Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 18

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 18

அத்தியாயம் – 18

சுதாவை சமாதானப்படுத்தி விட்டு ஸ்ராவநியையும் சித்தாராவையும் பார்க்க சென்றான் அரவிந்த். 

இதற்குள் ஆதியின் அழுகை மறைந்திருக்க, “மாமா மாடிக்கா போறிங்க. நானும் விளையாட வரேன். ஆனா  அத்தை அடிக்காம நீங்கதான் பாத்துக்கணும்” என்று சொல்லியபடி ஓடிவந்தான். 

சுதா அரவிந்தை ஒரு அர்த்தத்தோடு பார்த்தாள். குழந்தைகள் இது தப்பு குற்றம் என்றே தெரியாமல் செய்கிறவர்கள். அவர்களைத் திருத்தப் பார்க்கவேண்டும். தண்டனையை உடனடியாகத் தரக்கூடாது என்று சொல்லுவது போல் இருந்தது.

சித்தாரா இன்று கொஞ்சம் கடுமையாகவே நடந்துக் கொண்டாள். அவளிடம் இதனை சொல்லவேண்டும் அதற்கு இவன் ஒரு கால் மணி கழித்து வந்தால் நன்றாக இருக்கும்  என்று எண்ணிக்  கொண்டு 

“ஆதி நீ போய் உன் பிரெண்ட்ஸயும்  கூட்டிட்டு வா” என்றான்.

ராஜம் பாட்டி சித்தாராவிடம் புத்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

“ சித்து நீ இன்னும் சின்ன பிள்ளை மாதிரியே நடந்துக்குற. சுதா குழந்தையை அடிக்க நீ யாருடி? பெத்த பிள்ளையைக் கண்முன்னாடி அடிச்சா எந்த பொண்ணும் பார்த்துட்டு கையைக் கட்டிட்டு இருக்க மாட்டா. உன் மேடம் எதுனால உன்னை பரிச்சை எழுத விடலன்னு நினைவு படுத்தி பாரு. அவங்க பையன் எக்கேடு கேட்டு போனா உனக்கென்ன. அவன் பல்லை உடைச்ச. அந்தம்மா உன் காலேஜ்ல வேலை  பாக்குற தகுதிய வச்சு உன்னை பரிச்ச எழுத விடாம செஞ்சுட்டா ”

“சும்மா கத்தாத பாட்டி. அந்தப் பையன் பன்னண்டாவது படிக்குறப்ப, பாட்டு பாடி பத்தாவது படிக்குற பொண்ணு கையப் பிடிச்சு இழுத்திருக்கான். அதான் இழுத்த கையை முறிச்சு, பல்லத் தட்டிக் கைல கொடுத்தேன். இப்ப நல்லா படிக்குறானாம். இன்னைக்கு கடைல பார்த்தப்ப அந்தம்மா சொன்னாங்க ”

“அந்தம்மா பாவம்டி வீட்டு வேலை, ஆபிஸ் வேலை பார்த்துட்டு பிள்ளைய கவனிக்க முடியல. சுதாவும் அப்படித்தான். அவ புருஷன சமாளிக்கிறதே அவளுக்கு பெரிய வேலை”

“பாட்டி நீ தானே பாடுவ பிள்ளையப் பெத்து விட்டா போதுமா, பேணி வளர்க வேணும் தெரியுமான்னு. இந்த அம்மாக்கள் வீட்டுக்காரரையும் மாமனார் மாமியார் மனம் கோணாம நடந்துக்குறதுலயும்  காட்டுற கவனத்தை குழந்தைகளைக் கண்கானிப்பதுல காட்டினா நல்லது. நீ சொன்ன ரெண்டு அம்மாக்களும் இனிமே தங்களோட பிள்ளைங்களோட மதிப்பெண்ணுல மட்டுமில்ல  நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துவாங்க. என்ன, நான்தான் வில்லியா நிப்பேன் பரவாயில்ல” 

அழகும் திருத்தமாக முகமும், பார்த்தாலே துளி கூட சதைப் பிடிப்பின்றி இருந்த ஸ்ராவனியும் சித்தாராவின் காலைக் கட்டிக் கொண்டாள். 

“அந்தப் பாட்டு என்ன பாட்டும்மா  பாடேன்”

திகைத்து போனாள் சித்தாரா “வனி என்னை என்னன்னு  கூப்பிட்ட?”

“நம்ம வீட்டுக்கு வரப்போறது உன் அம்மான்னு அப்பா சொன்னாங்க. சித்தி தானே சூடு போடுவாங்க. எங்கம்மா நல்லவங்க. என்னை அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பா மாதிரியே எனக்கு சாப்பாடு ஊட்டி விடுற, தலை சீவி விடுற, கொஞ்சுற,  அப்ப நீதான என் அம்மா?” சித்து இல்லை என்று சொல்லிவிடக் கூடாதே என்ற ஏக்கத்தோடு அவளது கண்களைப் பார்த்தாள் ஸ்ராவணி. 

அந்தச் சின்ன முகமும், தேன் சிந்தும் மழலையின் கேள்வியும் சித்தாராவின் இதயத்தை உருக்கின.

“ஆமா தங்கம் நான் தான் உன் அம்மா” கலங்கிய கண்களுடன் வனியைக் கட்டிக் கொண்டாள்  சித்தாரா.

“ம்ம் பாட்டு’ என்று காரியத்திலே கண்ணாகக் கேட்டாள் ஸ்ராவணி.

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா?

சிலுக்கு சட்டை சீனா பொம்மை  பலூன் வேணுமா?

கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா? அப்போ 

கலகலன்னு சிரிச்சுகிட்டு என்னப் பாரம்மா

என்று சொல்லி ஸ்ராவணியைக் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்தாள் சித்தாரா. 

அவளது பாட்டி அவளைப் பார்த்துப் பாடும் பாடியே சித்தாரா தான் பெறாமல் பெற்ற மகளுக்குப் பாடினாள். ராஜத்தின் உள்ளம்   கசிந்தது. சித்தாராவின் குரல் ஒன்றும் பிரமாதம்  இல்லை. இருந்தாலும் அந்தக் குரலில் இருந்த அன்பு அனைவரையும் கட்டிப் போட்டது. வாசலில் நின்ற அரவிந்தைப் பார்த்தவளது சிரித்த முகம் உடனே கடினமாக மாறியது.

“பாட்டி….  ஆதிய அடிச்சது பத்தி, என்னோட அரியர் பத்தி இப்படி சிலது  யாரு பேசினாலும் எனக்கு பிடிக்காது. ஒரு மாதிரி மெண்டல் பிளாக்ன்னு வைச்சுக்கோயேன். அதுனால இதைப்பத்தி பேசாதே ஒகேயா?” என்று கேட்க அரவிந்திற்கு சிரிப்பு வந்து விட்டது. அரவிந்த் சித்தாராவிடம் சொன்ன வார்த்தைகளையே அவள் திருப்பி அவனுக்கு சொன்னது தெரியாமல் 

“நானா மென்டல்…..” என்று பேத்தியிடம் செல்ல சண்டையிடத் துவங்கினார் ராஜம் பாட்டி.

மாலை ஸ்ராவனிக்கு சிறு திலகம் வைத்து, வாங்கி வந்த புதிய உடையை அணிவித்து அழகு பார்த்தாள் சித்தாரா. 

“பாருடா குட்டி எனக்கு போட்டியா இன்னொரு நிலா வந்திருக்கேன்னு எட்டி பார்க்குது பார்” என்று முழுமதியைக் காட்டினாள்.

“ஒரு நிலா இல்ல ரெண்டு நிலா இருக்கேன்னு பார்க்குதுடா” என்று சொல்லி சிரித்தான் அரவிந்த். முகத்தின் சிவப்பை புருவம் தீட்டுவது போல் திரும்பி மறைத்துக் கொண்டாள் சித்தாரா. 

ஸ்ராவணி அவளை வார்த்தைக்கு பத்து அம்மா போட்டு கூப்பிட்டாள். ஸ்ராவணியிடம் அமுதைப் பொழியும் இந்த நிலவு எப்போது என்னை பார்க்கப் போகிறது.  சித்தாராவின் இதய வாசல் எனக்கு எப்போது திறக்கப் போகிறது. பெருமூச்சு விட்டான் அரவிந்த் . சீக்கிரம் திறக்காவிட்டால் கள்ளச் சாவி தயார் செய்ய வேண்டியதுதான் முடிவே செய்து விட்டான்.

கீழே அனைவரும் பரபரப்பாக இயங்க, மாப்பிள்ளை வீட்டினர் இறங்கினர். பையனைத் தவிர அனைவரும் வந்திருந்தனர். அனைவரையும் வரவேற்று அமர வைத்தனர். மாப்பிள்ளை அவசரமாக வேலை வந்து விட்டதால் ஊருக்கு சென்றிருக்கிறார் என்ற தகவலை சொன்னார் நாதன். 

“அவன் கால்ல சக்கரம் கட்டிட்டு அலைவான். கஷ்டப்பட்டு இங்க கூட்டிட்டு வந்தேன். ஆனா பாருங்க,அதுக்குள்ள வேலை வந்துடுச்சு” என்று சொல்லி விட்டு கேனத்தனமாக சிரித்தார் நாதன். 

ஏதோ தப்பாக நடப்பதைப் போல சித்தாராவுக்குத் தோன்றியது. அதற்கு மேலும் பலம் சேர்ப்பது போல அவர்கள் நடந்தனர். 

“பொண்ணுக்கு நாங்க நெனச்சத விட நிலைமை மோசம்  போல இருக்கே. குணநாதன் தம்பி லேசா விந்தி விந்தி தான் நடக்கும்னு சொன்னுச்சு. ஏம்மா உன் வேலைகளை நீ செஞ்சுக்குவியா? இல்ல யாராவது உதவி செய்யணுமா” 

சத்யாவிடம் அவர்கள் கேட்ட கேள்வியில், முகம் சிவந்தது சித்தாராவுக்கு  “ எல்லா வேலைகளையும் செய்வாங்க. அவங்க அரசாங்க வேலை பாக்குறாங்க” . 

சித்தாராவின் கோவத்தைக் கண்ட நாதனுக்கு உள்ளம்  மகிழ்ச்சியில் துள்ளியது. இந்தக் கல்யாணத்தை எப்படியாவது முடிவு செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை அது பலமாக்கியது.

அவளை பேசாமலிருக்குமாறு சைகை காட்டிய கதிர். “ஊருல ஆயிரம் பேர் ஆயிரம் விதமா சொல்லுவாங்க. நீங்கதான் நேர்லயே பாத்துட்டிங்களே. உங்க அபிப்பிராயம் என்ன?” நேராக விஷயத்துக்கு வந்தார்.

“எங்களுக்கு பொண்ண பிடிச்சிருக்கு இருந்தாலும்” என்று இழுத்தனர்.

“மேற்கொண்டு என்ன நினைக்கிறிங்கன்னு சொல்லுங்க” 

சுமித்ரா சட்டென தலையிட்டு அவர்களின் எதிர்பார்ப்பைக் கண்டறிய முயற்சித்தார். எப்படியாவது சத்யாவுக்கு கல்யாணம் என்று ஒன்று ஆனால் சரி என்ற ஆதங்கம் அதில் இருந்தது. 

“என்ன சொல்லுறது. பையன் மளிகை கடையை விரிவுபடுத்தனும்னு நினைக்கிறான். அதுக்கு ஒரு அஞ்சு லச்சம் கைல தந்துடுங்க…… “ என்று பட்டியலிட்டுக் கொண்டிருக்க…

“ஏன்னா சத்யாண்ணி செய்யாத தப்புக்கு இது அபராதமா? கல்யாணம்னாலே இந்த மாதிரி வியாபாரத்தைப் பார்த்து வெறுத்து போச்சு” என்று மெல்லிய குரலில் கதிரிடம் சித்தாரா  சொல்ல…

“ ஆட்டோகார அண்ணே, இத்தான்…. பொண்ணு வீடா……… சூப்பர்பூ ” என்று ஸ்டைல் பாண்டி வடிவேலு கணக்கா ஒரு பார்ட்டி ஆட்டோவில் இருந்து இறங்கியது. அவன் இறங்கி ஒரு நிமிடம் கழித்துத்தான் அவன் வேட்டி இறங்கியது. 

ஆட்டோ ஓட்டி வந்த பன்னீரிடம் ரகசியமாக கதிர் கண்ணடித்தார். பன்னீர் ஓர் ஓரமாக ஆட்டோவை நிறுத்தி விட்டு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். 

வாசலுக்கு அருகே இருந்த சித்தாராவைப் பார்த்த ஸ்டைல் பாண்டி  “இதான் பொண்ணா. எங்க ஊர்ல கரகாட்டக்காரி தனபாக்கியம் தான் லட்ச்சணம். நீ அவள விட அழகா இருக்க. 

எம்மா….. பொண்ணு  ரொம்ப சூப்பர்பூ….  நாளைக்கே கல்யாணம் வச்சுக்கலாம்.  இந்தா  குட்டி, மாமனுக்கு ஒரு கும்பாவுல நீராகாரம் கொண்டா.”  என்று கட்டளையிட, அரவிந்த் கோவமாக சித்தாராவை இழுத்துத்  தனக்குப் பின்னே நிறுத்திக் கொண்டான்.

‘காசை கொடுத்து பஸ் எத்திவிட்டேனே, இவன் எங்கே இங்க வந்தான்’, என்று பதறிய நாதன் வேகமாக வந்து அவனை இழுத்துப் போய் அருகில் அமர வைத்துக் கொண்டார். 

“அண்ணே நீ தான தாலிய மட்டும் கட்டிட்டு ஊருக்கு வந்துடு அப்பறம் மாசா மாசம் அவ சம்பளத் தேதி அன்னைக்கு அவ கிட்ட சம்பளம் வாங்க வந்தா போதும்னு சொன்ன… அதெல்லாம் வேண்டாம். கல்யாணம் பண்ணிட்டு கூட்டிட்டு போய்டலாம். பொண்ணு சீதேவியாட்டம் இருக்குண்ணே” ரெண்டும் கெட்டானாகப் பேசினான். அவன் மேல் இருந்து வந்த வாடை நேராக அவன் டாஸ்மாக்கில் இருந்து வருகிறான் என்று சொன்னது.

நாதனின் நோக்கத்தை அவனது உடன் பிறவா தம்பியே போட்டுடைத்தான். பெண் வீட்டுக்காரர்கள் கோவத்தில் கொந்தளிக்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சங்கடத்தில் நெளிந்தார்கள்.

நாதன் சரி செய்ய முயற்சித்தார் “ பையன்னா கல்யாணத்துக்கு முன்ன அப்படி இப்படி இருக்குறதுதான். அதெல்லாம் அவங்களுக்கும் தெரியும். கதிரும் கூட இவன மாதிரிதான்” என்று சொல்ல சந்கீதாவுக்குக் கோவம் வந்தது.

“இங்க பாருங்க இந்த குடிகாரப்  பொறம்போக்கு கூட என் வீட்டுக்காரரை ஒப்பிட்டு பேசாதிங்க. அப்பறம் எனக்கு கெட்ட கோவம் வரும்”

ஸ்டைல் பாண்டி “யாருடி பொறம்போக்கு? நீ பொறம்போக்கு, உன் புருசன் பொறம்போக்கு, உன் வீடு பொறம்போக்கு. 

நீ யாரு பொண்ணுக்கு அக்காக்காரியா? கல்யாணத்துக்கு முன்னாடியே உன் உறவை கட் பண்ணியாச்சு. நீ கல்யாணத்துக்கு வரக்  கூடாது, வந்தா உன் கால வெட்டுவேன். 

இது சோக்கு எல்லாமில்ல. நிஜமாவே நான் ரவுடி. நான் ஊர விட்டு இங்கன வந்ததும் ரெண்டு நாளா எங்க ஊர் போலீஸ்காரங்கல்லாம் வேலை இல்லேன்னு லோலோன்னு அலையுறாங்கலாம்” என்று சொல்லி தான் நாதனின் தம்பி என்பதை நிரூபித்தான். 

“எண்ணே ஆட்டோகாரன்னே பஸ்ல நான் பண்ணா சலம்பலப் பாத்து பயந்து போய் இறக்கி விட்டுட்டாங்க. இந்தண்ணேதான் என்ன இங்கன கூட்டிட்டு வந்துச்சு. என்னப் பத்தி கொஞ்சம் சொல்லுங்கண்ணே” என்றான் பன்னீரைப் பார்த்து.

நாதனுக்கு சகலமும் புரிந்து விட்டது. ‘இவன் வழக்கம் போல பஸ்சில் கலாட்டா பண்ண, வழியிலேயே இறக்கி விட்டிருக்கிறார்கள். அப்ப போய் இந்த ஆட்டோக்காரன் கண்ணுல பட்டிருக்கான். இந்தப் பன்னீர்  வேற இந்த ஊருல சண்டியர்னு மத்யானம் தான் கதிர் சொன்னான். பத்தாததுக்கு அவன் கைய உடச்சவன வேற காண்பிச்சான். நம்ம வாயத் திறக்கப் போக கைய கால உடச்சுட்டானா?’

முன்னே வந்த சுதா “நீ சத்யாவை வேலைக்குக் கூட்டிட்டுப் போற பன்னீர் தானே. நீ எப்படி இங்க வந்த. மாபிள்ளைக்கு சாராயம்  வாங்கிக் கொடுத்து கலாட்டா பண்ண முயற்சி பண்ணுறியா?”

பன்னீருக்கு கோவத்தால் கண்கள் சிவந்தது “நாக்கை அடக்கி பேசுங்க. ஏம்மா காலைல  இருந்து  சாயந்தரம் வரை சாராயக் கடையே கதின்னு இருப்பான் போலிருக்கு இவனை ஒரு மாப்பிள்ளன்னு நீயும் உன் வீட்டுக்காரரும்  சத்யாக்கு  பார்த்துட்டு, என் மேல பாயுறியே?”

“இங்க பாரு இது எங்க வீட்டு விஷயம் இதுல நீ தலையிடாதே. ஆமா தெரியாமத்தான் கேக்குறேன். உன் ஆட்டோல வர பொண்ணுங்களுக்கு பாத்துருக்குற மாப்பிள்ளைகளை எல்லாம் இப்படித்தான் வேவு பார்ப்பியா? இல்ல சத்யா மட்டும் ஸ்பெஷலா” 

பன்னீர் கோவமாக வாயைத் திறக்க, கதிர் முன்னே வந்தார் “ஆமா சுதா பன்னீர நான்தான் மாபிள்ளையப் பத்தி விசாரிக்க சொன்னேன். அவன்  எனக்குத் தம்பி போதுமா?”

“என்ன தம்பியா ? ஏதேது விட்டா சத்யாவை அவனுக்கே கல்யாணம் செஞ்சு கொடுத்துடுவ போலிருக்கே”

“ஆமா கொடுத்துடுவேன். இவன மாதிரி தங்கமான மாப்பிள்ளை கிடைக்கணுமே. அத்தை, பன்னீர் அம்மா அப்பா இல்லாதவர், சொந்தமா மூணு ஆட்டோ வச்சிருக்கார். ஒரு கெட்ட பழக்க வழக்கமும் இல்லாதவர். அரவிந்த் நீ சொல்லு சத்யாவை இவருக்குக் கல்யாணம் செய்து கொடுக்க உங்களுக்கு சம்மதமா?”

“அவங்களக் கேட்குறதுக்கு முன்னாடி நான் என் முடிவை சொல்லுறேன். என் வீட்டுக்காரர் கொண்டு வந்த மாப்பிள்ளையை மறுத்துட்டு நீங்க வேற மாப்பிள்ளை பார்குறதுல எனக்கு சம்மதமில்ல. இந்தக் கல்யாணம் நடந்தா. நானும் என் வீட்டுக்காரரும் வரமாட்டோம்” 

அரவிந்தும் சுமித்ராவும் திகைத்து நிற்க “கதிர் அண்ணா, என் கணவரும் மாமியாரும் கொஞ்சம் அதிர்ச்சியா இருக்காங்க. நான் அவங்களுக்கு பதிலா முடிவு சொல்லுறேன். எங்க வீட்டுக்கு மனப்பூர்வமான சம்மதம்” உறுதியாக சொன்னாள் சித்தாரா.

சத்யாவுக்கு இதில் சம்மதமா என்ற கேள்வியுடன் சுமித்ராவும் அரவிந்தும் சத்யாவைப் பார்க்க, சத்யாவின் விழிகளோ இமைக்கவும் மறந்து பன்னீரை நோக்கிக் கொண்டிருக்க, பன்னீரோ விழுங்கி விடுபவனைப் போல் சத்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

தட்டு மாற்ற வந்த கதிரிடம் அரவிந்தின் கைகள் தானாக நீண்டன. பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்ட சுதா நாதனுடன் வீட்டை விட்டுக் கிளம்பினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29

சரயு நெல்லையப்பனின் கட்டிலுக்குக் கீழேயிருந்த பெட்பானை எடுத்து வெளியே சென்றாள். தனது தகப்பனுக்கே தாயான தோழியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சேர்மக்கனி. தந்தை படுக்கையில் விழுந்ததிலிருந்து சரயுதான் எல்லா வேலையும். கையை சுட்டுக் காலை சுட்டு சமைக்கக் கற்றுக் கொண்டாள்.

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 8’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 8’

அத்தியாயம் – 8 ரஞ்சனின் தோழன் அபிராம்  வெளிநாட்டில் வேலை செய்கிறானாம். நந்தனாவைப் பார்க்கும் ஆவலில் வந்திருந்தான். வழக்கமாய் கல்லூரிக்கு அணிந்து வரும் மஞ்சள் வண்ண சுடியில் பதட்டமாக ரஞ்சனுக்காக அவன் வருவதாக சொன்ன இடத்தில் காத்திருந்தாள். ரஞ்சனைக் கண்டதும் நந்தனாவின்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29

அத்தியாயம் -29   கல்லாய் இறுகிய முகத்துடன் வீட்டிற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் சித்தாரா. அவளின் நிலை கண்டு சந்திரிகாவின் கண்களில் நீர். “சித்து மனசைத் தளர விடாதே. இந்த சைலஜாவப் பார்த்தாலே எனக்கு நல்ல அபிப்பிராயம் வரல. இவ்வளவு நேரம்