Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 7

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 7

அரவிந்தின் வாழ்க்கை முறை சற்று மாறியது. தன்னுடன் படிக்க ஒரு நல்ல துணை  கிடைத்தது பாபுவுக்கு மிகவும் திருப்தி. பாபு அலுவலகம் செல்ல அரவிந்தின் அலுவலகத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். அதனால் தினமும் காலையில் அரவிந்தை அலுவலகத்தில் விட்டுவிட்டு, மாலை அரவிந்தின் அலுவலகத்திற்கு எதிர்த்தாற்போல் இருந்த கடையில் காத்திருந்து தனது பைக்கில் விடுதிக்கு அழைத்துச் சென்றான் பாபு. நேரத்தை வீணாக்காமல் இருவரும் இருவரும் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்காமல் கடமையே கண்ணாக ஆயினர். அரவிந்த் இரு மடங்கு உழைக்க ஆரம்பித்தான்.

 வார நாட்களில் குறைந்தது ஐந்து மணி நேரம் இருவரும் படிப்பார்கள். வார  இறுதி நாட்களில் கோச்சிங் கிளாசுக்காக பெங்களூர் சென்று விடுவான் பாபு. வெள்ளி இரவு கிளம்புபவன் திங்கட்கிழமை காலையில் தான் வருவான். அந்த இரு நாட்களில் பாபு வாரநாட்களில் கொடுத்த பாடங்களைப் படிப்பது மட்டுமின்றி அரவிந்த் தனது துணி துவைக்கும் வேலை, வீட்டிற்குக் கடிதம் போடும் வேலை, திருச்சிக்குப் போய் வரும் வேலை முதலியவற்றை முடித்துக் கொள்வான். வீட்டிற்குப் போன் பேசும் வேலையை மாலை அலுவலகம் முடிந்து வரும்போது செய்து விடுவான். 

பாபு தனது கலகலப்பான  பேச்சால் சைலஜாவை அவனுடன் இரண்டொரு வார்த்தைகள் பேச வைத்திருந்தான். அரவிந்த் அது எதற்கும் முயற்சிக்கவில்லை.  சைலஜா இப்போது அரவிந்தை  நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்திருந்தாள். ஆனால் உடனே குனிந்துக் கொள்வாள். இந்தக் கடையில் இருக்கும் பெஞ்ச், சேர் போல நீயும் ஒரு பொருள் என்பதைப் போல் இருக்கும். பாபு வர லேட் ஆனால் அந்தக் கடையில் அமர்ந்து தினமணியைப்  படித்தபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். தெரியாத்தனமாய் நிமிர்ந்து சைலஜாவைப் பார்த்து விட்டாள் புன்னகைப்பாள். இப்படியே அவனது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

அவளைப் பார்பாதற்கென்றே அவனது அலுவலகத்தில் உள்ள ஆண்கள் அடிக்கடி அந்தக் கடைக்கு செல்வார்கள். எதையாவது தேவை இல்லாததை வாங்கிக் கொண்டு அவளிடமும் இரண்டு வார்த்தைகள் பேசி செல்வார்கள். 

“ஷைலஜா லேட்டஸ்ட் பாமிலி பிளான் பத்தி சொல்லுங்க” விஷயம் கேட்பது போல விஷம்  கக்குவார்கள் 

அவர்களை நேருக்கு நேர்  பார்த்துக் கேட்பாள் “சாரி சார் நீங்க கேட்குற கேள்வி எனக்கு புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லுரிங்களா?”

“அதுதான்மா இப்ப வந்திருக்குற டாட்டா மொபைல் பாமிலி பிளான்”

“அப்படி புரியுற மாதிரி  சொல்லுங்க. எல்லாத்தையும் தெளிவா எழுதி உங்க கண்ணு முன்னாடியே இங்க ஒட்டி  வச்சிருக்கோம் . நீங்களே படிச்சித்  தெரிஞ்சுக்கோங்க. உங்களுக்குத் தமிழ்  படிக்கத் தெரியும் இல்லையா? இல்ல நான் படிச்சு சொல்லனுமா?”

அவளும் அவர்களிடம் சிரித்த முகம் மாறாமல் பதில் சொல்லி அனுப்புவாள். ஆனால் அந்த சிரிப்பிற்குப் பின்னால் இருக்கும் சோகம் அவனுக்குத் தானே தெரியும். அவனுடன் பிறந்தவர்கள் ஐந்து பேரும் பெண்கள். தனது அக்கா தங்கையிடம் யாராவது இப்படிப் பேசினால் எவ்வளவு கோவம் வருமோ அவ்வளவு கோவம் வரும் அவர்கள் மேலே. வசதி குறைவென்ற பெண் என்றால்  இந்த ஆண்களுக்குத் தான் எவ்வளவு இளப்பம். 

 ஒன்று மட்டும் அப்போது அவனுக்கு விளங்காமல் இருந்தது. அவன் அந்தக் கடைக்குள் நுழையும் போதெல்லாம் கேட்கும் பாட்டு 

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் 

காதல் முகம் கண்டு கொண்டேன் 

என்பதுதான். என்னடா இது இந்தக் கடையில் இந்தப் பாடலைத் தவிர வேறு ஒன்றும் இல்லையா என்று  அரவிந்தே பல தடவை யோசித்து இருக்கிறான். அப்போதே இன்னும் கொஞ்சம் நன்றாக யோசித்து சைலஜாவின் நாட்டத்தைப் பற்றிப் புரிந்திருந்தால் அவளைக் கூப்பிட்டு தனது குடும்ப நிலையை விளக்கி புத்தி சொல்லி இருப்பான், பின்னர் அந்தக் கடை பக்கமே திரும்பி இருக்க மாட்டான். பாபுவிடம் நான் பஸ்சில் வந்து விடுகிறேன் என்று முடிவாக சொல்லி இருப்பான்.  

அது ஒரு வேளை நடந்திருக்கும்  பட்சத்தில் இன்று மலரும் நினைவுகள் வராமல் அவனது மனதில் சித்தாரா பற்றி இனிய கனவுகள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சிதாராவும் இப்படி செகண்ட் ஹாண்ட் மாப்பிள்ளை என்று அவனை  நினைத்து நினைத்து ஆத்திரப் பட்டுக் கொண்டிருக்கமாட்டாள்.

அரவிந்துக்கு சைலஜாவைப்  பார்க்கும் போதெல்லாம் அழகான பொம்மை ஒன்றைப் பார்ப்பது போலிருக்கும். நெற்றியில் விழும் கற்றை குழலைக் காற்று வந்து மோதிக் கலைப்பதையும் அதனை  அவள் ஒதுக்கி விடுவதையும் பார்க்கவே அவனது நண்பர்கள்  ஆசைப் படுவார்கள். அவளது சிவந்த கன்னங்களில் சில இடங்களில் பருக்கள் வந்து மறைந்த தடம் பவளம் போல் மின்னும். கண்களில் அளவாய் வரைந்த மை இரண்டு கெண்டை மீன்கள் துள்ளி விளையாடுகிறதோ என்று ஐயம் கொள்ளச் செய்யும். கச்சிதமாய் சுடிதார் போட்டு கழுத்தை சுற்றி துப்பட்டாவை பின் செய்து இருப்பாள். வேறு எந்த இளவயது ஆணிடம் பேசும்போது தலை குனிந்து தான் பேசுவாள். தலையை குனியும் தாமரையை நினைவு படுத்துவாள். அரவிந்தை அவள் பெயர் சொல்லி அழைத்ததே இல்லை. திருமனதிற்குப் பின் தான் அவளை வற்புறுத்தி பெயர் சொல்லிக் கூப்பிட சொல்வான். ‘அர்விந்த்’ என்று மென்மையாக எங்கே அவனது பெயரை அழுத்தி உச்சரித்தால் அவனுக்கு வலிக்கப் போகிறதோ என்பது போல் உச்சரிப்பாள். 

திருமணத்திற்கு முன் அவளுடன் அவன் எங்கும் சென்றதில்லை. திருமணத்திற்குப் பின் தான் இருவரும் சேர்ந்து வெளியே செல்ல ஆரம்பித்தனர். 

ஹோட்டலுக்கு சென்றால் “உனக்கு என்ன பிடிக்கும் ஷைலு?”

“உங்களுக்குப் பிடிச்சதுதான் எனக்கும் பிடிக்கும் . அதுனால உங்களுக்குப் பிடிச்சதே ஆர்டர் பண்ணுங்க”

“எப்பவுமே நான் தானே எனக்குப் பிடிச்சதே ஆர்டர் பண்ணுறேன். இன்னைக்கு நீ தான் ஆர்டர் பண்ணுற. நாம ரெண்டு பேரும் உனக்குப் பிடிச்சது சாப்பிடப் போறோம்”

குறுஞ்சிரிப்புடன் அவனைப்  பார்ப்பவள் நெடு நேரம் கழித்து சர்வரிடம் ஆர்டர் பண்ணுவாள் “ரெண்டு ப்ளேட் இட்லி, ரெண்டு மசால் தோசை”

சிரிப்பான் அரவிந்த் “என்ன ஷைலு, எனக்கு பிடிச்சதே மறுபடியும் ஆர்டர் பண்ணி இருக்க? உனக்கு என்னதான் பிடிக்கும்”

வெட்கத்தோடு தலை குனியும் ஷைலஜா சொல்வாள் “ எனக்கு உங்களைத்தான் பிடிக்கும்”

‘ஹையோ நீ கேனிபல்னு தெரியாம போயிடுச்சே”

“அப்படின்னா”

“நரமாமிசம் சாப்பிடுறவங்கன்னு அர்த்தம்”

“ச்சே என்னங்க இப்படி சொல்லிட்டிங்க?” கண் கலங்கி விடும் சைலஜாவுக்கு. 

இவ்வளவு மென்மையாக அனிச்ச மலர் போல ஒரு சொல்லுக்கே முகம்வாடும் பெண்ணா என்று வியந்து பின்னர் அவளை சமாதானப் படுத்தி சாப்பிட வைப்பதற்குள் அரவிந்துக்குப் போதும் போதும் என்றாகி விடும்.

ஷைலஜா ஆசைப் பட்டு வாங்குவது மேக்அப் சாதனங்களைத்தான். “லோரியல் வாங்கட்டுமா? அதுல புதுசா லிக்விட் லிப்ஸ்டிக் வந்திருக்காம். விலை அதிகம்னா வேண்டாம்” தயங்கியபடியே அவனிடம் கேட்பாள். 

முதன் முதலில் திருமணம் முடிந்தவுடன் இருவரும் பெங்களூரில் இருந்து கிளம்பும்போது சைலஜாவுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று எண்ணி  கடையில் வாங்கிக் கொள்ள சொல்லிவிட்டு, பார்வையாலேயே அங்கு இருக்கும் பொருட்களை  ஆராய்ந்துக் கொண்டிருந்தான். பின் கவுன்ட்டரில் பில் கட்டும் போது தொகையைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டான். 

“மேடம் இது கண்டிப்பா எங்க பில்லா இருக்காது. இதுல ஆயிரதைநூறு போட்டு இருக்கு. நாங்க வெறும் லிப்ஸ்டிக், ஐப்ரோ அப்பறம்  ஹேர்பேண்ட் தான் வாங்கினோம். அதுக்கு இவ்வளவு வர்ற சான்சே இல்ல”

அவனைப் பரிதாபமாகப் பார்த்த பில் கவுன்ட்டர் பெண் “சார் இதெல்லாம் வெளிநாட்டு பொருள். இவ்வளவு விலைதான் வரும். பில் போட்டுடவா சார்”

ஷைலஜாவிற்கும் இது தெரியாது போலும். கையைப் பிசைந்துக் கொண்டு அவனை பயப் பார்வை பார்த்தாள். பின்னர் எனக்கு வேண்டாம் என்று தலையாட்டினாள். ஆனால் அரவிந்துக்கு முதன் முதலாக அவளுக்கு வாங்கித் தர என்று அழைத்து வந்து விட்டு ஏமாற்ற மனமில்லை. பில் கட்டி வாங்கினான். 

“சாரிங்க இவ்வளவு விலை இருக்கும்னு எனக்குத் தெரியாது”

இந்தப் பணம் இருந்திருந்தால் நம்ம வீட்டுக்கு ஒரு மாசம் மளிகை சாமான் வாங்கிப் போட்டிருக்கலாமே என்று கணக்குப் போட்டுக்  கொண்டிருந்த அரவிந்தின் மனம் மனைவியின்  கவலையால் மலர்ந்து போயிற்று. 

“என்கிட்ட நீ தயங்கவே வேண்டாம் சைலஜா. உனக்கு என்ன வேணுமோ கேட்கலாம்”

அழகாக சிரிப்பாள் சைலஜா. அவளை ரசிப்பான் அரவிந்த். தனது அக்கா தங்கை அம்மா உறவினர்கள் என்று மட்டுமே வாழ்ந்திருந்த அரவிந்துக்கு சைலஜா ஒரு புது உலகத்தைக் காட்டினாள். அவள் அவனுக்கு சுகமான சுமையாக இருந்தாள்.

“என்னங்க, இப்படி பாக்குறிங்க?”

“இல்ல ஷைலு, இந்த லவேண்டர் சேலை கட்டிட்டு முகம் சிவக்குற  உன்ன பாத்தா குங்குமப்பூ நினைவுக்கு வருது”

“புரியலையே”

“குங்குமப் பூ லவேண்டர் நிறம்தான் அதுல நடுவுல இருக்குற சிவந்த த்ரெடைத் தான் நாம குங்குமப்பூன்னு சொல்லிட்டு இருக்கோம். உன்னை பார்க்கும் போது அந்தப் பூ  நினைவுதான் வருது”

சைலஜாவுடன் வாழ்ந்த காலம் குறைவெனினும் அது விட்டுச் சென்ற நினைவுகள் பலப் பல. அதில் முக்கியமானது ஸ்ராவணி. ஸ்ராவணியை முதன் முதலில் பார்த்தபோது குழந்தை சத்து குறைபாட்டால் குறைந்த எடையுடன் இருந்தாலும் பனியில் நனைந்த ரோஜாவைப் போல் இருந்தாள். இவள் என் ரத்தம், இனி என் வாழ்வின் பிடிப்பு இவள்தான்  என்று எண்ணி எண்ணிப்  பூரித்தான். ஸ்ராவணியை வீட்டில் பெண் துணையில்லாமல் இந்த அளவு கொண்டு வருவதற்குள் அவன் படாத பாடு பட்டு விட்டான். இந்த சித்தாராவைப் பார்த்தால் கொஞ்சம் விளையாட்டுப் பெண் போலத் தெரிகிறது. ஆனால் கீரைக் காரியக் கூட கரிசனமாக கவனித்துக் கொள்கிறாள், அதனால் ஸ்ராவணியையும் வயிறு காயப் போடாமல் கவனித்துக் கொள்வாள். 

அரவிந்த் யோசனையுடன் அமர்ந்திருப்பதைக் கண்ட அவனது அம்மா சுமித்ரா “என்னடா யோசனை?” என்றார்.

அவனது கடைசி தங்கை சாரிகா சொன்னாள் “அம்மா அவன் சித்தாரா கூட டூயட் பாடிட்டு இருப்பான். நீயேன்மா கலைக்கிற/”

“பச்…. போங்கம்மா. எனக்கே இந்தக் கல்யாணம் அவசியமான்னு தோணுது?”

கையை கழுவி விட்டு அவனருகே வந்த சுமித்ரா “ டேய் அரவிந்த் நாளைக்குக் கல்யாணத்த வச்சுட்டு, என்னடா இப்படி  ஒரு குண்டத் தூக்கிப் போடுற. ஏற்கனவே நான் நொந்து போய் இருக்கேன். நீ வேற ஏன் தலைல இன்னொரு தடவைக் கல்லத் தூக்கிப் போட்டுடாதடா. சாரிகா போய் அண்ணனுக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா”

மகளை அனுப்பி விட்டவள் “என்னடா உனக்கு மனசு கவலை”

“இல்லம்மா இப்ப ஏதோ நானும் ஸ்ராவனியும் நிம்மதியா இருக்கோம். இருக்குற கடனுக்கு வட்டி கட்டிட்டு மிச்சம் மீதி சம்பளத்துல வாழ்க்கை ஓடிட்டு இருக்கு. இப்ப ஒரு கல்யாணத்தைப் பண்ணி, அவ மனச சந்தோஷப் படுத்த அந்தப் பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி என்னை மாத்திட்டு, நினைக்கவே மலைப்பா இருக்கும்மா. இந்த சித்தாராவப்  பார்த்தா கொஞ்சம் கறாரான பொன்னாத் தெரியுது. அவ பாட்டுக்கு  ஸ்ராவனிய ஹாஸ்டெல்ல சேருங்க அப்படி இப்படின்னு சொல்லிடுவாளோன்னு பயம்மா இருக்கும்மா. அவகிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லிட்டிங்கல்ல?” தனது தாயிடம் கவலையைக் கொட்டி விட்டான்.

சிதாராவை அரவிந்த் பார்த்து விட்டான் என்று தெரிந்ததும் சுமித்ராவுக்கு நிம்மதி. இருந்தாலும் நாதன் பார்த்திருப்பாரோ என்று நினைத்துப் பதறி விட்டார். 

“சிதாரவ நீ பார்த்தது, நம்ம சுதா வீட்டுக்காரருக்குத்….. “

“கவலைப் படாதேம்மா அவருக்குத் தெரியாது. நல்லா தூங்கிட்டு இருந்தார். நானும் ஒரு செகண்ட் தாம்மா பார்த்தேன். அந்தப் பொண்ணு மாடிலே ஏறிப் போயிட்டு இருந்தா” அவள் தன்னைக் கிண்டல் செய்ததை அவன் சொல்லவில்லை. 

நிம்மதிப் பெருமூச்சு விட்டார் சுமித்ரா. பின் மகனுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கினார். 

“போடா பைத்தியம். இந்த சித்தாராவை ஒரு வருஷத்துக்கு மேல எனக்குத் தெரியும். நர்சரி ஸ்கூல்ல வேலை பாக்குறா. இந்த தெரு வாண்டுங்க எல்லாம் அவ வீட்டுலதான் குடி இருக்குங்க. நீ சொன்ன மாதிரி கறாரா தெரியும் ஆனா ரொம்ப குறும்புக்காரி, பொறுப்புள்ள பொண்ணு. தினமும் சாயந்தரம் காலேஜ் விட்டு வந்ததும் ட்யூஷன் எடுப்பா. எல்லாரையும் உருட்டி மிரட்டி படிக்க வச்சுடுவா. பார்ட் டைம் எங்கேயோ வேலை செய்துட்டு இருக்கா. இப்ப கல்யாணம் ஆகப்  போகுதுன்னு நிறுத்தி வச்சுருக்கா. நம்ம ஸ்ராவனிய ரொம்ப நல்லா பாத்துக்குவா கவலைப் படாதே. சித்தாரா  பாட்டி ராஜம் நம்ம லாலாபேட்டை தான். அவங்க குடும்பமே நமக்கு உறவுக்காரங்கதான். என் கல்யாணத்துல எனக்கு அலங்காரம் செஞ்சு விட்டதே சித்தாரா பாட்டிதான்னா பாத்துக்கோயேன். அவங்களுக்கு ரெண்டு பையன். முதல் பையன் கல்கத்தாவுல இருக்கார். இரண்டாவதுதான் சித்தாரா அப்பா ஜனார்த்தனன், தன்  கூட வேலை செஞ்ச பொண்ணக் காதல் கல்யாணம் பண்ணிகிட்டார். அதுனால கொஞ்சநாள் போக்கு வரத்து இல்லாம இருந்தது. ராஜம்  லாலாபேட்டைலையே இருந்தாங்க. அப்பறம் சித்தாராவோட தாத்தா மறைவுக்கு பிறகு அவளோட அம்மா அப்பா  கூட வந்து இருக்க சொல்லி  எவ்வளவோ வற்புறுத்தி கூப்பிட்டுப் பார்த்தாங்க ஆனா வர மாட்டேன்னு ராஜம்  சொல்லிட்டாங்க” 

சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டார் சுமித்ரா “விபத்துல அம்மா அப்பா இறந்தப்ப சித்தாரவுக்கு ரெண்டு வயசுதான். அதுக்கப்பறம் ராஜம் அவங்க பேத்திய வளர்க்க இங்கேயே வந்துட்டாங்க” அவனது கேள்விக்கு பதில் சொல்வதை கவனமாகத் தவிர்த்திருந்தார் சுமித்ரா.

அம்மா பேசுகிறார்களே என்று வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருந்த அரவிந்த்தை சுமித்ராவினது கடைசி வாசகம் அசைத்து விட்டது. ஸ்ராவணியை விட ஒரு வயது குறைவாக  இருக்கும் போதே தாய் தந்தையை இழந்தவளா சித்தாரா. என் மகளுக்காவது நான் இருக்கிறேன். நல்ல வேளை ராஜம் பாட்டி உன் கூட வந்து இருந்தாங்க. இல்லைனா உறவுக்காரங்க துணை இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா. 

ராஜம் பாட்டியுன் மேல் அன்பும், அந்த ரவுடிப் பெண் சித்தாராவின் மேல் இரக்கமும் தனது மனதில் சுரப்பதை உணர்ந்தான் அரவிந்த்.

சுமித்ராவுக்கும் சிதாராவுக்கு இந்தக் கல்யாணத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லை என்பது போலத்தான் மனதில் பட்டது. நாராயணனை பார்ப்பதற்கு முன் தன்னை விட பதினைந்து வயது மூத்தவரை எப்படி கல்யாணம் செய்வது என்று மனதிற்குள் கலக்கம் அடைந்தவர் தான் சுமித்ரா. ஆனால் இப்போது அவரைத் தவிர வேறு யாரை மணந்திருந்தாலும் இந்த அளவு நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருப்பாரா என்பது சந்தேகம் தான்.

 இரு மனமும் காதல் கொண்டு அதற்குப் பின் தான் திருமணம் என்று இருந்தால் நம் நாட்டில் பாதி பேருக்குத்  திருமணமே நடக்காது என்ற நிதர்சனம் புரியும் அந்த ஆறு குழந்தைகள் பெற்ற தாய்க்கு. அவருக்கு இப்படி அவசர அவசரமாக பொய் சொல்லி மகனை வரவழைத்துத் திருமணம் செய்து வைக்க இஷ்டமில்லைதான். ஆனால் வேறு வழியில்லை இது நடந்தே ஆக வேண்டிய திருமணம். இப்போதைக்கு அவர்கள் குடும்பத்திற்கு வேண்டும் வரம் தர சித்தாரா எனும் தேவதையால் மட்டுமே முடியும். அதனால் தான் அவளது தயக்கத்தை  அவர் பொருட்படுத்தாது  சுயநலமாய் அந்த முடிவை எடுத்தார்.   மகனின் தலையைக் கோதி விட்டபடி மனதுக்குள் சொன்னார் 

‘அரவிந்த் அம்மாவ மன்னிச்சுடுடா. ஆயிரம் பொய் சொல்லித்தான் இந்தக் கல்யாணம் நடக்குது. இதுல வேற உன் மனசு இப்ப சைலஜாவுக்கும் சித்தாரவுக்கும் நடுவுல ஊஞ்சலாடிட்டு இருக்கு. ஸ்ராவணி நிலமைய நெனச்சு சூடுபட்ட பூனை மாதிரி தவிக்கிற. நீ தவிக்கிறத நான் கண்டும் காணாம இருக்கேன்.  சித்தாராவப் பார்த்தேன்னு நீ சொன்னப்ப உன் கண்ணு ஓரத்துல ஒரு பொய்  தெரிஞ்சது. அதை நான் பார்த்தேன். உன் உள் மனசுக்கு சித்தாராவப் பிடிச்சுடுச்சுன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு . எனக்கு புரிஞ்சது சீக்கிரம் உனக்கும் புரியும். 

 உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி சித்தாரா  நடந்துக்குவாளான்னு கேள்வி கேட்காம அவளுக்குப் பிடிச்ச மாதிரி நான் என்னை மாத்திக்குறேன்னு சொன்ன பாரு, இந்த அளவு அனுசரணையான ஒரு கணவன் கிடைச்சா எந்த கல் மனசு பொண்ணும் மாறிடுவாடா. சித்தாராவுக்கு இப்போதைக்கு உன் மேல ஈர்ப்பு  இல்லாம இருக்கலாம். ஏன்னா இந்தக் கல்யாணம் நடக்குற சூழ்நிலை அப்படி. எனக்கு நம்பிக்கை இருக்கு அவ கண்டிப்பா ஏன் பையனைப் புரிஞ்சுட்டு  கொண்டாடப் போறா. கடவுளே என்னோட மகனுக்கு ரெண்டு மனசு தா. சைலஜாவை சுத்தமா மறக்க  ஒண்ணு , சித்தாராவை முழுமனசோட நேசிக்க இரண்டாவது’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 7’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 7’

அத்தியாயம் – 7   ரஞ்சனுக்கு உறக்கமே பிடிக்கவில்லை. கனவு நினைவு இரண்டிலும் நந்தனாவே நிறைந்திருந்தாள். மாதம் இருமுறை பெரியகுளம் வந்தது மறைந்து,  வாரம் இரண்டு  நாட்களாயிற்று. புதிதாக ஆரம்பித்த தொழிலுக்கு அது உதவியாகக் கூட இருந்தது. அவன் தாய் அகிலாண்டத்துக்கும்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 42தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 42

அந்த பார்க்கில் அமர்ந்து சரயுவுடன் உணவு உண்ணும்போது உலகிலேயே அதிர்ஷ்டசாலியாய் தன்னை உணர்ந்தான் ஜிஷ்ணு. “தாங்க்ஸ் சரயு” “நான் சொன்னத கவனிச்சியா இல்லையா?” கடுப்பாய் கேட்டாள். “பேசினியா என்ன? தேவதைகள் லா லான்னு பாட்டுப் பாடினதுல ஒண்ணும் கேக்கல” என்று உதட்டைப்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 9தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 9

“என்னடா ஜிஷ்ணு… இப்படி வந்து படுத்துகிட்ட” அங்கலாய்த்தபடி வந்தான் வெங்கடேஷ். நெல்லையப்பன் சீவித் தந்திருந்த இளநியை… வாயால் வண்டி ஓட்டியபடி வந்த அணுகுண்டும் சரயுவும் நண்பர்கள் இருவருக்கும் தந்தார்கள். “என்னமோ நான் ஆசைப்பட்டு வந்து ஹாஸ்பிட்டல்ல படுத்துட்ட மாதிரி சொல்லற” இளநியை