Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 15

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 15

அத்தியாயம் –15 

த்யா ஆட்டோவை செலுத்திக் கொண்டிருக்கும் பன்னீரை ஓரக் கண்ணால் பார்த்தபடியே பயணம் செய்து கொண்டிருந்தாள். அவள் சென்னையில்  வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்களும் பன்னீரின் ஆட்டோவில் தான் காலையிலும் மாலையிலும் சென்று வருகிறாள். பன்னீருக்கு யாரும் இல்லை. எங்கோ பிறந்து, வளர்ந்து  அந்தப் பகுதியில் அடியாளாகத்  திரிந்தவனுக்கு வாழ்க்கையில் எதையோ இழந்துகொண்டே இருப்பதாக எண்ணம் வர. எல்லாவற்றையும் விட்டு விட்டு ஆட்டோ ஓட்டிப் பிழைக்க ஆரம்பித்தான். இவனைப் பார்ப்பவர்கள் ஆறேழு வருடங்களுக்கு முன் அவன் இந்த ஏரியாவில் ஒரு பெரிய சண்டப் பிரசண்டன் என்று சொன்னால் நம்பக் கூட முடியாது.

சராசரி உயரம், திருத்தமான முகம், கட்டை மீசை, நல்லா ஆஜானுபாகான உடல், அவன் கையைத் தொட்டு கண் மை இட்டுக் கொள்ளலாம் அவ்வளவு நிறம். சில மாதங்களாக சத்யாவுக்கு கருப்புதான் பிடிச்ச கலரு. அவனுக்குத் தன்னை பிடிக்குமா என்று எண்ணி எண்ணி குழம்பினாள். தனக்கு மட்டும் இந்தக் குறை இல்லாமல் இருந்திருந்தால் தன் மனதைத் திறந்து சொல்லி இருக்கலாம் என்றெண்ணி தனது நடக்க முடியாத காலைப் பார்த்து  பெருமூச்சு விட்டாள். 

அவளது பெருமூச்சு பன்னீரின் காதில் விழ “என்ன சத்யாம்மா வெயில் ஜாஸ்தியா இருக்கா. இன்னம் அஞ்சு நிமிஷத்துல ஆபிஸ்ல கொண்டு போய் விட்டுடுறேன்” தனது வரிசைப் பற்களைக்  காட்டி சிரித்தபடி சொன்னான். 

“அதெல்லாம் இல்ல பன்னீர் இன்னைக்கு மத்யானம் வீட்டுக்கு போகணும் சீக்கிரம் வந்துடுங்க”

“தம்பி ஊருக்கு போகுதா சத்யாம்மா. அதுதான் கவலையா இருக்கிங்களா?” சத்யா முகம் வாடினால் தாங்காது அவனுக்கு.

சத்யா தனது மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தனது கடைசி அஸ்திரத்தை ஏவத் தயாரானாள். இதுக்கும் இவன் அசரவில்லை என்றாள் அதன் பின் கடவுள் விட்ட வழிதான் 

“இல்ல பன்னீர். இன்னைக்கு சாயந்திரம் என்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க. ஏன் தம்பி இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு போறான்ல அதுக்குள்ள எனக்கு யாரையாவது நிச்சயம் பண்ணிடனும்னு பாக்குறான். மாப்பிள்ளை வீட்டுல காலைல வந்துட்டாங்க நம்ம லீலா ஹோட்டல்ல தங்க வச்சுருக்கான்”

எதிர்பாராத இந்த செய்தியால் பன்னீரின் முகம் இருண்டது “அது…… க்காக கல்யாணம் எல்லாம் இப்படி அவசர அவசரமாவா முடிவு பண்ணுறது. உங்கம்மாவுக்கு அவசரக்  கல்யாணம் நிச்சயம் பண்ணுறதே வேலையாப் போச்சு. சரி மாப்பிள்ளை லீலாலதான தங்கி இருக்காரு நான் போய் அவர் எப்படி இருக்காருன்னு பாக்குறேன்”

மேலும் சில விவரங்கள் கேட்டவன், பக்கத்தில் இருந்த பெட்டிக்  கடையில் கிங்க்ஸ்  ஒன்றை வாங்கிப்  புகைத்தபடியே  சத்யா மெதுவாக நடந்து ஆபிசுக்குப் போகும் வரை அவளைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். இவளை உரிமையோடு கூட்டிச் சென்று அலுவலகத்தில் விட வேண்டும் என்று ஆசை. இந்த அனாதைப் பயலுக்கு யார் பொண்ணு தருவா? ஊரறிந்த காலியைக் கட்டிக் கொள்ள சத்யா கூட ஆசைப் பட மாட்டாள். கையை சிகிரெட் சுட அவசர அவசரமாக கீழே போட்டு மிதித்தான்.

கனத்த இதயத்தோடு நண்பனைக் கூப்பிட்டவன் “கபாலி தண்டையார் பேட்ட சவாரிய நீ பாத்துக்கோ…  எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா …  என்னவா….. சுனாமியத் தடுக்க சுவரு கட்டப் போறாங்களாம் நான் சித்தாள் வேலைக்கு போயிட்டு இருக்கேன்… முக்கியமான வேலைன்னா புரிஞ்சுக்குவியா…. “ ஆட்டோவை கிளப்பியவன் பேயாய்ப் பறந்தான்.

அரவிந்தும் கதிரும் காலை வேளை பரப்பரப்புடன் மார்க்கெட்டில் தங்களுக்கு வேண்டியதை வாங்கினர். கதிர் ஒரு முடிவோடு வந்திருந்ததைப் போல அரவிந்தை ஓட்டித் தள்ளி விட்டார். 

“மாமா கொஞ்சம் விலை அதிகமா இருக்கு போல இருக்கே” என்றால்

“ஏன்டா உன் கல்யாணத்துக்கு நாப்பதாயிரத்துக்கு பூ புஷ்பம் வாங்குவ, சத்யாவுக்கு மட்டும் கணக்கு பாக்குற பாத்தியா?” என்றார்.

தாகத்துக்கு மினரல் வாட்டர் வாங்கிப் பருகினர். “என்ன மாமா இந்தத் தண்ணி ஒரு மாதிரியா இருக்கு?” என்று அரவிந்த் முகம் சுளித்தால்,

“ஏன் சித்தாரா குடிச்சிட்டு தந்த காபி அளவுக்கு டேஸ்ட் இல்லையா?” என்றார்.

“மாமா?” என்று வெட்கத்தால் முகம் சிவந்தான் அரவிந்த் 

“நியூஸ் எல்லாம் எனக்கு சுட சுட வந்துடுச்சுடா, நடத்து நடத்து” என்றார். 

“மாமா…..  மாமா…..” என்று சின்ன பிள்ளை போல் தயங்கினான்.

“இல்ல மாமா நேத்து நீங்க எல்லாரும் பேசிக்கிட்டிருந்தது காதுல விழுந்தது. நானும் சிதாராவும் நெருக்கமா இல்லைன்னு அம்மா கவலைப்படுறாங்க. அதுனாலதான்”

“நம்பிட்டேண்டா. அதுனாலதான்னு நம்பிட்டேன்” 

அவனது தோளில் ஆதரவாகத் தட்டியவர் “ இதுல என்னடா இருக்கு. உன் வய்ப் குடிச்ச காபியை நீ பிடுங்கிக்  குடிச்ச அவ்வளவுதானே. இதுல கொஞ்சமாவது நிஜக் காதல்  இருந்தா சந்தோஷமா இருக்கும்” 

“எனக்கு தெரியல மாமா. எனக்கு சித்தாரா மேல நல்லா அபிப்பிராயம் இருக்கு. ஆனா  அது காதலான்னு தெரியல.  சைலஜாவக் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகு எப்படி மாமா பத்து நாள் முன்ன அறிமுகமான ஒரு பொண்ணக் காதலிக்க முடியும்”

“அரவிந்த், சைலஜாவுக்கு வேணும்னா உன் கூட நடந்தது காதல் கல்யாணமா இருந்திருக்கலாம் உன்னைப் பொருத்தவரை அது ஒரு விபத்து ஆமாம் நீ தவிர்த்திருக்கவே முடியாத விபத்து” என்று சொல்லிய கதிருக்கு மனதில் அந்தக் கல்யாணம் நடந்த சூழ்நிலை படம் போல் ஓடாத தொடங்கியது. 

நான்கு வருடங்களுக்கு முன்பு, ‘அரவிந்த் ஏதோ பரிட்சைக்குப் படிக்கிறேன்னு சொல்லிருக்கான்’ என்பது தான் அவனது சுமித்ராவின் எண்ணம். காசு செலவில்லாம பொழுது போக்குக்கு ஏதோ செய்யுறான் என்று கண்டு கொள்ளாமல் இருந்தார். அவரது அருமை மகனோ தேர்வு பெற்று லண்டன் மெட்ரோபாலிடன் யுனிவர்சிட்டியில் பாங்கிங் அண்ட் பைநான்ஸ் மேற்படிப்புக்கு இடத்துடன் வந்து நின்றான். வயலூரில் இருந்து பாலக்கரையில் இருக்கும் தனது இளைய மருமகனை உடனே வருமாறு சொல்லி அனுப்பினார் சுமித்ரா . கதிரும் அரவிந்திடம் விவரங்களைக் கேட்டறிந்தார். 

“எம்.பி.ஏ படிக்கணும்னு தான் மாமா பார்த்தேன். ஆனா இடம் கிடைக்கல. எதுக்கும் இருக்கட்டும்னு இதுக்கும் அப்ளை செஞ்சு வச்சேன். இதுல இடம் கிடைச்சிடுச்சு. போக வேண்டாம்னு தான் நெனச்சேன். பாபு நல்ல காலேஜ் போய் சேரு அங்கேயே வேலை கிடைக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லுறான். அவனுக்கு யூஎஸ்ல இடம் கிடைச்சிருக்கு” எல்லா விவரங்களையும் கதிரிடம் சொன்னான். 

வீட்டினர் அனைவரும் கலந்து பேசி ஒரு மனதாக அவனை அனுப்பி வைப்பது என்று தீர்மானித்தார்கள். முதல் தவணைப் பணமாக பாங்கில் இருந்ததில் எடுத்துக் கட்டினார்கள். கதிர் லோனுக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஹோசூரில் தான் வேலை  பார்த்துக் கொண்டிருந்த கம்பனிக்கு  தொலை பேசி வாயிலாக  வேலையை ராஜினாமா செய்வதாகக் கூறிய அரவிந்த் பின்னர் ஒரு கடிதமும் எழுதிப் போட்டான். பாபுவும் அவனது வேலைகளில் பிஸியாக இருந்ததால் அரவிந்தால் பாபுவிடம் பேச முடியவில்லை. ஹோசூரில் அறையைக் காலி செய்து வருவதற்காகக் கிளம்பினான் அரவிந்த். 

ஹோசூருக்கு வந்து எல்லாவற்றையும் பேக் செய்து விட்டு அலுவலகத்தில் விடை பெற்று வர இரவாகி விட்டது. அரவிந்தால் பாபுவை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இவ்வளவு நாளாய் பழகியும் பாபுவைப் பற்றி அரவிந்த் கேட்டதில்லை. பாபு அவனைப் பற்றி விசாரிப்பவர்களிடம் “தெரிஞ்சு என்ன பண்ணப் போற?” என்று தெனாவட்டாய் கேட்பதைப் பார்த்திருக்கிறான். அதனால் பெரிதாக ஒன்றும் அரவிந்தும் கேட்டுக் கொள்வதில்லை. ஆனால் அரவிந்தைப் பற்றி பாபுவுக்குத் தெரியாதது எதுவுமில்லை. 

இரவு ஷிப்ட் முடிந்து காலையில்  வரும் பாபுவின்  நண்பன் ஒருவனைப் பார்த்து அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பாபுவின் விலாசம் வாங்கி அவனுக்குத் தர வேண்டிய பணத்தை அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தான். இவ்வளவு நாள் அங்கும் இங்கும் அலைந்த களைப்பு அதிகமாக இருக்கவே அறையில் படுத்துத் தூங்கி விட்டுக் காலையில் கிளம்பலாம் என்றெண்ணி தூங்கி விட்டான். அன்றுடன் அவனது அமைதி போகப் போகிறது என்று அந்த அழகான இளைஞனுக்குத் தெரியவில்லை. 

காலை அரவிந்த்  தூங்கிக் கொண்டிருந்தபோது அறையின் கதவைத் தட்டி எழுப்பிய விடுதியில் வேலை  செய்யும் சிறுவன். 

“சார் உங்களுக்கு கால், பெங்களூர் டி.ஆர் ஹாஸ்பிடல்ல இருந்து. அவசரமா வர சொன்னாங்க. சைலஜான்னு யாரையோ ஆபத்தான நிலைல பெட்ல சேர்த்து இருக்காங்களாம்” 

அவசர அவசரமாகக் கிளம்பி ஓடினான் அரவிந்த். பாபுவும் ஷைலஜாவும் தெரிந்தவர்கள் என்பது அரவிந்திர்க்குத் தெரியும். மருத்துவமனையில் இருக்கிறாள் என்றால்  ஏதாவது விபத்தாக இருக்கும். அதனால் பாபுவை அழைத்திருக்கிறாள். ஆபத்துக்கு உதவலாம் என்றெண்ணி ஓடிப் போனான்.

அந்தச் சிறிய மருத்துவமனையின் வரவேற்பறையில் விசாரித்துக் கொண்டு சைலஜாவின் அறைக்கு சென்றவனுக்கு பலமான அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறையில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி அமர்ந்திருந்தார். கொச்சைத்தமிழில் பேசினார். 

“வாடா நீதானா அவன். இந்தப் பொண்ணுக்கு ஆச காண்பிச்சிட்டு இப்ப வெளிநாட்டுக்குத் தப்பிச்சு ஓடப் பாக்குறியா? உன்னையெல்லாம் ஸ்டேஷன் கூட்டிட்டு போய் முட்டிக்கு முட்டி தட்டணும்”

புரியாமல் விழித்தான் அரவிந்த் “ மேடம் நீங்க தப்பா நினைக்கிறிங்க. நான் அந்த மாதிரி குடும்பத்தை சேர்ந்தவன் இல்ல. இந்தப் பொண்ணு கூட நான் பேசினது கூட இல்ல”

“எவண்டா தப்பு பண்ணேன்னு ஒத்துக்குறிங்க? உன் மேல கேஸ் போட்டு வெளிநாட்டுக்குக் கிளம்ப முடியாம பண்ணுறேன் பாரு”

இதுவரை நடந்ததை அளவிட முடியாத சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சைலஜா வாய் திறந்தாள் “மேடம் அப்படி எதுவும் செஞ்சுடாதிங்க. அவருக்கு அக்கா தங்கச்சின்னு ஏகப்பட்ட பொறுப்பு இருக்கு. அதுனாலதான் தயங்குறார். கவலைப் படாதிங்க அரவிந்த் நான் பாபு கிட்ட சொல்லி விட்ட மாதிரியே காலம் முழுவதும் உங்களுக்காகக் காத்திருப்பேன்”

அரவிந்தின் தலையே சுற்ற ஆரம்பித்தது. “என்ன பாபு? என்ன சொல்லி விட்டிங்க? இங்க என்ன நடக்குது? எனக்கு ஒண்ணுமே புரியலையே” 

அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்  சைலஜா “என்ன அரவிந்த் சொல்லுறிங்க. பாபு கிட்ட நான் சொல்லி விட்டது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?” சற்று சுதாரித்தவள் 

“சரி அரவிந்த் நீங்க சந்தோஷமா ஊருக்குப் போயிட்டு வாங்க. ஆனால் உங்களை விட்டுட்டு நான் எப்படி இருக்கப் போறேன்னு தான் தெரியல. என்னைப் பத்தி ஏதாவது துக்கமான விஷயம் கேள்விப்பட்டா எனக்காக ஒரு சொட்டு கண்ணீர் விடுங்க அது போதும் எனக்கு” தளுதளுத்தக் குரலில் சொல்லி முடித்தாள்.

“ஏண்டி சாகிற நிலைமைக்கு போயுமா உனக்கு புத்தி  வரல. இன்னமுமா இந்தக் காதல் உன் கண்ணை மறைக்குது. பாவி பையன், பால் மாதிரி இருந்த என் பொண்ணு மனச விஷமாக்கிட்டானே”  சைலஜாவின் ஜாடையில் இருந்த அவளது  அம்மா அவள் முதுகில் நாலு மொத்து மொத்தினாள். அங்கிருந்த மற்றவர்கள் அவளை விலக்கி விட்டனர். ஏற்கனவே முகம் வெளுத்து போயிருந்த சைலஜா இன்னமும் சோர்ந்து போனாள்.

“நீ என்னம்மா இவன் கிட்ட போய் கெஞ்சிகிட்டு. அதை எடுத்துட்டு வாங்கம்மா” என்று அவர் குரல் கொடுக்க இன்னொரு போலீஸ் அவர்  கையில் ஒரு திருமாங்கல்யத்தைக் கொடுக்க அதை அரவிந்தின் கையில் திணித்தவர்

 “ அந்தப் பொண்ணு உன்னப் பிரிஞ்சு இருக்க முடியாம உயிரையே விடத்  துணிஞ்சிட்டா. உனக்கு இந்த மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வலிக்குதா? தற்கொலைக்கு தூண்டி விட்டதா காரணம் காட்டி உன் கைக்கு விலங்கு போட்டு தெருத் தெருவா இழுத்துட்டு போகனுமா? கட்டுடா தாலிய”

இதற்குள் அறையில் கூடியிருந்த ஒரு இருவது முப்பது பேர் அவனை மிரட்ட, அரவிந்திற்குப் பேசக் கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சைலஜாவின் முகத்தைப் பார்க்க, அவளது கண்கள் கண்ணீருடன் இறைஞ்சியது. மருத்துவமனையின் அந்த அறையில் அனைவரின் கூச்சல்களுக்கு இடையே அரவிந்த் சைலஜாவின் கழுத்தில் தாலி  கட்டி முடித்தான். கூடி இருந்த கூட்டமும் கலைந்து சென்றது. இறுதியாக சைலஜாவின் தாய் குடும்ப மானத்தைக் காற்றில் பறக்க விட்ட சைலஜாவை வீட்டில் அனைவரும் தலை மூழ்கி விட்டதாக அறிவித்தார். இனி அவளது கால் தங்கள் வீட்டில் படக் கூடாது என்று சூளுரைத்து செல்ல அரவிந்தும் ஷைலஜாவும் தனித்து விடப்பட்டனர். 

“சைலஜா இங்க என்ன நடக்குது? உங்களைப் பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. உங்க கிட்ட நான் பேசினது கூட இல்லை. ஏன் இப்படி என் தலைல பழி சுமத்துனிங்க?”

அரவிந்தின் கேள்வி சைலஜாவின் முகத்தில் பலத்த அதிர்ச்சியை உருவாக்கியது. அவள் கண்களில் ஆறாகக் கண்ணீர் வழிய 

“என்ன அரவிந்த் இப்படி சொல்லிட்டிங்க. பாபு உங்க கிட்ட ஒண்ணுமே சொன்னது இல்லையா?”

இல்லை என்று தலையாட்டினான் அரவிந்த். அதன் பின்னர் சைலஜாவின் வாயிலாக அவனுக்கு விஷயங்கள் தெரிய வந்தது.கலகலப்பான சுபாவமுள்ள பாபுவை சைலஜாவின் பண்பு கவர, தனது காதலை அவளிடம் சொன்னான். ஆனால் சைலஜாவுக்கோ அரவிந்தின் மேல் கொள்ளை கொள்ளையாய் ஆசை. தன்னிடம் காதல் சொன்னவனிடம் தனது காதலனுடன் சேர்த்து வைக்கும் படி சொல்லி இருக்கிறாள். 

முதலில் சற்று அதிர்ச்சியடைந்த பாபு பின்னர் சம்மதித்தான். அரவிந்திற்குக் குடும்பப் பொறுப்புகள் அதிகம் எனவும் தான் மெதுவாக அவனிடம் சொல்லி சைலஜாவை அவனுடன் சேர்த்து வைப்பதாகவும். அதற்கு முன்னர் அந்த வாலிபனிடம் ஏதாவது சொல்லி அவனது குறிக்கோளைக் கலைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டான். சைலஜாவிற்கும் அது நியாயமாகப் படவே சம்மதித்திருக்கிறாள். 

பாபுவும் தூதுவர் வேலை பார்த்திருக்கிறான். அதாவது அரவிந்திடம் அவள் பேசியதை சொல்லி விட்டதாகவும் அதற்கு அரவிந்தின் பதில் இதுதான் என்றும் கதை விட்டிருக்கிறான். இறுதியில் ஒரு நாள் அரவிந்த் உன்னை மறுத்துவிட்டு ஊருக்குப் போகிறான் அவனை மறந்து விடு வேண்டுமென்றால் நான் உனக்கு வாழ்வளிக்கிறேன் என்று பாபுவிடம் இருந்து செய்தி வர கலங்கி போன சைலஜா வேறு வழியின்றி நாடியது மீளாத் துயிலை அடைவதற்கான வழியை . கடைசி நேரத்தில் அவளைக் காப்பாற்றி கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் 

 அவள் சொன்ன செய்தியால் குழம்பி இருந்த அரவிந்திடம் “இன்னமும் என் கிட்ட நம்பிக்கை வரலையா அரவிந்த். நீங்க பிளஸ் டூல வாங்கின மார்க் தொள்ளாயிரம். உங்க அக்கா சத்யான்னா உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். உங்க கதிர் மாமா உங்களுக்கு ரொம்ப நெருக்கம். நாதன் மாமாவைக் கண்டாலே பயம்” மேலும் சில விஷயங்களை சொன்னாள். 

“இவ்வளவு விஷயமும் உங்க மேல இருந்த அக்கறையால நான் பாபு கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டது. கடைசியா ஒண்ணு இப்ப நீங்க போட்டுருக்குற  சட்டை உங்களுக்கு நான் வாங்கித் தந்தது. இதே மாதிரி தனக்கும் வேணும்னு பாபுவும் ஒண்ணு எடுத்து கிட்டார்”

தான் தங்களுக்கு ஒரே மாதிரி எடுத்து வந்ததாக சொல்லி பாபு இரு சட்டைகள் தந்திருந்தான். அரவிந்திற்கு சந்தேகம் போய் விட்டது. பாபு செய்த துரோகத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. சில முறைகள் சைலஜாவைப் பற்றி பாபு தன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வந்ததது. முன்னரே தன்னிடம் சொல்லி இருந்தால் சைலஜாவின் ஆசையை வளர விட்டிருக்க மாட்டேனே. இப்படி மறைச்சு வச்சு என்னைப்  பழி வாங்கிட்டானே என்று வருந்தினான் அரவிந்த். 

வழக்கம் போல இதில் இருந்து தன்னைக் காப்பாற்ற கதிரை உதவிக்கழைத்தான். சைலஜாவின் குடும்பத்தினர் அவளைக் கை கழுவி விட, கல்யாண விஷயம் தெரிந்ததும் சுமித்ராவின் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்க , சைலஜாவை அவளது தோழி வீட்டில் பாதுகாப்பாக விட்டு விட்டு வீட்டிற்குக் கிளம்பினான். அரவிந்த் நினைத்தது போலின்றி சைலஜாவைப் பார்க்கக் கூட அவனது குடும்பத்தினர் தயாராக இல்லை. 

கட்டிய சேலையுடன் வந்த சைலஜாவுக்கு அரவிந்தின் நிழலே பிரதானமாகத் தெரிய அதை கதிரிடம் சொல்லித் தன்னையும் அரவிந்துடன் அனுப்பி வைக்குமாறு கெஞ்சினாள்.

“ என் கூட பிறக்காத அண்ணனா உங்களை நினைக்கிறேன். இவ்வளவு நாள் அரவிந்தைப் பார்த்துட்டே வாழ்ந்துட்டேன். அவரை விட்டு பிரிஞ்சு இனிமே என்னால இருக்க முடியாது. தயவு செய்து அவர் கூட நான் போக ஏற்பாடு செய்யுங்க. அங்க போய் நாங்க ரெண்டு பேரு வேலைக்கு போய் அரவிந்தோட அக்காவுக்கும் தங்கைகளுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கிறோம். நீங்க சொன்னா அரவிந்த் தட்ட மாட்டாரு. இந்த விஷயத்துல நீங்கதாண்ணா எனக்கு உதவனும்” 

சைலஜாவின் நியாயமான வேண்டுகோளை ஏற்று கதிர் தனது கையில் இருக்கும் பணத்தை போட்டு சைலஜாவையும் அவனுடன் அனுப்ப ஏற்பாடு செய்தார். 

இப்படி அனைவரின் சாபத்தாலும் வருத்தத்தாலும் ஆரம்பித்த அவனது முதல் திருமண வாழ்க்கை கருகிப் போனதில் வியப்பென்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 46தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 46

உறக்கம் கலைந்ததும் ஏதோ வித்யாசமான உணர்வில் விழித்தான் ஜிஷ்ணு. தூக்கக்கலக்கத்தில் புரண்டு அவளது இடுப்பினை வளைத்து வயிற்றில் முகம் புதைத்து உறங்கியிருந்தான். மெலிதாக குளிர்காற்றிலிருந்து ஜிஷ்ணுவைக் காக்கும் பொருட்டு சரயு அவளது ஸ்லீவ்லெஸ் ப்ராக் மேல் போட்டிருந்த ஓவர்கோட்டைக் கழற்றி அவன்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 47தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 47

டீ கடை பெஞ்சில் பேசிக் கொண்டிருந்தனர். “பெருசா கட்டடம் கட்டப் போறேன்னு காலைல மனைல இருக்குற புதரை சுத்தம் பண்ணி, பொந்து பாம்புப் புத்து எல்லாத்தையும் இடிச்சுத் தள்ளிட்டாங்கலே… அங்கிட்டிருந்த பாம்பெல்லாம் இப்ப அக்கம் பக்கத்து தோட்டத்துல புகுந்திருச்சாம். காலைல இருந்து