Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 57

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 57

விஷ்ணுவ நேத்துக் கனிவோட பார்த்த கண்ணு இன்னைக்கு கோவத்துல பொசுக்கிட்டு வந்ததே… இந்தக் கண்ணைப் பிடிங்கிப் போட்டா என்ன?”

“நேத்து ஆசையா கொஞ்சின வாய் இன்னைக்கு என்னை வேசியாக்கிட்டியேடான்னு அவன் மேல பழி போட்டதே, வெக்கமில்லாம திசை மாறுற இந்த நாக்கை அறுத்தெரிஞ்சா என்ன?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்ன வரை காதலோட கட்டிப் பிடிச்ச இந்தக் கை, அவன் நோகணும்னே அடிச்சதே இதை வெட்டிப் போட்டா என்ன?”

மனக்கவலை அழுத்த வாய்விட்டே புலம்பினாள் சரயு. அவள் பேசுவது புரியாமல் தவித்தார் ராஜு. தமிழ் தெரியாமல், அவளிடம் நடந்ததை எடுத்துக் கூற முடியாத தன் ஊமை நிலையை வெறுத்தார்.

“சின்னம்மா நீங்க வேதனையை சொல்லுறிங்கன்னு புரியுது. ஆனா நீங்க பேசுறது எதுவும் அர்த்தமாகலம்மா. எங்க பாபு நல்லவரு… நீங்க பாபுவோட உயிர். அவரை விட்டுப் போயிடாதிங்கம்மா” உணர்ச்சி பெருக கைகளை அசைத்து வேண்டாமென்று சைகை காட்டினார்.

“அவனைப் பிரிய எனக்கு மட்டும் ஆசையா… கிளம்பி வந்தப்ப அவன் கண்ணு முழுசும் வலி, ஏமாற்றம்… நீயா என்னைப் பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்ட, நேத்து காலம் முழுக்கக் கூட வரேன்னு சத்தியப் பிரமாணம் எடுத்துகிட்டியே, அந்த வார்தையெல்லாம் காத்தோட பறக்கவிட்டுட்டு இப்படிப் பாதில போறியே… என்னை இப்படி நடுவுல விட்டுட்டுப் போனா நான் என்ன செய்வேன்னு கேட்டுச்சு.

நானென்ன செய்ய முடியும் அங்கிள். அவனோட அம்மாவும் மனைவியும் என்கிட்டே உரிமையோட அவனைக் கேக்குறாங்க. உரிமைக்கு முன்ன எங்க காதல் காணாம போயிடுச்சு.

விஷ்ணு ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்தோட மகன், ஒரு செல்வாக்கான குடும்பத்தோட மருமகன், ஒரு அழகான கூட்டுக்கு சொந்தக்காரன். எல்லாத்துக்கும் மேல ஒரு தகப்பன். இங்க மனசுக்கு வேலையில்லை. எங்க மனசோட உறவு அவங்களுக்குப் புரியுமா. உலகத்தைப் பொருத்தவரை நான் அவனுக்கு வப்பாட்டிதானே. எங்க ஆத்மார்த்தமான உறவை இப்படி அசிங்கப்படுத்துறதுக்கு பதிலா விஷ்ணுகூட வாழ்ந்த இந்த ஒரு நாளை நினைச்சே என் வாழ்க்கையைக் கழிச்சுருவேன். அவன் மனைவிகிட்ட அவளோட கணவனை ஒரு நாள் திருடிகிட்டதுக்கு மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடுங்க. அர்ஜுனனோட வாழ்க்கைல சித்ராங்கதாவின் பகுதி முடிஞ்சது. இனிமே அவன் வாழ்க்கைல குறுக்கிட மாட்டா”

“சின்னம்மா”

புரியாமல் விழித்தவரிடம், “ஜிஷ்ணு, வைப், பேபி” என்று கையைக் கோர்த்துக் காட்டினாள்.

“நேனு ஜிஷ்ணு… நோ” என்று தலையசைத்து தனது எண்ணத்தைத் தெரிவித்தாள்.

தனது வெறுமையான கழுத்தைத் தடவிக் கொண்டாள்.

‘என் வாழ்க்கையைப் போலவே ஆயிடுச்சு’

சென்னையில் கொண்டு வந்து விடுகிறேன் என்றவரை மறுத்து, வற்புறுத்தி குண்டூர் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டாள்.

அவளுக்கு தண்ணீர் பாட்டிலும் பழங்களும் வாங்கித் தந்தார் ராஜு. வெகு பத்திரமாய் மடிக்கப்பட்ட பொட்டலத்தை பயபக்தியோடு அவள் கையில் தந்தார். கேள்வியுடன் அந்தக் காகிதத்தைப் பிரித்தாள். அதில் ஜெயசுதாவால் அறுத்தெறியப்பட்ட மாலையிலிருந்த மணிகள் சேகரிக்கப்பட்டு அவளைப் பார்த்து சிரித்தன. கண்கலங்க அவரது கைகளைப் பற்றி ஒற்றிக் கொண்டாள்.

“மை விஷ்ணு… ஹி இஸ் இன்னசென்ட் லைக் எ பேபி… அவன பத்திரமா பாத்துக்கோங்க அங்கிள்” என்று அவருக்கு புரியுமாறு ஒவ்வொரு வார்த்தையாய் அபிநயத்தோடு சொல்ல, உடைந்து போனார் ராஜு. “மீ பெல்லி தேவதுல சங்கல்பம் மா… ராமுடு ஈ சீத்தம்மணி வெதுக்குண்டு தப்பக ஒஸ்தாடு மீரித்தறு சந்தோஷங்கா பிள்ள பாப்பலதோ காப்புரம் சேசேதானி தப்பக நா கல்லாற சூசி ஆனந்திஸ்தாணு” விடைகொடுத்தார்.

(உங்கள் திருமணம் தெய்வ சங்கல்பம் எங்கள் ராமன் இந்த சீதையை தேடி கண்டிப்பாக வருவான். நீங்கள் இருவரும் குழந்தை செல்வங்களுடன் சந்தோஷமாக குடும்பமாக வாழுவதை கண்டிப்பாக நான் என் கண்ணால் கண்டு ஆனந்தப்படுவேன்.)

காதே கிழியும்படி பளாரென்று விழுந்த அறையைத் தாங்கிக் கொண்டாள். “என்ன தைரியம்டி உனக்கு, உன்னையே தொலைச்சுட்டு வந்து நிக்குற” ஆத்திரம் அடங்காமல் மீண்டும் அவளது கன்னத்தைப் பதம் பார்த்தான் அணுகுண்டு.

விடுதியை மின்னல் வேகத்தில் காலி செய்துவிட்டு ராமின் சொந்தக்காரர்களின் அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருந்தார்கள். ராம் அவனது தகப்பனின் முதல் தாரத்து மக்களின் மீது தொடுத்திருந்த வழக்கு விஷயமாய் பொற்கொடி இந்தியாவில் தங்க வேண்டியிருந்தது.

“சரயு, வேலையை விட்டுட்டேன்னு சொன்னேல்ல. நல்லதாப் போச்சு. கொஞ்சநாள் நீ இங்கேயே அம்மாகூட இரு. என் ப்ரெண்ட் ஒருத்தன், திருநெல்வேலி பையன். பாங்க்ல நல்ல போஸ்ட்ல இருக்கான். நேத்தி உன் போட்டோவை அவனுக்கு அனுப்பினேன். உன்னை யாருக்காவது பிடிக்காம போகுமா? உன்னைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறான். எனக்கும் அவன்தான் உனக்குப் பொருத்தமா இருக்குறதா படுது. லக்ஷ்மிக்காட்ட பேசிட்டு காதும் காதும் வச்ச மாதிரி இங்கேயே கல்யாணத்தை முடிச்சுட்டு ஊருக்குப் போயிடலாம். எந்த செல்வமும் ஜெர்மனிக்கு பிளைட் ஏறி வந்து காலை வெட்ட முடியாது. நீயும் எங்க பக்கத்திலையே இருப்ப”

ஆவலாய் சொன்ன நண்பனிடம் மறைக்க முடியாது அவளது கடந்த காலத்தைப் பகிர்ந்து, பரிசாய் இடி போலக் கிடைத்த அடிகளை வாங்கிக் கொண்டாள்.

மாறி மாறி அறைந்ததில் அவள் கன்னத்தில் கைத்தடம் பட்டுக் கன்றிச் சிவந்தது. அறைக்கு வெளியே சத்தம் கேட்டு பொற்கொடி ஓடி வந்துத் தடுத்தார்.

“அறிவு கெட்டவனே… அவளை ஏண்டா இப்படிப் போட்டு அடிக்கிற? நீ மனுஷனா மிருகமா?” என்றபடி அவனைத் தள்ளிவிட்டார். அப்போதும் பிடிமானமின்றிக் கீழே விழ இருந்தவனை சரயுதான் ஓடி வந்துத் தாங்கிக் கொண்டாள்.

“ராமை ஏன்த்த தள்ளி விட்டிங்க…?” என்றவளைப் பார்த்து முறைத்தார்.

“ஏண்டி மாட்ட அடிக்குற மாதிரி அடிக்குறான்… வாயைத் திறந்துக் கத்த மாட்டியா? சுகம்மா கன்னத்தைக் காட்டிகிட்டு நிக்குற?” என்று அவளுக்கும் திட்டு விழுந்தது.

“நான் தப்பு பண்ணேன் அத்தை. அதுனால கோவத்துல அடிச்சான், நான் வாங்கிகிட்டேன். தப்புப் பண்ணவங்க தண்டனையை அனுபவிச்சுத்தானே ஆகணும்”

அவளது நியாயத்தைக் கேட்டுத் தலையில் கையை வைத்துக் கொண்டார்.

“நீ தண்டனையை அனுபவிச்ச வரைக்கும் போதும்டி, இட்டிலி எடுத்து வச்சிருக்கேன் போய் சாப்பிடு…” சரயுவிடம் சொன்னவர் ராமையும் ஒரு பிடி பிடித்தார்.

“டேய் அவ தப்பு பண்ணா, உடனே கை நீட்டுவியா? அவளுக்குக் கேக்குறதுக்கு அம்மா அப்பா இல்லைன்னு நெனச்சியா? நானிருக்கேண்டா… அவ மேல இன்னும் ஒரு அடிபட்டது, உன்னை வீட்டை விட்டு வெளிய அனுப்பிடுவேன்”

“அம்மா புரியாம பேசாதம்மா… சின்ன வயசில நீ செஞ்ச அதே தப்பை இப்ப சரவெடி செஞ்சுட்டு வந்து நிக்குறா… ஒரு பணக்காரன் இவளை ஏமாத்தி ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டான்” அவன் கூற்றில் அதிர்ந்தார் பொற்கொடி.

“நீ தெரியாம செஞ்ச தப்பால நம்ம எவ்வளவு கஷ்டப்பட்டோம். நம்மள உதைச்சே ஊரை விட்டுத் துரத்தினாங்களேம்மா… அதே மாதிரி இவளோட தாலியைப் புடுங்கிட்டு அனுப்பிருக்காங்கம்மா அந்தப் பணக்காரக் கும்பல். இவ்வளவு அநியாயம் நடந்திருக்கு. இவளுக்கு அவனை மறக்க முடியாதாம்… வெங்காயம்… சினிமா வசனம் பேசிட்டுத் திரியுது… நம்ம பட்ட கஷ்டம் இவளும் படணுமா? அந்த ஏமாத்துக்காரன் வந்து கால்ல விழுந்தாக் கூட இவளை அனுப்ப மாட்டேன்” கோவமாய் சொன்னான்.

சில நாட்கள் ஆழ்ந்த யோசனையிலேயே இருந்தார் பொற்கொடி. அவளை அங்கு தங்க வைத்தால் ஜிஷ்ணு எப்படியும் தேடி வந்துவிடுவான் என்றெண்ணி மின்னல் வேகத்தில் ஜெர்மனியில் கிடைத்த வேலையில் சேர்ந்தாள் சரயு. அவளது வீட்டினருக்குக் கூட அவள் செல்லுமிடம் தெரியக் கூடாதென்று முடிவெடுத்தார்கள். விசா கிடைத்து கிளம்பலாம் என்றெண்ணிய போது தனது மௌனத்தைக் கலைத்தார் பொற்கொடி.

“ராசு, கையோடு அவ கழுத்துல ஒரு தாலியையும் கட்டிரு”

“அம்மா” ராம் அதிர,

“அத்த” சரயு பதற,

“உண்மையாத்தாண்டி சொல்லுறேன். வேற எவனைக் கட்டிகிட்டாலும் உனக்கு மனசு உறுத்தும். என் மவனால மட்டும்தான் உன்ன சந்தோஷமா வச்சுக்க முடியும்”

“மாட்டேன்… விஷ்ணுதான் என் புருஷன்”

“இப்படித்தான் நானும் சொன்னேன். காதல் ஊதல்ன்னு இவங்கப்பனைக் கட்டிட்டு நாய் படாதபாடு பட்டேன். இவளை என்னிக்கிருந்தாலும் அந்த விஷ்ணு தேடி வந்தா என்னாவும்… நம்ம வீட்டுத் தோட்டத்தப் பாதுகாக்க நாமதான் வேலி போடணும். அதுக்குத்தான் சொல்லுறேன். நாளைக்கே நல்ல முஹுர்த்தமிருக்கு. வடபழனில கல்யாணம் பண்ணிக்கிறிங்க. கையோட ரெஜிஸ்டர் பண்ணுறோம். இந்தக் கல்யாணம் நடந்தே ஆகணும்” உறுதியாய் சொன்னார்.

“என்னம்மா சொல்லுற… சரவெடியக் கல்யாணம் பண்ணிக்குறதா… அவ மீனாச்சிம்மா, நான் அவக் கோட்டைக்கு வெளிய நின்னு காவல் காக்குற பாண்டி முனியாண்டி. என்னால முடியாதும்மா” வேகமாய் மறுத்தான் ராம்.

இருவரையும் வற்புறுத்தித் தோற்றவர்,

“உங்க கல்யாணம் நடக்குற வரைக்கும் நான் உங்க கூட வர மாட்டேன். உங்க கூட பேசவும் மாட்டேன்” மௌனம் என்ற மிக வலிமையான ஆயுதத்தைக் கையிலேந்தி கோவமாய் இந்தியாவிலேயே இருந்துவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 15என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 15

அத்தியாயம் –15  சத்யா ஆட்டோவை செலுத்திக் கொண்டிருக்கும் பன்னீரை ஓரக் கண்ணால் பார்த்தபடியே பயணம் செய்து கொண்டிருந்தாள். அவள் சென்னையில்  வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்களும் பன்னீரின் ஆட்டோவில் தான் காலையிலும் மாலையிலும் சென்று வருகிறாள். பன்னீருக்கு யாரும் இல்லை. எங்கோ

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50

இரவு ராஜுவின் வீட்டிலேயே சரயுவைத் தங்க வைத்தார்கள். வீட்டின் முன் நின்று வரவேற்ற வேம்பும், பின்கட்டிலிருந்த கிணறும் சரயுவுக்கு தன் வீட்டை நினைவு படுத்தியது. ஆனாலும் அவள் வீடு பெரியது. ஒரு தெருவில் ஆரம்பித்து பின் தெருவில் முடியும். இந்த வீடு

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 8தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 8

இரவு படுத்திருந்த பாயிலிருந்து உருண்டு அறையின் சுவரோரமாய் சுருண்டு தூங்கிக் கொண்டிருந்த சரயுவை ரசித்தார் சிவகாமி. ‘நம்ம பக்கத்துல யாரும் இம்புட்டு அழகில்ல. பொங்கலுக்குப் பறிச்ச பச்ச மஞ்சளாட்டம் ஒரு நெறம். சின்னதா மல்லிகப்பூ மொக்காட்டம் மூக்கு. வசதியிருந்தா இந்த மூக்குக்கு