உள்ளம் குழையுதடி கிளியே – 21

அத்தியாயம் – 21

நீங்க என்னை அடிச்சுட்டிங்க. உங்க மேல நான் கோபமா இருக்கேன். இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு வரல” என்று தெய்வானையின் இடுப்பில் அமர்ந்து கொண்டு அவரது தோளில் தலைசாய்த்தபடி தன் தாய் ஹிமாவிடம் சொன்னான் துருவ்.

“ஸாரி குட்டி… அம்மாவை பதிலுக்கு அடிச்சுடு ஆனால் இப்படி எல்லாம் பேசக் கூடாது” என்று அவனைத் தாஜா செய்தாள் ஹிமா.

“அம்மா மேலக் கோபக் படக் கூடாது கண்ணு. உன்னை ஆசைப்பட்டா அடிக்கிறாங்க. அடிச்சது அவங்களுக்குத்தான் வலிக்கும்”

“ஆமாவாம்மா”

“ம்…” வேகமாகத் தலையாட்டினாள் ஹிமா.

“பாட்டி நான் பேட் டான்ஸ் ஆடினதாலதான் அடிச்சிங்கன்னு சொன்னாங்க. அந்த ஆன்ட்டி ஆடினதுதானே ஆடினேன். அந்த ஆண்ட்டி பேடா…” மகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் திணறினாள்.

அவளுக்கு உதவிக்கு வந்தார் தெய்வானை “பின்னே… அந்த ஆண்ட்டியும் பேட், அவங்க டான்சும் பேட்… இனிமே அவங்களைப் பார்க்க வேண்டாம்” என்றார் முடிவாக.

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகி விட்டதைக் கண்டு தனது விழிகளாலேயே மன்னிப்பை வேண்டினாள் சரத்திடம்.

கண்களை மூடி அவளை அமைதிப் படுத்தியவன் “மாமியாரும் மருமகளும் ஒரு காப்பியோடையே காலை சாப்பாட்டை முடிச்சுடலாம்னு ப்ளான் பண்ணிட்டிங்களா” என்று அவர்கள் கவனத்தை திசை திருப்பினான்.

மணியைப் பார்த்த ஹிமா பதறி “ஐயோ ஸ்கூலுக்கு லேட்டாச்சு. துருவ் வா… வா… குளிச்சுட்டு வரலாம்” என்றாள்.

“நீ கிளம்பு நான் அவனுக்கு உடம்புக்கு ஊத்தி விடுறேன்” என்றான் சரத்.

“நீங்களா…” அனைவரும் ஒரு சேரத் திகைத்தனர்.

“ம்ஹும்… கண்ணு எரியும்” என்றான் துருவ்.

“ஹிமா, நீ கிளம்பு நான் துருவுக்கு குளிப்பாட்டுறேன். பாட்டி கண்ணு எரியாம ஊத்தி விடுறேன்” என்றார் தெய்வானை.

“ஐயோ ஒரு பாய்க்கு கேர்ள்ஸ் உடம்புக்கு ஊத்தி விடுறாங்களா அதுதான் கண்ணு எரியுது. நான் ஊத்தி விட்டா கண்ணு எரியாதுப்பா…” என்றான் சரத் இடையில் புகுந்து.
ஹிமாவின் முகத்தைப் பார்த்த துருவ் தெய்வானையின் முகத்தைத் திருப்பிப் பார்த்தான் “கேர்ள்ஸ் ஊத்தி விட்டா கண்ணு எரியும் இனிமே அப்பா கூட குளிக்கிறேன்” என்றான்.

“வெல்டன் பாய்… நம்ம ரெண்டு பெரும் சாயந்தரம் ஸ்விம்மிங் போகலாம். இன்னைக்கு ஷவர் பண்ணலாம் வா…” என்று அவனை அப்படியே அணைத்து ஒரு ஆட்டுக்குட்டியைத் தூக்கி செல்வது போல ஹிமாவின் அறையிலிருந்த குளியலறைக்குத் தூக்கிச் சென்றான்.

துருவ் குளித்து முடித்தபோது தொப்பலாக நனைந்திருந்தான் சரத். அவனைப் பார்த்து தெய்வானையும் ஹிமாவும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

“பேசாம நீயும் ஒரு சொம்பு தண்ணி ஊத்திட்டு வந்துடு” என்றார் தெய்வானை.

“அதைத்தான் செய்யப் போறேன்” என்றபடி அவனது அறைக்கு செல்ல வெளியே வந்தவனிடம்.
“ஏண்டா மாடில போய்தான் குளிப்பியாக்கும். பேசாம இங்கேயே குளிச்சுட்டு வா… ஈரத் துணில நிக்காம சட்டையை கழத்தித்தா” என்றபடி நின்று அவனது ஈர சட்டையை வாங்கிக் கொண்டார்.

“பாட்டி நான் டிரஸ்சே போடல” குளித்துவிட்டு துண்டு கூடக் கட்டிக் கொள்ளாமல் பிறந்த மேனியாக நின்ற துருவ் சொன்னான்.

“இந்தா சட்டை டவுசர் போட்டுக்கோ” எடுத்துத் தந்தார் தெய்வானை. உடைகளைக் கையில் எடுத்துக் கொண்டு

“நீங்க கேர்ள், உங்க முன்னாடி ட்ரெஸ் போடமாட்டேன். கண்ணை மூடிக்கோங்க” என்று சொன்னதும் கொல்லென சிரிப்பு பிறந்தது அவ்விடத்தில்.

அவன் உடை மாற்றும் வரை கண்களை இரு கைகளாலும் மூடிக் கொண்டு “ஆச்சா, ஆச்சா” என்று உறுதி படுத்திகொண்டு கண்ணைத் திறந்தார் தெய்வானை.

“நீ உன் புருஷனுக்கு வேண்டியதை எடுத்து வச்சுட்டு வா… நான் துருவ்வுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுடுறேன்” துருவ்வுக்கு சாப்பாடு ஊட்டிவிட இழுத்து சென்றார்.

அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் “தாங்க்ஸ் ஹிமா… இந்த மாதிரி குடும்பத்தோட வாழ எங்கம்மா முகத்தில் மறுபடி சிரிப்பைப் பார்க்க எவ்வளவு ஏங்கிருக்கேன் தெரியுமா? உன்னோட அசௌகரியங்களைப் பொறுத்துட்டு என் அம்மாவை ஒரு மகள் மாதிரி பாத்துக்குற. ஆனால் இது தற்காலிகம்தான்னு நினைச்சா எனக்கு வருத்தமா இருக்கு”

“எதையும் போட்டு மனசை குழப்பிக்காதிங்க சரத். நக்ஷத்திராவைக் கல்யாணம் பண்ணிட்ட கையோட ஒரு பிள்ளையைப் பெத்துத் தாங்க. அத்தை ஹேப்பியாயிடுவாங்க. நீங்க நினைச்ச சந்தோஷம் திரும்ப கிடைச்சுடும்”

விரக்தியாய் சிரித்தவன் “ராஜிக்கு உன்னளவுக்கு இருப்பது சந்தேகம்தான். அவளோட போக்கு இப்படியே தொடர்ந்தா எங்க கல்யாண வாழ்வு நிலைகிறதே பெரிய விஷயமா இருக்கும். இதில் இந்த மாதிரி இனிக்கிறது சந்தேகம்தான்” என்றான்.
அறைக்கு ஓடி வந்தான் துருவ் “அப்பா நீங்க ஈர ட்ரஸில் இல்லாம சீக்கிரம் குளிச்சுட்டு சாப்பிட வருவிங்களாம். இல்ல உங்களுக்கும் அந்த கேர்ளே உடம்புக்கு ஊத்தி விடுவாங்களாம்” என்றான்.

“நீ போடா நான் குளிச்சுட்டு வரேன்”

சிரித்தபடியே கதவை சாத்திக் குளித்துவிட்டு வந்த சரத்துக்கு மாற்றுத் துணி இல்லாதது அப்போதுதான் உரைத்தது. கதவை மெதுவாகத் திறந்து “ஹிமா…” என்றான் சிறிய குரலில்.

“என்ன சரத்”.

“துருவ் மாதிரிதான் நிக்கிறேன். டிரஸ் இல்ல… பெரிய துண்டு இருந்தா தாயேன்”

களுக் என்று சிரித்தபடி இரண்டு துண்டினை எடுத்து நீட்டினாள். ஒன்றினை இடுப்பில் கட்டிக் கொண்டு மற்றொன்றை மேலே போர்த்திக் கொண்டு வெளியே வந்தான்.

“அம்மா கவனிக்காதப்ப நைசா குரல் கொடு மாடிக்கு ஓடிப் போயிடுறேன்”

வெளியே சென்றுவிட்டு வந்தவள். “உங்கம்மா இல்லை”

அப்பாடா என்று கதவருகே சென்றவனின் கையைப் பிடித்து நிறுத்தியவள்

“அவசரக் குடுக்கை… உங்க மாமா ஹால்ல உக்காந்திருக்கார்”

“அந்தாளு ஊருக்கு போகல”

“ம்ஹூம்…” உதட்டைப் பிதுக்கினாள்.

“இப்ப என்ன செய்றது ஹிமா?”

“நான் வேணும்னா மாடில போயி உங்க ட்ரெஸ்ச எடுத்துட்டு வரட்டுமா”

“வெரி குட் ஹிமா… முடிஞ்சா என் சூட்கேஸை எடுத்துட்டு வந்துடு”

சின்னசாமி ஹாலில் வெறிக்க வெறிக்க சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இன்றைக்கு மருத்துவமனையில் அவருக்கு தோல்விதான்.

“ஜான்னா முழு பேரு சொல்லுங்க”

“வந்து முழு பேரும் ஜான்தான்”

“அப்படி யாரும் அட்மிட் ஆகல ஸார்”

“கண்டிப்பா இங்கதான் அட்மிட் பண்ணிருக்காங்க… வேணும்னா இங்கிருக்குற எல்லா ஜானையும் சொல்லுங்க நான் ஒவ்வொருத்தரா போயி பார்த்துக்குறேன்”

எரிச்சலாக முறைத்த வரவேற்பாளன் “பேஷண்ட் விவரம் எல்லாம் தர முடியாது. நீங்க முழு பேரையும் தெரிஞ்சுட்டு வாங்க… தள்ளி நில்லுங்க சார்… அடுத்த ஆள் வாங்க…” என்று தொடர்ந்தான்.

யோசித்துக் கொண்டே மருத்துவமனையின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார்.

“அவங்க கிட்டா கேட்டா எப்படி ஸார். கேட்க வேண்டியவங்க கிட்ட கேக்குற முறையில் கேட்டா தெரிஞ்சுட்டு போகுது” ஆபத்பாந்தவனாக ஒரு குரல் ஒலித்தது. அந்த மருத்துவமனையின் சீருடையுடன் தலையை சொறிந்தபடி ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

“உனக்குத் தெரியுமா”

“தெரியும்…”

“அப்ப என்னை ரூமுக்கு அழைச்சுட்டுப் போறியா”

“முக்கியமான பேப்பர் வரலையே… வந்தாத்தானே கூட்டிட்டு போக முடியும்”

மனதினுள் திட்டிக் கொண்டே பேரம் பேசி ஒரு ஆயிரம் ரூபாயை தண்டம் அழுதார்.

நைசாக ஒரு அறைக்கு அழைத்து சென்றான் அந்த சிங்காரம். அங்கு பிறந்து ஒரு நாளே ஆனா பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது.

“ஜானிம்மா உங்க வீட்டுக்காரரோட சொந்தக்காரவுங்க வந்திருக்காங்க” என்றபடி குழந்தையைத் திணித்து

“உன்னைப் பார்க்க தாத்தா வந்திருக்காரு பாருடா சிரி… அய்யா முதன் முதல்ல பேரனைப் பாக்க வந்திருக்கிங்க கைல காசு கொடுங்க” என்றான்.

“நீங்க இவன் அப்பாவோட சொந்தக்காரங்களா… காதல் கல்யானம்னால போக்கு வரத்து இல்லையா… அதுதான் தெரியல” என்றாள் அந்த ஜானி.

தப்பித்து வெளியே வந்து சிங்காரத்தின் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினார்.

“ஏண்டா ஜானைக் கண்டுபிடிக்க வந்தா ஜானிகிட்ட கொண்டு போயி விட்டுட்ட”

“ஜான்னு மொட்டையா சொன்னா எப்படி ஜான்சனா, ஜான் ஆப்ரஹாமா, ஜானர்த்தனா…” அடுக்கினான்.

“இந்த விளகெண்ணையெல்லாம் தெரிஞ்சா ஏன் உன்னை மாதிரி திருட்டுப் பயலுக்கு தண்டம் அழுகுறேன். ஒழுங்கு மரியாதையா ஜானைக் கண்டுபிடிச்சுத் தரல உன்னை பெரிய டாக்டர்கிட்ட மாட்டி விட்டுருவேன்”

சற்று தயங்கிய சிங்காரம் “சரி மேற்கொண்டு ஏதாவது விவரம் சொல்லுங்க”

“மெட்ராஸ்காரன்…”

“இதெல்லாம் அடையாளமா ஸார். இங்கிருக்குற பாதி பேரு மெட்ராஸ்தான். வெளி ஸ்டேட் போனா நான் கூட அப்படித்தான் சொல்றது”

“உன் விவரம் எனக்கு ரொம்ப முக்கியம் பாரு. ஜான் பொண்டாட்டி பேரு கிறிஸ்டி”

“அப்ப ஜானோட முழு பேரு ஜான் கிறிஸ்டியா”

“தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ”

“ஏன் ஸார் தூக்கி அடிக்கணும். பொண்டாட்டி பேரை சேர்த்து வச்சுக்குறதுதான இப்ப பேஷன். டிவில பார்க்கல “

“நீ பேசுறது அரசியல். அதுக்கு இந்த நாவலில் ஸ்கோப் இல்லை. இது குடும்பக் கதை அதனால கிறிஸ்டியோட வீட்டுக்காரனை மட்டும் கண்டுபிடி. ஒவ்வொரு ஜானோட ரூமுக்கும் போயி அவன் பொண்டாட்டியப் பத்தி விசாரி”

“யோவ்… ஆயிரம் ரூபா கொடுத்துட்டு என்னை இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆக வழி சொல்ற… வேற ஏதாவது விஷயம் இருந்தா சொல்லு. அவனோட அப்பா பேரு அம்மா பேரு இப்படி…”

மண்டையில் பளீரென பல்ப் எரிந்தது சின்னசாமிக்கு.

“சிங்காரம் நல்ல ஐடியா கொடுத்த… என் சொந்தக்கார பொண்ணு ஹிமாவோட அம்மாவும் இங்கதான் அட்மிட் ஆயிருக்காங்க. அவங்களுக்கு ஜானைப் பத்தித் தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கு. அவங்களைக் கண்டுபிடிச்சாக் கூடப் போதும்”

“நல்லதாப் போச்சு. அவங்க பேரை சொல்லுங்க…”

“பேரு… பேரு தெரியாதே… ஆனா அவங்களை இங்க கொண்டுவந்து சேர்த்தது சரத்சந்தர், என் மாப்பிள்ளை”

“உங்களோட பெரிய ரோதனை ஸார். பேஷண்ட்டோட பேரு தெரியாமலேயே பாக்க வந்துடுவிங்களா… போயி யாராவது ஒருத்தர் பேரையாவது தெரிஞ்சுட்டு வாங்க”

கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே அனுப்பினான். அவனது போன் நம்பரை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

ஹிமாவின் அம்மா பேரை எப்படிக் கண்டுபிடிப்பது யோசனையுடன் அமர்ந்திருந்தவரைத் தாண்டி சரத்தின் துணிகள் அடங்கிய சூட்கேஸை அவர் கண்ணுக்கு உறுத்தாதபடி நைசாக எடுத்து சென்றாள் ஹிமா.

தன் கையில் இருந்ததைக் கூட கவனிக்காமல் யோசனையில் இருந்த சின்னையனைப் பார்த்து அவளுக்கு ஒரே ஆச்சிரியம்.

“ஏம்மா… காலைல ஒரு போன் வந்தது. யாரோ சிவகாமியம்மாவைக் கேட்டாங்க… எனக்கு யாருன்னே தெரியல. உனக்குத் தெரியுமா”

“சிவகாமியா தெரியலையே…”

“உங்கம்மாவோன்னு நினைச்சேன். ஆமா அவங்க பேரென்ன”

“சௌந்திரவல்லி”

“அது போதும்… நீ போயி ஸ்கூலுக்குக் கிளம்பும்மா” அவளை அன்போடு அனுப்பிவைத்துவிட்டு, தகவலைத் தாமதிக்காமல் சிங்காரத்திடம் தெரிவித்தார்.

2 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 21”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 1’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 1’

‘தடக் தடக்’ என்று தாளலயத்தோடு அந்த ரயில் நிலையத்தில் நுழைந்த மும்பை புறநகர் ரயில்களை சற்று திகிலோடு பார்த்தபடி டிக்கெட் வாங்கும்  வரிசையில் நின்றிருந்தான் சிவபாலன். திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு நிற்பதைப் போன்ற நீண்ட வரிசை. இதில் எப்படி டிக்கெட் வாங்கி