Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9

அத்தியாயம் – 9 

டற்கரையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய அரவிந்தின் மனதில் இன்னமும் அதிகக் குழப்பமே நீடித்தது. யாரும் இல்லாத தீவிற்கு ஸ்ராவநியுடன் சென்று விடலாமா என்ற விரக்தி தோன்றியது. யோசனையுடன் ஆட்டோவில் அமர்ந்திருந்த அரவிந்தை தொந்தரவு செய்யாமல் வந்தார் கதிர். குழப்பமான நேரத்தில்  மனதுக்குத் தனிமையைத் தர வேண்டும் அந்தத் தனிமையில் எண்ணங்கள் ஒன்று குவிந்து சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்து விடலாம். அரவிந்திற்கு இந்தத் தனிமைக் காலத்தின் ஆயுள் இன்னும் சில மணி நேரம் தான். அதன் பின் அவன் அவனுக்கும் ஸ்ராவநிக்கும்  மட்டுமின்றி சிதாராவுக்கும் சேர்த்து முடிவு எடுக்க வேண்டும். 

வீட்டிற்கு வந்த பொழுது அரவிந்தின் தாய் சுமித்ரா அவனைக் கடிந்துக் கொண்டார். 

“எங்கேடா போயிட்டு வர்ற? சங்கீதா வீட்டுக்காரர்  கூட வெளியே போனது தெரியாம நாங்க  உன்னைத்  தேடி கிட்டு இருக்கோம். இனிமேல் எங்க போனாலும் சத்யாவோட  போன எடுத்துட்டு போ. உன்னைப் பார்க்கணும்னு எதிர் வீட்டு நபீஸ் சொல்லி கிட்டு இருந்தார். டிரஸ் இப்ப  மாத்திடாதே அவர் கூட பேசிட்டு மாத்திக்கோ. ஸ்ராவனிக்கு பட்டுப் பாவாடை சட்டை தைச்சு வந்துடுச்சு. போட்டு அளவு பார்க்கணும். நீ அவளையும் கூட்டிட்டு போயிட்ட. இப்ப சட்டை அளவு பெருசா இருந்தா ஆல்டர் பண்ணும். டைலர் கடைய பூட்டிட்டு போயிட்டான்னா என்ன பண்ணுறது? ஸ்ராவணி நீ போய் சத்யா அத்தை கிட்ட டிரஸ் போட்டு பாரு” 

எல்லாரையும் விரட்டினார். அவர் பயந்தது போலவே, இயல்பாகவே பூஞ்சை உடம்பாக இருந்த ஸ்ராவனிக்கு அந்தப் பாவாடை நீளமாகவும், சட்டை பெரிதாகவும்  இருந்தது. எனவே கதிரின் மகன் ஹர்ஷாவிடம் தையல் கடை திறந்து இருக்கிறதா என்று பார்த்து வரும்படி ஏவினார். அவர்களின் கெட்ட நேரமாக தையல் கடையும் மூடி விட்டது. மறுநாள் திருமணத்திற்கு ஸ்ராவனிக்கு வேறு ஏதாவது நல்ல உடை இருக்கிறதா என்று பார்க்கும்படி சொன்னார் சத்யாவிடம். 

நபீஸ் அரவிந்தைப்  பார்க்க வந்திருந்தார். காதல் திருமணம் செய்துக் கொண்ட சிதாராவின் தாய் தந்தையர் நபீசின் வீட்டிற்கு மாடியில் இருக்கும் ஒற்றை அறையில்தான் தங்கள் தனிக் குடித்தனத்தைத் தொடங்கினர். சித்தாரவின் தாயாருக்குப் பிரசவம் பார்த்ததே நபீசின் தாய்தான். தங்கச்சி வேணும் என்று கேட்டுக் கொண்டிருந்த அவர்களது இளைய மகன் நபீசிடம் சித்தாரா பிறந்ததும். இதுதாண்டா உன் தங்கச்சி பாப்பா என்று அவரது தாயார் சொல்லிவிட, ரொம்ப சந்தோஷம் அவருக்கு. அவர்கள் வீட்டிற்கு எதிர்புறம் இருந்த பழைய வீட்டை விலைக்கு வாங்கினார்கள் சிதாரவின் பெற்றோர். அதனை புதுப்பித்துக்  குடியேறினார்கள்.

சிறு வயதில் நபீஸ் சிதாராவைத் தூக்கிக் கொண்டு கடைக்கு செல்வார். குண்டுக் கன்னமும் கொள்ளை அழகுமாய் இருக்கும் அவள் யாரென்று கேட்டால் “என்னோட தங்கச்சி” என்று பெருமையாக சொல்வார். 

சிதாராவின் பெற்றோர்களின் எதிர்பாராத விபத்திற்குப்  பின்பு நபீஸ் குடும்பத்தின் உதவியுடன் இங்கே வந்து தங்கி விட்டார் ராஜம். அவர்கள் மரணத்திற்குக் கிடைத்த இழப்பீட்டைக் கொண்டு வீட்டுக் கடனை அடைத்து, வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, முதல் மாடியில் சிறு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கட்டடதிற்குக் குடி போனார்கள் ராஜமும் சிதாராவும். வாடகை பணம் இருவரும் மானத்தோடு பிழைக்க வழி செய்ய, படித்துக் கொண்டிருக்கும் போதே டுயூஷன் எடுத்து சம்பாரிக்க ஆரம்பித்தாள் சித்தாரா. 

எம்எஸ்சி மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்துக் கொண்டு காலையில் ஒரு நர்சரி பள்ளியில் வேலை பார்த்தாள். பாட்டியும் பேத்தியும் குருவி போல் இந்தக் கல்யாணத்திற்குப் பணம் சேர்த்திருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக நபீசின் குடும்பம் இருந்ததால் தனியாக இருக்கும் பெண்கள் என்று விளையாட நினைக்கும்  பொறுக்கிகளின் தொல்லை அறவே இல்லை எனலாம்.

நபீசின்  திருமணதிற்குப் பின்பும் அவரது மனைவி வஹிதாவின் புரிதலால் அந்தக் குடும்பத்தின்  நட்பு தொடர்ந்தது. அவரது பையன் ரியாசுக்கு சித்தாரா தான் அக்கா, அத்தை, சித்தி எல்லாம். நான்கு தெருவே கொண்ட அந்த சிறு காலனியில்  மக்கள் அனைவரும் அந்த அளவு நட்பு பாராட்டி வந்தார்கள். சிதாராவின் குடும்பத்திற்கு உறவினர்களை விட அவர்கள் தான் சொந்தம் பந்தம் எல்லாம். இப்போது அவளது திருமணதிற்குக் கூட அவர்கள்தான் மிகுந்த ஒத்தாசை. 

நாதன் வெடுக்கென்று நபீசை பல முறை பேசிய போதும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் தன் தங்கை கணவன் என்ற எண்ணத்துடன் அரவிந்திர்க்கு உடை வாங்கி வந்திருந்தார் நபீஸ். 

“எனக்கு லண்டன் ஸ்டைல் எல்லாம் தெரியாது தம்பி. எனக்கு தெரிஞ்ச அளவு வாங்கிட்டு வந்திருக்கேன். பிடிக்கலேன்னா தயங்காம மாத்திக்கோங்க. சவுரியமா இருக்கட்டும்னு பில் வச்சுருக்கேன்” என்றார் தயக்கத்துடன். 

வான்ஹுசைனில் வாங்கிய உடைகள் அதன் விலையை அரவிந்துக்குப்  பறை சாற்றின. இது தன் மேல் கொண்ட அபிமானத்தால் என்று நம்புவதற்கு அரவிந்த் ஒன்றும் முட்டாளல்ல. அவன் சொந்த அக்கா கணவர் பூ வாங்கியதற்கு பில் தருகிறார். யாரோ ஒருவர். சிதாராவின் மேல் கொண்ட அன்பால் அவனுக்குப்  புது உடை எடுத்துத் தருகிறார். தங்கை என்று உதட்டளவில் சொல்வது வேறு, இவர் செயலால் நிரூபிக்கிறார். சித்தாரா சொன்னதைப் போல இவர்தான் அவளுக்கு உண்மையான அண்ணன். 

“நீங்க ஊருக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு நாள் வீட்டுக்கு விருந்துக்கு வரணும்” என்று அழைப்பு விடுத்தார். அக்கம் பக்கம் வேறு யாரும் அருகில் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு மெதுவாக 

“ வந்து தம்பி…. சித்தாரா தாய் தகப்பன் இல்லாத பொண்ணு. நல்ல பொண்ணுதான் இருந்தாலும் மனசுல படுறத பட்டுன்னு பேசிடுவா. அவ ஏதாவது பேசிட்டா மனசுல வச்சுக்காதிங்க. ஆனா ஒருத்தர் மேல பிரியம் வச்சுட்டா அவங்களுக்காக எதுவும் செய்வா. இப்ப பாட்டிய விட்டுட்டு ஊருக்குப் போறத நெனச்சுக்  கொஞ்சம் கவலையா இருக்கா. நாங்களும் அவள விட்டுட்டு நாங்க எப்படி இருக்கப் போறோம்னு தெரியல” ஏதோ சொல்ல நினைத்து எதை எதை எதையோ பேசி முடித்தார். 

அங்கு பொம்மை போல நடந்துக் கொண்டிருந்த ஸ்ராவணியை தூக்கிக் கொண்டவர் சித்தாரா வீட்டுக்கு சென்றார். 

அவர் பேசியதை யோசித்த அரவிந்துக்கு சிதாராவிர்க்கு இந்தத் திருமணத்தில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது என்ற எண்ணம் ஊர்ஜிதமானது. அவனது மூத்த அக்கா சுதா கல்யாணத்திற்கு பின்  புது இடத்திற்குப் போவதை நினைத்து  புலம்பித் தள்ளி விட்டாள். அந்த பயம் நம் பெண்கள் நிறைய பேருக்கு உண்டு. இரண்டாவது அக்கா சங்கீதா தன் அத்தை மகன் கதிரையே கல்யாணம் பண்ணிக் கொண்டதால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 

இப்போது சிதாரவின் தயக்கத்துக்குக் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பாட்டியை விட்டுப் பிரிவதால் இருக்கலாம், புது நாட்டுக்கு வருவதால் இருக்கலாம், கல்யாணம் முடிவான சூழ்நிலை கூட இருக்கலாம். இல்லை நினைப்பதற்குக் கஷ்டமாக இருந்தாலும் ரெடிமேட் குடும்பம் ஒன்றில் தன்னை இணைத்துக் கொள்வதால் கூட இருக்கலாம். எதுவென்று தெரிந்து அவளது தயக்கத்தைக் களைய முயல வேண்டும். இதெல்லாம் யோசித்த அரவிந்த் தன்னைப் பிடிக்காமல் கூட இருக்கலாம் என்று தவறிக் கூட நினைக்கவில்லை .

 அரவிந்த் ஆனாலும் உனக்கு உன்மேல் ஓவர் கான்பிடன்ஸ் தான்.

மாடியில் வஹிதா சிதாராவிடம் குறை பட்டுக் கொண்டிருந்தார் 

“ ஏய் சித்தாரா, நான் தான் கல்யாணத்துக்கு முதல் நாள் மெகந்தி போட்டு விடுறேன்னு சொல்லி இருந்தேன்ல என்னடி இப்படி உங்க பாட்டி ஸ்டைல்ல விரலுக்குத் தொப்பி போட்டு இருக்க” 

பழைய ஸ்டைலில் விரல்களில் தொப்பி, உள்ளங்கையில் பெரிய வட்டம் சுற்றிலும் குட்டி குட்டி வட்டங்களுடன் இருந்த அவளது கைகளைப் பார்த்து ஆதங்கப்பட்டார்.

“ கோன் எல்லாம் வேஸ்ட். நாளைக்கு உன் கையைப் பார்த்து என்ன இப்படி பழைய பஞ்சாங்கமா இருக்கன்னு நினைக்கப் போறாரு மாப்பிள்ளை. ஏண்டி நான் கேட்டு கிட்டே இருக்கேன் வாயத் திறந்து ஏதாவது சொல்லேன்”

யாரிடமோ பேசுகிறார்கள் என்பது போல எப் எம் ரேடியோவைத் திருகிக் கொண்டிருந்த சித்தாரா “எல்லாம் அந்த மூஞ்சிக்கு இதுவே அதிகம்” 

“யாரு மூஞ்சிக்கு அதிகம்” என்று கேட்டுக் கொண்டே மாடி ஏறி வந்தார் நபீஸ். 

சப்தம் எழாமல் கணவரைப் பார்த்து “ அரவிந்த்” என்று வாயசைத்தார் வஹிதா. பின் சத்தமாக “பாருங்க உங்க தங்கமான தங்கச்சியால இந்தக் கோன் எல்லாம் வேஸ்ட் ஆயிடுச்சு” என்று புகார் கூறினார். 

மெதுவாக அவளிடம்  நபீஸ் “ஏண்டி அவ மருதாணி வச்சுக்கிட்டதே பெரிய விஷயம். நீ வேற அவ கோவத்த கிளப்பிடாத” என்றவர் சத்தமாக

 “ஏன் வேஸ்ட் ஆகுது இந்த குட்டிக்கு போட்டு விடு” என்று கையில் தூக்கிக் கொண்டு வந்திருந்த  ஸ்ராவநியை அவளிடம் தந்தார்

“ போட்டுக்குறியா பாப்பா” என்றவர் அவள் சரி என்று தலையசைததும் அமர வைத்து போட்டு விட ஆயத்தமானார். 

“போடாதிங்க  அக்கா” என்று தடுத்த சிதாராவை பயத்துடன் பார்த்தாள்  ஸ்ராவணி. 

அவளின் பயத்தைப் போக்க அன்பாக  அவளது கன்னங்களைத் தட்டிக் கொடுத்து ஒரு முத்தம் வைத்த சித்தாரா 

“ பட்டு பாவாடைல கரை பட்டுடுச்சுன்னா போகாது. வேற டிரஸ் போட்டுடலாம்” கூட வந்திருந்த சிறு பெண்ணிடம் கீழே போய் வேறு உடை வாங்கி வரும்படி சொன்ன சித்தாரா கையோடு ஸ்ராவனிக்கு அந்த உடையை மாற்றி விட்டாள். 

அந்த பாவாடை சட்டை ஸ்ராவனிக்கு லூசாக இருப்பதைப் பார்த்தவள் எங்கு பிடிக்க வேண்டும் என்று அளவு எடுத்துக் கொண்டு வஹிதா அவளது கையில் மெஹந்தி போட்டு முடிப்பதற்குள் உலகத்தில் அதுதான் முக்கியமான வேலை போல தையல் மெஷினின் முன் அமர்ந்து சடுதியில் ஸ்ராவனிக்கு ஏற்ற அளவில் துணியை ஆல்டர் செய்து முடித்தாள். 

தன்னுடைய திருமணத்தைப் பற்றி அவள் பேச விரும்ப வில்லை என்று சித்தாரா  மறைமுகமாக சொன்னாள். தங்கநகை கூட பழைய விலையில் வந்தால் வாங்க விரும்பாதவள் சித்தாரா. யாரோ போட்ட நகைய நாம ஏன் போட்டுக்கணும் என்று நினைப்பாள். இப்போது கணவனே செகண்ட் ஹாண்ட் என்று மனதினுள் புழுங்கிக் கொண்டிருக்கிறாள். இது வஹிதாவுக்கும் புரிந்தது. காலம்  இப்படித்தான் சில சமயங்களில் முடிச்சு போட்டு விடுகிறது. ஆல்டர் செய்த ஸ்ராவனியின் துணியை ஒரு பையில் போட்டு வீட்டில் தந்து விடுமாறு சொன்னாள். மறுபடியும் ஒரு முத்தம் கொடுத்து அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். 

அவளுக்கு புத்தி சொல்ல வேண்டும் என்று நினைத்த நபீஸ் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் . அவள் செய்யும் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

“சித்தாரா, அந்தக் குட்டி பொண்ணு ஸ்ராவணி, அரவிந்தோட பொண்ணு. அதாவது நாளைக்கு காலைல இருந்து உன்னோட மூத்த பொண்ணு”

நடந்துக் கொண்டிருந்த அவள் கால்கள் ஒரு வினாடி மட்டுமே தயங்கியது. அது இப்போதுதான் அவள் ஸ்ராவணியை முதல் முறையாகப் பார்க்கிறாள் என்று அனைவருக்கும் சொன்னது. 

“அதுனால என்னண்ணா, எனக்கு கோவம் பெரியவங்க மேலதான். இந்தக் குட்டிப் பொண்ணு என்ன செய்யும் பாவம்”

“பாவப்படுறதோட நிறுத்திக்காம ஸ்ராவணியை உன் பொண்ணா நினைக்கணும்”

“முயற்சி பண்ணுறேன் அண்ணா” வினாடியும் தயங்காமல் பட்டென சித்தாரா வாயில் இருந்து வார்த்தைகள் தெறித்தன.

மத்தவங்க மாதிரி இந்த நிமிஷத்துல இருந்து  இவ என் மூத்த பொண்ணு அப்படின்னு வாய் வார்த்தையாகக் கூட சொல்லாம, ஸ்ராவனிய பொண்ணா நினைக்க முயற்சி பண்ணுறேன்னு சொல்லுறாளே. இன்னமும் இரண்டாந்தாரம், செத்து போன மூத்த தாரத்தைக்  கடவுளா கும்பிடவும், மூத்தாள் பிள்ளைங்களை தங்களோட பிள்ளைகளா நினைக்கவும் செய்யணும்னு தானே எல்லாரும் எதிர் பார்க்குறாங்க. இவ இப்படி போய் அரவிந்த் கிட்ட சொன்னா அவனுக்கு இவ மேல கோவம் வராது? கவலைப் பெருமூச்சு விட்டார்கள் வஹிதாவும் நபீசும். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50

இரவு ராஜுவின் வீட்டிலேயே சரயுவைத் தங்க வைத்தார்கள். வீட்டின் முன் நின்று வரவேற்ற வேம்பும், பின்கட்டிலிருந்த கிணறும் சரயுவுக்கு தன் வீட்டை நினைவு படுத்தியது. ஆனாலும் அவள் வீடு பெரியது. ஒரு தெருவில் ஆரம்பித்து பின் தெருவில் முடியும். இந்த வீடு

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45

கண்கள் கலங்க ஜிஷ்ணு சொன்னதை இதயம் கலங்கக் கேட்டிருந்தாள் சரயு. “விஷ்ணு… குண்டூர்ல என்னைப் பாக்குறப்ப இதெல்லாம் ஏண்டா சொல்லல” “நானே அவ்வளவு நாள் கல்யாணம் ஆனதை உன்கிட்ட மறைச்சு நடிச்சுட்டு இருந்தேன். எப்படி இதை சொல்லுவேன்? ஆனா அப்பல்லாம் என்