Tamil Madhura Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 11

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 11

திருமணம் முடிந்ததும் அருகில் இருந்த சரவணபவனில் அனைவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வகை ஸ்வீட்,  வடை பொங்கல், பூரி,  இட்லி என்று பலமான சாப்பாடு. தேவையானதை மட்டும் வாங்கி உண்டாள் சித்தாரா. அரவிந்தை பாதி இனிப்பு சாப்பிட சொல்லிவிட்டு மீதியை சித்தாரா இலையில் வைத்தனர். அதனை மறந்தும் கூட தொட்டுப் பார்க்கவில்லை அவள். மற்றவர்கள் கவனிக்காவிட்டாலும் ஒரு ஜோடி கண்கள் இதனை மனதுள் குறித்துக் கொண்டன.

திருமணம் பதிவு செய்தவுடன் அனைவரும் திருவெற்றியூர் திரும்பினர். தனித்தனியாக வந்த அரவிந்தும் சிதாராவும் ஒரே காரில் ஜோடியாக வர அவர்களுடன் ஸ்ராவணி, கதிர் மற்றும் நாதனின் மகன் ஆதி ஆகியவர்கள் வந்தனர். ஸ்ராவனியின் கழுத்தில் இருந்த செயினைப் பார்த்தவன், 

“வனிமா நகை உனக்கு யாரு போட்டு விட்டது”

“சித்துப்பா”

“ஆதிக்குதாமா சித்தி உனக்கு அத்தை. வீட்டுக்கு போனதும் கழட்டி அத்தை கிட்ட பத்திரமா தந்துடணும் என்ன?”

புரியாமல் விழித்த குழந்தை “சித்து. செயின் வேண்டாம். அப்பாக்கு பிடிக்கல” என்று கழற்றி சிதாராவிடம் தந்தது.

சித்து என்றால் சித்தாராவா. இவளா பாவாடை ஆல்டர் செய்தது? ஸ்ராவணிக்கு அலங்காரம் செய்து விட்டது? வியப்போடு அவளை நோக்கினான். அவன் தன்னை உருத்து பார்ப்பதைப் பார்த்தவள் நாக்கைத் துருத்தி பழிப்பு காட்டினாள். 

இதற்குள் ஆதி பெரிய மனுஷ தோரணையில்  

“தங்கமா இருக்காது மாமா. அதான் அவங்க வீட்டுல நகை  எல்லாம் களவு போய்டுச்சே . இது கண்டிப்பா கவரிங் தான். சித்தாராத்த இப்ப நீங்க போட்டுருக்குற நகை கூட ரோல்ட் கோல்ட் தானே? ”

அடப்பாவி இவன் வாய மூடிட்டு சும்மா வரக் கூடாது என்று கதிரும் அரவிந்தும் திருமணம் நடத்தி வைத்த முருகப் பெருமானை வேண்ட, முகத்தை ஆச்சிரியமாக வைத்துக் கொண்ட சித்தாரா 

“ஹையோ என்ன அறிவு! என்ன அறிவு! உங்க அப்பா பேரு கண்டிப்பா நாதனாத்தான் இருக்கணும்” என்றாள். 

குஷியானான் ஆதி “ஆமாம் அத்தை எங்கப்பா பேரு நாதன் தான். உங்களுக்கு ஜோசியம் தெரியுமா?” என்று உற்சாகத்தோடு வினவ

“ஆமாம் எனக்கு ஜோசியம், வாஸ்து எல்லாம் தெரியும். இன்னொரு ஜோசியம் சொல்லட்டுமா? இந்த மாதிரி அதிகப் பிரசங்கித்தனமா பேசி நீ சீக்கிரம் யாரு கிட்டயோ அடி வாங்கப் போற”

வாயை மூடிக் கொண்டான் ஆதி. அரவிந்துக்கு சிரிப்பு, ஜன்னல் பக்கமாகத் திரும்பி சிரித்துக் கொண்டான். கதிர் சத்தம் போட்டு சிரித்தார் 

“நல்லா சொன்னம்மா. இதே மாதிரி இவன் அப்பாவுக்கும் ஏதாவது கை ரேகை பலன் சொன்னா நல்லா இருக்கும்” 

மதிய உணவுக்கு நபீஸ் ஏற்பாடு செய்திருந்தார். யார் சொல்லியும் கேட்காத அடங்கா பிள்ளையைப்  போல பகல்  ஓடியது , மாலை மங்கி இரவும்  வந்தது. இரவு உணவை முடித்து சிறுவர்களை தூங்க வைத்தனர். மாடியில் சித்தாரவின் வீட்டில் இரவு விசேஷத்தை வைத்திருந்தனர். 

அரவிந்திற்கு தனது முதல் திருமணத்திற்கு பின்பு தான் சைலஜாவிடம் சொன்னது  நினைவுக்கு வந்தது. 

“இங்க பாருங்க சைலஜா. இந்தக் கல்யாணம் எதிர்பாராம நடந்துடுச்சு. எனக்கு கூட பிறந்த அக்கா தங்கைகள் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்குறப்ப என்னால உங்க கூட சந்தோஷமா குடும்பம் நடத்த இப்போதைக்கு முடியாது. அதுவரைக்கும் காத்திருக்குறதா இருந்தா என்கூட லண்டன் வாங்க. இல்லை என்னோட கடமைகள் முடியுற வரை இந்தியால இருங்க. எங்க வீட்டுல கெஞ்சி கேட்டு விட்டுட்டு போறேன். ஆரம்பத்துல பிடிக்கலைன்னாலும் அப்பறம் சம்மதிப்பாங்க”

கண்ணீருடன் அவனைப் பார்த்த சைலஜா “அரவிந்த் நீங்க தந்த இந்தத் தாலியே போதும். நான் சந்தோஷமா உயிரை விட்டுடுவேன். ஆனா இனிமேல் உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது. உங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன். என்னை உங்க கூட கூட்டிட்டுப் போங்க ப்ளீஸ் ”

இருவரும் உறுதியோடுதான் கிளம்பினார்கள் இருந்தாலும் அவர்களின் இளமை ஸ்ராவனியின் வரவுக்கு வழி வகுத்து விட்டது. 

காலையும் மதியமும் சித்தாரா- அவன் இலையில் இருந்து அம்மா எடுத்து வைத்த இனிப்பை மட்டும் விட்டுவிட்டு சாப்பிட்டதைப் பார்த்தான். அதுவே அவனுக்கு குறிப்பாக எதையோ உணர்த்துவதாக நினைத்தான். இன்று அவளைத் தனியாக சந்திக்கப் போவது ஏதோ சிங்கத்தின் குகைக்கு செல்வதைப் போல இருந்தது. 

அழகாக மஸ்டர்ட் நிறத்தில் பச்சைக் கரை வைத்த மைசூர் சில்க் சேலை, பச்சை பதக்கம், பச்சைக் கல் தோடு, கைகளில் பச்சை நிற வளையல்களுக்கு இருபுறமும் கரையைப் போல் மஞ்சள் நிறத்தில் தங்க வளையல்கள் மின்ன, கண்களில் அளவாக மையும், முகத்தில் போட்டதே தெரியாத வண்ணம் போட்டிருந்த பவுடரும் சிதாராவைப் பேரழகியாகக் காட்டியது.

உறவினர்கள் அனைவரும் கீழே தூங்கிவிட, மாடியில் அலங்காரத்தை செய்து விட்டனர் வஹிதாவும், சங்கீதாவும். சங்கீதா அரவிந்தை கூப்பிட கீழே சென்றுவிட, சிதாராவுக்கு புத்தி மதி சொல்ல ஆரம்பித்தார் ராஜம் .

“சித்து இவ்வளவு நாள் மாப்பிள்ள தம்பிய நீ மரியாதை இல்லாம பேசினதை நாங்க பொருட்படுத்தல. ஆனா இனிமே நீ எல்லார் முன்னாடியும் அவருக்கு மரியாதை தரலைன்னா உன்னை வளர்த்த விதம் சரியில்லைன்னு என்னைத்தான் திட்டுவாங்க. இன்னொரு முக்கியமான விஷயம். இன்னைக்கு நீ வாயை இழுத்து வச்சு தச்சுக்கணும். 

உனக்கு அரவிந்த் மேல எவ்வளவு கோவம் இருந்தாலும் கொஞ்ச நாள்  வாயத் திறக்காதே.  கண்டிப்பா உனக்கு இந்தக் கல்யாணத்துல எந்த அளவு விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சுக்க நிறைய கேள்வி கேட்பார். நீ எதாவது ஏடாகூடமா பேசி வச்சுடாதே. வாழ்க்கை சினிமா இல்லை. 

ஒரு பெண் தன்னோட காதலை நிராகரிச்சா சுலபமா ஏத்துக்குற பல ஆண்களால் கூட முதலிரவுல தன்னோட மனைவியோட புறக்கணிப்பைத் தாங்க  முடியாது. நீ அன்பு காட்டலேன்னா கூட பரவயில்ல, அவன் மேல வெறுப்பை காட்டிடாதே. இது நான் உன் கிட்ட கேட்குற பிச்சை” 

கண்டிப்பாக பேச ஆரம்பித்த ராஜம் உருக்கமாக முடித்தார். 

என்னனவோ பேச திட்டம் போட்டுக் கொண்டிருந்த சித்தாராவுக்கு இது ஒரு பெரிய எமோஷனல் ப்ளாக்மெயிலாகி விட்டது. சரி என்று தலையை அசைத்தவள் ஒன்றும் சாப்பிட்டு இருக்கவில்லை. 

இந்த அரவிந்த் எப்படி இருப்பான்? பார்க்க அமைதியாகத்தான் தெரியுறான். ஆம்பிள்ளைங்கள்ள நூத்துக்கு தொன்னுதஞ்சு பேர் அயோக்கியங்கதான். மிச்சம் இருக்குற அஞ்சு பெர்சென்ட் நல்லவங்கள்ள நாலு பெர்சென்ட் பேர் கல்யாணமே பண்ணிக்குறதில்ல. அதுனால இவனையும்  நம்பக் கூடாது என்று முடிவு செய்தாள்.

இந்தக் கல்யாணம் நடக்கக் காரணமே ஒரு முதுகெலும்பில்லாத கோழை தான்.

சிதாராவுக்கு முதலில் திருமணம் ஏற்பாடானது முகுந்தனுடன் தான். சித்தாராவின் பெரியப்பா பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளை. அவளது பெரியம்மாவின் அண்ணன் மகன் தான் அவன். முகுந்தன் மணலியில் ஒரு கெமிக்கல் பாக்டரியில் மேனேஜராக இருந்தான். 

பெண் பார்க்க வந்தபோது வஹிதாவும் சுமித்ராவும் வந்து  உதவினர். முப்பது பவுன் நகையுடன் கல்யாணம் நிச்சயமானது. வீட்டிற்கு வந்து சுமித்ரா அங்கலாய்த்துக் கொண்டார் “இந்த அரவிந்துக்கு மட்டும் புத்தி கெட்டுப்  போகாம இருந்திருந்தா நம்ம ஆளுங்கலையே பாத்து இந்த மாதிரி அழகான அறிவான பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருந்துருக்கலாம். நம்ம குடுத்து வச்சது அவ்வளவுதான் சத்யா” இது சத்யாவின் மனதில் ஒரு எண்ணத்தைத்  தோற்றுவித்தது. 

கல்யாண மண்டபம் முடிவு செய்து, திருமணத்திற்கு இரு வாரங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அப்போதுதான் அது நடந்தது.  திருமணத்திற்கு தேவையான நகைகளை வீட்டில் வந்து வைத்திருக்க, அதனை எப்படியோ தேட்டை போட்டு சென்றது திருட்டுக் கும்பல். மறுநாள் நிச்சயத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டினர் விஷயமரித்து ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, இதயத்தை இன்னும் கொஞ்சம் ரணப் படுத்தினர். 

“கட்டுன புடவையோட பொண்ணை கூட்டிட்டு போற அளவுக்கு நாங்க பரந்த மனசு இருக்குறவங்க இல்லம்மா. பேசாம இந்த வீட்டை ஏன் பையனுக்கு எழுதி வச்சுருங்க. ரெஜிஸ்டர் பன்னவுடனே கல்யாணத் தேதி வச்சுக்கலாம்”

இரக்கமில்லால் அவர்கள் வாயில் வந்த வார்த்தைகளைக் கேட்டு கொதித்து போனாள் சித்தாரா.

“உங்களுக்கு வீட்ட எழுதி வச்சுட்டு எங்க பாட்டி எங்க போவாங்க”

“ அதெல்லாம் கவலைப்படாதேம்மா. உங்க பாட்டிய இங்க ஏதாவது முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டுடலாம்” ஆறுதல் சொன்னார் பெரியம்மா.

பெரியன்னையின் வார்த்தைகள் அவளுக்கு எறியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது  “குடியிருக்குற வீட்டை உங்க பையன் பேருல எழுதி வச்சுட்டு எங்க பாட்டி போய் முதியோர் இல்லத்துல தங்கிக்கனுமா? எந்த நம்பிக்கைல இவ்வளவு நாள் என்னை வளர்த்த பாட்டிய நட்டாத்துல விட்டுட்டு சொத்து சொகத்தை எல்லாம் தந்து உங்க பையன கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்குறிங்க”

“  ஒரு மேனேஜருக்கு இன்னைக்கு மார்கெட்ல என்ன ரேட்டுன்னு தெரியுமா? எங்க பையனுக்கு இன்னைக்கு ராஜபாளையத்துல இருந்து நூறு பவுன்  நகையோட பொண்ணு ரெடியா இருக்கு. நாங்க தான் நம்ம வசதிக்கு கம்மியான வீடுன்னா பொண்ணு கைக்கு அடக்கமா இருக்கும், சொன்ன பேச்சைக்  கேட்கும்னு நெனச்சோம்.  இது என்ன இப்படி வாயாடுது. எங்களுக்கு இந்த பொண்ணு வேண்டாம்பா”

“ சோ, மார்கெட் ரேட் நூறு பவுனுன்னு பேசி உங்க பையனை விற்க பாக்குறிங்க. அப்ப மார்க்கெட்ல காய்கறி வாங்க வந்த கஸ்டமர் மாதிரியே நானும் பேசுறேன். இந்த விலை எங்களுக்குக் கட்டாது. இவ்வளவு விலை போட்டு உங்க மகனை வாங்கவும் நான் தயாரில்லை”

கோவத்துடன் குதியாட்டம் போட்ட பெரியம்மாவையும் பெரியப்பாவையும் மாப்பிள்ளை வீட்டினரையும் துச்சமாகப் பார்த்தாள்.

“அம்மா அப்பா இல்லாத அனாதையாச்சே ஏதோ நல்ல சம்மந்தமா முடிச்சு வைக்கலாம்னு பார்த்தா எங்க மூஞ்சில கரி பூசிட்டல்ல. உனக்கு எப்படி கல்யாணம் நடக்குதுன்னு பாத்திருறோம்டி இனிமே இந்த வீட்டு வாசல் படிய மிதிக்க மாட்டோம்” அனைவரும் சென்று விட்டனர். 

சிதாரா உள் அறையில் அமர்ந்திருக்க, வஹிதா-நபீஸ், ராஜத்துக்குத்  துணையாய்  வீட்டில் இருந்தனர்.

“என் பேத்தி கல்யாணத்துக்கு நானே தடையாயிட்டேனே” என்று கவலைப்பட்ட ராஜத்துக்கு  ஆறுதலாய் பேசினார் சுமித்ரா. “கவலைப்பாடாதிங்கம்மா. நகை திருட்டுப் போனதுல இவங்க உண்மையான குணம் தெரிஞ்சுடுச்சு. இந்தக் கல்யாணம் நடந்திருந்தாலும் இந்த வீட்டை எப்படியாவது எழுதி வாங்கி இருப்பாங்க. நம்ம சித்தாராவோட அழகுக்கும் குணத்துக்கும் ராஜா மாதிரி ஒருத்தன் வருவான். இந்த சாரிகா பையனா பொறந்திருந்தா நான் சித்துவ வெளில விட்டுருக்க மாட்டேன். எங்க வீட்டுக்கே மருமகளா கூட்டிட்டு போயிருப்பேன்.” 

ராஜமும் புலம்பினார் “ மகராசி நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, சிதாராவை தூக்கிட்டு போக சொல்லி இருப்பேன். உங்க வீட்டுல பையன் இல்லாதது சித்தாரா துரதிர்ஷ்டம்”

கஷ்டப்பட்டு மாடி ஏறி வந்திருந்த சத்யாவுக்கு அப்போது தோன்றியது. ஏன் சிதாராவைக் கல்யாணம் பண்ணிக்க என் தம்பி அரவிந்துக்கு என்ன தகுதி கம்மியா என்று.

“அம்மா சும்மா கண்டபடி பேசாதிங்கம்மா. சொந்தக்காரங்க நம்ம அரவிந்துக்குத் தான் சித்தாராவக் கேட்குறதா தப்பா நினைக்கப் போறாங்க” மெதுவாய் சுமித்ரா காதைக் கடித்தாள். சத்யா கோடு தான் போட்டாள், சுமித்ரா புரிந்து கொண்டார். சித்தாரா அரவிந்த் ஜோடிப் பொருத்தத்தை மனக்கண்ணிலே கண்டு மகிழ்ச்சி அடைந்தார். 

“அம்மா நான் கேட்க்குறேன்னு தப்பா நினைக்காதிங்க. என்னோட பையன் அரவிந்த் பத்தி உங்களுக்குத் தெரியும், அவனுக்கு பொண்ணு பாக்குறதா இருக்கோம். என் பையன் ரொம்ப நல்லவன். முதல் கல்யாணமும் குழந்தையும் ஒரு விபத்து மாதிரி அவன் வாழ்க்கைல வேகமா வந்து முடிஞ்சுடுச்சு. உங்களுக்கு புதுத் துணி தரத்தான் ஆசைப்படுறேன். ஆனா என்கிட்ட பழம் பட்டுப்புடவையைத்  தவிர வேற எதுவுமில்ல. சித்தாராவை என் மகனுக்குக் கல்யாணம் பண்ணித் தர முடியுமா? நான் கண்ணுக்குள்ள வச்சு அவளைப் பார்த்துக்குறேன். என் மகனும் அவளைக்  கண்கலங்காம பாத்துக்குவான்”

குரல் கம்மி பேசிய தங்களது ஊர் பெரிய வீட்டம்மாவை வியப்புடன் பார்த்தார் ராஜம். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் எதிர் பார்க்க

“சித்தாரா இங்க வா” என்று அழைத்தவர் “வந்து உன் மாமியார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ. உங்க மருமக உங்க பையனோட நூறு வருஷம் சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு அவ நெத்தில குங்குமம் வைங்கம்மா” என்று மறைமுகமாய் தனது சம்மதத்தை தந்தார் ராஜம். 

ஒரு சிறிய பென்சில் ரப்பர் விஷயத்தில் கூட பழையது பிடிக்காத தானா இரண்டாந்தாரமாய் போவது என்று திகைப்புடன் நின்ற சித்தாராவை 

“சித்தாரா, பாட்டி ரொம்ப நாளைக்கு நல்ல படியா இருக்கணும்னு நெனச்சா போய் ஆசீர்வாதம் வாங்கு” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி காதருகே போய் சொன்னார் ராஜம். 

சுமித்ராவின் காலில் விழுந்து வணங்கினாள் சித்தாரா. சிறிது நேரம் முன்பு வரை அமளி துமளி பட்ட இடம் இப்போது கல்யாணக் களை கட்டிற்று. 

அதன் பின்பு கதிருக்குத் தகவல் சொல்லி, இருவரும் அரவிந்திடம் அம்மா இக்கட்டான சூழ்நிலையில் வாக்கு தந்து விட்டதால் கண்டிப்பாக வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி ஒரு வழியாக திருமணம் நடந்து முடிந்தது. 

நடந்தது அனைத்தையும் அசைபோட்டபடியே அமைதியாக அமர்ந்திருந்தவளுக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான் அதைத்தான் அரவிந்த் அறைக்குள் வந்தபோது செய்து கொண்டிருந்தாள்.

மாடியில் இருந்த சித்தாரா வீட்டுக்குத் தயக்கத்துடன் நுழைந்தான் அரவிந்த். முன் அறையில் அவள் இல்லை. உள் அறையில் நல்ல சப்பளம் போட்டு அமர்ந்து தட்டில் இருந்த பலகாரங்களைக் காலி பண்ணிக் கொண்டிருந்தாள்.அரவிந்த் இந்தனை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. வேகமாக சாப்பிட்டதில் விக்கல் எடுக்க, பக்கத்தில் ஜக்கில்  இருந்த தண்ணீரை ஒரு கிளாசில் ஊற்றி வைத்தான். எடுத்துப்  பருகியவள் 

” அரவிந்த் உனக்கு ஸ்வீட் வேணும்னா எடுத்து சாப்பிடு. நான் சாப்பிடுறத பார்த்து கண்ணு போடாதே, உன் கண்ணு பட்டு விக்கிடுச்சு பாரு ” என்றாள்

இவ பேசுறது புதுசா கல்யாணம ஆன பொண்ணு  பேசுற மாதிரியா இருக்கு,  என்று எண்ணியவன் 

“எனக்கு வேண்டாம்” என்று பதவிசாக உரைத்தான்.

சிதாராவும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. மெதுவாக ரசித்து சாப்பிட்டவள் , வீட்டிற்குள் சென்று கை கழுவி சற்று நேரம் கழித்து வந்தாள். வரும்போது வேறு உடை மாற்றி இருந்தாள். அரக்கு நிறத்தில் மஞ்சள் கரை போட்ட பாவடையும் , ஆரஞ்சு நிறத்தில் அரக்கு கரை போட்ட லூசான சட்டையும் அணிந்திருந்தாள். முதன் முதலில் பார்த்த போதும் இதே போல் பாவாடை சட்டை தான் போட்டிருந்தாள். இந்த உடைதான் இவளுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது என்று அரவிந்துக்குத் தோன்றியது. 

கையில் ஒரு தம்ளர் இருந்தது. அதனை அரவிந்த் பக்கத்தில் வைத்து விட்டு, தரையில் வலது காலை மடித்து, இடது காலை நீட்டி சவுகரியமாக  அமர்ந்து காலையில் வந்த  பத்திரிகையைப்  படித்தபடியே  தன பக்கத்தில் இருந்த கிளாசை கையில் எடுத்துக் கொண்டாள்  . படித்தபடியே தம்ளரில் இருந்த பாலை எடுத்து பருகத் தொடங்கினாள். அரவிந்த் அவளது செய்கைகளை ஓரக் கண்ணால் பார்த்துக்  கொண்டிருந்தான். 

நிமிர்ந்து பார்த்தவள் 

“என்ன அரவிந்த் குடிக்கல? எனக்கு வேஸ்ட் பண்ணா பிடிக்காது”  என்று டீச்சர் சிறு பையனை  அதட்டுவது போல் சொல்ல, கட கடவென கிளாசில் இருந்ததைப்  பருகிவிட்டு வைத்தான் அவன். 

இந்த ரவுடி இன்னைக்குத்தான் கல்யாணம் ஆனா மாதிரியா நடந்துக்குறா? இந்த சண்டி ராணிகிட்ட பேசவே நடுக்கமாத்தான் இருக்கு. சரி பரவாயில்ல ஒரு நாள் பேசிதானே ஆகணும் அது இன்னைக்கா இருக்கட்டும் என்று  நினைத்தவன் 

“க்கும்…. சித்தாரா உன் கூட பேசணும்?”

டக்கென எழுந்து ஒரு பாயை விரித்து தரையில் படுத்துக் கொண்டாள் 

“எனக்குத்  தூக்கம் வந்துடுச்சு”

‘ஒரு தட்டு நிறையா ஸ்வீட் எடுத்து வச்சுக்கிட்டு யாருக்கும் தராம மொத்தமா முழுங்குனா அப்படித்தான்’ என்றெண்ணியபடி  ” எனக்கு ரெண்டு மூணு கேள்வி இருக்கு அதுக்கு ஆமா இல்லன்னு மட்டும் பதில் சொல்லு போதும்” 

எப்படி இதனை தடுப்பது. இவனிடம் பொய் சொல்லவும் பிடிக்கவில்லை என்று நினைத்தவள் “இன்னைக்கு நான் மௌன விரதம்”

” என்னது? மௌன விரதமா?….. எதுக்காக?”

திரும்பி அவனை நேருக்கு நேர் பார்த்தவள், ” என் பாட்டியோட வேண்டுதல். உன்ன மாதிரி ஒரு சூப்பர் பிகர நான் கல்யாணம் பண்ணதுக்காக. அதுனால நீ கேக்குற கேள்விக்கு கண்டிப்பா பதில் சொல்ல மாட்டேன்”

குழப்பமாக பார்த்தவன் “இன்னும் ஒரு சந்தேகம். வழக்கமா மௌன விரதம்னா பேச மாட்டாங்களே?”

கிண்டலாக அவனைப் பார்த்தவள் “ஹாங்…. நான் இவ்வளவு கம்மியா  உன்கூட பேசுறதே மௌன விரதம் மாதிரிதான்”

“சரி இன்னும் ஒரு சந்தேகத்துக்கு மட்டும் பதில் சொல்லிடேன். எப்ப உன் மௌன விரதம் முடியும்?”

” சத்தியமா இப்போதைக்கு  இல்ல” என்றவள்

 “அடிக்கடி கேள்வி கேட்காதே அரவிந்த் நான் ஒரு சமயம் மாதிரி இன்னொரு சமயம் இருக்க மாட்டேன்” என்று எச்சரிக்கை விடுத்து விட்டு படக்கென கண்ணை மூடிக் கொண்டாள் 

புது இடம் தூக்கம் எப்படி வரப்போகுதோ, ஸ்ராவணி நம்மள விட்டுட்டு எப்படி தூங்குவாளோ   என்று நினைத்தபடியே இருந்தவன் அவனையும் அறியாமல் தூங்கிப் போனான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 11’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 11’

அத்தியாயம் – 11 நந்தனாவின்  கண்ணீர்,  அணிந்திருந்த  சட்டையில் ஊடுருவி ப்ரித்வியின் மனதை சுட்டது. உன் நெஞ்சிலே பாரம், உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின்  ஓரம், எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்   மனதிலிருந்ததைக் கொட்டிக் கவிழ்த்து

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 28என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 28

அத்தியாயம் – 28   மனைவியின் நடவடிக்கை எல்லாம் தனது இஷ்டப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம். கஷ்டமாக இருந்தது அரவிந்துக்கு. தான் செய்த காரியம் எவ்வளவு தப்பு என்று உரைத்தது. நியூகாசிலுக்கு வேலை விஷயமாக வந்தவன்

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 17′(Final)தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 17′(Final)

அத்தியாயம் – 17 ரஞ்சன் சற்று இளைத்திருந்தான், கறுத்திருந்தான். கண்களை சுற்றிலும் கருவளையம் தூக்கமின்மையைக் காட்டியது. மொத்தத்தில் பழைய கலகலப்பில்லை. ப்ரித்வியின் வீட்டில் இருக்கும் ஒரு நாற்காலியைப் போல் நடப்பதை ஒரு பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இனிமேல் பார்க்கவே முடியாதோ