Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 16

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 16

அத்தியாயம் –16 

சித்தாரா ஸ்ராவணியை நன்றாக கவனித்துக் கொள்வது தனக்கு மகிழ்வளிப்பதாக கதிர் சொன்னார்.

“ஸ்ராவணியை அவள் ஏத்துக்க ஆரம்பிச்சுட்டான்னா உன்னையும் அவளுக்குப் பிடிக்க ஆரம்பிச்சாச்சுன்னு நினைக்கிறேன் அரவிந்த்”

“இல்ல மாமா அவசரப் படாதிங்க. சித்தாரா சின்ன வயசில தாயை இழந்தவ. அதனால அவளை மாதிரியே சின்ன வயசில தாயோட அரவணைப்பில்லாம இருக்குற வனியைப் பார்த்து ஒரு  இரக்கம். இதை வச்சு என்னை அவளுக்கு பிடிச்சுருக்குன்னோ இல்லை என்னை சித்தாரா ஏத்துக்க ஆரம்பிச்சிட்டான்னோ ஒரு முடிவுக்கு வர முடியாது மாமா” என்றவன் 

“ஏன் மாமா, எங்களோட கல்யாணதப்ப பண விஷயமா நாதன் மாமா ஏதாவது கலாட்டா பண்ணாரா? நேத்து நீங்க பேசினப்ப காதுல விழுந்தது”

சற்று தயங்கிய கதிர் “எனக்கு எதுவும் சரியா தெரியாது அரவிந்த். இந்த விஷயம்  சித்தாரா  உன்கிட்ட சொல்லலைன்னு தெரியுது. இதைப் பத்தி பேசி சித்தாரா உன்கிட்ட சண்டை போட்டு இருந்தா கூட நாங்க சந்தோஷப்பட்டிருப்போம்.”

சித்தாரா என்கிட்ட சண்டை போட்டா இவர் சந்தோஷப் பட்டிருப்பாரா? புரியாமல் விழித்தான் அரவிந்த். 

“ சித்தாரா உன்கிட்ட சண்டை போடுறதும், உன்னை  உரிமையோட கோபிச்சுக்குறதும்  உன்னை ஒரு மூணாவது மனுஷன் நிலைல இருந்து விலக்கி நெருக்கமா உணர ஆரம்பிச்சுட்டான்னு அர்த்தம் ” மச்சினனுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார் கதிர். 

பேசிக்கொண்டு இருக்கும் போதே கதிருக்கு ஒரு போன் வர மிகவும் சீரியசாக அதற்கு உம் கொட்ட ஆரம்பித்தார். 

“ஒரு நிமிஷம் இரு” என்று மறுமுனையில் இருக்கும் நபரிடம் அனுமதி வாங்கியவர் அரவிந்திடம் திரும்பி 

“அரவிந்த் எனக்கு ஒரு அவசரமான வேலை இருக்கு. நீ இதை எல்லாம் எடுத்துட்டு ஆட்டோல வீட்டுக்குப் போ. நான் பைக்கை  எடுத்துட்டு வந்துடுறேன்” என்று சொன்னார் 

அவரது முகத்தில் தெரிந்த தீவிரத்தைப் பார்த்தவன் “என்னோட உதவி ஏதாவது வேணுமா மாமா?” என்று கேட்டான்.

“கண்டிப்பா. நீ வீட்டுக்குப் போய் என் தங்கச்சியக் கூட்டிட்டு கடைக்கு போயிட்டு வந்துடு. ஊருக்குப் போக பொருட்களை எல்லாம் வாங்கணுமில்ல. அதை இன்னைக்கே முடிச்சிடு”

“மாமா..  சத்யாவப் பொண்ணு….” என்று தயங்கியவனிடம் 

“யாருடா நீ நிலமை தெரியாம. பொண்ணுதான பாக்க வராங்க. அதுவும் நாதனோட சொந்தக்காரங்கதான? நாங்க பாத்துக்குறோம் நீ போய் சித்தாராவக் கூட்டிட்டு டி.நகர் போயிட்டு வந்துடு”

“சரி மாமா” என்று சொல்லிவிட்டு ஆட்டோ  பிடித்து வீட்டுக்கு வந்தான். வீட்டில் ஆளாளுக்கு வேலையாக இருக்க, சுதா போன் பேசுவதில் கவனமாக இருக்க, சரி சித்தாராவைக் கிளம்ப சொல்லலாம் என்று ஆவலுடன் அவளைத் தேடியவனின் காதில் விழுந்தது  குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம். 

‘சரி. வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு தானே கொஞ்சும், இந்த சித்து அங்குதான் இருப்பாள்’ என்றெண்ணி சத்தம் கேட்ட இடத்துக்கு சென்றான். அவனது கூற்று பொய்க்கவில்லை. வானரம்  மற்ற  மந்திகளோடு சேர்ந்து தான் கிரிகெட் அம்பயராக ஆக்ட் கொடுத்துக்  கொண்டிருந்தது. சித்தாரவை அழைத்து விவரம் சொன்னான். 

சித்து “ஓகே அரவிந்த் எங்க போகணும்? என்ன வாங்கணும்? டிரஸ் யாராருக்கு எடுக்கணும்? எவ்வளவு பட்ஜெட்? இதெல்லாம் தெளிவா சொல்லு. பேப்பர்ல எழுதிட்டுக் கிளம்பலாம்” 

அவள் எதையும் குருட்டாம் போக்கில் செய்யாது திட்டமிட்டு வாழ்பவள் என்று அரவிந்திற்குப் புரிந்தது.  அதனை வாய் விட்டே சொல்லிவிட்டான் 

“ஆமா அரவிந்த் நானும் பாட்டியும் ரொம்ப யோசிச்சு தான் செலவு செய்வோம். கீழ் வீட்டு வாடகை பணத்த முழுசா என் கல்யாணத்துக்காக  பாட்டி பேங்க்ல போட்டுடுவாங்க”

அப்பறம் தினசரி செலவுக்கு என்ன செய்வாங்க என்று கேள்வியுடன்  பார்த்தான் அரவிந்த் .

“அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்னு தான பாக்குற. அங்க பரண்ல இருக்குற பெரிய பெரிய பாத்திரத்தை பாரு. நபீசண்ணன் அப்பா ஒரு பலகாரக் கடை ஏஜென்ட்டை அறிமுகப் படுத்தி வைச்சார். பாட்டி, நபீசண்ணன் அம்மா அப்பறம் இன்னும் ரெண்டு மூணு பேர் சேர்ந்து ரவாலாடு, முறுக்கு, போளி இந்த மாதிரி செஞ்சு கடைகளுக்கு பாக்கெட் போட்டுத் தருவாங்க. அப்பறம் காய்கறி கடைக்காரங்க கிட்ட காய் வாங்கி வெட்டி சாம்பார் காய், பொறியல் காய், ஆய்ஞ்ச கீரை எல்லாம் தனித்தனி பாக்கெட் போட்டுத் தருவாங்க. ஸ்டேஷன் கிட்ட இருக்குற கடைகள்ல போட்டுட்டா, சாயந்தரம் வேலைக்கு போயிட்டு வர பெண்கள் இதை வாங்கிட்டுப் போவாங்க. நான் வேலைக்குப் போனதும் இதை எல்லாம் நிறுத்த சொல்லிட்டேன். பாவம்ல எங்க பாட்டி, எவ்வளவு வேலைதான் செய்வாங்க”

அவளது கதையைக் கேட்டபடி திகைத்து அமர்ந்திருந்தான் அரவிந்த். ‘அடப்பாவிகளா இப்படி ரெண்டு பொண்ணுங்க வயத்தைக்கட்டி வாயக்கட்டி  இருவது வருஷம் உழைச்சு சேர்த்த பணத்தையா கொள்ளையடிச்சிட்டுப் போனாங்க. இவனுங்க எல்லாம் உருப்படவே மாட்டாங்க’ என்று திருடர்களைத் திட்டியபடி  

“ ஆமா சித்து ரொம்பப்  பாவம்தான் உங்க பாட்டி” என்றான். 

யாருடைய துணையையும் நம்பாமல் இருக்குற சொத்தைக் கட்டிக் காத்து, தனது சொந்த உழைப்பால் அன்னமிட்டு, படிக்க வைத்து ,  பேத்தியையும் நன்றாக வளர்த்திருக்கும் ராஜம் போல் சில மனிதர்களால் தான் மழை பெய்கிறது. இந்தத் தங்கமான பாட்டியின் வார்த்தையைத் தட்ட முடியாமல் தான் சித்தாரா தன்னை மணக்க சம்மதித்து இருக்கிறாள் என்று அரவிந்திற்கு உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெரிந்தது.

சித்தாரா சடுதியில் ஒரு சுடிதாரைப் போட்டுக் கொண்டு கிளம்பினாள். சுமித்ரா  தான் கண் இமைக்காமல் வநியைப் பார்த்துக் கொள்வதாகவும், வெயிலில் அந்தப் பச்சைக் குழந்தையை அலையவிடாமல்  அவர்கள் மட்டும்  சென்று வரலாம் என்றும் சொல்ல. இருவரும் ஒரு வழியாகக் கிளம்பினர். ஸ்ராவநியைப் பார்த்துக் கொள்ள ஆயிரம் முறை சொல்லிவிட்டு தனது மூத்த இரு அக்காக்களுக்கும் இன்னும் இரண்டாயிரம் முறை சொல்லிவிட்டுக் கிளம்பினான் அரவிந்த். அவர்கள் மூவரும் புன்னகை மாறாமல் கேட்டுக் கொள்ள, சித்தாராவுக்கே ஆத்திரம் வர ஆரம்பித்தது. 

“என்னங்க நீங்க, அவங்க எல்லாரும் பிள்ளையே பார்த்ததில்லையா? ஏன் இப்படி ஆயிரம் தடவை சொல்லுறிங்க?”

சட்டென திரும்பி கோவமாக சித்தாரவை முறைத்த அரவிந்த் “சித்தாரா இதுல நீ தலையிடாதே” என்று சொல்லிவிட அங்கே ஒரு கனத்த மௌனம் நிலவியது.

டி.நகர் போக ஆட்டோவில் ஏறினார்கள். பாரிஸ் வரும் வரை  பேசாமல் சித்தாரா வர, அரவிந்துக்கு அவளது அமைதி மிகவும் கவலை அளித்தது. ‘இவ ரெண்டு திட்டு திட்டினா கூட நல்லா இருக்கும் இந்த மௌனம் ரொம்ப வலிமையான ஆயுதம்’

இதற்கு மேல் பொறுக்காமல் மன்னிப்புக் கேட்டு விட்டான் “சித்து வெரி வெரி சாரிடா. நான் உன்னை  காயப் படுத்தனும்னு  சொல்லல. சில விஷயங்களைப் பத்தி என்னால  பேசவே முடியாது. ஒரு மெண்டல் பிளாக்ன்னு வச்சுக்கோயேன். என்னோட முதல் கல்யாணம், ஸ்ராவநியோட பாதுகாப்பு இப்படி சிலது. ஆனா ஸ்ராவணி விஷயத்துல மட்டும் நான் இப்படித்தான் ரொம்ப  சீக்கிரம் டென்ஷன் ஆயிடுவேன்”

“என் கிட்ட நீ ஒரு தடவை கூட இந்த மாதிரி சொன்னதில்லை அரவிந்த். உங்கம்மா என்ன நினைப்பாங்க நான் ஏதாவது சொல்லிட்டேன்னு நினைப்பாங்கல்ல” தனது கவலையைப் பகிர்ந்து கொண்டாள்.

“அப்படில்லாம் நினைக்க மாட்டாங்க. ஆனா நீ சொன்னது சரிதான். உன்கிட்ட ஒரு தடவை கூட அந்த மாதிரி சொன்னதில்லைல. அதுதான் ஏன்னு தெரியல சித்து. உன்கிட்ட வனி இருக்கும் போது எனக்குக் கொஞ்சம் கூட அவநம்பிக்கை இல்ல. நான் இந்த ரெண்டு வருஷமா  அப்படி இருந்தது  கிடையாது. 

ஸ்ரவனிய நல்லா பார்த்துக்குறதுக்காகவே என் சக்திக்கு மீறி ஒரு பெரிய கான்வென்ட்ல எக்கச்சக்கமா பீஸ் கட்டி படிக்க வச்சுகிட்டு இருக்கேன்.  வீட்டுல அவளைப் பார்த்துக்க ரீனாங்குற நானிய அஞ்சு  மாசம் தொடர்ந்து கண்காணிச்சு, திருப்தி ஆனப்பறம் தான், ரெண்டு மடங்கு பணம் தந்து ஏற்பாடு செஞ்சேன்.  என் பாதுகாப்புல ஸ்ராவணி இருக்குறப்ப கிடைக்குற நிம்மதிய நீ பாத்துகிறப்பவும் உணருறேன்”. அரவிந்த் நீளமாகப் பேசி முடித்தான். 

சித்தாரா அமைதியாக இருக்க, அவளது பட்டுக் கரங்களின் மேல் தனது கரங்களை வலிமையான கரங்களை வைத்து அழுத்தியவன். 

“நிஜம் தான் சித்து என்னை நம்பு ப்ளீஸ்”

அவனது கண்களைப் பார்த்தாள் சித்தாரா. அதில் உண்மை இருந்தது. அவள் உதடுகள் அவனைப் பார்த்து முணுமுணுத்தன “தாங்க்ஸ் அரவிந்த்”

“எதுக்கு உன்னைத் திட்டினதுக்கா?” குறும்புடன் கேட்டான் அரவிந்த்.

“என் மேல நீ வச்ச நம்பிக்கைக்கு”, அவன் தலையில் ஒரு கொட்டு வைத்து “இது மத்தவங்க முன்னாடி என்னைத் திட்டினதுக்கு. இனிமே திட்டுறதுன்னா நம்ம ரூம்ல திட்டு. சரி இப்ப வா ஷாப்பிங் வேலையைப் பார்க்கலாம்” இருவரும் பனகல்பார்க்கில் இறங்கினர். 

“சித்து நபீஸ் வீட்டுக்கும் சேர்த்து துணி எடுத்துடு. நாளைக்கு அவங்க வீட்டுல விருந்துக்கு போறப்ப தந்துடணும்” 

சரி என்று புன்னகைத்து சென்று முதலில் அவள் எடுத்தது ஸ்ராவனிக்கான உடைகளை. 

அரவிந்துக்கு மடை திறந்து பாய்ந்த வெள்ளம்  போல சிரிப்பு, மகிழ்ச்சி சித்தாரா தெரியாமல் சொல்கிற வார்த்தைகளே அவளது மனம் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்து இருப்பதை அவனுக்குத் தெள்ளெனக்  காட்டின. அவனது பேச்சை மறந்து உரிமையோடு தலையில் கொட்டியதற்கு,  நம்ம ரூம்ல திட்டு என்று சொன்னது. 

சித்தாரா எண்ணி எண்ணி துணி வாங்கிய பாங்கு அவன் மனதைத் தொட்டது. புடவை செக்ஷனில் பர்பிள் கலரில் சிம்பிள் ஜரிகை, குட்டி குட்டி தங்கநூல் வேலைப்பாடு  செய்த சேலை ஒன்றை சித்தாரவுக்குப் பரிசாகத்  தர அவளுக்குத்  தெரியாமல் வாங்கிக் கொண்டான். மனதிலே அந்த சேலையை அவளுக்குக் கட்டிப் பார்த்து விட்டு. “பொருத்தமாத்தான் இருக்கு இந்த ராங்கி ரங்கநாயகிக்கு” என்று தனது தேர்வுக்கு தானே ஒரு சபாஷ் போட்டுக் கொண்டான். இவகிட்ட எப்ப இதைக் கொடுக்குறது என்று எண்ணியபடி சித்தாராவை சைட் அடித்துக் கொண்டு இருந்தான். 

அவனது மனதிற்குத் தகுந்தாற்போல் பாட்டு ஒலிக்க. மெதுவாக அவனும் கூட சேர்ந்து  பாடிக் கொண்டிருந்தான். அவனை அடிக்கடி அடிக்கடி திரும்பிப் பார்த்து முறைத்தபடியே வீட்டினர் அனைவருக்கும் துணிமணிகளை வாங்கினாள் சித்தாரா. இவ ஏன் முறைக்குறா என்று நினைத்தவனுக்கு அதற்கு தான் பாடிய பாட்டே காரணம் என்று தெரியவில்லை. ஏனென்றால் அவன் முணுமுணுத்துக்  கொண்டிருந்த பாட்டு 

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் நிகரில்லை 

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை, ஆனால் அது ஒன்றும் குறையில்லை 

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை ,அவளைப் படித்தே முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை, இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை

அவள் திட்டும்போதும்  வலிக்கவில்லை , அந்த அக்கறை போலே வேறு இல்லை

ஏதெது இன்னைக்கு அரவிந்துக்கு மண்டகப் படி உண்டு போல இருக்கே. 

அரவிந்திற்கு சைலஜாவின் நினைவு வந்தது. அவளுக்கு சித்தாரா  மாதிரி கணக்கு போட்டு செலவு செய்வது என்பது அறவே பிடிக்காத மட்டுமல்ல வராத விஷயமும் கூட. 

ஒருநாள் புது மழைக் கோட்டு ஒன்றை வாங்கி வந்த சைலஜா  அசைன்மென்ட் செய்து கொண்டிருந்த அரவிந்தின் முன் அதைப் போட்டுக் கொண்டு வந்து இப்படியும் அப்படியும் நடை பயின்றாள். 

அரவிந்த் லண்டனில் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து இருந்தான். கல்லூரி முடிந்தவுடன் மாலை பகுதி நேர வேலைக்கு செல்வான். ஒரு பெரிய வீட்டில் ஒரு அறை மட்டும் வாடகைக்கு எடுத்துத் தங்கி இருந்தனர். அந்த வீட்டில் இருபவர்களுக்கு ஒரே சமையலறை தான். நரேம் பார்த்து பகிர்ந்து சமைத்து கொள்வார்கள். அரவிந்த் வீட்டிற்கு வந்ததும் அவன் படிக்க வேண்டும். பாடங்கள் கடுமையாகவே இருந்தது. ஏனோ தானோ என்று பேருக்காக இங்கு வேலை  செய்ய முடியாது. அவன் சப்மிட் செய்யும் ஒவ்வொரு பேப்பரையும் வரிக்கு வரி படித்துப் பார்த்து திருத்தும் பேராசிரியர்கள் அவனுக்கு வியப்பளித்தனர். தூங்கும் நேரம் ஒரு நாளுக்கு ஐந்து மணி நேரமாகக் குறைந்தது. சைலஜாவுக்கும் சேர்த்து அவனுக்கு சம்பாதிக்க வேண்டி இருந்தது. இப்போதைக்கு மணவாழ்வு கிடையாது என்று இருவரும் முடிவு செய்ததால் வேறு ஒரு பிரச்சனையும் இல்லை. 

“இப்ப எதுக்கு ஷைலு புது கோட். ஏற்கனவே உன்கிட்ட மூணு இருக்கே”

“ஒண்ணு ஸ்நோபால் சமயத்துல போட, ஒண்ணு லைட் குளிருக்குப் போட, ஒண்ணு கொஞ்சம் காத்து ஜாஸ்தி அடிச்சா, இது மழைக்கு போட”

சிரித்தவன் “என்ன ஷைலு உன்னோட ப்ளாக் கோட் மழைக்கும் தாங்குமே”

அவனிடம் மன்னிப்பு கேட்கும் தோரணையில் “இந்த நிறத்துல என் கிட்ட இல்ல அரவிந்த். அதுவும் கீழ் வீட்டுல இருக்குற வெண்ணிலா கூட கடைக்குப் போனேன். அவ நான் எதுவும் வாங்கலைன்னு கேவலமா பார்த்தா அதுனாலதான் வாங்கினேன்.”

அவளது முகத்தைப் பார்த்தவன், கண்டிப்பாக “நமக்கு என்ன வேணுமோ அதைத்தான் வாங்கணும். மத்தவங்களுக்காக வாங்குறது முட்டாள்த்தனம். நீ முட்டாள் இல்லைன்னு நம்புறேன்”

“என்ன அரவிந்த் ஒரு ஐம்பது பவுண்ட் விஷயம். அதுக்கு ஆசைப் பட்டது தப்பா?” 

“தப்புத்தான் சைலஜா. இது முதல் தடவை இல்ல. நீ நிறைய முறை இப்படி செய்திருக்க. ஆசைப்படுறதை எல்லாம் வாங்குற வசதி நமக்கு இன்னமும் இல்லை. 

வெண்ணிலா ஏற்கனவே வசதியான பொண்ணு. அவளும் வேலைக்குப் போறா. அதுனால வாங்குறா. அந்த ஐம்பது பவுண்ட் எனக்கு ஒரு நாள் சம்பளம். என் வருமானம் நம்ம ரெண்டு பேர் வாழ்க்கை நடத்துறதுக்கே பத்தல. 

அம்மாவுக்கு பணம் அனுப்பி நாலு மாசம் ஆச்சு.வீட்டுல செலவுக்கு என்ன செயுறாங்கன்னு தெரியல.  ஊருல பாங்குல  இருந்த  பணத்தை வேற  எடுத்து இருக்கேன். 

கதிர் மாமா உன்னை இங்க கூட்டிட்டு வரதுக்கு ஏகப்பட்ட செலவு செஞ்சிருக்கார். அதைத் திருப்பித் தரணும். உன்னை பொறுப்பான பொண்ணுன்னு நெனச்சேன். ஹோசூர்ல உன்னைப் பார்த்ததுக்கும் இங்க பாகுரதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு சைலஜா” கவலையோடு பேசிக் கொண்டே சென்றான். 

அவன் பேசப் பேச சைலஜா அந்த அறையின் திரைச்சிலைகளை இழுத்து விட்டு இருட்டாக்கிக் கொண்டே வந்தாள். 

“அரவிந்த், அரவிந்த் எப்ப பார்த்தாலும் புலம்புறதை விட்டுட்டு என்னைப் பாரேன். உன் வய்ப் எவ்வளவு அழகுன்னு பாரேன். இந்த ரோசி லிப்ஸ் க்யூட்  சீக்ஸ் எல்லாம் உனக்கு பிடிக்கலையா? எப்படி புதுசா கல்யாணம் ஆன, அதுவும் அழகான  மனைவிய விட்டுட்டு படிப்பு வேலைன்னு உன்னால சுத்த முடியுது? ”

அவளது கிசுகிசுப்பான குரல் அவனை என்னவோ செய்ய, நிமிர்ந்து பார்த்தவன் அப்படியே உறைந்து போனான். 

அந்தக் கோட்டைக் கழட்டி இருந்தாள். உடலோடு ஒட்டிக்  கொண்டு அவள் நிறத்திலே இருந்த அந்த சீத்ரூ  உடை அவன் உணர்வுகளைத் தூண்டி விட்டது. கையில் இருந்த கேக்கை அவன் முன்னே வைத்தவள் 

“ஹாப்பி ட்வென்டி பிப்த் பெர்த்டே அரவிந்த். இந்த பெர்த்டேக்கு உனக்கு கிப்ட் இந்த சைலஜாதான்” அவன் காதருகே சொன்னாள். கேக்கில் இருந்த மெழுகுவர்த்தியை அணைத்தான் அரவிந்த். அவனை அணைத்தாள் சைலஜா. 

சைலஜாவின் அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம்  பதமாய்த் தோன்ற, 

தன்னை மறந்து, மண்ணில் விழுந்து,  இளமை மலரின் மீது கண்ணை இழந்த வண்டானான்.  

அந்த அழகான தருணமே ஸ்ராவணி உதிக்கக் காரணமாய் ஆனது.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 55தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 55

காலை புத்தம் புதிதாக அவளுக்காகவே விடிந்ததைப் போல் சரயுவுக்குத் தோன்றியது. தூக்கத்தில் ரங்கராட்டினம் சுற்றுபவளை தனது பரந்த தோள்களுக்கிடையே அடக்கி தப்பித்து விடாமல் கைகளால் சிறை செய்திருந்தான் அவள் அன்புக் கணவன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தாள். சிறு

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 23என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 23

அத்தியாயம் – 23 ‘எங்கே போனாய் என் கவிதைப் பெண்ணே’ என்று அரவிந்தின் மனது துடித்துக் கொண்டிருந்தது. ‘சித்து உன்னை குள்ளக் கத்திரிக்காய்ன்னு கிண்டல் பண்ண மாட்டேன். எவ்வளவு மோசமா சமைச்சாலும் முழுங்கிடுறேன். ஆனா நீ மட்டும் சீக்கிரம் கண்ணுல பட்டுடு’