Tamil Madhura Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 3

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 3

அத்தியாயம் – 3

நாதனும்  கதிரும் விடியும் முன்பே  கிளம்பி ஏர்போர்ட் வந்திருந்ததால் இப்போது அவர்களுக்குத் தூக்கம் கண்ணை சுழட்ட ஆரம்பிக்க, காரிலே உறங்க ஆரம்பித்திருந்தனர். அரவிந்துக்குத் தூக்கம் கலைந்திருந்ததால் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தான். 

கடற்கரை ரோட்டில் கார்  நுழைந்தது. அந்தக் காலை வேளையிலும் சிங்காரச் சென்னையில் பரபரப்பு அதிகமாகத் தெரிந்தது. கல்லூரி பஸ்கள் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பறந்தன. இந்த வேளையில் இந்தப் பிள்ளைகள் என்ன சாப்பிட்டு இருக்கும்? கான்டீன்ல போய் கூல்டிரிங்க்ஸ், டீ குடிச்சு வயத்தக்  கெடுத்துக்குவாங்க என்னைய மாதிரி. காலேஜ் கேண்டீன்ல அந்தந்த சீசன்ல கிடைக்குற பழங்களை சாப்பிட வச்சா நல்லா இருக்கும். நினைத்துக் கொண்டே வந்தான். அவன் மடியில் அசதியில் ஸ்ராவணி தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது நேரப்படி இப்போது நள்ளிரவு. இதற்குள் வீடும் வந்து சேர்ந்திருந்தது. 

வீட்டிலே அவனது வரவை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர்.  வெள்ளை நிறத்தில் வாடாமல்லி நிற பார்டர் போட்ட புடவையும் வாடாமல்லி நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார் சுமித்ரா.  அப்படியே அரவிந்த்தை உரித்து வைத்திருந்தார். அந்த அழகான முகத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் குங்குமத்தைத் தன்னோடு எடுத்துக் கொண்டு அரவிந்தின் அப்பா நாராயணன் மறைந்து ஒரு மாமாங்கத்துக்கு மேலாகி விட்டது.  

அம்மா சுமித்ராவுக்குப் பக்கத்தில் அவனது மூத்த அக்கா சுதாவும் இளைய அக்கா சங்கீதாவும் நின்று கொண்டிருந்தார்கள். அம்மாவின் தோளில் தொங்கிக் கொண்டு ‘வாண்ணா வாண்ணா’ என்று கத்தி வரவேற்றாள் புதிதாகக் கல்யாணம் ஆன கடைக் குட்டி சாரிகா. 

சிறுவயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கபட்ட, செயல் இழந்த காலை  வைத்துக் கொண்டு மெதுவாக வந்தார் மூன்றாவது அக்கா சத்யா. ஏதோ வேலை இருப்பதைப் போல் சற்று நேரம் கழித்து வந்து பின்னால் நின்றாள் முதல் தங்கை சாந்தா. அவளைப் பார்த்ததும் அரவிந்துக்கு சிறிது கோவம் எட்டிப் பார்த்தது. முகத்திற்கே அந்தக் கோவம் எட்டாமல் தடை போட்டு அடைத்தான்.

’குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’. இவளை நம்பினேனே அதுதான் நான் செய்த முதல் தவறு.  இனிமேல் அந்த மாதிரி தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். 

அனைவரிடமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் விசாரித்தான். மூன்றாவது அக்கா சத்யாவிடம் கூடுதலாக இரண்டு அன்பு வார்த்தைகள் பேசினான். இதற்குள் ஸ்ராவனியும் விழித்து விட்டிருக்க, அழைத்துக் கொண்டு போய் பல் விளக்கி விட்டுவிட்டு, சாரிகாவிடம் கொஞ்சம் பாலைக் கொண்டு வர சொன்னான். மற்றவர்கள் தாங்கள் செய்கிறோம் என்று சொல்லியும் கேட்கவில்லை. தான் சாப்பிடும்போதே மடியில் அமரவைத்து, குழந்தை காரம் என்று சொன்னதால்  இட்லியை சர்க்கரைத் தொட்டு சாப்பிட வைத்தான். 

“ஏண்ணா தினமும் நீதானே ஸ்ராவனிக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு  இருக்குற. இன்னைக்கு நாங்க செய்யுறோமே. எங்களை நம்ப மாட்டியா?” ஆதங்கப் பட்டாள் சாரிகா.

“நம்பி நம்பி  பட்டக் கஷ்டம் போதும்மா. இனிமேல் யாரையும் நம்பி கஷ்டப்பட நான்  தயாரில்ல” மனதில் இருந்தது பட்டென அரவிந்த் வாயில் வந்து விட்டது. 

கூடத்தில் ஒரு சங்கடமான அமைதி நிலவியது. சமையல் அறையில் சாந்தா விசும்பும் சத்தம் கேட்டது. சமையல் அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து கீரை ஆய்ந்து கொண்டிருந்த இருந்த சத்யா சொன்னாள். 

“போதும்டி நீலிக் கண்ணீர் வடிக்காதே. அரவிந்த்  ஒரு வார்த்தை சொன்னது உனக்கு வருத்தம் வந்துடுச்சாக்கும். நான் மட்டும் அவன் நிலமைல இருந்தேன் உன்னை வெட்டிப் போட்டிருப்பேன்” 

*****

நாராயணன் திருச்சி பக்கம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர். கண்ணுக்கு குளிர்ச்சியாக  இருப்பார். அவரது அப்பாவுக்கு காவிரிப் பாசனத்தில் பத்து ஏக்கர் நிலமும், ஒரு மளிகைக் கடையும் இருந்தது. ஐந்து ஏக்கரில் நெல் போட்டிருந்தனர். மூணு போக விளைச்சலில் குடும்பமே கவலை இல்லாமல் சாப்பிட்டது. மீதி இருந்த நிலத்தில் வாழையும், தென்னையும் போட்டிருந்தனர். 

வீட்டுக்குத் தேவையான மளிகை கடையில் இருந்து வந்து விடும். அதனால் பெரிதாகக் கவலை எதுவும் இல்லாமல் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக இருந்தவருக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் வருடம் தான் ஓடி போயிற்றே தவிர நாராயணணுக்கோ ஒரு பெண்ணையும் பிடிக்கவில்லை.  

ஒரு காலை வேளையில் விறகடுப்பில் இட்டிலி பானையில் மாவை ஊற்றி வைத்து விட்டு, மணக்க மணக்க டிகாசன் கலந்த காபியை மகனுக்குத் தந்தபடியே அவர் அம்மா  கேட்டார். 

“ஏண்டா அந்த மன்னார்குடி பொண்ண ஏன் வேணாம்னு சொன்ன? அந்தப்  பொண்ணுக்கு போன வாரம் கல்யாணம். நம்ம காரவீட்டுகாரம்மா கல்யாணத்துக்குப் போயிருந்தாங்களாம். பொண்ணுக்கு சீதனமா ரெண்டு ஏக்கரா நிலம் தந்திருப்பாங்க போலிருக்கு. இதைவிட நம்ம தகுதிக்கு எங்கடா பொண்ணு கிடைக்கும். இப்படி பொழைக்கத் தெரியாதவனா இருக்கியேடா” என்று மகனைக் கடிந்துக் கொண்டவர் 

“உனக்கு எப்படிதான் பொண்ணு வேணும்னு சொல்லு” என்றார்.

நாராயணன் அம்மாவிடம்  கேட்டது ஒன்றே ஒன்றுதான் பொண்ணு பார்க்க ல……ட்சணமாக இருக்க வேண்டும். 

“லட்சணம்னா உன் மூத்த அண்ணி, அந்த துறையூர்காரி  லட்சணம் போதுமா? ”

“லட்சணம் போதும். ஆனா அவங்க கலர் பத்தாது”

“ லட்சணம் வேணும், கலரும் வேணும்னா  நம்ம மோகனாம்பாள் பத்மினியதாண்டா போய் பொண்ணு கேட்கணும்” அவருக்கு பத்மினி தான் உலக அழகி. 

“அம்மா நாட்டியப் பேரொளி பத்மினிக்கு கல்யாணம் ஆகி எப்பவோ அமெரிக்கா போயாச்சு”

“ அப்ப அந்த சந்தர்ப்பமும் போயிடுச்சா. இனி எங்க போய் உனக்கு பொண்ணு தேடுவேன்” வெந்திருந்த இட்டிலியை எடுத்து தட்டில் அடுக்கிக்  கொண்டே மகனிடம் அலுத்துக் கொண்டார்.

நாராயணன் அப்போதுதான் தனது மனம் திறந்து அவன் அம்மாவுக்கு புரியும் விதத்தில் சொன்னார். அவரது மனைவி, சாமி ரூமில் ஏற்றி வைத்திருக்கும் மட்டிப்பால்  ஊதுபத்தியின் புகையைப் போல, இட்லி பானையைத் திறந்தவுடன் வரும் நீராவியைப் போல, பானையின் உள்ளே வேகும் இட்டிலியைப் போல வெள்ளையாக இருக்க வேண்டும். படிப்பு, வசதி எல்லாம் நான்காம் ஐந்தாம் பட்சம் தான். 

இப்படி ஒரு பெண் கிடைத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்வாராம் இல்லை என்றால் தனிக்கட்டையாகவே இருந்துவிடுவாராம். யார் யாருக்கோ என்னென்னவோ ஆசை நம்ம அரவிந்தின் அப்பா நாராயணனின் ஆசை இப்படி இருந்தது. 

தனது ஓவிய மகனுக்குப் பெண் பார்க்க ஊதுபத்தியை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகத் தேடி நாராயணனின் முப்பத்தி மூன்றாவது  வயதில் கண்டு பிடித்தார்கள் அவரது பெற்றோர். அப்படிக் கண்டுபிடித்த பெண்தான் சுமித்ரா. ஊர் சிறுகமணி. அப்பா உள்ளூரில் விறகுக் கடை வைத்திருந்தார். 

அதெல்லாம் யார் பார்த்தார்கள், சுமித்ரா வெத்தலை போட்டு விழுங்கினால் வெற்றிலை சாறு தொண்டை வழியே இறங்குவது தெரிந்தது. அதுதானே முக்கியம். கோலாகலமாய் நடந்தது கல்யாணம். 

தேவலோக நங்கையும் கந்தர்வனும் மணந்து கொண்டார்களோ என்று நினைக்கும்படி இருந்தார்கள் பெண்ணும் மாப்பிள்ளையும். லாலாப்பேட்டையில்  கொஞ்சம் வயசானவர்களைப் போய் கேளுங்கள் இன்னமும் அந்தக் கல்யாணத்தை நினைவு வைத்திருக்கிறார்கள்.

 மகனின் கல்யாணம் முடிந்த கையோடு பெற்றவர்கள் இருவரும் போய் சேர, தனது பாகத்தை வாங்கிக் கொண்டு திருச்சியில் தனக்குத் தெரிந்த மளிகைக் கடைத் தொழிலை ஆரம்பித்தார் நாராயணன். தொழில் பெருகியதோ இல்லையோ அவரின் குடும்பம் பல்கிப் பெருகியது. 

அந்த காலத்துல குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துல பிரச்சாரம் செஞ்சவங்க நம்ம நாராயணன் குடி இருந்த தெருவை மட்டும் மறந்தாப்புல விட்டுட்டாங்க போல இருக்கு. 

நாராயணன் சுமித்ரா தம்பதியினருக்கு முதல் மூணு பொண்ணுங்க. சுதா, சங்கீதா, சத்யா அப்பறம் நம்ம அரவிந்த், அப்பறம் மூணு பொண்ணுங்களைக் கரைசேர்க்க அரவிந்துக்கு துணையா இன்னொரு பையன் இருந்தா நல்லா இருக்கும்னு அவர் போட்ட கணக்கு தப்புத் தாளமாய் போனதில் வந்தவர்கள் தான் சாந்தாவும், சாரிகாவும்.  சாரிகாவுடன் சுமித்திராவின் உடல் நிலைமை சாரிக்கா என்று சொல்லி விட்டதால் அரை டசன் வாரிசுகளோடு புல் ஸ்டாப் விழுந்து விட்டது. 

மூத்த பெண் சுதாவை   தல்லாகுளத்தில் ஹார்ட்வேர் கடை வைத்து இருக்கும் நாதனுக்குக் கட்டித் தந்தனர். நீங்க உடனே கம்ப்யூட்டர் கடையோ என்று நினச்சுக்காதிங்க இது அந்த காலத்து ஹார்ட்வேர் அதாவது குழாய், இரும்பு கம்பி இது மாதிரி பொருட்களை  விற்கும் கடை. மூத்த மருமகனே போதுமான அளவு தனது வார்த்தைகளால் அனைவரது காதுகளையும் பதம் பார்த்ததால், இரண்டாவது பெண்ணை பாலக்கரையில் இருக்கும் தனது அக்கா மகனுக்கே கொடுத்து விட்டார் நாராயணன்.

மாமனார் தாய்மாமனாகவும் போய் விட்டதால் இரண்டாவது மருமகன் கதிர் அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே நடந்து கொள்வார். வெளியில் இருந்து வருபவர்கள் கதிர்  உங்க முதல் பையனா என்று கேட்கும் அளவுக்கு அனுசரித்துப் போய் விடுவார். 

போலியோவால்  பாதிக்கப் பட்டு, இடது கால் முழுவதுமாய் செயலிழந்து, வலது கால் அரைகுறையாக வேலை செய்ய, எப்படியோ தொலை தூரக் கல்வி மூலம் படிக்கும்  சத்யாவுக்குக் கல்யாணம் என்பதை யாருமே கனவில் கூட நினைப்பதில்லை அரவிந்த்தைத் தவிர. அவன் தலை எடுத்ததும் தான் கொஞ்ச நாட்களாக கதிரின் உதவியுடன் மாப்பிள்ளை பார்கிறார்கள் இருந்தாலும் நல்ல வரன் அமையவில்லை. 

கதிருக்குக் கல்யாணம் ஆன புதிதில், “ஏண்டி உன் தங்கச்சி புருஷன் சத்யாவுக்கு இந்த வக்காலத்து வாங்குறான். சரியா நடக்க முடியலைன்னாலும்  அழகா இருக்கா, அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு, உதவித்தொகை வேற வருது அப்படின்னு நெனச்சு ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்க போறாண்டி” என்று தனது மனைவி சுதாவிடம் வயத்தெரிச்சலைக் காட்டுவார் நாதன். 

“நீங்க சொல்லித்தான் சத்யாவுக்கு இவ்வளவு பிளஸ் பாயிண்ட் இருக்குறதே எனக்குத் தெரியுது. கதிருக்கு அந்த எண்ணம் இருக்குதோ இல்லையோ உங்களுக்கு வந்திடாம பாத்துக்கோங்க” என்றாள் சுதா. 

“ இங்க பாருடி நான் கலியுக ராமன். ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் சங்கீதாவும் சத்யாவும் ஒரே வீட்டுல வாழப் போறாங்க. அந்த மாதிரி எதுவும் நடந்ததுன்னா உங்க வீட்டு உறவையே வெட்டி விட்டுடுவேன், நான் மானஸ்தண்டி”, என்று ஆருடம் சொல்லி மனைவியை குதறுவார் நாதன்.

இரண்டு கல்யாணம் முடித்துவிட்ட தெம்பில் கடமையைத் தொடர தன் சிறு மகனுக்குக் கட்டளையிட்டு விட்டு பரமபதத்தை அடைந்தார் நாராயணன். பள்ளிப் படிப்பை முடித்த அரவிந்த், நேஷனல் கல்லூரியில் எம். காம்  முடித்தான். மேற்படிப்புக்காக லண்டன் சென்றான். 

காலச்சக்கரத்தின் சுழற்சியில் வருடங்கள் உருண்டோட, நாளுக்கு நாள் ஏறி இறங்கும் ஷேர் மார்கெட் கிராப் போல அரவிந்தினது வாழ்கை க்ராபும்  ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. தனது தங்கைகளுக்குக் கல்யாணம் பண்ணி வைத்து விட்டான். 

சத்யாவிற்கும் வரன் தேடிக் கொண்டே இருக்கிறான். குடும்பத்தினர் மீது மிகுந்த பற்றுதல் கொண்ட அரவிந்த் இப்பொழுது திருமணம் செய்துக் கொள்ளப் போவதும் குடும்பத்திற்காகத்தான்.

ராத்திரி சாப்பாடுக் கடை  முடிந்திருக்க, நாதன் தொண்டையைக் கனைத்துக் கொண்டே ஆரம்பித்தார் நாதன் 

“அரவிந்தா  உனக்கு ஆனாலும் அழுத்தம் அதிகம். பொண்ணு பத்தின விவரம் ஏதாவது கேட்பேன்னு எதிர்பார்த்து ஏமாந்து போயிட்டேன். இருந்தாலும் சொல்லுறேன். ஏன்னா தகப்பன் இல்லாத இந்த வீட்டுல மூத்த மாப்பிள்ளைன்னு ஒரு கடமை எனக்கு இருக்கு” பலமான பீடிகையுடன் ஆரம்பித்தவர் 

“பொண்ணு பேர் சித்தாரா. மெட்ராஸ்காரங்கதான். பொண்ணுக்கு  அம்மா அப்பா இல்லை. சின்ன வயசுலயே தவறிட்டாங்க. பாட்டி மட்டும்தான் துணை. பொண்ணு எம்மெஸ்சி படிச்சிருக்கு  ……”

சொல்லிக் கொண்டே வந்தார், அரவிந்துக்கு ஒன்றே ஒன்று தான் மனதில் பட்டது 

சித்தாரா பேர் ரொம்ப அழகா இருக்கு. குணத்திலையும் சிதார் இசை போல மென்மையா இருந்தா நல்லா இருக்கும். இல்லேன்னா இருக்குற பாரத்துக்கு மேல அவளையும் சேர்த்து சுமக்க வேண்டி இருக்கும். என்னையப் பத்தி கவலை இல்ல என் பொண்ணை மட்டும் கொடுமை படுத்திடக் கூடாது. 

அதற்கு மேல் அந்த அன்புத் தகப்பனுக்கு வேறு ஒன்றும் கல்யாணக் கனவுகள் பூக்கவில்லை. 

பூவைக்கு மனதில் எத்தனை பூ பூத்ததோ எனக்கு அது பற்றி விவரங்கள் வந்து சேரவில்லை. சீக்கிரம் உங்களை அங்கே அழைத்து செல்கிறேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33

அத்தியாயம் -33 “அப்பா…..  வேலவா! ஷண்முகா! பன்னிரு கண்களில் ஒரு கண்ணால் கூடவா அந்தக் குழந்தையைப் பார்க்கல. உனக்கு பன்னெண்டு காது இருந்தும் அந்தப் பச்சிளங் குரல் கேட்காத அளவுக்கு செவிடாய் போச்சா?”,   ஊரில் இருந்து திரும்பி இருந்த நான்சியிடம்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43

பூங்காவில் கார்டை போட்டு பணம் செலுத்தி வாடகைக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு இருவரும் வேகமாய் சைக்கிள் ஓட்டி ஒருவரை ஒருவர் முந்தினார்கள். ஓரிடத்தில் ஜெர்மன் கிராமிய நடனம் நடக்க அதை ஆர்வமாய் பார்த்தார்கள். ஒரு பெண்ணிருக்க அவளை

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 10என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 10

அத்தியாயம் – 10 போர் முடிந்த களைப்புடன், பெருகும் குருதியைப் பொருட்படுத்தாது, அந்தப் பாலைவனத்தில் ஒரு துளி தண்ணீருக்காக அலைகிறான் அரவிந்த். அவன்  பார்க்கும் போது தூரத்தில் தெரியும் நீர் அருகே சென்றதும் கானல் நீராக மாறுகிறது.   வெகு தொலைவில்  வெள்ளித்