Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5

மதியம் அனைவரும் உணவு உண்டுக்  கொண்டிருந்தனர். குடும்பத்தினர் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கூடத்தில் இருந்தனர். தலை வாழை இலையில் உணவு பரிமாறி  இருக்க, அரவிந்த், முதல் பெண் சுதாவின் கணவன் நாதன், இரண்டாவது மகள் சங்கீதாவின் கணவன் கதிர், புதிதாக திருமணம் ஆகி இருந்த கடைசி மகள் சாரிகாவின் கணவன் முரளி, சில வயதான பெரிய தலைகள் அனைவரும் உரையாடியபடியே உணவு அருந்திக் கொண்டிருந்தனர். பெண்கள் சிலர் குழந்தைகளுக்கு சாம்பார் சாதம் நெய் விட்டு ஊட்டிக் கொண்டிருந்தனர். சுமித்ரா தனது மகனுக்குப் பிடித்ததெல்லாம் பார்த்து பார்த்து சமைத்திருந்தார். அவரின் ஒரே மகன் வாய் திறந்து தனக்கு வேண்டியதைக் கேட்க மாட்டான் என்று தெரிந்தவர் அவர். அதனால் தன் இரண்டாவது மகள் சங்கீதாவிடமும் அவள் கணவர் கதிரிடமும் சொல்லி திருச்சியில் இருந்து வரும்போது காந்தி மார்க்கெட்டில் வாழைத் தண்டும், அவரையும், புடலையும்  வாங்கி வர சொல்லி இருந்தார்.

 கதிரின் அம்மாவிற்கு சற்று உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் அவரும் சங்கீதாவும் இரண்டு நாள் முன்னர் திருச்சி சென்றிருந்தனர். அங்கிருந்து  கிளம்பும் அவசரத்திலும் தனது மச்சினனுக்காக காய்கறிகளைப் பார்த்து பார்த்து வாங்கி வந்திருந்தார் கதிர் . 

மூத்த மாப்பிள்ளை நாதன் வழக்கம் போலக்  கையை வீசிக் கொண்டு வந்திருந்தார். அவரைப் பொருத்தவரை மாமியார் வீடு என்பது தனக்கு வேண்டியதைக் கொடுப்பதற்கு கொடுப்பதற்கு கொடுப்பதற்கு மட்டுமே. அதற்கு வக்கில்லாதவர்கள் பெண்ணை வீட்டிலே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே.  ஆனால் சுதா கணவருக்குத் தெரியாமல் இரண்டு கிலோ கம்மாக் கத்திரிக்காயை தனது துணிப் பையில் வாங்கி வந்திருந்தாள். 

“அம்மா உன் மாப்பிள்ளை வீட்டு செலவுக்குத் தர்ற காசில இதுதான்மா என்னால வாங்க முடிஞ்சது. இதுவும் என் மாமியாருக்கும் இவருக்கும் தெரியாம வாங்கிட்டு வர நான் பட்டப் பாடு. உஷ் அப்பாடா…..  பேசாம நான் சத்யாவாவும் சத்யா நானாவும் பொறந்து இருந்திருக்கலாம்மா. நிம்மதியா உங்க கூடவாவது இருந்திருப்பேன்” 

கூடை பின்னிக் கொண்டிருந்த சத்யா சிரித்துக் கொண்டே சொன்னாள்

 “ சுதா, உனக்கு நான் என்ன கெடுதல்டி செஞ்சேன், இந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுக்கு. உனக்குத் தெரியுமா? நான்தான் முதல்ல பொறந்திருக்க வேண்டியது. அந்த பிரம்மா கிட்ட இந்த நாதன் மாதிரி ஒரு ஆள் கூட என்னால குப்பை கொட்ட முடியாது. அதுனால ப்ளீஸ் பிரம்மா பதிலுக்கு ஏன் காலை வேணும்னாலும் எடுத்துக்கோ அப்படின்னு கெஞ்சி கூத்தாடி மூணாவது பிறந்து நிம்மதியா இருக்கேன். அதுல மண்ணள்ளிப்  போட்டுறாதம்மா. ஆமா உங்க வீட்டுல பணப்புழக்கம் ஜாஸ்தி ஆயிடுச்சு போலிருக்கே. ரெண்டு கிலோ கத்திரிக்கா வாங்குற அளவு உனக்கு பணமிருந்தா நீ எவ்வளவு பெரிய பணக்காரி சுதா”

தங்களது துன்பத்தைக் கூடக் கேலியும் கிண்டலுமாகப் பேசிக் கொண்டிருந்த மகள்களைப் பார்த்தார் சுமித்ரா. 

“ சுதா உன் வீட்டைப் பத்தி எனக்குத் தெரியாதா? இந்த மாதிரி எல்லாம் வாங்கிட்டுத்தான் அம்மா வீட்டுக்கு வரணுமா? நீ இந்த மாதிரி ஒளிச்சு வச்சு வாங்கிட்டு வர மாட்டேங்குற தைரியத்துலதான் உன்னோட பையை சோதன பண்ணாம இருக்கார் உன் வீட்டுக்காரர். அதையும் கெடுத்துக்காதே. இப்ப ரெண்டு வாய்  சாப்பிட்டுட்டு வந்து பேசுங்க” 

கத்திரிக்காய் குழம்பை ருசி பார்த்த நாதன் “என்ன இருந்தாலும் சொல்லுங்க. கத்திரிக்காய்ன்னா எங்க ஊரு கம்மாக் கத்திரிக்காய் தான். அதோட ருசி வேற எந்த காய்க்கும் வராது. இந்தக் கத்திரிக்காயப்  பாருங்க கசந்துகிட்டு. வாயில வைக்க வெளங்கல” 

அவரைத் தவிர அங்கு சாப்பிடும் குடும்ப உறுப்பினர்களுக்கு அது அவர் ஊர் கத்திரிக்காய் என்று தெரியும். இருந்தாலும் வாயை சாப்பிடத்தவிர வேறு எதற்கும் யாரும் திறக்கவில்லை. அரவிந்திற்கு மட்டும் மெலிதாக சிரிப்பு வந்தது. கதிர் அவனைக் கண்ணாலேயே அடக்கினார். அவர்களது கெட்ட நேரம் நாதன் அவர்களை கவனித்து விட்டார். ஏதோ இருவரும் தன்னைப் பற்றி சொல்கிறார்கள் என்று மட்டும் தெரிந்தது. சாப்பாட்டுக் காரம் அவரது மனதில் ஏற ஆரம்பித்தது. ‘என்னையாடா கிண்டல் பண்ணுற உன்னைய கவனிச்சுக்குறேன்’ என்று மனதுனுள் கருவியவர்  

“அரவிந்தா, உனக்கு என்னடா எல்லாமே வித்யாசமா நடக்குது. இப்பப் பாரு  எனக்கெல்லாம் அரேஞ்ட் மேரேஜ், கதிர் தன்னுது அரேஞ்ட் மேரேஜ்னு சொல்லிகிட்டாலும் அதுல எனக்குக் கொஞ்சம் கூட  நம்பிக்கை இல்ல. நல்லா சம்பாதிக்கிறவன் யாராவது ஒண்ணுமே வேண்டாம்னு சொல்லி, என்னதான் சொந்தக்காரங்களா இருந்தாலும் கூட  வசதி இல்லாத குடும்பத்துப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்குவானா? அப்படி செய்யுறவன் கண்டிப்பா அந்த பொண்ணக் காதலிச்சு ஊர் சுத்தி வேற வழியில்லாம எதிலையோ மாட்டிகிட்டு கல்யாணம் பண்ணி இருக்கணும். நீ உன் முதல் பொண்டாட்டியைக் கல்யாணம் பண்ணிகிட்டேயே அது மாதிரி. சொல்ல வந்தத மறந்துட்டேன் பாரு. உனக்கு முதல் பொண்டாட்டி காதல் கல்யாணம் ரெண்டாவது கல்யாணமோ  அரேஞ்ட் மேரேஜ். வேடிக்கையா இல்ல” சொல்லிவிட்டு விஷமமாக சிரித்தார். 

புதிதாகக் கல்யாணம் ஆன சாரிகாவின் புகுந்த வீட்டினருக்கு இது புதிய அவல். அதனைப் பற்றி சலசலக்க ஆரம்பித்தனர். எப்பொழுதுமே மனிதனுக்கு அடுத்தவர்கள் விஷயத்தில் அலாதியான ஆர்வம்  உண்டு. நமக்கு அந்த ஆர்வம் குறைந்தால் கிசுகிசு பகுதியையே பத்திரிக்கைக்காரர்கள் மூடி விட வேண்டியதுதான். நம் மக்களும் சில சமயம் சபை நாகரீகம் கருதி அமைதி காப்பார்கள். ஆனால் நம்ம நாதன் மாதிரி ஆரம்பித்து வைக்க சில பேர் இருந்தால், எவ்வளவு நேரம்தான் நல்லவன் மாதிரியே நடிக்குறது? அவர்களது வாய் பூட்டு தானாகவே  கழண்டு விடும்.

“மூத்தாள் காதல் கல்யாணமா? 

அந்தப் பொண்ணு எப்படி தவறிப் போச்சு ஏதாவது விபத்தா?

நம்ம இனம் இல்லையா?

எந்த ஊரு? 

வெள்ளக்காரியா?

எப்படிப் பழக்கம்?

உங்க மூத்த மாப்பிள்ளை சொல்லுறதப் பார்த்தா கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை பொறந்துடுச்சா?

இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறிங்களே கல்யாணப் பொண்ணுக்கு இதப் பத்தி தெரியுமா?

அந்தப் பொண்ணுக்காவது  இது மொதக் கல்யாணமா? இல்ல அதுக்கும் ரெண்டாவதா?”

சொந்தக் காரர்கள் மத்தியில் இல்லாத புரளி ஒன்றை கிளப்பி விட்டுவிட்டு,  இரண்டாவது திருமணம் பற்றி இடித்துக் காட்டி விட்ட திருப்தியோடு சாப்பிட ஆரம்பித்தார் நாதன். 

“இப்ப என்ன நாதன் என் கல்யாணம் காதல் கல்யாணம்னு சந்தேகப் படுறிங்க. அவ்வளவுதானே. என் கல்யாணம் காதல் கல்யாணம் தான். என் மாமா பொண்ணு  சங்கீதா பொறக்குறதுக்கு முன்னாடியே அவள லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் போதுமா? அப்பாடி ஆயிரத்தொராவது தடவையா நாதனோட இந்தக் கேள்விக்கு விளக்கம் சொல்லிட்டேன்” என்று சொல்லி சூழ்நிலையை சற்று திசை திருப்பினார் கதிர். 

தொண்டையில் முள் சிக்கிக் கொண்ட உணர்வுடன் குழம்பு சாதத்துடன் இலையை மூடி வைத்து விட்டு எழுந்து கை கழுவினான் அரவிந்த். கதிரும் அவ்வாறே செய்தார். சுமித்ராவுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. 

‘ஊருல இருந்து வந்த பிள்ளைக்கு ஒரு வாய் நல்ல சாப்பாடு சாப்பிடக் கூடக் கொடுப்பினை இல்ல’ வருத்தத்தோடு சுதாவைப் பார்த்தார்.

 அவளோ அவளது கணவனை அடக்கும் வழி தெரியாது திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தாள். இவள் ஏதாவது மறுத்துப் பேசினாள் என்றாள் அதை சாக்காக வைத்து அவளது குடும்பத்தைப் பத்தி இன்னும் இல்லாதது பொல்லாதது சொல்வார் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் வழக்கம் போல இன்றும் கண்டும் காணாதது போல் துக்கத்தை விழுங்கிக் கொண்டு  அனைவரும் எழுந்து சென்றனர். கல்யாணத்துக்கு முதல் நாள் மகிழ்வோடு உண்டிருக்க வேண்டிய மதிய உணவு, முக்கியமானவர்கள் கை படாமலேயே குப்பைக்குப் போனது. 

அதே நேரம் மாடியில் சாப்பாட்டை முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் சித்தாரா. புத்தம்  புதிதாய் தொடுக்கப்பட்ட ரோஜாமாலையைப் போல் இருந்தாள். குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை நடுத்தரமான உடல்வாகு,   நல்ல மலைத்தேனை எடுத்துக் கறந்த பாலில் கலந்தால் ஒரு நிறம் வருமே, அந்த நிறம். நீள்வட்ட முகம், சிறிய மூக்கு, சிறிய செதுக்கிய இதழ்கள், குறும்பு கொப்பளிக்கும் சிரிப்பு, சிரிக்கும் போது கன்னத்தில் சுளித்துக் கொண்டு விழும் குழி,  பாலில் மிதக்கும் கருந்திராட்சையாய் கண்கள். பிறை நெற்றி, அதில் சிறு திலக வடிவப் பொட்டு. காதுகளில் சிறிய முத்து ஜிமிக்கி. சராசரி தமிழ் பெண்கள் உயரம். அவளது மலர் முகத்தில் சிறிது கலக்கம்.  

“உனக்கு என்னடி ஆச்சு. சீக்கிரம் சாப்பிட்டு முடியேன்” ராஜம் பேத்தியிடம் கேட்டார். 

“எனக்கு ஒண்ணும் வேண்டாம் போ” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சித்தாரா.

“ராத்திரி ஊருல இருந்து எல்லாரும் வந்திடுவாங்க. அப்பறம் உன்ன என்னால கவனிக்க முடியாது. சாயந்தரம்  உனக்குப் பிடிச்ச பால் கொழுக்கட்டை செய்யட்டுமா. சீக்கிரம் பதில் சொன்னேன்னா அரிசி ஊறப் போட்டுடுவேன் ” 

தட்டை சாப்பாட்டுடன் சமையல் அறையில் கொண்டு போய் வைத்து விட்டு வந்த சித்தாரா கோவமாக வந்து நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டாள்.

“கல்யாணப் பொண்ணு சிரிச்சுகிட்டே இருக்கனும்டியம்மா. மத்யானம் எம்.ஜி.ஆர் நடிச்ச  எங்க வீட்டுப் பிள்ளை படம் ஜெயா டிவில போடுறாங்க நாம பாக்கலாமா?”

“அக்கா ஏன் பாட்டிய கஷ்டப்படுத்துற. அவங்க எவ்வளவு நல்லவங்க தெரியுமா?” முறுக்கு சாப்பிட்டுக் கொண்டே ரியாஸ்  சொன்னான். எதிர்த்த வீட்டு வஹிதா அக்காவின் மகன். ஐந்தாவது படிக்கிறான். சித்தாராவின் ஒரே பாய் பிரெண்ட். அவனது அப்பா நபீஸ் தேரடியில் கடை வைத்திருக்கிறார். 

டிவியை உடைத்த ரியாஸின்  கிரிக்கெட் பாலை ஒரு முறை ராஜம் பாட்டி எடுத்து வைத்துக் கொள்ள

“ஏ கிழவி, இந்த பாலாலையே ஒரு நாள் உன் மண்டைய உடைக்கல என் பேர் ரியாஸ்  இல்ல” என்று சபதம் செய்தது சிதாராவின் நினைவுக்கு வர 

“டேய் ரியாஸ்  இந்த வசனமெல்லாம் நீ பேசலடா, உன் வாயில இருக்குற முறுக்கு பேசுது”

“அக்கா நானும் அத்தாவும் நேத்து மாப்பிள்ளையப் பார்த்தோம். மைதா மாவு மாதிரி  கலர். என்னைய விட சிவப்பாம் அத்தா சொன்னாங்க”

“நல்லா சொல்லு ரியாஸ்  பையா. உங்க அக்காவுக்கு அப்பயாவது புத்தி வரட்டும். வெளிநாட்டுல இருக்காரு, அவளவ மாப்பிள்ள அழக வாய்ல  ஈ போறது கூடத் தெரியாம பாத்துட்டு இருகாளுங்க. உங்க அக்காவுக்கு என்னடான்னா வலிக்குது. அமைதி, அடக்கமான பையன். மாப்பிள்ளை மேல என் கண்ணே பட்டுடும் போல இருக்கு”

சிதாரவுக்கும் தோன்றியது நிஜம்தான் என்று. இருந்தாலும் உடனே பாட்டியிடம் ஒத்துக் கொள்ள முடியுமா? “அப்ப நீயே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே” என்று முணுமுணுத்தவள் 

‘என்ன அங்க முணு முணுன்னு” என்று பாட்டி கேட்கவும் “போடா போ பல்லி கூட அந்தாள விடக் கலர்தான். அதுக்காக உங்க பாட்டி பல்லிக்கு என்னக் கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்களா? இந்த மாதிரி ரெண்டாந்தாரமா போறதுக்கு பல்லி  எவ்வளவோ தேவலாம். அவங்க சீக்கிரம் யாருன்னு முடிவு பண்ணி சொன்னாங்கன்னா நம்ம ரெண்டு பேரும் போய் நமக்கு பிடிச்ச மாதிரி பல்லியா பிடிச்சுக் கொண்டு வந்துடலாம் ” என்றாள் ரியாஸிடம்.

“போக்கா பல்லி எல்லாம் கைல பட்டாலே விஷமாம் அதுனால நீ ரிஸ்க் எடுக்காம அந்தப் பையனையே கல்யாணம் பண்ணிக்கோ. அப்பத்தான் நான் லண்டன் வரப்ப உன் வீட்டுலயே வந்து தங்கிக்கலாம் . அப்பறம் நம்ம பாட்டியத் திட்டாதே அவங்க  ரொம்ப நல்லவங்க. இந்தப் படத்துல வர்ற எம்.ஜி.ஆர் மாதிரி நிறைய ஹெல்ப் பண்ணுவாங்கன்னு எங்கம்மா அப்பா கிட்ட சொன்னாங்க.”

“டேய் ரியாஸ்  கண்ணா சாயந்தரம்  மறக்காம பால் கொழுக்கட்டை வாங்கிட்டு வீட்டுக்குப் போ” ராஜம் குரல் கொடுத்தார்.

“டேய் ரியாஸ் , பெரிய ஐஸ் பார தூக்கி அந்த வயசானவங்க தலைல வைக்கிறியே அவங்க தாங்குவாங்களா? ஒண்ணு தெரிஞ்சுக்கடா, உங்க பாட்டி ஊருக்கெல்லாம் எம்ஜிஆர் ஆனா எனக்கு மட்டும் நம்பியார்”

அவளது வசனத்தைக் கேட்டுக கொண்டே வந்த ராஜம் “நம்பியாருன்னு சொன்னாலும்  சந்தோஷம்தான் படுவேன். அவரு மாதிரி ஒரு நல்ல மனுஷனைப் பாக்கறதே கஷ்டம்”

“சொல்லுவ சொல்லுவ அந்த தடியன் அருண் லவ் லெட்டர் குடுத்தப்ப சரின்னு சொல்லி ஓடிப் போய் கல்யாணம் பண்ணி இருக்கணும். உன்ன மதிச்சு இருந்தேன் பாரு அதுதான் இப்ப எனக்கு ஒரு செகண்ட் ஹாண்ட் மாப்பிள்ளையா பாத்து இருக்குற”

“யாரு அந்த வாட்ச்மேன் பையனையா சொல்லுற? அவன் உனக்கு மட்டுமா லவ் லெட்டர் தந்தான். இந்தத் தெருவுல ஒருத்தர் பாக்கி இல்லாம தந்திருக்கான். மாப்பிள்ளை என்ன டிவியா இல்ல பிரிட்ஜா பர்ஸ்ட் ஹாண்ட் செகண்ட் ஹாண்ட்னு சொல்லிட்டு. உனக்கு தெரியுது அந்தப் பையனுக்கு இது ரெண்டாம் கல்யாணம்னு. நிறைய பேர் வீட்டுக்காரர் தனக்கு  எத்தனாவது ஹாண்ட் அப்படின்னு தெரியாமையே வாழ்ந்துட்டு இருக்காங்க” 

“கண்டிப்பா மாப்பிள்ளை எல்லாம் டிவி பிரிட்ஜ் மாதிரி தான். ஏன்னா அது எல்லாத்தையும்  நாம விலை கொடுத்துதான வாங்கணும்” வெடுக்கென சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள். . 

சிதாராவுக்கு பயங்கரக்  கோவம் வந்தது. 

‘கீழ் வீட்டுலதான அந்த வெள்ளக் காக்கா இருக்கு. ஒரு தடவையாவது என்கிட்ட வந்து 

இங்க பாரு சித்தாரா உனக்கு இந்தக் கல்யாணத்துக்கு சம்மதமா?

 அப்படின்னு ஒரு வார்த்தை கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டா பட்டுன்னு சொல்லி இருப்பேனே உன்னைக் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டம் இல்லன்னு’

மனதுக்குள் நறநறத்தாள் சித்தாரா 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுரா – என்னைக்‌ ‌கொண்டாடப்‌ ‌பிறந்தவளே‌ – 1தமிழ் மதுரா – என்னைக்‌ ‌கொண்டாடப்‌ ‌பிறந்தவளே‌ – 1

அத்தியாயம் – 1 ‘விர்’ என்ற இரைச்சலுடன் அந்த அலுமினியப் பறவை, ரன்வேயில் ஓட ஆரம்பித்தது. சக்கரங்கள் மெல்ல எழும்பும் தருணம் பெரும்பாலானவர்கள் கண்ணை மூடித் திறந்தனர். எத்தனை முறை விமானத்தில் பயணம் செய்தாலும் அதன் சக்கரங்கள்  தரையை விட்டு வானத்தில்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22

அத்தியாயம் – 22 ட்ரெயினில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான் அரவிந்த். மனைவியையும் குழந்தையையும் எப்போதடா பார்ப்போம் என்றிருந்தது அவனுக்கு. அப்பாடா இன்று வெள்ளிக் கிழமை. இன்னும் இரண்டு நாட்கள் ஸ்ராவனியும் சித்தாராவும் அடிக்கும் லூட்டியை ரசித்துக் கொண்டிருக்கலாம். நிமிடமாய் நேரம் பறந்து