உள்ளம் குழையுதடி கிளியே – 24

அத்தியாயம் – 24

சென்னைக்கு வந்தவன் முன்னரே எதிர்பார்த்தபடி உடனடியாக துபாய் செல்ல வேண்டியிருந்தது. அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தின் காண்ட்ராக்ட்டை கவனிக்க வேண்டியிருந்ததால் அவனது அலுவலக வேலைகள் அதிகமானது.

அவனது நிறுவனம் துபாயின் மருத்துவ சேவை நிறுவனத்தின் இன்ப்ரா ஸ்டரக்சர் பொறுப்பை ஏற்றிருந்தது. மேலும் மிடில் ஈஸ்ட்டின் மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கத் திட்டமிருந்ததால் அவர்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய ப்ராஜெக்ட்.

முதல் கட்ட வேலை என்பதால் மிகக் கடினமாகவே இருந்தது. கிளையன்ட் நிறுவனத்தின் டைரக்டர் சுனிலுக்கு சரத் முன்பே பரிச்சயம். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். எனவே அலுவலகம் சம்பந்தமான டெக்னிகல் ஆலோசனைகள் தந்து பிரச்சனைகளைத் தீர்க்க உதவினான் சரத். முன்னரே இருவரும் தெரிந்தவர்கள் என்றாலும் அந்த சில நாட்களில்தான் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது.

“வருடக்கணக்கா நீடிச்சுட்டிருந்த பிரச்சனைகளை சால்வ் பண்ணிட்ட சரத். இப்ப செட்டப் செஞ்சுத் தரதெல்லாம் சரி ஆனால் நீ ஊருக்குப் போனதும் என்ன செய்றதுன்னுதான் தெரியல”

“எங்க ஊரில் பால் பொங்கும்போது அதைக் கட்டுப்படுத்த தண்ணி தெளிப்பாங்க. ஆனால் அது மறுபடியும் கொஞ்ச நேரம் கழிச்சு பொங்காம இருக்கணும்னா அடுப்பை அணைக்கணும். அதே மாதிரி நான் உனக்கு செஞ்சிருக்குற ஸ்டெப்ஸ் எல்லாம் தற்காலிகம்தான். பிரச்சனையை முழுமையா தீரணும்னா ஸ்பெஷலைஸ்ட் டீம் கிட்ட கொடுத்துத் தான் சால்வ் பண்ணனும். “.

“நீ வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் பிடிக்க இது ஒரு வழியா…”

“உன் ப்ராஜெக்ட் எந்த விதத்திலும் எனக்கு உதவப் போறதில்லை. இந்தப் ப்ராஜெக்ட்டை முடிச்சுட்டு என் சொந்த நிறுவனத்தை பார்த்துக்கப் போறேன்”

நிறுவனத்தைப் பற்றி விசாரித்தான்.

“நல்லதா போச்சு. என் நிறுவன காண்ட்ராக்ட்டை நீயே பாரு”

“அவங்க க்ளையன்டை இழுக்குறதா இப்ப வேலை பார்க்கும் நிறுவனம் சண்டைக்கு வருமேப்பா…”

“ஏன் சண்டைக்கு வர்றாங்க… இவங்க தரும் சர்விஸ்க்கும் நீ ஒப்பந்தம் போடப் போற வேலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே…”

“இருந்தாலும்…”

“உன் பிரச்சனையைத் தீர்க்க ஒரு வழி இருக்கு. உன் மனைவியையும் கம்பனில பார்ட்னராக்கு. அவங்க பெயரில் உன் சர்விசசுக்கு கோட் பண்ணு. நானும் எங்க ஆபிஸ்ல வேற ஏதாவது லீகல் ப்ராப்ளம் வருமான்னு பார்த்துட்டு சொல்றேன்” என்று ஒரு யோசனை சொன்னான்.

சுனிலின் யோசனையைத் தீவிரமாக சிந்தித்த சரத் ஆடிட்டரை அழைத்து ஹிமாவையும் கம்பனியின் பார்ட்னராக்க நடவடிக்கைகளை எடுக்க சொன்னான்.

இவை அனைத்துக்கும் நடுவே அவனுக்கு நக்ஷதிராவாக மாறியிருந்த ராஜியிடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது. தனது போன் சில நாட்களாக வேலை செய்யவில்லை என்றும், புது போன் வாங்கிவிட்டேன் என்றும் ஒரு புளுகு. அவன் எங்கிருக்கிறான் என்ற கேள்வி. அவனை மிகவும் பிரிந்து வாடுவதாகவும் சீக்கிரம் சந்திக்க ஆசை என்றும் ஒரு உருகல்.

நாட்கள் சென்றுவிட்டது அவள் மேலிருக்கும் கோபம் குறைந்திருக்கும் என்று கணக்குப் போட்டு அழைக்கிறாள்… எவ்வளவு சாமர்த்தியம்… இவள் இப்போதுதான் இப்படியா அல்லது முதலிலிருந்தே இப்படித்தான் இருக்கிறாளா? நான்தான் இவளது குணத்தை இனம் காண முடியாது இருந்திருக்கிறேனா…

தான் அலுவலக வேலையாக துபாயில் இருப்பதாக ஒரே வரியில் பதிலளித்துவிட்டுத் தனது வேலைகளைத் தொடர்ந்தான்.

அடுத்த நிமிடமே அவளிடமிருந்து இன்னொரு செய்தி. மறுநாள் காலை துபாய்க்கு வருவதாகவும் அவளை ரிசீவ் செய்து கூட்டிப் போகச் சொல்லியது அது.

மறுமுனையில் சரத்தின் அழைப்புக்காக நக்ஷத்திரா காத்திருக்க அவனிடமிருந்து இன்னொரு செய்தி வந்தது. தான் கிளையன்ட் மீட்டிங் நடக்கும் ஹோட்டலிலேயே ஒற்றை படுக்கை அறை ஒன்றில் தங்கியிருப்பதாகவும் அவள் தங்க வசதிப் படாது என்றும் சொன்னது.

என்னை வரவேண்டாம்னு சொல்றானா…

‘வேண்டுமானால் இன்னொரு அறையை புக் செய்யவும். அதற்கான பணத்தை நான் பே செய்கிறேன். இரவு அலுவலக வேலை முடித்தவுடன் எனது அறைக்கு வந்து என்னைக் காதலித்து செல்லவும். நான் போட்டோ எடுத்து உன் டம்மி பொண்டாட்டிக்கு அனுப்ப மாட்டேன்… ’ என்று நக்கலாக பதிலனுப்பினாள்.

‘இரவு அலுவலக வேலை முடித்தவுடன் எனது அறைக்கு வந்து என்னைக் காதலித்து செல்லவும் ’ என்ற வரியை ஆயிரம் முறை படித்திருப்பான் சரத்.

ராஜி உன்னிடமிருந்தா இப்படி ஒரு கேவலமான வார்த்தை. உன்னிடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நடப்பதே வேறு. இவளுடனா இத்தனை நாள் நெருங்கிப் பழகினேன். தன் உடலெல்லாம் சேற்றை வாரிப் பூசிக் கொண்டது போல அருவருப்பாய் உணர்ந்தான் சரத்.

ஒருவரின் அன்பு கொச்சைப் படுத்தப்படும் போது அடையும் உச்சபட்சமான வேதனையை அனுபவித்தான். இப்போது அவனது கவலையைத் தீர்க்கும் ஒரே மருந்து ஒருவரிடம் மட்டும்தான் இருக்கிறது… ஹிமாவுக்குக் கால் செய்து அவளைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டான்.

“கொஞ்சம் வேலை அதிகம் ஹிமா… ரொம்ப பிரஷரா இருக்கு… கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசலாம்னு கால் பண்ணேன்”

“என்னாச்சு சரத்” என்ற அவளது அக்கறையான குரலில் அவள் மடியில் தலைசாய்த்து ஆறுதல் தேடலாம் போலத் தோன்றியது.

“சொல்லுங்க சரத்… அத்தையை மிஸ் பண்றிங்களா…”

“அம்மாவை மட்டுமில்ல ஹிமா… உன்னையும் துருவ்வையும் கூட ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன். ரெக்கை ஏதாவது இருந்திருந்தால் இந்நேரம் பறந்து வந்து உன்னைப் பார்த்திருப்பேன். உன் மடியில் படுத்து டென்ஷன் எல்லாம் மறந்திருப்பேன். என் கவலைல பாதியை உன்கிட்ட தந்திருப்பேன்”

“இப்ப மட்டும் என்ன முழு கவலையையும் என்கிட்டே தாங்க… நான் சுமக்குறேன். உங்களுக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா…” நக்ஷத்திராவால் ஏற்பட்ட காயத்திற்கு ஹிமாவின் வார்த்தைகள் மயிலிறகால் மருந்து தடவியதைப் போலக் குளிர்ந்தது.

“அப்படியா…” கண்மூடி அவளது அன்பான முகத்தைக் கற்பனை செய்தான். இந்தவாரம் நம்ம ஆபிஸ்லருந்து ஒரு ஆள் வருவார். அவர் கேக்குற பேப்பர்ஸ்ல கையெழுத்து போட்டுத் தா”

“பூ… இவ்வளவுதானா… போட்டுடுறேன்” என்றாள்.

வீட்டு விவரங்களையும் துருவ்வின் படிப்பையும் பற்றிக் கேட்டான். அவன் மனமே லேசானது போலத் தோன்றியது.

போனை வைத்தபோது… அதில் ஏகப்பட்ட மிஸ்டு கால்கள். அத்தனையும் நக்ஷத்திராவிடமிருந்து.

‘பதிலையே காணோம்’ என்று நக்கலாகக் கேட்டிருந்தாள்.

‘உங்களது தாராள மனப்பான்மைக்கு நன்றி. ஆனால் மூன்றாம் நபரிடமிருந்து வரும் உத்தரவை நானும் என் மனைவியும் ஏற்பதில்லை. அவர்களுக்கு பதிலனுப்ப வேண்டிய அவசியமும் எங்களுக்கில்லை’ என்று பதிலனுப்பி விட்டு போனை அணைத்தான்.

சரத்தின் சொல்லை மதித்தால் நக்ஷத்திராவின் ஈகோ என்னாவது… மறுநாள் காலையே அவளிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

“சரத், உன்னைப் பார்க்குறதுக்காக நான் துபாய்க்கு வந்திருக்கேன்… டின்னருக்குப் ‘பியர்சிக்’ ரெஸ்டாரன்ட் வந்துடு… சாயந்தரம் ஏழு மணி” என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திருக்காமல் வைத்துவிட்டாள்.

கட்டளையிடுவதே அவளது பழக்கமாகப் போய்விட்டது. இதற்கு இன்று முடிவுகட்ட வேண்டும். மாலை எப்படியோ அலுவலக வேலைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு பியர்சிக் வந்து சேர்ந்தான்.

கடற்கரையிலிருந்து சற்று தள்ளி, கடலுக்கு மேலே அஸ்திவாரம் எழுப்பப்பட்டுக் கட்டப்பட்ட அழகிய உணவகம். அதை அடைய நீண்ட மரப்பாலம். பிரேத்தியேகமாக ‘சீபூட்’ உணவு வகைகள் அங்கு கிடைக்கும்… செல்லும் வழியில் சிலையாக நின்ற குதிரைகள் கம்பீரமாக வரவேற்க, வண்ண விளக்கொளிகள் அலங்கரிக்க அந்த அழகை ரசித்தபடி ரிசெர்வ் செய்த டேபிளை அடைந்தான்.

வழக்கம் போல நக்ஷத்திரா வந்திருக்கவில்லை. அரைமணி காத்திருப்புக்குப் பின் சலிப்படைந்தவன் நெட்டின் ஸ்கைப் வீடியோ கால் மூலம் குடும்பத்திடம் உரையாடத் தொடங்கினான்.

வீடியோவில் அந்த உணவகத்தையும் கடலையும் காட்டினான்.

“சூப்பரா இருக்குப்பா… அதுதான் அங்க போயிட்டிங்களா” என்றான் துருவ்

“சூப்பரா இருந்தாலும் ஹோட்டல் ஹோட்டல்தான் வீடு வீடுதான். வீட்டுக்கு இருக்குற உயிர்ப்பு இங்க இல்லை. அதுவும் துருவ் இல்லாம ஸ்விம்மிங் போகவே பிடிக்கல”

“ஐய குளிக்கவே இல்லையா”

“ஆமாம்… உன்னை மாதிரியே நானும் குளிக்கல…”

“வீட்டுல கேர்ள்ஸ் எல்லாம் என் கண்ணு எரியுற மாதிரி சோப்பு போடுறாங்கப்பா” கம்ப்ளைன்ட் செய்தான்.

“அதெப்படி சரத் கண்ணு எரியாம சோப்பு போட்டுவிட்டிங்க?” ஹிமாவும் கலந்துகொண்டாள்.

“அதெல்லாம் பாய்ஸ் போட்டா எரியாது… அந்த சீக்ரெட்டெல்லாம் கேர்ள்ஸுக்கு சொல்லித் தர மாட்டோம்” பிகு செய்தான்.

“அப்பா, அம்மா ஸ்கூல்ல டான்ஸ் பண்ணப் போறாங்க…” உற்சாகமாக சொன்னான் துருவ்.

“நிஜம்மா ஹிமா…”

“ஸ்கூல் ப்ரோக்ராம்க்காக ஒரு டான்ஸ் பண்ண சொல்லி சாரதா மேடம் கேட்டிருக்காங்க”

“என்ன பாட்டு”

“குற்றாலக் குறவஞ்சில ஒரு ஸாங் செலெக்ட் பண்ணிருக்கேன்”

“எனக்கு ஆடிக் காமியேன்”

“இப்பவா…” வியப்புடன் கேட்டாள்.

“ஏன் மாட்டியா…”

“ப்ரோக்ராம் இன்னும் ரெண்டு வாரத்தில் இருக்கு… நீங்க நேரில் வந்து பாத்துக்கோங்க”

“இப்ப ஆடிக் காமிக்க மாட்டியா…”

“ம்ஹும்…”

“உன் பேச்சு கா… எங்கம்மாவைக் கூப்பிடு உன்னைப் பத்தி சொல்றேன்”

“இந்த ஹிமா ஆடவேண்டுமானால் சரத் பாடவேண்டும்… ஓகேயா”

“ஓகே இல்லை. அது மஹா கொடுமை… நான் ஊருக்கு வந்தே பாத்துக்கிறேன்”

இருவரும் சிரித்தனர்.

அவன் வாய்விட்டு சிரிப்பதை தீப்பொறி பறக்க இரு விழிகள் முறைத்தன.

அவனை ஒரு மணி நேரம் காக்க வைத்த பின் வந்த நக்ஷத்திரா, பதினைந்து நிமிடங்களாக அவனது பார்வையை எதிர்பார்த்து சரத்தின் எதிரே அமர்ந்திருக்கிறாள்.

முன்பானால் அவளுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பான். அவளை தூரத்தில் கண்டதும் அருகே வந்து அழைத்து செல்வான். கொஞ்சம் சீக்கிரம் வர ட்ரை பண்ணேன் என்று அவளுக்கு உறுத்தாமல் சொல்வான். ஆனால் இன்றோ அவள் வந்து டேபிளில் அமர்ந்தது கூடத் தெரியாமல் அந்த பொம்பளையுடன் சிரித்துக் கொண்டிருக்கிறான்.

“ஹிமா உன்னைப் பார்க்க ஜெயராம்னு ஒருத்தர் வருவார். அவர் தர்ற பேப்பர்ஸ்ல கையெழுத்து போட்டுத் தந்துடு”

இந்த வார்த்தைகளை அவன் வாயால் நக்ஷத்திராவுக்கு சந்தோஷம்… டைவேர்சை உறுதி செய்வானாயிருக்கும். இப்படி அவ்வப்போது இதுகளை எல்லாம் மண்டையில் கொட்டி அடக்கி வைத்தால்தான் சரிபட்டு வரும். இல்லையென்றால் ஒரேடியாகத் தலைமேல் ஆட ஆரம்பித்து விடுவார்கள்.

சரத்திடமிருந்து வந்த அடுத்த வாசகம் அவள் தலைமேல் இடியே விழுந்ததைப் போல இருந்தது.

“ஒண்ணுமில்ல உன்னை நம்ம கம்பனி பார்ட்னரா போடத்தான் அந்த டாக்குமெண்ட்ஸ்”

“சரத் வேண்டாம்… என்னைப் பார்ட்னரா போடுறது சரிவராது… வேணும்னா உங்க ராஜியைப் போட்டுக்கோங்க”

மறுமுனையிலிருந்த ஹிமா மறுக்க இவன் வற்புறுத்த… நக்ஷத்திராவுக்கு உடலெங்கும் பற்றி எரிந்தது.

‘என்ன என்னைப் பார்ட்னராகப் போட இந்தப் பிச்சைக்காரி சிபாரிசு செய்வதா… ’ அதற்குமேல் பொறுக்கமுடியாமல் அவனது அலைப்பேசியைப் பிடுங்கினாள்.

மறுமுனையில் ஹிமா, வீடியோவில் மனம் விட்டு சிரித்துக் கொண்டிருந்த சரத்தின் முகம் சடுதியில் காட்சி மாறி ரௌத்திரம் பொங்கத் திரையில் தோன்றிய ஒரு பெண் முகத்தைப் பார்த்தாள். பின்னர் அந்தப் பெண் சரத்திடமிருந்து செல்லை வலுக்கட்டாயமாகப் பிடிங்கியிருக்கக் கூடும் என்று உணர்ந்தாள்.

அந்த முகம் நடிகை நக்ஷத்திராவினது என்பதை ஊகிக்க அரை வினாடிக்கு மேல் தேவைப்படவில்லை. ஆனால் வீட்டிலிருந்து இத்தனை வேகமாகக் கிளம்பி சரத் துபாய் சென்றது அவன் காதலியுடன் பொழுதைக் கழிக்கவா… என்னவோ தெரியவில்லை அவ்வளவு நேரம் அவளை சூழ்ந்திருந்த குதுகலம் மறைந்து ஹிமாவினது மனதே வலித்தது.

வீடியோவில் தெரிந்த ஹிமாவைப் பார்த்துக் காட்டுக்கத்தலாகக் கத்தினாள் நக்ஷத்திரா.

“ஏய் டம்மி, நடிக்காதடி… நானே ஒரு நடிகை, என்னையே அசரடிக்கிறமாதிரி வேஷம் கட்டுற…

அஞ்சே மாசத்தில் கம்பனில பார்ட்னர்ஷிப்பையே வாங்குற அளவுக்கு என்னடி சொக்குப்பொடி போட்ட…”

அவளது வார்த்தைகளைக் கேட்டு விக்கித்துப் போனாள் ஹிமா…

“வாங்கின காசுக்கு வேஷம் கட்டிட்டு நாயாட்டம் ஒரு மூலைல உக்காந்துட்டுப் போ… அதை மீறி வேற ரூட்டுல போன…

சரத்தின் செல்லைத் தூக்கி எறிந்த வேகத்தில் அது சுக்கல் சுக்கலானது. சுக்கலானது அவனது அலைப்பேசி மட்டுமல்ல… ஹிமாவின் மனதும் கூடத்தான்.

2 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 24”

  1. பணத்தாசை பிடிச்ச பேயி இந்த நக்ஷத்திரா… பாவம் சரத் இவள்ட்ட ரொம்ப கஷ்ட படுறான்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 10’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 10’

மதுரை, பெரியார் பஸ்டாண்டில் காளவாசல் வழியே செல்லும் பஸ்ஸில் ஏறினாள் வைஷாலி. இளங்கலை முடித்து விட்டாள். கையில் டிகிரி சான்றிதழ் வாங்கியவுடன் சந்தோஷமாய் மீனாக்ஷி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தோழியர்களிடம் பிரியா விடை பெற்றுக் கிளம்பினாள். அப்பா இறந்ததும் அவர்கள் 

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 11’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 11’

திருமணத்துக்குத் திரண்டு வந்த கூட்டத்தைப் விழி விரியப் பார்த்தாள்  வைஷாலி. இரவு முழுவதும் நடந்த விருந்தும் நடனமும் எங்கோ வழி தவறி தன் மந்தையிலிருந்து வேறு மந்தைக்குள் புகுந்துவிட்ட வெள்ளாட்டைப் போல மிரள வைத்தது. எல்லாருக்கும் வணக்கம் சொல்லி கை குவித்தே