சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 21′(final)

வேப்பம்பூவின் தேன்துளி – 21

 

நேரத்திற்கு, சூழலுக்கு தக்கவாறு மாற சிலரால் மட்டுமே முடியும்! தீபலட்சுமி அனைத்தையும் நொடியில் தனக்குச் சாதகமாக மாற்றி அமைத்துக் கொள்ள… சூழலும் வேறு அவளை நல்லவளாகக் காட்டும்படி தானே அமைந்து விட்டது! இதற்கு என்ன விளக்கம் சொல்ல என்று கூட புரியாமல் கோபியும், பூரணியும் அதிர்ந்து விழித்து நின்றனர்.

ஆனால், விளக்கத்திற்கு அவசியமே இல்லை என்பது போல, தங்கையின் குற்றச்சாட்டில் முகத்தைச் சுருக்கிய நீதிவாசன், “நான் வந்து கால்மணி நேரம் ஆச்சு தீபா” என்றான் நிதானமாக! அவனது இறுகிய, சுருங்கிய முகபாவனையே அனைத்தையும் கேட்டு விட்டான் என்பதைப் பறை சாற்ற, இப்பொழுது அதிர்ந்து போவது தீபாவின் முறையானது.

 

ஆனால், அதற்காகப் பின்வாங்கி விட்டால் அவள் தீபா அல்லவே!

 

விடாமல், “அண்ணா, இவ நல்லவ இல்லைண்ணா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எவனோ ஒருத்தன் நடு ரோட்டுல வெச்சு இவ கையை அறுத்திருக்கான். அவனுக்கும், இவளுக்கும் ஒன்னும் இல்லாமையா அவன் அத்தனை தூரம் போயிருப்பான். நீயே என்ன விஷயம்ன்னு விசாரிண்ணா.

நான் அதை இவகிட்ட கேட்டா, இதோ இவன், இவனை நான் காதலிக்கலைங்கிறது மனசுல வெச்சுட்டு புது கதை சொல்லறான். இவனுக்கு என் மேல ஆசைண்ணா. நான் ஒத்துக்கலைன்னதும் ரொம்ப கேவலமா பிஹேவ் பண்ணினான். ஒருகட்டத்துல இவன் தொல்லை தாங்க முடியாம போகவும், இவனைப்பத்தி நான் உங்ககிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டவும் தான்… எல்லாத்தையும் விட்டுட்டு வெளிநாட்டுக்குப் போனான். ஆனா, நான் கிடைக்கலைன்னு இவனுக்கு வன்மம் நிறைய இருக்கு போல… இவங்க குடும்பமே பிராடுங்க” என்று நொடியில் தனக்கேற்றவாறு திரித்துப் பேசினாள்.

 

மூவருமே அசந்து போகும் வண்ணம் பேச்சு! கோபி அருவருப்பில் முகத்தைச் சுளிக்க, பூரணி என்ன நடக்கிறது என்று புரியாமல், நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் திணறியபடி நின்றிருந்தாள். இப்படித் திரித்துப் பேசுபவளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லும் சாமர்த்தியம் சத்தியமாக அவளிடம் இல்லை.

 

நீதிவாசனின் அமைதியை பயன்படுத்தி, “அண்ணா, இவ ஏதோ பயங்கரமா திட்டம் போட்டுத் தான் உன்னை கட்டியிருக்கா. இவளை அத்து விடறது தான் நம்ம குடும்பத்துக்கு நல்லது. முதல்ல சம்பத், அப்பறம் நீ… இன்னும் யாரு யாரெல்லாமோ? பார்க்க அப்பாவி மாதிரி இருந்துட்டு இத்தனை வேலை செய்யறாண்ணா. நீ சுதாரிக்காட்டி ரொம்ப அவஸ்தை படணும்” என்று தீபலட்சுமி மேலும் சொல்ல,

 

“அடச்சீ! என் தங்கையைப் பத்தி எதுவும் பேசாத!” என்று தாங்கமாட்டாமல் சீறினான் கோபி. பூரணி அப்பழுக்கற்ற தங்கம் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? அவளைப்போய் இப்படியெல்லாம் பேசுகிறாளே… இவள் வாயை உடைத்தால் தான் என்ன என எண்ணும் அளவுக்கு ஆத்திரம் அவனுக்கு!

“டேய்… உண்மையை சொன்னா உனக்கு எரியுதா?” என்று தீபா அவனிடம் எகிறிக்கொண்டு சண்டைக்கு நின்றாள்.

 

வார்ததைகள் மிகவும் முற்றி அவ்விடம் மீண்டும் சண்டைக்களமாக மாற தொடங்கியிருக்க, நீதிவாசன் சட்டென்று சூழலை தன் கையில் எடுத்துக் கொண்டான்.

 

“முதல்ல உட்காரு தீபா” என்றான் ஒன்றுமே நடக்காதது போல!

 

“அண்ணா நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்னன்னா?” என்று தீபா சலிப்பாக ஆட்சேபிக்க, “முதல்ல உட்காருன்னு சொன்னேன்” என்றான் நீதி மீண்டும் அழுத்தமாக!

 

அவள் சலித்தபடி அமர, “நீயும் உட்காரு கோபி” என்று கோபியிடமும் கூறினான். முகத்தை அழுந்த துடைத்த கோபி எதுவும் மறுப்பு பேசாமல் அமர்ந்து கொண்டான். அவனது முகத்தின் சிவப்பும், இறுக்கமும் அவனது கோபத்தைப் பறைசாற்றியது.

 

அதிர்ந்து நின்றிருந்த பூரணியிடம், “நீ என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க? முதல்ல இந்த கடை பரப்பி வெச்சிருக்க நகையை எல்லாம் எடுத்து பத்திரமா எடுத்து வை! பொருளோட மதிப்பு தெரிய வேணாம் ரெண்டு பேருக்கும்! இப்படியா நடுவீட்டுல கடை பரப்பி வைப்பீங்க. பார்க்கிறவங்க எல்லாம் வயிறெரிய மாட்டாங்க…” என்று சத்தம் போட்டான்.

 

‘அண்ணன் தன்னையா மறைமுகமாகச் சொல்கிறான்?’ என்று தீபலட்சுமி அதிர்ந்து விழித்து வைத்தாள்.

 

அதுவரை சிலையென நின்றிருந்த பூரணி அப்பொழுதே தன்நிலை மாறி, கணவன் கூறியது போல அனைத்தையும் வேகமாக எடுத்துப் பத்திரப்படுத்தினாள். திரும்பி வந்தவளிடம், “வள்ளியம்மாவுக்கு போன் பண்ணி இன்னைக்கு வர வேணாம்ன்னு சொல்லு” என்றான் கட்டளையாக!

 

இயந்திரகதியில் அவன் சொன்னது எல்லாம் செய்தாள் பூரணி. செய்து முடித்தவளிடம், “அப்பா எப்ப எழுவாங்க?” என்று கேட்டான்.

 

“இன்னும் நேரம் இருக்குங்க…” என்று பதில் சொன்னவளுக்கு அவனது மனநிலையைத் துளியும் கிரகிக்க முடியவில்லை.

 

அவளை எதுவும் யோசிக்க விடாமல், “போ, போயி கதவை நல்லா சாத்திட்டு வா” என்று தந்தையின் அறையைக் காட்டி பணித்தான்.

 

அதையும் அவள் செய்ய, கோபிக்கு எப்படி இவன் இத்தனை இலகுவாக இருக்கிறான் என்று ஆச்சரியமாக இருந்தது.

 

நீதிவாசன் இப்பொழுது அனைத்தையும் ஒழுங்கு படுத்திய பின்னர், “ஹ்ம்ம் சொல்லு தீபா?” என்றான் விசாரிக்கும் தொனியில். அவனது பார்வை சற்று அதிகப்படி கூர்மையுடனேயே தங்கையை மொய்த்தது.

 

“அண்ணா அதுதான் சொன்னேனே!” என்று தீபா இழுக்கவும்,

 

“நானும் சொன்னேனே தீபா, நான் எப்ப வந்தேன்னு… முதல்ல இருந்து யாரு எப்படி பேசுனீங்க, யாரோட நோக்கம் என்னன்னு கூடவா எனக்கு புரியாம போயிருக்கும்” என்று தங்கையிடம் நிதானமாகக் கேட்டான்.

 

நெஞ்சம் அடைப்பது போல இருந்தபோதும், “அண்ணா என்னை நீங்க நம்பலையா?” என்றாள் தீபா வேண்டுமென்றே கண்ணைக் கசக்கியபடி!

 

அவளது நீலிக்கண்ணீரை கண்டுகொள்ளாமல், “நம்பத்தகுந்த மாதிரி உன் நடவடிக்கை இல்லையே! பூரணியை அத்தனை மோசமா பேசற, அவளை வெளிய போன்னு கையை பிடிச்சு இழுத்து வெளிய விட பார்க்கிற, அதுக்காக கோபி உன்னை அடிச்சா… என்னைப் பார்த்ததும், பூரணி தூண்டிவிட்டு தான் கோபி உன்னை அடிச்சான்னு சொல்லற… இதுல உன்னை எப்படி நம்ப?” என்று நீதிவாசன் நிதானமாகக் கேட்க,

 

“அம்மா இல்லாத பொண்ணு, அனாதைன்னு காட்டிட்டயே ண்ணா” என்று மீண்டும் அழுகை நாடகத்தைக் கையில் எடுத்தாள் தீபா.

 

தங்கையின் கண்ணீரில் துளி கூட இளகாமல், “இது முறையான பதிலோ, செயலோ இல்லையே தீபா! அப்படிப் பார்த்தா எனக்கும் தான் அம்மா இல்லை! நானும் உன்னை மாதிரி சொல்லவா? முடியாதில்லையா? ஒரு குழந்தை வளர தான் அம்மா வேணும். நமக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்ச பிறகும் கூட நீ இதைச் சொல்லி காட்டறது உனக்கே அதிகமா தெரியலையா?” என்று கண்டிப்புடன் கேட்டான்.

 

“அண்ணா… உண்மையிலேயே சம்பத்துன்னு ஒருத்தன் இவ கையை வெட்டினான் ண்ணா” என்றாள் தீபா பேச்சைத் திசை திருப்பும் விதமாக தனக்கிருக்கும் ஒரே துருப்பு சீட்டை பயன்படுத்தி.

 

நீதிவாசன் பூரணியிடம் அதைக்குறித்து எதுவும் கேட்கவில்லை. ஏன் ‘அப்படியா?’ என்று ஒரு பார்வையைக் கூட அவளை நோக்கி வீசவில்லை. அசராமல் அமர்ந்திருந்தவன், “எவனோ என் பொண்டாட்டி கையை வெட்டினா அவ என்ன பண்ணுவா?” என்று மீண்டும் தங்கையின் வாயை அடைக்க, தீபாவிற்குப் பேச்சற்ற நிலை!

 

“அண்ணா அப்படிப் பார்த்தாலும் உன் கண்ணு முன்னாடி தானே என்னை இவன் அடிச்சான். நான் ஆயிரம் தப்பு செஞ்சிருந்தாலும் இவன் யாருன்னா என்னை அடிக்க?” என்று கோபியைக் கைகாட்டினாள்.

 

அந்தோ பரிதாபம்! கோபியிடமும் அவன் எதுவும் விசாரிக்கவில்லை!

 

வெகு அமைதியான குரலில், “கோபியை நீ லவ் பண்ணினியா தீபா?” என்று அடுத்த கேள்வியைக் குத்தீட்டியாய் தங்கையிடம் வீசினான்.

 

“சுத்தப் பொய் ண்ணா” என்று மறுத்துச் சொன்னபோது அவள் குரல் நடுங்கியது. அவளே அழிக்க, மறைக்க நினைக்கும் விஷயங்கள் வெளிப்படும் என்று அவள் எதிர்பார்த்ததே இல்லையே!

 

“கோபியையும் காதலிச்சு, அன்பரசனையும் காதலிக்க உன்னால எப்படி முடிஞ்சது தீபா? இதுக்கு காரணம் கூட நீ அம்மா இல்லாத பொண்ணுங்கிறதால தானா?” தங்கையைக் கூர்மையாகப் பார்த்தபடி நீதிவாசன் கேட்க, அன்னைக்கு அன்னையாய் இருந்து வளர்த்த அவனுக்கு, மனம் எப்படிப் புண்பட்டிருக்கும் என்று ஒரு அண்ணனாய் கோபியால் உணர முடிந்தது.

உண்மையில் நீதிவாசனின் நிலையும் அதுதான்! தங்கையின் இந்த ஒழுங்கீனமற்ற செய்கையால் உள்ளுக்குள் மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான். எப்படி இவளால் இத்தனை தூரம் செய்ய முடிந்தது என்ற வேதனை அவனை அணுஅணுவாகச் சிதைத்தது.

 

“இல்லைண்ணா இவன் சரியில்லை அதுதான்… நான் நிஜமா அப்படிப்பட்ட பொண்ணு இல்லைண்ணா… இவன்தான் என்னை காதலிச்சான். நான் இல்லை” என்று பயத்தில் மாற்றி மாற்றி பேசி உளறினாள்.

 

“அப்படியா? அப்ப நீ ஏன் என்கிட்ட சொல்லலை?”

 

“அண்ணா… அது குடும்பத்துக்குள்ள பிரச்சனை வேணாம்ன்னு…”

 

அவள் பேசப்பேச அவள் முகத்திற்கு நேரே கையை நீட்டித் தடுத்தவன், “சொந்த அண்ணன் குடும்பத்துக்குள்ள பிரச்சனையைக் கிளப்பி விடணும்ன்னு நினைக்கிறவ, அத்தை குடும்பத்தோட பிரச்சனை வேணாம்ன்னு நினைச்சியா? சுத்தமா பொருந்தாத பதில் தீபா” என்றான் முகத்தில் அடித்தாற்போல்.

 

“அண்ணா…”

 

“உன்கிட்ட கேட்க வேணாம்ன்னு நானே ஒதுக்கின பிரச்சனை தான்! இப்ப நீ இவ்வளவு தூரம் இறங்கவும், கேட்காம இருக்கிறது சரியில்லை. அன்னைக்குக் கோபி கல்யாணத்துல எதுக்காக என்னைத்தேடி வந்து கதவைத் தட்டின?” என்று தங்கையைத் தீர்க்கமாக பார்த்தபடி கேட்டான்.

 

அவனது விசாரிக்கும் தொனி, வெகு சரியாகக் கேள்விகளை எழுப்பும் விதம், கடினப்பட்ட, இளக்கமற்ற முகம், சிவந்திருந்த விழிகள் என எல்லாமுமே அவளுக்கு அச்சமூட்டியது. “அண்ணா…” என்றவளுக்கு மேற்கொண்டு பேசக் குரலே எழ மறுத்தது.

 

அவன் விடுவதாகவே இல்லை. “நான் துணி மாத்திட்டு வரேன்னு உன்கிட்ட சொல்லிட்டு தான் போனேன். தெரிஞ்சும் கதவை உடைக்கிற மாதிரி தட்டுனியே அதுக்கென்ன அவசரம், அவசியம் வந்தது?” என்று கேட்டபடி அவளைப் பார்வையாலேயே துளைத்தான். அதன் தீட்சண்யம் தாங்காமல் அவள் மேலும் நடுங்கினாள்.

 

“பூரணி மேல காஃபியை கொட்டி அவளை அந்த ரூமுக்குள்ள வர மாதிரி சூழலை உருவாக்கினது நீ தான்னு எனக்குத் தெரியும் தீபா” என்றும் சேர்த்துச் சொல்ல, அவள் கண்களிலிருந்து கரகரவென்று நீர் இறங்கியது.

 

தவறைச் செய்யும்பொழுது இருக்கும் தைரியம், அது அனைவர் முன்பும் வெட்டவெளிச்சமாகும் போது இருப்பதில்லையே!

 

“இதை எல்லாத்தையும் கூட ஒரு விதத்துல மன்னிச்சு விடலாமோ என்னவோ தீபா… ஆனா, நீ இப்ப உன் புருஷன் கூட சண்டை போட்டுட்டு வந்த காரணம்…” என்று மூத்தவன் முகத்தைச் சுளிக்க,

 

‘அது எப்படித் தெரிந்தது… அன்பு சொல்ல மாட்டாரே!’ என்ற குழப்பத்தில் மேலும் அரண்டாள்.

ஆம், அன்பரசன் என்ன பிரச்சனை என்றாலும் இவளைப்பற்றி இம்மி கூட யாரிடமும் குறைவாகப் பேசவோ, இவளை விட்டுக்கொடுக்கவோ மாட்டான். பணம் தான் இவள் எதிர்பார்த்த அளவு அவனிடம் இல்லையே தவிர, குணத்தில் அவன் சொக்கத்தங்கம். நேசம் காட்டுவதில் காதல் கொடை வேந்தன்.

 

அவளது அதிர்ச்சி புரிந்து, “என்ன பார்க்கிற? எனக்கு அன்பரசன் பத்தி தெரியும். கண்டிப்பா அவர் எதையும் சொல்ல மாட்டாரு. உன்மேல கோபம்ங்கிறது தவிர அவர் வேற எதுவும் சொல்லவும் இல்லை… அதுக்காக நான் விசாரிக்காம இருப்பேனா?” என்று கேட்டு நிறுத்தினான் நீதிவாசன்.

 

தீபாவிற்கு வியர்த்து வழிந்தது. எச்சில் விழுங்கி அண்ணனைப் பயத்துடன் ஏறிட்டாள்.

 

“அம்மா இல்லை… அம்மா இல்லைன்னு… இப்பவரை அதை ஒரு ஆயுதம் மாதிரி உபயோகிக்கிற உனக்கு, அம்மாவோட அருமை தெரிஞ்சிருக்க வேணாமா? உன் வயித்துல உதிச்ச குழந்தையை அழிக்க எப்படி உனக்கு மனசு வந்தது?” என்று கேட்க, அங்கிருந்த மற்ற இருவருமே ஸ்தம்பித்தனர் என்றால் அது மிகவும் சிறிய வார்த்தை!

 

வயிற்றில் வளர்ந்த குழந்தையை அழைப்பதா? என்ன மாதிரியான பாதகச் செயல் இது! நெஞ்சுக்கூடு அதிர்ந்தது பூரணிக்கு!

 

“அண்ணா… அது…” என்று தீபா விளக்கம் சொல்ல முனைய,

 

“ச்சீ… பேசாத! இதுக்கு விளக்கம் வேறயா?” என்று எரிச்சலாக மொழிந்தவன், “தீபா இது உனக்குப் பிறந்த வீடு தான், நீ எப்ப வேணா இங்க வரலாம். போலாம். ஆனா, வேற பிரச்சனைகளைக் கொண்டு வரணும்ன்னு நினைச்சா… விளைவுகள் படு பயங்கரமா இருக்கும்” என்று மிரட்டலாகக் கூறினான்.

 

“அண்ணா ஏதோ அறிவில்லாம?” என்று மீண்டும் தொடங்கியவளை, இம்முறை நீதிவாசன் ஓங்கி அறைந்திருந்தான்.

 

தீபா அதிர்ச்சியில் உறைந்திருக்க, “எது அறிவில்லாம? கருவுல உதிச்ச குழந்தையை யாருக்கும் தெரியாம அழிச்சிட்டு வரதா? நீ செஞ்ச காரியம் தெரிஞ்சு உன் மாமியார் உன்னை என்ன சொல்லறாங்க தெரியுமா?” என்று ஆத்திரமாகக் கத்தியவன், சில நொடிகள் அவளது மாமியார் கூறிய வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் கண்களை அழுந்த மூடி ஆழ மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

இருந்தும் மனம் சமன் பட மறுத்தது. எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் அவை? விழிகளைத் திறந்தவன் சஞ்சலமான முகத்தோடு, “அவ எவன் குழந்தையைச் சுமந்தாளோ, புருஷன் கண்டு பிடிச்சிட போறன்னு கமுக்கமா அழிச்சிட்டு வந்துட்டான்னு சொல்லறாங்க…” என்று வலிநிறைந்த குரலில் கூறினான்.

பூரணிக்கே இந்த வார்த்தை கூசிப்போனது. அச்சோ இப்படிப் பேசி விட்டார்களே! அதுவும் சொந்த அண்ணனிடம் என்று மனவேதனை கொண்டாள்.

 

“அச்சோ அண்ணா இது வீண் பழி…” என்று அலறி விட்டாள் தீபா. அவளது நடத்தையில் இதுவரை அவள் பிசகியதில்லை. அது போன்ற எண்ணமும் அவளுக்கு எழுந்ததில்லை. கண்கள் இந்த பழியைத் தாங்க மாட்டாமல் கண்ணீரை நிற்காமல் பொழிய, இதயத்தை யாரோ இரண்டாக வெட்டியது போலத் துடிதுடித்துப் போனாள்.

 

“ச்சீ வாயை மூடு, இவ்வளவு நேரம் பூரணி மேல பழியைப் போடும்போது தோணலையா உனக்கு நீ பேசறது அபாண்டம்ன்னு? உன்னை மாதிரி தான ஊருக்கு நாலு பேரு இருப்பாங்க. நீ இவளை சொன்ன மாதிரி, அவங்க உன்னை சொல்லறாங்க” என்று நீதிவாசன் திட்ட, அவமானத்தில் தலையைக் குனிந்து கொண்டாள்.

“அவங்க அப்படி சொன்னப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? நேருல இருந்திருந்தா கொலையே செஞ்சிருப்பேன். அப்படி ஒரு ஆத்திரம்!

ஆனா நீ பேசின பேச்சை எல்லாம் கோபி எப்படித்தான் அத்தனை நேரம் பொறுமையா கேட்டிருந்தானோ! நீ பூரணியைக் கேவலமா திட்டினயே… அப்பவே உள்ள வந்து உன்னை, உன் ஆட்டத்தை தடுக்கணும்ன்னு தான் நினைச்சேன், ஆனா உன் ஆட்டம் எத்தனை தூரம் போகுதுன்னு தெரிஞ்சுக்க தான் ஒதுங்கி நின்னேன்” என்றவன்,

கசப்பான குரலில், “நானும் தெரிஞ்சுக்க வேணாமா? எப்பேர்ப்பட்ட தங்கை மேல நம்பிக்கையும், பாசமும் வெச்சு இருக்கேன்னு…” என்று உதடு சுழித்து இகழ்ச்சியாகச் சொல்ல, அண்ணனின் பாசத்தை முழுமையாக இழந்து விடுவோமோ என்ற பயத்தில், அவன் காலிலேயே விழுந்து விட்டாள் தீபலட்சுமி.

“அண்ணா… நான் என்ன செஞ்சிருந்தாலும் என்னை மன்னிச்சிடுண்ணா. என்னை வெறுத்துதாதண்ணா. என்னால அதை மட்டும் தாங்கிக்கவே முடியாது… இனி இப்படி வஞ்சம் வெச்சு… பொறாமையில, பேராசைப்பட்டு எந்த தப்பும் செய்ய மாட்டேன்ண்ணா. எனக்கு நீயும், அவரும் தான் எல்லாமே! நீங்க ரெண்டு பெரும் வெறுத்தா அப்பறம் எனக்கு வாழ்க்கையில எதுவுமே இல்லைண்ணா…” என்று கதறி அழுது விட்டாள்.

 

“போ… போயி புருஷனை சமாதானம் பண்ணி வாழ பாரு… அவரு உனக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கிற மாதிரி விரக்தியா பேசினாரு” என்று எரிச்சலாக நீதிவாசன் மொழிய, இப்பேர்ப்பட்ட பழி விழுந்தது தெரிந்தும், கணவனின் தற்போதைய மனநிலை புரிந்த பிறகும்… இங்கேயே இருந்து தனக்கும், கணவனுக்குமான பிளவை நிரந்தரமாக்க அவளுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. கணவனிடம் தன்னை நிரூபிக்க விரைந்து வெளியேறி விட்டாள்.

 

செல்லும்போது, “முடிஞ்சா எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க…” என்று யார் முகத்தையும் ஏறிடத் திராணியில்லாமல் கண்ணீரோடு மொழிந்தவள், வேகமாக வெளியேறிச் சென்று விட்டாள்.

 

கோபிக்கும் தான் அங்கு அதிகப்படி என்று தோன்ற, “நானும் கிளம்பறேன் நீதி மாமா. என் மனசறிஞ்சு நான் எந்த தப்பும் பண்ணலை. என்னால உங்களுக்கு எதுவும் மனசு வருத்தம் இருந்தா மன்னிச்சிருங்க” என்று வருந்திய குரலில் கூறினான்.

 

“இல்லை கோபி. உன்மேல எனக்கு எந்த கோபமும் இல்லை. தீபா உனக்கு செஞ்சது பெரிய பாவம். முடிஞ்சா அவளை மன்னிச்சு, அந்த விஷயத்தை மறந்துடு. என்ன இருந்தாலும், அவ இன்னொரு வீட்டு பொண்ணு, அவளை அடிக்கிற, அதட்டுற உரிமை… நம்ம ரெண்டு பேருக்குமே இல்லை…” என்றவன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான்.

 

தீபாவை அடித்ததற்காக வருந்துகிறான் என்று பூரணி, கோபி இருவருக்கும் புரிந்தது. அவனது மனம் இன்று தெரிந்து கொண்ட தங்கையின் மறுபக்கத்தால் எத்தனை வேதனை கொள்ளும் என்று இருவருக்குமே புரிந்திருந்தது.

 

“பூரணியை வேகமா இழுக்கவும் எனக்கு ரொம்ப ஆத்திரம் வந்திடுச்சு மாமா. அதுதான் நிதானம் தவறிட்டேன். ஆனா, அது ரொம்ப தப்பு தான். கண்டிப்பா இனி மறந்தும் அந்த தப்பு நடக்காது மாமா… ஐ பீல் கில்டி பார் இட்… ரொம்ப சாரி மாமா” என்றான் உண்மையான வருத்தத்துடன்.

 

அவனை ஏமாற்றி விட்டு சென்றபோதே, அவனது காதலை எட்டி மிதித்த போதே அமைதியாகக் கடந்து சென்றவன், அவனை இழிவாகப் பேசும்போது கூட மாற்றான் வீட்டுப் பெண், அதுவும் ஒரு பெண்பிள்ளை என்று தன் ஆத்திரத்தை வார்த்தையில் மட்டும் கொட்டியவன், இப்பொழுது அடக்க மாட்டாமல் கையை நீட்டியிருந்தான்.

 

ஏற்கனவே திருமணத்தன்று தன்னிடம் நடந்த வாக்குவாதத்திற்காக ஊரார் முன்னிலையில் தன் தங்கையின் ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கியதில் மிகவும் கோபத்தில் இருந்தவன், அன்றைய பிரச்சனையை நீதிவாசன் நேர் செய்திருந்தபடியால் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

 

ஆனால், இன்றோ தன் தங்கையின் குடும்ப வாழ்க்கையை அவளது வன்மத்தால், கீழ்த்தரமான குணத்தால் மீண்டும் பாழாக்கப் பார்க்க… அதற்கு மேலும் ஒரு அண்ணனாக அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போயிருந்தது. ஆனால், என்ன நேர்ந்திருந்தாலும் அவளை அடித்திருக்க கூடாது என்று தற்போது கோபிக்குக் குற்றவுணர்வாக இருக்கிறது.

 

அவனது மனநிலையைப் புரிந்து கொண்ட நீதிவாசன், “சரி கோபி…” என்று சமாதானமாக சொல்லிவிட்டான். அதுவே போதும் என்பது போல வேறு எதுவும் பேச்சுக் கொடுக்காமல் கோபி புறப்பட்டு விட்டான். அவனுக்குமே கொஞ்சம் தனிமை, ஓய்வு எல்லாம் தேவைப்பட்டது. புயலடித்து ஓய்ந்தது போல உணர்வு அவனுக்கு!

 

கோபி சென்றதும், பூரணி நீதிவாசனின் அருகில் வந்தவள் அவனிடம் எதுவும் பேசாமல் அமர்ந்து கொள்ள, அவளது முகவாட்டம் புரிந்து, “போ போயி காஃபி கொண்டு வா…” என்றான் சின்ன சிரிப்புடன். அந்த புன்னகை தனக்கே தனக்காக என்று அவளுக்கு புரியாமலில்லை. இப்பொழுது இன்னமும் வலித்தது. அவனுக்கு ஆறுதலாக இருக்குமளவு கூடத் தான் பெரிய பெண் இல்லையோ என்று முகம் வாடிப் போனாள்.

 

அவனது தளர்ந்த சூழலிலும், தன்னை தான் தாங்கிக் கொள்கிறான். நாம் எப்பொழுது இப்படி செய்வது என அவளுக்கு ஏக்கமாக இருந்தது. கூடவே, சம்பத் விஷயம் அதைக் கணவனிடம் சொல்ல வேண்டும், அதற்கு விளக்கம் தர வேண்டும் என்ற வேகமும் மனதிற்குள்!

 

அனைவரிடமும் கோபமாக இருக்கும்போதும், தன்னிடம் புன்னகை பூக்க முயலும் கணவனின் காதலில் அவளுக்குக் கண்களைக் கரித்தது. எந்த மலராக இருந்தாலும் அதற்கே உரித்தான மனமும் இருக்கும், அதில் சிறிது தேன்துளியும் இருக்கும். அது மலரின் இயல்பு! மனதினுக்குள் இருக்கும் நேசமும் அப்படித்தானே! எல்லா மனிதனுக்கும் தான் உயிரை வைத்திருக்கும் ஒரு உயிர் இந்த பூவுலகில் இருந்து கொண்டே தானே இருக்கிறது.

 

தன் கணவனையும் வேப்பம்பூவின் கசப்பாய் தான் பார்ப்பவர்கள் உணருவர், இளவயதில் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளா, அவன் மேல் விழுந்த கடன் சுமைகளா, குடும்ப பாரமா தெரியவில்லை… அவனது இறுக்கம் அத்தனை எளிதில் தளர்ந்து விடாது. அனைவரிடமும் விறைப்பும், இறுக்கமுமாகத்தான் திரிவான். ஆனால், அவனிடமும் ஒரு நேசம், காதல், பேரன்பு… என்று யாராலும் கணிக்க முடியாத, ஊகிக்க முடியாதளவு இருக்கிறதே! வேப்பம்பூவின் கசப்பை தாண்டிய தேன்துளியாய்!

 

அந்த தேன்துளி நேசம் தனக்கே தனக்காக என்னும் பொழுது பெண்ணரசிக்குக் கர்வமாகக் கூட இருந்தது.

 

காஃபி கலக்காமல் தேநீர் செய்தவள், கணவனைத் தேடிச்செல்ல அவன் தங்கள் அறைக்கு சென்றிருந்தான். அறைக்குள் சென்று கணவனிடம் தேநீரை நீட்டியவள், “காஃபி வெக்க காஃபி வெக்க தெரியாது! தெரிஞ்சாலும் வெச்சு தர முடியாது… நீ வெச்சுக்கொடு வெச்சுக்கொடு குடிச்சிக்கிறேன்…” என்று சன்னமான குரலில் பாடி அவனைச் சீண்டிக் கொண்டிருந்தாள்.

 

அவளது பாடலை கேட்டபடியே நிதானமாகத் தேநீரை அருந்தியவன், “என்னது எச்சி கொடுக்கிறதா?” என்று அவளது கடைசி வரையில் வேண்டுமென்றே சந்தேகம் கேட்க, “அச்சோ எச்சி இல்லைங்க… வெச்சுக்கொடுன்னு பாடினேன்…” என்று பொறுப்பாக விளக்கம் சொன்னாள் அவனின் மனையாள்.

“அதான் நானும் சொல்லறேன் எச்சி கொடு தானே…” என்று அவளருகே நெருங்கி வர, “அச்சோ போங்க… மாமா எழற நேரமாயிடுச்சு…” என்று கணவனுக்குப் போக்கு காட்டி வேகமாக அறையை விட்டு ஓடிவிட்டாள்.

 

இரவின் தனிமையில் சம்பத் குறித்த பேச்சை பூரணி தொடங்க, “எப்பவோ முடிஞ்ச விஷயம், அதை இப்ப நீ என்கிட்ட சொல்லி… அவன் மேல எனக்குக் கோபம் வந்து… அவனை நான் வெட்டவா, குத்தவான்னு தேட வேண்டி இருக்கும் பரவாயில்லையா?” என்று நீதிவாசன் கேட்ட விதத்தில் அதற்கு மேலும் அந்த விஷயத்தைத் தொடங்குவாளா என்ன?

 

“நீங்க தான் என்னை கவனிச்சுக்கறீங்க. நான் உங்களை கவனிக்கலையோ?” என தன் மனதின் குறையைப் பூரணி கூற,

 

“காலையில எழுப்பி விடறதுல இருந்து, ராத்திரி தூங்கற வரை எல்லாம் நீ தான் பார்த்துக்கிற, இனி என்ன கவனிக்கணும்ன்னு புரியலையே!” என்று நீதிவாசன் யோசித்தான்.

 

அவளும் மறைக்காமல் தன் மன சுணக்கத்தைக் கூற, “ஓ… உண்மையை சொல்லணும்ன்னா அது ஏமாற்றம், வலி, வேதனைன்னு நிறைய உணர்வுகள் தான்! என் தங்கை நல்லா இருக்கணும், நல்லபடியா வளரணும்ன்னு ஒரு சராசரி அண்ணனோட ஆசை தான் எனக்கும்! எங்க பிசகுச்சுன்னு தெரியலை. அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லை. அம்மா தவறிட்டாங்க… அப்படிங்கிறப்ப அவளோட முழு பொறுப்பும் என்னோடது தான். அவ இப்படி எல்லாம் நடந்துக்கவும் நான் தான் அவளை சரியா கவனிக்கலையோன்னு…” குற்றவுணர்ச்சியோடு நீதிவாசன் சொல்ல,

 

அவனது வேதனையைப் பொறுக்கமாட்டாமல் அவசரமாக இடையிட்டு, “விடுங்க ஏதோ நேரம் சரியில்லை. இப்படி எல்லாம் ஆயிடுச்சு. அவங்க போன வேகத்தைப் பார்த்தா… இனி அன்பரசன் அண்ணாவோட சந்தோசமா இருப்பாங்கன்னு தோணுது. நடந்ததை மாத்த முடியாது. அதை நினைச்சு வேதனை படாதீங்க. கண்டிப்பா இனி எல்லாமே நல்லதே நடக்கும்” என்றாள் ஆறுதலாக!

 

“சரி அவ தான் ஏதேதோ பேசறான்னா… உனக்கென்ன அவ்வளவு பயம்? நான் கோபப்படுவேன்னு நினைச்சியா என்ன?” என்று மனைவியிடம் கேட்டான்.

 

“தெரியலை… ஆனா, உங்க கோபத்தை தாங்கிக்க முடியாதுன்னு தோணுச்சு”

 

“நான் உன்கிட்ட அதிகமா கோபப்பட்ட மாதிரியே எனக்குத் தெரியலை! அப்பறம் எதுக்கு உனக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வருது!”

 

“ஹிஹி நான் கூட அதை இன்னைக்கு கண்டு பிடிச்சிட்டேங்க. தீபா அண்ணிகிட்ட, ஏன் கோபி அண்ணா கிட்ட கூட கோபமா கத்திட்டு இருந்த நீங்க, என்னைப் பார்த்ததும் ஒரு குட்டி சிரிப்பு…” என்று சொன்னவள் குரலை வெகுவாக தழைத்து, “மொத்தமா கவுந்துட்டேன் தெரியுமா?” என்று ரகசியம் சொல்ல, கண்ணில் நீர் வரச் சிரித்தான் கணவன்.

‘இப்பதான் கவுந்தாளாம்…’ என்று மனதில் நினைத்தாலும், அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல், “இப்படி பூனைக்குட்டி மாதிரி மூஞ்சியை வெச்சிருந்தா யாருக்குத் தான் திட்ட தோணும்.  வேணும்ன்னா முத்தம் கொடுக்க தோணலாம்” என்று கணக்கில்லாமல் முத்தத்தை வாரி வழங்க, அவனின் நேசப்பூமழையில் நனையத் தொடங்கினாள் அன்னபூரணி.

 

*** சுபம் ***

1 thought on “சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 21′(final)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 09சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 09

வேப்பம்பூவின் தேன்துளி – 9 தீபலட்சுமியின் திருமணம் முடிந்த பிறகு, அவள் தெளிவாக உணர்ந்து கொண்ட விஷயம், அன்பரசுவின் குடும்ப சொத்துக்கள் என்பது சொற்பமே! அவர்கள் கூட்டுக் குடும்பத்தினில் இருக்கிறார்கள் என்பதை முன்னமே தெரிந்து தான் இருந்தாள். ஆனால், சொத்துக்களும் சரிசமம்

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 11’

வேப்பம்பூவின் தேன்துளி – 11 நீதிவாசன் வந்துவிட்டு சென்றபிறகு, அன்னபூரணியிடம் நிறைய மாறுதல்கள்! இன்னதென்று வரையறுக்க முடியாத வகையில் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே சென்றது! இலகுத்தன்மை அவளிடம் நிரந்தர வாசஸ்தலம் கொண்டுவிட, பூரிப்பு அவளது முகத்தை பலமடங்கு பொலிவாக்கியது.

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 07சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 07

வேப்பம்பூவின் தேன்துளி – 7   ஒருவாரம் சென்னையைச் சுற்றிப்பார்த்த களிப்போடு முத்துச்செல்வம் குடும்பத்தினர் சொந்த ஊருக்குக் கிளம்ப, கோபியும் வருவதாக இணைந்து கொண்டான்.   இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே ரயிலில் முன்பதிவு செய்திருக்க, இவன் திடீரென்று கிளம்ப முடிவெடுத்ததால், நேற்று