Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),என்னை கொண்டாட பிறந்தவளே என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 21

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 21

அத்தியாயம் – 21

னைவரிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு ஒருவழியாக விமானத்தில் ஏறினர் சித்தாரா அரவிந்த் மற்றும் ஸ்ராவணி.

தனக்கு மட்டும் தனியாக தள்ளி சீட்  இருக்க, முஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த சித்தாராவை சமாதானப் படுத்தினான்.

‘இந்தக் கல்யாணம் நடக்கும்ன்னு  நினைக்கல அதுதான் டிக்கெட் உனக்கு புக் பண்ணல’ என்ற உண்மையை சொல்லாமல் “கோச்சுக்காத சித்து. எனக்கும் வனிக்கும் மட்டும் தான் முதலில் டிக்கெட் புக் செஞ்சேன். ஊருல வந்து கடைசி நேரத்துல வாங்கினதால உனக்கு வேற இடத்துல சீட் கிடைச்சிருக்கு. நீ ஒரு தூக்கம் தூங்கி எந்திரி. அதுக்குள்ளே ஊரு வந்துடும்”

“அப்ப நீயே அங்க போய் தூங்கு. நானும் வனியும் இங்கதான் உட்காருவோம்” என்று சட்டமாக அங்கே அமர்ந்துவிட. சிரித்துக் கொண்டே சித்தாராவுக்கு ஒதுக்கி இருந்த சீட்டுக்குச் சென்றான். 

அவன் சென்று ஒன்றிரண்டு மணி நேரங்களில் சித்தாரவுக்கு அருகே அமர்ந்திருந்த பெண்மணி தானே வலிய சென்று அரவிந்திடம் தான் அந்த இடத்தில் அமர்ந்து கொள்வதாகவும் அவன் தன்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து கொள்ளலாம் என்றும் பெரிய மனது பண்ணி அனுமத்தித்தார்.

அவரை அப்படி அனுமதிக்க வைத்ததில் நம்ம சித்துவின் சாமர்த்தியம் அடங்கி இருந்தது என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. சர்க்கரை நோய் வந்த பின் கஷ்டப்பட்டு நாக்கை அடக்கி வைத்துக் கொண்டிருக்கும்  அந்தப் பெண்  முன் முறுக்கு, சீடை, பாம்பே மிக்சர் என்று நொறுக்கினால் பாவம் அவர் எவ்வளவுதான் தாங்குவார்.  முடிந்த அளவு அந்த இடத்தை விட்டுத் தள்ளிப் போனால் போதும் என்ற முடிவுக்கு மிக விரைவிலே வந்தார்.

“அரவிந்த் வந்துட்டியா? இந்தா முறுக்கு” என்றால் அன்பு ஒழுக

“சாப்பாடு தந்தாங்களே, நீ சாப்பிடலையா?”

“எனக்கு பிடிக்கவே இல்ல அரவிந்த். அதுனாலதான் கொஞ்சமா நொறுக்குத் தீனி சாப்பிடுறேன்”

 “கொஞ்சமா? ரெண்டு மூணு கிலோ காலி ஆயிருக்கும் போலிருக்கு. உனக்கு சாப்பாட்டுல ஒரு வெரைட்டி கூடவா பிடிக்கல?”

” என்னமோ பீடா மாதிரி சுருட்டி, ஒரே ஒரு வாய் மசால் தோசை வச்சிருந்தாங்களே அது மட்டும் பிடிச்சது. அப்பறம் இவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கோம் என் வேஸ்ட் பண்ணனும்னு பழம், யோகர்ட்டை எடுத்து உனக்கு வச்சிருக்கேன் இந்தா” என்று தந்தாள்.

“ரொம்ப சிக்கனம்தான்” என்று ஒரு ஸ்பூனில் எடுத்து யோகர்டை அருந்தியபடியே “நல்ல இருக்கு சித்து சாப்பிட்டு இருக்கலாம்ல”

“என்ன நல்லா இருக்கு? ஷேவிங் கிரீம் மாதிரி இருக்கு. இதை எல்லாம் எப்படித்தான் சாப்பிடுறாங்களோ?” என்று சொல்லி கணவனை அதிர வைத்தாள்.

அடுத்த கேள்வியாக “அரவிந்த் பெட்டி பத்திரமா வந்திடும்ல. நிறையா மிஸ் ஆகுமாமே?” என்றாள் கவலையாக.

” ஏன் உங்க வீட்டுல இருந்து இருவது கிலோ தங்கம் எடுத்துட்டு வர்றியா?” என்றான் ஹாஸ்யமாக.

தானா இப்படியெல்லாம் அவளிடம் வாயாடுவது என்று நம்பவே முடியவில்லை அவனால்.

“வாங்குனதெல்லாம் பத்தாது. அது வேற உனக்கு வேணுமா?” அசால்டாக பதில் வந்தது

“அப்படியா சித்து நிறையா வாங்கினேனா? யாரு வாங்கினா? எவ்வளவு வாங்கினா?என்னன்னு சொல்லி வாங்கினா? மறைக்காம சொல்லு பார்க்கலாம்” அவளது வார்த்தையைக் கொண்டே அவளை மடக்கினான்.

நாக்கைக் கடித்துக் கொண்டவள், “தெரியாம சொல்லிட்டேன் அரவிந்த் கோச்சுக்காத”

“இப்ப நீ சொல்லலைன்னாதான் கோச்சுப்பேன். நாதன் மாமா உங்க பாட்டி கிட்ட என்னவோ பேசினாருன்னு மட்டும் கேள்வி பட்டேன். ஆனா என்னன்னு முழு விவரமும் தெரியல. நீதான் சொல்லணும்” என்றான் கண்டிப்பாக

 “வந்து நகைக்கு பதிலா போலிஸ்  தந்த பணத்தையும் அப்பறம் சாந்தா வீட்டுக்காரர் ஹாஸ்பிடல் செலவுக்கு கொஞ்சமும் பணம் வாங்கினாரு அவ்வளவுதான்”.

பெருமூச்சு விட்டவன் ” சம்பவத்தோட கனத்தைக் குறைக்க முயற்சி பண்ணுற. நான் ஏற்கனவே சாந்தா வீட்டுக்காரருக்கு ஆன முழு செலவும் தந்துட்டேன். இது நாதன் மாமா பணம் வங்கப் பயன் படுத்திகிட்ட சாக்கு அவ்வளவுதான். எப்படியாவது உங்க பாட்டிக்கு அந்தப் பணத்தைத் திருப்பி தந்துடுறேன் சித்து” என்று சொன்னான்.

கணவனின்  கலக்கத்தைக்  கண்டு  வருந்திய  சித்தாரா ” அது எனக்கு கல்யாணம்  ஆனவுடனே  நல்லா புரிஞ்சுடுச்சு   அரவிந்த். நீ கவலைப்  படாதே. அந்தப் பணத்தை  நாதன் கிட்ட இருந்து திரும்பி  வாங்குற  வேலையை  நான் பார்த்துக்குறேன்” சமாதனப் படுத்தியவள் பின் கோவமாக

  “ஆமா  லூசா   நீ? அவர் பட்ட  கடனை  நீ என் அடைக்குற? அப்படித்தான்  நாதன் தங்கை  செல்வி  கல்யாணத்துக்குப் பணம் தந்தியாமே? வளைஞ்சு போறதுக்கு ஒரு அளவில்ல? உனக்கு என்ன பணம் மரத்துலையா காய்க்குது? ” என்று பெரிய மனுஷியாய்  கண்டித்தாள்.

அவளது திட்டின் பின்னிருந்த  அக்கறை அவன் மனதுக்கு இதம் தந்தது. ” ஆமா மேடம்,  நான் கொஞ்சம் வளைஞ்சு போறவன் தான். இந்த மாசத்துல இருந்து சம்பளத்தை அப்படியே உங்க கிட்ட தந்துடுறேன். இனிமே பணம் சம்மந்தப்பட்ட விஷயமெல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க” என்றான்.

“அரவிந்த் நீ பெரிய வேலைல இருக்குறன்னு  உங்க அம்மா எங்க காது டமாரம் ஆகுற அளவுக்கு சொல்லிட்டு இருப்பாங்க. நீ ஒரு நாள் லீவ் போட்டா உன் ஆபிசே திணறிடுமாமே! அப்படி என்னதான் வேலை செய்யுற?”

“ஆமா சித்து, நான் ஒரு நாள் லீவ் போட்டா அப்பறம் யார் அவங்களுக்கு டி, காபி டோஸ்ட் போட்டு தர்றது. திணறிட மாட்டாங்க?”


“அடப்பாவி கடைசில நீ ப்யூனா? என்னமோ வெளிநாட்டுல படிச்சதா சொன்னாங்க?” கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டாள்.


புன்னகைத்துக் கொண்டான் “முதல்ல இருந்தே அப்படித்தான். ஆமா நீ எதுக்கு சூட்கேஸ்  தொலையுறதைப் பத்திக் கவலைப்படுற? அப்படி ஏதாவது தொலஞ்சாலும் புதுசா வாங்கித்தரேன் “

“என்னோட சட்டை எல்லாம் அந்த பெட்டில தான் இருக்கு. அதான்” கொஞ்சம் கவனம் திரும்பியது அவளுக்கு.

“பெட்டி தொலைஞ்சதுன்னா  உனக்கு என்னோட சட்டையைத் தந்துடுறேன் போதுமா?”


“உன் சட்டையா? எனக்கு நைட்டி போட்டு பழக்கமில்ல அரவிந்த்”

பக்கத்தில் இருப்பவர்கள் திரும்பிப் பார்க்க, சத்தம் போட்டு சிரித்தான் அரவிந்த்.


இப்படி சிரிப்பும் பேச்சுமாய் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.


அதன் பின் வந்த நான்கைந்து  மாதங்களும் எப்படி போயின என்றே அரவிந்துக்குத் தெரியவில்லை. தினமும் சித்தாரா வானவில்லாய் நிறம் காட்டினாள். அவள் தான் உலகம், அவள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளே மந்திரம் என்றானது தந்தைக்கும் மகளுக்கும்.


புதிதாய் ஒரு களி கிண்டி “வனி உனக்காக அல்வா செஞ்சுருக்கேன் பாரு” என்பாள்

“அம்மா இனிமே அல்வா வேண்டாம். நல்லாவே இல்ல” என்று அவள் கெஞ்சுவாள் ஸ்ராவணி.


மகள் சொன்னதுக்குக் கவலைப் படாமல் “பட்டு இன்னைக்குத்தான் பிடிக்கலன்னு சொல்லுது. இல்லைன்னா எது வச்சாலும் சாப்பிடுவ. நீ இப்படி சொன்னது எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா?” என்று கொண்டாடுவாள்

பரிமாறிவிட்டு “சாப்பாடு எப்படி அரவிந்த்” என்பாள் ஆவலுடன்.

“உருளைக் கிழங்கு வறுவல் பிரமாதம்’ என்று கஷ்டப்பட்டு பொய் சொல்வான் அரவிந்த். உடனே அவனை முறைத்து விட்டு செல்வாள்.

“அப்பா, அம்மா கஷ்டப்பட்டு கடைல சொல்லி  வச்சு வாழைக்காய் வாங்கி வறுவல் செஞ்சாங்க” என்று வனி அவன் காதைக் கடிப்பாள்

‘கடவுளே! இந்த கடைல எழுதி வைக்குற மாதிரி இவ சமைக்குறதுலையும் ஒரு டேக் ஒன்னு ஒட்டிட்டா வசதியா இருக்கும்’ என்று மனதில் நினைத்தபடியே அவளை சமாதனப் படுத்த ஓடுவான்.
“நான் சாப்பிடுறப்பையே நெனச்சேன்மா, வாழைக்காய் மாதிரி இருக்கேன்னு . ஆனா இங்க கிடைக்குறது கஷ்டமாச்சே அதுனாலதான் உருளைக்கிழங்குன்னு சொன்னேன். வாழைக்காய் ரொம்ப பிரமாதம். அதுக்கு பரிசா   உன்னை இன்னைக்கு ரிலீஸ் ஆனா  விஜய் படம்  கூட்டிட்டு போகப் போறேன்”

“அரவிந்த் நான் தல ரசிகை” முறைத்தாள்

“அப்ப உன் வீட்டுல மாட்டியிருந்த பெரிய விஜய் படமெல்லாம்” புரியால் கேட்டான்
“அது எங்க பாட்டி செஞ்ச வேலை. அவங்க எங்க ஏரியா விஜய் மகளிர் ரசிகை மன்றத்துல தலைவி. ஏதாவது பெட் கட்டி  அவங்க கிட்ட நான் தோத்துட்டா  தளபதி படத்தை ஒரு மாசம் வீட்டுல ஒட்டி வச்சுக்குவாங்க. அவங்க தோத்துட்ட நான் தல படத்தை ஒட்டிக்குவேன். எப்படி எங்க ஒப்பந்தம்?”
“ரொம்ப நல்ல ஒப்பந்தம். உங்க காலனில உங்க குடும்பம் மட்டும்தான் இப்படியா? இல்ல காலனியே இப்படித்தானா ?”

“நபீசண்ணன் ரஜினி ரசிகன், சிவா கமல் ரசிகன், அருண் சூர்யா ரசிகன்……” அடுக்கிக் கொண்டே போனாள். “அதுனால என்ன புதுப் படம் ரிலீஸ் ஆனாலும் எங்க காலனில எல்லாருக்கும் முதல் நாள் டிக்கெட் கிடைச்சுடும்”

மனைவியின் சிப்பி வாய் அசைய, பம்பரக் கண் சுழல அவள் பேசுவதை ரசித்தபடி அமைந்திருப்பான். அவள் மனது தன்னிடம் முழுமையாக நெருங்கிவிட்டதை அரவிந்த் உணரும் சந்தர்ப்பமும் விரைவில் வந்தது.

பக்கத்து பிளாட்டில் இருந்த தமிழ் குடும்பம் ஒன்றுடன் விரைவில் நட்பினை ஏற்படுத்திக் கொண்டாள் சித்தாரா. அவர்கள் வீட்டிற்கு வர, இவர்கள் அவர்கள் வீட்டுக்கு போக, அவர்களது குழந்தைகள் ஸ்ராவநியுடன் விளையாட என்று கலகலப்பாக இருந்தது.

அரவிந்துக்கு ஒரே ஆச்சிரியம் இவ்வளவு நாளாக இந்த வீட்டில் குடி இருக்கிறான் பக்கத்து வீட்டில் ஒரு தமிழ் குடும்பம் இருப்பதே அவனுக்குத் தெரியாது. இப்போது தெருவில் இருக்கும் நிறைய குடும்பத்து விஷயமும் அவனுக்குத் தெரிந்திருந்தது. இதற்குத்தான் ஒரு பெண் வேண்டும்  என்பது போல. ஏற்கனவே ஸ்ராவனிக்கு பக்கத்தில் இருந்த அரசாங்கப் பள்ளியில் பதிவு செய்து வைத்திருந்தவள் அங்கேயே தனக்கும் ஒரு வேலை தேடிக்கொண்டாள்.

“பாரு அரவிந்த் இனிமே வனிக்கு ஸ்கூல் பீஸ், நானி பீஸ் இதெல்லாம் கிடையாது. எனக்கும் வனிக்கும் லீவ் ஒரே சமயம் தான் வருது. அதுனால அந்தப் பணத்தை எடுத்துக் கடனை அடைச்சுடலாம்” என்று வழி சொல்லித்தந்தாள்.

ஒரு நாள் வீடிற்கு வரும்போதே பயங்கர கோவமாக இருந்தாள் சித்தாரா. “யாரது ஜாக்கி?”

“ஜாக்கியா அவளைப் பார்த்தியா?”

“ஆமா,  தோடுன்னு பேருல காதுல ரெண்டு சிடிய மாட்டிட்டு அரை டசன் பிள்ளைங்களைக் கூட்டிட்டு ஸ்கூல் வந்திருந்தா. என்கிட்ட வந்து நான் வனிக்கு அம்மா மாதிரி. எப்படின்னு அர்விந்த் கிட்ட கேட்டுக்கோன்னு சொன்னா. இப்ப சொல்லு யாரு அவ?” முகம் சிவக்க கேள்வி கேட்டாள்.

அவளது கோவம் சிரிப்பை வரவழைக்க “சாந்தம்  சாந்தம்  மை டியர். வனி எட்டு மாசத்துல பிறந்துட்டா. குறைப் பிரசவம். தாய் பால் தர வழியில்ல. பவுடர் பால் வனிக்கு ஒத்துக்கல. அப்பத்தான் ஜாக்கிக்கும் குழந்தை பிறந்திருந்தது.ஜாக்கி தான் வனிய கவனிச்சுகிட்டா. இப்ப சொல்லு அவளும் ஒருவிதத்துல வனிக்கு அம்மாதானே?”

“சாரி அரவிந்த். உன்னைத் தப்பா நெனச்சுட்டேன்” குற்ற உணர்ச்சியுடன் தலை குனிந்தாள்.

” மன்னிப்பு இப்படிக் கேட்டா எனக்கு பிடிக்காது சித்து” அவளது தேனுறும் இதழ்களைப் பார்த்துக் கொண்டே ஒரு மாதிரியான குரலில் சொல்ல, சித்தாராவின் கண்கள் படபடக்க ஆரம்பித்தன

படபடவென துடிக்கும் இந்தப் பட்டாம் பூச்சிக் கண்களில் விழுந்து தொலைந்து போகமாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது அரவிந்துக்கு. ‘ச்சே இவளை நெருங்கவும் முடியவில்லை, விலகவும் முடியவில்லை ரொம்ப கொடுமைடா சாமி’ என்று அலுத்துக் கொண்டான்.

“சித்து உனக்கு ஏன் ஜாக்கி என்னைப் பத்தி சொன்னதும் கோவம் வருது. உன் ஒரு மில்லி கிராம் மூளையைக் கசக்கிக் கொஞ்சம் யோசிச்சு பாக்குறியா?” அவளது கன்னங்களை தனது கைகளால் பற்றி, அவளது கண்களைப் பார்த்தபடி சொன்னான். பின் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.

கணவன் சென்ற திசையைப் பார்த்தபடியே சிலையாய் நின்றாள் சித்தாரா.

இவன்தான் என் கனவோடு வருபவனோ?

என்  மனதோடு வாழ்பவனோ?

தேய்கின்ற நிலவுகளைத் தேன் நிலவாக்கப் பிறந்தவனோ?

என் கூந்தல் காட்டில் தொலைந்திடுவானோ?

எனைக் கூறு போட வருபவனோ?

இந்த சிறுக்கி மனசை பிடித்திடுவனோ? 

 பிடிச்சிட்டான் போல இருக்கே சித்து. இந்தப் பட்டாம்பூச்சிப் பெண் மனதை, தொடாமலே கை படாமலே வென்றுவிட்டான் போலிருக்கே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 25உள்ளம் குழையுதடி கிளியே – 25

நக்ஷத்திரா நடந்து கொண்ட விதம் சரத்தைக் கொதிப்படைய செய்திருந்தது. “ராஜி… என்ன தைரியம் உனக்கு… என் கண்ணு முன்னாடியே ஹிமாவை அவமானப் படுத்தற” சரத் கோவமாய் கர்ஜிக்க… தெனாவெட்டாய் நின்றாள் நக்ஷத்திரா… “இந்த ஹிமா உங்க வாழ்க்கைல வந்ததே என்னாலதான் மறந்துடாதிங்க…”

உள்ளம் குழையுதடி கிளியே – 20உள்ளம் குழையுதடி கிளியே – 20

அத்தியாயம் – 20 மனதில் பூட்டி வைத்ததைப் பகிர்ந்து கொண்டதில் மனமே சற்று லேசானதைப் போலத் தோன்றியது சரத்துக்கு. “இப்ப காதல் டாபிக்குக்கு வருவோமா…” என்று ஹிமா கேட்டதும் ஒரு வினாடி திகைத்து விழித்தவன். மறுபடியும் குறும்புடன் “நீ மனைவியா நடிக்க

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 7என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 7

அரவிந்தின் வாழ்க்கை முறை சற்று மாறியது. தன்னுடன் படிக்க ஒரு நல்ல துணை  கிடைத்தது பாபுவுக்கு மிகவும் திருப்தி. பாபு அலுவலகம் செல்ல அரவிந்தின் அலுவலகத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். அதனால் தினமும் காலையில் அரவிந்தை அலுவலகத்தில் விட்டுவிட்டு, மாலை