உள்ளம் குழையுதடி கிளியே – 22

அத்தியாயம் – 22

பழனியம்மா வேலைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக அழகான சரத்தின் குடும்பத்திற்கு முச்சந்தி மண்ணெடுத்து திருஷ்டி சுத்திப் போட்டாள்.

“அக்கா… என் கண்ணே பட்டுடுச்சு போ…” என்றவாறு தெய்வானையை அணைத்துக் கொண்டார்.

“சொந்தக்காரங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா பழனி… இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு வந்திருக்கலாமே”

“ஏன்… மாமியாரும் மருமகளும் சேர்ந்துட்டு இந்த வீட்டை விட்டு விரட்டலாம்னு பாக்குறிங்களா…”

“அடிப்போடி… நீ இருக்குறதாலத்தான் நான் இவனைப் பத்தின கவலை இல்லாம இருந்தேன். மெட்ராசுக்கு போனா என்ன செய்வானோ. பொண்டாட்டி புள்ளைங்க வேற இங்க இருக்காங்க”

“வாராவாரம் வரச்சொல்லுங்க… கொஞ்ச நாள் கழிச்சு இங்கேயே வந்துட சொல்லுங்க… அம்மா, பொண்டாட்டி, பிள்ளை இங்க இருக்குறப்ப வெளியூருல என்ன வேலை…”

முதல் வேலையாக தெய்வானையை சமையலறையை விட்டு வெளியே அனுப்பினார்

“அக்கா முதல்ல நீங்க சமையல் கட்டை விட்டு வெளிய போங்க… இது என்னோட ரூமு”

“அப்ப நான் என்ன செய்றது”

“பேரனைக் கொஞ்சுறது… அவன் கூட விளையாடுறது… அவனை கவனிச்சுக்குறது”

“நீங்க ரெண்டு பேரும் சமையலையும் வீட்டு வேலையையும் எடுத்துகிட்டா நான் என்ன செய்றது” என்றாள் ஹிமா.

“துருவ்வுக்கு ஒரு தங்கச்சி பாப்பாவை பெத்துத்தா… நானும் அக்காவும் வளக்குறோம்” என்றார் பழனியம்மா ஒரே போடாக.

பதில் சொல்ல முடியாமல் ஹிமா திகைத்து நிற்க, பழனியம்மாவின் பேச்சால் எரிச்சல் அடைந்த சின்னையன் “பள்ளிக்கூடத்துக்கு போகல… லேட்டா போனா டீச்சர் அடிப்பாங்க” என்று நினைவுபடுத்தினார்.

“என்ன மாமா நீங்களா பேசுறது… ஸ்கூலுக்கு லேட்டா போனா டீச்சர் திட்டுவாங்கன்னு தெரிஞ்சேதான் என்னை அடி வாங்க வச்சிங்களா… இந்த புத்தி முன்னாடியே இருந்திருந்தா நான் எங்கம்மா கூட சந்தோஷமா இருந்திருப்பேன். என்ன செய்றது சில பேருக்கு அறுபது வயசுக்கு மேலதான் புத்தி வருது” தன் பங்குக்கு குத்தலாகப் பேசிவிட்டு கிளம்பினான்.

பள்ளிக்கு நேரமாகவும் சரத்தே இருவரையும் பள்ளியில் சென்று விட்டான். அங்கிருந்த சாரதாவிடம் தானே அறிமுகம் செய்து கொண்டான்.

“நான் சரத்… ஹிமாவின் கணவன்”

அவனை ஒரு பார்வை பார்த்த சாரதா எதையோ உணர்ந்ததைப் போலப் புன்னகைத்துக் கொண்டார்.

“ஹிமா உனக்கு கிளாசுக்கு லேட்டாச்சே” என்றார் சாரதா

“சாரி மேம்… கிளம்புறேன்” சரத்திடம் கண்களால் விடைபெற்று சென்றாள். அவனும் பார்வையாலேயே விடை கொடுத்தான்.

“துருவ் அப்பா, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றார் சாரதா சரத்திடம். அதில் எத்தனையோ அர்த்தங்கள்.

“துருவ் எப்படி படிக்கிறான் மேம்… அவனுக்கு ஸ்பெஷல் வகுப்புக்கள் சேர்க்க வேண்டியிருக்கும்னு ஹிமா கவலைப்பட்டா”

“சில வகுப்புக்கள் ஏற்பாடு செய்திருக்கேன். ஆனாலும் அது கவலைப்பட வேண்டிய அளவுக்கு பெரிய விஷயம் இல்லை. ஒரு தந்தையா அவனோட நிறைய நேரம் செலவழிங்க. அதுதான் நீங்க செய்யப்போற பேருதவி “

“நிச்சயம்” என்று சொல்லி சென்றான்.

சரத் இருவரையும் பள்ளியில் விட்டு வருவதும் மாலை அழைத்து வருவதுமாக இருந்தான். இடைப்பட்ட நேரத்தில் கோவையில் தொழில் ஆரம்பிப்பது சம்மந்தமாக ஆட்களை சந்தித்தான். அத்தனை வேலைகளிலும் அரைமணிக்கு ஒரு தரம் நக்ஷத்திராவை அழைப்பதை நிறுத்தவில்லை.

ஒவ்வொரு முறையும் அவள் அலைபேசி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக சொல்லும் குரலைக் கேட்டு முதலில் தாங்க முடியாத சினம் வந்தது. பின்னர் விரக்தியாயிற்று அதன் பின் பழகிவிட்டது. அந்த மன உளைச்சல் இருந்து அவனை மீட்க உதவியது அவன் குடும்பமே என்றால் மிகையாகாது. ஆனால் அவனுக்குத் தெரியாதது ஒன்றுதான் இதைத்தவிர மிகப் பெரிய கண்டம் ஒன்றை அவன் கடக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் அது.

அந்த வாரம் முழுவதும் மாலையானதும் சரத்தும் துருவ்வும் நீச்சல் குளத்துக்கு சென்றுவிடுவார்கள். சிலசமயம் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுப்பான். இரவு அனைவரும் சேர்ந்து உணவருந்துவார்கள்.

குடும்பத்தின் திருஷ்டிப் பொட்டாக விளங்கிய சின்னய்யன் ஏதோ வேலை என்று கிளம்பிச் செல்லவும் கிடைத்த விடுமுறையை ஆசை ஆசையாக அனுபவித்தான்.

ஒரு நல்ல நாள் பார்த்து குலதெய்வம் கோவிலில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார் தெய்வானை.

“அடுத்த தடவை பார்க்கலாமேம்மா…”

“அதெல்லாம் தள்ளிப் போடக் கூடாதுடா… ஏற்கனவே லேட்டு… இவனுக்கு முதல் மொட்டையே குலதெய்வம் கோவிலில் அடிக்க வேண்டியது. நீங்க எங்க அடிச்சிங்க?” என்றார்.

அவருக்கு பதில் சொல்ல முடியாமல் சரத் “தலைலதான்” என்றான்.

“ஜோக்காக்கும்… நீங்க புள்ள பொறந்ததை சொல்லாததுக்கே கோச்சுக்கல இதுக்கா கோச்சுக்க போறாங்க அக்கா” என்று எடுத்துக் கொடுத்தார் பழனியம்மா.

“வடபழனில…” மரத்த குரலில் சொன்னாள் ஹிமா.

“எத்தனை மாசத்துல…”

“மூணாவது வருஷம்…” என்றாள் அதே இறுக்கமான குரலில்.

அவளது குரலில் தெரிந்த மாற்றத்தைக் கவனித்த சரத். “எந்த சாமியா இருந்தா என்னம்மா… எல்லாம் ஒண்ணுதான். நீங்க போயி காப்பி கொண்டுவாங்க” என்று அவரை உள்ளே அனுப்பினான்.

பின்னர் அவரிடம் தனிமையில் “அம்மா… துருவ் பிறந்து சில மாசத்தில் அவ அப்பா இறந்துட்டார். அதனால மொட்டை மூணாவது வருஷம் அடிச்சது. இதைப் பத்தி வேறெதுவும் அவளைக் கேக்காதிங்க”

“இவ்வளவு விஷயம் நடந்திருக்கு. எனக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா… கோபம் இருந்தாலும் அவங்க அம்மாவுக்கு ஒத்தாசையா இருந்திருப்பேன்” என்ற தாயின் கனிவை நினைத்து மனம் சிலிர்த்தாலும். உண்மை தெரியும்போது என்ன சொல்வாரோ என்ற அச்சமும் எழுந்தது அவனுள்.

“கோவிலிலிருந்து வந்ததும் சம்பந்தியை பாக்கணும்… என்னைக் கூட்டிட்டு போ…” என்றார் தெய்வானை மகனிடம்.

“பாக்கலாம் பாக்கலாம்…”

“கோவிலுக்குப் போறதுக்கு உன் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கும் புது ட்ரெஸ் வாங்கிட்டு வா” அடுத்த உத்தரவு பிறந்தது அவரிடமிருந்து.

சரத் ஹிமாவை அழைத்து சென்று புத்தாடைகள் வாங்கி வந்தான்.

கோவிலுக்கு செல்லும் நாளும் வந்தது. அதுவரை சுடிதார் போட்டிருந்த ஹிமா மாம்பழ நிற பட்டு சேலையில் லக்ஷ்மிகரமாக அவர்கள் முன் நின்றாள். அவளுக்கு ஈடாக வேட்டி சட்டையுடன் கம்பீரமாக சரத்.

மகன் மருமகளின் தோற்றப் பொருத்தத்தைக் கண்டு மகிழ்ந்த தெய்வானை முதல் நாள் லாக்கரிலிருந்து எடுத்து வந்த டாலர்செயினைப் ஹிமாவுக்கு அணிவித்து அழகு பார்த்தார்.

“மாம்பழ நிறம் உனக்கு நல்லா பொருந்துது. தாலி செயினில் குங்குமம் வைப்பாங்க அது புடவையில் ஒட்டிறாம பாத்துக்கோ” என்றதும் திக்கென அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள் ஹிமா. அவள் கண்கள் கலக்கத்துடன் சரத்தை நோக்க அதில் தெரிந்த அதிர்ச்சியைத் தாயும் மகனும் சரியாகப் படம்பிடித்தனர்.

“தாலின்னதும் ஏன் அவனைப் பாக்குற… தாலி கட்டித்தானே கல்யாணம் பண்ணிகிட்டிங்க” என்றவாறு வேக வேகமாய் அவள் ஜாக்கெட்டினுள் மறைவாக அணிந்திருந்த சங்கிலியை எடுத்துப் பார்த்தார். அது வெறும் செயினாய் மட்டுமே தோற்றம் தந்தது. அதனை சுற்றி சுற்றி இழுத்துப் பார்த்து எங்கும் தாலியைக் காணாமல் அதிர்ந்தார் தெய்வானை.

கனமான சங்கிலியை இங்கும் அங்கும் பிடித்து இழுத்ததால் கழுத்துல் உராய்ந்து தோல் பிய்ந்து ரத்தம் கொட்டியது ஹிமாவுக்கு.

அவள் கழுத்து சிவந்ததைக் கண்டு

“அம்மா” சரத் கத்த

“தாலி எங்கேடி… கல்யாணம் பண்ணிகிட்டிங்களா இல்லை சேர்ந்து வாழுறிங்களா” என்று ஹிமாவிடம் கோபமாகக் கேட்டார் தெய்வானை.

“ஹிமாவை விடும்மா… நாங்க ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிகிட்டோம்” விலக்கிவிட்டான் சரத்.

“அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்”

“அது அதிகாரிகள் முன்னாடி சட்டப்படி நாங்க கணவன் மனைவின்னு சொல்றது. அதுக்குத் தாலி அவசியமில்ல…”

“அடக் கடவுளே… தாலியே இல்லாம ஒரு புள்ள வேற… ஏண்டி ஆம்பள அவன்தான் சொன்னான்னா உனக்கு அறிவு எங்க போச்சு” ஹிமாவைக் கடித்துக் குதறினார்.

“அம்மா… இப்ப நிறுத்தப் போறியா இல்லையா…” சரத் சொன்னதும் அங்கு அமைதி நிலவியது… தெய்வானையின் விசும்பல் சத்தமும் ஹிமாவின் கலக்கம் நிறைந்த முகமும் சரத்தின் மனதை என்னவோ செய்தன.

“இப்ப ஏன் அழுதுட்டு இருக்கீங்க… கோவிலுக்குக் கிளம்புங்க” என்றான்.

“என்ன தம்பி உங்களுக்குத் தெரியாதா… இன்னைக்கு நம்ம கோவில் பூசாரியும் அவங்க பொண்டாட்டியும் உங்களுக்காக பூசை போட்டுட்டு அப்பறம் தாலில குங்குமம் வைப்பாங்க… பங்காளி வீட்டில் எல்லாரும் வருவாங்க. தாலி இல்லாம நின்னா என்னாகும் நினைச்சுப் பாருங்க”

“எங்க கல்யாணம் தாலி கட்டாமத்தான் நடந்தது. அதுக்கு இப்ப என்ன செய்ய சொல்றிங்க…” என்றான் சரத்.

பதில் பேச முடியாது தெய்வானையை சமாதானம் செய்தார். பழனியம்மா.

உள்ளிருந்து வந்த சத்தத்தால் பயத்துடன் அந்த அறையை எட்டிப் பார்த்தான் துருவ். அவன் பின்னே சாரதா.

“சாரதா டீச்சர் அம்மாவைப் பாக்கணுமாம்” என்றான்.

பெற்றோர் ஆசிரியர் கழக மீட்டிங்கில் அனுமதி பெருவதற்காக ஹிமாவின் செர்டிபிகேட் அவசியமாகத் தேவைப் பட்டது. முதல் நாள் மாலைதான் அந்த விஷயம் உறுதியாகி ஹிமாவிடம் தெரிவித்தார். அவள் கோவிலுக்கு செல்வதை அறிந்து காலையில் தானே வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

சொன்னபடி வாங்குவதற்காக அவளது வீட்டிற்கே வந்த சாரதா நிலமை சரியில்லை என்று உணர்ந்து கொண்டார். ஏனென்றால் அவர்கள் பேசியது வாசலில் நின்ற அவரது காதிலும் விழுந்தது.

சாரதாவைக் கண்டதும் கலங்கிய கண்களுடன் “வாங்க மேடம்… உக்காருங்க… என்னோட சான்றிதழ்களை எடுத்துட்டு வரேன்” என்று அங்கிருந்து அகன்றாள் ஹிமா…

யாரென்று எட்டிப் பார்த்த தெய்வானை

“நீங்கதான் சாரதா டீச்சரா… நீங்களாவது இவளுக்கு புத்தி சொல்லுங்க… தாலி இல்லாம கல்யாணம் செஞ்சு புள்ள வேற பெத்திருக்கா…” என்றார்

இந்தத் தவறில் மகனுக்குப் பங்கே இல்லை என்பது போல ஹிமாவைக் குற்றம் சாட்டியது சாரதாவைக் கோபம் கொள்ள வைத்தது. இருந்தும் காலம் சொல்லித் தந்த பாடம் காரணமாகப் பொறுமையாக…

“உங்க மகன் தாலி கட்டலன்னு தானே உங்க வருத்தம். இப்ப தாலி கட்ட சொல்லுங்க…” என்றார் அதிரடியாக.

“அது நல்ல நேரம் பாக்க வேண்டாமா…” என்று இழுத்தார்.

“கடவுள் படைச்ச எல்லா நேரமும் நல்ல நேரம்தான். ஒரு சின்ன அடையாளம் இல்லைன்னு பேசி உங்க சந்தோஷத்தை நீங்களே கெடுத்துக்காதிங்க”

“இருந்தாலும்… ஒரு பொண்ணு…”

“பொழுதன்னைக்கும் பொண்ணுங்களை குற்றம் சொல்லாதிங்க. உங்க மகன் சந்தோஷம்னா வாழ்றதுதானே உங்களுக்கு முக்கியம். இவ கூடத்தானே அவர் சந்தோஷமா இருக்கார். தாலி மட்டும்தான் மிஸ்ஸிங். அதை இப்ப கட்ட சொல்லிட்டா போச்சு” என்றார் சிம்பிளாக.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு இவ்வளவு சுலபமானதா என்று ஒரு கணம் யோசித்தார் தெய்வானை. ஆமாம் கல்யாணத்துக்கே அம்மாட்ட சொல்லல இவன் தாலி கட்டுறதுக்கா முக்கியத்துவம் தந்திருக்கப் போறான் என்ற கடுப்புடன் மகனை நோக்கினார்.

“எதையாவது எடுக்கு மடக்கா செய்ய வேண்டியது… இதுவே பொழப்பா போச்சு” மகனைத் திட்டினார்.

“ஆமா… இப்ப தாலி வாங்கணுமே…” யோசித்தார்.

“தாலிதானே வேணும்… சாமிக்கு பூஜை சாமான்ல ஏதாவது வச்சிருந்தா எடுத்துட்டு வாங்க ஒரு மஞ்சள் கிழங்கை சுத்தி தாலி ரெடி பண்ணிடலாம்” யோசனை சொன்னார் சாரதா…

“நல்ல ஐடியாக்கா” ஆமோதித்தார் பழனி.

இத்தனை சொத்தையும் சுகத்தையும் கட்டிக் காத்தது எதற்காக. தன் மகனுக்காக அல்லவா… நூறு பவுன் நகை கேட்பாறின்றி லாக்கரில் உறங்குகிறது. இவனோ மஞ்சளை வைத்துத் தாலி கட்டுகிறானாம். வேறு வாங்க வேறு முடியாது. கோவிலுக்குக் கிளம்பும் நேரம் நெருங்கிக் கொண்டு வந்தது. பெரிதாகப் பெருமூச்சு விட்ட தெய்வானை உள்ளே சென்று தனது நகை டப்பாவிலிருந்து ஒரு மாங்கல்யத்தை எடுத்து வந்தார்.

“மஞ்சள் கயிறை இந்தத் தாலில கோத்துத் தாங்க…” என்றார்.

அனைவரும் கேள்வியுடன் நோக்க…

“இது எங்க வீட்டுத் தாலி. என் மாமியார் கட்டியிருந்தது. அடுத்து நான். இதைத் தான் இவளும் கட்டணும்னு விதி போலிருக்கு. இவ கழுத்திலயாவது நூறு வருஷம் நிலைச்சிருக்கனும்னு வேண்டிட்டு தாங்கம்மா. நானும் என் மாமியாரும் பட்ட கஷ்டத்தைக் கனவில் கூட இவ படக் கூடாது” கண்ணீருடன் சொன்னார்.

அவரது பாசமான மனம் கண்டு நெகிழ்ந்தனர் அனைவரும்.

“பரம்பரையா உங்க வீட்டுப் பெரியவங்க கழுத்தில் இருந்தது… முன்னோர்கள் ஆசீர்வாதத்தோட இவ கழுத்தில் நிலைச்சிருக்கும்மா கவலைப்படாதிங்க” என்றவாறு அதனை ஸ்வாமி பாதத்தில் வைத்தார் சாரதா.

அவரை நீண்ட நேரம் காணாத அவரது கணவரும் அங்கு வந்து சேர,

“வாங்க… நம்ம ரெண்டு பேரும்தான் அம்மா அப்பாவா ஹிமாவுக்கு நிக்கப் போறோம்” என்று மனமுவந்து தானே பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அந்தத் தம்பதியினர், தாய், பழனியம்மா மற்றும் துருவ் முன்பு வாய் பேச முடியாது மறுக்க வழியில்லாது ஊமையாய் போன ஹிமாவுக்குத் தாலி கட்டினான் சரத்.

ஹிமாவதியின் நெற்றியில் கை நிறைய குங்குமத்தை அள்ளித் திலகமிட்ட சாரதா மனதார வாழ்த்தினார்.

“தீர்க்க சுமங்கலி பவ…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’

அத்தியாயம் – 10 “அம்மா நீங்க செஞ்சது நல்லாயிருக்கா? நந்தனாவைக் கல்யாணத்துக்குப் பேசிட்டு வாங்கன்னு சொன்னா அவ அக்காவைப் பேசிட்டு வந்து நிக்கிறிங்க” “நான் சொலுறதைக் கேளு. அந்த நந்தனா நமக்கு சரிவரமாட்டா. அவ அழகுதான் ஒத்துக்கிறேன். ஆனா அழகு, மனைவிக்கு

உள்ளம் குழையுதடி கிளியே – 24உள்ளம் குழையுதடி கிளியே – 24

அத்தியாயம் – 24 சென்னைக்கு வந்தவன் முன்னரே எதிர்பார்த்தபடி உடனடியாக துபாய் செல்ல வேண்டியிருந்தது. அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தின் காண்ட்ராக்ட்டை கவனிக்க வேண்டியிருந்ததால் அவனது அலுவலக வேலைகள் அதிகமானது. அவனது நிறுவனம் துபாயின் மருத்துவ சேவை நிறுவனத்தின் இன்ப்ரா ஸ்டரக்சர் பொறுப்பை

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 13’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 13’

ஒரு சுகமானதொரு கனவு. அதைக் கனவு என்பதை விட, கனவாய் உறைந்துவிட்ட நினைவுகளின் பிம்பம் என்று சொல்லலாம். அந்த நினைவுகளுக்குள் மூழ்கியிருக்கும் காதம்பரியுடன் நாமும் இணைந்து கொள்வோம்.   சற்று பூசினாற்போல் தேகம், பாலில் குங்குமப்பூவை லேசாகக் கலந்தால் இருக்குமே அதைப்