Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 10

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 10

அத்தியாயம் – 10

போர் முடிந்த களைப்புடன், பெருகும் குருதியைப் பொருட்படுத்தாது, அந்தப் பாலைவனத்தில் ஒரு துளி தண்ணீருக்காக அலைகிறான் அரவிந்த். அவன்  பார்க்கும் போது தூரத்தில் தெரியும் நீர் அருகே சென்றதும் கானல் நீராக மாறுகிறது. 

 வெகு தொலைவில்  வெள்ளித் தாம்பாளத்தில்  வைக்கப் பட்ட தங்கக் குவளை அவனது கழுகுக் கண்களுக்குத் தெரிகிறது. நடக்கக் கூட முடியாத களைப்புடன் தவழ்ந்து அதன் அருகே சென்றான். ஆமாம் அதில் நீர்தான் இருந்தது. ஆவலுடன் கையை கொண்டு சென்றான். அருகில் சென்றதும் அதற்காகவே காத்திருந்தார் போல் அந்தக் குவளையின் மேல் படம் எடுத்து நின்ற நாகம் தனது பொல்லா விஷத்தைக் குவளையில்  கக்கியது. 

எப்படியும் தாகத்தால் மரணம் உண்டு அது இந்த  விஷத்தால் வரட்டுமே என்று மனதைத் தேற்றிக் கொண்டான். ஆனால் பலமிழந்த அவனது கைகளால் அந்த விஷக் குவளையைக் கூட ஒழுங்காகப் பற்ற முடியவில்லை. சோர்ந்த அவனது கைகளில் இருந்து அந்தக் குவளை தரையில் விழுந்தது. அதில் இருந்த நீரை அவனை விட ஆயிரம் மடங்கு தாகத்தில் வாடிக் கொண்டிருந்த பூமித்தாய் பருகிவிட்டாள்.  

“ஐயோ கைக்கு எட்டியத்தில் ஒரு துளியாவது வாய்க்கு எட்டக் கூடாதா? தெய்வமே அப்படி நான் என்னதான் பாவம் செய்தேன்” என்று கதறியவனின்  கண்கள் இருட்ட ஆரம்பித்தது.  தரையில் மயங்கி வீழ்ந்தான்.

எவ்வளவு மணிக்கூறு அப்படியே கிடந்தான் என்றே கணிக்க  முடியாது மண்ணில் கிடந்தவனின்   உதடுகளில் சில துளி நீர் பட்டது. ஆவலாக அவனது இதழ்கள் திறந்தன. அவனது வறண்ட உதடுகளை நனைத்து, தொண்டை வழியாக இன்பமாக இறங்கியது. அந்தக் குளிர்ந்த நீர் சிறிதளவு தந்த புத்துணர்ச்சியினால் விழிகளைத் திறந்தான். அவன் முன்னே ஒரு வெள்ளுடை அணிந்த தேவதை ஒருத்தி கைகளில் நீருடன் நின்றிருந்தாள். அவளது உடை முழுவதும் ஈரமாக இருந்தது. கூந்தலில் இருந்து கூட தண்ணீர் சொட்டியது. அவள் கையால் வாங்கிப் பருகிய  நீர் அவனது உடல் மனம் இரண்டையும் நிறைத்தது. 

“நீ தான் மழை தேவதையா?” வியப்புடன் கேட்டான்.

 அவள் பதில் சொல்லவில்லை.  அவள் முகத்தை தேடினான். அவனுக்கோ கண்கள் மட்டுமே அதில் பதிந்தன. அதை உற்றுப் பார்த்தான். வானளவு விரிந்தன அந்தக் கண்கள். அதன்  உள்ளே அவன் தான் தெரிந்தான். அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டவன் 

“ஹே ஏஞ்செல், இப்படியே இரு. என்னை விட்டு போயிடாதே ப்ளீஸ்” 

திகைத்தன  அந்தக் கண்கள். எங்கே அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்றெண்ணி பயந்தான்.

“நோ உன்னை நான் போக விடமாட்டேன். நீ என்னை விட்டுட்டு எங்கேயும் போகக் கூடாது” என்று சொல்லியபடியே வாரி அணைத்துக் கொண்டான். அவனது மனதில் அளவிலா நிம்மதி பரவியது. சற்று தயங்கிய தேவதையும் புன்னகையில் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள். மாயம் செய்தது போல் அந்தப் பாலைவனமே பூத்துக் குலுங்கும்  சோலைவனமாக மாறியது. 

புன்சிரிப்புடன் விழித்தான் அரவிந்த். இதுவரை பல  முறை இந்தக் கனவு வந்திருக்கிறது. ஆனால் பாலைவனத்தில் தண்ணீருக்குத் தவிப்பதுடன் முடிந்து விடும் இன்று என்னடாவென்றால் தேவதை அது இதுவென சினிமா மாதிரி வந்துவிட்டது. நல்ல வேளை கனவிலாவது ஹாப்பி எண்டிங் வந்ததே என்று நினைத்தபடி குளித்து விட்டு வந்தான். வீடு கல்யாணப் பரபரப்பில் இருந்தது. சுமித்ரா அவனுக்கு வெண்பட்டு வேஷ்டி சட்டை எடுத்து வைத்திருந்தார். திகைப்போடு பார்த்தான்.

‘ஓ கல்யாண மாப்பிள்ளை பட்டு வேஷ்டி சட்டை தானே போடணும். நமக்கு எங்க அது தெரியும். முதன்முறை சைலஜாவுடன் போட்ட சட்டையுடன்  அவசரக் கோலத்தில் கல்யாணம் நடந்தது. பின் அதனைப் பதிவு செய்து விட்டு லண்டன்  போகத்தான் சரியாக இருந்தது’ முதல் கல்யாண நினைவுகளில் இருந்தவனை கிளம்ப சொல்லி விரட்டினார் சுமித்ரா. ஆல்ட்டர் செய்த பாவாடை சட்டையுடன் தலை கலைந்து அமர்ந்திருந்த ஸ்ராவனிக்கு தலையை ஒதுக்கி தான் வழக்கமாக போடும் ஹேட்பாண்ட் போட்டு விட்டான் அரவிந்த். ‘ஸ்ராவனிக்கு தலைமுடி நிறைய வளர்ந்து விட்டது. ஊருக்குப் போகும் முன்பு இங்கே பக்கத்தில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் பாப்  வெட்டி வரச் சொல்லி அம்மாவிடம் சொல்ல வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டான். 

“வனிமா டிரஸ் ஆல்ட்டர் பண்ணியாச்சா? யார் பண்ணி விட்டது” 

“சித்துப்பா. நான் சித்துவப் போய் பார்த்துட்டு வரட்டுமா”

“சரிம்மா பார்த்து போயிட்டு வா. பாவாடை எல்லாம் உனக்குப் பழக்கமில்லை. தட்டி விட்டுடப் போகுது” பொறுப்பான அப்பாவாக மாறி பதில் சொன்னான்.

யார் அந்த சித்து என்று யோசிக்கவில்லை அரவிந்த். தனது அக்கா பிள்ளைகள் தனது மற்ற சகோதரிகளை சித்தி என்று  அழைப்பதைத் தான் இவள் சித்து என்று சொல்கிறாள் போலிருக்கிறது என்று ஊகித்துக் கொண்டான். 

மாடிக்குச் சென்ற குழந்தை போய் சித்தாரா முன்பு நிற்க, சித்தாரா கண்டு கொள்ளாமல் இருக்கலாமா என்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு இயல்பாகவே இருந்த ஈரமான மனது அவளைக் கோவமாக நடிக்கக் கூட விடவில்லை.

 அந்தக் குட்டிக்  குழந்தையின் ஆர்வமான முகம் அவளது மனதைத் தாக்கியது. ஸ்ராவணியை உற்று நோக்கினாள். அவளுக்கு ஏனோதானோ என்று போடப்பட்டிருந்த ஹேர்பான்ட் மற்றும் வெறுமையான முகம் பரிதாபத்தைத் தூண்டியது. இங்கே வா என்பது போல தலையசைத்தாள். அதற்காகவே காத்திருந்தார் போல் ஓடி வந்தாள் ஸ்ராவணி.

சீப்பினை எடுத்து ஸ்ராவனியின் தலையை வாரி விட்டவள் நீளமாக இருந்த முடியில்  ஒரு உச்சிக் குடுமி போட்டாள். அதனை சுற்றிலும் மல்லிகை சூட்டினாள் தன்னிடம் இருந்த பாண்ட்ஸ் பவுடர் கொஞ்சம் போட்டு விட்டு, கண் மை தீட்டி, செஞ்சாந்துப்  பொட்டு வைத்து அதனை சுற்றிலும் மஞ்சள் நிற சாந்தால் ஓர் வட்டம் போட்டாள். மனத்தைக் கொள்ளை கொள்வது போல் இருந்த அந்தக் குழந்தைக்குக் கன்னத்தில்  ஒரு சிறிய திருஷ்டிப் பொட்டிட்டாள். யசோதை கண்ணனுக்கு ரசித்து ரசித்து செய்யும் அலங்காரம் போல் ஸ்ராவனிக்கு சித்தாரா  செய்வதைப்  பார்த்து மனதுள் மகிழ்ந்தார்கள்  ராஜம் பாட்டியும் வஹீதாவும்.

“அக்கா பெண் குழந்தைக்குத் தான் இந்த மாதிரி அலங்காரம் செஞ்சு அழகு பார்க்கலாம். நீங்க முதல்ல பொண்ணு பெத்திருந்தா நான் எவ்வளவு அலங்காரம் செஞ்சு பார்த்திருப்பேன் தெரியுமா?” 

“ நீ இனிமே தினமும் இந்தப் பாப்பாவுக்கு செஞ்சு அழகு பாரு. இப்ப சீக்கிரம் உன் அலங்காரத்தை முடிச்சுட்டு பொண்ணா லட்சணமா கிளம்பு. பியூட்டிசியன் கூட வேணாம்னு சொல்லிட்டா.சரி சரி ரெண்டாம் கல்யாணத்துக்கு இந்த அழகு போதும்னு ஆரம்பிக்காதே”

“கண்டிப்பா சொல்லுவேன். பாருங்கக்கா இந்தப் பாப்பா எவ்வளவு ஒல்லியா இருக்குன்னு. சாப்பாடு எல்லாத்தையும் இவளுக்குத் தராம  இவங்க அப்பாவே சாப்பிட்டுடுவாரு போல இருக்கு”

“இல்ல இல்ல எனக்குத் தந்துட்டுத் தான் அப்பா சாப்பிடுவாரு. பாதி நாள் ஒண்ணுமே சாப்பிட மாட்டார்” என்றாள்  ஸ்ராவணி. 

உச் கொட்டினார்கள் ராஜமும் வஹிதாவும். 

“ரொம்ப உச்சு கொட்டாதிங்க. பக்கத்து வீடு டைகர் அதைத்தான் கூபிடுரிங்கன்னு நெனச்சு ஓடி வந்துடப் போகுது. சாப்பிடாம இருந்தா பாவமா? எல்லாம் டயட்டிங்கா இருக்கும். அமுல் பேபி  மாதிரி இருக்குற உடம்பைக் குறைக்கணுமுல்ல” சொல்லிக் கொண்டே சேலை மாற்றக் கிளம்பினாள் சித்தாரா. 

“பாட்டி அந்த மூஞ்சி, பல்லி, காக்கா எல்லாம்  மாறி இப்ப அரவிந்த் அமுல் பேபி மாதிரியாம். எல்லாம் இந்தக் குட்டி வந்த வேளைதான் ” ஸ்ராவணியை செல்லமாகக்  கிள்ளியபடி  கிசு கிசுப்பாய் சொன்னாள் வஹிதா.

“மெதுவா பேசு. மறுபடியும் வேதாளம் முருங்க மரத்துல ஏறிக்கப் போகுது” எச்சரித்தார் ராஜம்.

அனைவரும் வடபழனி சென்றார்கள். முதல் காரில் அரவிந்த் செல்ல , சற்று நேரம் கழித்துக் கிளம்பிய இரண்டாவது காரில் கிளம்பினாள்  சித்தாரா. 

அரவிந்த் தனது மகளுக்கு யாரோ சித்து செய்து விட்ட அலங்காரத்தைப் பார்த்து சந்தோஷப் பட்டபடியே திருவெற்றியூரில் இருந்து வடபழநிக்குப் பயணமாக, பச்சை நிறப்  பட்டுப் புடவையில் கோவில் சிலை போல பாந்தமாக இருந்த சித்தாராவோ 

‘நம்ம ராசியப் பாரு கல்யாணம் கூட வள்ளி, தெய்வானையோட இருக்குற முருகர் கோவில்ல தானா அமையனும். இந்த ராமர் இல்லைன்னா  ஆஞ்சநேயர், பிள்ளையார் கோவில்ல வச்சுருக்கக் கூடாது?’ என்று ஆதங்கப் பட்டபடியே கோவிலுக்குச் சென்றாள்.

இவர்கள் மனதில் பேசியது எதையும் காதில் வாங்காமல் முருகப் பெருமான் காரியமே கண்ணாகக்  கல்யாணத்தை நடத்தி விட்டார். ஆம் சொந்த பந்தங்கள் புடை சூழ, முப்பத்தி முக்கோடி தேவர்கள் சாட்சியாக, அவனது உயிரான  ஸ்ராவனியின்  சம்மதப் புன்னகையை ஏற்றுக் கொண்டு சித்தாராவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டுத் தன்னுடையவளாக ஆக்கிக் கொண்டான் அரவிந்த்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7

மறக்காமல் பன்னிரண்டு மணிக்கு ஜிஷ்ணுவை அழைத்தாள் சரயு. “சொல்லு ஜிஷ்ணு” “இன்னைக்கு நீ சொன்ன இடத்துல சைட் சீயிங் டூர் ஒண்ணு ஏற்பாடு செஞ்சுருக்கேன். மத்தபடி ஆட்டோமொபைல் சம்மந்தமான இடத்தைப் பாக்க நீயும் வந்தா நல்லாயிருக்கும் சரயு. உன்னால முடியும்னா வரப்பாரேன்”

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 39தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 39

காலையில், தீயாய் எரிந்த கன்னங்களைத் தடவியபடி கண்ணாடி முன் நின்றான் ஜிஷ்ணு. “சரவெடி… அடின்னா அடி பலே அடிடி. இந்த மாதிரி ஒரு அறையை நான் யார்கிட்டயும் வாங்கினதே இல்ல. உனக்கு என் மேல வெறுப்பு வரணும்னுதான் அந்த கிஸ்ஸை தந்தேன்.

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 15என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 15

அத்தியாயம் –15  சத்யா ஆட்டோவை செலுத்திக் கொண்டிருக்கும் பன்னீரை ஓரக் கண்ணால் பார்த்தபடியே பயணம் செய்து கொண்டிருந்தாள். அவள் சென்னையில்  வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்களும் பன்னீரின் ஆட்டோவில் தான் காலையிலும் மாலையிலும் சென்று வருகிறாள். பன்னீருக்கு யாரும் இல்லை. எங்கோ