உள்ளம் குழையுதடி கிளியே – 19

அத்தியாயம் – 19

காலையில் எழுந்தவுடன் சரத் முதலில் கண்டது குளிப்பதற்கு அடம் பிடிக்கும் துருவையும் அவனைத் துரத்திக் கொண்டு ஓடிய ஹிமாவையும்தான். அவர்களது குதூகலமும் சுறுசுறுப்பும் அவனிடமும் தொற்றிக் கொண்டது.

“துருவ் இங்க ஓடி வா…” என்று கை நீட்டினான். அவனது நீட்டிய கரங்களுக்குள் புகுந்து கொண்டான் துருவ்.

“சரத் விடுங்க அவனை…”

“எதுக்கு விடணும்… ஒரு வேலிட் ரீசன் சொல்லு விட்டுருறேன்”

“அவன் குளிச்சுட்டு ஸ்கூல் கிளம்பணும் சரத்…”

“ஸ்கூலா… இன்னைக்கு என்ன கிழமை?”

“திங்கள் கிழமை”

“ஓ மை காட்… வீக் எண்ட் அதுக்குள்ளே முடிஞ்சுடுச்சா”

“காலம் நிக்காம ஓடிட்டு இருக்கு சரத். நீங்க முழிச்சுக்கோங்க”

யோசனையாக “ஆமாம் ஹிமா காலம் நிக்காமதான் ஓடிட்டு இருக்கு… நியர்லி பத்து வருடங்கள்…”

“அதென்ன பத்து வருடங்கள் கணக்கு சரத்”

“எங்கம்மாவுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட பேச்சே நின்னு போயிட்ட நாட்கள்”

ஏதோ நினைத்துக் கொண்டவனாகப் பெருமூச்சு விட்டான் “தாங்க்ஸ் ஹிமா… அந்தப் பழைய உறவை நீயும் துருவும் மீட்டுக் கொடுத்துட்டிங்க”

‘அதை உங்க நக்ஷத்திரா பாழாக்காம இருக்கணும்… ’ என்று மனதினுள் சொல்லிக் கொண்டாள்.

காலையிலிருந்து நக்ஷத்திராவின் புது திரைப்படத்தைப் பற்றிய விளம்பரம்தான் ஒவ்வொரு சேனலிலும். பத்திரிகையில் வந்த அதே உடையில் நடன அசைவுகள் வேறு கண்களைக் கூசும் விதத்தில். பத்திரிக்கையின் அட்டைப் படத்தைக் கண்டே கண் கலங்கியவன் அந்த ட்ரைலரைப் பார்த்தால் என்னாவானோ…

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அந்தப் பத்திரிக்கை செய்தியை ஒரே மூச்சாகப் படித்தாள். அதன்பின் இந்த ட்ரைலரையும் பார்த்தவுடன் அவள் புரிந்து கொண்டது ஒன்றுதான், மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்து பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது நக்ஷத்திராவேதான்.

பெயரிடப்படாத ஒரு படம் என்று இத்தனை நாள் இந்தப் படத்தைப் பற்றிய செய்திகள் வந்தது என்றாலும் அதன் கதையோ அவள் கதாபாத்திரமோ வெளியில் தெரியாத ரகசியமாய் இருந்தது. ரகசியம் என்பது வெளி உலகிற்கு மட்டுமில்லை அவளையே நினைத்து இத்தனை வருடமும் காத்திருக்கும் காதலன் சரத்திற்கும் கூட. படம் ரிலீஸ் ஆகும் தேதியை முடிவு செய்துவிட்டு, ட்ரைலர் வெளியிடுவதற்கு சில தினங்கள் முன்பு சரத்திடம் ஒரு தகவலாக அறிவித்திருக்கிறாள்.

இந்தப் படத்தின் வெற்றியை உத்தேசித்தே திருமணத்தைக் கூட மறுத்திருக்கிறாள். இந்தப் படம் வெற்றி பெற்றால் அதனாலேயே இன்னும் ஐந்து வருடங்களுக்கு சினிமா கேரியர் ஓடிவிடும். தோல்வி அடைந்தாலோ அவள் வாழ்நாள் முழுவதும் நடித்தாலும் கடனைக் கட்ட முடியாது.

கிட்டத்தட்ட கயிற்றின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடியின் நிலை அவளுக்கு. இதில் வெற்றி பெற்றால் அனுபவிக்கப் போவது அவள்தான். திருமணத்தை கண்டிப்பாகத் தள்ளிப் போடுவாள். தோல்வி அடைந்தாலோ சரத் என்னாவான் என்றே ஊகிக்க முடியவில்லை.

இவளைக் காதலித்து வாழ்க்கையைப் பாழடித்துக் கொண்டிருக்கும் சரத் முட்டாளாகவே தோன்றினான் ஒரு கோணத்தில். மற்றொரு கோணத்திலோ அன்புக்காக அனுசரித்துப் போகும் சவலைப் பிள்ளையாகத் தெரிந்தான்.

சத்யாவின் அம்மா கொடுத்த டார்ச்சரை நீ பொறுத்துக் கொண்டது எதற்காக? உனக்கு எதிர்த்துப் பேச முடியாதா… இல்லை தெரியாதா… சத்யா தாயின் குணம் தெரிந்தும் ஒரு முறை கூட அவரை எதிர்த்துக் கேட்டதில்லை. அதனை சுட்டிக் காட்டி அவனிடம் சண்டை போட்டிருக்க முடியாதா… தனிக்குடுத்தனத்துக்கு வற்புறுத்தி இருக்கலாம்… இது எதையும் செய்யாமல் பொறுத்துப் போனது எதற்காக? திருமண உறவில் கசப்பு எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என்று தானே.

அன்பு எத்தகைய தவறையும் பொறுத்துக் கொள்ள செய்யும். சத்யாவின் மேல் இருந்த அன்பு அவனது குறைகளையும் மறைத்துக் கொள்ள வைத்தது போல, சரத்திற்கு நக்ஷத்திராவின் மேலிருந்த அன்பு அவளது குறைகளையும் மறக்க செய்கிறது போலும்.

“என்ன ஹிமா, நின்னுகிட்டே தூங்குற?” என்ற சரத்தின் குரல் கேட்டு நினைவுலகதுக்குத் திரும்பினாள்.

அவன் காபியை அருந்தியபடி எழுந்தான். “இன்னைக்கு ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கேன் ஹிமா”

“அதுக்குள்ளயா…”

“வீக் எண்டு ஓடிப் போச்சே”

“இந்த வாரம் இருக்கலாமே சரத்… லீவ் இல்லையா…”

“லீவ் இருக்கு… அடுத்த மாசம் ப்ராஜெக்ட் விஷயமா வெளிநாடு போக வேண்டியிருக்கு. சில வாரங்கள் அங்க போகும்”

“அப்ப இன்னும் சில நாட்கள் அத்தையோட இருக்கலாம்ல… பத்து வருடங்களுக்குப் பிறகு உறவு சரியாயிருக்குன்னு சொன்னிங்களே…”

“எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு. ஆனால் நான் இருந்தால் உனக்குத்தான் கஷ்டம்”

“எனக்கென்ன கஷ்டம்”

“அம்மா ராத்திரி உன்னை துருவ்கிட்ட நிம்மதியா தூங்க விடமாட்டாங்க”

“உங்களை மாதிரி ஒரு ஜென்டில்மேன் இருக்கும் போது, அது ஒரு பிரச்சனையே இல்லை”

“உனக்குப் பிரச்சனை இல்லைன்னா இன்னும் சில நாள் அம்மாவோட இருந்துட்டுப் போவேன். அவங்க கைல சாப்பிட்டு, சகஜமா பேசி எத்தனை நாளாச்சுத் தெரியுமா”

“அத்தை கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்தான். ஆனால் பலாப்பழம் மாதிரி வெளிய கடுமை காட்டினாலும் அன்பான மனசு”

“கடுமைன்னா கடுமை மகாக் கடுமை. நான் கத்தக் கத்த என்னை அடிச்சு ஹாஸ்ட்டல்ல விட்டாங்க தெரியுமா… அதுக்கப்பறம் ஒரு தடவை கூட என்னைப் பார்க்க வந்ததில்லை”

“உங்க நன்மைக்காகத் தானே செஞ்சாங்க சரத். அவங்க அப்படி அனுப்பலைன்னா எப்படி அவ்வளவு பெரிய யுனிவர்சிட்டில படிச்சிருப்பிங்க. உங்களோட இந்த நிலை சாத்தியமாயிருக்குமா”

“நான் கூட என்னை அப்படித்தான் சமாதானப் படுத்திகிட்டேன் ஹிமா. இருந்தாலும் கோபம் தீர்ந்து அம்மா வருவாங்க… என்னைப் பார்ப்பாங்கன்னு எத்தனை நாள் விசிட்டர் டைம்ல காத்திருந்தேன் தெரியுமா… கூடப் படிக்கிற பிரெண்ட்ஸ் எல்லாரும் ‘என்னடா இன்னைக்கும் யாரும் வரலையான்னு’ கேட்கும்போது எவ்வளவு அழுகை வரும் தெரியுமா”.

“அவங்க எப்படித் தனியா வருவாங்க சரத்… உங்க மாமா துணையோடதானே வர முடியும்”

சிறிது நேரம் யோசித்தான்.

“உண்மை ஹிமா… நான் ஊரில் இருக்கும் ஸ்கூலில்தான் முதலில் படிச்சேன். அப்பா இறந்ததுக்கு பிறகு தினமும் மாமாதான் ஸ்கூல் கொண்டு போய் விடுவார். அதுவும் தினமும் ஒன்பது மணி ஸ்கூலுக்கு லேட்டா பத்து மணிக்குத்தான் விடுவார். பரிட்சைக்குக் கூட”

“அதனாலதான் அத்தை யோசிச்சு உங்க படிப்புக் கெட்டுடக் கூடாதுன்னு ஹாஸ்டலில் விட்டிருப்பாங்க”

“ஆமாம். எங்க ஹெட் மாஸ்டருக்கு ஊட்டி ஸ்கூலுக்கு மாற்றல் வந்திருந்தது. அப்ப ஆனுவல் எக்ஸாம் சமயம். மாமா ஸ்கூல் கூட்டிட்டுப் போவாருன்னு காலைல இருந்து காத்திருக்கேன். அவர் வந்தபாடில்லை. வெறுத்து போயி எங்கம்மாவும் நம்ம பழநியம்மாவும் பஸ்ஸில் கூட்டிட்டு வந்து பத்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஸ்கூலில் விட்டாங்க”

“ஐயோ பரீட்சை என்னாச்சு”

“பரீட்சை ஆரம்பிச்சு ஒன்றை மணி நேரம் கழிச்சுத்தான் நாங்க போனோம். அதனால டீச்சர் எக்ஸாம் ஹாலுக்குள்ள விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க”

“அடுத்த வருஷம் அதே கிளாஸ் ரிபீட்டா”

“எங்கம்மா சாமானியத்தில் விட்டுடுவாங்களா ஹெட் மாஸ்டரைப் பார்க்கப் போயிட்டாங்க”

அவன் கண்ணில் அப்போது நடந்த நிகழ்ச்சி படம் போல ஓடியது

“இது என் ஒரே புள்ளைங்க… என் உசுரே இவன்கிட்டதான் இருக்கு… இவனை எப்படியாவது படிக்க வைக்கணும். பரீட்சை எழுத விடுங்கய்யா”

“பரிட்சைக்கு லேட்டா வந்தா எப்படிம்மா…”

“படிக்கலைன்னாதான் அவன் தப்பு… ஆனா லேட்டா கூட்டிட்டு வந்தது என் தப்பு. என் தப்புக்காக என் மகனை தண்டிச்சுடாதிங்க”

“நல்லா பேசுறிங்கம்மா… என்னைக்காவது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா லேட்டானா பரவால்ல. உங்க மகன் தினமும் லேட்டாதான் வர்றான். லேட்டா வந்தா ஒரு மணி நேரம் முட்டி போடணும். முட்டி போட்டுட்டு பதினோரு மணிக்குத்தான் கிளாசுக்கே போறான்.

பாதிப் பாடம் அட்டென்ட் பண்றதில்லை. தினமும் உங்ககிட்ட சொல்லிவிடுறோம். ஒரு முறை கூட சரி செய்ய முயற்சி பண்ணலையே… இப்ப கூட மத்த எல்லா பரிட்சைக்கும் லேட்டாத்தான் வந்தான். இவன் படிப்புப் பாழாகிடக் கூடாதுன்னு டீச்சர்ஸ் எல்லாரும் பொறுத்துட்டுப் போறோம். ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கில்லையா…”

“இவங்கப்பா இருந்தவரை இந்த மாதிரி ஒரு பிரச்சனையும் வந்ததில்லை. எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டாரு. அண்ணனையும் தம்பியையும் நம்பி இவனை வளர்த்துட்டு இருக்கேன். மத்தவங்ககிட்ட உதவின்னு கை தாழ்ந்து கேட்கும்போது சரியான நேரத்துக்கு விடுன்னு உத்தரவு போட முடியாதுங்களே…

தினமும் ஏதோ கொஞ்சம் லேட்டாகும்னு நினைச்சேன். இது இத்தனை பெரிய பிரச்சனைல கொண்டு வந்து விடும்னு நினைச்சே பார்க்கலைங்கய்யா…” அவர் கண்கள் கலங்கிவிட்டன.

“மாமா… கடைல கணக்கு பார்த்துட்டு, அப்பறம் சாப்பிட்டுட்டுத்தான்மா என்னை ஸ்கூலுக்குக் கொண்டு வந்து விடுவார். நான் அதுவரைக்கும் சும்மாதானே இருக்கேன்னு அத்தை தோட்டத்து செடிக்கெல்லாம் வாளில தண்ணி பிடிச்சு ஊத்த சொல்லுவாங்க” என்று கபடின்றி சொன்ன மகனை அணைத்துக் கண்ணீர் உகுத்தார்.

வேலை செய்து களைப்புடன் வரும் சிறுவனை ஒரு மணி நேரம் முட்டி போட வைத்து கிளாசுக்கு அனுப்பியிருக்கும் தனது செயலை நினைத்து வெட்கினார் தலைமை ஆசிரியர்.

“உங்க நெலமை எனக்குப் புரியுதும்மா… ஆனால் இந்த நிலை தொடர்ந்தா இவன் படிப்பு பாழாயிடும். நான் இந்த வருஷத்தோட ஊட்டில இருக்கும் போர்டிங் ஸ்கூலுக்கு மாற்றலாகிப் போறேன். அடுத்து வரும் ஹெட் மாஸ்டர் எப்படி இருப்பாருன்னு சொல்ல முடியாது. தினமும் லேட்டா வர்றவனை தண்டிக்காம அனுமதிச்சா இதே மாதிரி மற்ற மாணவர்களும் சலுகை எதிர்பார்ப்பாங்க. ஒழுங்கீனத்தை எங்களால் அனுமதிக்க முடியாது”

“எனக்கு என்ன செய்றதுன்னே புரியலைங்கய்யா. வீட்டைத் தாண்டி இன்னைக்கு வந்ததே பெரிய காரியம். தினமும் கிராமத்திலிருந்து ஸ்கூலுக்கு விட்டுட்டுக் கூட்டிட்டுப் போறது நான் வாழும் இடத்தில் சரிவராதுங்கய்யா… இவங்க அப்பா அந்த காலத்திலேயே எம். ஏ படிச்சவங்க. அவரு மகன் ஸ்கூலுக்கு வரக் கூடக் கஷ்டப்படுறதை நினைச்சா…”

வருத்தத்தில் கண்கள் கலங்க அமர்ந்திருந்த அந்தத் தாய்க்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதே அனைவரின் யோசனையாக இருந்தது.

“உங்க ஊரிலிருந்து மகனைத் தனியா வந்துட்டு போக சொல்ல முடியாதும்மா. ஆனால் ஒரு யோசனை மட்டும் சொல்ல முடியும்.

அடுத்தவங்களை நம்புறது உங்களோட விதியா இருக்கலாம். ஆனால் அதையே உங்க மகனோட விதியாவும் மாத்திடாதிங்க. நான் இப்ப போர்டிங் ஸ்கூலுக்குத்தான் மாற்றலாகிப் போறேன். அங்க சரத்தை சேர்க்க ஏற்பாடு பண்ணுறேன். உங்களுக்கு சம்மதம்னா என்னோட அனுப்பி வைங்க”

கண்களைத் துடைத்துக் கொண்டார் தெய்வானை “ஏற்பாடு பண்ணுங்க ஸார். அவன் நல்லபடியா படிச்சு ஒரு நல்ல நிலைக்கு வரணும். அதுக்காக அவனை விட்டுப் பிரிஞ்சிருக்கக் கூட நான் தயார்”

சரத் இந்த திட்டத்துக்கு சம்மதிக்கவே இல்லை.
“நம்ம கதிர் படிக்குற ஸ்கூலில் சேர்ந்துக்குறேன். அவன் கூடவே போயிட்டு வந்துருவேன்”

அந்தப் பள்ளியில் படித்த யாரும் பன்னிரெண்டாவதுக்கு மேல் தாண்டியதில்லை. அவர் அண்ணன் மகன் கதிருக்கும் படிப்புக்கும் ஏழாம் பொருத்தம். பதினாறு வயதில் எட்டாவது படித்துக் கொண்டிருக்கும் அவனுடன் சரத்தா…

“தோல உரிச்சுப்புடுவேன்… ஒழுங்கா ஹாஸ்டலுக்குக் கிளம்பு”

“உங்களை விட்டுட்டுப் போக மாட்டேன். இங்கேயே படிக்கிறேன். பத்தாவது முடிச்சதும் நானும் கதிரும் படிப்பை நிறுத்திட்டுத் தோட்டத்தை கவனிச்சுக்குறோம். “

எத்தனை சொல்லியும் சரத் தனது திட்டத்தில் பிடிவாதமாக நிற்க, வேப்பங்கிளையில் ஒரு குச்சியை உடைத்து அவனை விளாசிவிட்டார்.

“சொன்னா கேட்கமாட்ட… படிப்பை முடிக்காம வாசல்படியை மிதிச்சா தொலைச்சுட்டேன் தொலைச்சு”

“அம்மா கதிரு சொன்னான்மா அத்தை உன்னை கவனிச்சுக்க மாட்டாங்களாம். நான் கூட இல்லைன்னா வீட்டு வேலை செய்ய வைச்சுருவாங்களாம். நான் போக மாட்டேன் இங்கதான் இருப்பேன்” அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டு அழுத்தமாய் சொன்னான்.

மகனின் நல்வாழ்வுக்காக மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொன்னார் தெய்வானை
“இங்க பாருடா… என் அண்ணன் இருக்குற வரை எனக்கு ஒரு குறையும் இருக்காது. உன்னை விட என் அண்ணன் என்னை நல்லா பாத்துக்குவார். நீ என் கண் முன்னாடி நிக்காம கிளம்பு”

மனம் சுக்கலாக உடைய ஹாஸ்டலுக்குப் பயணப்பட்டான் சரத்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே -5உள்ளம் குழையுதடி கிளியே -5

ஹாய் பிரெண்ட்ஸ், புத்தாண்டு அருமையாகக் கொண்டாடி இருப்பிங்கன்னு நம்புறேன். எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தோழிகளுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இந்தப் புத்தாண்டு மிகச் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இனி தைப் பொங்கல் வேலைகளில் அனைவரும் பிசியாகிவிடுவோம். அதற்கு நடுவில்

காதல் வரம் ஆடியோ நாவல் – 3 youtube linkகாதல் வரம் ஆடியோ நாவல் – 3 youtube link

வணக்கம் தோழமைகளே காதல் வரம் ஆடியோ நாவல் நீங்கள் கேட்டு மகிழ வசதியாக இப்பொழுது youtube லும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கேளுங்கள்… சேனலில் மற்ற நாவல்களைக் கேட்க வசதியாக சப்ஸ்க்ரைப் செய்துக் கொள்ளுங்கள். தங்களது ஆதரவிற்கு நன்றி. அன்புடன், தமிழ் மதுரா

உள்ளம் குழையுதடி கிளியே – 27உள்ளம் குழையுதடி கிளியே – 27

அத்யாயம் – 27 மெய் காதல் தவறையும் மன்னிக்கும். சரத்தால் ராஜியின் துரோகத்தை மன்னிக்க முடியாவிட்டாலும் மறக்கத் தயாரானான். பொய் காதல் கொண்ட அந்த நக்ஷத்திராவுக்கு பழி வாங்கும் உணர்வே மேலோங்கி இருந்தது. தனக்கு துரோகம் செய்தது சரத்தும் ஹிமாவும்தான் என்று