சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 19’

வேப்பம்பூவின் தேன்துளி – 19

நீதிவாசன், அன்னபூரணியின் திருமண வரவேற்பு அனைத்து உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து சீரும் சிறப்புமாக நடந்து முடிந்திருந்தது.

 

பூரணி அந்த வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருந்திப் போனாள். மாமனார் மகேந்திரனும், வீட்டு வேலைகளைக் கவனிக்கக் காலையிலும், மாலையிலும் வரும் வள்ளியம்மாவும் தான், அந்த வீட்டில் அவளுக்கான உற்ற துணைகள். நாள் நகர்வதே அவர்களின் உபயத்தால் தான் எனலாம்!

 

பொதுவாக மதிய நேரத்தில் மகேந்திரன் உறங்க சென்று விடுவார். அந்த நேரம், இவள் ஜோதிமணி, முத்துச்செல்வம், ரஞ்சிதா, கோபி என ஒருவர் விடாமல் போன் போட்டுக் கதை பேசுவாள்.

 

அதிலும் மற்றவர்கள் எல்லாம் ஏதாவது வேலையில் பிசியாக இருக்க, ஜோதிமணியிடம் தான் பேச்சுக்கள் நீளும். அத்தனை சீக்கிரம் வைக்கவே மாட்டாள்.

 

அன்றும் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தவள், “அஞ்சு வாரம் ஆச்சு என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயி. இன்னும் உங்களுக்கு என்னைப் பார்க்க வரணும்ன்னு தோணலை?”  என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

 

“கல்யாண வரவேற்புக்கு நாங்க வந்துட்டு வந்தோம். நீ உங்க அண்ணனையும், அண்ணியையும் சென்னைக்கு வழியனுப்ப வந்திட்டு போன? அதெல்லாம் எந்த கணக்கு புள்ள” என்று ஜோதிமணி மகளை மடக்கினார்.

 

“அப்ப நீங்க காரணம் இருந்தா மட்டும் தான் வருவீங்க. அப்படித்தானே? அண்ணனை வழியனுப்ப வந்தும் கூட ரெண்டு வாரம் ஆயிடுச்சே…” என்று அதற்கும் சண்டை பிடித்தாள்.

 

“உன்னை கூட வெச்சுட்டு இருந்தப்ப கூட எப்படியோ சாமாளிச்சிட்டேன் போல… கல்யாணம் கட்டிக் கொடுத்தாலும் கொடுத்தேன், மாமியாரை விட மோசமா என்னைக் கொடுமை படுத்தற” என்று வாய்விட்டே புலம்பியவர், “போயி வேலை இருந்தா பாரு. உங்க அப்பாவுக்கு காஃபி வைக்க நேரமாயிடுச்சு. நான் அப்பறமா பேசறேன்” என்று சொல்லி அவள் பதிலை எதிர்பாராமல் அணைப்பைத் துண்டித்து விட்டார்.

 

போனைப் பார்த்து புசுபுசுவென மூச்சு விட்டுக் கொண்டிருந்தவளை, மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி, அவளுக்கு நேர் எதிரே நின்றபடி அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான் நீதிவாசன்.

 

“நீ… நீங்க எப்ப வ… வந்தீங்க…” அவன் பார்வை விதைத்த அச்சத்தின் விளைவாய் எழுந்து நின்று கொண்டாள். உண்மையில் அவன் உள்ளே வந்ததே அவளுக்குத் தெரியவில்லை.

 

‘ஆள் உள்ளே வந்தது தெரியாம, எல்லா கதவையும் திறந்து போட்டுட்டு… கொஞ்சம் கூட கவனத்தை இங்க வைக்காம கதையடிச்சிட்டு இருக்க?’ என்று அவனது பார்வை அவளை குற்றம் சாட்டியது. ஆனால், வாய் மொழியாக எதையும் கேட்கவில்லை. எதுவும் பேசாமல் அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.

 

ஆமாம், அவன் அறை தான்! அவள் அச்சப்படுகிறாள் என்பதற்காக நீதிவாசன் அன்று சடங்கை ஒத்தி வைத்திருக்க, அதன்பிறகும் கூட இத்தனை நாட்களில் அவள் சயன அறையை எட்டிப் பார்ப்பதாக இல்லை. மற்ற நேரத்தில் எப்படியோ அவன் இருக்கும்போது கண்டிப்பாக மறந்தும் அந்த அறைக்கு வந்து விடமாட்டாள்.

 

சினமும், சலிப்புமாக இருந்த போதும், உரிமையாக இதுவரை தன் கோபத்தை நீதிவாசன் அவளிடம் காட்டிடவில்லை.

 

அவன் சென்ற திசையையே பார்த்த அன்னபூரணியோ, ‘எதுக்கு நேரமா வந்தாரு?’ என திருதிருவென விழித்தபடி, அவன் வெளியில் வருவதற்காகக் காத்திருந்தாள். அவன் வருவதாக காணோம்! கோபமாக வேறு உள்ளே போனானே… என்ற தவிப்பில், தயக்கத்தை உடைத்து அவளாகவே அறைக்குள் சென்றாள்.

 

ஏதோ கோப்புகளைக் கட்டிலில் பரப்பி வைத்தபடி எதையோ தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தான்.

 

மெதுவாக, “அது என்னவோ தெரியலை… இந்த பெரியம்மா இப்பவெல்லாம் என்கிட்ட சரியாவே பேச மாட்டீங்குது” என்று புகார் வாசித்தாள்.

 

கோப்பிலிருந்து பார்வையை விலக்கி, அவளை அண்ணாந்து பார்த்தவன், எதுவும் சொல்லாமல் மீண்டும் கோப்பிலேயே கவனம் பதித்தான்.

 

“இல்லை கவனமில்லாம, பொறுப்பில்லாம இருக்கணும்ன்னு இல்லை… எப்பவும் இப்படி செய்ய மாட்டேன், இன்னைக்கு தான் கதவைத் தாழ்ப்பாள் போட மறந்துட்டேன் போல” என்றாள் குற்றவுணர்ச்சியோடு.

 

“ஹ்ம்ம்” என்று மட்டும் சொன்னான். வேறு பேசவில்லை.

 

அவளுக்குச் சங்கடமாகப் போனது. ஏன் பேசக் கூட மாட்டாரா என்று மனம் சுணங்கினாள்.

 

அவனோ, தான் தேடியது கிடைத்துவிட, யாருக்கோ அழைத்தவன், “வீட்டுல ஒரு காப்பி இருக்கு. நான் நாளைக்குக் கொண்டு வரேன். பார்த்துட்டு ப்ரோஸீட் பண்ணிக்கலாம்” என்று பேசி வைத்தான்.

 

மற்ற கோப்புகளை எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்து, நாளைக்கு எடுத்துச் செல்ல வேண்டியதை மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொண்டிருந்தவன், அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.

 

பூரணியோ அவ்விடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தாள். என்னவோ பெரியம்மாவின் ஈடுபாடற்ற பேச்சு, இவனின் புறக்கணிப்பு எல்லாம் சேர்ந்து என்னவோ செய்தது.

 

அவள் இங்கேயே நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவன், “இன்னும் என்ன?” என்றான் சற்று எரிச்சலாக!

 

‘இவருக்கு என்ன எரிச்சல்? எல்லாரும் இப்படி காரணமே சொல்லாம என்கிட்ட எரிஞ்சு விழுந்தா எப்படி? பெரியம்மாவும் இப்படி தான், நல்லாவே பேசறதில்லை. நானா வலுக்கட்டாயமா பேச வெச்சுட்டு இருக்கேன். ஏதாவது தப்பா செஞ்சா என்னன்னு சொல்லலாமில்லை. அதைவிட்டுட்டு ஏன் ரெண்டு பேரும் இப்படி பண்ணறாங்க’ அவளின் எண்ணங்கள் எங்கெங்கோ சுழல சோர்ந்து போனாள்.

 

மனம் மிகவும் அலைக்கழிப்பாய் இருக்க அங்கேயே படுக்கை மீது தளர்ந்து போய் அமர்ந்து கொண்டாள். எங்குத் தவற விடுகிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. போன வாரம் இவளைப்பார்க்க வந்திருந்த ரஞ்சிதா கூட, “என்ன இன்னும் இந்த ரூமிலேயே இருக்க?” என்று கேட்டிருக்க, “அவங்க இன்னும் ஒன்னும் சொல்லலை க்கா” என்று மட்டும் சங்கடத்துடன் சொல்லியிருந்தாள்.

 

உண்மையில் பூரணியின் நிலைப்பாடும் அதுவே! அவனாகத் தள்ளிப்போட்ட சடங்கு, அப்படியிருக்கையில் அதுகுறித்து அவள் எப்படிப் பேச முடியும்? அதோடு, அவனாக அழைக்காமல் இந்த அறைக்கு எப்படித் தானாக வருவது என்னும் தயக்கமும்!

 

இன்று தான் அவன் இருக்கும்போது அவளாக இந்த அறைக்குள் வந்ததும். அப்பொழுதும் எரிச்சலாகப் பேசினால்?

 

சும்மா சும்மா அழுவதும் பிடிக்காத நிலையில், இப்படி அழும் சூழலே அமைவது மனதிற்குக் கஷ்டமாக இருந்தது.

 

‘ஒருவேளை தனக்கு இந்த கல்யாணம் அவசரமாக நடந்தது பிடிக்காதது போல… அவருக்கு இந்த கல்யாணமே பிடிக்காமல் இருந்திருந்தால்?’ இத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகை இனியும் அடங்கேன் என்பது போல கரகரவென்று கன்னத்தில் வழிந்தோடியது.

 

பூரணியின் எதிரில் வந்து நின்றவன், “உங்க பெரியம்மா உன்கிட்ட சரியா பேசலைன்னு சொல்லற? ஏன்னு யோசிச்சு பார்த்தியா?” என்று கேட்டான்.

 

வேகமாகக் கன்னத்தைத் துடைத்துக் கொண்டவள், ‘ஏன்?’ என்பதுபோல கணவனைப் பார்த்தாள்.

 

“ஏன்னா புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணுங்க, இப்படி அம்மா அம்மான்னு காலை சுத்த மாட்டாங்க. அவங்களுக்கு புருஷன் வீட்டுல நிறைய வேலை இருக்கும். புருஷனை கவனிக்கணும், அவன் கூட பேசணும், அவன் கூட இருக்கணும்ன்னு தோணும். அவன் வேலைக்கு போனா கூட போன் பண்ணி அப்பப்ப பேசிட்டு இருப்பாங்க.

 

இப்படி இடையில புருஷன் வீட்டுக்கு வந்தா அவனை கவனிக்கணும்ன்னு தோணும். நான் வந்து அரைமணி நேரமாகியும், நீ குடிக்க தண்ணி கூடக் கொண்டு வர மாட்டீங்கிற… உனக்கு இது புகுந்த வீடுன்னு தோணினா தானே, ஏதோ ஹாஸ்டல்ல சேர்த்து விட்ட மாதிரி எப்ப பாரு, அம்மா… அம்மான்னு… அடம்! உங்க அக்கா இப்படி தான் செஞ்சாளா?

 

அன்னைக்கு அப்படித்தான் கோபியை வழியனுப்ப போயிட்டு அங்கேயே இருந்துட்டு வரேன்னு கேட்கிற. நீ இத்தனை ஆர்ப்பாட்டம் செஞ்சா உங்க பெரியம்மாவுக்கு நீ குடும்பம் நடத்தற அழகு புரியாம இருக்குமா? அதுதான் பேசறதில்லை போல… எங்கே உன்னை பார்க்க வந்தா ஒட்டிக்கிட்டே அவங்களோட வீட்டுக்கு போயிடுவேன்னு பயப்படறாங்களோ என்னவோ…” என்று சலிப்பாக நிறுத்தியவன், கட்டிலின் மறுபுறம் சென்று கையை மடக்கி முகத்தை மறைத்தவாறு வைத்த வண்ணம் படுத்துக் கொண்டான்.

 

‘இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?’ அவளுக்குத் தலை சுழல்வது போல இருந்தது.  இப்பொழுதும் கூட என்ன செய்ய என்று அவளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. அவசரமாக எழுந்து போய் தண்ணி கொண்டு வந்து நின்றாள்.

 

“தண்ணி குடிங்க…” என்றும் சேர்த்துச் சொல்ல, அவனுக்கு அப்படியொரு எரிச்சல்! ஒரு பேச்சுக்குச் சொன்னால் அதையே செய்வாளா என்று! போதாக்குறைக்கு இன்று வேலை செய்யும் இடத்திலும் சற்று எரிச்சலான சூழ்நிலை. ஆக, அது வீட்டிலும் பிரதிபலித்தது. கடையில் ஒருவன் பணத்தை ஏமாற்றப் பார்க்க அதை நீதிவாசன் கண்டுபிடித்திருக்க, அங்குப் பெரிய வாக்குவாதம்.

 

“எங்களால தானே நோகாம பணம் சம்பாரிக்கிறீங்க. என்ன இப்ப பண்ணிட்டேன்? கொஞ்சம் கணக்குல கவனம் பிசகிடுச்சு. இந்த பிச்சை காசு யாருக்கு வேணும்? இதைப்போய் நான் எடுப்பேனா? உங்களுக்கு நம்பிக்கை வேணாமா?” என்றெல்லாம் எரிச்சலூட்டும் விதமாகப் பேசி தான் தவறே செய்யவில்லை என்று அவன் வாதம் செய்ய, அங்கு மிகப்பெரிய வாக்குவாதம், சண்டை, சச்சரவு!

 

அந்த எரிச்சலோடு இங்கு வந்தவன், மனைவியிடம் இத்தனை நாள் கட்டாத கோபத்தையெல்லாம் ஒட்டுமொத்தமாகக் காட்டிவிட்டுப் படுத்தால், இவள் என்னவோ சிறுபிள்ளை போலச் செய்து மேலும் எரிச்சலூட்டுகிறாள்.

 

பூரணியோ எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறாள். அவளுக்குப் பெரியம்மாவின் அன்பும் வேண்டும், கணவனின் நேசமும் வேண்டும்! நீ போய் இதைச் செய் அது இரண்டும் கிடைத்து விடும் என்று யாரேனும் சொன்னால், நொடியும் தாமதிக்காமல் செய்துவிடும் கலங்கிய நிலை அவளுடையது!

 

நீதிவாசனோ பூரணியின் குரலைக் காதிலே வாங்காதவன் போலப் படுத்திருக்க, “தண்ணி…” என்றாள் தயங்கித் தயங்கி.

 

“எடுத்திட்டு போ முதல்ல. சும்மா வந்திடவா. ஒரு பேச்சுக்கு சொன்னா…” என்று கத்தியவன், “போ தலை வலிக்குது கொஞ்சம் காஃபி போட்டு எடுத்திட்டு வா” என்றான் எரிச்சலாக!

 

ஏதோ வேலையாளுக்குச் சொல்வது போல ஏவினான்! சற்றே அதிர்ந்தாலும், அவன் மனநிலை ஓரளவு புரிய அமைதியாகவே வெளியேறினாள்.

 

சில மனிதர்கள் ஏன்தான் கோபத்தை உடனேயே வெளிக்காட்டாது ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வைத்துக் கொட்டி தீர்க்கிறார்களோ! சிறு பொறியின் விளைவை எளிதாக எதிர்கொள்ளலாம். எரிமலையின் சீற்றம் அப்படியா? கோபத்தை தனக்குள் புதைத்து ஒட்டுமொத்தமாக வெளியிடுபவர்களுக்கு அது புரிவதில்லை.

 

சிறிது நேரத்தில் காஃபியுடன் வந்தவள், “இது உங்களுக்குப் பிடிக்குமா?” எனத் தயங்கி தயங்கிக் கேட்டபடி சில சிற்றுண்டி வகைகளையும் வைத்தாள். வேண்டாம் என்று தலையசைத்தவன், காஃபியை மட்டும் பருகிக்கொண்டு படுத்து விட்டான்.

 

இப்படி அவன் பகலில் படுத்து அவள் பார்த்ததே இல்லை! அவனை இப்படிப் பார்க்கவே மனம் வலிக்க, தயங்கியபடி தைலம் கொண்டு வந்து மறுபக்க மெத்தையில் ஏறி அமர்ந்து அவன் நெற்றியில் தடவி விட்டாள். எங்கே தட்டி விடுவானோ, இல்லை எதுவும் குத்தலாகப் பேசி விடுவானோ என்னும் அச்சத்தில் கை விரல்கள் வேறு நடுங்கி வைத்தது.

 

நடுக்கத்தை நிறுத்தும் முயற்சி எல்லாம் நம் கட்டுப்பாட்டில் வராதே! நடுங்கியபடியே மெல்ல அவன் நெற்றியில் தேய்த்து விட, அவன் மறுப்பு சொல்லாமல் இருந்தது அவளுக்கு ஆசுவாசமாக இருந்தது.

 

சிறிது நேரம் அவன் நெற்றியை அழுத்திக் கொடுக்க நீதிவாசனுக்கு அது அத்தனை இதமாக இருந்தது. வலி மட்டுப்பட்டதும் மெல்லப் பூரணியின் கரங்களைப் பற்றி அருகில் இழுக்க, அவளருகே நெருங்கியவளின் விழிகள் அவனது செய்கையிலும், அருகாமையிலும் அகல விரிந்தது.

 

கணவனின் மற்றொரு கரமோ அவளின் இடையே வளைத்து, அருகில் வாகாகப் படுக்க வைக்க… அவளது விழிகள் இப்பொழுது தன்போல மயக்கத்தில் மூடிக் கொண்டது. புன்னகை பூத்த இதழ்களுடன் மெல்ல முன்னேறியவனை சிறிது நேரத்தில் பதறி விலக்கியவள், “ரூம் கதவை இன்னும் சாத்தலை…” என்றாள் பரிதாபமாக!

 

சிரித்தே விட்டான் அவள் சொல்லிய விதத்தில்! காற்றாகிவிட்ட குரல், தயங்கிய பேச்சு, இதில் முகம் வேறு சாதுவான பூனைக்குட்டி போல!

 

அவளது நெற்றி முட்டியவன், எதுவும் பேசாமல் எழுந்து சென்று அறைக்கதவை சாற்றிவிட்டு வந்து… விட்ட வேலையைத் தொடர, அது பகலென்பதும் மறந்திருந்தது. இரவு கவிழ்ந்ததும் இருவருக்கும் தெரியாமல் போனது.

வழக்கமாக நீதிவாசன் நேரமாகவே எழுவது தான்! ஆனால், இன்று எப்பொழுது எழுவானோ? என்று அடிக்கடி தங்கள் அறையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அன்னபூரணி.

 

வள்ளியம்மா சமையல் வேலையில் இருக்க, கூடமாட உதவுவதற்காக நின்றவள், கண்டிப்பாக அப்படி எதையும் இன்று செய்திடவில்லை.

 

அவள் செய்கை புரிய, “தம்பி இன்னும் காஃபி சாப்பிட வரலையேம்மா” என்று வள்ளியம்மாவே ஆரம்பித்தார்.

 

“ஆமாம் மா, தூங்கறாங்க போல. போயி எழுப்பிப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு படுக்கை அறைக்குச் சென்றவளுக்கு, அவனை எதிர்கொள்ளக் கூச்சமும், வெட்கமுமாக இருந்தது.

 

அதிகம் சிரமம் வைக்காமல், சிறிதாக அசைத்து, அழைத்ததிலேயே நீதிவாசன் விழித்திருந்தான். “ரொம்ப நேரம் ஆயிடுச்சா?” என்றபடி எழுந்தவன், அவளிடம் கொஞ்சம் வழக்காடி விட்டு, “சரி நான் குளிச்சிட்டு வரேன். காஃபி கொண்டு வந்திடு” என்றுவிட்டுப் படுக்கையை விட்டு இறங்கினான்.

 

பூரணிக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் புதிதாக வழக்கத்தை மாற்றுகிறான் என்று! தயங்கிய குரலில், “எப்பவும் அங்க வந்து தானே குடிப்பீங்க?” என்று கேட்டாள்.

 

கண்கள் சிரிக்க, “என் பொண்டாட்டிக்கு நேத்திலிருந்து தான் இந்த ரூம் இருக்கிறது கண்ணு தெரியுதாம். அதுனால தான்…” என்றான் கண்ணைச் சிமிட்டி கேலிக் குரலில்!

 

ஆனால் அவளுக்கு அது கஷ்டமாக இருந்தது. தன் நிலைப்பாட்டை அவனிடம் சொல்லவும், அவளது தாடையைப்பற்றி நிமிர்த்தி, “ஓ… நான் கூப்பிடணும்ன்னு நீயும், நீ வரணும்ன்னு நானும்… ஹ்ம்ம்… ரொம்ப நல்ல புருஷன், பொண்டாட்டி தான்” என்றான் சிரிப்போடு.

 

“இப்ப சிரிங்க. நேத்து உங்களுக்கு ரொம்ப கோபம்?” என்றாள் குறையாக.

 

அவன் கோபத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். அது அவளது சுணக்கத்தில் அப்பட்டமாகத் தெரிய அவனுக்கு உல்லாசமாக இருந்தது. மனதில் உல்லாசத்தைக் குரலிலும் காட்டி, “அப்படியா? கொஞ்ச நேரத்துல அந்த கோபம் குறைஞ்சிடுச்சே” என்றான் விஷமமாக.

 

முகம் சிவந்துவிட, “ஸ்ஸ்ஸ்…” என்று அவனின் வாயைப் பொத்தியவள், “குளிச்சிட்டு வாங்க… காஃபி கொண்டு வரேன்” என்றாள்.

 

அப்பொழுதும் விடாமல், “ஆமா, காஃபி வைக்க தெரியாதுன்னு பாடின, தெரிஞ்சாலும் வெச்சு தர முடியாதுன்னு பாடின… இப்ப எப்படிக் கொண்டு வருவ?” என்று நீதிவாசன் மேலும் சீண்டினான்.

 

“நேத்து சாயங்காலம் நீங்க குடிச்சது நான் போட்ட காஃபி தானே” என்றாள் முறைத்தபடி!

 

“ஹ்ம்ம் அந்த காஃபில தான் மயங்கிட்டேன்…” என்று நெற்றி முட்டியவன், “சாரி நேத்து கொஞ்சம் கோபமா பேசிட்டேன்” என்றும் சேர்த்து சொன்னான்.

 

அவனுக்கே நேற்று , ‘இன்னும் என்ன?’ என்று எரிந்து  விழுந்ததும், ‘போயி காஃபி கொண்டு வா’ என்று வேலை ஏவியதும் சங்கடமாகப் போய்விட்டது. அதற்கு வேறு அவள் முகத்தில் சிறு சுணக்கத்தைக் கூட காட்டவில்லையா அவனுக்கு அதில் மனம் இளகி விட்டது.

 

சாதாரணமான நேரம் என்றால் நிச்சயம் கோபம் கொண்டிருப்பாள். ஆனால், நேற்று ஏனோ அவளால் கோபம் கொள்ள முடியவில்லை. கணவனின் நிராகரிப்பை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனுக்குத் தன்னை பிடிக்கவில்லையோ என்றளவு கூட யோசித்து விட்டாளே!

“பரவாயில்லைங்க… அப்படி கோபமும், சண்டையும் இல்லாட்டி உங்க மனசுல என்ன இருந்ததுன்னு எனக்கும் புரிஞ்சு இருக்காதே” என்றதோடு மட்டும் பூரணி முடித்துவிட, அவள் கண்களை உற்று நோக்கியவன், ஆசையாக முகத்தில் முத்திரைகளைப் பதித்து விட்டுக் குளிக்கச் சென்றிருந்தான்.

அனைத்தும் ஒற்றை இரவில் நேராகி விட்டதா என்று பூரணிக்குப் புரியவில்லை! ஆனால், இனி புதிதாகக் குழப்பங்கள் எழாது என்ற நம்பிக்கையும் வர மறுத்தது.

மனம் மறுகுவது ஏனென்றே அவளுக்குப் புரியவில்லை. ஒருவேளை முறைப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்திருந்தால் இந்த குழப்பங்கள் எல்லாம் எழுந்திருக்காதாயிருக்கும் என்று அவளுக்கு அவளே சமாதானம் செய்து கொண்டாள்.

அதன் பின்னர், நாட்கள் அழகான நீரோடையாகத் தான் நகர்ந்தது. நீதிவாசன், அவளுக்கென பிரத்தியேகமாக நேரம் ஒதுக்கி மூணாறுக்கு அழைத்துச் சென்று வந்தான். அவ்வப்பொழுது வேலையை ஒதுக்கி அவளுடன் நேரத்தைச் செலவழித்தான்.

மீண்டுமொருமுறை ரஞ்சிதா அன்னபூரணியின் இல்லத்திற்கு வந்திருந்த பொழுது, தங்கை தன் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பது மூத்தவளுக்கு ஆறுதலையும், நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்தது. அவள் மூலமாக ஜோதிமணிக்கும் விஷயம் தெரிந்திருக்க அதன்பிறகே அவருக்கு நிம்மதி!

என்னதான் மகள் கோபத்தில் பேசியிருந்தாலும், ‘உங்க பொண்ணா இருந்தா…’ என்று அவள் யோசிக்காமல் கேட்டது அவருக்கு மிகுந்த மனவுளைச்சலை, பாரத்தைத் தந்திருந்தது. அதற்குத்தக்கப் பூரணியின் வாழ்வும் நேராகாமல் இருந்திருக்க, அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

ரஞ்சிதா அன்னையின் கவலையை உணர்ந்து, நிறைய நிறையச் சமாதானங்கள் செய்து பார்த்தாள். “நீதி மாமாவுக்குப் பூரணியை ரொம்ப பிடிக்கும் மா. கல்யாணம் இப்படி அவசரமா நடந்திருக்காட்டியும், மாமா நம்ம பூரணியைத் தான் கட்டியிருப்பாரு” என்றெல்லாம் விளக்கியபோதும், அவள் ஏதோ தன்னை சமாதானம் செய்வதற்காகச் சொல்கிறாள் போல என்பது போலத்தான் அவர் எண்ணம்.

அதோடு இத்தனை நாட்களாக பிள்ளைப்பேறு பார்க்க வந்த மூத்த மகள், கல்லூரி சென்று வந்து கொண்டிருந்த இளைய மகள் என்றிருந்த வீடு… இப்பொழுது மூத்தவர்கள் இருவருடன் மட்டுமாக இருக்க, அந்த வெறுமை மேலும் மனவுளைச்சலை தான் தந்து கொண்டிருந்தது.

ஒருவழியாக இளையவள் வாழ்வு நேரானது தெரிந்த பின்பு தான், அவளைப் பார்த்து வரச் சென்றார்.

“ஏன் பெரியம்மா இத்தனை நாளா வரலை. அன்னைக்கு ரொம்ப கோபம் பெரியம்மா. திடீர்ன்னு கல்யாணம்னதும் பயந்துட்டேன் போல… அதோட அந்த தீபா அண்ணி வேற முன்னாடி நாளு ரொம்ப பேசிட்டாங்கல்ல… அதுல ரொம்ப கஷ்டமா போச்சு. அதான் ஏதோ ஆத்திரத்துல பேசிட்டேன். மன்னிச்சிடுங்க பெரியம்மா, என் மேல உங்களுக்கு அதுதான கோபம்… கண்டிப்பா கோபத்துல தான் பேசினேன் பெரியம்மா, எங்க அம்மா இருந்திருந்தா கூட என்னை இத்தனை நல்லா பார்த்திருக்காது. நீங்க என்னை நல்லா பார்த்துக்கிட்டீங்க. ரொம்ப நல்லா வளர்த்தீங்க. என்னை மன்னிச்சுடுங்க பெரியம்மா. நிஜமாவே தெரியாம பேசிட்டேன்” என்று வெகு நாட்களாகப் பார்க்காத ஏக்கத்தில் அழுதே விட்டாள்.

பிள்ளைகள் அழுதால் பெற்றவர்களுக்குத் தாங்குமா என்ன?

“ஏன் புள்ளை, நீயும் உங்க அக்காவும் என்ன வேலை கூடமாட செஞ்சீங்க. சும்மா என்னையவே வேலை வாங்கி படுத்திட்டீங்க. உங்க அண்ணி உங்களுக்கும் மேல சொகுசு. அதான் உங்க பொறுப்பெல்லாம் முடியவும் அக்கடான்னு கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்தேன். அது உங்களுக்குப் பொறுக்காதே! அதுக்கு இப்படி அழுவியா?” என்று பேச்சை மாற்றினார்.

கண்ணீரைத் துடைத்துச் சிரித்தவள், “அப்ப உங்களுக்குக் கோபம் போயிடுச்சா?” என்றாள் ஆவலாக.

“அன்னைக்கு கன்னத்துல ஒன்னு கொடுத்தேனே அப்பவே போயிடுச்சு” என்று பெரியவள் சொல்ல, “என் செல்ல பெரியம்மா…” என்று அன்னையின் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டாள் பூரணி.

நீதிவாசன் வந்ததும், பூரணிக்குத் தரவேண்டிய சீர்வரிசையில் இன்னும் பத்து சவரன் நகை மட்டும் பாக்கி இருக்கு என்றும், அது கோபி வரும்போது தருவதாகவும் ஜோதிமணி சொல்ல, “உங்ககிட்ட இதெல்லாம் நான் கேட்டேனா?” என்று சத்தம் போட்டான்.

“நீ என்ன கேக்கிறது. எங்க புள்ளைக்கு நாங்க செய்யணும். மூத்தவளுக்கு செஞ்சது எல்லாம் இளையவளுக்கும் செஞ்சா தானே எங்களுக்கும் பெருமை” என்று பெரியவள் கட் அண்ட் ரைட்டாக சொல்ல, அவனால் வாயைத் திறக்க முடியுமா என்ன?

அனைத்தும் நன்றாக இருப்பது போல இருந்தாலும், மனதிற்குள் என்னவோ ஒரு அபஸ்வரம் பூரணிக்கு. ‘தேவையில்லாமல் பயப்படுகிறாய்’ என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாலும், சஞ்சலம் குறைவதாக இல்லை.

அந்த சஞ்சலத்திற்கான அடிப்படை காரணம், தீபலட்சுமி இவர்களின் திருமணத்தின் பிறகு இன்றுவரை இந்த வீட்டிற்கு வருகை தரவில்லை என்பதே! ஆனால், அதுவும் அவளுக்கு உரைக்கவில்லை. உரைத்திருந்தால், இதனால் தான் என்று புரிந்து, மனதைத் தேற்றி… அதனை விட்டு வேறு சிந்தனைக்குச் சென்றிருப்பாளோ என்னவோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 17’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 17’

வேப்பம்பூவின் தேன்துளி – 17   திருமண இரவுகள் தான் எத்தனை கோலாகலம்! அந்த மிகப்பெரிய மண்டபம் முழுவதும் மின்விளக்குகளால் பிரகாசிக்க, அது கோபாலகிருஷ்ணன், லாவண்யாவின் திருமண வைபவம். திருமண ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பணத்தின் செழுமை தெரிந்தது.   லாவண்யா

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 09சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 09

வேப்பம்பூவின் தேன்துளி – 9 தீபலட்சுமியின் திருமணம் முடிந்த பிறகு, அவள் தெளிவாக உணர்ந்து கொண்ட விஷயம், அன்பரசுவின் குடும்ப சொத்துக்கள் என்பது சொற்பமே! அவர்கள் கூட்டுக் குடும்பத்தினில் இருக்கிறார்கள் என்பதை முன்னமே தெரிந்து தான் இருந்தாள். ஆனால், சொத்துக்களும் சரிசமம்

சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’

வேப்பம்பூவின் தேன்துளி – 13   மாலை மூன்று மணிக்கும் மேல் இருக்கும். “பழனியாண்டவர் ஸ்டோர்ஸ்” கடையின் வரவு செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் நீதிவாசன். இது அன்றாட வழமை தான்!   அப்பொழுது அவனது அறையில் இருந்த தொலைப்பேசி சிணுங்கியது.