Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 32

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 32

அத்தியாயம் – 32

 

முடியை இழுத்துக் கட்டி, அதற்கு மேல் ஒரு எலிசபெத் ராணி தொப்பி போட்டு, முக்கால் காலுக்கு ஒரு கால்சராய் போட்டு, மூக்கில் ஒரு பெரிய வளையத்துடன் வந்த அந்தப் பெண் பார்க்கிங்கில்  அந்த பசாட் காரைக் கண்டுபிடித்து ஏறி பின்னால் அமர்ந்தாள் . லாவகமாக சீறிப் பாய்ந்தது அந்தக் கார்.

“என்ன மாட்டிக்கலையே…” என்ற அந்த நபரின் கேள்விக்கு பதில் சொல்லும் முன் தொலைபேசி அடிக்க,

 

“சந்திரிகா உன்னை யாரு இவ்வளவு சீக்கிரம் போன் பண்ண சொன்னா?”

 

“இங்க அந்த சைலஜாவப் பார்த்தேன். அப்பாடி என்னம்மா பேசுறா? அவளுக்கு இருக்குறது நாக்கா இல்ல தேள் கொடுக்கான்னு தெரியல” நடந்ததை  சுருக்கமாக சொன்னாள்.

 

“இவ பேசினதை மனசுல வச்சுகிட்டு அரவிந்த கவனிக்காம இருந்துடாத . காலைல வேற நல்ல இருமல் அரவிந்துக்கு. நான் வேற திட்டி ஏர்போர்ட்ல இறங்கினவுடனே வீட்டுக்கு உடனே போக சொல்லிட்டேன். இல்லேன்னா பாத்ரூம் போய் டிரஸ் பண்ணிட்டு இங்க யாருக்கும் தெரியாம வந்து கார் ஏற முடியாதே. ”

“ச்சே, இந்த பொம்பள நம்ம யாரும் அரவிந்த் பக்கத்துல இருந்தா அவர்  மனசை மாத்துறது கஷ்டம்னு நம்மளைப் அவர்கிட்ட இருந்து  பிரிச்சு அரவிந்தைத்  தனிமைப் படுத்த நினைக்கிறா.  உனக்கு  டிக்கெட்  பணம்  போட்டு  அவளே ஊருக்கு அனுப்பி வைச்சாளே . அப்பவே தெரியல அவ என்ன வேணும்னாலும் செய்வான்னு . சைலஜா  நினைக்குற மாதிரியே நடந்துக்க நாம என்ன முட்டாளா?”

 

ஹீத்ரோவைக் கடந்து எம் ட்வென்டி பைவ் வில் வேகம் எடுத்தது அந்த நீலநிற கார்.

” அம்மாடி சித்தாரா எனக்கு உன்னைக் கொஞ்சம் கூட அடையாளமே தெரியல. யாருடா இந்தப் பொண்ணு சட்டமா கதவைத் திறந்து கார்ல ஏறுதுன்னு பார்த்துட்டு இருந்தேன். இப்ப சொல்லும்மா முதல்ல எங்க போகணும்?” என்றார் விவேகானந்தர்.

“கோவிலுக்குப் போய்   முருகர் கூட ஒரு சண்டை. மத்ததை அப்பறம் சொல்லுறேன்”

ராஜ அலங்காரத்துடன் வரவேற்றார் முருகப் பெருமான். மனமுருகி வேண்டினார் விவேகானந்தன்.

 

“அங்கிள் அரவிந்த் எவ்வளவு சாமி பக்தி தெரியுமா? தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லிட்டுத்தான்  காலைல சாப்பாட்டையே தொடுவார்.  ஏன் அங்கிள் அரவிந்துக்கு இவ்வளவு சோதனை? மோசமான சைலஜாவுக்கு அழகையும், செல்வத்தையும், யாரையும் தூக்கிக் கால்ல  போட்டு மிதிக்கிற திமிரையும், அவ நினைக்குறப்ப ஓடி வந்து உதவி செய்ய ஆட்களையும் கொடுக்குற கடவுள் … ஏன் என் அரவிந்துக்கு மட்டும்  இவ்வளவு கஷ்டத்தைத் தர்றான்?  நல்லவனா இருக்குறது கூடத்  தப்பா?”

 

“அப்படி சொல்லாதம்மா. நல்லவங்களுக்குத் தீமையை காட்டிட்டு விலக்கிடும் தெய்வம். ஆனா சைலஜா மாதிரி ஆளுங்களை உயர உயரப் பறக்கவிட்டு மோசமா அடிபட வைப்பான்”

“எங்க… அவதான் வெறி பிடிச்சாப்புல வார்த்தையாலையும்  செயலாலையும்  எல்லாரையும் அடிச்சுட்டு இருக்குறா. அவ எக்கேடோ கெட்டு போறா. எங்க குடும்பத்தை விட்டு ஒழிஞ்சா சரி”

 

“சரி விஷயத்துக்கு வருவோம். நீ சொன்னபடி யாருக்கும் தெரியாம உன்னை கூட்டிட்டு வந்துட்டேன். நீயும் அந்த சைலஜா கண்ணுல மண்ணை தூவிட்டு வந்துட்ட. ஆனா உன் ப்ளான் என்ன? நான் தெரிஞ்சுக்கலாம்னா சொல்லு”

 

“அங்கிள் அந்த சைலஜா என்னை வீட்டை விட்டு விரட்டுறதுலயே குறியா இருந்தா. நானும் அவ கூட சண்டை வந்தன்னைக்கு கோவத்துல சில ட்ராவல் ஏஜென்ட்  கிட்ட போன் செஞ்சு டிக்கெட் விலை விசாரிச்சேன். ஆனா கிடைக்கக் கூடாதுன்னு நெனச்சுகிட்டு அடிமாட்டு விலைக்குக் கேட்டேன். எல்லாரும் திட்டிட்டு வச்சுட்டாங்க.

ஆனா மறுநாள் காலைல நான் கால் பண்ணாத ஏஜென்ட் ஒருத்தன் இருநூறு பவுண்டுக்கு டிக்கெட் தரேன்னு சொன்னான். அப்பவே நான் சந்தேகமானேன். சந்திரிகா கடைல வேலை பாக்குற பையனை வைச்சு அந்த ஏஜெண்டைக் கண்காணிச்சதுல, இது சைலஜா வேலைன்னு தெரிஞ்சது…

அவ நான் டிக்கெட் வாங்கப் போறதுக்கு முன்னாடி வந்து அவனை சந்திச்சுட்டு போயிருக்கா. இதுக்கு நான் அசையலேன்னா இனிமே ஸ்ராவணியைக் காண்பிச்சு  மிரட்டுவா. வனிக்கு  ஏதாவது வந்தா அதைத் தாங்குற சக்தி எனக்கோ அரவிந்துக்கோ  சத்தியமா இல்லை.

சோ… அவளோட வெறியைக் கொஞ்சம் தணிக்கணும் அதுனால அவ ஊருக்கு நான் போறதா நம்ப வச்சேன். என் எதிரியப் பத்தி நான் முதல்ல தெரிஞ்சுக்கணும். நான் இங்க இருக்குறது தெரிஞ்சா அவ உஷாரயிடுவா…

 

நான் ஊருக்குப் போயிட்டதா நெனச்சு அவ கொஞ்சம் அஜாகிரதையா இருக்கணும். போர் தந்திரம் என்ன சொல்லுதுன்னா, பக்கத்தில் இருக்குறப்ப எதிரியை நாம தூரத்துல இருக்குறதா நெனைக்க வைக்கணும். அவளோட பலத்தை அவளுக்குத் தெரியாமலையே பலவீனமாக்கணும்”

 

“உன் தந்திரமும் ஊகமும் நல்லாவே இருக்கு. ஆனா அவளை எப்படி  பலவீனமாக்கப் போற? அதுவும் சில நாட்களில் அது   முடியனும்னு  வேற சொல்லுற”

 

“அங்கிள் இந்தியாவில் இருந்து அவ அரவிந்தைக் கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்ததுக்கும், இங்க ஸ்ராவணி பிறந்து சில நாள் கழிச்சு அரவிந்த் கிட்ட கொடுத்துட்டு ஜெர்மனி ஓடினதுக்கும் அப்பறம் இப்ப மறுபடியும் அரவிந்த் வேணும்னு சொல்லுறதுக்கும் என்ன காரணம்னு கண்டு பிடிக்கணும்”

 

“சரி நாலு வருஷத்துக்கு முன்ன நடந்தத எப்படிம்மா கண்டு பிடிக்குறது?”

“அரவிந்தோட ப்ரெண்ட்  சாகரை மறந்துட்டிங்களே. அவர் இன்னமும்  அந்த  கிளப்லதான் வேலை பாக்குறார். அங்க போய் அவரைப் பார்க்குறோம்”

“அதுனால என்ன ஆதாயம்?”

“மறந்துட்டிங்களே அங்கிள் அங்கதானே சைலஜாவும் படேலும் சந்திச்சுகிட்டாங்க. அங்க போய்  படேலோட  பழைய விலாசத்தை வாங்குறோம். அவ அரவிந்தை விட்டுப் பிரிஞ்சதுல இருந்து ஸ்ராவநியைத் திருப்பித் தந்தது வரைக்குமான காரணத்தைக் கண்டு பிடிக்கிறோம்”

 

“அதுல ஏதாவது இருக்கும்னு நம்புறியா?”

 

 

“சைலஜா தான்தான் ஸ்ராவநியோட அம்மா, தனக்கு இனிமே குழந்தையே பிறக்காது. தயவு செய்து என் குழந்தையை பிச்சையா தான்னு சொல்லி கண்ணீர் விட்டுகே கதறினா”

“நீ அதை நம்புறியா?”

“அவ அம்மா அங்கிள். அதுதான் என்னை ரொம்ப சங்கடமாக்கிடுச்சு. அவ ஏன் கூட சண்டை போட்டா எதிர்த்து நின்னுருப்பேன். பிச்சை இல்ல கேக்குறா?”

“பைத்தியக்காரப் பொண்ணே . இந்த உலகத்துல பல பேரோட கண்ணீர் கூட பொய்தான்மா”

” அந்தக் கண்ணீர் உண்மையா இருக்குமோன்னு ஒரு வினாடி நான் நெனச்சதென்னவோ உண்மை. ஆனா அவளோட நடவடிக்கைகளும், அரவிந்தோட வார்த்தைகளும் அவ கண்டிப்பா மோசமான பொண்ணுதான்னு என் மனசுக்கு சொல்லுது.

ஆனா அவ கோர்ட்டுக்குப் போயிட்டா…  என் மனசு சொன்னதை சட்டம் கேட்காதே… அதுக்கு சாட்சியத் தேடிப்  போறேன்.”

“சுலபமா சொல்லிட்ட எவ்வளவு பயங்கரமான விஷயத்துல இறங்கி இருக்க தெரியுமா?”

 

தெரியும் என்று தலையாட்டினாள் சித்தாரா. இந்த முயற்சியில் அதிகபட்சமாக தனது உயிரோ அல்லது உயிர் போன்ற  குடும்பத்தையோ இழக்க நேரிடலாம். அதனால் தான் அரவிந்திற்குத் தெரியாமல் இந்தக் காரியத்தில் இறங்கி இருக்கிறாள்.  அவனுக்குத் தெரிந்திருந்தால் விட்டிருக்கவே மாட்டான்.

 

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்? அதில் இறங்கி நடந்து இறுதிவரை சென்று விடுவது என்று முடிவு செய்து விட்டாள்.

 

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க

எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல.

 

அரவிந்திற்க்கு வீட்டில் இருப்பே கொள்ளவில்லை. ஸ்ராவணி வேறு அவனிடம்

“அப்பா உங்களால தான் அம்மா ஊருக்குப் போனாங்க”

“நான் என்னம்மா செஞ்சேன்?”

“அவங்க சமையலைக் கிண்டல் பண்ணிட்டே இருந்தா… அதுனாலதான் அம்மா பாட்டி கிட்ட சமையல் கத்துட்டு வரப்  போயிருக்காங்க.

அம்மா இல்லாதப்ப எவ்வளவு கஷ்டப் பட்டோம். எல்லாருக்கும் அம்மா ஊட்டி விடுவாங்க. பாட்டு சொல்லித் தருவாங்க. ஸ்கூல்ல விட்டுட்டு வீட்டுக்குக் கூட்டிட்டு போவாங்க. நான் மட்டும் நானி கூட தனியா நடந்து வருவேன் தெரியுமா…

மழை பெஞ்சா அம்மா எல்லாரும் குடையை பிடிச்சுட்டு என் கிளாஸ்மேட்சைத் தூக்கிட்டுப் போவாங்க. நானி அவங்க குடை பிடிச்சுட்டு என்னை மழைல நனைய வச்சு கூட்டிட்டு வருவாங்க. இப்ப எனக்கும் அம்மா இருக்காங்கன்னு எவ்வளவு ஹாப்பியா இருந்தேன். இப்பவே அம்மா வேணும்” அழ ஆரம்பித்தாள்.

 

மனதினால் விலகி இருந்த போது பக்கத்திலே இருந்தவள் இன்று ஈருடல் ஓருயிர் ஆன பிறகு விலகிச் சென்றது இதயத்தில் வலியைத் தந்தது.

 

“ வனிம்மா நீ வாய் விட்டு சொல்லி அழுதுட்ட. நான் மனசுக்குள்ள அழறேன் அதுதான் வித்யாசம். கவலைப் படாதேடா உங்க அம்மா இருக்குற இடத்துக்கு நாமும் போவோம். அவ உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும் நாம அவ கூடவே போவோம். அமைதியா இருந்தா உன் அம்மா என்ன அவ இஷ்டப்படி ஆட்டி வைக்குறா. சித்து ஊருக்கு வந்து உன்னை கவனிச்சுக்குறேன்”

 

ஒரு வழிப் பயணம் இந்தியா செல்ல, டிக்கெட் விலை விசாரிக்க ஆரம்பித்தான் அரவிந்த்.

 

சித்தாராவுக்கும் விவேகானந்தனுக்கும் அவர்கள் நினைத்ததை விட சுலபமாகவே வேலை முடிந்தது. சாகரிடம் படேலின் பழைய விலாசத்தை வாங்கினர்.

 

“சிஸ்டர் அரவிந்த் புது வேலைக்குப போனதும் நாங்க அவனைப் பாக்குறதைக் கொஞ்ச கொஞ்சமா நிறுத்திக் கிட்டோம். அவனுக்கு எங்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்தப்  பொம்பளையோட நினைவு வரும்.

ஒரு நல்ல குடும்பத்துப் பையனுக்கு, தனது மனைவியை வேறு நபரோட… அதுவும் நண்பர்கள் முன்னாடி,பாக்கறது எவ்வளவு அவமானத்தையும் வேதனையும் தரும்?

எங்களைப் பார்க்கும் போதெல்லாம்  அவன் அவமானப் பட்டது மறக்காது. அது வேண்டாம்னு  தான் நாங்க வரதில்ல. இப்ப  பாருங்க,   நாங்க  ஆசைப்பட்ட  மாதிரியே அரவிந்த் உங்களைக்  கல்யாணம் செய்துகிட்டான்.

 

அந்தப் பொம்பளை மோசமானவ சிஸ்டர்… நானே  பல  ஆண்களோட  அவ  நெருக்கமா பழகிப்  பார்த்திருக்கேன். இப்ப குழந்தையை வேற கேக்குறாளா… பொறந்து சில நாள் ஆன பச்சப் பிள்ளையை அரவிந்த் கிட்ட  தந்துட்டு  போனவளுக்கு  இப்ப எதுக்கு குழந்தை வேணுமாம்…

 

அப்பவே  அரவிந்த்  கிட்ட  சொன்னேன். இவளை ஏதாவது பண்ணலாம்னு. அவன்தான்  சாக்கடைல  கல்லெறிஞ்சா  சாக்கடைக்கு நஷ்டமா… நம்ம  மேலதான்  சேறு  தெறிக்கும்னு   டயலாக் பேசினான். இப்ப பாருங்க… பாம்பை முழுசா அடிக்கணும் சிஸ்டர். அவ ஏதாவது தகராறு பண்ணா சொல்லுங்க  நாங்க உங்களுக்கு துணைக்கு

வரோம். ”

நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்பினார்கள்.

 

“ஹ்ம்ம்…  சைலஜாவைப் பத்தின செய்தி  எனக்கு ஒண்ணும்  அதிர்ச்சியா இல்ல. இப்ப மத்த காரியங்களைப் பார்க்கலாம். டோவர் போக உனக்குத் துணையா ஒரு நல்ல நபரை ஏற்பாடு செய்யணும் ” என்ற விவேகானந்தன்

“ஏம்மா இதுக்கெல்லாம் பொம்பளப்புள்ள நீ மெனக்கெட்டு அலையணுமா… என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல. நானோ கல்யானோ இந்த வேலைகளை செய்ய மாட்டோமா…”

 

“உலகத்துல நாம பிறந்தது ஒரு காரணத்துக்காகத் தான், வேணும்போது அந்தக் காரணத்தை ஆண்டவன் தெரிய வைப்பான்னு எங்க பாட்டி சொல்லுவாங்க. நான் பிறந்தது அரவிந்தையும் ஸ்ராவணியையும் சைலஜாங்குற பாம்பு தீண்டிடாம பாதுகாக்கத்தான் அங்கிள்”

 

நெக்குருகி விட்டார் விவேகானத்தன்

“உன்னை  அந்தப் பாம்பு தீண்டிடாம பாத்துக்குற கடமை எனக்கு இருக்கு. அது கெடக்கட்டும் இந்தியாவில் நடந்த விஷயத்தை எப்படி கண்டு  பிடிக்கப் போற… நான் வேணும்னா அதுக்கு உதவி செய்யிறேன்” உற்சாகமாக சொன்னார்.

 

“அதைப் பத்திக்  கவலைப்படாதிங்க அதுக்கு வேற ஏற்பாடு பண்ணியாச்சு” என்று சொல்லி அவர் முகத்தை சுருங்க வைத்தாள்.

 

பன்னீர் அங்கே பெங்களூரில் அலைந்து கொண்டிருந்தார். நிழலான தொழில் செய்த அனுபவம் இருந்ததால் விவரங்கள் சேகரிப்பதில் கஷ்டமாக ஒன்றும் இல்லை பன்னீருக்கு. அவர் சற்றும் எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி வேறு கிடைத்தது.

 

இரண்டு நாளுக்கு முன் திடீரென்று போன் செய்த சித்தாரா “அண்ணா நீங்க ட்ரைன்ல போவிங்களோ, ப்ளைன்ல போவிங்களோ, இல்ல அதைவிட வேகமா உங்க ஆட்டோல போவிங்களோ தெரியாது… இந்தப்  பொம்பளையப் பத்தின தகவல்கள் எனக்கு வேணும்…

முடிஞ்சா இவளால பாதிக்கப் பட்டவங்க போலிஸ்ல கம்ப்ளைன்ட் தரணும். ஆனா  பத்திரிக்கைக்கோ  வெளிலையோ  அதைப் பத்தித் தெரியக் கூடாது. அப்படித் தெரிஞ்சா நம்ப குடும்பத்துப்  பேரும் கெட்டுப் போகும்.

இவளைப் பத்தி யாராவது போலிஸ்ல கம்ப்ளைன்ட் செய்திருந்தாலும் அதை நகலெடுத்து எனக்கு ஸ்கேன் செய்து அனுப்பி விடுங்க.”

 

“யாரும்மா இவ”

 

“அரவிந்தோட முதல் மனைவி” சுருக்கமாக நடந்ததை சொன்னாள்.

அப்போதுதான் அந்த விஷயத்தைக் கேள்விப்படும் பன்னீரும் திகைத்துப் போனார்.

 

“அவ உயிரோட இருக்குறது அத்தைக்கு மட்டும் தான் தெரியும்.  மத்தவங்களைப் பொருத்தவரை செத்தவ செத்தவளாவே இருக்கட்டும்  அதுனால வீட்டுல யாருக்கும் விஷயம் தெரிய வேண்டாம். தெரிஞ்சா ஸ்ராவணியோட எதிர் காலத்துல அது என்ன விதமான பாதிப்பைத் தரும்னு சொல்ல முடியாது”

 

“சரிம்மா. கதிரை கூட கூட்டிட்டு போகவா?”

 

“அவருக்கு வேற ஆளைப் பத்தி விசாரிக்குற வேலையைத்  தந்திருக்கேன். அதுல அவர் பிஸி”

 

“யாரும்மா அது?”

 

“அரவிந்தோட ரூம்மேட் பாபு.  நான் நெனச்சது சரின்னா பாபு இவளைப் பத்தின விவரம் முழுசுமா தெரிஞ்சுதான் யாருக்கும் தெரியாம தலைமறைவாயிருக்கான். அவனைப் பிடிச்சா நிறைய தகவல்கள் கிடைக்கும்.

சைலஜா விரிச்ச வலை பாபுக்குத்தான் ஆனா அதுல தவறிப் போய் மாட்டிக்கிட்டது  அரவிந்த். இதை யாருமே எதிர்பாத்திருக்க மாட்டாங்க. அந்த பாபுவும் கூடத்தான் அரவிந்த் மாட்டிக்குவார்னு நெனைச்சிருக்க மாட்டான். ஷைலஜாவும்  கிடைச்ச வரை லாபம்னு கணக்கு போட்டு அரவிந்தைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா ”

 

டோவர் செல்லும் காரில் சென்று கொண்டிருந்தனர் சித்தாராவும் நான்சியும்.

 

“அடுத்தவங்க உபயோகப் படுத்தினது உனக்குப் பிடிக்காதா  சித்தாரா? இந்த மாதிரி கல்யாண் நெனச்சிருந்தா எனக்கு இந்த  வாழ்க்கை  கிடைச்சிருக்குமா?”

 

“என்னக்கா சொல்லுறிங்க?”

 

” எனக்கும் கல்யாணுக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் கூட ஆகல?”

 

புதிராய் பார்த்தாள் சித்தாரா “உங்க பசங்க?”

 

“என் முதல் கணவனுக்குப் பிறந்தவங்க. அவர் இறந்துட்டார்.  இப்பப்  பிறந்த குழந்தை தான் கல்யானோடது”

 

“அதுனாலதான் டெலிவரி  சமயத்துல அப்படிப் பதட்டப்பட்டாரா கல்யாண் . உங்க முதல் கணவர்…  பாவம் அக்கா நீங்க”

 

“ரொம்பப் பாவப்படாதே… அந்த ஆள் தான் போனாரே தவிர குடிச்சுட்டு அவர் சிகரட்டால போட்ட சூடுங்க எல்லாம் என் உடம்புல அப்படியேதான் இருக்கு.

நானும் திருத்திடலாம்னு நம்பினேன். ஆனா கடைசி வரை முடியல. வெளில சொன்னா வெட்கம்,  அந்த ஆள் செத்து போனவுடனே அப்பாடா இனிமே  நைட்  அடி வாங்குற வேதனை  இல்லன்னு நிம்மதியாத்தான்  இருந்தது. கண்ணுல இருந்து ஒரு  பொட்டுக்  கண்ணீர் வரல ”

 

இந்த தண்டனை போதுமே அந்த முதல் கணவனுக்கு. ஒரு கணவன் மறைவை விடுதலையாக நினைக்கும் மனைவி. அந்த மாதிரி வாழ்க்கையைத் தந்த மனிதன் எவ்வளவு கேவலப் பட வேண்டும்.

 

“கல்யாண் சரி,  உங்க  மேல  காதல்ல  உங்க  பசங்களையும்  அவர்  பசங்களா ஆனா  ஏத்துகிட்டார் விவேகானந்தர் அங்கிள் எப்படி ….”

 

“நான் கல்யாண் கிட்ட அவரோட அப்பா சம்மந்தத்தோடத்தான் இந்தக் கல்யாணம் நடக்கனும்னு சொல்லி இருந்தேன். மாமா வந்தவுடனே கல்யாணத்தை  செஞ்சு வைச்சுட்டார். போன வருஷம் சொத்து பிரிச்சு அவர் பேரப் பிள்ளைங்களுக்குத் தந்தார். அதுல சரிசமமா என்னோட முதல் ரெண்டு பசங்களுக்கும் தந்திருக்கார்.”

 

விவேகானந்தர் சித்தாராவின்  மனதில் உயர்ந்து விட்டார்.

 

டோவரில் இருக்கும் அந்த இடத்தை சுற்றி சுற்றி வந்தது தான் மிச்சம் ஒரு சிறு தடயம் கூட கிடைக்கவில்லை. சோர்ந்து போய் அமர்ந்து விட்டாள் சித்தாரா.

 

“கவலைப் படாதே சித்து. என் தோழி ஜோனோட ‘பாய் ப்ரெண்ட்’ போலீஸ்தான் அவனை விசாரிச்சு என் கிட்ட பேச சொல்லிட்டு வந்திருக்கேன். சீக்கிரமா நல்ல தகவல் வரும்”

அவர்களை சோதிக்காமல் தகவலுடன்  நேரிலேயே  வந்து  விட்டான் அந்த ஆலிவர்.  அதிகம் குறுக்கிடாமல் கேட்டாள் நான்சி. சித்தாராவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவளைத்  தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினாள்  நான்சி.

“இப்ப என்ன செய்யப் போறோம் ஆலிவர்?”

“அந்த ருபீனா வீட்டுல சாட்சி சேகரிக்கப் போறோம்”

ருபீனா குடும்பத்தினர் லேசில் சம்மதிக்கவில்லை. இன்னும் உலகில் பல பேர் போலிஸ் என்றாலே எதற்கு வம்பு என்று ஒதுங்கித்தான் போகின்றனர்.

 

“இங்க பாருங்க ருபீனா, உங்களை என்னோட சகோதரியா நெனச்சு இந்த உதவியைக் கேக்குறேன். உங்க எதிர் வீட்டுல குடி இருந்தவ எப்படின்னு உங்களுக்குத் தெரியும். அந்தக் குழந்தைக்கு நான் தாயா மாறி ட்டேன். ஆனா அவ இப்ப குழந்தையை கேக்குறா. அம்மான்னு ஒரு சாக்கை வைச்சு என்கிட்ட இருந்து குழந்தையைப் பறிக்க நினைக்குறா. அவ நல்லவளா இருந்திருந்தா நானே விலகி இருப்பேன். நீங்க மட்டும் எனக்கு உதவலேன்னா என் குழந்தையை அந்த சைலஜா  பிடுங்கிட்டுப் போய்டுவா .”

 

“கூடாது …. ”  என்று பக்கத்து அறையில் இருந்து ஒரு குரல் வந்தது. ருபீனாவின் மாமனார் அவர். படுத்த படுக்கையாக இருப்பவர்.

 

“இங்க வாம்மா” என்று அழைக்க  அந்த அறைக்குள் அனைவரும் சென்றார்கள்.

 

“நான் சாட்சி சொல்லுறேன். ஏன்னா நான்தான் அன்னைக்கு போலிஸ்க்குத் தகவல் தந்தேன்” என்றார்.

 

 

“அப்ப ஓரளவு என்னால நடக்க முடியும். சாயந்தரம் என்னோட வாக்கிங் ஸ்டிக் உதவியால கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வருவேன். இந்தப் பகுதிள்ள நரிகளோட நடமாட்டம் அதிகம் அதுனால சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவேன்.

 

படேல் இங்க பக்கத்துல இருந்தாலும் அந்த அளவு நல்லா பழகுறவர் கிடையாது. முறைக்  கேடா  சில  வேலைகள்  செஞ்சு  சம்பாதிக்கிறதா  அவரைப் பத்தி வதந்தி. அதுனால  நாங்களும்  அவங்க  குடும்பத்தோட நட்பு பாராட்டுறதில்ல .

 

அவர் வீட்டுக்குப் புதுசா அந்தப் பொம்பளையைக்  கூட்டிட்டு வந்தார். அவளும் அந்த அளவு நல்ல மாதிரி தெரியல. கொஞ்ச நாள் கழிச்சு அவ மாசமா இருக்கிறது தெரிஞ்சது. இருந்தாலும் பார்ட்டி கூத்துன்னு வீடு அமர்க்களப் படும்.

 

‘டவுன் சென்டர்’ல இருக்குற பாருக்கு அடிக்கடி போய்  நேரம் காலம் பாக்காம ஆடிட்டு வருவா அந்தப்  பொண்ணு. நடுவுல குழந்தையும் பொறந்தது. அது கூட அவளோட ஆட்டத்துக்கு தடை விதிக்க முடியல. ஒரு நாள் நான் ‘வாக்கிங்’ முடிஞ்சு மெல்ல நடந்து வந்துட்டு இருந்தேன். அப்பத்தான் அந்த மெல்லிசாய்  கேட்டது அந்தக்  குழந்தை அழுற குரல்”

 

பிறந்து சில நாட்களே ஆன குழந்தை படுத்திருக்க, சைலஜா வழக்கம் போல் சென்று விட்டிருந்தாள். குழந்தை வேறு பூஞ்சையாக இருந்தது. சில மாதங்கள் வேண்டுமானால் தாங்கும் என்று மருத்துவம் சொல்லவும் அதை கவனிக்கக் கூடப்  பிடிக்கவில்லை அவளுக்கு.

 

வீட்டின் சமையலறை ஜன்னல் திறந்திருந்தது. கூட்டமாக வந்த நரிகள் தனது இரையைக் கண்ட மகிழ்வுடன் திறந்திருந்த ஜன்னலில் ஒவ்வொன்றாகக் குதித்தன. தனியாக இருக்கும் போது துரத்தி விட்டால் ஓடிவிடும் அந்தக் குள்ள நரிகள் கூட்டமாக சேர்ந்து அவ்வப்போது தாக்குதல் நடத்துவது சகஜம்தான். பண்ணையில் புகுந்து குட்டி ஆடு கோழி ஆகியவற்றை தூக்கிச் சென்று விடும். இப்போது அவை ஊருக்கு வெளியே இருந்த அந்த குடியிருப்புப் பகுதியில்  புகுந்து விட்டது

குறைப் பிரசவத்தில் பிறந்த அந்த சிசு காப்பார் யாருமின்றி தீனமாக அழுதது. பற்களை நாவால் நக்கி ஈரப்படுத்திக் கொண்ட நரிகளுக்கு நல்ல உணவு கிடைத்த மகிழ்ச்சி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 6தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 6

சரயு காலையில் அலைப்பேசியின் அலறலில்தான் எழுந்தாள். தலை வரை போர்த்தியிருந்த போர்வையிலிருந்து கையை மட்டும் நீட்டி பெட்சைடு டேபிளிலிருந்த மொபைலை தேடி எடுத்து, பின் போர்வைக்குள் இழுத்துக்கொண்டாள். ‘இந்த ராம் காலைல எழுப்பி விட்டுடுரான்பா. போன ஜென்மத்துல கடிகாரமா பொறந்திருப்பான் போலிருக்கு’

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 8தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 8

இரவு படுத்திருந்த பாயிலிருந்து உருண்டு அறையின் சுவரோரமாய் சுருண்டு தூங்கிக் கொண்டிருந்த சரயுவை ரசித்தார் சிவகாமி. ‘நம்ம பக்கத்துல யாரும் இம்புட்டு அழகில்ல. பொங்கலுக்குப் பறிச்ச பச்ச மஞ்சளாட்டம் ஒரு நெறம். சின்னதா மல்லிகப்பூ மொக்காட்டம் மூக்கு. வசதியிருந்தா இந்த மூக்குக்கு

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7

மறக்காமல் பன்னிரண்டு மணிக்கு ஜிஷ்ணுவை அழைத்தாள் சரயு. “சொல்லு ஜிஷ்ணு” “இன்னைக்கு நீ சொன்ன இடத்துல சைட் சீயிங் டூர் ஒண்ணு ஏற்பாடு செஞ்சுருக்கேன். மத்தபடி ஆட்டோமொபைல் சம்மந்தமான இடத்தைப் பாக்க நீயும் வந்தா நல்லாயிருக்கும் சரயு. உன்னால முடியும்னா வரப்பாரேன்”