Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33

அத்தியாயம் -33

ப்பா…..  வேலவா! ஷண்முகா! பன்னிரு கண்களில் ஒரு கண்ணால் கூடவா அந்தக் குழந்தையைப் பார்க்கல. உனக்கு பன்னெண்டு காது இருந்தும் அந்தப் பச்சிளங் குரல் கேட்காத அளவுக்கு செவிடாய் போச்சா?”,

 

ஊரில் இருந்து திரும்பி இருந்த நான்சியிடம் அங்கு நடந்ததைக் விசாரித்துக்  கொண்டிருந்த விவேகானந்தன் அரற்றினார். சித்தாரா வந்ததில் இருந்து மௌனத்துடன் இருந்ததால் அவளிடம் விவரம் கேட்க வழியின்றி போயிற்று.

 

“கவலைப் படாதிங்க அங்கிள், குழந்தையைக் காப்பாத்தியாச்சு” முதலிலே சொல்லி அவரது பதற்றத்தைத் தணித்த நான்சி  பின்னர் ரூபினாவின் மாமனாரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்தாள்.

 

குழந்தை அருகே ஆவலாக அருகில் போன ஒரு நரியின் தலையில் ‘சொத்’ என்று கட்டையால் அடி விழ மண்டை உடைத்து சுவற்றில் ரத்தம் தெறித்தது. குழந்தையை நகத்தால் கீறிய மற்றொரு நரிக்குக் கீறிய கால் உடைந்தது.

 

வெறியோடு திரும்பப் பார்த்த நரிகளுக்கு முன்னே கையில் ஒரு இரும்பு குழாயுடன் நின்றிருந்தான் அந்தக் கருப்பன். கருப்பட்டி நிறத்தில், ஆறடி உயரத்தில், அதற்குத் தகுந்த பருமனான உடல்வாகோடு குஸ்தி வீரனைப் போல நின்றான் அவன். கூட்டமாக இருக்கும் தைரியத்தில் வேகமாக அவனை நெருங்கின சில நரிகள். அதற்குள் அந்த அறைக்கதவு படீரெனத் திறக்க, உள்ளே வந்தக் காவலர் கூட்டம் நரிகளை விரட்டும் பணியில் சேர்ந்து கொண்டது.

 

” பதறிப் போனேன்மா. ஆள்  நடமாட்டமில்ல. எனக்கோ கால் சரியில்ல . திறந்திருந்த ஜன்னல்ல ஏறிக்   குதிக்க முடியாது. அந்தப் பக்கம் வந்த ஆப்பிரிகனை கூப்பிட்டு, கைல இருந்த வாட்சைக் கழட்டித்  தந்து, அந்தக் குழந்தையைக் காப்பாத்த சொன்னேன்.பக்கத்துல இருந்த  பப்ளிக்  போன்ல இருந்து போலீசைக் கூப்பிட்டேன் . அந்தக் குழந்தையோட அதிர்ஷ்டம் ஒரு நிமிஷத்துக்குள்ள ரோந்துல இருந்த போலிஸ் வந்துடுச்சு. குழந்தையைக் காப்பாத்திட்டோம்.

 

ஜன்னலைத் திறந்து போட்டுட்டு குழந்தையைத் தனியா விட்டுட்டு எங்க போனிங்கன்னு அம்மாக்காரிக்கிட்ட கேட்டா. எனக்கு மயக்கமா வந்துச்சு டாக்டர் கிட்ட போனேன்னு என்னனவோ கதை சொல்லித் தப்பிச்சுட்டா. ஆசியாவை சேர்ந்த பொண்ணுங்களுக்கு பிள்ளைங்க மேல பற்று அதிகம்னு இந்த ஊர் ஆட்களுக்கு நம்பிக்கை. அதைப் பயன்படுத்தி  அந்தப் பேய் தப்பிச்சுடுச்சு. சில நாள்லயே அவங்க அந்த  வீட்டை  காலி  செஞ்சுட்டு  போய்ட்டாங்க.

 

அப்பறம் அந்தக் குழந்தையைப் பத்தி ஒரு தகவலும் இல்லை. இருந்தாலும் அந்த சிசுவும், அதோட  தீனமான அழுகைக் குரலும் இன்னும்  என்  காதுல  கேக்குது.  குழந்தை நல்லபடியா இருக்குதாம்மா?  பேட்டி, அவகிட்ட தப்பித் தவறி கூட அந்தக் குழந்தையைத் தந்துடாத. அவ  குழந்தைக்கு மறுபடி ஏதாவது  பிரச்சனை  தந்தா  நான்  தவழ்ந்து வந்தாவது  சாட்சி சொல்லுறேன்” வயது தந்த தள்ளாமையின் காரணமாக நடுநடுவே ஓய்வெடுத்துக் கொண்டு நடந்த சம்பவத்தை சொல்லி முடித்தார் அந்தப் பெரியவர்.

 

கண்களில் வழியும் நீருடன் நடக்கும் சக்தி இழந்த அவரது காலைத் தொட்டு வணங்கினாள் சித்தாரா  “நான் விவரம் தெரிஞ்சு அப்பாவை போட்டோல தான் பார்த்திருக்கேன். இப்ப எங்க அப்பாவே நேர்ல வந்து உதவி செஞ்சதைப் போல் இருக்கு. கவலைப்படாதிங்கப்பா  நான் செத்தாலும் சாவேனே தவிர என்னோட  குழந்தையை சைலஜா கிட்டத் தர மாட்டேன் ”

 

கையோடு அவரிடம் சாட்சி பெற்று ஆலிவரிடம் சட்டப்படி அதை பதிவு செய்யும் வழி கேட்டறிந்து கொண்டார்கள்.

 

நான்சியும் சித்தாராவும் கனத்த இதயத்துடன் மெளனமாக அமர்ந்திருக்க, நான்சி வண்டியை ஒட்டிக்  கொண்டிருந்த ஆலிவரிடம் கேட்டாள்

 

“சோ… சைலஜா இதுனாலதான் பிரச்சனை எதுக்குன்னு அரவிந்த் கிட்ட ஸ்ராவணியை தந்துட்டு ஊருக்குப் போய்ட்டா ”

 

“அதுமட்டுமில்ல நான்சி, படேல் சைலஜாவோட சேர்ந்து பல மோசடிகள்ள ஈடுபடுறதா எங்களுக்கும் நம்பகமான இடத்துல இருந்து தகவல் கிடைச்சிருக்கு.

அத்தோட குழந்தையால வேற பிரச்சனை வரவும்,  இந்த மாதிரி சமயத்துல எதுக்கு போலிஸ் தொந்தரவுன்னு நெனச்சு அரவிந்த் கிட்டே திருப்பி ஒப்படைச்சிருக்கலாம்… கொஞ்ச நாள் ஜாகையை மாத்திட்டு ஜெர்மனி போனவங்க இப்ப மறுபடியும் பிசினஸ் தொடர நெனச்சு இங்க வந்திருக்கலாம்”

சம்பவங்களைக் கோர்வையாக சொல்லி முடித்தாள் நான்சி.

 

“அந்தப் பெரியவர் வாக்குமூலம் மட்டும் போதுமா?” நான்சியிடம் கேட்டார் விவேகானந்தன்.

 

“பத்தாதுன்னு தான் நாங்களும் நெனச்சோம். அதனால எதுக்கும் முயற்சித்துப் பாக்கலாம்னு அந்த சம்பவம் நடந்த தேதில சைலஜா வழக்கமா போற கிளப்க்கு போய் அவ அன்னைக்கு வந்தாளான்னு சாட்சி சேகரிக்கப் போனோம்…

அங்க  நாலு வருஷத்துக்கு முன்ன நடந்த தகவல் எங்களுக்குக் கிடைக்கல. ரொம்ப சோர்ந்து போயிருந்தப்ப அங்க மாட்டியிருந்த போடோஸ்ல ஒரு பிரபல பாடகரோட ஷைலஜாவும் நின்னுட்டு இருந்தது கண்ணுல பட்டது. மேல அவங்க கிட்ட விசாரிச்சோம். எங்க  நல்ல நேரம் நாங்க தேடின விவரம் ஆதாரத்தோட கிடைச்சது. சைலஜாவுக்கு தினமும் குழந்தையை இப்படி பூட்டிட்டு கிளப் போற வழக்கம் போலிருக்கு.

 

ஸ்ராவணிய  நரிங்ககிட்ட இருந்து காப்பாத்துன சம்பவம் நடந்த அதே நேரம் அந்த கிளப்போட நூற்றாண்டு விழா நடந்திருக்கு…. அதை மிஸ் பண்ண விரும்பாத சைலஜா அந்த விழாவுல கலந்துக்கத்தான் கைக்குழந்தையை பசியோடக் கத்த விட்டுட்டு வழக்கம் போலக் கிளம்பிப் போயிருக்கா.

 

அந்த விழாவுக்குப்  பிரபல பாடகர் ஒருத்தர் அழைக்கப் பட்டிருக்கார். அந்தப் பாடகர் கூட நின்னு கிளப் வாடிக்கையாளர்கள் எல்லாரும் படம் எடுத்து இருக்காங்க. அதுல ஷைலஜாவும் ஈன்னு ஈளிச்சுட்டு பல்லக் காண்பிச்சுகிட்டு நின்னுட்டு இருந்தா.

 

படம் எடுக்கப்பட்ட நேரம் கூட அதுல பதிவாகி இருந்தது.  ஆதாரத்துக்காக ஆலிவர் உதவியோட அவங்க கிட்ட போட்டோவையும், அந்த நிகழ்ச்சியோட வீடியோவையும் வாங்கிட்டு வந்துட்டோம்.

 

சொல்ல மறந்துட்டேனே… அன்னைக்கு நரிகளோட போராடி கைக்குழந்தை ஸ்ராவணியைக் காப்பாத்தின அந்த ஆப்ரிக்கன் வேலை செய்யுற கடையை விசாரிச்சுட்டுப் போய் சித்தாரா அவனுக்கு நன்றி சொன்னா… சொல்லும்போது அழுதுட்டா…

 

அவன் ஸ்ராவணியக் காப்பத்துனதுக்காக நன்றி செலுத்த கைல

போட்டிருந்த தங்க வளையலைக் கழட்டி அவனுக்குக் கொடுத்தா… நாங்களே அதை எதிர்பார்க்கல அவனோ சந்தோஷத்துல வாயடைச்சு போயிட்டான். ”

 

“சபாஷ், நல்ல வேலை செஞ்சிங்க. அவன் செய்த உதவிக்கு எதுவும் ஈடாகாது. முருகன் காப்பாத்த ஆளை அனுப்பி இருக்கான் பார்த்தியா? ”.

 

“ஆமாம் மாமா கடவுள் நம்மை ஒரு போதும் விட்டு விலகுவதும் இல்லை. நம்மைக் கைவிடுவதும் இல்லை என்பது எவ்வளவு உண்மை!” சிலாகித்தாள் நான்சி.

 

சமையல் அறையில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த போர்சலின் தட்டுக்களை எடுத்த படி சொன்னார் விவேகானந்தர் “அப்ப ஸ்ராவணியை கூட்டிட்டு போயிடுவேன்னு இனிமே சைலஜா சித்தாராவை மிரட்ட முடியாது. கேட்கவே நிம்மதியா இருக்கு… ரெண்டு பேரும் நிறைய வேலை செஞ்சு களைச்சுப் போய் வந்துறிக்கிங்க. வந்து சாப்பிடுங்க. சாம்பாரை சூடு பண்ணி இருக்கேன்.  சூடா தோசை ஊத்துறேன்”

 

எழுந்து வரக்  கூடத் தோன்றாமல் அமர்ந்திருந்த சித்தாராவை வற்புறுத்தி தோசையை சாப்பிட வைத்தனர்.

 

தோசையை சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள் நான்சி “இன்னொரு சந்தோஷமான விஷயம்  மாமா. சைலஜா களி திங்கப் போற நேரம் வேற நெருங்கிட்டு இருக்கு”

 

“ஏன் இங்கேயும் ஏதாவது கோல்மால் செஞ்சுட்டாளா? சைலஜா மாதிரி ஒரு கிரிமினலுக்கு கடவுள் நல்ல குடும்பம், அழகான குழந்தைன்னு கொடுத்தான். அவளுக்கு இன்னமும் புத்தி கோணலாவே இருக்கே”

 

“ஆமாம் மாமா, இனம் இனத்தோட தானே சேரும்? அதுதான் தங்கமான புருஷனைத் தள்ளி வைச்சுட்டு ஒரு கிரிமினல் கிழவன் கூட சேர்ந்து திருட்டுத்தனம் பண்ணிட்டு இருக்கா.

அவங்களோட வேலை என்னன்னா… வலைத்தளத்துல கார் விற்க விளம்பரம் தர வேண்டியது… அதுவும்  சாதாரணமான கார்கள் இல்லை…  பி.எம்.டபிள்யு, பென்ஸ் மாதிரி ‘காஸ்ட்லி’ கார்கள். மக்கள் பார்த்தாலே சுண்டி இழுக்குற மாதிரி படத்தைத் தந்து கவர்ந்து இழுக்க வேண்டியது. விலை வேற ரொம்பக் குறைவா சொல்ல வேண்டியது.

 

உதாரணத்துக்குப் பத்து லட்சம் மதிப்புள்ள பொருளை ரெண்டு லட்சம் சொல்ல வேண்டியது. மக்கள் அலறி அடிச்சுட்டு தனக்கு வேணும்னு கேட்பாங்க.

 

அதில் ஒரு இளிச்சவாய் ஒருத்தனைத் தேர்ந்தெடுத்து, சைலஜா தேனொழுக  அவன்  கிட்ட பேசுவா. போன்ல குரல்ல சொக்கிப் போறவன் சைலஜா முகத்தை நேர்ல பார்த்ததும் புல் ப்ளாட்.

 

பிரான்ஸ் போறேன் அதுதான் கம்மி விலைக்கு காரை விக்கிறேன், பணம் கேஷாத்தான் வேணும்னு சொல்லி அவனைப் பணத்தை எடுத்துட்டுத்  தனிமையான இடத்துக்கு வர சொல்லுவா. நம்பி பணத்தை எடுத்துட்டுத் தனியா வரவனை அடிச்சு போட்டுட்டு பணத்தை எடுத்துட்டுக் கம்பி நீட்டிடுவாங்க சைலஜா படேலோட அடியாளுங்க.

 

கொஞ்ச நாள் இப்படி செஞ்சுட்டு ஜாகையை வேற இடத்துக்கு மாத்திடுவாங்க இந்த குரூப். தடயமே இல்லாமத் தப்பு செய்யறதுல இவங்க கில்லாடிங்க.

 

இதுல இவங்க அடிச்சுப் போட்ட ரெண்டு ஆளுங்க செத்துப் போய்ட்டாங்க. ஜெர்மனி போலிஸ் இவங்களைத் தேடி அல்மோஸ்ட் நெருங்கிடுச்சு. ஆலிவர் மூலமா இந்த விஷயத்தைத் தெரிஞ்சுகிட்டோம். சில நாள்ல மெட்ரோ நியூஸ்ல சைலஜாவைப் பார்க்கலாம்.

 

இருந்தாலும் அவ கெட்டிக்காரி தான் மாமா. அவளுக்கு தான் அந்தக் கொலை கேஸ்ல  மாட்டிக்கப் போறோமோன்னு ஒரு சந்தேகம். அதுனால முன் எச்சரிக்கையா அதுல இருந்து தப்பிக்க வழி யோசிச்சப்ப அவளுக்கு அரவிந்த் நினைவு வந்திருக்கு.

படேலைக் கழட்டி விட்டுட்டு வேற பாதுகாப்பான இடத்துக்கு வர இப்ப சித்தாராகிட்ட பிள்ளைப் பாச சென்டிமென்ட்  நாடகம் போடுறான்னு நினைக்கிறேன்”

 

“சோ… நாம சைலஜாவை ஒண்ணும் செய்யணும்னு அவசியம் இல்ல. அவளே அவளுக்கு ஒரு பெரிய குழியா தோண்டி வச்சுருக்கா. அதுல அவ விழுந்துடுவா”

 

“உண்மைதான். ஆனா அந்தக் குழில ஸ்ராவணியையும் அரவிந்தையும் அவ இழுத்துப் போடாம இருக்கணும். இன்னும் சில நாள் சமாளிச்சுட்டோம்ன போதும். அப்பறம் போலிஸ் அவங்களை இழுத்துட்டுப் போய்டும்”

 

“ஆமாம்மா. சாயந்தரம் சந்திரிகா போன் பண்ணா, அரவிந்த் அவனுக்கும் ஸ்ராவணிக்கும் மெட்ராசுக்கு  நாளைக்கு ராத்திரி டிக்கெட் ரிசர்வ் செஞ்சிருக்கானாம். அரவிந்த் ஸ்ராவாணியைக் கூட்டிட்டு ஊருக்குப் போகட்டும். அவங்க ரெண்டு பேரும் இந்த சைலஜா கிட்ட இருந்து விலகி இருக்குறது  நல்லதுதான்”

 

தோசை விள்ளலை வாயருகே கொண்டு சென்ற சித்தாராவின்  கைகள் அங்கேயே நின்றது.

 

அவ்வளவு நேரம் அமைதியாக நடந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த கல்யாண் கேலி பேசினான் “எதுக்கு ஷாக் சித்தாரா? இது இப்படித்தான் போகும்னு எனக்கு முன்னமே தெரியும். என்ன நான் நெனச்சதுக்கு நாலு நாள் முன்னமே நடந்துடுச்சு. அரவிந்தும் ஸ்ராவணியும் உன் மேல எவ்வளவு பிரியம் வச்சிருக்காங்கன்னு எல்லாரும் தெரிஞ்சுக்க இன்னொரு சந்தர்ப்பம். ரெண்டு நாள் கூட உன் வீட்டுக்காரனுக்கு உன்னை விட்டுட்டு இருக்க முடியல.”

 

யோசனையுடன் பார்த்த நான்சி தீவிரமான முகபாவத்துடன் சொன்னாள் “இல்ல கல்யாண் இது சைலஜாவுக்குத் தெரிஞ்சதும் அவ நடவடிக்கை எப்படி இருக்குமோன்னு தெரியல. நாம என்ன பதில் நடவடிக்கை எடுக்குறதுன்னு புரியல. அதுதான் சித்தாராவுக்குக் கவலை”

ஆமாம் என்று தலையாட்டினாள் சித்தாரா.

 

கல்யாண் “கவலைப் படாதே சித்தாரா இதுக்கு விரைவில் முடிவு வரும். நீங்க ரெண்டு பேரும் டோவர் வேலைல பிஸியா இருந்ததால நான் சந்திரிகா தகவல் சொன்னதும் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டியதாயிடுச்சு. அதைப் பத்தி விரிவா பேசலாம்.

சைலஜாவுக்கு இந்த விஷயம் இந்நேரம் தெரிஞ்சிருக்கும் அவ எந்த நேரமும் அரவிந்தை சந்திக்க வருவாள். அவளைப் பற்றிய என்னோட கணிப்பு உண்மையா இருந்தா நாளைக்குக் காலைல அவளை அரவிந்த் வீட்டுல பார்க்கலாம்” என்று சொல்லி அங்கிருந்த எல்லாருடைய வயிற்றிலும் புளியைக் கரைத்தான்.

 

ல்யாணின் கணிப்பு உண்மைதான். சைலஜா அங்கு கொதித்துக் கொண்டிருந்தாள். சித்தாராவை ஊருக்கு அனுப்பியதற்காக நியாயம் கேட்க இல்லை சமாதானம் பேச அரவிந்த் தன்னைப் பார்க்க வருவான், அவனுடன்  தான் திரும்ப சேர்ந்து வாழ அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிருந்தாள்.

 

தான் பிரிந்து போனபோது சற்றும் வருந்தாதவன், விவாகரத்துக்கு உடனடியாக சம்மத்தித்து, சைலஜா என்ன கதி ஆனாள்  என்ன? என்று விட்டேரியாய் இருந்த இந்த அரவிந்த், கைக்குழந்தையைக் கையில் தந்தபோதும் கூட வாங்கிக் கொண்டு வைராக்கியமாய் தனியாய் வளர்த்தவன், ரெண்டாவது பொண்டாட்டியை விட்டு ரெண்டு நாள் கூட பிரிந்து இருக்க முடியாமல் நிரந்தரமாக ஊருக்கு செல்கிறான்…

 

எனக்குத் தெரியாத என்ன மந்திர வித்தையை அந்த சித்தாரா கற்று வைத்திருக்கிறாளோ தெரியவில்லை?

 

எல்லாம் நேரில் பார்க்கும் வரைதான் அவனுக்கு இந்த வீராப்பு எல்லாம். தன்னைப் பார்த்து ஒரு காலத்தில் தடுமாறிப் போனவன் தானே இந்த அரவிந்த். அதைப் பயன் படுத்தி மறுபடியும் அவனை வீழ்த்த முடியாதா என்ன…

அதுவும் சைலஜாவைப் பொறுத்தவரை குடும்பத்து மேல் ஒட்டுதல் உள்ள, மென்மையான சுபாவம் உள்ள ஆண்கள் எளிதாக ஏமாறப் பிறந்தவர்கள்.

 

இனியும் அரவிந்தைப் பார்ப்பதைத் தள்ளிப் போட முடியாது. காலையில் அரவிந்தைப் பார்க்கப் போவதற்கு எடுத்து வைத்திருந்த உடையைப் பார்த்தாள். புலிதோல் போன்ற டிசைனில் உடலோடு ஒட்டிய அந்த உடையை அவள் அணிந்தால் கிழவனுக்கும் ஆசை வரும். இது அனுபவத்தில் அவள் கண்ட உண்மை.

 

அரவிந்த் உன்னை மறுபடியும் என் காலடியில் விழ வைக்கிறேன்

 

நான் உன்னைத் தொட்டால், உன் கோவத்தை நொறுக்க மாட்டியோ?

என்னைப் போலப் பெண்ணைப் பார்த்து மயங்க மாட்டியோ?

கண்ணில் கண்ணைப் பூட்டி விட்டால் சிரிக்க மாட்டியோ?

உன்னில் என்னை சூட்டி விட்டால் ஒட்டிக்க மாட்டியோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25

  சத்தமில்லாமல் சில நாட்கள் கழிந்தது. ஜெயசுதா வீட்டுக்கு வந்துவிட்டார். ஜிஷ்ணு அவனது தொழிலை சீர்படுத்தும் வேலையில் முழு மூச்சாக இறங்கினான். செய்முறையில் சில மாற்றங்கள் செய்தான். ஆவக்காய், கோங்குரா தவிர மற்ற வகை ஊறுகாய்களையும் விற்பனை செய்யும் எண்ணத்துடன் அவற்றிக்கான

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 58தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 58

ஜெர்மனி சென்றதும் அவளை ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு ராம் வேலையில் சேர்ந்தான். நாட்கள் நகர்ந்தன. இயல்பாகவே சூழ்நிலையோடு பொருந்திக் கொள்ளும் சரயு புதிய இடத்தில் பழகிக் கொண்டாள். கவலையை மறக்க உழைப்பை அதிகப்படுத்து என்பது அவளது வழக்கமாய் இருந்ததால்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 2தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 2

அத்தியாயம் – 2 அன்று வேலை நெட்டி முறித்தது. சரயு ஜெர்மனியில் இருக்கும் மியூனிக்கின் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் டிசைனிங் பிரிவில் பணியாற்றினாள். அவர்கள் அணி வடிவமைத்த பகுதியைப் பற்றிய இறுதி அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் ஒப்புவிக்க வேண்டும், அதனால்