Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 6

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 6

அரவிந்துக்கு உறவினர்களின் கேள்வி காதில் விழுந்ததும் திகைப்பு. கல்யாணத்துக்கு முன்னே ஸ்ராவணி பிறந்து விட்டாளா? என்ற கேள்விதான் அந்தத் திகைப்புக்குக் காரணம். யாரைப் பார்த்து இந்த வார்த்தை கேட்டு விட்டார்கள். நானா? மூன்று அக்கா இரண்டு தங்கைகள் இருக்கும் நானா தாலி கட்டும் முன்பு ஒரு பெண்ணிடம் முறை தவறி நடந்துக் கொள்வேன்? 

வேண்டும்  என்றே அந்த மாதிரி பொருள் வரும்படி பேசிய நாதனின் மேல் கோவம் இருந்தாலும் வெளிப்படையாகக் காண்பிக்க முடியாது. கோவத்தின் வடிகாலாக தலையணையை ஓங்கிக் குத்தினான். கதிர் மாமாவை வார்த்தைக்கு வார்த்தை குடிகாரன் என்று நாதன் சொல்லிக் காட்டுவதில்லையா? மாதத்திற்கு ஒரு முறை மது அருந்துவதைக் கூட மனைவியிடமும் மற்றவரிடமும் இதுதான் எனது வீக்நெஸ் என்று தைரியமாகச் சொல்லும் கதிரை நினைத்தான். தன்னுடைய பலவீனம் இது என்று ஒத்துக் கொள்வதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். என்னிடம் அது இல்லை. முடிந்தால் கதிர் மாமாவிடம் கொஞ்சம் தைரியத்தைக் கடன் வாங்கிக் கொள்ள வேண்டும். 

சித்தாரா தைரியமானவளா? பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. கொஞ்சம் குறும்புத்தனமும்  இருக்கிறது. தன்னை பார்த்து அவள் விசிலடித்த  பாடலை நினைத்தான். தான் மணமகன் என்று அவள் தெரிந்துதான் பாடினாளா? இல்லை ஏதோ கிண்டல் செய்ய வேண்டும் என்று நினைத்துப் பாடினாளா? தெரியவில்லை. கிராமத்தில் குல தெய்வம் கோவிலுக்கு வேண்டுதல் செலுத்த சென்றிருந்தவள் இப்போதுதான் வந்திருக்கிறாள். செய்தி உபயம் சாரிகா. சத்யாவிடம்  ஏதாவது விவரம் கேட்கலாம் என்றால் வீடு முழுவதும் விருந்தாளிகள். அவர்கள் முன்னே கேட்பதற்குத் தயக்கமாக இருக்கிறது. இங்கு மாடியில் தான் சித்தாரா  இருக்கிறாள் ஆனால் அவளை நேற்று காலையில் பார்த்ததோடு சரி. அவளுடன் பேச வேண்டும், அவள் சம்மதத்தைக் கேட்க என்று விரும்பினான். ஆனால் அவனது வீட்டில் அனுமதி மறுக்கப்பட்டது. அம்மாவிடம் கேட்டதற்கு சிதாராவுக்கு சம்மதம் என்பது போலத்தான் சொன்னார். 

நாதன் சொல்லி விட்டார் “இங்க பாருங்கத்த போன தடவை தான் யாரோ ஒருத்திய இழுத்துகிட்டு வந்து நின்னான். குடும்பப் பெயரே கெட்டுப் போச்சு. அவன் தந்த  தைரியம்தான் சாந்தாவும் ஓடிப் போனா. எங்க அம்மாவா இருந்தா தூக்குல தொங்கி இருப்பாங்க. நீங்களா இருக்குறதுனால  ரெண்டு ஒடுகாலிப் பிள்ளைங்களைப் பெத்தும் தைரியமா இருந்திங்க” 

கொஞ்சம் இடைவெளி விட்டார். மூத்த மாப்பிள்ளை நான் ஏன் அரவிந்த் காதல் கல்யாணம் பண்ணிகிட்டப்பயே தூக்குல தொங்கலன்னு திட்டுறாரா? வீட்டுல மூணு பொண்ணுங்கள வச்சுக்கிட்டு எப்படி பொறுப்பில்லாம தூக்குல தொங்க முடியும். என்று குழப்பத்துடன் பார்த்த மாமியாரிடம் தொடர்ந்தார். 

“ இவன் செஞ்ச காரியதுனாலதான் புத்தி வரட்டும்னு கொஞ்ச நாள் உங்க குடும்பத்து உறவை வெட்டி விட்டேன். அப்பறம் சாந்தா ஓடி போனப்பவும் அதே மாதிரி செஞ்சேன். இப்ப இந்தக் கல்யாணம் என் சொல்படி நடக்கல மறுபடியும் உங்க குடும்பத்துக் கூட போக்குவரத்த நிறுத்திடுவேன்” 

“முதல்ல வெட்டி விடுற பிசினச இன்ஸ்டால்மென்ட்ல செய்யாம நிரந்தரமா செய்டா ராசா. நாங்க நல்லா இருப்போம்” என்று திண்ணையில் தனது மனைவியிடம் கிசுகிசுத்தார் கதிர். 

“ பொண்ணு தான் உங்க இஷ்டப்படி பார்த்து முடிவு செஞ்சுட்டிங்க. சரி பரவாயில்ல  அரவிந்த உடனே வரச் சொல்லுங்க  வந்த உடனேயே கல்யாணத்த நடத்தி வச்சுடலாம்” பெரிய மனது பண்ணி அனுமதி அளித்தார்.

அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் அவன் திருமணத்துக்கு சம்மதம் சொன்னால்  மட்டுமே அவரால் எழுந்து நடமாட முடியும் என்ற தகவலுடன்  அரவிந்த் அவசர அவசரமாக வரவழைக்கப் பட்டான். 

“‘சரி மாப்பிள்ள அரவிந்த் ஞாயத்துக் கிழமை வர்றான். சித்தாரா வீட்டுல கோவிலுக்குப் போயிட்டுப்  புதன் கிழமை வந்திடுவாங்க  வியாழன் அரவிந்தக் கூட்டிட்டு போய் சிதாராவப் பார்த்துட்டு வந்துடலாம். அப்பறம்…..”

என்று தொடர்ந்த சுமித்திராவை இடைமறித்தவர். 

“என்ன பொண்ணு பாக்குறதா? அதெல்லாம் ஒண்ணும் தேவை இல்லை. நானெல்லாம் வீட்டுக்கு வந்து பொண்ணா பார்த்தேன். கல்யாணத்தன்னைக்குத்தான் சுதாவைப் பார்த்தேன். அது தான் நம்ப வழக்கம். பேசாம அரவிந்துக்கும்  அப்படியே செஞ்சுடலாம்.  வியாழக் கிழமை எதுக்குப் போய் பார்க்கணும், வெள்ளிக் கிழமைதான் கல்யாணமே நடக்கப் போகுதே அப்ப பாத்துகிட்டா போச்சு” என்று  சொல்லி அந்த பேச்சுக்கு முடிவு கட்டினார். 

கதிர் சங்கீதாவிடம் திட்டினார். “இந்த நாதன் மட்டும் பொண்ணு பார்க்க வந்திருந்தா அன்னைக்கே உங்க அக்கா பாழும் கிணத்துல விழாம காப்பாத்தி இருக்கலாம். என்ன செய்யுறது விதி வலியது” 

இதனால் அரவிந்த் சித்தாரா சந்திப்புக்கு முதலிலேயே வேட்டு வைக்கப் பட்டது நம்ம நாதனால். சித்தாராவின் பாட்டி சுமித்திராவிடம் தந்த அவளது போட்டோவையும் தானே வாங்கி வைத்துக் கொண்டு அதை அரவிந்திடம் காட்டக் கூட முடியாத அளவு நாதன் பயங்கர பிஸியாக இருந்தார். ஏனென்றால் அந்த போட்டோவின் பின்புறம் சித்தாரா தனது மொபைல் நம்பர் எழுதித் தந்திருந்தாள். ஒரு வேளை இரண்டு பேரும் பேசி விட்டால். அதற்கென்றே கண் கொத்திப் பாம்பாக வந்து மாமியார் வீட்டிலேயே அமர்ந்து விட்டார். அரவிந்திற்கு அன்று அதிகாலை சித்தாராவின் தரிசனம் மட்டும் கிட்டி இராவிட்டால் இவள் தான் மணப்பெண் என்று தெரியாமலேயே போயிருக்கும். 

அரவிந்த்  பழைய புத்தகத்தை புரட்டும் எண்ணத்துடன்  முதன் முதலில் சைலஜாவை  சந்தித்ததை நினைவு படுத்திப் பார்த்தான். அவனுக்கு என்று சந்தித்தோம் என வரையறுத்துக் கூறவே முடியவில்லை. 

அவனது நினைவுகள் தங்களது ஆட்டத்தைத் துவங்கின. அதற்கு ஜதி போடுவது போல் சன் மியூசிக்கில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது 

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் 

காதல் முகம் கண்டு கொண்டேன்

அரவிந்த்தை  நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு இந்தப் பாடல் தான் நினைவுக்கு வருமாம். சைலஜாதான் சொல்வாள். அப்படி அவள் சொல்லும் போது காதலில் அவள் கண்கள் மின்னும். இந்த சிதாரவைப் போல் ரவுடிப் பார்வை பார்க்க மாட்டாள். கண்டிப்பாக ஆண்களை கிண்டல் செய்து விசிலடிக்க மாட்டாள். அவனைத் தவிர வேறு எங்கும் பார்க்கவே மாட்டாள். ஒரு வெட்கம், மானின் மிரட்சி இப்படி என்னனவோ பாவம் தோன்றும் அவள் முகத்தில்.

எம்.காம் முடித்து விட்டு திருச்சியிலே ஒரு சிறு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அரவிந்தை, ஹோசூரில் தனது நண்பர் வேலை செய்த நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கச் சொன்னார் கதிர். இண்டர்வியூ நன்றாகச் செய்ததால் அவனுக்கு அங்கே வேலை கிடைத்து விட்டது. வேலை கிடைத்தவுடன்  ரூமில் சேர்த்துவிட்டு சென்றார். இந்த கம்பெனியில் ஆறாயிரம் சம்பளம் தந்தார்கள். பத்து மாதம் ட்ரைனிங் முடிந்ததும் எழாயிரதைநூறு தருவேன் என்றார்கள். எம்பிஏ படிக்க அரவிந்துக்கு ஆசை. இன்னும் இரண்டு  வருடம் கழித்து பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் சேர வேண்டும் என்று நினைத்திருந்தான். 

அரவிந்த்துடன் அறையில்  தங்கியவன் தான் பாபு. பொறுப்புகள் நிறைந்த அரவிந்துக்கு மாறாக  இந்த காலத்து இளைஞர்களின் பிரதிபலிப்பு பாபு. அரவிந்த்தை விட சற்று அதிகம் வயதிருக்கும். ப்ரைவேட் ஸ்பேஸ் நிறைய எதிர்பார்ப்பவன். அரவிந்த் அவனது விஷயத்தில் அவ்வளவாகத் தலையிடாததால் இருவருக்கும் ஒரு மாதிரி ஒத்துப் போய் விட்டது. 

அரவிந்த் ஒரு வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டு வாழத் தொடங்கி இருந்தான். தினமும் காலையில்  கடிவாளம் போட்ட குதிரை போல அங்குமிங்கும் திரும்பாமல் அலுவலகம் செல்வான், வேலை முடிந்தவுடன் ரூம், மாலை துணிகளைத் துவைத்து காயப் போட்டு விட்டு ஒரு மணி நேரம் பாபுவின் அனுமதியுடன் அவனது ஹிந்து பேப்பரை வாங்கி, கையில் டிக்க்ஷனரி ஒன்றை வைத்துக் கொண்டு படிப்பான். புரியாததை ஆங்கில மீடியம் படித்த பாபுவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வான். இரண்டு மூன்று மாதத்தில் அர்த்தங்களை டிக்க்ஷனரி  பார்க்காமலேயே படிக்க ஆரம்பித்து விட்டான். 

அனாவசியமாய் காபி டீ கிடையாது, சாப்பாடு கூட இரண்டு வேளைதான் சாப்பிடுவான். சீஸனில் கிடைக்கும் பழங்களை வாங்கி காலையில் இல்லை மதியம் சாப்பிட்டுக் கொள்வான். ரூமை தானே சுத்தம் செய்து விடுவான். பாபு கீழே போட்டுச் செல்லும் சிகரெட் துண்டுகளைக் கூட வெட்கம் பார்க்காமல் எடுத்து குப்பையில்  எறிந்து விடுவான். விடுமுறை நாட்களில் நூலகம், நல்ல மீல்ஸ், வாரம் ஒரு முறை தனது வீட்டினருடன் பூத்தில் சென்று பேசுவது, இந்த காலத்திலும் வாரம் இருமுறை  அக்கா தங்கைகளுக்கு கடிதம் எழுதுவது, மாதம் ஒரு முறை சம்பளம் வாங்கியவுடன் திருச்சி பயணம்  என்று இருந்த அரவிந்த் வெகு விரைவிலேயே பாபுவைக் கவர்ந்து விட்டதில் வியப்பில்லை.

“என்னடா அரவிந்த் இப்படி சாமியார் மாதிரி இருக்க?” என்று பாபுவே கிண்டல் செய்யும் அளவுக்கு நெருங்கி விட்டான். மெதுவாக அரவிந்த் பற்றி கேட்டுத் தெரிந்துக் கொண்டான் பாபு. இந்த வயதில் அவனுக்கு இத்தனைப் பொறுப்பா என்று வியந்தான். 

“ஏண்டா அரவிந்த், நீ இப்படி வைத்தக் கட்டி வாயக் கட்டி சேர்த்து உன்னோட ரெண்டு தங்கச்சிகளுக்கும், ஒரு அக்காவுக்கும் கல்யாணம் பண்ணிட்டு நீ நேரா அறுவதாங்கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்”

“எனக்குக் கல்யாணமே வேண்டாம். என்னோட அக்கா தங்கச்சிங்களுக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வச்சா போதும்”

“உனக்கு வேண்டாண்டா ஆனா உன் பின்னாடி  எத்தன பிகருங்க சுத்தி கிட்டு இருக்குது தெரியுமா? உன் ஆபிஸ் எதிர்த்தார்பல இருக்குற கடைல வேலை செய்யுற பொண்ணுங்க எல்லாம் உன்னப் பார்த்தாலே புல்லரிச்சு போய்டுவாங்களாமே, நிஜம்மாவா?”

அரவிந்த் வேலை செல்லும் அலுவலகத்தின் எதிர்த்தார் போல் இருந்த டெலிபோன் பூத் + டிடிபி + செராக்ஸ்  இப்படி பல தேவைகளை பூர்த்தி செய்யும் கடை ஒன்று இருக்கிறது. அதில் நிறைய பெண்கள் வேலை செய்கிறார்கள் என்ற நினைவு. ஆனாலும் அரவிந்த் அவர்களை கவனித்ததில்லை. 

“சத்தியமா இல்லைங்க பாபு யாரோ பொய் சொல்லி இருக்காங்க”

“சரி உனக்கு ப்ரூவ் பண்ணுறேன். இன்னைக்கு வீட்டுக்கு அங்க போய் போன் பண்ணுற”

“நான் வெள்ளிக் கிழமையே பேசிட்டேன். அதுனால அடுத்த வாரம் பாக்கலாம்”

“அதெல்லாம் கிடையாது இன்னைக்கு பேசுற. பணம்  நான் பே பண்ணுறேன். அடுத்த மாசம் தா போதும்”

“இல்ல என்கிட்டயே பணம் இருக்கு” 

‘இந்த பாபுவுக்கு விவஸ்தையே இல்ல. இவன மாதிரியே எல்லாரும் நெனச்ச உடனே செலவு பண்ணா முடியுமா? எப்படியும் பத்து ரூபாய்குள்ள பேசி முடிச்சிடனும்’ என்று எண்ணிக்  கொண்டு எஸ்டீடி பூத்தில் ப்ளட் பிரஷர் போல் எகிறிக் கொண்டிருந்த பில்லைப்  பார்த்தபடியே பேசி முடித்தான். 

அறைக்கு  வந்தவுடன் தான் பாபு சொன்னான். “அந்தக் கடைல அஞ்சு பொண்ணுங்க வேலை பாக்குதுங்க. அதுல நாலு பொண்ணுங்க நீ வந்த உடனே பரபரப்பா உன்னையே பாத்து கிட்டு இருந்தாங்க. ஒரே ஒரு பொண்ணு தான் அந்தக் கடைக்கு இன்சார்ஜ் போலிருக்கு. கடமையே கண்ணா இருக்கா. உன்னைய திரும்பிக் கூடப் பார்க்கல. முக்கியமான விஷயம் அவ  ரொம்ப அழகு”

அந்தப் பெண்ணின் நினைவில் ரசனையாக வெண்குழல் வத்தியின் புகையை ஊதியவன் சொன்னான் “ அரவிந்த் உனக்கு எம்பிஏ படிக்க ஆசை தானே”

தனக்குப் பிடித்த விஷயம் என்றவுடன் பிரகாசமான அரவிந்த் “ஆமாங்க பாபு. உங்களுக்கு எப்படி தெரியும்?”

“பேப்பர்ல வந்த எம்பிஏ விளம்பரத்தை  எல்லாம் கட் பண்ணி எடுத்து வச்சிருக்கியே அதைப் பார்த்தேன். ஆசை இருந்தா படிக்க வேண்டியதுதானே”

அடுத்தவரிடம் எதற்கு வீட்டு நிலைமை என்று நினைத்தவன் “நான் தமிழ் மீடியம் தான் படிச்சேன் அதுனாலதான் படிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் இங்கிலீஷ் இம்ப்ரூவ் பண்ணிக்கலாம்னு தினமும் பேப்பர் படிக்கிறேன்”

வியந்து போய் அவனைப் பார்த்த பாபு “ நிஜமாவா, முதல்ல இந்த நீங்க வாங்கவ விடு. பாபுனே கூப்பிடு. நானும் ப்ரிபேர் பண்ணிட்டுதான் இருக்கேன். ஆனா வெளிநாட்டுல படிக்கணும்னு ஆசை. பெங்களூர்ல வீக் எண்ட்  கோச்சிங் கிளாஸ் செர்ந்திருக்கேன். பேசாம  நீயும் என் கூட ஜீஅர்ஈ, டோபல் எக்ஸாம்ஸ்க்கு ப்ரிபேர் பண்ணேன். புக்ஸ் எல்லாம் நான் தரேன்”

மிரண்டு போன அரவிந்த் “அது சரி பட்டு வராது பாபு. நான் கரெஸ்லதான்  படிக்கலாம்னு இருக்கேன். வெளிநாட்டுல படிக்க நிறைய செலவாகும். அக்கா தங்கசிக்கெல்லாம் வேற கல்யாணம் பண்ணி வைக்கணும். இப்ப படிக்குற அளவுக்கு எனக்கு வசதியில்ல ”

“டேய், நீ மாசாமாசம் ஆயிரம் ரூபாவா சேர்த்து வச்சு உங்க வீட்டுல எல்லாருக்கும் நாப்பது வயசுக்கு மேலதான் கல்யாணம் பண்ணி வைக்க முடியும். ஒரு சவரன் எவ்வளவு விலைன்னு உனக்குத் தெரியுமா?”

தெரியாது என்று தலையாட்டி பரிதாபமாக சிறு பையன் போல் விழித்த அரவிந்தைப் பார்த்து நகைத்தான்  பாபு. இந்த சிறு பையனை இவ்வளவு பாரம் சுமக்க விட்டுவிட்டு அவ்வளவு அவசரமாக பொறுப்பில்லாமல்  கடவுளிடம் போய் சேர வேண்டுமா? அரவிந்தின் அப்பா மேல் பாபுவுக்கு எரிச்சல் வந்தது.

“வெளிநாட்டுல போய் சம்பாரிச்சு அஞ்சே வருஷத்துல உங்க வீட்டு கஷ்டத்த தீர்த்துடலாம். டேய் அரவிந்த் நான் யார் கிட்டயும் இந்த அளவு க்ளோஸ் கிடையாதுடா. என்னமோ உன்னையப் பார்த்தா என் கூடப் பிறந்தவன் மாதிரி  பீல் பண்ணுறேன். இதுவரைக்கும் நான் யாருக்கும் பெருசா நல்லது எதுவும் செஞ்சது கிடையாது. கெட்டதும் செஞ்சது இல்ல. குடும்பப் பொறுப்பு நிறைய இருக்குற உனக்கு ஏதாவது கைட் பண்ணலாம்னு தோணுச்சு. அதுதான் சொன்னேன். நீ கோச்சிங் கிளாஸ் எதுக்கும் செலவு பண்ண வேண்டாம். தினமும் என்கூட படி. ஆறு மாசம் கழிச்சு வர எக்ஸாமுக்குக் கூட நானே உனக்கும் பீஸ் கட்டிடுறேன். பாஸ் பண்ணா மட்டும் எனக்கு காசை திரும்பிக் குடு போதும். அதுவும் டாலர்ல இல்ல பவுண்ட்ல திருப்பி  வாங்கிக்குறேன் போதுமா”

அரைமனசுடன் தலையாட்டினான் அரவிந்த்.

ஒரு ஸ்நேஹமான புன்னகை ஒன்றை உதிர்த்த பாபு சொன்னான்  “அப்பறம் இன்னொரு விஷயம் அரவிந்த் உங்க ஆபிஸ் எதுத்த கடைல வேலை செய்யுற  அழகி பேரு ஷைலஜா”

தனது வாழ்க்கையே அந்தப் பெண் திசை திருப்பப் போவதை தெரியாமல் அப்படியா என்று தலையசைத்துக் கேட்டுக் கொண்டான் அரவிந்த். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 13’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 13’

அத்தியாயம் – 13   ப்ரித்வியின் பக்கத்து வீட்டில் கர்ஜீவன், அவர் மனைவி மித்தாலி, குழந்தைகளில் பெண்கள் நான்கும், ஆண்கள் இரண்டுமாய் பெரிய குடும்பம். அனைவரும் வஞ்சகமில்லா மனதோடும் உடம்போடுமிருந்தனர். கர்ஜீவன் வீட்டில் தீதி தீதி என காலையே சுற்றி வந்த

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 25என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 25

அத்தியாயம் – 25   விவேகானந்தனின் வரவு எதிர்பாராததாக  இருந்தாலும் அவரை நினைத்து ஆச்சிரியமாக இருந்தது அரவிந்திற்கு. அவர் கொடுத்திருந்த ஈமெயில் விலாசத்துக்கு தனது திருமண விவரம் பற்றி சம்பிரதாயமாக எழுதி இருந்தான். அதனைப் படித்து விட்டு இரண்டு வரி வாழ்த்து

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 57தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 57

“விஷ்ணுவ நேத்துக் கனிவோட பார்த்த கண்ணு இன்னைக்கு கோவத்துல பொசுக்கிட்டு வந்ததே… இந்தக் கண்ணைப் பிடிங்கிப் போட்டா என்ன?” “நேத்து ஆசையா கொஞ்சின வாய் இன்னைக்கு என்னை வேசியாக்கிட்டியேடான்னு அவன் மேல பழி போட்டதே, வெக்கமில்லாம திசை மாறுற இந்த நாக்கை