி எங்க வீட்டில்தான் இருப்பா… இங்கிருந்தே அவளும் துருவும் ஸ்கூலுக்கு வருவாங்க. சரத் வந்ததும் மத்த விஷயங்களைப் பேசி ஒரு நல்ல முடிவை எடுக்கலாம்” என்றார் உறுதியான குரலில்.

அந்த இரும்புக் குரலுக்கு எதிர் பேச்சு பேசமுடியாது கிளம்பினான் கதிர்.

**தெ** ய்வானை அந்த அறையில் விளக்கு கூடப் போடத் தோன்றாமல் அமர்ந்திருந்தார். பழனியம்மா அவ்வப்போது வற்புறுத்தி குடிக்கத் தந்த நீராகாரம் மட்டுமே உண்டு கொண்டு கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தார். அவரது அண்ணன் சின்னசாமியாகட்டும் அவரது மகன் கதிராகட்டும் சொன்ன சமாதானங்கள் அவரை ஆறுதல் படுத்தவில்லை.

“அண்ணா நான் தோத்துட்டேன். அப்பாவை மாதிரி மகன்னு சொல்லுவாங்க… அவங்கப்பா மாதிரியே இருந்துட்டானே… நானும் வாழ்க்கையில் எவ்வளவுதான் பாடுபடுவேன்” என்ற தங்கையின் கதறலால் சின்னசாமியின் கண்களிலும் நீர்.

எந்த ஒரு மனிதரும் முழுக்க முழுக்க நல்லவரோ, இல்லை முழு கெட்டவரோ இல்லை. பால் வெள்ளைக்கும் மை கருப்புக்கும் இடையே எத்தனையோ ஷேடுகளில் வண்ணங்கள் இருக்கிறது. அதில் கருப்பின் சாயல் அதிகமாக இருப்பவர் கெட்டவராகவும் வெளுப்பின் சாயல் அதிகமாக இருப்பவர் நல்லவராகவும் இனம் காணப்படுகிறார்.

சின்னசாமிக்கு பணத்தைப் பொறுத்தவரை கருப்பு நிறம் அதிகம். ஆனால் தங்கையின் மேல் இருக்கும் பாசம் சற்று வெண்மையின் பக்கமே சாய்ந்தது. இல்லையென்றால் சரத்தின் தந்தை செந்தில்நாதனுக்குத் தன் தங்கையைத் திருமணம் செய்துத்தர எதிர்த்திருப்பாரா?

செந்தில்நாதன் தாய் தந்தைக்கு ஒரே மகன். அந்த காலத்திலேயே எம். ஏ படித்தவர். கிராமத்தில் தங்குவது தனது தகுதிக்குக் குறைச்சல் என்று பட்டணத்தில் மனம் போல் வாழ்ந்தவர். தந்தையில்லாதது அவருக்கு சாதகமாய் போயிற்று. அவரது தாய் பூவம்மா உறவினர்கள் உதவியுடன் காடு கரைகளை கவனித்து வந்தார். செந்தில்நாதன் பணத்தேவை என்றால் மட்டுமே ஊருக்கு வருவார். தான்தோன்றித்தனமாக சுற்றியதால் அழகு, படிப்பு, வசதி எல்லாம் இருந்தும் திருமணமாகாமல் நாற்பது வயதைத் தொட்டுவிட்டார். பூவம்மாவுக்கு தன் மகன் திருமணம் முடித்து வாரிசை பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஏக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக செந்தில் நாற்பதைக் கடந்தவுடன் திருமணத்துக்கு வேளை கூடி வந்தது.

செந்தில்நாதன் மெட்ராஸில் ஜாலி வாழ்க்கை வாழ்ந்தபோது அவரது நிலத்தைக் குத்தகைக்கு எடுத்த குடும்பம்தான் சின்னசாமியின் குடும்பம். அவர்கள் குடும்பம் அத்தனை வசதி இல்லை. சொந்தக்காரர்களுக்கு மத்தியில் தாங்களும் ஒரு பெரிய மனுஷனாக நிற்க வேண்டும் என்ற அவர்களின் ஆசை அவர்கள் வீட்டு சிறுபெண் தெய்வானையின் மூலம் நிறைவேறும் வாய்ப்பு வந்தது.

இருபது வயது கூட நிரம்பாத தெய்வானையை நாற்பது வயது தாண்டிய செந்தில்நாதனுக்குப் பெண் கேட்டார் பூவம்மா. சம்மதித்து தலையாட்டி வந்தார் தெய்வானையின் தகப்பன். அனைவரும் ஏற்றுக் கொள்ள, அந்தத் திருமணத்தை எதிர்த்தவர் சின்னசாமி மட்டுமே

“அப்பா அவனுக்கு நல்ல பழக்கவழக்கம் இல்லை. ஜாலி பேர்வழி. அந்த செந்திலுக்கு தெய்வானையைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்குறதுக்கு பாழும் கிணத்தில் தள்ளி விட்டுடலாம். இந்தக் கல்யாணம் வேண்டாம்”

ஆனால் இந்தப் பண்டமாற்று முறையில் கிடைத்த நிலம் மற்றும் சொத்துக்கள் அனைவரின் கண்களையும் மறைத்தது.

“மாட்டிக்காதவரை ஊரில் எல்லாரும் யோக்கியன்தான். நான் சம்மந்திகிட்ட பேசிட்டேன். இவனும் முன்ன மாதிரி இல்லை. இப்ப திருந்திட்டானாம்” என்று அனைவரையும் அடக்கிவிட்டார்கள் குடும்பத்துப் பெரியவர்கள்.

“அண்ணா…” பயத்துடன் அழுத தெய்வானையிடம்

“நம்ம வீட்டில் பேசினா வேலைக்காகாது நான் மெட்ராஸில் போயி செந்திலேயே பாத்து பேசிட்டு வரேன்” என்று கிளம்பினார்.

மெட்ராஸில் தன்னைக் கண்காணிக்க வந்த சின்னசாமியைக் கண்டு ஒரே சிரிப்பு செந்தில்நாதனுக்கு. அவக்கு சொர்கலோகமாம் சென்னையை சுற்றிக் காட்டினார். பரிசுகளை அவருக்கும் அவனது தங்கை தெய்வானைக்கும் தாரளாமாக வாங்கிக் கொடுத்தார். பின்னர் மெதுவாக சொன்னார்

“இங்கபாரு சின்னசாமி… நான் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருந்தேன். இப்ப புள்ள குட்டியோட குடும்பமா வாழணும்னு ஒரு ஆசை. அதனாலதான் உந்தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன். அவளுக்கும் எனக்கும் வயசு வித்யாசம் அதிகம்னு ஒரு உறுத்தல் மனசில் இருந்துட்டே இருக்கு. நீ வேணும்னா அவளை வேற நல்ல இடத்தில் கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணு. நானே உதவி செய்றேன்”

“பரவால்ல நீங்களே நல்லவராத்தான் இருக்கீங்க. என் தங்கச்சிகிட்ட சொல்லிடுறேன்” என்றபடி ஊருக்கு வந்து தன் தங்கையிடம் சொல்லித் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார்.

“முன்னாடி அப்படி இப்படி இருந்தாராம். இப்ப நல்லமாதிரியா தெரியுறார். பேசாம கல்யாணம் பண்ணிக்கோ. தினமும் மூணு வேளை சோறு சாப்பிடலாம். வேகாத வெயிலுல காட்டு வேலை பாக்கவேணாம். கிழிஞ்ச சேலையைத் தூக்கி எறிஞ்சுட்டு மாசத்துக்கு ஒரு புது சீலை வாங்கலாம். புள்ள குட்டிங்களை இங்கிலீஷ் படிப்பு படிக்க வைக்கலாம். வேற யாரைக் கல்யாணம் பண்ணிகிட்டாலும் உன் விதி மாறாது. “

சரி என்று தலையாட்டி மணந்து கொண்டார் தெய்வானை. ஆனால் திருமணமாகி குழந்தை இல்லாமல் இருவரும் வாடினர். இடையில் சின்னசாமிக்குத் திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் குடும்பம் பெரிதாகியது. அவரின் மனைவியின் தூண்டுதலால் மறைந்திருந்த பணத்தாசை சின்னசாமியின் மனதில் வளர ஆரம்பித்தது.

தெய்வானையின் நிலபுலன்களைக் கவனிப்பதில் உதவியவர் அவ்வப்போது தனது உபயோகத்துக்கென கை வைக்க ஆரம்பித்தார்.

தவமாய் தவமிருந்து சரத்தைப் பெற்றெடுத்தார் தெய்வானை. அவன் பிறந்த சில வருடங்களில் தன் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை உணர்ந்தார் செந்தில்நாதன். தான் அதிக நாட்கள் இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தது போல மனைவிக்கு கணக்கு வழக்குகளை சொல்லிக் கொடுத்தார். அவர் அண்ணன் சின்னசாமி திருட்டுக் கணக்குக் காட்டுவதை அதிர்ச்சியுடன் பார்த்தார் தெய்வானை. ஆனாலும் கணவரின் சொல்படி வெளியில் காண்பிக்கவில்லை.

ஒரு நாள் தெய்வானையை அழைத்த செந்தில்நாதன். ஏற்கனவே அவரது உடல்நிலை பற்றிய கவலையில் இருந்தார் தெய்வானை

“தெய்வானை… உன் வாழ்க்கையை நான் கெடுத்துட்டேனோன்னு வருத்தமா இருக்கு. அதுக்குப் பரிகாரமா என் சொத்தெல்லாம் உன் பேருக்கு மாத்திட்டேன். எல்லார்கிட்டயும் ஜாக்கிரதையா இரு. யாரையாவது கொஞ்சமா நம்பலாம்னு நினைச்சா உங்கண்ணன் சின்னசாமியை நம்பு”

“ஆனா அண்ணன் கணக்கில் திருட்டுத்தனம்…”

“அது ஒண்ணும் பெருசில்ல… நம்ம கண்ட்ரோல் பண்ணி வச்சுக்கலாம். அது எப்படின்னு சொல்லித்தரேன்.

தேனை எடுக்குறவன் புறங்கையை நக்காம இருக்க மாட்டான். அதுமாதிரிதான் உங்கண்ணனும். வேற யாராவதா இருந்தா எல்லாத்தையும் வழிச்சுட்டு போயிடுவாங்க. இவனுக்கு உன் மேல கொஞ்சம் பாசம் இருக்கு. அதனால அந்தளவுக்குப் போகமாட்டான்.

பாசம் எப்படின்னு பாக்குறியா… உன் வூட்டுல எல்லாரும் எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சப்ப தைரியமா வந்து என்னைப் பத்தி விசாரிச்சுட்டு, நான் நல்லவனில்லைன்னா கல்யாணத்தை நிறுத்திருனும்னு வந்தான் பாரு… இதிலருந்தே தெரியல அவனுக்கும் கொஞ்சம் நல்ல குணம் இருக்குன்னு.

அதனால எனக்கு ஏதாவது ஆனால் சரத் தலைஎடுக்குற வரை சின்னசாமியை வச்சு எல்லாத்தையும் சமாளி. அவன்தான் உனக்குப் பாதுகாப்பு. பதிலுக்கு வருஷ வருமானத்தில் கால் பகுதி அவனுக்குன்னு மொய் எழுதிடு”

இப்படி சொன்ன சில மாதங்களில் அவர் மறைந்தார். அதிலிருந்து கணவர் சொன்னதேயே வேதவாக்காக எண்ணி வாழ்ந்து வருகிறார் தெய்வானை.

சரத் நன்றாகப் படிக்க ஆசைப்பட்டார். அவன் தந்தையைப் போலத் தடம் மாறிவிடக் கூடாது என்றுதான் சீக்கிரம் கால்கட்டு போட்டுத் தன் அருகிலேயே வைத்துக் கொள்ளத் துடித்தார். இப்போது தந்தையையும் உத்தமனாக்கி விட்டான் அவரது மகன்.

நடிகையுடன் தாலி கட்டாமல் குடும்பம், அம்மாவுக்காக ஒரு பொய் குடும்பம். வெறுப்பாய் இருந்தது தெய்வானைக்கு. இந்த தெய்வம் நான் சந்தோஷமே அனுபவிக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிவிட்டதா.

அவர மேலும் கழிவிரக்கத்தில் உழலவிடாமல் ஒரு உருவம் அறைக் கதவைத் திறந்து லைட்டைப் போட்டது. அது தன் மகன்தான் என்பதை முகம் பார்க்காமலேயே உணர்ந்தது அவரது உள்ளம்.

“அம்மா…”

வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார் தெய்வானை.

அவரது பாதத்தைக் கையில் ஏந்திக் கொண்டவன் அப்படியே அவரது காலடியில் அமர்ந்தான்.

“மன்னிச்சுடுங்கன்னு சொல்றது கம்மி. சத்தியமா இனிமே உங்க மனசு சந்தோஷப்படுற மாதிரி வாழுவேன்”

“அந்த டான்ஸ்காரியை கூட்டிட்டே வந்துட்டியா… இப்பயே சொல்லிடு நான் கிளம்பிடுறேன்”

“இல்லம்மா… என்னால ஹிமாவைத் தவிர வேற யார்கூடவும் வாழ முடியும்னு தோணல”

புரியாமல் சரத்தைப் பார்த்தார்.

“கொஞ்ச நாளா ரொம்ப யோசிச்சுட்டே இருக்கேன்மா… நிஜம்மா ஹிமாவை நான் விரும்புறேன். அவளையும் துருவ்வையும் மெட்ராஸில் முதன்முதலில் பார்த்தபோது உன்னையும் என்னையும் பார்த்தது மாதிரியே இருந்ததும்மா…”

விசும்பியபடி தன் தாயின் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.

“அப்பா இறந்ததுக்கு அப்பறம் ஊருக்கு எங்காவது போகணும்னா துணைக்கு வர சொல்லி கெஞ்சிட்டு ஒவ்வொரு சொந்தக்காரங்க வீட்டுக்கும் போயி நிப்போம் இல்லம்மா…

‘அண்ணி சரத்துக்கு திருப்பதியில் மொட்டை போடுறதா வேண்டுதலிருக்கு. நான் மட்டும் தனியா போக முடியாது. செலவெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க யாராவது துணைக்கு வரமுடியுமா’ ன்னு தெருத்தெருவா ஒவ்வொருத்தர் வீட்லயும் போயி விசாரிப்பிங்கல்ல…

நம்ம காசில் வர்றவங்க கடைசில உங்களை மட்டும் விட்டுட்டு என்னைக் கூட்டிட்டு போவாங்கல்ல… எனக்கு சாப்பாடு கூட சரியா வாங்கித் தர மாட்டாங்க.

இருந்தாலும் எத்தனை பேரு வீட்டில் நம்ம ரெண்டு பேரும் உதவி கேட்டு நின்னிருக்கோம்… எனக்கு அதையெல்லாம் மாத்தணும் போல ஒரு வெறி வரும். அப்ப என்னால எதுவுமே செய்ய முடியல…

நீங்க என்னை வச்சுட்டு நின்ன மாதிரிதான்மா துருவ்வை வச்சுட்டு ஹிமா நின்னப்ப எனக்கு தோணுச்சு. நடுரோட்டில் மகனை ஸ்கூலிலருந்து நிறுத்திட்டாங்க, வேற என்ன செய்றதுன்னு திகைச்சு போயி நடந்து வந்தவளைப் பார்த்தப்ப நிஜம்மா சொல்லப்போனா அங்க துருவ்வும் ஹிமாவும் என் மனசுக்குத் தெரியல. நீயும் நானும்தான் தெரிஞ்சோம். என் மனசு அவளைப் பார்த்துக் குழைஞ்சுடுச்சும்மா…

அவளோட நிலையை மாத்தணும்னு… மாத்தியே ஆகணும்னு என் மனசு அடிச்சுக்குது… என்னால மாத்த முடியும்னு மனசுக்குத் தெரிஞ்சது. அதைத்தான் செஞ்சேன்”

கண்ணீர் வழியும் கண்களுடன் தன் மகனைப் பார்த்தார். “ ஏன் எங்கண்ணன் எனக்கு உறுதுணையாய் நின்ன மாதிரி நீயும் அவளுக்கு இருந்திருக்கலாமே… கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்பில்லையா… துருவ்வை உன் மகன்னு பொய் சொல்லி என்னை ஏமாத்தினது தப்பில்லையா”

“உங்களை ஏமாத்த நினைச்சதுக்கு மன்னிப்பு கேட்பேன். ஆனால் ஹிமாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டேன். ஏன்னா அது என் மனசுக்குத் தப்பாப் படல… ஹிமா என் மனைவின்னா துருவ் என் மகன். அதனால அதுவும் தப்பில்லை” என்று உறுதிபட சொன்னான்.

“நீ மட்டும் சொன்னா போதுமா… அந்தப் பொண்ணுக்கும் மனசு இருக்குல்ல. அது உன்னை ஏத்துக்குமா…” தெய்வானை கேட்டதும் அவரை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தான் சரத்.

“ஏத்துக்குவாளாம்மா…” ஏக்கத்தோடு கேட்ட மகனிடம்

“தெரியாமலேயே உள்ளம் குழைஞ்சு பொங்கிடுச்சாக்கும். தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிறதே உன் வழக்கமாயிடுச்சுடா…” என்று சலித்துக் கொண்டார் தெய்வானை.

Tags:

3 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 28”

 1. Kavithamohan says:

  Sister today episode update pannalaya🙄 we are waiting 😔

  1. Tamil Madhura says:

   Thanks for your support Kavitha. Posted the episode

 2. Kavithamohan says:

  Romba nalla irunthathu intha episode.neega epdi oru spelling mistake illame apdiye story la mulgidara mathiri eluthariga.so sweet sister

Leave a Reply to Kavithamohan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.